அமர்ந்திருக்கிறார் மரணத்தின் முனைகளில் - 2

இந்தப் படத்தையும், அதற்கு எஸ்.வி.வேணுகோபால் எழுதிய கவிதையையும் ‘அமர்ந்திருக்கிறார் மரணத்தின் முனைகளில்’ என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் சில நாட்களுக்கு முன்பு.

பலர் அதிர்ச்சியடைந்து கருத்து தெரிவித்திருந்தார்கள். சிலர் தங்கள் பின்னூட்டங்களை கவிதையாகவே வெளிப்படுத்தி இருந்தனர். அவைகளைத் தொகுத்து இந்த பதிவு.

கவிதைகளுக்கும், அதை எழுதியவர்களுக்கும் செய்யும் சிறு மரியாதை.

on train

 

ராகவன்:

எரவானத்துல வச்சிருந்த
சின்ன ஓலைக் கொட்டான
தேடி எடுத்து கை விட்டு
செருகின எடத்துல
பார்த்தா... ரூவாய காணோம்!!

எடுவட்ட பய எடுத்துட்டு
போயிருப்பானோ?
குடிச்சு கொல்லையில போக...
பிணந்தின்னி கழுகா
வந்து வாய்ச்சிருக்கு எனக்குன்னு...

இழுத்துகிட்டு கிடக்குற
ஆத்தாவா பாக்க எப்படி போகப்போறேன்

உள்ளூருலையே விருமாண்டி மாமனுக்கு
கட்டி கொடுத்திருந்தா
இத்தனை சீப்பட வேண்டாம்
அதுக்கும் நாப்பொழப்பு தான்
இன்னவரை

இருக்குற இரண்டு
துணிய பழைய சீலைல
மூட்டைய கட்டிக்கிட்டு
ரயிலேற கிளம்பிட்டேன்...
ஆத்தாவுக்கு எப்படி இருக்குமோ
மனசு கிடந்து அடிச்சுக்குது

டேசனுக்கு போனா
ஜனமான ஜனம்
மதுரை வீரன் கோயில் திருவிழா கணக்கா
இதுல நமக்கு எடம் எப்படி
கிடைக்குமோ...
கருப்பசாமி! எப்படியாச்சும்
போய்டணும் மனசு வை சாமீ!

காசில்லாம போக கக்கூசு தான்
வழின்னு போனா
அங்க ரெண்டு பம்மிகிட்டு நிக்கி
என்னத்தை செய்ய
சீலைத்துணி மூட்டைய அடியில
கொடுத்து ரெண்டு பொட்டிக்கு
நடுவுல ஒக்காந்து போய்டலாம் தான்

குண்டி கடுத்து போகுமே...
தூரச்சீல வேற நகண்டுகிட்டே
இருந்தோலைக்கும்

அவஸ்தையான அவஸ்தை
ஆம்பளைய பொறந்தா இதெல்லாம்
இல்லாம பெட்டி மேலே
ஒக்காந்து வரலாம்
பொறந்தது பொட்ட கழுதையா
சுமக்க மாட்டாம பொதி கனமா
போச்சு வாழ்க்கை

பிடிச்சுக்கிட கம்பி
இருந்ததால வந்து சேர்ந்தேன்
உன்னை பார்க்க
ஆத்தா மேல எம்புட்டு
உசுர வச்சிருக்க புள்ள...
அம்மா கட்டிக்கிட்டு அழுதா...
கொஞ்ச நேரம் இருந்துட்டு
சொம்பு தண்ணீ குடிச்சப்புறம்

தங்கச்சி கிட்ட
அம்மாவ பாத்துக்கிடு
நான் ராணியக்கா வீட்டு வரைக்கும்
போயிட்டு வாரேன்

ராணியக்கா வீட்டிற்கு
போகும் வழியில்
விருமாண்டி மாமா வீட்டிற்குள்
எட்டி பார்த்து கொண்டே கடந்தாள்

 

நேசமித்ரன்:

ஓடும் வேகத்தில் கழிவறை கசடுகள்
காலுக்கு வருகையில்தான் 
உயர்த்தவும் கூடாமல் உள்ளிழுக்கவும் ஆகாமல்

திருட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசும்
மகராசர்கள் வீட்டை நினைவுறுத்துகிறார்கள்

கருப்பு கோட்டு காரர்களுக்கு
கப்பம் காசும் கொஞ்சம் வேசை பட்டமும்

குட்கா தெறிக்க பேசும் மேலிருப்பவன்
கண்ணுக்கு செலவு வைக்காமலிருக்கட்டும் கர்த்தாவே

எத்தனை ரயில் விட்டாலும்
ஏற்றித்தர மனதில்லை சம்பளத்தை எசமனர்களுக்கு

 

சுவாமி:

மனச்சுமை இறக்க ஒரு பயணம்.
எனது வாழ்க்கையை விடவா கடினம்.
வாய்தவர்களுக்கு உள்ளே பயணம்.
ஏன் இந்த கடின நிலைமை எனக்கு.
சிந்திக்க நேரம் இதுவல்ல.
எனக்கு நிம்மதி தரும் தயனம்
கிடைக்கும் வரை சலனமில்லா இப்பயணம்
எனது வாழ்கையை விடவா கடினம்.

 

இரா. விஜயசங்கர்:

எனது அன்றாட வாழ்க்கை
இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது...
சிக்கித் தத்தளிக்கிறேன்
கந்துவட்டிக்காரர்களுக்கும்
எனது குழந்தைகளின் பசி மிஞ்சிய வயிறுகளுக்குமிடையில்
எனது குடிகாரக் கணவனுக்கும்
தெருவில் அலையும் காமாந்தகாரர்களுக்குமிடையில்
இரக்கமற்ற புல்டோசர்களுக்கும்
நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கும் எனது குடிசைக்குமிடையில்
ஒழுகிக் கொண்டிருக்கும் கூரைகளுக்கும்
உயர்ந்து கொண்டிருக்கும் ஆற்று வெள்ளத்திற்குமிடையில்
சிக்கித் தத்தளிக்கும்
எனது அன்றாட வாழ்க்கை
இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது.

 

அனானி:

உயிரின் மீது ஆசையில்லை.
வாழ்க்கையின் மீது உண்டு.
நாளை என்பது வேறுதான்.
இன்றே இல்லை.
விடியல் மட்டும் பார்க்கின்றது
ஏதோ ஒன்று மாறுகிறது.
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
கடைசியில் எல்லாம்.
கை இறுக பற்றிக் கொண்டிருக்கிறது
மாற்றத்தை எதிர்பார்த்து.

 

சித்திரதீபா:

எந்தப் பயணம் ஆனாலும்
அதில் எத்தனை அபாயம் இருந்தாலும்
பெண் எப்போதும் ஆண்களின் காலடியில்தான்
வரிசையாக எத்தனை கால்கள்!
ஒரு கால் உதைத்து அடக்கும்
ஒரு கால் அலட்சியமாய் தூசியை தட்டிவிடும்
ஒரு கால் ஆணவமாய் மறுகாலின் மீது அமரும்
எந்தக் கையாவது என்றாவது அவளுக்கு ஆதரவாய் நீளுமா?

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல,

    பதிலளிநீக்கு
  2. படைப்புக்கும் படைப்பாளிக்குமான மரியாதை இது .

    ராகவனின் கவிதை எவ்வளவு கழுவினாலும் கால் வெடிப்புகளின் இடுக்குகளில் இருந்து போக மறுக்கும்
    கழனி மண்

    மற்ற கவிதைகளும் ததம் தளத்தில் நின்று பேசுகின்றன (நாந்தான் செரியா எழுதலயோன்னு இருக்கு :))

    பகிர்வுக்கு மிக்க நன்றி மாது சார்

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் எல்லாமே அற்புதம்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதைகள்.
    ராகவன், நேசமித்ரன், சுவாமி, விஜயசங்கர்,அனானி,சித்திரதீபா அனைவர்க்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவ்

    வாழ்த்துக்கள்....
    அதிர்ச்சிப் புகைப்படத்தின் பாதிப்பில் வெளிப்பாட்டிருக்கிற ஒவ்வொரு படைப்பாக்கத்தையும் ஒரு சேர தொகுத்துள்ளது தாக்கத்தைக் கூட்டுகிறது.

    பதில் கவிதை பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு நண்பரும் ஒவ்வோர் அனுபவத்தின் வெம்மையை பிரதிபலித்திருக்கின்றனர். பெண்ணியச் சிந்தனையின் வெளிப்பாடு சித்திர தீபா பதிவில் அருமையாய் வந்திருக்கிறது.


    விஜயசங்கரின் கவிதைத் தெறிப்பில், அடுத்தவர் இன்னல்களை கண்டு அடுத்த பக்கம் திரும்பிக் கொள்வோருக்கெதிரான ஒரு காறி உமிழலின் அடையாளம் இருக்கிறது.

    'தாயைக் கொள்ளும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார், வாயைத் திறந்து சும்மா வந்தே மாதரம் என்பார், கிளியே மனத்தில் அதனைக் கொள்ளார்' என்னும் மகாகவி வாட்டுகிறான் உள்ளே நின்று......


    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  6. அந்த படம் பாக்கும்போதெல்லாம் பயமா இருக்கு!! கவிதைகள் நல்லா இருக்கு ..பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அன்பு மாதவராஜ்,

    பெரிய தளமா இருக்கு மாதவராஜ், உங்களுடைய தீராத பக்கங்கள், நிலா முற்றம், களித்திண்ணை இன்னும் என்ன சொல்லலாம் மாதவராஜ். இறைக்க வைக்கிறது என்னை... நீர் தாரைகள் வழிந்து பெருக வைக்கிறது உங்களின் இது போன்ற தூண்டில் முயற்ச்சிகள். போட்டு வாங்குறீங்க மாதவராஜ்... எழுத தூண்டுகிறது இது போன்ற உங்களின் பதிவுகள்.
    நேசமித்ரனின் பெருந்தன்மையை காட்டுகிறது என் கவிதைக்கான சிலாகிப்பு??? கழனி மண், மண்டைக்குள்ள இருக்கிறது தானே நேசன் கவிதையிலும் வரும்...
    நண்பர்களின் கவிதைகள் எல்லாமே அருமையாய் இருந்தது... அன்பும் நன்றியும் எப்போதும் எல்லோருக்கும்.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  8. //எந்தக் கையாவது என்றாவது அவளுக்கு ஆதரவாய் நீளுமா?//

    கன்னத்தில் அறைந்தது போல் இருக்கிறது இவ்வரிகள்.....

    பதிலளிநீக்கு
  9. எனது வாழ்க்கையில் எழுதிய முதல் கவிதையை வெளியிட்டு gavra வித்தமைக்கு மிகவும் நன்றி.
    அனைவரது கவிதைகளும் மிக நன்றாக உள்ளது. மிக்க நன்றி.
    அன்புடன்,
    சுவாமி

    பதிலளிநீக்கு
  10. மேலிருக்கும் ஆணின் நிலையை எப்படி எடுத்து கொள்வது?
    கேமரா செல் போன் வாங்க முடிந்த எனக்கு ரயிலில் பயண சீட்டு வாங்கி பயணிக்க முடியவில்லை, தொகை உயர்ந்து விட்டது என்ற?
    இல்லை பயண சீட்டு வாங்கி பயணம் செய்வது எனக்கு பழக்கம் இல்லை என்ற?

    பதிலளிநீக்கு
  11. சில நேரங்களில் வார்த்தைகளின்றி வாயடைத்து விட நேரிடும் அதே இந்தப் படம் செய்தது.கவிதைகள் இன்னும் ஆழமாக உள்வாங்கச் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  12. முதலாளித்துவத்தின் மூலதனமே அதன் பிரச்சாரம் தானோ! வீட்டில் 6 வயது சிறுவன் தனக்கு வேண்டியதை YouTube இல் இருக்கிறதா என்று தேடுவதைப் பார்க்கும் போது நாம் நினைக்கும் நல்ல விஷயங்களை அல்லது நல்ல தலைவர்களின் சிறந்த பேச்சை அல்லது கவிதைகளை YouTube இல் கொடுக்க முடியுமா!
    அன்புடன்,
    சுவாமி

    பதிலளிநீக்கு
  13. பொருள் ஆதார மண்டலங்கள்
    உருவாக்கியபிறகு
    பொருளை விளைவித்த
    எங்களது பயணம் மரண கணங்களாகி
    போனதில் வியப்பில்லை
    எங்களது பயமெல்லாம்
    நிழல்களில் காணும் வாழ்க்கை
    நிஜமாக கூடுமோ என்ற நினைப்பில் தான்

    பதிலளிநீக்கு
  14. நண்பர்கள் அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!