பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடிய அறிஞர் அண்ணா...

உண்மைகளை வெடிப்புறப் பேசியவர் அவர். பெரும் கலகக்காரர். தமிழ் மண்ணில் வேம்புவாய் நிற்கும் அவருக்கு இன்று 131வது பிறந்த நாள். மக்கள் மட்டுமில்லாமல், அவரது சிலைகளுக்கு மாலை அணிவிப்பவர்களும் இந்த நாளில் அவரது சிந்தனைகளையும், செயல்களையும் நினைத்துப் பார்த்தாக வேண்டும். 

 

அறிஞர் அண்ணா 1968ம் ஆண்டு, பெரியாரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று திராவிட இயக்கத்தினருக்கு  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பெரியாரின் பணிகள் இந்த சமூகத்தில் என்னவாக இருந்தது, அவரைத் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அவருக்கே உரிய மொழியில் சொல்லியிருக்கிறார். இந்த நாளில் அதனைப் பகிர்ந்து கொள்வது சரியாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.

 

திராவிடக் கழகம் என்றோ,  திராவிட முன்னேற்றக் கழகம் என்றோ நேரடியாக குறிப்பிடாமல் அண்ணா எழுதியிருக்கிறார். புதிய கடமைகளை குறித்து வைக்கிறார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அண்ணாவின் இந்த எழுத்துக்களை மறுவாசிப்பு செய்யும்போது வரலாற்றின் பிழைகள் முன்வந்து நிற்கின்றன.

 

நீங்களே படித்துப் பாருங்கள்.....

 

-----------------------------------

 

ந்தக் கிழமையை விழாவாகக் கொண்டாடும் தோழர்கள் பெரியாரின் பெருந்தொண்டினைப் பற்றி பேசிவிட்டு பெருமூச்செறிவர். ஏன்? இலேசாக தமது தோழர்கள் உள்ளத்திலே கூட ஒரு சந்தேகம், கொஞ்சம் சஞ்சலம் உண்டு. அதாவது இந்த உழைப்பு தக்கதோர் வெற்றியைப் தந்துவிட்டதா, அல்லது சூதகரின் சூழ்ச்சி காரணமாக உழைப்பு வீணாகி விட்டதா என்ற எண்ணம்.

 

பத்திரிகைப் பாராட்டுதல், பாமாலை, பூமான்களின் பவுன்மாலை, சர்க்கார் தரும் பட்டம், பதவி, மாலை ஆகியவைகளை வெற்றிச் சின்னமெனக் கொள்வதாயின், பெரியார் வெற்றி பெற்றவரல்ல. ஆனால் வாலிப உள்ளங்களின், நன்றி கலந்த அபிஷேகமே வெற்றிக்கான சின்னம் எனில் பெரியார் பெருவெற்றியை நெடுநாட்களுக்கு முன்னதாகவே பெற்றுவிட்டார் என்று திட்டமாகக் கூறலாம்.

 

சட்டசபைக்கு அழைத்துச் செல்ல மாட்டார். பட்டம் வாங்கித் தரமாட்டார். பதவியில் நம்மை உட்கார வைக்க மாட்டார். பணம் காசு தர மாட்டார். ஒரு பாராட்டுரை கூட வழங்க மாட்டார் என்பதையெல்லாம் அனுபவபூர்வமாக தெரிந்திருந்தும், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அவருக்குத் துணை நிற்பது வேறு எங்கும் காணமுடியாத அற்புதம். பெரியாரின் பெரும் வெற்றி இது.

 

பிற கட்சிக்காரர்கள், குறிக்கோள் மட்டும் கொண்டவர்களல்ல, நடைமுறைக்கான, அன்றாட வேலைத்திட்டமும், உடனடியாக  நடத்தியாக வேண்டிய வேலைத் திட்டமும் உடையவர்கள். எனவே, அவர்களுக்கு லாபநட்டக் கணக்குப் பார்த்துக்கொள்ள அதற்கு ஏற்றபடி திட்டத்தைத் திருத்தி மாற்ற, புதுப்பிக்க வசதியுண்டு. பெரியார் துவக்கி நடத்தி வரும் கட்சிக்கு உடனடி வேலைத் திட்டம் ஒன்றும் இல்லை. உழைத்து மெருகேற்றி அந்த மெருகு ஏறினதன் பலனாக பிறகு சமூகமே ஒரு புதிய பயனுள்ள தோற்றம் அளிக்க வேண்டும். இலாப நட்டக் கணக்கு பார்க்க முடியாது. வசதி கிடையாது. கதிர் தோன்று முன்புவரை, புல்லுக்கும், நெல்லைத் தரபோகும் பச்சைக்கும், பார்க்கும்போது வித்தியாசம் தெரிய முடியாதல்லவா? அதுபோல கதிர் காணாமுன் கணக்குப் பார்க்க முடியாது. வெறும் பச்சை என்றெண்ணி விடுவோ ஏமாளிகள். கதிர் முளைக்க வேண்டும். அதனால் பயிரைக் கசக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர் கோமாளிகள். பெரியாரின் உழவுமுறையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது. வயலிலே இருப்பது ஆறுமாதப் பயிரல்ல. ஒரு தலைமுறைப் பயிர். பல தலைமுறைகளாகக் கறம்பாகக் கிடந்த வயலிலே உள்ள பயிர். அறுவடைக்குக் காலம் பிடிக்கும். 

 

நாம் மேற்கொண்டுள்ள வேலை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே, அது போன்றது. எனவேதான் உடனடியாகக் கண்ணுக்குத் தெரியக்கூடிய மற்றக் கட்சிககாரர்கள் காட்டுவது போன்ற ‘அன்றாட’வெற்றிகள் நமக்கு இல்லை. ஆனால், நாம் அடைந்துள்ள வெற்றி, கறம்பைத் திருத்தி வயலாக்கி இருக்கிறோம். ஆம்! சூழ்நிலையை மாற்றி இருக்கிறோம். மனப்போக்கை மாற்றி இருக்கிறோம்.

 

வெற்றி பெற்றாயிற்று.  பெரியாரின் பெருந்தொண்டு பயன் தந்தாகிவிட்டது என்று உறுதியுடன் கூறலாம். மகிழ்ச்சியுடன் சொல்லலாம். பெரியாருக்கு உளம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கலாம். தெரிவிப்பதுடன், “பெரியாரே! தாங்கள் அரும்பெரும் உழைப்பினால் உண்டாக்கி வைத்த சூழ்நிலையை நாங்கள் இனி பயன்படுத்துவோம், தங்களுக்கு மேலும் தொல்லை நிறைந்த வேலை தரமாட்டோம். இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்தத் தாங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். உண்டாக்கினீர்கள். இனி நடக்க வேண்டிய காரியம், கிடைத்த சூழ்நிலை கெடாதபடி பாதுகாத்துக் கொள்வதுடன், அன்றாட வேலைகள், உடனடித் திட்டங்கள் ஆகியவற்றைச் செய்வது. அதனை நாங்கள் தாங்கள் மகிழும் வண்ணம் செய்து முடிப்போம்” என்று உறுதி கூறி அவருக்கு மனதில் வெற்றி கிட்டிவிட்டது! இனி வேலை நடக்கும்! அதற்கான அருமை மக்கள் உள்ளனர் என்ற மகிழ்ச்சியுடன் கலந்த நம்பிக்கை பிறக்குமாறுச் செய்திடுவதுதான் பெரியார் வார விழாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

 

சுரங்கத்திலிருந்து, சிரமப்பட்டுத் தங்கத்தை தோண்டி எடுத்தாகிவிட்டது. பெரியாரின் பெரு வெற்றி இது. எடுத்துப் பார்க்கும்போது பாறை போலத்தான் தோன்றும். அடுத்த கட்டம், வெட்டி எடுக்கப்பட்ட பாறை உருவில் உள்ளதை, ‘ரசாயண’ ‘விஞ்ஞான’ முறைப்படி உடைத்து, பிரித்து, துடைத்துத் ‘தங்கம்’ என்று சகலரும் தெரியும்படிச் செய்வதுடன், அதனால் பயனுள்ள பணிகள் செய்து காட்ட வேண்டும். சுரங்கத்திலிருந்து பொன்னை வெட்டி எடுத்துவரும் காரியம் ஆபத்தானது. சிரமமானது. அதற்கு அலாதியான திறம், முறை வேண்டும். கருவிகளும் அதற்குத் தனி, பெரியாரிடம் இவைகளுக்கான திறம் ஏராளம். எனவே அவரால் முடிந்தது. நமது நன்றி அதற்காக.

 

ஆனால், வெட்டி எடுத்துக் கொண்டு வந்த தங்கத்தைப் பதம் செய்ய, பக்குவம் செய்ய, முறை செய்ய, கருவி வேறு. செய்ய வேண்டிய பொறுப்பையும் பெரியாரிடமே தருவது நமது கையாலாகாத்தனத்தை காட்டிக்கொள்வதாகும். மீண்டும் மீண்டும். மேலும் மேலும் சுரங்கம் தோண்டும் வேலையையே செய்யும்படி பெரியாரைத் தூண்டிக்கொண்டிருப்பதும் நன்றி கெட்ட செயலாகும்.

 

தனை உணர்ந்து புதுப்பணியினை மேற்கொள்வோம். நீர் கவலையற்றுக் களிப்பதுடன், நம்பிக்கையுடன் எங்கள் வேலையைக் கவனித்துக்கொண்டு, தட்டிக்கொண்டு, பெருமையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டு இருங்கள் என்று இந்த விழாவன்று நாம் பெரியாருக்குக் கூற வேண்டும். அதுவே அவருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை.

 

-----------------------------------

 

படித்து முடித்த பிறகு இரு கேள்விகள் முன்வருகின்றன. அவை பெரியார் மற்றும் அண்ணாவின் கனவுகள் பற்றியவை. வேதனையானவை.

 

*

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. முழுதையும் படித்து முடித்த பின்தான் அண்ணா இறந்த அன்று என் அப்பா ஏன்
    உறங்காமல் அழுதார்கள் என்று (தாமதம் ஆனாலும் ) புரிந்தது . நிறைய விசயங்களை உங்கள் மூலம் அறிய முடிகிறது நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பெரியாரைப் புரிந்தார்
    பெரியாரைப் புகழ்ந்தார்!

    பெரியாரை இகழ்வார்
    பெரியாரால் வாழ்ந்தார்!

    புகழென்றே இகழ்வென்றோ
    வாழவுமில்லை வாடவுமில்லை.
    துணிவொன்றே துணையாய்
    அறிவொன்றே வழியாய்
    சரித்திரம் படைத்தார்
    மனிதனைக் கண்டார்!

    நன்றி எதிர்பார்த்தால்
    தொண்டல்ல தொழிலென்றார்!
    பிறந்தநாள் இன்றென்றே
    பெருமையுடன் வாழ்த்துகின்றோம்.

    பதிலளிநீக்கு
  3. அண்ணா அண்ணா அண்ணா!

    சார் உங்க பதிவிலே பிடித்த பதிவு இது.

    "அய்யா பையனுக்கு உங்க பெயர் வைக்கலாம்னு அத்தான் சொன்னாங்க"

    "இல்லைம்மா "தொல்காப்பியன்"ன்னு வை. அடுத்த மகனுக்கு என் பெயரை நான் வந்து வைக்கிறேன்"



    ஆச்சு 1969 செப்டம்டர் 15 அப்பா அண்ணா மறைவு செய்தி கேட்டு அப்பா ரயிலில் செல்ல 150 பேர் கொள்ளிடம் பாலத்தில் தலைவெட்டி சாக (ரயில் மேல் பயணம்) எல்லாம் முடிடிந்து அய்யோ அண்ணா என் குழந்தைக்கு யார் பெயர் வைப்பது என கதறிஅழுத போது கலைஞர்வைத்த பெயர் "சௌமியன்" (sowmiyan)அதாவது அண்ணாவின் புனை பெயர்.

    அண்ணா பற்றி நல்ல நினைவுகள் சார்!

    பதிலளிநீக்கு
  4. முத்துக்குமார்!
    மிக்க நன்றி.

    தமிழன்!
    பகிர்வுக்கு நன்றி.

    அபி அப்பா!
    துயரமளிக்கிற நினைவுகள்.
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  5. பெரியார் உருவாகிய சூழ்நிலையை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை என கருதுகிறேன்.

    அவர் தந்த தங்கமும் சரியாக பயன்படுத்தபடவில்லை என்பதன் சாட்சியமே என்றைய சமுதாயம்...

    அரிய வரலாற்று நிகழ்வுகளை பதிவுகளை எம் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் இது போன்ற தங்கள் வலைய பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

    அழகுமுகிலன்

    பதிலளிநீக்கு
  6. with out any prejudice, i would like to know why Mr Anna Durai is always referred as Arignar Anna. Is it the same way as Puratchi Thalaivar, Puratchi Thalaivi, Thalabadhi, Anjaa Nenjan etc., (Kalaignar is too general to be attributed to any one and so i am not including that)

    பதிலளிநீக்கு
  7. sendra nootraandin migapperiya poyyarum,kozhaiyum annadorai aavar.than sonna edhilum avar nilaithu ninrathillai.than nenjarinthey poi sonnavar avar.avaral tamilanukku kidaithathu malivana arasiyal,mattamaana cinema rasanai,lottery ivaithan.VIZZY.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!