தீக்குள் வாழ்வை வைத்து.....

பைபாஸில் திரும்பி திருத்தங்கலுக்குச் செல்லும்போதே கவனிக்க முடிந்தது. சாலை பதற்றமாயிருந்தது. கலவரத்தோடு மனித முகங்கள் தென்பட்டன. அலறியபடி ஆம்புலன்சு வண்டிகளும், போலீஸ் ஜீப்பும் கடந்து சென்றன. சிவகாசி அருகில் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்தவுடன் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை உடனடியாக அறிந்துவிட முடிகிறது. உடல் வலுவிழ்ந்து போனது போல் உணர்ந்தேன். பத்துநாட்களுக்குள் இது மூன்றாவது.

வங்கிக் கிளையின் முன் பைக்கை நிறுத்தும்போதே ஸ்டூடியோக்காரர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். “மூனு பேர் இறந்துட்டாங்களாம்... பேக்டரியில் இருந்த பல கட்டிடங்கள் தரைமட்டமாய்ட்டு... உள்ளே எத்தனை பேர் இருக்காங்களோ..”

எதுவும் சொல்ல முடியாமல் அங்கேயே நின்றிருந்தேன். பட்டாசுத் தொழிற்சாலையில் வெடி விபத்து நிகழும்போதெல்லாம் கவனக்குறைவு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது அல்லது கையாளாதது என்று கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. சிறிதுகாலம் அரசு இயந்திரம் கடுமையாக முடக்கிவிடப்பட்டு எச்சரிக்கையாய் இருப்பதாய் காட்டிவிட்டு காணாமல் போகும். திரும்பவும் ஒரு விபத்து நிகழும். திரும்பவும் பழைய வசனங்களும், நடவடிக்கைகளும். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் மனிதர்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். கருகிய உடல்களிலிருந்து புகை ஆவியாய் காற்றில் பரவிக்கொண்டு இருக்கிறது.

கிளையினுள்  நுழைந்தேன். பெருங்கூட்டம் அப்பிக்கொண்டு இருந்தது. டிராப்ட் எடுப்பதற்கான பாரத்தில் நிரப்பிக்கொண்டே, செல்போனில் காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து ஒருவர் யாரிடமோ “ஆமா... பள்ளப்பட்டி பக்கத்துல... ம்....... இங்கயிருந்து ரெண்டு மூனு கிலோ மீட்டர்தான் இருக்கும்....  நம்ம உரக்கடை ஜன்னல் கூட அதிர்ந்துச்சு...” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.  அப்படியே சட்டென நிமிர்ந்து “சார்.... ஐயாயிரத்து ஐநூறுக்கு கமிஷன் எவ்ளோ சார்” என்று  கேட்டு எழுதிக்கொண்டார். நான் அவரையேப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

“மாது சார்... இந்த நகைக்கடனுக்கெல்லாம் எவ்வளவு வட்டின்னு பாருங்க... திருப்பனும்” என்று கத்தையாய் கொஞ்சம் நகைக்கடன் அட்டைகளைக் கொடுத்தார்கள் ஆபிஸர் மேடம். வாங்கிக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தபோது “ச்சே என்ன மனுஷங்க நாம எல்லாம்” எனத்தான் தோன்றியது. ஒரு பெருந்துயரம் அருகில், மிக அருகில் நடந்திருக்கிறது. அது இறந்தவர்களின் உறவினர்களுக்கான சோகம் மட்டுந்தானா? அதுகுறித்து சிந்திக்கவும், வருத்தப்படவும் கூட அவகாசமில்லாமல் வாழ்க்கை இப்படியா தறிகெட்டு ஒடுவது?

பழைய புடவை கட்டிக்கொண்டு வந்து நின்ற ஒரு பெண்மணி, ”சார்.. ஏங்கணக்குல பணம் வரவு வந்திருக்கான்னு பாத்துச் சொல்லுங்க..” என்றார்கள். பாஸ்புத்தகத்தில் முகவரி பள்ளப்பட்டி என்றிருந்தது. பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததற்கான பி.எப் பணம் வந்திருக்கிறதா என பார்க்க வந்திருக்கிறார்கள் என புரிந்தது. பதற்றத்துடன் “எம்மா... அங்கதான் விபத்து...” என்று மெல்ல இழுத்தேன். “ஆமா சார், நானுங்கூட அங்கதான் வேலை பாத்தேன்.... எந்தம்பி கூட அங்கதா வேலை பாக்கான்...” என்று சாதாரணமாகச் சொன்னார்கள். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர்களே மீண்டும் “எங்களுக்கு இத விட்டா என்ன பொழைப்பு இருக்கு சார்...  செத்தாலும், பெழைச்சாலும் பயர் ஆபிஸ்தான் கதி..” என்று அவர்கள் சொல்லவும் எனக்குத் தொண்டை அடைத்தது. இன்னும் பணம் வரவில்லையென்ற சோகத்தில் அந்த பெண்மனி சென்றார்கள்.

என்ன வாழ்க்கை இது!  உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், ஃபேன் அடியில், நல்ல உடையணிந்து பணி செய்துகொண்டு, அதிலும் ஆயிரம் அலுப்புகளோடு வலம் வரும் நாம் கொஞ்ச நேரம் அந்த கந்தக மணத்தை நுகர முடியுமா? அவர்களின் வாழ்வின் துயரங்களை உணர முடியுமா? இவர்களைக் கொல்கின்ற வெடிதான், வெடிமருந்துதான் மத்தாப்புகளாய் விரிந்து நம்மையும், நம் குழந்தைகளையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது என்று எவன் சொன்னது?

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்புள்ள மாதவராஜ் ,

    உங்கள் மனம் பாதித்த சோகம் புரிதிறது. நாம் பரிதவிக்கும் அந்த குடும்பங்களை நினைக்கும் போது , கந்தக வாசனை நம் நாடி நரம்பெங்கும் பரவுவதை உணர முடிகிறது . சிவகாசி தெருக்களில் பிஞ்சு குழந்தைகளிடம் கூட அந்த கொடிய வாசனையை நுகர்ந்திருக்கிறேன் . ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது .


    பட்டாசு தொழிற் சாலையில்
    பணி செய்யும் பாலகர்கள்
    சின்னஞ்சிறு யேசுக்கள் ..

    ஊரெல்லாம் ஒளிபரவ
    தங்கள் குருதியை
    எண்ணெய் யாக்கும் ஜீவன்கள் ..

    பரம்பரை கடன் தீர
    ஆயுசு முழுதும்
    பத் தாது ..

    நாமெல்லாம் என்ன செய்ய போகிறோம் ?

    நெல்லை பாலு

    பதிலளிநீக்கு
  2. //என்ன வாழ்க்கை இது! உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல், ஃபேன் அடியில், நல்ல உடையணிந்து பணி செய்துகொண்டு, அதிலும் ஆயிரம் அலுப்புகளோடு வலம் வரும் நாம் கொஞ்ச நேரம் அந்த கந்தக மணத்தை நுகர முடியுமா? அவர்களின் வாழ்வின் துயரங்களை உணர முடியுமா?//

    நெஞ்சை கிள்ளும் வரிகள்

    //இவர்களைக் கொல்கின்ற வெடிதான், வெடிமருந்துதான் மத்தாப்புகளாய் விரிந்து நம்மையும், நம் குழந்தைகளையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.//

    :(

    பதிலளிநீக்கு
  3. //இவர்களைக் கொல்கின்ற வெடிதான், வெடிமருந்துதான் மத்தாப்புகளாய் விரிந்து நம்மையும், நம் குழந்தைகளையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. //

    கசக்கும் நிஜம் மாதவராஜ்...

    இந்த மாதிரியான நிகழ்வுகளை ஒரு சினிமா படத்தின் கிளைமாக்ஸ் போல் சிலர் சிலாகித்து பேசுவார்கள் பாருங்கள், அது இதனினும் கொடுமை

    பதிலளிநீக்கு
  4. வருத்தம் புரிகிறது, என்ன செய்ய, பொருளீட்டும் சிக்கலில் நாம். எனவே சுயநல வாதிகளாய் மாறி விட்டோம்.

    என்னை விட நீங்கள் பரவ இல்லை, ஒரு பதிவாவது போட்டுளீர்கள், நான் மூன்று வரி பின்னூட்டம் எழுதி விட்டு எனது உணவு உடை ...

    பதிலளிநீக்கு
  5. அதிர்ச்சியாக இருக்கிறது.
    //“எங்களுக்கு இத விட்டா என்ன பொழைப்பு இருக்கு சார்... செத்தாலும், பெழைச்சாலும் பயர் ஆபிஸ்தான் கதி..” //

    :-(((

    பதிலளிநீக்கு
  6. இவர்களைக் கொல்கின்ற வெடிதான், வெடிமருந்துதான் மத்தாப்புகளாய் விரிந்து நம்மையும், நம் குழந்தைகளையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

    நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது என்று எவன் சொன்னது?

    :((( மனசு கனத்துப்போச்சு சார்

    பதிலளிநீக்கு
  7. 21 நாள்களில் 41 பேர் பலியாகி உள்ளனர்.

    ஜுலை 7 மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் 19 பேர்

    ஜுலை 20 சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர்

    ஜுலை 26 விஸ்வநத்தம் ஒருவர் (1)

    ஜுலை 29 சிவகாசி, திருத்தங்கல் 3 பேர்

    அரசு எந்திரம் என்ன தான் செய்கிறது?

    factories act, Labour act எல்லாம் இன்னும் எத்தனை பேரை காவு வாங்கும்?

    பதிலளிநீக்கு
  8. நெல்லை பாலு!
    கவிதை இன்னும் சோகத்தை அடர்த்தியாக்கியது.

    சந்தனமுல்லை!
    புருனோ!
    கதிர்!
    குப்பன் யாஹூ!
    தீபா!
    அமிர்தவர்ஷிணி அம்மாள்!
    நஞ்சில்நாதம்!
    மங்களூர் சிவா!

    :-(((

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!