மாதவராஜ் பக்கங்கள் 7

தனி ஈழம் கேட்ட அந்த மக்கள் இப்போது “எங்களுக்கு எதுவும் வேண்டாம்.... சயனைடு தந்து கொன்று விடுங்கள்” கதறிக்கொண்டு இருப்பதாய் நேற்று இணையத்தில் படித்த செய்தி ஒவ்வொரு கணமும் வதைத்துக்கொண்டு இருக்கிறது.

முட்கம்பி வேலிகளுக்குள்  இரண்டு லட்சம் பேருக்கு நடுவே தனது தாய், தந்தையரைத் தேடி அழுது கொண்டிருக்கிறது ஒரு பெண்குழந்தை. தனது குழந்தைகளைத் தேடி ஒரு தாய் பைத்தியம் போல அரற்றிக்கொண்டு அலைகிறாள். இந்தக் கூக்குரல்களும், அடிவயிற்றுக் கேவல்களுமே பறவைகளற்ற அந்த பொட்டல் பிரதேச அகதி முகாம்களின் ஒசை இப்போது. இவர்களுக்கு நடுவே விடுதலைப்புலிகளைத் தேடுகிறோம் என இலங்கை இராணுவம் ஒவ்வொரு கணமும் இரக்கமற்ற கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறது. வாழ்விலிருந்து முற்றிலுமாய் பெயர்த்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மீது பகலும், இரவும் சாட்டைகளால் விளாரியபடி கடந்து போய்க் கொண்டு இருக்கின்றன.

“இரண்டாம் உலகப்போரைக் காட்டிலும் கொடுமையான காட்சிகள் நிறைந்தவையாக இந்த அகதி முகாம்கள் இருக்கின்றன” என்று சில இடங்களை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்ட ஐ.நா பொதுச்செயலாளர் சொன்ன வார்த்தைகள் சாதாரணமானதுதான். அதன் வலியை அங்கிருப்பவர்களால்தான் முழுமையாகச் சொல்ல முடியும்.  தண்ணீரும், கழிப்பிட வசதிகளும் இல்லாத பிரதேசத்தில் தவிக்கும் பெண்களின் நிலையை  உதிரத்தின் நெடியோடு பெண்களால் மட்டுமே அறிய முடியும். ஒருவேளை உணவுக்காக, கையேந்திக்கொண்டு நீண்ட வரிசையில் கூனிக்குறுகிப் போயிருக்கும் ரணத்தை அந்தக் கண்களில் மட்டுமே பார்க்க முடியும். சிதைந்த அங்கங்களுக்கு மருத்துவ வசதியற்று மரணத்தின் வாசலில் காத்திருக்கும் பெருந்துயரத்தை அந்த முனகல்கள் மட்டுமே உணர்த்த முடியும். ஆனால் அவர்களால் வாய் திறந்து பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை.

வாழ்விடங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெரும் இன்னல்கள் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவர்களது இருப்பிடங்கள் நொறுக்கப்படுகின்றன. நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கடைகள் சூறையாடப்படுகின்றன. தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. கேட்பதற்கு நாதியற்று வெளிறிப்போய் வெறுமையில் புதைந்து கிடக்கிறது அங்கு ஒரு சமூகம். அடுத்தப் பக்கத்தில் சிங்களக் கொடிகளோடு பெரும் ஊர்வலங்களும், பேரணிகளும் நடத்திக் கொண்டாடி ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்கிறது இன்னொரு சமூகம்.

எதுவுமே நடக்காத மாதிரி இங்கு நமது ஊடகங்கள் பக்கம் பக்கமாய் செய்திகளை நிரப்பி உப்பிக் கிடக்கின்றன. தேர்தல் வரை பேசிக்கொண்டு இருந்தவர்களும் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டு விட்டனர். இணையத்தில் மட்டும் எதோ உயிரும், மனிதாபிமானமும் ஒட்டிக்கொண்டு இருப்பதாய்ப் படுகிறது. நடக்கிற நிகழ்வுகள் எதுவும் சம்மதமாகவும் இல்லை. சந்தோசமாகவும் இல்லை. உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் பயங்கரவாதத்தை, வன்முறையை நிகழ்த்திய இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை நடத்த வேண்டுமென சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் இலங்கை அரசின் நடவடிக்கையைப் பாராட்டிக் கொண்டு வந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு,  ‘இலங்கை வெற்றி’ என கிரிக்கெட் செய்தி போல தலைப்புகளில் வெளிவருகின்றன. குடும்பத்திற்கு மந்திரிப்பதவிகள் வாங்கப் போராடிய தன்மானத் தமிழர் இதையெல்லாம் கடுமையாக எதிர்க்காமல், எதோ  சத்தமில்லாமல் ஒப்புக்கு முனகிக் கொண்டு இருக்கிறார்.

நான் மிகவும் நேசிக்கிற கியூபாவும், இலங்கை அரசைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது. இந்துமகா சமுத்திரத்தில் யார் ஆதிக்கம்  செலுத்துவது என்கிற தொலை நோக்குப் பார்வைகள் நிறைந்த நுண்ணிய அரசியல் இதற்குள் இருக்கிறது என பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். மேற்குலக நாடுகள் இலங்கையை எதிர்ப்பதற்கும் பல அரசியல் காரணங்கள் சொல்லப்படுகின்றன. படிக்கப் படிக்க எரிச்சலே வருகிறது.  மனித இனத்தின் பேரழிவுகளில் ஒன்றை, கண்முன்னே  நடக்கும் உயிர்வதையை இமைகொட்டாமல் பார்த்து,  அரசியல் நடத்த எப்படி முடிகிறது எனத் தெரியவில்லை.

அதோ யாராவது ஆதரவு தர மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் அந்த அனாதரவான மனிதர்களுக்காக சிந்திக்கிற மனிதர்களே வேண்டும் இப்போது. இலங்கையின் தமிழரல்லாத அந்தப் பக்கத்திலிருந்து ஒரு குரலை நான் நேற்று வாசித்தேன். “நாம் வென்றுவிட்டோம்! ஆக யாரோ தோற்று விட்டார்கள். யார் அந்த அவர்கள். அவர்களும் நாம்தான். வெற்றியைக் கொண்டாடும் இந்த மக்களைப் பார்க்கும் போது நான் தமிழ்மக்களைப் பற்றியே சிந்திக்கிறேன். அவர்கள் என்ன சிந்திப்பார்கள், எப்படி உணர்வார்கள் என்றிருக்கிறது.” என்று பேசும் நசியா பரூக் இறுதியாய் சொல்கிறார் : “என்னுடைய அறையில் சுருட்டி வைக்கப்பட்ட இலங்கைக் கொடி ஒன்று இருக்கிறது. ஒவ்வொருநாள் எழுந்திருக்கும்போதும், படுக்கப் போகும்போதும் நான் அதைப் பார்க்கிறேன். நான் ஒரு இலங்கைக்காரன் என்று நினைக்கும்போது அதை பறக்க விடுவேன். இப்போது மடித்து வைக்கப்பட்டு மட்டுமே இருக்கிறது”

ஐ.நாவில் இலங்கையின் கொடி பறந்தாலும், அந்த நாட்டின் குடிமகன் ஒருத்தர் வீட்டில் இலங்கையின் கொடி பறக்கவில்லையே!  இந்த மனசாட்சிதான் வேண்டும் இப்போது. எல்லா அரசியலையும் விட அது மேன்மையானது, தூய்மையானது!

(நசியா பரூக்கின் குரலை தீபா அவர்கள்  தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.)

 

*

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பெயரில்லா28 மே, 2009 அன்று AM 11:11

    You can never expect it from almost all the SL politicians.

    பதிலளிநீக்கு
  2. தமிழகக் குரல்கள் அரசியல் அழுத்தத்தில் மூச்சு முட்டி மயங்கி கிடக்கிறது.நீர் தெளித்து மயக்கம் தெளிப்பவர் யார் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. தமிழகக் குரல்கள் அரசியல் அழுத்தத்தில் மூச்சு முட்டி மயங்கி கிடக்கிறது.நீர் தெளித்து மயக்கம் தெளிப்பவர் யார் என்று தெரியவில்லை ///////////

    மயக்கம் தெளிவார்களா என்பது தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  4. ////உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் பயங்கரவாதத்தை, வன்முறையை நிகழ்த்திய இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு விசாரணை நடத்த வேண்டுமென சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் இலங்கை அரசின் நடவடிக்கையைப் பாராட்டிக் கொண்டு வந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு, ‘இலங்கை வெற்றி’ என கிரிக்கெட் செய்தி போல தலைப்புகளில் வெளிவருகின்றன. குடும்பத்திற்கு மந்திரிப்பதவிகள் வாங்கப் போராடிய தன்மானத் தமிழர் இதையெல்லாம் கடுமையாக எதிர்க்காமல், எதோ சத்தமில்லாமல் ஒப்புக்கு முனகிக் கொண்டு இருக்கிறார்/////

    ஐயா கருணாநிதி அவர்களே இப்பொழுது நீங்கள் என்ன செய்யபோகிறிகள். மந்திரி பதவி வேண்டம் என்பிர்களா? நீர் தான் தமிழன் பிணம் மீது அமர்ந்து பதவி கேட்பிரே? சத்தியமாக சொல்கிறேன் உம்மைபோல ஒரு தமிழின துரோகியை இந்த நாடு பார்த்திறாது.மக்கள்கள் முட்டாள் என்று நினைக்கிறீர்? 100 ருபாய் குடுத்தால் ஒட்டு வந்துரும் என்று நினைப்பு? காலம் ஒரு நாள் மாறும் தருமம் அப்போது வெல்லும் .

    ////தனி ஈழம் கேட்ட அந்த மக்கள் இப்போது “எங்களுக்கு எதுவும் வேண்டாம்.... சயனைடு தந்து கொன்று விடுங்கள்” கதறிக்கொண்டு இருப்பதாய் நேற்று இணையத்தில் படித்த செய்தி ஒவ்வொரு கணமும் வதைத்துக்கொண்டு இருக்கிறது./////

    தனி ஈழம் வேண்டும் என்றால் , மீண்டும் விடுதலைபுலிகள் தலை நிமிர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா28 மே, 2009 அன்று PM 7:02

    /நான் மிகவும் நேசிக்கிற கியூபாவும், இலங்கை அரசைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது/

    CPI (M) பத்தியும் ஏதாச்சியும் சொல்லுங்க தோழர். அத நேசிக்கிறீர்களா? நசிக்கிறீர்களா?

    வீட்டைத் திருத்தி, நாட்டைத் திருத்தி, வெளியே திருத்துவோமே?

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு! உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்!

    //அதோ யாராவது ஆதரவு தர மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் அந்த அனாதரவான மனிதர்களுக்காக சிந்திக்கிற மனிதர்களே வேண்டும் இப்போது. //

    மிகச் சரி!

    பதிலளிநீக்கு
  7. இந்த பின்னுட்டம் எனக்கு ஒரு வடிகாலாக இருக்கும் என்று தோன்றுகிறது. இருக்க வேண்டும்.

    எனென்றால், கடந்த சில நாட்களாக, பல நண்பர்கள், இவ்வாறே சிந்தித்தவண்ணம் இருக்கிறார்கள். யோசித்து யோசித்து, பலருக்கு யோசிப்பதற்கும் கூட இயலவில்லை.

    நாம் ஏன் சில உண்மைகளைச் சந்திக்க மறுக்கிறோம் என்பது புரியவில்லை.

    //எதுவுமே நடக்காத மாதிரி இங்கு நமது ஊடகங்கள் பக்கம் பக்கமாய் செய்திகளை நிரப்பி உப்பிக் கிடக்கின்றன. //

    உண்மை :

    தமிழகத்தைத் தவிர, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு, இது ஓர் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை மட்டுமே. புலிகள் ஓர் தீவிர வாத இயக்கமாகப் பேர் வாங்கி பல ஆண்டுகளாகி இருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதை நம்மைப் போலவே சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியமற்றது.


    //தேர்தல் வரை பேசிக்கொண்டு இருந்தவர்களும் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டு விட்டனர்//

    உண்மை :

    இது ஒன்றும் நமக்குப் புதிதே அல்ல. ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொண்டு புலம்புவது பொருளற்றது. "தனித்தமிழ் நாடு கோரும் கோரிக்கையை தி. மு. க கைவிட்டாலும் கூட, அதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன" என்ற அறிஞர் அண்ணாவின் முடிவு, இந்த அரசியல் பரிணாமத்தின் துவக்கம்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழினத்தைக் காக்க வந்த கடவுளாக சில அரசியல் வாதிகளை நம்புவதும், பின்னர் எமார்ந்தபின் அவர்களை பல விதமாக விமர்சிப்பதும் நமக்கும் காலம் தொட்டுப் பழகிப்போன விஷயம். இப்போது வை. கோ வும் விமர்சிக்கபடுகிறார். அடுத்து, நெடுமாறனாக இருக்கலாம். யார் கண்டது? பிரபாகரனே விமர்சிக்கப்பட்டாலும் வியப்பில்லை.


    //இணையத்தில் மட்டும் எதோ உயிரும், மனிதாபிமானமும் ஒட்டிக்கொண்டு இருப்பதாய்ப் படுகிறது//


    உண்மை :

    இணையத்தில் உணர்வுகளைப் பதிந்துவிட்டு பீசா சாப்பிடப்போய் விடும் தமழர்கள் தங்கள் பொழுதைப் போக்கிகொல்பவர்கள் மட்டுமே.

    //நான் மிகவும் நேசிக்கிற கியூபாவும், இலங்கை அரசைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருப்பது மிகுந்த வேதனை தருகிறது.//

    உண்மை :

    இது மார்க்சிய சித்தாந்தத்தை ஒரு மாதிரியாகத் தனதாக்கிக் கொண்டிருக்கின்ற சில நண்பர்களின் புலம்பல் மட்டுமே. இந்த இனப் பிரச்சினை கியுபா போன்ற நாடுகளால் எப்படிப் பார்க்கப்படும் என்ற சித்தாந்த தெளிவு இல்லாததால் வரும் சிந்தனை.

    "நானும் கம்யுனிஸ்ட் தான் " என்று பெரியார் சொனத்தில் இருந்து தமிழனுக்கு இருந்து வரும் குழப்பம். கம்யுனிசம் என்றால் என்ன? என்பதற்கும் கூட நாம் சான்றிதழ் வழங்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் என்ன?

    //அதோ யாராவது ஆதரவு தர மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கும் அந்த அனாதரவான மனிதர்களுக்காக சிந்திக்கிற மனிதர்களே வேண்டும் இப்போது. இலங்கையின் தமிழரல்லாத அந்தப் பக்கத்திலிருந்து ஒரு குரலை நான் நேற்று வாசித்தேன்.//

    உண்மை. இது நம் ஏக்கம். ஏனோ, பிரபாகரன் அவர்களின், அணுகுமுறை எப்படி இருந்திருந்திருக்கலாம், ஆனால் எப்படி இருந்ததது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. எனென்றால் அது ஈழ வரலாற்றைப் புறட்டிப்போடிருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. பேசாமல் கும்பல்கும்பலாக கொன்றுவிடுங்கள்.....

    சுதந்திரமாக அந்நாட்டில் அலைவார்கள்!!!!

    உங்கள் எழுத்தில் அவலத்தைக் கண்டதைப் போன்ற உணர்வு!!!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா29 மே, 2009 அன்று PM 7:24

    India, china and cuba voted favour of Srilankan govt not the suffered peoples.

    I beleive Communist are humanist first but failed to be side on sufferer.

    Keen on CPI-M stand on srilanka..

    Regards,
    Hariharan

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா29 மே, 2009 அன்று PM 8:38

    //கண்முன்னே நடக்கும் உயிர்வதையை இமைகொட்டாமல் பார்த்து, அரசியல் நடத்த எப்படி முடிகிறது//

    இங்க தமிழர்கள் யாரும் 'குடும்பம்' நடத்தாமலா இருக்காங்க?

    பதிலளிநீக்கு
  11. பிரபாவிற்கு மனசாட்சி இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது..

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா30 மே, 2009 அன்று AM 10:39

    உலகமே எதிர்த்து நின்றாலும் தொப்புள் கொடியுரவான இந்தியாவின் செயற்பாடுகள் தான் எம்மை 1000 ஆட்லறிகள் கொண்டு தாக்குகின்றன
    http://kandumkaanaan.blogspot.com/2009/05/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  13. நசியா பரூக்கின் பதிவைக் கண்டு நெகிழ்ந்ததற்கும், அதனைத் தமிழில் வழங்க ஏற்பாடு செய்ததற்கும் வாழ்த்துக்களைப் பெறுகிறீர்கள் மாதவராஜ்...........
    கொலைகாரர்கள் எல்லோரும் தமக்குள்ளாக முணுமுணுத்தோ, அரசியல் தேவையை ஒட்டி பகிரங்கமாகவோ மன்னிப்பு கோருதலைப் பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால், உயிர்கள் மீண்டும் எழுந்து வந்து விடுவதில்லை.
    புரட்சிக்கவி பாரதிதாசன் வரிகள் மறப்பதே இல்லை: "சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை........."

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  14. nagaindian!
    நிச்சயமாய். நமது எதிர்ப்பைத் தெரிவிக்கணும்.

    அனானி!
    இருக்கலாம். ஆனால், ஆதரவுக்குரல்களை நாம் அடையாளங்காண்பது, மனிதத்தை மீட்டெடுக்கும் முயற்சிதானே...

    ராஜநடராஜன்!
    அரசியல் என்பது மக்களை முன்னிலைப்படுத்தாமல், இங்கு தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் இந்த சோதனை.

    சுரேஷ்!
    மயக்கம் தெளியவில்லை என்றால், சில கடுமையான வைத்திய முறைகளைக் கையாளத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. ஜான் பொன்ராஜ்!
    //100 ருபாய் குடுத்தால் ஒட்டு வந்துரும் என்று நினைப்பு? காலம் ஒரு நாள் மாறும் தருமம் அப்போது வெல்லும் . //

    நிச்சயமாய்.....

    அனானி!
    நான் என் கருத்தை மட்டுமே இங்கு சொல்கிறேன். முதலில் நானே திருந்த வேண்டியது நிறைய இருக்கிறதே....!

    சந்தனமுல்லை!
    தங்கள் பகிர்வு ஆதரவாகவும், சரியான திசை நோக்கி நகர்த்துவதாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. ஓவியன்!

    தங்களது பகிர்வுக்கும் சிந்தனைகளுக்கும் மிக்க நன்றி.

    நான் மக்களின் வேதனையிலிருந்து பேசுகிறேன். தாங்கள் ஈழப் போரட்டத்திலிருந்து பேசுகிறீர்கள்.

    இனப்பிரச்சினை, தீவீரவாதம், பயங்கரவாதம் எல்லாம் தாண்டி, ஒரு அரசு தன் மக்களை நடத்துகிற இந்தக் கொடுமையை இந்தியாவின் இதரப் பகுதிகளிலும், உலக நாடுகளிலும் இப்படியா பார்க்கப்பட வேண்டும்? இதனைப் புரிந்து கொள்ள நல்ல மனிதாபிமானமிக்க இதயங்கள் போதுமே!

    பதிலளிநீக்கு
  17. ஆதவா!
    தங்கள் கோபமும், விரக்தியும் புரிகிறது.

    ஹரிஹரன்!
    தங்கள் வருகைக்கு நன்றி. பகிர்வும் முக்கியமானது.

    பூனை!
    எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதோடு, இதயச் சுத்தியோடு இதையும் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம். மக்களின் ஆதரவு கிடைக்கும் போது, ஒரு கருத்து பௌதீக சக்தியாக உருப்பெறும்.

    வெத்துவேட்டு!
    இலங்கை அரசு, தமிழர்களுக்குரிய உரிமையை சரியாக அனுமதித்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது என்பதுதான் மிகச்சரியாக இருக்கும். அதுதானே பிரச்சினைகளின் முதல் புள்ளி நண்பரே!

    அனானி!
    வருகைக்கு நன்றி.

    வேணுகோபால்!
    //புரட்சிக்கவி பாரதிதாசன் வரிகள் மறப்பதே இல்லை: "சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை........."//

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. "we r now tamilians by word not by feelings"

    (powerla) irukkira tamilane wheel chairla ukkandhukkittu onnum pudunga mudiyama suyanalavathiya irukkan!!!!!!!!!!

    "be united tamilians"

    kalai illa manithan peyar "kalai....ar" . his quote is

    "naan nee yendru sollum pothu uthadugal ottathu ........... endru sonnalthan ottum". (that old ...fcuk... is unfit for this quote)

    fill in the blanks

    because that word is being depleted in the history of tamilan.

    so tamilane ippadi irukkum pothu lankans kitta irunthu eppadi mercy ya ethir parkka mudiyum

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!