‘பொறுக்கி என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா’

sami1

படத்தில் அவன் டெபுடி கமிஷனர். இட்லியில்  பீர் ஊற்றி பிசையும் கதாநாயகனாக அறிமுகமாகிறான். காக்கிச்சட்டையில் நிதானமாக அழுத்தமான குரலில் "நா போலீஸ் இல்ல...பொறுக்கி " என்று மீசையைத் தடவுகிறான். தியேட்டரில் கைதட்டல்களும், விசில்களும் ஆரவாரம் செய்கின்றன. விபரீத காட்சிகள் நம்மை நிலைகுலைய வைக்கிறது. இந்தக் கண்றாவியில் படத்திற்கு பெயர் 'சாமி'. யார் போலீஸா? பொறுக்கியா?

போலீஸ் இங்கே பொறுக்கியைவிட கேவலமாக இருக்கிறது என்று கிண்டல் செய்யப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றினாலும் படத்தின் செய்தி அதுவல்ல என்பது தெளிவாக இருக்கிறது. ‘பொறுக்கி என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா’ என்று மட்டும்தான் படத்தில் பாட்டில்லை. சாமி படத்தில் இருந்து, சமீபகாலம் வரை இது போன்ற வெள்ளித்திரை பிம்பங்கள் தொடர்ந்து  வந்து கொண்டிருக்கின்றன. சாகசங்கள் புரிகிற காவியத்தலைவர்களான இந்த பொறுக்கிகள் வேடங்களில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும்... இப்போதுதான் முளைத்திருக்கிற தனுஷ்,  சிம்பு வரை ஒரு அலாதியான பிரியம் இருக்கிறது. 'லும்பன்'களின் உலகமாய் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்பதை பதற்றத்தோடு நாம் புரிந்தாக வேண்டும்.

தமிழ்ச் சினிமாவில் இந்த பாத்திரங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் சாமிகள் கதாநாயகர்களாகவும், அசுரர்கள் வில்லன்களாகவும் படைக்கப்பட்டார்கள். பிறகு ராஜாக்களின் காலம்.  கெட்ட ராஜா. நல்ல ராஜா. அப்புறம் பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள் வில்லன்கள் ஆனார்கள். அதுவே வளர்ந்து முதலாளிகள். இந்தக் காலம் வரை கதாநாயகர்கள், வில்லன்கள் என்பவர்கள் குழப்பமில்லாமல் இருந்து வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பிருந்து அரசியல்வாதிகள் நேரம். போலீஸ் பலநேரம் வில்லன்களாகவும், சில நேரங்களில்  கதாநாயகர்களாகவும் மாறுவார்கள். சில அதிகாரிகள் வில்லன்களாகவும்,  கதாநாயகர்களாகவும் இருப்பார்கள்.  இந்தக் குழப்பங்கள் நிகழ்ந்தாலும், கதாநாயகர்கள் மக்களுக்கு நல்லது செய்பவர்களாக இருப்பார்கள் என்பது மாறாமல் இருக்கிறது.

காலங்களோடு மாற்றம் பெற்ற இந்த வரிசையில் இப்போது லும்பன்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சாமி படத்தில் நாயகன் மக்களுக்கு நல்லது மட்டுமா செய்கிறான். லஞ்சம் கொடுக்கலாம், வாங்கலாம் என்கிறான். கூடுமானவரை அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளிகளை அனுசரிக்கலாம் என்கிறான். போலீஸ் வேனில் அரிவாள், சோடாபுட்டிகள் போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்கிறான். போலீஸாயிருந்தாலும் லைசென்சு வாங்காத துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறான்.சட்டங்களை மீறலாம் என்கிறான். நாயகனுடைய உருவத்தின் வழியாக இத்தனையும் பார்வையாளர்களை படம் முழுக்க ஊடுருவிக் கொண்டு இருக்கிறது.
அதில் ஒரு நியாயம் இருப்பதாக சுயநினைவு இல்லாத இருட்டு வெளிக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

லும்பன்கள்  மாபாதகர்கள்... கொடூரமானவர்கள் என்கிற ரீதியில் அர்த்தம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அற்புதமான மனிதர்கள் அவர்களிலும் இருக்கக்கூடும் . உங்களுக்கும் எனக்கும் இல்லாத மனிதாபிமானங்கள் அவர்களில் சிலரிடமிருந்து  வெளிப்படக்கூடும்.  விலங்குகளிடம் கூட  இத்தகைய குணங்களை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறோமே.  அதுபோலத்தான். ஆனால் லும்பன்கள் குறித்து பொதுவான மதிப்பீடு என்பது வேறு. லும்பன் என்பது ஒரு கலாச்சாரம்.  கட்டுப்பாடற்ற, சமூக நெறிகளற்ற, நாகரீகமற்ற, பண்பாடற்ற, எந்த ஒழுங்குமற்ற ஒரு சமூகம்.  உழைக்காமல் வாழ விரும்பும் மூர்க்கத்தனம். உலகத்தை துச்சமாக நினைத்து தன் மனம் போன போக்கில் எதிர்கொள்ளும்  கண்மூடித்தனம். காட்டுமிராண்டித்தனம். சாமியின் மூலம் யார் இங்கு விதைக்கப்படுகிறார்கள், தூபம் போட்டு வளர்க்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த லும்பன்கள்தான் ஓட்டுச்சாவடிக்குள் புகுந்து மக்களை விரட்டி இஷ்டத்திற்கு கள்ள ஓட்டுப் போட முடியும். நடுரோட்டில் ஒரு நியாயமான அதிகாரியையோ, மக்கள் தொண்டரையோ வெட்டிச் சாய்க்க முடியும். வேறு இனத்துப் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழிக்க முடியும். சமூகத்தை மிரட்டுகிற, பொது ஜனத்தை அலறச் செய்கிற இந்தக் காரியங்கள் இந்த ஜனநாயகத்திற்கு, இந்த முதலாளித்துவ அரசியல் அமைப்புக்கு மிக மிக அத்தியாவசியமானது. இந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்க  நீதித்துறை, பத்திரிக்கைத்துறை என நான்கு தூண்கள் உண்டு என்பது பழைய காலம். இப்போது ஐந்தாவதாக இந்த லும்பன்கள் என்னும் தூண்களும் தாங்கிப் பிடிக்கிறார்கள்.அதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து  ஐ.எஸ்.ஐ  அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது. ரசிகர்களின் உள்ளங்கவர்ந்து வசூலில் சாதனையும்  படைக்கலாம். 

வேலையின்மை மிஞ்சியிருக்கிற,   இருக்கிற வேலையும் பறிபோகிற ஒரு காலக் கட்டத்தில் இதுமாதிரியான படங்கள் வெவருவது எந்த நோக்கத்திற்காக என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியான இளைஞர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக நில்லாமல் போவதற்கான உத்தி இது. முதலாளித்துவம் சுற்றுப்புறச் சுழலைக் கெடுப்பது போல மனித மனங்களையும்  சீரழிக்கும். உன்னதங்கள் எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கும். மதிப்பீடுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும். பொறுக்கிகள் 'புண்ணிய புருஷர்'களாகவும், ‘மாவீரர்களாகவும்’  கருதப்படுவார்கள். சட்டசபையில், பாராளுமன்றத்தில், போலீஸ் ஸ்டேஷனில்,  டீக்கடையில், சாராயக்கடையில் என்று அவர்கள் நிறைந்திருப்பார்கள்.

நமக்கு முன்னை விடவும் அதிகமான வேலை இருக்கிறது. மகாத்மாவை, பகத் சிங்கை, சுபாஷ் சந்திர போஸை, முன்னை விடவும் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது. வரலாற்றின் காவியத் தலைவர்களை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமே இந்த போலியான 'காவியத்' தலைவர்களை அம்பலப்படுத்த முடியும். நிஜமான காவியத்தலைவர்களை உருவாக்க முடியும்.

பி.கு: சாமி படம் வந்த போது Bank workers unity பத்திரிகைக்காக எழுதியது. இந்த தேர்தல் நேரத்தில், பழைய டைரியின் பக்கங்களிலிருந்து எடுத்துப் பதிவு செய்வது பொருத்தமாகத் தோன்றியது.

 

*

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அண்ணே இது 16 வயதினிலே காலத்துல இருந்தே இருக்குது. அந்தப் படத்துல அவன் ரெம்பக் கெட்டவனா இருந்தும் ஒரு வசனம் மூலமாகவே பிரபலமானான் - இது எப்படி இருக்கு.

    மக்கள் மனதிலும் இது மாதிரி நம்மால் செய்ய முடியல செய்பவனைப் பார்த்து ஆறுதலடையலாம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. சூப்பராணா சமுகத்துக்கு தேவையான விஷியத்தை சொல்லிருக்கிங்க ஹாட்ஸ் ஆப் ... தொடந்து நல்லதை பதிங்கள் இது மாதிரி .. :-) வோட்டும் போட்டாச்சு

    பதிலளிநீக்கு
  3. நல்ல‌ அலசல். இதுபோன்ற லும்பன்கள் கும்பல்கள் இன்றைய தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் பைத்தியக்கார சமூகத்திற்கு ஒரு அத்யாவசியமான தேவையாகிவிட்டது. எழுதாத சட்டங்களின் (மடா)அதிபதிகள்தான் இந்த லும்பனகள். ஒருபக்கம் சாதாரண மக்களின் அறியாமை வெறுப்பு ஏமாற்றங்கள் மறுபக்கம் ஆட்சி அதிகாரங்களின் அடாவடித்தனம் கையாலாகாத்தனம் ஆகிய இரு துருவங்களின் மத்தியில் கூத்தாடி பிழைக்கும் கும்பல்களே இநத லும்பன்கள் இனம். உருப்படுமா இந்த சமுதாயம்?

    பதிலளிநீக்கு
  4. சாமி ரொம்ப பாதிச்சிருச்சோ!
    என்னை மாதிரி நாத்திகனாகிருங்களேன்!

    பதிலளிநீக்கு
  5. "நமக்கு முன்னை விடவும் அதிகமான வேலை இருக்கிறது."ஆம், செய்யுங்கள்...உங்கள் தட்டச்சு வேகம் உதவும். my best wishes

    பதிலளிநீக்கு
  6. அட்டகாசமான பதிவு.
    கடைசி பத்தி சுளீரென அறையும் உண்மை...

    பதிலளிநீக்கு
  7. இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான பதிவுதான்.
    இப்படிப்பட்ட பாத்திரங்களின் மீது பார்வையாளனுக்கு ஒரு வித மயக்கம் ஏற்பட்டு விடுகிறது.
    அதனாலேயே அந்த கதாபாத்திரம் எந்த பஞ்சமாபாதகம் செய்தாலும் அது நியாயம் என்ற எண்ணம் ரசிகனின்(மற்றும் பார்வையாளனின்) மனதில் இயல்பாகவே எழும்படி செய்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  8. அண்ணே,

    புத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.

    மிக்க அன்புடன்,
    செல்வேந்திரன்.
    k.selventhiran@gmail.com

    பதிலளிநீக்கு
  9. சோ.கிருஷ்ணகுமார்16 ஏப்ரல், 2009 அன்று PM 8:20

    மதுரையிலிருந்து புதுதில்லிவரை லும்பன்கள் தானே இன்று தலைவர்கள்! தயாரிப்பாளர்களும் அவர்கள் தானே அண்ணே!
    அவர்கள் என்ன செய்தாலும் நாம் வெறும் பார்வையாளர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி நம்மை செயலிலிகளாக்கும் தந்திரம் என்பதை இன்னமும் எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போடும் என் சனங்களிடம் எப்படிப்புரியவைப்பேன்?

    பதிலளிநீக்கு
  10. இந்த நேரத்துக்கு நச்சுன்னு ஒரு பதிவு இரு.
    உள்நோக்கிய அலசல், சரியா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  11. இந்த நேரத்துக்கு நச்சுன்னு ஒரு பதிவு இரு.
    உள்நோக்கிய அலசல், சரியா சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  12. Leelavathi was murdered by lumpens of a party. Yet your party had no problems in having an alliance with that party in Madurai.
    In Kerala and West Bengal CPI(M) is notorious for its lumpen brigade and their tatics in 'handling' opposition.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு.


    மக்கள் இதை பாத்துதானா கெடப்போறாங்க??

    பதிலளிநீக்கு
  14. படத்தை முழுவதுமாக பார்த்தீர்களா இல்லை பாதி மட்டுமா??

    அந்த அதிகாரி ஏன் அனுசரித்து போகிறார் என்பது படத்திலேயே சொல்லப்பட்டு இருக்கிறது...வெளிப்படையாக எதிர்த்து ஊர் ஊருக்கு மாற்றலாகி பழி வாங்கப்படுவதை விட, உள்ளிருந்தே அரிப்பது என்பது தான் அந்த படத்தின் மூலம்...வழி எப்படி இருந்தாலும், நோக்கம் நல்ல நோக்கமாயிருந்தால் அதில் தவறென்ன??

    லஞ்சம் வாங்கி அந்த அதிகாரி பொன்னும் பொருளும் சேர்த்து விட்டதாக காட்டவில்லை...அது லஞ்சம் தந்த நபரின் பேரிலேயே தர்ம காரியத்திற்கு தரப்பட்டிருக்கிறது...இதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா??

    //
    கட்டுப்பாடற்ற, சமூக நெறிகளற்ற, நாகரீகமற்ற, பண்பாடற்ற, எந்த ஒழுங்குமற்ற ஒரு சமூகம்.
    //

    முதலில் எது நாகரீகம்?? எது கட்டுப்பாடு? அது சமூக நெறி??

    ஆங்கில ஆட்சிக் காலத்தில் விடுதலைக்கு போராடியவர்கள் எல்லாரும் கட்டுப்பாடற்ற, நாகரீகமற்றவர்களே...ஆனால், இன்றைக்கு அவர்கள் கட்டுபாடற்ற நெறியற்றவர்கள் என்று சொல்வீர்களா??

    //
    அதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து ஐ.எஸ்.ஐ அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது.
    //

    எனக்கு சாமி போன்ற படங்கள் குறித்து பயமில்லை...ஆனால் உங்கள் எழுத்தில் தெறிக்கும் கருத்து திணிப்பும், அதிகார வெறியும் தான் பயமாயிருக்கிறது....

    //
    வேலையின்மை மிஞ்சியிருக்கிற, இருக்கிற வேலையும் பறிபோகிற ஒரு காலக் கட்டத்தில் இதுமாதிரியான படங்கள் வெவருவது எந்த நோக்கத்திற்காக என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியான இளைஞர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக நில்லாமல் போவதற்கான உத்தி இது
    //

    எப்படி?? அக்கிரமத்தை அழிப்பதாகத் தானே அந்த பாத்திரமே அமைக்கப்பட்டிருக்கிறது??

    //
    மகாத்மாவை, பகத் சிங்கை, சுபாஷ் சந்திர போஸை, முன்னை விடவும் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது.
    //

    நீங்கள் உங்கள் கருத்துடனே முரண்படுகிறீர்கள்...நீங்கள் சொல்லும் எல்லாருமே அன்றைய சட்டத்தை எதிர்த்து நின்றவர்களே...பகத் சிங் சுட்டுக் கொன்றார்...சந்திர போஸ் ஜெர்மனி/ஜப்பான் உடன் கூட்டு சேர முயற்சி செய்தார்..இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி செய்யாத அநியாயங்களா??...உண்மையா இல்லையா?? உங்கள் கருத்துப்படி, இவர்கள் லும்பன்கள் என்றல்லவா ஆகிறது??

    நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...ஆனால் தீராத கருத்து திணிப்பும், ஒரு சார் பார்வையும் மிக அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது...

    நன்றி!

    பதிலளிநீக்கு
  15. காலத்திற்கேற்ற பொருத்தமான இடுகை.

    பதிலளிநீக்கு
  16. வேலன்!

    16 வயதுக்கு முன்னால் இருந்தும் கூட இருக்கலாம். “போலீஸ் இல்ல பொறுக்கி” என்று பெருமிதப்படுவது இப்போதுதான். பொறுக்கிக்கான சமூக ஒப்புதலை மக்களிடமிருந்தே பெறுவது இப்போது சாத்தியமாகி இருக்கிறதே என்ற கவலைதான் இந்தப் பதிவு.

    //மக்கள் மனதிலும் இது மாதிரி நம்மால் செய்ய முடியல செய்பவனைப் பார்த்து ஆறுதலடையலாம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கு.//
    தவறுகளை தட்டிக் கேட்கும் பாத்திரங்களுக்கு நீங்கள் சொன்னது பொருந்தலாம். தவறு செய்யும் பொருந்தாது என்பது என் எண்ணம்.


    சுரேஷ்!
    ஆதரவுக்கு நன்றிங்க.


    மாசிலா!
    //ஒருபக்கம் சாதாரண மக்களின் அறியாமை வெறுப்பு ஏமாற்றங்கள் மறுபக்கம் ஆட்சி அதிகாரங்களின் அடாவடித்தனம் கையாலாகாத்தனம் ஆகிய இரு துருவங்களின் மத்தியில் கூத்தாடி பிழைக்கும் கும்பல்களே இநத லும்பன்கள் இனம்.//
    சரியான புரிதல்.

    வால்பையன்!
    சாமி பாதிக்கவில்லை. அந்தப் படத்தில் மையமான விஷயம்தான் பாதித்தது.
    அப்புறம் நானும் உங்களைப் போலத்தான்.


    டாக்டர் ருதரன்!
    வருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ச்வார்.


    ச்சின்னப் பையன்!
    ரொம்ப நன்றிங்க.


    பட்டாம்பூச்சி!
    இப்படிப்பட்ட பாத்திரத்தை கதாநாயக பாத்திரமாக படைக்கும்போதுதான் மயக்கம் வருகிறது என எண்ணுகிறேன். நான் கடவுள் படத்தில் வரும் தாண்டவன் பாத்திரம் மீது மயக்கம் வருமா?


    செல்வேந்திரன்!
    உங்கள் மின்னஞ்சலுக்கு முகவரி அனுப்பி வைக்கிறேன். நன்றி.


    சோ.கிருஷ்ணகுமார்!
    அரசியல் என்பது நாற்காலிச் சண்டையல்ல. நம் வாழ்வை தீர்மானிக்கும் போராட்டம் என்பது புரிகிறபோது இந்த குழப்பங்கள் தீரலாம்.


    முத்துராமலிங்கம்!
    வருஅகைக்கும், பகிர்வுக்கும் ரொம்ப நன்றிங்க. தொடர்ந்த உங்களைப் போன்றவரின் ஆதரவுதான் எழுத வைக்கிறது. எதாவது சொல்லத் தோன்றுகிறது.


    மங்களூர் சிவா!
    இதைப்பார்த்தும் கெட்டுப் போகிறார்கள். வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி.


    ஜகதீஸ்வரன்!
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அதுசரி!
    சினிமா பற்றி நான் யோசிப்பதும் நீங்கள் யோசிப்பதும் வேறு வேறாகவே இருக்கிறது.
    கடைசி ஒரு காட்சியில் கதாநாயகனை நல்லவனாக காட்ட, டைரக்டர் கண்டுபிடித்த உத்தியால், லஞ்சம் வாங்குவது சரியாகி விடுமா என்ன? குமுதம் பத்திரிகையில் முன்பு ஒரு குட்டிக்கதை வந்தது. ஒரு பெண்ணின் பின்சீட்டில் உட்கார்ந்து ஒருவன் கால்நீட்டி அடையும் எண்ணங்களை இருபது வரி எழுதிவிட்டு கடைசியில் அவள் கால் இழந்தவள் என்றும், இவன் தொட்டுணர்ந்தது மரக்கால் என்றும் ஒருவரியில் முடியும். இருபது வரியில் இரைத்த சேறை ஒரு வரியில் அள்ளவா முடியும்.

    ஆங்கில ஆட்சிக் காலத்தில் போராடியவர்கள் கட்டுப்பாடற்ற நாகரீகமற்றவர்களே என்னும் தங்கள் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறேன். காந்தி, போஸ், பகத்சிங், வ்.உ.சி இவர்கள் எல்லாம் நாகரீகமற்றவர்களா? சுதந்திரம் என்னும் இலட்சியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழப்பவர்கள் லும்பன்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்.... தியாகத்தின் சுடர்களை போற்ற வேண்டாம். தயவு செய்து எதோ வாதம் செய்ய வேண்டுமென்று தூற்றாதீர்கள்.

    சார்... என் எழுத்தில் கருத்துத் திணிப்பும், அதிகார வெறியும் இருப்பின், சுட்டிக் காட்டினால் பகிரங்க மன்னிப்பு கோருவேன். என் கருத்தைத்தான் சொல்கிறேன். கொஞ்சம் உரக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், அது திமிர் அல்ல, வெறி அல்ல. பாரதியின் ’வெடிப்புறப் பேசு’தான்.

    அந்தப் படத்தின் அக்கிரமம், நியாயம் குறித்துப் பேசவில்லை. ஒருக் குறிப்ப்ட்ட நாயகன் பாத்திரம், எந்த கலாச்சாரக் குறியீடுகளை இங்கே சுட்டிக் காட்டுகிறது என்றுதான் வருத்தப்பட்டு இருந்தேன்.

    நான் லும்பன்கள் என்று சொன்னதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொறுக்கி என்ற வார்த்தைக்கான புரிதல் குறித்து. அவர்களுக்கு லட்சியம் கிடையாது. எதற்கும் விசுவாசம் கிடையாது. அவன் நலம் மட்டுமே முக்கியம். அன்ரைய பொழுதுதான் அவனுக்கு முக்கியம். நாளை என்பது பற்றி கவலையும் கிடையாது, சிந்தனையும் கிடையாது. ஈ படத்தில் வரும் கதாநாயகனை மிகக் கவனமாகச் சித்தரித்திருப்பார். பகத்சிங்கும், போஸும் அப்படிப்பட்டவர்களா? வழிமுறைகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் லட்சியம் உன்னதமானது. த்ன்னலமற்றவர்கள்.

    நன்றாகவா எழுதுகிறேன். இல்லை சார்... எழுதி எழுதிப் பார்க்க்கிறேன். அவ்வளவுதான். அயற்சியாய் இருந்தால் பொறுத்தருளுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. //
    அதுசரி!
    சினிமா பற்றி நான் யோசிப்பதும் நீங்கள் யோசிப்பதும் வேறு வேறாகவே இருக்கிறது.
    //

    மிக நிச்சயமாக! சினிமாவில் ஒரு கதாநாயகனை கெட்டவனாக சித்தரித்தால் சமூகம் கெட்டுப் போகும் என்று எனக்கு தோன்றுவதில்லை...என்னைப் பொறுத்தவரை சினிமா வெறுமனே ஒரு பொழுதுபோக்கு... வெறும் கமர்ஷியல் படம் என்று சொல்லும் ரஜினி படத்திலும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.....சமூகத்தின் ஒட்டு மொத்த தீமைக்கு சினிமா தான் மொத்தக் காரணம் என்ற எனக்கு ஒரு போதும் வருவதில்லை! சினிமா வருவதற்கு முன் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்து விடவில்லை!

    //
    கடைசி ஒரு காட்சியில் கதாநாயகனை நல்லவனாக காட்ட, டைரக்டர் கண்டுபிடித்த உத்தியால், லஞ்சம் வாங்குவது சரியாகி விடுமா என்ன? குமுதம் பத்திரிகையில் முன்பு ஒரு குட்டிக்கதை வந்தது. ஒரு பெண்ணின் பின்சீட்டில் உட்கார்ந்து ஒருவன் கால்நீட்டி அடையும் எண்ணங்களை இருபது வரி எழுதிவிட்டு கடைசியில் அவள் கால் இழந்தவள் என்றும், இவன் தொட்டுணர்ந்தது மரக்கால் என்றும் ஒருவரியில் முடியும். இருபது வரியில் இரைத்த சேறை ஒரு வரியில் அள்ளவா முடியும்.
    //

    ஒரு பூனை கறுப்பாக இருந்தால் கறுப்பாக இருப்பது எல்லாம் பூனை தான் என்பது போன்ற வாதம் இது!..அடிப்படை நோக்கம் சரியாக இருப்பின் சில நேரங்களில் சட்டத்தை மீறுவது தவறில்லை என்பது என் கருத்து...ஆனால் பின் சீட்டில் உட்கார்ந்து கால் நீட்டி அடையும் எண்ணங்களில் என்ன விதமான நோக்கம் இருக்க முடியும்??

    //
    ஆங்கில ஆட்சிக் காலத்தில் போராடியவர்கள் கட்டுப்பாடற்ற நாகரீகமற்றவர்களே என்னும் தங்கள் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறேன். காந்தி, போஸ், பகத்சிங், வ்.உ.சி இவர்கள் எல்லாம் நாகரீகமற்றவர்களா? சுதந்திரம் என்னும் இலட்சியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழப்பவர்கள் லும்பன்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்.... தியாகத்தின் சுடர்களை போற்ற வேண்டாம். தயவு செய்து எதோ வாதம் செய்ய வேண்டுமென்று தூற்றாதீர்கள்.
    //

    அவர்களை லும்பன்கள் என்றும், நாகரீகமற்றவர்கள் என்றும் நான் எங்கே சொன்னேன்?? நான் எழுதியதில் முக்கியமான வரியை நீக்கிவிட்டு படித்து விட்டீர்கள் போல...

    நான் எழுதியது

    "உங்கள் கருத்துப்படி, இவர்கள் லும்பன்கள் என்றல்லவா ஆகிறது??"

    உங்கள் இடுகைப்படி, சாமி படத்தில் விக்ரம் கேரக்டர் சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது...சட்டத்தை மீறுகிறான்...போலீசாக இருந்து கொண்டே லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்....அதனால் அவன் லும்பன் ஆகிறான்...மோசமான பிரதி ஆகிறான்... அந்த பாத்திரத்தின் அடிப்படை நோக்கம் என்ன? சகல அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு சட்டம், நீதியை நாய் போல நடத்தும், அதே சமயம் சட்டத்தை உருவாக்குபவர்களையே உருவாக்கும் ஒரு அயோக்கியனை ஒழிப்பது தான் அல்லவா?? சில நேரங்களில் நீதியை நிலை நாட்ட சட்டத்தை உடைக்க வேண்டி தான் இருக்கிறது...ஆனால், இத்தகைய கதாபாத்திரமும் மனிதர்க்ளும் உங்களைப் பொறுத்தவரை லும்பன்கள்....இது அடிப்படை நோக்கத்தை மறந்து விட்டு (அல்லது ஒதுக்கி விட்டு) பார்ப்பதால் வந்த விளைவு...

    உங்கள் இதே அளவு கோலை பகத்சிங்குக்கு நீட்டினால்?? விடை மோசமாக இருக்குமே ஐயா?? ஏனெனில் பகத்சிங்கும் அன்றைய சட்டத்தை மீறியிருக்கிறார்...துப்பாக்கி வைத்திருக்கிறார்...ஆனால் அவர் அடிப்படை நோக்கம் நீதி அல்லவா?? ஆனால் நீங்கள் தான் அதை பார்க்க மாட்டீர்களே??

    நீதிக்காக பகத்சிங் அன்று செய்தது சரி என்றால், சாமியில் விக்ரம் செய்ததும் சரியே....நீங்கள் என்னையும் லும்பன் என்று அழைத்தாலும் கவலையில்லை!

    //
    சார்... என் எழுத்தில் கருத்துத் திணிப்பும், அதிகார வெறியும் இருப்பின், சுட்டிக் காட்டினால் பகிரங்க மன்னிப்பு கோருவேன். என் கருத்தைத்தான் சொல்கிறேன். கொஞ்சம் உரக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், அது திமிர் அல்ல, வெறி அல்ல. பாரதியின் ’வெடிப்புறப் பேசு’தான்.
    //

    இது நீங்கள் எழுதியது..."அதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து ஐ.எஸ்.ஐ அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது. "

    ஒரு வேளை நீங்கள் சென்சார் போர்டில் இருந்தால் இந்த படத்தை தடை செய்திருப்பீர்கள்...இது மட்டுமல்ல, தமிழில் இது போல் 100 படம் உண்டு...அவை எல்லாவற்றுக்கும் தடையே?? காரணம் அந்த பாத்திர படைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை??

    கருத்து சொல்ல எல்லாருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு ஐயா..ஆனால், என் கருத்துக்கு மாறான கருத்துக்கள் வெளிவரக்கூடாது என்று சொல்வது அதிகாரம் இன்றி வேறு என்ன??

    //
    நான் லும்பன்கள் என்று சொன்னதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொறுக்கி என்ற வார்த்தைக்கான புரிதல் குறித்து. அவர்களுக்கு லட்சியம் கிடையாது. எதற்கும் விசுவாசம் கிடையாது. அவன் நலம் மட்டுமே முக்கியம். அன்ரைய பொழுதுதான் அவனுக்கு முக்கியம். நாளை என்பது பற்றி கவலையும் கிடையாது, சிந்தனையும் கிடையாது.
    //

    நீங்கள் சொல்லியிருக்கும் எந்த விஷயமும் சாமி படத்தில் வரும் கேரக்டருக்கு பொருந்தாது...வேண்டுமானால் படத்தை மீண்டும் பாருங்கள்...

    //
    ஈ படத்தில் வரும் கதாநாயகனை மிகக் கவனமாகச் சித்தரித்திருப்பார்.
    //

    ஈ படம் நான் பார்க்கவில்லை..

    //
    பகத்சிங்கும், போஸும் அப்படிப்பட்டவர்களா? வழிமுறைகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் லட்சியம் உன்னதமானது. த்ன்னலமற்றவர்கள்.
    //

    இதையே தான் நானும் சொல்கிறேன்...வழிமுறைகள் வேறுபட்டு இருந்தாலும் அடிப்படை நோக்கம் சரியானதாக இருந்தால் அதில் தவறில்லை..ஆனால் பாத்திரம் காட்டும் வழிமுறை தவறு என்று சொன்னது நீங்கள் அல்லவா??

    //
    நன்றாகவா எழுதுகிறேன். இல்லை சார்... எழுதி எழுதிப் பார்க்க்கிறேன். அவ்வளவுதான். அயற்சியாய் இருந்தால் பொறுத்தருளுங்கள்.
    //

    நீங்கள் எழுதி எழுதிப் பார்ப்பதே மிக நன்றாக இருக்கிறது...

    (பி.கு. சார் என்றெல்லாம் சொல்ல வேண்டாமே?? வெறுமனே பெயர் சொல்லி அழைத்தால் நன்று)

    பதிலளிநீக்கு
  19. //மிக நிச்சயமாக! சினிமாவில் ஒரு கதாநாயகனை கெட்டவனாக சித்தரித்தால் சமூகம் கெட்டுப் போகும் என்று எனக்கு தோன்றுவதில்லை...என்னைப் பொறுத்தவரை சினிமா வெறுமனே ஒரு பொழுதுபோக்கு... வெறும் கமர்ஷியல் படம் என்று சொல்லும் ரஜினி படத்திலும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.....சமூகத்தின் ஒட்டு மொத்த தீமைக்கு சினிமா தான் மொத்தக் காரணம் என்ற எனக்கு ஒரு போதும் வருவதில்லை! சினிமா வருவதற்கு முன் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்து விடவில்லை!//

    அது சரி,

    உங்களைப் பொறுத்த மட்டில் வேண்டுமானால், சினிமா ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கலாம். எனக்கு என்னமோ, இந்த கருத்து வேறுபாட்டின் ஆரம்பப் புள்ளியே இங்குதான் இருக்கிறது என எண்ணுகிறேன்!

    கிராமங்களில், இளைஞர்களிடத்தில் இன்னும் பல இடங்களளில் சினிமா என்பது, கதாநாயகன் என்பவன், வில்லன் என்பவன் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிக அளவிலேயே இருக்கிறது!!! அரவாணிகள், பெண் சுதந்திரம் இப்படி பல விஷயங்களில் சினிமா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் விவாததிற்குரியதே! இப்போது சின்னத்திரையும் இந்த விஷயத்தில் கலந்து கொண்டது. ஏதோ ஒரு நாடகத்தில், ஐடி படிக்கும் பெண், தனது குடும்பத்தை மதிக்காதது போலவும், கண்டவர்களோடு ஊர் சுற்றுவதைப் போலவும் க்கட்ட்யதை பார்த்து எனக்கு தெரிந்த சிலர் எடுத்த முடிவுகள் எனக்கு அதிர்வை ஏற்படுத்தியவை!

    இவ்வளவு தாக்கம் இருக்கிற ஒரு விஷயத்தை, அதை பொழுது போக்கு விஷயமாக மட்டும் பார்த்து கேள்விக்குட்படுத்தாமல் விடுவது என்பது, என்னமோ அவர்களை மறைமுகமாக புனிதபிம்பப் படுத்திவுடுமோ என்றே எண்ணுகிறேன்!!!

    நீங்கள் வேண்டுமானால் அதை ஒரு பொழுத்துபோக்கு அம்சமாக மட்டும் எண்ணலாம், ஆனால் சுற்றியிருக்கிற சமூகம் அப்படி இல்லை!

    நரேஷ்
    www.nareshin.wordpress.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!