“காத்துலயே வாழுறவங்க எங்க சனங்க”

ambedkar

“உலகிலுள்ள அடிமைச் சமுதாயங்கள் அனைத்துக்கும் நானே தலைவன் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சினைகளும், கொடுமைகளும் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்” இப்படித் தன்னை பிரகடனப்படுத்தி அர்ப்பணித்துக் கொண்டவரும், மாமேதைகளில் ஒருவருமான, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று. அவரது சிந்தனைகளில் வெளிச்சம் பெற்றவரான கன்னடக் கவிஞர் சித்தலிங்கையாவின் இரு கவிதைகள் இந்த நாளுக்கு அர்த்தம் சேர்ப்பதாயிருக்கும் என்பதால்-

சோமனின் பிள்ளைகளுடைய பாட்டு

காளன் நீலன் பெள்ளி குருவன் சினியன்
சோமனின் பிள்ளைகள் நாங்கள்
கண்ணுக்குள்ளே வலி நிறைந்தவர்கள்
மண்ணுக்குள்ளே முகம் புதைத்தவர்கள்
தாயில்லாத பிள்ளைகள் நாங்கள்
வலியில் மூழ்கியவர்கள்
விம்மும் உடல் பூப்போன்ற மனம்
துண்டு நிலமொன்றை வாங்கும் கனவு
பூமித்தாய் பெறாத
பிள்ளைகள் நாங்கள்
சோமனின் எலும்புகள்
ஆண்டையின் அழகான தோட்டத்துக்குள்ளே
மலர்ந்து விரிந்த செடிகளிலே
தந்தையின் வியர்வை என்கிற ரத்தம்
பாய்ந்து சிவந்தது பூ
ஆண்டையின் பண்டிகை விருந்துக்காக
தன்னையே அறுத்துக் கொடுத்தவர்கள்
நிலவென்னும் ஆதாரத்தை இழந்தவர்கள்
முகிலென்னும் ஆதரவு கிட்டாதவர்கள்
பூமிக்கும் மலைக்கும் நீலவானத்துக்கும்
நம்நாட்டின் மக்கள் அனைவருக்கும்
சோமனின் கதை தெரியும்
சோமனின் பிள்ளைகளே சொல்லும் கதையை
கேளுங்கள் ஐயா இப்போது

எங்க சனங்க

பசியாலே செத்தவங்க
பட்டக்கல்லு சொமந்தவங்க
ஒதைபட்டுச் சுருண்டவங்க
எங்க சனங்க

கைய கால புடிக்கிறவங்க
கைகட்டி நடக்கிறவங்க
பக்தருப்பா பக்தருங்க
எங்க சனங்க

கலப்பையோட்டி வெதைச்சவங்க
பயிரறுத்து களைச்சவங்க
வெய்யிலிலே வெந்தவங்க
எங்க சனங்க

வெறும் கையோட வந்தவங்க
உஸ்ஸூன்னு உக்காந்தவங்க
வாயும் வயிறும் காய்ஞ்சவங்க
எங்க சனங்க

மாளிகைய எழுப்பனவங்க
பங்களாங்க கட்டினவங்க
அடிமட்டத்துல மாட்டினவங்க
எங்க சனங்க

தெருவிலேயே வுழுந்தவங்க
சத்தமில்லாம கெடந்தவங்க
மனசுக்குள்ளே அழுதவங்க
எங்க சனங்க

வட்டிக்காசு கொடுக்கறவங்க
சொற்பொழிவு நெருப்புக்குள்ள
வெந்து சாம்பலானவங்க
எங்க சனங்க

ஆண்டவனின் பேரச் சொல்லி
விருந்து சோறு தின்னவங்களுக்கு
செருப்புத்தச்சி குடுத்தவங்க
எங்க சனங்க

தங்கத்த எடுக்குறவங்க
சோத்தையே பாக்காதவங்க
துணிமணிய நெஞ்சவங்க
அம்மணமா போனவங்க
சொன்னபடி கேக்கறவங்க
எங்க சனங்க

காத்துலய வாழறவங்க
எங்க சனங்க

பி.கு: கவிதைகள் பாரதி புத்தகாலயம், கவிஞர்.சித்தலிங்கையாவினை அறிமுகம் செய்து வெளியிட்ட ‘காலகளின் கையெழுத்து’ என்னும் சிறு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

 

*

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நானே முதல் கருத்தைப்பதிவு செய்கிறேன்.
    இந்தப்பதிவுக்கு இதுவே கடைசியாகக்கூட
    இருக்கலாம்.
    கொஞ்சம் உற்றுக்கவனித்தால்
    ரத்தக்கண்ணீர் வருகிறது.
    பிரக்ஞையற்றவர்கள் பாக்கியவான்கள்.
    மாதவராஜ் 1000 சதம் பிரக்ஞையுள்ளவர்.

    பதிலளிநீக்கு
  2. சனங்களை அர்த்தப்படுத்தும் கவிதையென்பது மிகக்குறைவானது அல்லது இல்லவே இல்லையென்ற குறையை இந்தக்கவிதையும் தீர்த்து வைக்கிறது..

    அறிமுகத்திற்கு நன்றி மாதவராஜ்!

    பதிலளிநீக்கு
  3. கவிதைகளை படித்தேன்
    வலியும் உறுத்தலும் வரிவரியாய் உள்ளது.
    அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மனதை அறுக்கிறது இந்தக் குரல்கள்!
    இன்னமும், அம்பேத்கருக்கு தேவை இருந்துக்கொண்டேதான் இருக்கிறது நம் சமூகத்தில்! நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  5. இப்படித்தானே இருக்கிறது என்ன செய்ய,,,,,

    அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. இந்த நாளின் நினைவை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வருகை புரிந்தவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு அறிமுகத்திற்கும், இன்னாளில், அம்பேத்காரை நினைவு கூர்ந்ததற்கும் நன்றிகள்....

    பதிலளிநீக்கு
  8. Dear Madhav,

    வெய்யிலிலே வெந்தவங்க
    வெறும் கையோட வந்தவங்க
    உஸ்ஸூன்னு உக்காந்தவங்க
    வாயும் வயிறும் காய்ஞ்சவங்க

    மாளிகைய எழுப்பனவங்க
    பங்களாங்க கட்டினவங்க
    அடிமட்டத்துல மாட்டினவங்க

    தெருவிலேயே வுழுந்தவங்க
    சத்தமில்லாம கெடந்தவங்க
    மனசுக்குள்ளே அழுதவங்க

    வட்டிக்காசு கொடுக்கறவங்க
    சொற்பொழிவு நெருப்புக்குள்ள
    வெந்து சாம்பலானவங்க
    விருந்து சோறு தின்னவங்களுக்கு
    செருப்புத்தச்சி குடுத்தவங்க

    சோத்தையே பாக்காதவங்க
    துணிமணிய நெஞ்சவங்க
    அம்மணமா போனவங்க
    சொன்னபடி கேக்கறவங்க
    காத்துலய வாழறவங்க.
    In 1960s/70s I lived with many of them very near and dear in my village. But not realised the pain then. It was a way of life since it went on so naturally. What a Shame !!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!