உருது மொழியும் நானும்- மகேஷ் பட்

mahesh batt

மகேஷ் பட், இந்திய சினிமாக்காரர்களில் முக்கியமானவர்.  அவரது தந்தை நானாபாய் பட் பிரபல இந்தி திரை இயக்குநராக விளங்கியவர். மகேஷ், உணர்ச்சிகரமான குடும்ப உறவுகளையும், சமூக சிக்கல்களையும் திரையில் எழுதியவர்.  அவரது 'அர்த்'  பெரிதும் பேசப்படும் படம். 1993 மும்பை கலவரங்களைத் தொட்டு அவர் இயக்கியிருந்த ஒரு திரைப்படத்தை வெளியிடக் கூடாதென்று சங் பரிவாரம் ரகளை செய்திருந்தது. உருது மொழிக்கும் தனக்குமான உறவின் பின்புலத்தில் அவர் வடித்திருக்கும் இந்த எழுத்துச் சித்திரம் இந்தியாவின் அரிய மொழி ஒன்றின் பாதுகாப்புக்கான உரிமைக் குரலாக ஒலிக்கிறது.

தி ஹிண்டு மேகசின் 29.03.09 இதழில் வெளியான  இந்தக் கட்டுரையை நண்பர் எஸ்.வி.வி வேணுகோபால் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். எஸ்.வி.வி என அன்புடன் அழைக்கப்படும் வேணுகோபாலன் இந்திய வங்கி ஊழியர். தீவீர வாசகரான அவரது எழுத்துக்களில் எனக்கு ஒரு லயிப்பும், ஈர்ப்பும் எப்போதுமுண்டு. உடல்நலம் சார்ந்த பல விஷயங்களை இலக்கியத் தரத்தோடு எழுதி வருபவர். இப்போது சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். இனி அவரது நடையில் இந்தக் கட்டுரை இணைய வாசகர்களுக்காக.

உருது மொழியும் நானும்- மகேஷ் பட்

மனிதன் நினைவுகளால் ஆனவன்.  நினைவுகள் ஒலியால் பின்னப்பட்டவை. என் உள்ளத்தில் ரீங்காரமிடும் முதல்  ஒலி, "ஷிரீன்" என்கிற ஓர் உருதுச்சொல்.  இனிமையானது என்பது அதன் பொருள்.  எனது தாயின் பெயர் அது.  பிறப்பினால் ஷியா பிரிவைச் சார்ந்த பெண்மணியான அவள் தனது இறுதி நாட்கள் வரை அவ்வாறே வாழ்ந்தவர். இந்த இனிய நினைவுகள் மீது ஒரு கசப்பான நிழல் கவிந்திருக்கிறது.  என்னுடைய தாய், என்னுடைய 'இந்து' தந்தையை மணந்து கொள்ள முடியவில்லை.  நாங்கள் வசித்த பகுதி மும்பையில் இந்துக்கள் அதிகம் நிரம்பியிருந்த சிவாஜி பார்க் என்பதால், அவள் தனது இஸ்லாமிய அடையாளங்களை ஒளித்துக் கொண்டாள். ஏனெனில், பன்முகத் தன்மையும், வெவ்வேறு வகைப்பட்ட கலாச்சாரங்களும் கொண்ட தேசமாக இந்தியா குறித்த நேருவின் பார்வை இருந்தாலும், வளர்ந்து வந்த இந்து வகுப்புவாதம் முஸ்லீம் சமூகத்தை உள்ளிருக்கும் பகைவனாகப் பார்த்தது.  இந்து மதவாத பதிலடி ஏதும் தன்மீது வந்து தாக்கும் என்று அஞ்சி அவள் தனது சொந்த அடையாளத்தைக் கரைத்துக் கொண்டு வாழ தன்னால் முயன்றதெல்லாம்   செய்தாள்.  "என்னை எனது இஸ்லாமிய பெயரால் அழைத்து விடாதீர்கள்" என்று அவள் எங்களைத் தனியே அழைத்து எச்சரிப்பது வழக்கம்.  "எனது இஸ்லாமிய அடையாளத்தை உலகம் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை" என்பாள்.

சந்தேகத்திற்குட்பட்டிருந்த தேசப்பற்று

உருதுவைப் பற்றிய அந்த நாளைய பார்வை, இந்தியாவைத் துண்டாடியோரின் மொழி என்பதாக இருந்தது. இந்திய முஸ்லீமின் தேசப்பற்று (விசுவாசம்) எப்போதும் சந்தேகத்திற்குட்பட்டிருந்தது. தேசப் பிரிவினை ஏற்படுத்தியிருந்த புண்கள் இன்னமும் ஆறாதிருந்த நிலையில், பெரும்பான்மை மதத்தினரின் தேசிய உணர்வின் பாற்பட்ட பதட்டங்களைத் தணிக்க, ஓர் இந்திய முஸ்லீம் தனது இந்தியத்தன்மையையும், தேசப்பற்றையும் மீண்டும் மீண்டும் உறுதி செய்ய வேண்டியிருந்தது.

இந்த பின்னணியில், ஒரு பிராம்மண சினிமாக்காரரோடு வாழும் 'பாவ காரியம்'   செய்து கொண்டிருந்த இந்த ஷியா (முஸ்லீம்) பெண்மணி தனது குழந்தைகளுக்கெல்லாம் இந்து பெயர்களையே சூட்டி, இத்தாலிய பாதிரிமார்கள் நடத்திவந்த கிறித்துவ பள்ளிகளில் கொண்டு போய்த் தள்ளி, சிறந்த ஆங்கிலத்தையும், அபத்தமான நர்சரி பாடல்களையும் கற்கவைத்து எங்களை இந்துக்களாகவே வளர்த்ததில் என்ன வியப்பு இருக்க முடியும்?

அதே வேளையில், தன்னை ஒரு இந்துவாகக் காட்டிக் கொண்டிருந்த இதே ஷியா பெண்மணி,  சிவன், கணேஷ், பார்வதி, ராமர், சீதை, அனுமன் ஆகியோர் கதைகளைப் பேசிய இந்து புராணங்களின் மந்திரஜால உலகத்திற்குள்ளும், மகாபாரதம் என்கிற இதிகாசத்திற்குள்ளும் என்னை வலம் வரச் செய்தாள். "நீ நாகர் பிராம்மணரின் புத்திரன்.....பார்க்கவ கோத்திரத்தைச் சார்ந்தவன் " என்று அவள் சொல்வதுண்டு. அடுத்த மூச்சில், சுத்தமான உருது மொழியில் கல்மா ஓதி, ஓர் எதிரியைச் சந்திக்க நேர்ந்தால் தற்காத்துக் கொள்ள உச்சரிக்குமாறு "யா அலி மத்தத்" என்பதையும் சொல்லித் தருவாள் அவள்.  என்ன முரண்பட்ட வாழ்க்கை! 

ஒரு நினைவுக் குமிழி வெடிக்கிறது...அது 1958ம் ஆண்டு.  எனக்கு ஒன்பது வயதுதான் நிரம்பியிருந்தது. சோகம் கப்பியிருந்தது எனது வீட்டில். இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அற்புத மலர்களில் ஒன்றான மௌலானா அபுல் கலாம் ஆசாத் மறைந்து விட்டார்.  அகில இந்திய வானொலியின் உருது சேவையில் அவரது இறுதி ஊர்வலத்தின் நேரடி வருணனையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என் தாய்.  இந்த தேசத் தலைவரின் மரணத்தால் தானும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்த எனது தந்தை, திடீரென்று வீட்டிற்குள் நுழைகிறவர், உருது மொழி வருணனை காதில் விழவும் கோபாவேசமாக இரைகிறார்: "இந்த ரேடியோ பாகிஸ்தானை முதலில் நிறுத்து! எனக்கு இந்த வருணனை இந்தியில் தான் வேண்டும், உருதுவில் அல்ல!".  என் அன்னை ஓசையில்லாமல் அதற்குக் கீழ்ப்படிகிறார்.  ஆனால் அவள் உடைந்து போனதை என்னால் பார்க்க முடிகிறது.

தனிப்பட்ட விஷயத்தின் அரசியல்

நமது சொந்த விஷயமும் அரசியல் என்று சொல்கின்றனர்.  சுதந்திர இந்தியாவின் முதல் பத்தாண்டு முடியும் தறுவாயில் இருந்த அந்த நேரத்தில், உருது மொழியின் பாதையில் இருந்த கடுமையான தடைக்கற்களை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.  இந்த நிகழ்வில், மதச்சார்பற்ற பிராம்மணரான எனது தந்தை நடந்து கொண்ட விதத்தால் எனக்கு ஒரு பாடம் கிடைத்தது.  'சகிப்புத்தன்மை' என்பதற்கு மேலாதிக்கம் என்று பொருளாகும் என்கிற பாடம் அது....அதாவது, பெரும்பான்மை சமூகம், சிறுபான்மையின் இருப்பை 'போனால் போகட்டும்' என்று சகித்துக் கொள்வதாகும்.  அதே நேரத்தில்  "இவ்வளவுதான் எல்லை, இதற்குமேல் இல்லை.." என்று உள்ளே தொக்கி நிற்கும் வரையறுப்பும் கொண்டது தான் இந்த சகிப்புத்தன்மை!

என் தாயின் மொழி மடிந்து கொண்டிருந்தது.  ஒரு குழந்தையாக இருந்த என்னால் அதில் செய்வதற்கு ஏதும் இருக்கவில்லை.  ஆண்டுகள் செல்லச் செல்ல, நான் உருது மொழி பேசப்படுவதைக் கேட்கும் ஒரே இடம் எனது தந்தையின் சினிமா செட்டுக்களில் தான் என்றாகி விட்டது. என் தந்தை, "பாக்தாத் திருடன்", "சிந்துபாத்" போன்ற சுண்டியிழுக்கும் முஸ்லீம் கற்பனைக் கதைகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்.  அல்லது, ரகசியமாக அம்மா என்னை மொகரம் பண்டிகையின் போது அழைத்துச் சென்ற மசூதிகளில், ரத்தம் சொட்டும் கர்பாலா கதைகளைக் குறித்த நாடக மேடையில் கேட்க முடிந்தது உருது மொழியை. அல்லது, "மொகலே ஆசம்", "சாடுவின் கா சாந்த்"...போன்ற திரைப்படங்களை வசதியாக இருளில் அமர்ந்து பார்த்த திரையரங்குகளில். அல்லது, எனது தாயைப் போல் அல்லாமல், வெற்றிக்கொடி நாட்டிய நடிகையான பூர்ணிமா சித்தியின் வீட்டில்! தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைத்துக் கொள்ள எந்த அவசியமும் இல்லை என்பது போல் நடந்து கொண்டவர் அவர். அவரது துணிச்சலுக்காகவும், எந்தத் தயக்கமுமின்றி உருது மொழியில் அவர் பேசிக் கொண்டிருந்ததற்காகவும் எனக்குப் பிடித்தமானவராக இருந்தார் அவர்.

பருவ வயதை எட்டிய போது, உருது மொழி 'அவர்களுடையது' என்று நான் புரிந்து கொண்டிருந்தேன்.  அவளது எல்லா முயற்சிகளையும் மீறி தனது சொந்த இல்லத்திலேயே என் தாய் வெளியாளாகத் தான் வாழ வேண்டியிருந்தது என்பதையும் உணர்ந்தேன். அவளது உண்மை முகத்தை வெளிக்கொண்டுவருவதற்கு நான் என்ன தடாலடி வேலைகளில் இறங்கினாலும் அவள் அதை முறித்துப் போட்டு விடுவாள்.  "இது அவர்களது நாடு. நாம் அவர்கள் வழியில் தான் பயணப்பட வேண்டும்" என்பாள்.  ஆனால், அவளது பார்வையில் என்னால் அவளது பாதையைக் காண முடியவில்லை.

உணர்ச்சிகளின் இலக்கணம்

உருதுவும், இஸ்லாமும் எனது மரபின் பகுதி என்று நான் உணர்ந்தேன்.  ஆண்டுகள் கடக்கக் கடக்க, நான் யார் என்பதை வெளிப்படுத்தும் உணர்ச்சி வேகத்தின் கனல் என்னுள் மூண்டுகொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னுள் ஒரு பகுதியை மறுத்துக் கொண்டு நான் நானாக  என்னை எப்படி உணர முடியும்!  எனது உள்ளுணர்வு, மொகரம் பண்டிகையின் போது ஹாசன் ஹுசைன் முழக்கத்தோடு ஒன்றியிருந்தது; பிள்ளையார் சதுர்த்தியின் போது மங்கள் மூர்த்தி மௌரியா மணிச் சத்தங்களோடு கலந்து ஒலித்தது; எனது கிறித்துவ பள்ளியின் ஆவே மரியா நினைவுகளோடு சேர்ந்திருந்தது.  எனது மொழி ஆளுமையால் என்னால் சரிவர சொல்ல இயலாதென்றாலும், உருது மொழியின் உணர்ச்சி இலக்கணம் எனது அந்தராத்மாவின் கீதமாக ஒலிக்கிறது.

நமது அரசியல் சாசன சட்டத்திற்கு 93வது திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு, உருது மொழி பேசுவோர் தமது தாய் மொழியிலேயே கல்வி கற்கும் உரிமை அடிப்படை உரிமையாக்கப் பட்டிருக்கிறது.  எனவே, உருது மொழி கற்பித்தலையும், ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியில் உருது மொழி கற்றலையும் முன்னெடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.  உருது மொழியை நேசிப்போர் யாவரும், இந்த உரிமையை நடைமுறை சாத்தியமாக்கும் வண்ணம் ஓர் உடனடி பணியாக எடுத்து செயல்படுமாறு அரசினை வலியுறுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். 

உருது, இந்தியாவின் மொழி என்று நமது தேசம் எப்போது உணருமோ என்று நான் அசந்து போகிறேன்.  உருது மொழியை பாதுகாக்க நடத்தும் இந்த போராட்டம் உண்மையில் இந்தியாவைக் காப்பதற்கான போராட்டம் என்பது, உருது மொழியை எதிர்ப்போர்களுக்கு எப்போது புலப்படும் என்றும் வியக்கிறேன்.
******** 

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. திரு.மாதவராஜ்.

    பலருக்கு பின்னூட்டம் இடும் நான், உங்கள் பகுதிகளில் வந்தால் மிகவும் மெளனித்தேயிருக்கிறேன்.

    கவிதையானலும் கட்டுரையானாலும், கட்டித்தான் போடுகின்றன தங்கள் எழுத்துகள்.

    பதிலளிநீக்கு
  2. Sir,
    I agree with Mr.Mahesh Bhatt's comments expect for the last part where he says that urdu is India's language. I had read the original english version too and I had the same feeling.
    Saying urdu is India's language is as good or bad as saying that Sanskrit is India's language. India cannot have a common language due to it inherent geographical diversity.
    It seems that Mr.Bhatt's liberalism is just a facade wherein he tries to impose his favored language on others. This seems to be just a case of pseudo liberalism.

    Why should urdu or for that matter any other language be considered as India's main language?

    பதிலளிநீக்கு
  3. //தேசப் பிரிவினை ஏற்படுத்தியிருந்த புண்கள் இன்னமும் ஆறாதிருந்த நிலையில், பெரும்பான்மை மதத்தினரின் தேசிய உணர்வின் பாற்பட்ட பதட்டங்களைத் தணிக்க, ஓர் இந்திய முஸ்லீம் தனது இந்தியத்தன்மையையும், தேசப்பற்றையும் மீண்டும் மீண்டும் உறுதி செய்ய வேண்டியிருந்தது.//

    :-((

    பகிர்விற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. //உருது, இந்தியாவின் மொழி என்று நமது தேசம் எப்போது உணருமோ என்று நான் அசந்து போகிறேன். உருது மொழியை பாதுகாக்க நடத்தும் இந்த போராட்டம் உண்மையில் இந்தியாவைக் காப்பதற்கான போராட்டம் என்பது, உருது மொழியை எதிர்ப்போர்களுக்கு எப்போது புலப்படும் என்றும் வியக்கிறேன்.//
    உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் எப்பொழுதும் புலப்படாமல் போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது. நம் அரசியல்வாதிகள் தான் மிக மோசமான பிரிவினையை நம்மிடம் விதைகிறார்கள் என்றால் இப்பொழுது எத்தனை விட்டில் பெற்றொர்கள் தங்களின் மகனையோ, மகளையோ இஸ்லாமிய நண்பர்களோடு பழகவோ விட்டிற்கு அழைத்து வரவோ அனுமதிக்கிறார்கள். பிரிவினை என்பது இப்பொழுது மிக மோசமாக விட்டில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. நிலைமை இப்படி இருக்க(உருது மொழியை பாதுகாக்க நடத்தும் இந்த போராட்டம் உண்மையில் இந்தியாவைக் காப்பதற்கான போராட்டம் என்பது) எப்பொழுது இவர்களின் மரமண்டைகளுக்கு ஏற போகிறது?எறுமா?.("ஷிரீன்" என்கிற ஓர் உருதுச்சொல். இனிமையானது என்பது அதன் பொருள். எனது தாயின் பெயர் அது.) தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தன் சொந்த அடையாளங்களை தொலைத்து வாழ்ந்த அந்த தாயின் பெயரில் மட்டுமே இனிமை இருக்கிறது வாழ்க்கையில்?.

    பதிலளிநீக்கு
  5. பகிர்ந்தமைக்கு நன்றி.

    மறுபடியும் வாசிக்கவேண்டும்.

    இந்த மகேஷ்பட் பிரபல ஒளிப்பதிவாளர் தானே?

    பதிலளிநீக்கு
  6. Dear Mathav

    I was really excited to find my translated work "Urdu and I" (Mahesh Bhatt)in your blog with a generous introduction to me....
    I am indeed glad that the Tamil version that had appeared in Theekathir on 5th April 2009 would now be reaching even more wider sections of readership.

    so nice of you, again....

    s v venugopalan
    sv.venu@gmail.com

    பதிலளிநீக்கு
  7. Urudu is very much alive in India. Enough money is spent by state governments and central government to promote it. Urudu cannot be categorised as the language of muslims. Urudu is not facing any threat in India. It is yet another language in India, nothing more,
    nothing less.

    பதிலளிநீக்கு
  8. நட்புடன் ஜமால்!
    அனானி!
    சுரேஷ்!
    சென்ஷி!
    டக்ளஸ்!
    வெங்கடசுப்பிரமணியம்!
    மண்குதிரை!
    அனானி!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
    இதை தமிழில் அனைவருக்கும் கொண்டு வந்த வேணுகோபாலன் அவர்களுக்கு என் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மகேஷ் பட் ஏன் பட் என்ற சாதிப் பெயரைத் துறக்கவில்லை. தாய்
    முஸ்லீம், தந்தை பிராமணர் என்றால் தந்தையின் பிராமண
    அடையாளத்தை தன் பெயரிலிருந்து எடுத்திருக்கலாமே. முஸ்லீம் ஆணை மணந்து தன் அடையாளங்களை மறைக்க/மறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்ட பெண்(களின்)
    அனுபவங்களை தேடி எடுத்து வெளியிடுவீர்களா?. உருதுவை வெறுத்த பிராமணர்களும் உண்டு,
    உருதுவை, முஸ்லீம்களின் பண்பாட்டை, இசையை ரசிக்கும்
    பிராமணர்களும் உண்டு.உ-ம்
    வெங்கட் சாமிநாதன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!