புஷ்ஷுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

Muntazer al-Zaidi

சென்ற வருடம் டிசம்பர் 14ம் தேதி பாக்தாத் சென்றிருந்த அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மீது பத்திரிக்கையாளர் முண்டாசர் அல்ஜெய்தி ஷீக்களை வீசியதை உலகமே பார்த்தது. அந்தக் கணமே அங்கிருந்த காவலாளிகளால் வெறிகொண்டு தாக்கப்பட்டு, தரையில் இரத்தக்கறை படிந்திருக்க அல்ஜெய்தி இழுத்துச்செல்லப்பட்டார். கடைவாயில் புன்னகையோடு  அங்கிருந்து அகன்றுவிட்டான் புஷ்.

இந்த பிப்ரவரியில் அல்ஜெய்தி மீது தொடங்கப்பட்ட விசாரணை, அதிவேகத்தில் முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அல்ஜெய்திக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. ”Long live Iraq"  என்று அல்ஜெய்தி அங்கேயே உரக்க குரல் எழுப்பியிருக்கிறார். “அவரது குற்றத்திற்கு 15 வருடங்கள் தண்டனை கொடுக்கலாம். கருணையோடுதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது” என நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் கூறி இருக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்தும், அல்ஜெய்திக்கு ஆதரவாகவும் ஈராக் மக்கள் கருத்துக்கள் தெரிவித்திருக்கின்றனர். ”அல் ஜெய்திக்கு மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, சிறைக்கு அனுப்புகிறார்கள்” என ஒரு செல்போன் கடைக்காரர் பொரிந்து தள்ளுகிறார் “ஈராக்கை ஆக்கிரமித்திருக்கும் ஒரு படையின் தலைவனைத்தானே அவர் தாக்கினார்?” என்று அகமது கேள்வி எழுப்புகிறார்.

பி.பி.சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அல்ஜெய்திக்கு ஆதரவாக 64 சதவீதமும், எதிராக 24 சதவீதமும் கருத்து தெரிவித்திருக்கின்றனர் என்பது ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கும் புஷ்ஷூக்கும் கெட்ட செய்திதான். ஈராக் முழுவதும் தன்னெழுச்சியான ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன.

“அந்தக் கணத்தில் இரத்தம் பெருகியபடி ஆயிரக்கணக்கில் ஈராக்கிய மனிதர்கள் உயிரற்று தனது காலடியில் வீழ்ந்திருக்க, புஷ் அவருக்கே உரிய அந்த சிரிப்பை உதிர்த்தபடி நின்றிருந்ததை நான் பார்த்தேன்” என்று அல்ஜெய்தி சொல்லியிருக்கிறார். ”அல்ஜெய்தி ஒன்றும் ஏவுகணைகளை வீசவில்லையே, செருப்பைத்தானே வீசினார்” என நீதிமன்றத்தில் அல்ஜெய்தியின் வக்கீல் சொன்ன வரிகள் மிகுந்த அர்த்தமுள்ளவையாக இருந்தாலும் நீதிமன்றம் தனது இருகாதுகளையும் மூடிக்கொண்டு கேட்டிருக்கிறது.

கண்களையும், காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு உலகம் யோசிக்கிறது.  இலட்சக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்த புஷ்ஷுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

*

பி.கு:  புஷ் மீது எறிப்பட்ட செருப்பை ஏலத்தில் எடுத்து, மியூசியத்தில் வைக்க வேண்டும் என முயற்சிகள் நடக்கின்றன. பாக்தாத் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, புராதன மியூசியமே அமெரிக்கப் படையினால் சிதைக்கப்பட்டது. வரலாறு எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொள்ளவே விரும்புகிறது.

 

*

கருத்துகள்

27 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //புஷ் மீது எறிப்பட்ட செருப்பை ஏலத்தில் எடுத்து, மியூசியத்தில் வைக்க வேண்டும் என முயற்சிகள் நடக்கின்றன//

    அது அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டதே?

    பதிலளிநீக்கு
  2. உலக நீதிமன்றம் ICJ சூடான் நாட்டின் தலைவரை சமீபத்தில் குற்றவாளியாக அறிவித்து தண்டணை வழங்கியது, அதன் பின்னனி பற்றி தெரியவில்லை ஏன் புஷ் க்கு ஈராக்கில் ஆக்கரமிப்பு செய்த குற்றத்திற்க்காக ICJ விசாரித்து தண்டணை வழங்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கொலைகார புஷ்ஷின் மீது செருப்பை எறிந்தது பற்றிக் கருத்துக் கேட்டதற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் "அநாகரிகத்தின் உச்சம்" என்று கூறியுள்ளாரே,(இதழ்: வார்த்தை) அது பற்றி உங்கள் கருத்து? (மாட்டிக்கிட்டீங்களா!)

    பதிலளிநீக்கு
  4. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மீது ஷீக்களை வீசி தாக்கியது சரி.. ஆனால் அது அவர் மீது படவில்லை!!! அதற்காக தான் அல்ஜெய்திக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  5. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மீது ஷீக்களை வீசி தாக்கியது சரி.. ஆனால் அது அவர் மீது படவில்லை!!! அதற்காக தான் அல்ஜெய்திக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது..

    அவர் செய்த குற்றம்???

    ஒரு வேலை செருப்பு அவர் மீது பட்டு இருந்தால்..
    அவர் விடுதலை ஆகி இருப்பார்

    பதிலளிநீக்கு
  6. தீபா!
    ஜெய காந்தன் - நாகரீகத்தின் உச்சமாக துப்பாக்கியால் சுட்டிருக்க வேன்டுமென்கிறார் போல்...

    பதிலளிநீக்கு
  7. புஷ்ஷுக்கு ஷூ வை வீசி அன்றே தண்டனை கொடுத்தாகிவிட்டாச்சே!!!!

    கொல்லப்படுதலை விட, அவமானப்படுதலே பெரிய தண்டனை!!!!

    பதிலளிநீக்கு
  8. மன்னிக்கவும்..

    அவமானப்படுத்துதலே....

    பதிலளிநீக்கு
  9. Subankan!

    பத்திரிக்கையில் படித்ததைத்தான் சொல்லியிருக்கிறேன். வேண்டுமானல், தேடி இங்கே பின்னூட்டமிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. உலகநீதிமன்றம், அமெரிக்காவுக்கு எதிராகவா? காந்தியின் குரங்குகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  11. தீபா!

    ’பகைவருக்கும் அருள்வாய்’ நன்னேஞ்சே என்னும் பாரதியின் பாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப் பிடித்திருக்கலாம்.

    ‘பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் காறி உமிழ்ந்து விடடி பாப்பா’ என்னும் பாரதியின் பாடல் எனக்குப் பிடித்திருக்கிறது.

    ஆனால் ஒன்று. வரலாற்றை எழுத்தாளர் ஜெயகாந்தனோ, நானோ எழுத முடியாது. முண்டாஸ் படத்தையும், சேகுவேரா படத்தையும் கைகளில் ஏந்தி புஷ்ஷூக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறார்களே மக்கள், அவர்கள்தான் எழுதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஜான் பொன்ராஜ்!

    இப்படியும் யோசிக்க முடிகிறதே....

    பதிலளிநீக்கு
  13. யோகன் பாரிஸ்!
    எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்படி நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
  14. ஆதவா!

    புஷ் எதற்கும் அவமானப்படுகிற பிறவி இல்லை.

    பதிலளிநீக்கு
  15. அவர் சைஸ் க்கு சூ இல்லைன்னு வருத்தமோ ? என்னவோ ?

    பதிலளிநீக்கு
  16. சிக்ஸர் அடித்து விட்டீர்கள்!
    :-)

    பதிலளிநீக்கு
  17. “அந்தக் கணத்தில் இரத்தம் பெருகியபடி ஆயிரக்கணக்கில் ஈராக்கிய மனிதர்கள் உயிரற்று தனது காலடியில் வீழ்ந்திருக்க, புஷ் அவருக்கே உரிய அந்த சிரிப்பை உதிர்த்தபடி நின்றிருந்ததை நான் பார்த்தேன்”


    உகத்தின் அதிகாரவர்க்கம் ' புஷ் அவருக்கே உரிய அந்த சிரிப்பை உதிர்த்தபடி நின்றிருந்ததை ' மட்டும் பார்த்து பெருமிதம் கொள்கிறது.....

    பதிலளிநீக்கு
  18. ”அல்ஜெய்தி ஒன்றும் ஏவுகணைகளை வீசவில்லையே, செருப்பைத்தானே வீசினார்” என நீதிமன்றத்தில் அல்ஜெய்தியின் வக்கீல் சொன்ன வரிகள் மிகுந்த அர்த்தமுள்ளவையாக இருந்தாலும் நீதிமன்றம் தனது இருகாதுகளையும் மூடிக்கொண்டு கேட்டிருக்கிறது. //


    என்ன வலிமையான வரிகளிவை...

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  19. தங்கராஜ் ஜீவராஜ்!

    ஷீ-நிசி!

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. போனா போகாட்டும் நம்ம அங்கிள்னு விட்டுட்டேன்!

    பதிலளிநீக்கு
  21. Hello Friends, Want to write in Tamil. But don't know how to write.
    1st Long live Tamil. Tamilians
    2nd Long live people who are all against U S
    Another Sadam அல்ஜெய்தி. HE IS A MAN. NEED LIKE HIM IN THIS WORLD.

    பதிலளிநீக்கு
  22. "ஷூ" ஏறிந்தது அநாகரிகம் என்று கூறும் ஜெயகாந்தன் வரலாறு எழுத முடியாது. உண்மைதான். வரலாற்றில் அவர் எந்தப் பக்கம் என்பதை அவர்தான் எழுதுகிறார். அவர் "புஷ்" ஷிர்க்கும் ஈராக் மக்களுக்கும் இடையில் நின்றுகொண்டு நாகரிகம் பேசுகிறார்.

    பதிலளிநீக்கு
  23. பல லட்சம் ஈராக் மக்களையும், தனது நாட்டு மக்கள் 4000 பேரையும் கொன்ற புஷ்ஷுக்கு எந்த தண்டனையும் யாரும் வழங்க போவதில்லை.

    செருப்பை வீசிய நிருபருக்கு 3 ஆண்டுகள் தண்டனை? இந்த செய்தியை BBC-யில் கேட்டபோதே நெஞ்சம் கொதித்தது.

    பதிலளிநீக்கு
  24. ராஜ்!

    அல்ஜெய்தி இன்னொரு சதாம் அல்ல. சதாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒரு சர்வாதிகாரி. அல்ஜெய்தி போராளி.

    பதிலளிநீக்கு
  25. அனானி!
    //ஜெயகாந்தன் வரலாறு எழுத முடியாது. உண்மைதான். வரலாற்றில் அவர் எந்தப் பக்கம் என்பதை அவர்தான் எழுதுகிறார். அவர் "புஷ்" ஷிர்க்கும் ஈராக் மக்களுக்கும் இடையில் நின்றுகொண்டு நாகரிகம் பேசுகிறார்.//

    மிகச்சரி.

    பதிலளிநீக்கு
  26. ஜோ!
    //பல லட்சம் ஈராக் மக்களையும், தனது நாட்டு மக்கள் 4000 பேரையும் கொன்ற புஷ்ஷுக்கு எந்த தண்டனையும் யாரும் வழங்க போவதில்லை. //

    நீங்களும், நானும் உலகத்து மக்களோடு சேர்ந்து வெறுக்கிறோமே... இதுதான் அவனுக்கான ஆயுள் தண்டன.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!