எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய பூமி!

 

globalisation

இருபுறமும் கடைகளாய் அடைந்திருக்க பட்டணங்களின் முக்கிய வீதிகள் ஓயாத வாகனங்களின் சத்தங்களோடு சதாநேரமும் வெறிபிடித்த வேகத்தோடு ஓடிக்கொண்டே இருக்கின்றன. தோளோடு காதை சாய்த்து செல்போனில் பேசியபடியே ஸ்கூட்டர்க்காரன் பஸ்ஸின் பின்னால் போய்க் கொண்டுருக்கிறான். பிளாட்பாரங்களில் ஆண்களும் பெண்களும் எதையோ பறிகொடுத்துவிட்டு தேடி அலைகிறார்கள். இண்டர்நெட் மையமொன்றின் வாசலில் பிரமைபிடித்தபடி வெளிறிப்போன கண்களோடு ஜீன்ஸ் அணிந்த இளைஞன். 

'ஒரு கொலை', 'ஒரு கொள்ளை','ஒரு விபத்து', 'ஒரு கற்பழிப்பு' என வகைக்கொரு தலைப்புச் செய்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. டீக்கடைகளில் ஆவி பறக்கிறது. எதையெடுத்தாலும் 'இரண்டு ருபாய்'க் கடை ஒன்றின் பக்கத்தில் எப்போதோ குளித்து என்றைக்கோ உடைமாற்றிய மனிதன் ஒருவன் தரையில் கிடக்கிறான்.  வான் உயரத்துக்கு  வண்ணவண்ண விளம்பரங்களோடு இருக்கும் சாலை இரவில் வெளிச்சப் புள்ளிகளால் உருமாறிப் போகும்.  

இந்த சந்தடிகளின் மௌன நிழல்களாய் வீடுகள் உருக்கொண்டிருக்கின்றன. அடுக்குமாடி வீடுகளில் காயப் போட்ட துணிகள் மட்டுமே வெளியே தென்படுகின்றன. பெண்களின் பெருமூச்சு குக்கர்களின் சத்தமாய் கேட்கிறது. குரோட்டன்ஸ்களுக்கு தண்ணீர் ஊற்றுவதும், குழந்தைகளுக்கு பாடம் புகட்டுவதுமாய் காலையும் மாலையும் கழிகின்றன. கொட்டாவி விடும் ஆண்கள் அபூர்வமாய் சிரிக்கிறார்கள். நாட்கள் எல்லாவற்றையும் உறிஞ்சியபடி தொலைக்காட்சிப் பெட்டி நடுநாயகமாய் உட்கார்ந்திருக்கிறது.  

நகரங்களின் அகமும் புறமுமான இந்த வாழ்க்கை இன்னும் கிராமங்களில் முழுவதுமாய் படியவில்லைதான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெட்டவெளியாய் வயல்கள் காய்ந்து கிடக்கின்றன. மாடுகளின் மணிச்சத்தங்களும் சரி...பறவைகளின் சத்தங்களும் சரி... ரொம்ப பலவீனமாய்த்தான் ஒலிக்கின்றன. 

நிலாவின் சிரிப்போடு காட்சியளித்த கண்மாய் இப்போது குருடாகிவிட்டது. ஊருக்குள் நுழையும் டவுண்பஸ் வேலிக்கருவேல மரங்களுக்கு இடையில், உயர்ந்த புளிய மரங்களுக்கு அடியில் தனது அடையாளம் மாறிப்போவதென்னவோ உண்மைதான். சாவகாசமாய் ஏறவும் இறங்கவும் செய்கின்ற மனிதர்கள் மேல் லேசாய்த்தான்  மண்வாடை வீசுகிறது. பெட்டிக்கடைகளில் பெப்ஸிக்களும், தண்ணீர் பாட்டில்களும் தொங்குகின்றன.  

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய பூமியா இது? 

மனிதர்களின், நிலங்களின் வசீகரத்தையெல்லாம் யார்  இங்கு உறிஞ்சிவிட்டது?

 

*

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இண்டர்நெட் மையமொன்றின் வாசலில் பிரமைபிடித்தபடி வெளிறிப்போன கண்களோடு ஜீன்ஸ் அணிந்த இளைஞன். .////


    என்ன வார்த்தைகள் சொல்வதென்று தெரியவில்லை, ரொம்ப ரொம்ப அருமையானது

    பதிலளிநீக்கு
  2. நடையும் வர்ணனையும் அருமை தோழரே.. நகர வாழ்வில் நாம் தொலைத்த விஷயங்களை நன்றாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.. நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  3. வார்த்தைகள் கபடி ஆடி இருக்கின்றன. மிக அழகான தொகுப்பு. குறிப்பாய் எப்போதோ குளித்த, எப்போதோ உடை மாற்றிய ஒருவன் போன்ற பிரயோகங்கள்.

    கலக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி மாதவராஜ் ,தங்களின் விமர்சனங்களுக்கு,

    சிறுபறவையாய்///// கொஞ்சம் பகுதியை இணைத்துள்ளேன். பார்வையிட்டு விமர்சனம் செய்வீர்களா ??

    தோழமையுடன்
    ஜீவா

    பதிலளிநீக்கு
  5. //மனிதர்களின், நிலங்களின் வசீகரத்தையெல்லாம் யார் இங்கு உறிஞ்சிவிட்டது? //

    நம்முடைய நவ நாகரிக மோகம்தான்.

    பதிலளிநீக்கு
  6. யார் உறிஞ்சியது...

    நாமேதான்.... இந்த மாற்றங்கள் எல்லாம் தற்காலிகம்தான்.... அடுத்த மாற்றத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாற்றங்கள்...

    அமுதம் சிந்தி விளையாடிய பூமியின் நெஞ்சில் விஷம் சுரக்க்ச் செய்ததும் நம்மவர்களே..... இதன் பலனை நாளை அனுபவிப்பர்...... சந்ததிகளின் மிச்சங்களின் வழி....

    அழகான பதிவு... சில இடங்களில் சிலாகிக்கும் வரிகள்..... குறிப்பாக, பெண்களின் மூச்சு குக்கர் சவுண்ட் போன்றவை நன்கு பதிக்கப்பட்ட வரிகள்..

    ஆத்மார்த்தமான பதிவு இது!!

    பதிலளிநீக்கு
  7. கார்த்திகைப் பாண்டியன்!

    நந்தா!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஜீவா!

    நேற்று நான் வங்கிக்குச் சென்ற பிறகு நீங்கள் இரண்டாவது பின்னூட்டம் செய்திருக்கிறீர்கள். பின்னிரவில்தான் பார்த்தேன். கவிதை நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. சொல்ல்ரசன்!

    நம்முடைய மோகமா?

    உலகமயமாக்கலின் கோர முகமா?

    பதிலளிநீக்கு
  10. உலகமயத்தின் கோர முகத்தில்,ஊள்ளுர் அமைதி முகத்தை மறந்தது யார் தவறு?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!