தேர்தல் 2014: எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் நாடு அழைக்கிறது!



நாடு ஒரு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. ‘இந்து தேசீயம்’ என்னும் ஒற்றைப் பண்பாட்டு அடையாளத்தை முன்வைத்து பாசிசக் கும்பல், நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வெறிகொண்டு கிளம்பியிருக்கிறது. யார் குடி முழுகினால் என்ன, தன் முதலுக்கும் லாபத்துக்கும் மட்டும் மோசம் வந்துவிடக் கூடாது என்று தேசப்பற்று அற்ற, மனிதாபிமானமற்ற இந்திய முதலாளிகள் சகல வழிகளிலும் இந்த பாசிசக் குமபலுக்கு குடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஊடகங்கள் மாறி மாறி மோடியின் முகத்தையும் அவரைப் பற்றிய செய்திகளையும் வெளியிட்டு, அவர் குறித்த மாய பிம்பங்களை பொதுமக்கள் மனதில் பதிய வைத்துக்கொண்டு, ‘மோடி அலை’, ‘மோடி அலை’ என ஆரவாரமிடுகின்றன.

மக்கள் மீதும், நாட்டின் மீதும் அக்கறை கொண்ட கலைஞர்களும், எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் இந்த ஆபத்தை உணர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடகாவில் கிரிஷ் கர்னாட், ஞானபீட விருது பெற்ற அனந்தமூர்த்தி, வசுந்தரா பூபதி, மருளாசிதப்பா, ஜி.கே.கோவிந்தராவ்  உள்ளிட்ட எழுத்தாளர்களும், கலைஞர்களும்  பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்றும்,  இது ‘இந்தியப் பன்முகத்தன்மைக்கு விடப்பட்ட சவால்’ என்றும் எச்சரித்து அறிக்கை விடுத்திருக்கின்றனர். இதுபோல டெல்லியில் குமார் ஷஹானி, சயீத் மிஸ்ரா, அர்பணா கௌர், விவன் சுந்தரம், அனுராதா கபூர், பத்ரி ரைனா, இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்‌ஷி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி.என்.ஜா, கே.எம்.ஸ்ரீமலி உள்ளிட்ட 60 கல்வியாளர்களும், திரையுலகினரும் கையெழுத்திட்டு அறிக்கை விடுத்துள்ளனர். ’வகுப்புவாத அமைப்பும், கார்ப்பரேட்களும் கூட்டாக சேர்ந்து ஆட்சியில் அமர முன்வருகின்றனர். சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத ஆபத்து இது. பொறுப்பு மிக்க தனிநபர்களும், அமைப்புகளும் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து, பா.ஜ.க கூட்டணியை ஆட்சியில் அமர விடாமல் முறியடிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பி.ஜே.பி வந்தால் ஆபத்து, ஆபத்து என்று அறிவுத்துறையினரும், கலைத்துறையினரும் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்? என்பது ஒரு முக்கியமான  கேள்வியாய் முன்வருகிறது. சாதாரண உரையாடல்களில் தெரிந்தவர்களும், நண்பர்களும் இதே கேள்வியை எழுப்புகின்றனர். தேவையற்ற பயம் எனவும் சிலர் கருதுகின்றனர்.  இந்நிலையில் பேராசிரியர் அருணனின் இந்த பேட்டியில் வெளிப்படும் கருத்துக்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதாய் மட்டுமில்லாமல்,  எழுத்தாளர்களும், கலைஞர்களும் இந்த நேரத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் முன்வைக்கிறது. அவர்களையும் பொதுவெளியில் நின்று உண்மைகளை உரத்துப் பேச அழைக்கிறது. பேட்டி கண்டவர், பத்திரிகையாளர் அ.குமரேசன்.  இந்த பேட்டி காலத்தின் அவசியம்.



நாடு இப்போது சந்திக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியலையும் பொருளாதாரத்தையும் தாண்டி பண்பாட்டுத்தளத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

பண்பாடு என்றதும் என் மனதில் பளிச்செனத் தோன்றுவது சக மனிதர்களை சமத்துவமாகப் பார்ப்பதும், அதற்கேற்ற வாழ்க்கைமுறைகளை அமைத்துக்கொள்வதும், அதற்கேற்ற பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதும்தான். இதற்கே ஆபத்து உருவாகியிருப்பதாக நினைக்கிறேன். உதாரணமாக, தமிழகத்தில் எனக்கு அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வுப்போக்கு அனைத்து சமூக பேரவை என்ற பெயரில் தலித் மக்களுக்கு எதிரான ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாமக எடுத்த முயற்சி. அத்தகைய பாமக இந்தத் தேர்தலில் பாஜக-வோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறது. இரு கட்சிகளுக்குமே அதைப் பற்றிய கூச்சம் எதுவும் இல்லை. அவர்கள் வெற்றிபெறப்போவதில்லை என்றாலும் பண்பாட்டுத்தளத்திலே இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காதல் கூடாது, குறிப்பாகப் பெண்ணின் காதல் கூடாது என்றெல்லாம் தொடங்கி, கடைசியில் இளையவர்களின் திருமண உரிமையையும் பறிப்பது போல் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்கிற அளவுக்குப் போனார்கள். அப்படியானால் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் இருக்கக்கூடாது என்ற சிந்தனை உள்ள கட்சி பாமக.

பாஜக எப்படிப்பட்டதென்றால் சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான, கிறிஸ்துவர்களுக்கு எதிரான - கட்சி. பெரும்பான்மை மதத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்க மறுக்கிற கட்சி அது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டுச் சேர்கின்றன என்றால் தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் சமூகநீதிக்கு எதிராகவும் ஒரு பகுதி மக்களை அணிதிரட்ட முயல்கிறார்கள் என்றுதான் பொருள்.

‘திராவிட’ என்ற சொல்லைத் தங்களது கட்சியின் பெயர்களில் வைத்திருக்கிற மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் சிறிதும் உறுத்தலில்லாமல் இவர்களோடு இணைந்திருக்கின்றன.  இது பாஜக-வுக்கும் பாமக-வுக்கும் ஒரு நியாயத்தன்மையை - செலாவணித்தன்மையை - ஏற்படுத்திக்கொடுப்பதாக, அக்கட்சிகளின் இந்தக் கருத்துகளில் தவறு இல்லை என்ற எண்ணத்தைப் பரப்புவதாக இருக்கிறது. இதனால் பண்பாட்டுத்தளத்தில் உடனடியாக மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை என்றாலும், அதற்கான அச்சாரம் போடப்படுகிறது என்றுதான் நினைக்கிறேன். சிலர் இதை, தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்று உருவாகிறது என்பதாக சித்தரிக்கிறார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்று உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது, ஏற்கெனவே இருப்பதை விடவும் மோசமானதாக, இருப்புச்சட்டியிலிருந்து எகிறி அடுப்புக்குள் விழுகிற கதையாக மாறிவிடக்கூடாது. அந்த வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். இது நிச்சயமாகப் பண்பாட்டுத் தளத்தில் ஆழமான, விரிவான பாதிப்புகளை உண்டாக்கும் என்பதுதான் என் அச்சம்.

இந்தச் சூழலில் தேர்தல் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது?


இத்தகைய ஆழமான விரிவான பாதிப்புகள் உருவாகும் என்றால் இந்த சக்திகளை முறியடிக்க வேண்டியதன் தேவையைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். முதலிலேயே குறிப்பிட்டது போல, அனைவரையும் சமமாகக் கருதுவதுதான் உண்மையான பண்பாடு. “பிறப்பொக்கும்” - பிறப்பால் அனைவரும் சமம் என்ற சிந்தனை வருவதற்கே இங்கே நெடுங்காலம் ஆனது, அதற்கொரு பிரெஞ்சுப் புரட்சி தேவைப்பட்டது. அதற்கொரு பாரம்பரியம் இங்கேயும் இருக்கிறது. பிறப்பால் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையுள்ள அனைவரும் இந்த சக்திகளை நிராகரிக்க வேண்டும்.

அதேவேளையில் திமுக - அஇஅதிமுக கட்சிகள் கூட இவர்களை எதிர்த்துப் பேசமாட்டேனென்கிறார்கள். ஏன் பாஜக-வை விமரிசிப்பதில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கேட்டபிறகும் கூட, நான் ஏன் அதைப் பேச வேண்டும் என்ற தொணியில்தான் அஇஅதிமுக-வின் ‘நமது எம்ஜிஆர்’ பத்திரிகையில் கட்டுரை எழுதப்படுகிறது. அதே போல திமுக தரப்பிலும், பொதுவாக மதவாதத்தை எதிர்ப்பதாகவும் மதச்சார்பற்ற அரசு அமைக்க விரும்புவதாகவும் சொல்லிக்கொள்கிறார்களே தவிர, குறிப்பாக பாமக-வின் சாதிய அரசியலையோ, பாஜக-வின் இந்துத்துவா அரசியலையோ குறிவைத்து அம்பலப்படுத்துகிற, கூர்மையாக விமரிசிக்கிற வேலையைச் செய்வதில்லை. காங்கிரஸ் கட்சியோ, அதன் ஆட்சியில் நடந்த தவறுகள் காரணமாக இதையெல்லாம் எதிர்த்து வலுவான முறையில் எதுவும் சொல்ல முடியாததாக இருக்கிறது.

இந்த நிலைமையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான் உருவாகிவருகிற ஆபத்தை உணர்ந்து பேசி வருகிறார்கள். ஆகவே, பாஜக அணி, காங்கிரஸ், திமுக அணி, அஇஅதிமுக ஆகியவற்றைத் தோற்கடிப்பதும் கம்யூனிஸ்ட் அணியை வெற்றிபெறச் செய்வதும் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படுகிறவர்கள் ஆழ்ந்து உணர வேண்டும், சட்டென்று இதைப் பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

பொதுவாக இந்தத் தேர்தலில் ஒரு தரப்பினரால் ஊழலும், இன்னொரு தரப்பினரால் மதவெறியும் முக்கியப் பிரச்சனைகளாக முன்வைக்கப்படுகின்றன. இந்த இரண்டில் பிரதானமான எதிரி எது?

நாம் முதலில் விவாதித்த பண்பாட்டுத் தளம் என்பதை எடுத்துக்கொண்டால் பண்பாடு என்பதன் அடிப்படையே ஒழுக்கம்தான். காலத்திற்குக் காலம் ஒழுக்க விதிகள் மாறி வந்திருக்கின்றன என்பது உண்மைதான். தனியுடைமை என்று வருவதற்கு முன்னால், பூமியில் வளங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தவரையில், திருட்டும் இல்லை, திருடக்கூடாது என்ற ஒழுக்க விதியும் இல்லை. என்னுடைய பொருள், என்னுடைய சொத்து என்று வந்த பிறகு, என் அனுமதியில்லாமல் தொடாதே என்பதுதான் திருடாதே என்பதன் பொருள். திருடக்கூடாது என்பது தனியுடைமைச் சமுதாயத்தில் ஒரு ஒழுக்க விதியாக நிலைபெற்றுவிட்டது. இன்று என்னவாகிவிட்டது என்றால், முதலாளித்துவச் சமுதாயம் திருடு ஆனால் மாட்டிக்கொள்ளாதே என்று அந்த விதியைத் திருத்துகிறது. அரசாங்கமே திருடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அரசாங்கச் சொத்துகளை - அதாவது இந்திய மக்களுக்குச் சொந்தமான வளங்களை, கனிமங்களை சிலபேர், தனி முதலாளிகள், பெரிய கார்ப்பரேட்டுகள் திருடலாம், கொள்ளையடிக்கலாம் அதில் தப்பில்லை என்று சொல்கிறது. அதிலேயிருந்து வருவதுதான் ஊழல். இன்றைய தனியார்மயமும் தாராளமயமும் உலகமயமும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்பது உண்மைதான். நான் அதையும் தாண்டி ஆழமாகச் செல்ல விரும்புகிறேன். தனியுடைமைச் சமுதாயம் உருவாக்கிய திருடாதே என்ற ஒழுக்கவிதிக்கு இவர்களே விசுவாசமாக இல்லை. இதற்கென்று சில சட்டவிதிகள் இருக்கின்றன, அதற்குள் புகுந்து திருடு, மாட்டிக்கொள்ளாமல் திருடு என்கிறார்கள்.

அரசுப் பொறுப்பில் இருந்தவர்களே இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள் என்று அரசின் இன்னொரு அங்கமாகிய மத்திய புலனாய்வுத்துறை குற்றம் சாட்டுகிறது. அரசு அமைப்பின் மற்றொரு அங்கமாகிய உச்சநீதிமன்றம் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நம்புவதற்கில்லை என்று தனது மேற்பார்வையில் அந்த வழக்கை எடுத்து நடத்துகிறது. நீதிமன்றம் தீர்ப்புச் சொல்கிற வரையில் குற்றவாளிகள் அல்ல என்று வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வருகிற வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேர்தலில் நிறுத்தாமலிருக்கலாம் அல்லவா? மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி அசோக் தாவனையும், கர்நாடகத்தில் பாஜக எடியூரப்பாவையும், ஸ்ரீராமுலுவையும், தமிழகத்தில் திமுக தயாநிதி மாறனையும், ஆ. ராசாவையும் மறுபடியும் தேர்தலில் நிறுத்துகின்றன. ஒழுக்கம் சார்ந்த அரசியலுக்கு இந்தக் கட்சிகள் தயாராக இல்லை. பொதுவாழ்வின் இந்த ஒழுக்கக்கேடு தனி வாழ்வில் பிரதிபலிக்கிறது. ஒருவன் லஞ்சம் வாங்குவது பற்றி அவனுடைய குடும்பமோ, சொந்தமோ கவலைப்படுவதில்லை, மாட்டிக்கொள்ளாமல் வாங்கு என்றுதான் போதிக்கின்றன. சகமனிதனை சமமாக மதிப்பது என்ற பண்பாட்டோடு தொடர்புள்ளதுதான் பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்காமல் இருப்பதும். பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பது என்பது எல்லா சகமனிதர்களையும் கொள்ளையடிப்பதுதான்.

ஊழல் மட்டுமல்ல, விலைவாசி உயர்வும் சக மனிதர்களை சமமாகப் பார்க்க மறுப்பதுதான். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் விலைவாசியைக் குறைப்போம்” என்று காங்கிரஸ் சொன்னது. விலைவாசியைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, பல மடங்கு உயர்த்திவிட்டார்களே! பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் கட்டுப்பாடில்லாமல் உயர்த்த அனுமதிப்பதுதான் மற்ற பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம். இதை ஆரம்பித்து வைத்தது முந்தைய பாஜக ஆட்சிதான். அதைத்தான் காங்கிரஸ் ஆட்சி இன்னும் வேகப்படுத்தியது. இப்படி ஏழை, எளிய மக்கள் மீது விலைவாசி உயர்வு என்ற கொடூரமான, ஈவிரக்கமற்ற தாக்குதலை கேவலமான முறையில் தொடுத்திருக்கிறார்கள். இப்போதும் கூச்சமில்லாமல் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருக்கிறார்கள். இது கேலிக்குரியது மட்டுமல்ல, மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிற அகந்தையும் கூட.

இதில் காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒன்றுதான். உதாரணமாக, நிலக்கரி ஊழல் தொடர்பாக பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்கிறது. உடனே அதை அரசாங்கத்தில் இருக்கிற மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா எதிர்க்கிறார், எதிர்க்கட்சியில் இருக்கிற அருண் ஜேட்லி எதிர்க்கிறார்!  இயற்கை எரிவாயு விலையை 4 டாலரிலிருந்து 8 டாலராக உயர்த்தினால் அம்பானிக்கு 80,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இடதுசாரிகளும் கெஜ்ரிவால் போன்றோரும் இதைக் கேள்வி கேட்கிறார்கள், ஆனால் நரேந்திர மோடியோ, பாஜக-வோ இதைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன் என்று கேட்டால் அவர்களிடமிருந்து பதிலே வருவதில்லை.

பொதுமக்கள் இந்தக் கொள்கைகளின் காரணமாகத் தங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைப் போராட்டங்களால் ஆவேசடைந்திருக்கிறார்கள். ஆனால், மக்களுடைய அதிருப்தி அந்த கார்ப்பரேட்டுகளுக்கும் அவர்களுக்கு சேவகம் செய்கிற ஆளுங்கட்சிக்கும் அதற்குத் துணை செய்கிற பிரதான எதிர்க்கட்சிக்கும் எதிராகப் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக, பாமர இந்துக்களின் கோபத்தைப் பாமர முஸ்லிம்களுக்கு எதிராகவும், பாமர கிறிஸ்துவர்களுக்கு எதிராகவும் திசைதிருப்புகிற வேலையைச் செய்கிறது இந்துத்துவா கூட்டம்.

ஊழலையும் விலைவாசி உயர்வையும் எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்த இரண்டுக்கும் அடிப்படையான பொருளாதாரக் கொள்கையை எதிர்ப்பதில்லை; அந்தப் பொருளாதாரக் கொள்கை சார்ந்த அரசியல் - கார்ப்பரேட் - அதிகாரவர்க்கக் கூட்டணியை எதிர்ப்பதில்லை. ஆகவே, ஊழல், விலைவாசி உயர்வு, மதவெறி ஆகிய மூன்றுமே மக்களின் எதிரிகள்தான்.

பொதுவாகவே தேர்தல்களின்போது சாதி புகுந்துவிளையாடுவது உண்டு. தற்போதைய தேர்தலில் சாதியத்தின் தாக்கம் எப்படி இருக்கும்?


தமிழகத்தை எடுத்துக்கொண்டால், ஏற்கெனவே சொன்னது போல தலித் மக்களுக்கு எதிராக அனைத்து உயர் சாதி மக்களையும் அரசியல்ரீதியாகத் திரட்டுகிற வேலையில் பாமக ஈடுபட்டது. அடிப்படையில் அதுவே குறிப்பிட்ட சாதிப்பின்னணி உள்ள கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மக்களுக்கான சில நியாயமான கோரிக்கைகளோடு சாதி அமைப்பாகத்தான் அது இயங்கிவந்தது. பின்னர் அரசியல் கட்சியாகவும் உருவெடுத்தது. இடையில் சிறிது காலம், தலித் மக்களோடு ஒரு நல்லுறவை அந்தக் கட்சி ஏற்படுத்திக்கொண்டது. ஆனால், பின்னர், தனது அரசியல் நோக்கங்களுக்கு அந்த நல்லுறவு உதவாது என்று நினைத்தோ என்னவோ, அப்பட்டமான முறையில் தலித் மக்களுக்கு எதிராக, உயர்சாதி அமைப்புகளை ஒருங்கிணைக்கிற வேலையில் அக்கட்சியின் தலைவர் ராமதாஸ், அவரது புதல்வர் அன்புமணி இருவரும் இறங்கினார்கள். இந்த ஒருங்கிணைப்பு தலித் மக்களுக்கு எதிரானது, தமிழ்ச் சமுதாயத்திற்குத் துரோகத்தனமானது. இதை பல பெரும் ஊடகங்கள் சொல்வதில்லை. அந்தக் கட்சியோடு பாஜக இணைகிறது என்றால், தலித் விரோத அரசியலை அந்தக் கட்சியும் பயன்படுத்திக்கொள்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்துத்துவா என்பதே அடிப்படையில் சாதியம்தான். அகில இந்திய அளவில் இந்துத்துவ அமைப்புகள் சாதிய அடிப்படையில் பாஜக-வுக்கு ஆதரவு திரட்ட முயல்கின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பாஜக தலைவர்கள், முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைப்புகள் குரல் கொடுப்பதையோ, கிறிஸ்துவர்களுக்காகக் கிறிஸ்துவ அமைப்புகள் குரல் கொடுப்பதையோ மதவாதம் என்று சொல்வதில்லை, இந்துக்களுக்காக இந்து அமைப்புகள் குரல் கொடுப்பதை மட்டும் மதவாதம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்வது ஏன் என்று கேட்பதுண்டு. அவர்களிடம் நான், “இந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தால் அதை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை, ஆனால் நீங்கள் பெரும்பான்மை இந்துக்களுக்காகக் குரல் கொடுப்பதில்லையே,” என்று சொல்வேன். எப்படிச் சொல்கிறீர்கள் என்று அவர்கள் கேட்கிறபோது, “ஆம், தலித் மக்களுக்காக நீங்கள் நிற்பதுண்டா? தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதுண்டா? பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயங்களுக்காக வாதாடியதுண்டா? பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மண்டல் கமிஷ்ன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி. சிங் நடவடிக்கை எடுத்தபோது அதைக் கெடுப்பதற்கல்லவா முயன்றீர்கள்” என்று கேட்பேன்.

வெறும் தேர்தல் கால உறவாக மட்டும் இதைப் பார்க்கக்கூடாது. சமுதாயத்தில் ஆழமான சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வளர்ச்சிப்போக்காகவே இதைப் பார்க்க வேண்டும். அதைத் தடுப்பதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள் ஒற்றுமைக்கு எதிரான இந்த சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.

கலை இலக்கியத்தின் அடிப்படையே சுதந்திரமான கருத்து வெளிப்பாடுதான். அதற்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல் குறித்து...?


நான் நினைக்கிற ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை விடவும் கொடூரமான ஒடுக்குமுறை எதுவும் கிடையாது. யாரிடமிருந்தும் எப்படிப்பட்ட புதிய கருத்தும் வெளிப்படும் என்பதுதான் மனிதகுலத்தின் அற்புதம். ஆனால், நீ இந்தக் கருத்தைச் சொல்லக்கூடாது, அல்லது இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுவது கொடுமையானது. உலக வரலாற்றில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு ஒரு முக்கியக் காரணம், அங்கே சுதந்திரமாக மாற்றுக் கருத்துகளைச் சொல்ல முடிந்ததுதான். கருத்துச் சுதந்திரம் எப்போது முழுமையாகும் என்றால், எது பெரும்பான்மையானதாக இருக்கிறதோ, எது ஆளுமை செலுத்துவதாக இருக்கிறதோ அதை விமரிசிப்பதற்கு, அதை நான் ஏற்கவில்லை என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறபோதுதான். மேற்கு ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதத்திற்குள்ளேயே பழைய சிந்தனைகளை எதிர்த்து ஞானிகள் பேசினார்கள். நாங்களும் ஏசுவை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டே, மதத் தலைமைகளின் பிற்போக்குத்தனங்களை எதிர்த்தார்கள். அங்கே நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு, அதை விட முற்போக்கானதாகத் தோன்றிய முதலாளித்துவ சமுதாயம் வளர்ந்ததற்கு இந்தக் கருத்துச் சுதந்திரமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பதும், ஆளுமை செலுத்துவதும் இந்து மதம்தான் என்கிறபோது அதில் உள்ள பிற்போக்குத்தனங்களாக ஒருவர் எதை நினைக்கிறாரோ அதை எதிர்த்துக் கருத்துச் சொல்கிற உரிமை அவருக்கு இருக்க வேண்டும். அதே போல் மற்ற மதங்களில் விமரிசனத்திற்கு உரியவை என்று நினைக்கக்கூடியவற்றை வெளிப்படையாக விமரிசிக்கிற உரிமையும் இருக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அமெரிக்க ஆய்வாளர் வெண்டி டோனிகர் எழுதிய ‘தி ஹிண்டூஸ் - அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ என்ற புத்தகத்திற்கு, ஒரு சிறு இந்து அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் செல்கிறது. இந்து மதம் மிகப்பெரிய அளவுக்கு சகிப்புத்தன்மை உள்ள மதம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியில்லை, சகிப்பற்ற தன்மைதான் மிகுதியாக இருக்கிறது என்று டோனிகர் அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் விமரிசனத்திற்கு உரிய கருத்துகள் இருக்குமானால் அதை விமரிசிக்கிற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால், வழக்கில் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்வதற்கு முன்பே, புத்தகத்தை வெளியிட்ட பெங்குயின் நிறுவனம், இந்தியச் சட்டங்கள் அந்த அமைப்புக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன என்று கூறி, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகப் படிகளைத் திரும்பப்பெற்றுக்கொண்டது, அவற்றை அரைத்துக் கூழாக்கிவிட்டது. இந்துத்துவா கட்சி ஆட்சிக்கு வராமலே இப்படி நடக்கிறது என்றால், தப்பித்தவறி மோடியின் தலைமையில் அடுத்த ஆட்சி அமையுமானால் என்ன ஆகும்? மற்ற சிறுபான்மை மதங்களுக்கும் சாதகமாக நடந்துகொள்வது போல் தோற்றத்தை ஏற்படுத்தி, எந்த மதத்தையும் புண்படுத்த விடமாட்டோம் என்று சொல்லி, மதம் பற்றிய விமரிசனக் கருத்து எதையும் யாரும் வெளிப்படுத்தக் கூடாது என்று சட்டமே கொண்டுவந்துவிடுவார்கள். அறிவியல் கருத்துகள் முடங்கி, நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.

தமிழகத்தில் 1940களின் பிற்பகுதி வரையில், புராணக்கதைகளைச் சொல்கிற திரைப்படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. திராவிட இயக்கமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் ஏற்படுத்திய தாக்கங்களால், பகுத்தறிவுக் கருத்துகளும் முற்போக்கான சிந்தனைகளும் திரைப்படங்களில் இடம்பெறத் தொடங்கின. அவை தமிழ்ச்சமூகத்தில் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தின. இன்று நவீன நுட்பங்களோடு வருகிற திரைப்படங்களில் எந்த அளவுக்கு இப்படிப்பட்ட விமரிசனங்கள் இடம்பெறுகின்றன? சில பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறத் தொடங்கினார் நகைச்சுவை நடிகர் விவேக். அவரை, காஞ்சி சங்கராச்சாரி அழைத்துப் பேசினார், அதன்பிறகு அந்த வகையிலான விமரிசனங்களும் குறைந்துவிட்டன. சிறுபான்மை மதங்களை விமரிசித்துப் படங்கள் வருகின்றன, அதற்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. ஆனால் பெரும்பான்மை மதத்தை விமரிசித்துப் படங்கள் வரவேண்டாமா? பகுத்தறிவுக் கருத்துகள் வர வேண்டாமா? 

இன்று ஒரு ஆய்வு நூலுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளை, கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இதர கலைப்படைப்புகளுக்கும் ஏற்படும். ஒட்டுமொத்த சுதந்திரமும் ஜனநாயகமும் முடக்கப்பட்டுவிடும். கலை இலக்கியவாதிகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிற உணர்வோடு இந்தத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும், பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதும்  கலை உரிமை சார்ந்த செயல்பாட்டுக் கடமை.

இந்தப் பிரச்சனையோடு தொடர்புள்ளதுதான் மொழி உரிமை. அதற்கு ஏற்பட்டிருக்கிற சவால் என்ன?

ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். சமஸ்கிருத மொழியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதற்கு எல்லா வகையிலும் நிகரான தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது போல் தமிழையும் செம்மொழியாக அறிவிக்கக்கோரி தமுஎகச சார்பில் தலைநகர் தில்லியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்த காலம் சென்ற பி. மோகன்,  காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நாங்கள் பிரதமரையும் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியையும் சந்திக்க உதவினார்கள். எங்கள் கோரிக்கை மனுவை வாங்கிக்கொண்ட வாஜ்பாய் எங்களைப் பார்த்து, “நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும்,” என்று மட்டும் சொன்னார். வேறு எதுவும் சொல்லவில்லை. முரளி மனோகர் ஜோஷி மனுவைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை, பக்கத்தில் வைத்துவிட்டார். கோரிக்கையை நிறைவேற்ற அந்த ஆட்சி கடைசிவரையில் எதுவுமே செய்யவில்லை. இந்துத்துவாவைப் பொறுத்தவரையில் சமஸ்கிருதத்திற்குத் தருகிற முக்கியத்துவத்தை, இந்தி உட்பட வேறு எந்த மொழிக்குமே தரமாட்டார்கள். இவர்கள் தமிழுக்காக என்ன செய்துவிடுவார்கள் என்று வைகோ எதிர்பார்க்கிறார் என்பது புரியவில்லை.

அடுத்து, இந்தி அல்லது ஆங்கிலம் என்பதுதான் காங்கிரஸ்சின் கேவலமான மொழிக்கொள்கை. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை வளரவிடாமல் தடுப்பதற்கு இந்த மொழிக்கொள்கைதான் தோது. ஆகவே இதை பாஜக எதிர்ப்பதில்லை. தமிழகத்திலும் எங்கும் ஆங்கில ஆதிக்கத்தைப் பார்க்கிறோம். போகிற போக்கைப் பார்த்தால் நாடு முழுவதும், இந்தியைக் கூட கீழே தள்ளி ஆங்கிலம் மட்டும்தான் என்ற நிலைமை வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. அதிலும், இன்றைய உலகமய கட்டத்தில் - உலகமயம் என்று கூட சொல்லக்கூடாது, அமெரிக்கமயம் என்றுதான் சொல்ல வேண்டும் - அவர்களுடைய சந்தை ஆக்கிரமிப்புக்கு இந்தியாவில் ஆங்கிலம் மேலோங்குவதுதான் வசதி. தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால், பள்ளிக்கல்வியில் தமிழ் என்ன நிலைமையில் இருக்கிறது என்பது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அகில இந்திய அளவில் இப்படி ஆங்கிலம் திணிக்கப்படுகிறபோது, மத்திய அரசின் மற்ற விசயங்களை எதிர்த்துப் பேசுகிற முதலமைச்சர் ஜெயலலிதா, அதன் மொழிக்கொள்கையை எதிர்க்காமல், அதற்கேற்ப இங்கேயும் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது. ஆங்கிலம் ஒரு துணை மொழியாக இருப்பதை எதிர்ப்பதற்கில்லை. ஆனால், அதுதான் பிரதான மொழியாக இருக்கும் என்ற நிலை வருவது, இந்திய மொழிகளுக்கும் நல்லதல்ல, மக்களுக்கும் நல்லதல்ல.

தமிழ், இந்தி உள்பட, எட்டாவது அட்டவனையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மத்தியில் சமமான இடம் தர வேண்டும் என்ற உடையவை இடதுசாரி கட்சிகள் மட்டும்தான். ஆகவே, தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் கம்யூனிஸ்ட்டுகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது பற்றி...?


இன்றைய தேர்தல் முறையில், ஒரு கட்சிக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளை நாடாளுமன்றத்தில் இடங்களாக மாற்றுவதற்குத் தொகுதி உடன்பாடு தேவைப்படுகிறது. ஆகவேதான் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அஇஅதிமுக-வோடு தொகுதி உடன்பாடு காண முயன்றன. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் தனது கட்சி இடதுசாரிகளோடு நிற்கிறது என்று அறிவித்து, பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பிறகு அவராகவே உறவை முறித்துக்கொண்டார். அதற்குப் பிறகு ஒரு தவறான அரசியல் முடிவு எடுத்து, தனது பிரச்சாரங்களில் பாஜக-வை விமரிசிப்பதில்லை. இது அவரது உள்நோக்கம் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. தேர்தலுக்குப் பிறகு பாஜக-வோடு சேர்வதற்கான திட்டம் ஏதேனும் இருக்கும் போலப் படுகிறது. ஜெயலலிதா அவர்கள் அப்படிச் செய்வார்களானால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள 11 கட்சி பிரகடனத்திற்குச் செய்கிற மிகப்பெரும் துரோகமாக இருக்கும். கூடவே, பெரியாரும் அண்ணாவும் உயர்த்திப்பிடித்த மதச்சார்பற்ற கொள்கைக்கும் துரோகம் இழைப்பதாக அது முடியும்.

இந்தப் பின்னணியில், இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் சேர்ந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிற சூழல் தமிழகத்தில் 1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த பிறகு முதல் முறையாக உருவாகியிருக்கிறது. தடைக்கற்கள் எதிர்ப்படுகிறபோது அவற்றைப் படிக்கற்களாக மாற்றுவதுதான் சரியான அணுகுமுறை. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவு சரியானதே. ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், வெற்றிபெறக்கூடிய எவரும் குறைந்த வாக்குகள் வேறுபாட்டில்தான் வெற்றிபெற முடியும். ஆகவே, தங்களுக்கு விரிவான மக்கள் தளம் இருக்கிறது என்று கருதுகிற இடங்களைத் தேர்ந்தெடுத்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிருகின்றன. தங்களுடைய கொள்கைகளை மக்களிடம் விரிவாகக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறடது. தங்களுடைய ஆற்றல் அனைத்தையும் ஒருமுகப்படுத்திச் செயல்படுகிற நிலையில், பல இடங்களில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்பட பண்பாட்டுத்தளத்தில் செயல்படுவோருக்கும் பொதுமக்களுக்கும் உங்கள் வேண்டுகோள்...?


படைப்பாளிகளுடைய அடிப்படையான செயல்பாடு என்பது கலை இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதுதான். என்றாலும், சுற்றி நடக்கிற நிகழ்ச்சிப்போக்குகளிலிருந்து அவர்கள் தங்களைத் துண்டித்துக்கொள்ள முடியாது. சொல்லப்போனால், அந்த அரசியல் - சமூக - பண்பாட்டு நிகழ்வுகள்தான் அவர்களுடைய கலை-இலக்கிய ஆக்கங்களையே உருவாக்க முடியும். இன்று இந்தியாவில் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை நுணுக்கமாகக் கவனித்து, தங்களுடைய பங்கைச் செலுத்துவது கலை-இலக்கியவாதிகளுடைய முக்கியமான சமூகக் கடமை என்று நான் கருதுகிறேன். இரண்டு வகைகளில் அவர்கள் பங்காற்ற முடியும். ஒன்று - வாக்காளர்களாக, மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கிறவர்கள் யார் என்று சரியாகத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆதரவளிப்பது. இரண்டு, அந்த சரியான அரசியல் சக்திகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிற வகையில் தங்களது கலைத்திறன்களையும் இலக்கிய ஆற்றல்களையும் பயன்படுத்துவது. இந்தக் கடமையை நிறைவேற்றி தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழத் தோள் கொடுக்குமாறு சக எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இலக்கியத்தில் அரசியல் பிரச்சாரம் செய்யலாமா என்று சில அறிவுஜீவிகள் கேட்கக்கூடும். ஆனால், இப்படிக் கேட்பதன் மூலமாகவும் காலங்காலமாக அதுதான் நடந்து வந்திருக்கிறது. அரிஸ்டாட்டில் சொன்னது போல, மனிதா நீ ஒரு அரசியல் விலங்கு என்பதை உணர்ந்துகொண்டாக வேண்டும். பொதுமக்களில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். கலை இலக்கியவாதிகளைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே அவர்களுக்கு ஒரு அரசியல் புரிதல் இருக்கும். மக்களை அலைக்கழிக்கிற நாசகரமான பொருளாதரக் கொள்கைகளையும், மக்களைக் கூறுபோடுகிற கொடூரமான மதவெறி அரசியலையும் வீழ்த்துவதற்கு இடதுசாரிகள் வெற்றிபெறுவது ஒரு கட்டாயத் தேவை என்ற புரிதலோடு அவர்கள் பங்காற்ற வேண்டும்.

தமிழக மக்கள் எப்போதுமே அரசியலில் அக்கறையோடு ஈடுபட்டு வந்திருப்பவர்கள். தற்போது ஐந்துமுனைப் போட்டி என்பது, ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சரியான பொருளாதாரக் கொள்கைகளுக்காக மட்டுமல்ல, மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்காக மட்டுமல்ல, பொதுவாழ்வில் நேர்மையும் தூய்மையும் வேரூன்ற வேண்டும் என்பதையும் நினைத்துப்பாருங்கள், மற்ற எல்லோரும் உங்கள் எண்ணத்தில் மறைந்துவிடுவார்கள், கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே கம்பீரமாக நிற்பார்கள். அவர்களுக்குப் பேராதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி: ‘தீக்கதிர்’ நாளேடு (6-4-2014 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணை.ப்பு)

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. "பாஜக அணி, காங்கிரஸ், திமுக அணி, அஇஅதிமுக ஆகியவற்றைத் தோற்கடிப்பதும் கம்யூனிஸ்ட் அணியை வெற்றிபெறச் செய்வதும் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படுகிறவர்கள் ஆழ்ந்து உணர வேண்டும், சட்டென்று இதைப் பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்"
    கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால், அம்மாவுக்கு ஜால்ரா போடுமே, அந்தக் கட்சியைத்தானே சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வகுப்புவாதக் கட்சியான பா.ஜ.க வை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் எப்போதும் ஈடுபட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத்தான் பேராசிரியர் அருணன் சொல்கிறார்.

      நீக்கு
  2. என்ன எடுத்து சொன்னாலும் புரியாது" இதில் இருக்கும் உண்மையை... பட்டால் தான் புரியும்...
    என்றைக்குத்தான் நமது நாட்டு மக்கள் எந்த ஒரு பிரச்சனைக்கும் முன்கூட்டியே அதன் விளைவுகளை தெரிந்து செயல்பட்டு உள்ளனர்?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!