அடுத்த பிரதமர் யார்?
பாராளுமன்றத் தேர்தல் என்றவுடன், ‘அடுத்த பிரதமர் யார்?’ என்பதுதான் முதல் கேள்வியாகவும், ஒரு சுவாரசியம் நிறைந்த புதிராகவும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் களம் பற்றி உரையாடுகிற அனைத்து ஊடகங்களிலும் ’அடுத்த பிரதமர் யார்’ குரல் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறது. கருத்துக்கணிப்பு ஆய்வுகளும் ‘அடுத்த பிரதமர் யார்’ என்பதைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலிக்கிற இந்தக் கேள்வி, அந்தப் பிரதமரை ஒரு மகத்தான நாயகனாகவும், வானத்திலிருந்து தரையிறங்கி நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கப் போகிறவராகவும் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கின்றன. அதுகுறித்த மறுபேச்சோ, சிந்தனைகளோ, ஆராய்ச்சிகளோ எதுவும் அற்று எளிய மக்கள் அந்த ‘அவர்’ யாராக இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கின்றனர். ஒரு‘தேவனின் வருகையை’ எதிர்பார்க்கின்றனர்.
அந்த நாயகனை ‘நீங்கள்தாம் தேர்ந்து எடுக்கப் போகிறீர்கள்’ என இரண்டு அல்லது மூன்று முகங்களை நீட்டுகிறார்கள். ‘அவர் அப்படிப்பட்டவர்’, ‘இவர் இப்படிப்பட்டவர்’ என பின்னணியில் குரல்கள் கேட்கின்றன. ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் வேகமாக அந்த முகங்களை நோக்கி கை நீட்டுகிறார்கள். மக்களும் தங்களை அறியாமல் அந்த முகங்களை நோக்கி கைகளை நீட்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த முகங்கள் பெரிது பெரிதாய் ஆகின்றன. ஒன்று மிகப் பெரிதாகிறது. அவரே ‘அடுத்த பிரதமர்’ ஆகிறார். ஒரு மாபெரும் தேசத்தின் மக்கள் தங்கள் மகத்தான ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டதாக பெருமை பேசப்படுகிறது.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இப்படி ‘அடுத்த பிரதமர்’கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களில் அந்த பிரதமர்கள் தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, தங்களை வாட்டி வதைத்து விட்டார் என்று மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். இங்கு தவறு செய்தது மக்கள் அல்ல. அப்பாவி மக்களை ஏமாற்றிய அந்த பிரதமர்தான். ஆனால் மக்களோ தாங்களும் தவறு செய்துவிட்டதாக உணர ஆரம்பிக்கிறார்கள். மக்களின் சம்மதத்தின் பேரிலேயே அனைத்தும் நடப்பதாக ஒரு மாபெரும் கண்கட்டி வித்தை இது. இந்த அமைப்பின் விந்தை இது.
’அடுத்த பிரதமர் யார்?’ என திரும்பவும் அறிவிக்கப்படுகிறது. குரல்கள் மீண்டும் எழுகின்றன. சென்ற தடவை ஏமாற்றியவரின் முகமும், புதிதாக ஏமாற்றப் போகிறவரின் முகமும் முன்வைக்கப்படுகின்றன. சென்ற தடவை ஏமாற்றியவரை நோக்கி அதிகமாக மக்கள் கைகளை நீட்டவில்லை. புதிய முகம் பெரிதாகிறது. சென்ற தடவை ஏமாற்றியவரை தண்டித்து விட்டதாக மக்கள் நிம்மதி கொள்கின்றனர். அடுத்த பிரதமரும் மக்களை ஏமாற்ற ஆரம்பிக்கிறார். நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன.
மக்களை மீண்டும் மீண்டும் முட்டாள்களாக்கும் மோசடிதான் இந்த ‘அடுத்த பிரதமர் யார்?’ என்னும் குரல். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் இப்படி ‘அடுத்த பிரதமராக’ முன்வைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்களை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் எல்லாம் தெளிவாகும்.
ராஜீவ் காந்தி
நரசிம்மராவ்
வாஜ்பாய்
சோனியா காந்தி
அத்வானி
மன்மோகன் சிங்
‘இந்தியாவை 21ம் நூற்றாண்டுக்குள் அழைத்துச் செல்கிறேன்’ என்றார் ஒரு ‘அடுத்த பிரதமர்’ ’இந்தியா ஓளிருகிறது’ என்றார் இன்னொரு ‘அடுத்த பிரதமர்’. ‘நவீனப் பொருளாதார மேதை’ என்றழைக்கப்பட்டார் மற்றொரு ‘அடுத்த பிரதமர்’. எல்லோருடைய காலங்களிலும் மக்களே வஞ்சிக்கப்பட்டனர். இந்தியா ‘ஏழைகளின் இந்தியா’, ‘பணக்காரர்களின் இந்தியா’ என்று இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ‘அடுத்த பிரதமர்’கள் எல்லோரும் ஏழைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணக்காரர்களுக்கு சேவகம் செய்கிறவர்களாகவே இருந்தார்கள்.
இந்த வழியில்தான் இப்போது நரேந்திர மோடியும் ‘அடுத்த பிரதமராக’ முன்வைக்கப்பட்டு இருக்கிறார். ‘இந்தியாவின் வளர்ச்சி’ என்று எங்கும் முழக்கமிடப்படுகிறது.
திரும்பவும் ஏமாறக் கூடாது அல்லது ஏமாற்ற அனுமதிக்கக் கூடாது. நரேந்திர மோடி, ராகுல் காந்தி முகங்களை ஒதுக்கி விட்டு, எது இந்தியாவின் வளர்ச்சி என பேச வேண்டும். ஆயிரத்தெட்டு புள்ளி விபரங்களை அவர்கள் சொல்வார்கள். குழப்புவார்கள். மிக எளிமையாக இந்தியாவின் வளர்ச்சியை நாம் முன்வைப்போம்.
“இந்த தேசத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் அவரவர்களுக்கென்று ஒரு வீடு. அதற்கு மின்சாரம் மற்றும் குடிநீர். மூன்று வேளை அனைவருக்கும் உணவு. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை.” இதுதான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சியாய் இருக்க முடியும்.
இதனை சொல்வதற்கு யாருக்குத் துணிவு இருக்கிறது என முதலில் பார்ப்போம். இதனை அமல் செய்ய யாருக்கு உறுதி இருக்கிறது என அறிவோம். அவர்களிலிருந்து ஒருவரை ‘அடுத்த பிரதமராக’ தேர்ந்தெடுப்போம்.
செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?
"ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகிறது. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக நீங்கள் மாற்றுவதாகச் சொன்னதைக் கூட நாங்கள் மறந்துவிடுகிறோம். மின்வெட்டைக் குறைப்பதற்காவது நடவடிக்கை எடுங்கள். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“ அம்மாவின் பெயரால் குறைந்த விலைக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கொடுக்கிறீர்கள். அதுபோல தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையாக ஏற்றிய பால்விலை, பஸ் டிக்கெட், மின்சாரத்தையும் அம்மாவின் பெயரால் மலிவு விலைக்கு வழங்கி, செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“இலவசமாய் ஆடு கொடுத்ததும் போதும், மாடு கொடுத்ததும் போதும். தாங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தால் இலவசமாய் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யுங்களேன். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“நான் அங்கம் வகிக்கும் மத்திய அரசு இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கச்சத் தீவை மீட்கும் என்றும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கிறீர்கள். அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த அண்ணா நூலக இடமாற்றத்தை கைவிடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“காங்கிரஸின் தவறான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டதாகவும், நாட்டு மக்களெல்லாம் அவதிப்படுவதாகவும் கூட்டத்துக்கு கூட்டம் ஆவேசமாகப் பேசி வருகிறீர்கள். தவறான ஆட்சிக்கு முக்கிய காரணமே, சில முதலாளிகளின் நலன்களுக்காக பெரும்பான்மை மக்களை வாட்டி வதைக்கும் தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்த போக்குத்தான். தாங்கள் நல்லாட்சி செய்ய வேண்டுமென்றால் அந்த தனியார் மயத்தை கைவிட வேண்டி வரும். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“மக்கள் ஒற்றுமைக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்றும், பா.ஜ.க ஆட்சிக்கு வருவது பிளவு வாத சக்திகளை மேலும் ஊக்குவிக்கும், நாட்டுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் எச்சரிக்கின்றன. தாங்களும் பிளவுவாத சக்திகளை முறியடித்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்போம் என ஜான்சிராணி போல சூளுரைக்கிறீர்கள். அப்படியென்றால் பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என அறிவிக்கலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
“250 ருபாய் கொடுக்குறேன்னுச் சொல்லி இங்க கூட்டி வந்தாங்க. புள்ளைகளத் தனியா விட்டுட்டு வந்தேன். மூணு மணி நேரமா இந்த வெயில்ல காத்துக் கெடக்கேன். குடிக்க ஒரு பாக்கெட் தண்ணிதான் தந்தாங்க. இப்ப வீட்டுக்குப் போகவும் விட மாட்டேங்குறாங்க. சீக்கிரமா ஹெலிகாப்டரில் வந்து தொலைங்க. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”
ஜெயலலிதாவுக்கு நன்றி!
உற்சாகமான நாள் இது.
சி.பி.எம் கட்சியின் விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, ஊழியர் கூட்டம் இன்று விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அருமைத் தோழர்.சாமுவேல்ராஜ் தான் வேட்பாளர். அறிவொளி இயக்கக் காலத்தில் களப்பணியாற்றியதிலிருந்து, இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளராய் மகத்தான காரியங்கள் ஆற்றிக்கொண்டு இருப்பது வரை தோழர்.சாமுவேல்ராஜை இருபத்தாறு, இருபத்தேழு வருடங்களாகத் தெரியும். பத்து மணிக்கு என சொல்லியிருந்தார்கள். சாவகாசமாய் பத்தரை மணிக்கு மேல்தான் சாத்தூரிலிருந்து நானும் தோழர்களும் சென்றோம். வி.வி.எஸ் திருமண மண்டபத்திற்குள் நுழையமுடியவில்லை. அப்படியொரு கூட்டம். சந்தோஷத்தோடும், ஆர்வத்தோடும் சுவரையொட்டி ஒரு ஒரமாய் போய் நின்றேன்.
மேடையில் சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சியின் மாவட்டத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் அமர்ந்திருந்தனர். தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன், வேட்பாளர் சாமுவேல்ராஜ் அங்கேயிருந்து பார்த்து புன்னகைத்து கையசைத்தனர். விருதுநகர்த் தோழர் ஒருவர், “ஆயிரம் சேருக்குத்தான் சொல்லியிருந்தோம். இங்கே பார்த்தால் இரண்டாயிரம் பேருக்கும் மேல் வந்து இருக்கிறார்கள்” என பெருமிதம் கொண்டிருந்தார். ஒருவித வேகத்தோடும், அளப்பரிய நம்பிக்கையோடும் பொங்கி நின்ற அந்தக் கூட்டத்தையேச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தலைவர்கள் பேசிய அரசியல் நிலைமைகளின் ஊடே ”இது குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் வந்த கூட்டமல்ல, அவரவர் கைக்காசு போட்டு வந்த கூட்டம்”, “இடதுசாரிகள் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம்”, “எந்த அழுக்கும், கறையும் நம்மை ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை”, “நம்மிடம் பணம் இல்லை. ஆனால் நேர்மையையும், உண்மையும், தியாகமும் இருக்கின்றன”, “நம்மைவிட மக்களை சந்தித்து ஒட்டுக் கேட்க இங்கே யாருக்கு உரிமையும், தகுதியும் இருக்கிறது?”, “மதவெறி, ஜாதிவெறி, அதிகாரவெறி அனைத்தும் எதிராக நாம் போராடுகிறோம், வெற்றி பெறுவோம்” என்னும் வார்த்தைகள் ஒலித்தபோதெல்லாம் அதிர்ந்து போகும்படி ஆரவாரங்கள் எழுந்தன. “இப்படியொரு எழுச்சிக்கு காரணமாயிருந்த ஜெயலலிதாவுக்கு முதலில் நாம் நன்றி சொல்வோம்” என ஒரு தலைவர் சொன்னபோது கைதட்டல்கள் அடங்க வெகு நேரமானது!
“இன்னார் ஜெயிக்க வேண்டும் என்று மக்கள் ஒட்டுப் போடுவதில்லை. அவர் தோற்க வேண்டும் என்றுதான் ஒட்டுப் போடுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இங்கு நம்மைத் தவிர அனைவரும் தோற்க வேண்டியவர்கள். மக்களை ஏமாற்றியவர்கள்” என தோழர். எஸ்.ஏ.பெருமாள் பேசியதும், “விருதுநகர் மாவட்டத்தில் அறிவொளி இயக்க காலத்திலிருந்து நாம் மக்களை புத்தகங்களோடுதான் அணுகி இருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்த மாவட்டத்தில் வீடு வீடாய் சென்று இப்போதும் நாம் புத்தகங்கள் விற்றிருக்கிறோம். ஒரு அறிவார்ந்த சமூகத்தை கட்டி எழுப்ப நாம் முனைந்திருக்கிறோம். நாம் தோற்க மாட்டோம்” என எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசியதும் கவனத்துக்குரியவையாய் இருந்தன.
எண்பதுகளில் நம்பிக்கையோடு அலைந்த காலங்களில் பார்த்த முகங்களையெல்லாம் இன்று அந்தக் கூட்டத்தில் பார்த்தேன். அவர்கள் எங்கே போயிருந்தார்கள்?, இவ்வளவு நாளும் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்?, இன்று எப்படி இங்கே வந்தார்கள்? என்னும் கேள்விகள் எழுந்துகொண்டு இருந்தன . ஒரு தோழர் என்னைப் பார்த்து, “பார்த்து நாளாச்சு” என்றார். அந்த முகம் புதுசாய் இருந்தது. காய்ந்த பூமியில் ஒரு மழைக்குத் துளிர்த்த பசுமையாய் தென்பட்டது.
கூட்டம் முடியவும் அருமைத் தோழர் தாமஸ் பெருங்குரலெடுத்து கோஷம் எழுப்பினார்.
“வெல்லட்டும் வெல்லட்டும்
நமது ஒற்றுமை வெல்லட்டும்
செல்லட்டும் செல்லட்டும்
இடதுசாரிப் பாதையில்
இந்திய தேசம் செல்லட்டும்”
மொத்தக் கூட்டமும் அந்தப் பிரதேசமே அதிரும்படியாய் திருப்பிச் சொன்னது. சிலிர்த்தது.