மயிர் பிளக்கும் விவாதம்!

spider

 

இணையத்தில் முன்பு போல இயங்கமுடியவில்லை. தொழிற்சங்கப் பணிகள்  நேரத்தையும், சிந்தனைகளையும் பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றன. இந்த வாரம் தொடர்ந்து வந்த விடுமுறைகளால், நேற்று சாவகாசமாக பேஸ்புக், கூகிள் பிளஸ், தமிழ்மணம் சென்று பார்த்தால் திரும்பிய பக்கமெல்லாம் சின்மயி விவகாரம்தான். ஒன்றிலிருந்து ஒன்றாக கிளம்பி, போய்க்கொண்டே இருக்கிறது. பலரும் எழுதியதைப் படிக்க படிக்க, சனி ஞாயிறும் கழிந்துவிட்டது.  பல உண்மைகள் அங்கங்கு மறைக்கப்பட்டு அல்லது நீக்கப்பட்டு அல்லது சொல்லாமல் விடப்பட்டு விவகாரத்தின் பரிணாமங்கள்  முழுமையாக பிடிபடவில்லை. இதுகுறித்து பதிவு செய்த பலரின் கருத்துக்களால் பரிமாணங்கள் துலங்குகின்றன.

 

மொத்தத்தில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது. விவாதங்கள், உரையாடல்கள் குறித்து ஒரு நாகரீக சமூகத்திற்கு இருக்க வேண்டிய புரிதல்கள் சுத்தமாய் நமக்கு இல்லை. இதே இணைய வெளி நமக்கு கடந்த காலங்களில் தந்த அனுபவங்களிலிருந்து எந்த படிப்பினைகளையும் நாம் பெறவில்லை. அவரவர்க்கான எல்லைகள் மீறப்பட்டு இருக்கின்றன.

 

தனிப்பட்ட மனிதர்களின் கருத்துக்கள் அவரவர் வாழ்நிலை, சூழல்களிலிருந்து உருவாகின்றன. அதை  சுட்டிக்காட்டுவதற்கும் அல்லது அதில் தெளிவுகளை காட்டுவதற்கும் மிகுந்த பொறுமையும் நிதானமும் வேண்டியிருக்கிறது. என் கருத்து சரியானது என்பதைச் சொல்வதற்காக, இன்னொருவரை அம்மணமாக்குவதைவிட, அவரது அம்மணத்தை மறைக்க ஆடைகள் கொடுக்கும்  பக்குவம் தேவைப்படுகிறது. அறிவுக்கும், அறியாமைக்குமான இடைவெளியை இப்படித்தான் நிரப்ப முடியும் என நம்புகிறேன். (இந்த முயற்சியில் கடந்தகாலங்களில் நானும் தவறியிருக்கலாம்)

.

அதே நேரத்தில் அதிகாரத்திற்கு எதிரான, அழுகிப்போன இந்த அமைப்புக்கு எதிரான நமது கருத்துக்களில் எந்த தயவு தாட்சணயங்களும் சமரசங்களும் தேவையில்லை. நமது கருத்துக்களை முழு ஆவேசத்தோடும், துடிப்போடும் முன்வைப்போம். பீடங்களில் இருப்பவர்களின் செவிட்டில் அறைகிற மாதிரி நமது விவாதங்களை ஆயுதமாக்குவோம். அதன் பொருட்டு இந்தக் காவல்துறையோடும், யாரோடும் மோத சித்தமாவோம். கருத்து சுதந்திரத்திற்கான அர்த்தங்களை அதுதான் உலகுக்குப் புரியவைக்கும்.

 

சின்மயி சொன்ன இதே கருத்துக்களை ஜெயலலிதா சொல்லியிருந்தால்... என யோசித்துப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியலாம். புரியாதவர்கள் மயிர்பிளக்கும் விவாதங்களே செய்துகொண்டு இருப்பார்கள். மயிர்பிளக்கும் விவாதம் என திருவிளையாடலில் வரும் நக்கிரன் - சிவபெருமான் விவகாரத்தைச் சொல்கிறேன்!

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //என் கருத்து சரியானது என்பதைச் சொல்வதற்காக, இன்னொருவரை அம்மணமாக்குவதைவிட, அவரது அம்மணத்தை மறைக்க ஆடைகள் கொடுக்கும் பக்குவம் தேவைப்படுகிறது.//வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  2. விவாதம் விதண்டாவாதம் ஆகும்போதுதான் பிரச்சினை.எதிலும் எல்லைக்கோடுகள் வரையறை மீறும்போது கோபம், வெறுப்பு தூண்டப்பட்டு பலரையும் மன உளைச்சல் தாக்கும் .உளவியலில் சொல்லப்படும் 'உள்ளிழுத்துக் கொள்ளும்' சுபாவம் (withdrawal syndrome) தோன்றும். ஓரளவு சுதந்திரம் உள்ள ஆணுக்கே இப்படி நேரும்போது இரு பிரிவிலும் இருக்கும் பெண்கள் மிகவும் பலவீனமடைவார்கள். அவர்களது சமூகச் செயல்பாடுகள் சுருங்கி வற்றிவிடும் அபாயமுண்டு.

    பதிலளிநீக்கு
  3. காலம் பூராம் மயிர் பிளக்கும் விவாதங்களாய்ப் பிளந்து தள்ளியவர்கள் மயிர் பிளக்கும் விவாதங்கள் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  4. கடந்த காலங்களில், அல்லது காலம் பூராவிலும் மயிர் பிளக்கும் விவாதங்களாய்ப் பிளந்து தள்ளியவர்கள் மயிர் பிளக்கும் விவாதங்கள் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள். மயிர்களை இன்னின்னார்தான் பிளக்க வேண்டும் என்று சட்டம் இருக்கின்றதா என்ன?

    பதிலளிநீக்கு
  5. Miga sariyaga solli irukireerkal. ovvoru muraiyum vivatham thodanghumbothu ithu yenakku nionaivukku varum. nanri thozaray.

    பதிலளிநீக்கு
  6. மாதவராஜ்,

    முடியை பிளந்தீங்களோ, வெட்ட்டினீங்களோ என்னனு எனக்குத் தெரியவில்லை, உங்க நிலைப்பாடு இதில் தெளிவாக இல்லை! சொல்ல வர்ரதை தெளிவாக சத்தமாக, பச்சையாகச் சொல்லுங்கள்! ஏன் இந்தத் தயக்கம்?

    * சாரு, ஜெயமோகன், டாக்டர் ருத்ரன், மனுஷ்ய புத்திரன், மாமல்லன் எல்லாரும் தெளிவாக வெட்டு ஒண்ணு துண்டு ஒண்ணுனு சொல்லியிருக்காங்க.

    உங்க தடுமாற்றத்துக்குக் காரணம் என்னனு எனக்குப் புரியலை? வேலைப் பளுவோ? இல்லைனா பதிவுலகில் நடந்த இதேபோல் நிகழ்ச்சியா?? அதில் நீங்க எடுத்த நிலைப்பாடா?

    கருத்துச் சுதந்திரத்துக்கு வரம்பு நிச்சயம் இருக்கு. சிலர் வரம்பு மீறியதுபோல்தான் தெரிகிறது. சரி, அதற்கு தண்டனை என்ன? என்பது விவாதத்துக்குரியது.

    ஒருவர் தன்னை ஹையங்கார் என்று ஒரு பக்கம் பிதற்றிக்கொண்டு, இன்னொரு புறம் இட ஒதுக்கீட்டை தவறு என்பதுபோல் பிதற்றுவது..நிச்சயம் அரைவேக்காட்டுத்தனம்!

    அரைவேக்காடுகளை எப்படிவேணா தாக்கலாமா? என்பது மறுபடியும் விவாதத்துக்குரியது? அதற்கும் வரம்பு உண்டல்லவா?

    சாதியை விட்டுத்தள்ளுவோம்...பெண்களோடு விவாதம் செய்யும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? இல்லையா? ஏன்??? அதை எப்படி வலியுறுத்துவது? 1000 தடவை சொல்லியா? அப்படியும் கேக்கலைனா? பதிவுலகைவிட்டு பெண்கள் ஓடி ஒளிந்து கொள்ளனுமா? உங்களை மட்டும் கேட்கவில்லை! என்னை நானேவும் கேட்கிறேன். பதில் சொல்லுங்க! நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!