Type Here to Get Search Results !

“அந்த அண்ணன் நல்லா இருக்கணும்”

uma maheswari daughters

 

மாணவன் இர்பானால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களின் புதல்விகள் சங்கீதாவும், ஜனனியும்தான் இந்தப்படத்தில் இருக்கும் இரண்டு பெண்குழந்தைகள். அம்பத்தூர் புதூர் எபனேசர் பள்ளியில் இவர்கள் படித்து வருகிறார்கள். அருகில் நிற்பது அவர்களை அரவணைத்துப் பார்த்து வரும் தலைமை ஆசிரியை.

 

நேற்று அபிபுல்லா சாலை தேவர் மகாலில் நடந்த கருத்தரங்கில் வைத்து சென்னை முதுநிலை ஆசிரிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வசூலித்த ரூ.3.50 லட்சம் நிதியை இந்தக் குழந்தைகளிடம் வழங்கியிருக்கிறார்கள். நிகழ்வுக்குச் சென்று அந்தக் குழந்தைகளிடமும், தலைமை ஆசிரியையிடமும் பேசிவந்த தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அந்த நெகிழ்வுமிக்க தருணங்களை மெயிலில் பகிர்ந்திருந்தார்.

 

தலைமை ஆசிரியை அவர்களிடம், ”நீங்கள் ஒரு தாயைப் போல் அவர்களை அரவணைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்”  என எஸ்.வி.வேணுகோபாலன் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், “இவர்களைப் போல் பள்ளியில் படிக்கும் இன்னும் மூவாயிரம் குழந்தைகளுக்கும் நான் தாய்தான் சார்”  என்று சொல்லியிருக்கிறார். நிதி வழங்கும் போது மிகவும் கண் கலங்கிப் போயிருந்த உணர்ச்சிகளோடு, உமா மகேஸ்வரி இவர்கள் இருவரையும் முன்பே பொறுப்பில் கொண்டு வந்து சேர்த்துவிட்டதையும், உமா சம்பளப் பணத்தைக் கூட ஏழை மாணவர்கள்பால் இரக்கத்தோடு கொடுத்துவிட்டு மிஞ்சிய பணத்தையே வீட்டுக்குக் கொண்டு செல்பவராக இருந்ததையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

 

‘காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள்’ என்னும் புத்தகத்தை அந்தக் குழந்தைகளிடம் கொடுத்திருக்கிறார் எஸ்.வி.வி. உரையாடலின் நடுவில் "அம்மா மரணம் பெரிய அதிர்ச்சி. ஆனாலும் அந்த அண்ணன் (கத்தியால் கொன்ற மாணவன்) எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும்.." என்று சங்கீதா சொன்னதாக அந்தத் தலைமை ஆசிரியை தெரிவித்திருக்கிறார்.

 

மெயிலின் இந்தப் பகுதியைப் படித்ததும் எழுந்த கேவலை என்னால் அடக்க முடியவில்லை.

கருத்துரையிடுக

12 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. அந்த இரு பெண்களின் மனதில் ஏற்பட்டுள்ள காயம் மறக்க/மறைய நீண்ட நாட்கள் ஆகும்

  பதிலளிநீக்கு
 2. //"அம்மா மரணம் பெரிய அதிர்ச்சி. ஆனாலும் அந்த அண்ணன் (கத்தியால் கொன்ற மாணவன்) எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும்.." என்று சங்கீதா சொன்னதாக அந்தத் தலைமை ஆசிரியை தெரிவித்திருக்கிறார்.///

  மனதை நெகிழ வைத்து கண்ணிரை வரவழைத்து விட்டது. அந்த இரு குழந்தைகளுக்கும் கடவுள்தான் மனவலிமை கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. தன் வலியையும் தாண்டி தவறிழைத்தவன் பால் கருணை காட்டும் அக்குழந்தைகள் தெய்வக் குழந்தைகள்தான். காந்தியின் நிழலாய் அவர்களைக் காணத் தோன்றுகிறது.அன்னையை இழந்து வாழும் அவர்களின் எதிர்காலம் சிறக்க இறைவனிடம் ப்ரார்த்திக்கிறேன்.

  நண்பர் எஸ்.வி.வி. அவர்களைச் சந்தித்து ஆற்றுப்படுத்தியது வெறும் வார்த்தைகளோடு நின்று போய்விடும் என் போன்ற பலருக்கும் முன்மாதிரியாய் இருக்கட்டும்.

  உங்களுக்குள் எழுந்த கேவல் எனக்குள்ளும் மாதவ்.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள மாதவராஜ்
  நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். உமா மகேஸ்வரியின் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனையென்றாலும் ஆசிரிய இயக்கங்களிடம் தயங்காமல் தெரிவியுங்கள் என்று எல்லோருமே ஆறுதல் சொன்னோம். அவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை நாங்கள் தயாரித்திருந்த காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள் என்ற புத்தகம் 1000 பிரதிகள் வேண்டும் என்றார்.
  நெகிழ்ச்சியான கூட்டம்.ஆனாலும் எஸ்விவி போல எங்களால் உடனே செயலாற்ற முடிவதில்லை. பத்து தலைகளுடனும் இருபது கைகளுடனும் அவர் செயல்படுவதால் அவருக்கு ராவணன் என்று பெயர் வைத்திருக்கிறேன்.
  உங்களுடைய பதிவுகளை அவ்வப்போது பார்த்து வருகிறேன். தொடரட்டும்
  உங்கள் பணி.
  கே. ராஜு

  பதிலளிநீக்கு
 6. //"அம்மா மரணம் பெரிய அதிர்ச்சி. ஆனாலும் அந்த அண்ணன் (கத்தியால் கொன்ற மாணவன்) எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும்.."//

  இந்த வரிகளை அந்த பெண்கள் சொல்லியிருப்பார்களா? எப்படி அது சாத்தியம்? உண்மையெனில் ரொம்ப பெரிய மனது தான் அவர்களுக்கு !

  //உமா சம்பளப் பணத்தைக் கூட ஏழை மாணவர்கள்பால் இரக்கத்தோடு கொடுத்துவிட்டு மிஞ்சிய பணத்தையே வீட்டுக்குக் கொண்டு செல்பவராக இருந்ததையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.//

  இந்த வரிகளும் மிக நெகிழ்த்தின. இது அந்த மாணவனுக்கும் தெரியாமலா இருந்திருக்கும்? இவரைபோயா கொன்றான் என்கிற கேள்வி மனதை தைக்கிறது !

  பதிலளிநீக்கு
 7. உமா மகேஸ்வரி உன்னதமான ஆசிரியை. அவரினும் உயர்ந்துள்ளனர் அவர் குழந்தைகள் சங்கீதாவும், ஜனனியும். தங்கள் தாயைக் கொன்ற மாணவனைப் பற்றி சங்கீதா பேசியுள்ளது நெஞ்சை நெகிழ வைக்கிறது. ” அந்த அண்ணன் நல்லா இருக்கனும்’ என்று மனதார வாழ்த்தியுள்ளார். அவர்களை தாயினும் சாலப் பரிந்து பாதுகாக்கும் அம்பத்தூர் எபினேசர் பள்ளித் தலைமை ஆசிரியை பாரட்டுக்குரியவர் ஆவார்.-- பேரா.பெ.விஜயகுமார்.

  பதிலளிநீக்கு
 8. மாணவர்கள் இந்த சம்பவத்தை பார்த்தாவது திருந்த வேண்டும்,
  கஷ்டப்படும் அந்த சிறுமியர்கள்' உங்கள் உறவாக இருந்தால் உங்கள் மனம் எவ்வளவு வேதனை படும்,
  மாணவர்கள் என்றுமே ஆசிரியர்களுக்கு தகுந்த மரியாதையை கொடுக்க வேண்டும்'
  மாணவர்கள் படிக்கும் காலங்களில் நல்ல ஒழுக்கத்தையும் கீழ்படிதல் குணத்தையும் கடைபிடிக்க வேண்டும்
  மாணவ பருவத்தில் நீங்கள் இதை தவறவிட்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இல்லை"
  மாணவர்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை'
  தமிழ்நாட்டில் உள்ள அத்துணை பள்ளிகளிலும் உள்ள மாணவ மானவியர்கள் அந்த டீச்சர் குடும்பத்துக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளி படிப்பிற்கும், கல்லூரி படிப்பிற்கும், தங்களால் இயன்ற உதவியை " இனி என்றும் இதைபோல் ஒரு சம்பவம் எந்த பள்ளிகளிலும் நடக்காது என்றும் நல்ல ஒழுக்கத்தையும் கீழ்படிதல் குணத்தையும் கடைபிடிப்போம் என்று உறுதி மொழி எடுத்து உதவி செய்ய முன்வரவேண்டும் என்பதே எனுடைய அன்பான வேண்டுகோள்" இது நடுக்குமா ??? நடந்தால் நன்று .....

  பதிலளிநீக்கு
 9. அரக்க மனத்தையும் மன்னிக்கும் அன்பு மனம் அந்தக் குழந்தைகளுக்கு.
  "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன்னயம் செய்து விடல்."
  நாணுவானா அந்த மாணவன்?

  பதிலளிநீக்கு
 10. என்ன செய்வது...மனிதனுக்குள் விலங்கு மனம்...

  பதிலளிநீக்கு
 11. வலி மிகுந்த வார்த்தைகள்,ஈரம் கசியும் மனது,

  பதிலளிநீக்கு
 12. நானும் அந்த சொற்களின் வலியால் விம்முகிறேன். உடைகிறேன். கசிகிறேன். இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பக்குவம். இறை பக்குவம் இது. அவர்கள் வாழ்வை ஆண்டவன் ஏற்றுக்கொள்ளட்டும் இனி எந்தத் துன்பமும் நேராமல்.

  பதிலளிநீக்கு