Type Here to Get Search Results !

“ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்”

karunanidhi_jayalalitha

நாளை முதல் மின்சாரக்கட்டணம் மிகக் கடுமையாக உயர இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ டிவி வாசித்த கட்டண உயர்வு செய்திகளைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். வாழ்க்கையையே  பெரும் சுமையாகிப் போக வைத்த பெருமை ‘அன்புச் சகோதரி’ ஜெயலலிதாவுக்கே இப்போது சேரும்.

 

‘தான்  ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டை சரிசெய்வதாகவும், கருணாநிதி ஆட்சியின் அலங்கோலங்களைச் சரி செய்வதாகவும்’ இரட்டை விரல் காட்டி காட்டி ஓட்டு கேட்டார் ஜெயலலிதா. பதவிக்கு வந்தவுடன், கருணாநிதியின் பொறுப்பற்ற ஆட்சியைக் காரணம் காட்டி, பஸ்கட்டணம், பால் கட்டணம் எல்லாவற்றையும் அதிரடியாக அறிவித்தார். இதற்குப் பிறகும் என்னை சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தோற்கடித்துப் பாருங்கள் என சவால் விட்டார். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, கொடுக்க வேண்டியதைன் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றதும், மமதையில் கொக்கரித்தார் ஜெயலலிதா. அங்கே தோற்றவர்கள் கருணாநிதியல்ல, வை.கோ அல்ல, விஜய்காந்த்தும்  அல்ல. மக்களே.  கூடவே இந்த விளங்காத ஜனநாயகமும்தான்.

 

அந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அமலுக்கு வருகிறது. இப்போது  ‘கருணாநிதி எவ்வளவோ தேவலை’ என அதே வாக்காளர்கள் பேசுகிறார்கள். இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை! இப்படித்தான் கருணாநிதி தனது ஆட்சியில், ‘ஜெயலலிதா எவ்வளவோ தேவலை’ என்னும் பேரை  சம்பாதித்துக் கொடுத்தார்.  இந்த இருவரும்தான் தங்களுக்கு எதாவது செய்வார்கள் என  மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்படுத்துவதும், அழிப்பதும் கருணாநிதியும், ஜெயலலிதாவுமே. அவர்களுக்கு இது அதிகாரப் போட்டி. ஆனால் மக்கள் பணயம் வைத்து இழந்து கொண்டு இருப்பதோ தங்கள் வாழ்க்கையை.

 

இவ்வளவு சுமைகளுக்குப் பிறகும் மக்கள் தங்கள்  இருவர் மீதும் ஒட்டுமொத்தமாக கோபப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். தங்களில் யாராவது ஒருவர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிடமுடியும் என்கிற அதீத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருந்தாலும், இருவருமே மக்களின் பகைவர்கள் என ஒருபோதும் அறியப்பட மாட்டோம் என்னும் மமதையை இந்த ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலம், வேர் எல்லாம். அந்த இடத்தில் மக்கள் தங்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெடியாக வைக்க வேண்டியிருக்கிறது.

 

தமிழ்நாட்டில்  திமுக, அதிமுக என்னும் இந்த தோற்றம்தான்,  இந்தியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ், பா.ஜ.க என்னும் தோற்றமாக நீடிக்கிறது. இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் முதலாளித்துவம் புன்னகைக்கும். ஆட்சியின் பலன்களை அனுபவிக்கும். இவர்கள் அனைவருமே நாசமாய்ப் போகட்டும் என மக்கள் உணர்வதில்தான், மக்களின் காலகாலமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதற்கு அவர்கள் “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்” என முதலில் பேசத் துவங்க வேண்டும். அது, இந்த நாடு பெருமை பேசும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் நிலநடுக்கமாக இருக்கும்.

 

மக்கள் நாசமாய்ப் போவதற்கு காரணமான இவர்கள் நாசமாய்ப் போவதுதானே சரி?

கருத்துரையிடுக

16 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. அன்பு மாதவ்

  மிக நியாயமான கோபத்தில் எழுதப்பட்டிருக்கும் பதிவை நீங்கள் இடுகை செய்த சூட்டோடு வாசித்தேன்.

  நாம் வாழும் காலம் புதிய தாராளமயத்தால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பதை நீங்களும் அறிவீர்கள். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மேலும் மோசமான வடிவமான இந்தக் கொள்கையின் அமலாக்கத்தால் மேலை நாடுகளிலேயே மக்கள் உறக்கம் இழந்து வீதியில் கிடக்க, நம்மவர்கள் பலருக்கு என்ன ஏதென்றே தெரிவதில்லை.

  சூரியா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் அபத்தமான கேள்விகள் குறித்து நிறைய பேசப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அளவு கேள்விகளுக்குக் கூட படித்த இளைய தலைமுறை ஆண்களும், பெண்களும் தேர்வு செய்யும் பதில்கள் மற்றும் அவர்கள் அவற்றைச் சென்றடைய சிந்திக்கும் அணுகுமுறைகள் நம்பிக்கைகளை உடைத்துப் போடுவதாக இருக்கிறது சில நேரம். திரைப்படம் தாண்டி எந்தப் போது அறிவும் அறியாதவர்களாக, அதிக பட்சம் கிரிகெட் பற்றி மட்டுமே பேசுபவர்களாக, இலக்கியம், அரசியல், பொருளாதாரம்...போன்றவற்றை அறிந்திருக்க எந்த வாய்ப்புமே அற்ற வாழ்க்கையை விரும்பி தேர்வு செய்தவர்களாக நிறைந்திருக்கிறதா சமூகம் என்று அச்சம் சூழ்கிறது.

  பெருத்த தன்னுணர்வு, மிகக் குறுகிய வட்டத்திற்குள் வாழ்வு, பிரமிப்பற்ற உலகப் பார்வை, இயற்கையோடு கத்தரித்துக் கொண்ட சிந்தனைப் போக்கு என்பதாக மனிதர்களை உலகமயம் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். பணத்தை முன் வைக்கும் போட்டிகளுக்காக உயிரை வருத்திக் கொண்டு வந்து நிற்கிறார்கள். அற்ப நிகழ்வுகளுக்கெல்லாம் ஹூய் ஹூய் என்று அடிவயிற்றிலிருந்து கூவுகிறார்கள். தொலைக் காட்சித் தொடர்களில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். அல்லது எது குறித்தும் கவலை கொள்ளாது எங்கோ பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
  ஜனநாயகத்தின் பயன்பாடு உணர்வும், உணர்ச்சியும், தூய்மையான எண்ணமும், துணிச்சலான செயலாக்கமும், தியாகத்திற்குத் தயாரான உளவியலும் கொண்டவர்களாலேயே உறுதிப் படுத்தப் படும். வசதிக்காக வாழ்பவர்கள், அடுத்த தலைமுறை குறித்த அக்கறை அற்றவர்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். சரியாக அனுசரிக்க மாட்டார்கள்.

  மின்வெட்டு இப்போதல்ல, இரண்டு மாதங்கள் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. பஸ் கட்டணம் குறைக்க முடியாது என்று சொல்கிற திமிர் ஆட்சியாளர்கள் வசம் இருந்தது. பாலை அதிக காசு கொடுத்து வாங்கினால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டிர்கள் என்று தலையங்கம் எழுதும் பத்திரிகைகள் அரசின் பக்கம் இன்னும் இருக்கின்றன. ஆவேசமாக கண்டன இயக்கம் நடத்தும் இடத்தில் சாதாரண மக்கள் யாருக்கோ யாரோ எதுவோ செய்வதாகக் கடந்து போய்க் கொண்டே இருந்தனர். இல்லாத கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியுடையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது.

  அதற்கு எதிரான மாற்றி உருவாக்குவதில் தான் இடது சாரிகள் உறுதியான அணி சேர்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் வெற்றிடம் இருக்க முடியாது. மக்கள் ஆதரவை இழக்காத தவறான காட்சிகளை அம்பலப் படுத்துவது அத்தனை இலேசான விஷயமில்லை. அதனால் தான் மம்தா நாடகம் ஆட முடிகிறது. சசிகலா வெளியேற்றப் பட்டது மாதிரி நடித்து உள்ளே நுழைய முடிகிறது. கருணாநிதி 2G என்றால் என்ன என்று தெரியாத அப்பாவி மாதிரி பேச முடிகிறது.

  வெற்று கோபத்தைவிடவும் சாபத்தைவிடவும் மேலும் தீவிரமான விழிப்புணர்வு வேலையைத் தான் காலம் நம்மிடம் கோருகிறது. இன்னும் தேர்ச்சியான வேலையை.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 2. அந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அமலுக்கு வருகிறது. இப்போது ‘கருணாநிதி எவ்வளவோ தேவலை’ என அதே வாக்காளர்கள் பேசுகிறார்கள். இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை! இப்படித்தான் கருணாநிதி தனது ஆட்சியில், ‘ஜெயலலிதா எவ்வளவோ தேவலை’ என்னும் பேரை சம்பாதித்துக் கொடுத்தார். இந்த இருவரும்தான் தங்களுக்கு எதாவது செய்வார்கள் என மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்படுத்துவதும், அழிப்பதும் கருணாநிதியும், ஜெயலலிதாவுமே. அவர்களுக்கு இது அதிகாரப் போட்டி. ஆனால் மக்கள் பணயம் வைத்து இழந்து கொண்டு இருப்பதோ தங்கள் வாழ்க்கையை.\\ 100 % Correct, truth.

  பதிலளிநீக்கு
 3. உண்மை.நமக்குப் பல வருடங்களாக ஒரே நபர்தான் முதல்வராக இருக்கிறார். அவர் பெயர் கருணாலலிதா @ஜெயாநிதி

  பதிலளிநீக்கு
 4. அருமைத் தோழர் எஸ்.வி.வி!

  உங்களின் சிந்தனைகளின் முற்பகுதியோடு முழுமையாக ஒத்துப் போகிறேன்.நமது மனிதர்களின் அவலநிலையை வருத்தங்களோடு வெளிப்படுத்ஹ்டி இருக்கிறீர்கள். பிற்பகுதியும் சரியானவையே. சில விளக்கங்கள் மட்டும் சொல்ல வேண்டி இருக்கிறது என நினைக்கிறேன்.

  //கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியுடையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது// என்று தாங்கள் சொல்வது இரண்டு தவறான புரிதல்களை ஏற்படுத்திவிடக் கூடும். உலகத்தையே மாற்றினால்தான், இங்கு மாற்றங்கள் நிகழும் என்பதும், இதில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு எந்தப் பாத்திரமும் இல்லை, யார் வந்தாலும் இதுதான் நிலைமை என்பதுமாக அர்த்தங்கள் இருக்கின்றன. இது மக்களின் கோபத்தை, கட்டுப்படுத்தி நிதானமாக்கும் விளைவுகளையும் ஏற்படுத்தும். அது சரியாக இருக்குமா?

  அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சமெல்லாம் தேவையில்லை. இதனால்தான் கருணாநிதி விட்டால், ஜெயலலிதா, ஜெயலலிதா விட்டால் கருணாநிதி என மாரடித்துக்கொண்டு இருக்கிறோம்.இவர்கள் இருவருமே உலகமயமாக்கலை, தாராளமயமாக்கலை இங்கு அமல்படுத்துபவர்கள்தாம் என்றால்தான் மக்கள், மாற்றுகளை பற்றி யோசிப்பார்கள். இவர்கள் மீது எழும் கோபம்தான், உலகமயமாக்கலுக்கும், தாராளமயமக்கலுக்கும் எதிரான கிளர்ச்சி என்கிற தளத்தில் நாம் புரிந்துகொண்டால், நமது அரசியல் நடவடிக்கைகள் கூர்மையடையும்.

  ஜெயலலிதா ஆட்சி செய்தால் ஜெயலலிதாவை மட்டுமே நாம் விமர்சிப்போம். அதற்குமுன் அதே தப்பைச் செய்த கருணாநிதி ரொம்ப நியாயவானாக ‘கழக ஆட்சியில் என்று’ அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பார். கருணாநிதி ஆட்சி செய்தால் கருணாநிதியை மட்டுமே விமர்சிப்போம். அந்த அம்மா கொடை ரோடு பங்களா, ஆந்திர திராட்சித்தோட்டம் என ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கும். ரொம்ப நல்லவர்களாகி இருப்பார்கள். இந்த இரண்டு பேரையும் ஒன்றுபோல் விடாமல் அம்ம்பலப்படுத்துகிற அரசியலை தீவீரப்படுத்த வேண்டும். அதுமட்டும்தான் இந்த கோபத்தின் எளிமையான உள்ளடக்கம்.


  உண்மைதான்.நான் கிராமத்து மனிதனாய் நடுத்தெருவில் நின்று மண்ணள்ளி தூற்றி இருக்கிறேன். சாபமிட்டு இருக்கிறேன். இவர்கள் இருவரையுமே அப்புறப்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கம்தான் அதிலிருக்கும் அரசியல். இவர்களை அடித்தால் உலக வங்கிக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வலிக்கும். பலவீனப்படுத்தும்.

  கவனியுங்கள். நான் ஜெயலலிதா, கருணாநிதி என்று சொல்லவில்லை. ஜெயலலிதாக்கள், கருணாநிதிகள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. மாதவ் ராஜ், எஸ்.வி.வி. இருவரின் கருத்துகளும் நிதர்சனமான உண்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் இவ்வளவுகாலம் மாறி மாறி இவர்கள் ஆட்சி செய்தும் இவர்கள் செய்த அநியாயங்களை கண்டும் மக்கள் திரும்பத் திரும்ப இவர்களுக்கே ஓட்டு போட்டு வெற்றிப் பெற செய்வது தான் நாம் செய்யும் மாபெரும் தவறு.

  பதிலளிநீக்கு
 6. வெட்கங்கெட்டு போயி உங்க கம்யூனிஸ்ட்கள் கூட்டணின்னு - கோபாலபுரம் பக்கமோ, போயஸ் தோட்டம் பக்கமோ பல்லிளிச்சிட்டு வரட்டும். நாக்கை பிடுங்கற மாதிரி கேட்போம்.

  பதிலளிநீக்கு
 7. வெட்கங்கெட்டு போயி உங்க கம்யூனிஸ்ட்கள் கூட்டணின்னு - கோபாலபுரம் பக்கமோ, போயஸ் தோட்டம் பக்கமோ பல்லிளிச்சிட்டு வரட்டும். நாக்கை பிடுங்கற மாதிரி கேட்போம்.

  பதிலளிநீக்கு
 8. இருவருமே மக்களின் பகைவர்கள் என ஒருபோதும் அறியப்பட மாட்டோம் என்னும் மமதையை இந்த ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலம், வேர் எல்லாம். ////// இந்த வரிகள் அரசியல் பாரபட்சமற்று சராசரி மக்களின் மனதில் வேர்விட்டு வன்முறையாக வெடித்தால் மட்டும் சிறந்த ஜனநாயகம் சாத்தியம். ( அமைதியா போராடினா.. கூடங்குளம் நிலைமைதான்.)

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள மாதவராஜ்,
  உங்களது அனைத்து கட்டுரைகளையும் படிக்கின்றவன் என்கிற முறையில் சொல்கிறேன். தற்பொழுது வரும் கட்டுரைகள் உங்களது கோபத்தை அதிகமாக காட்டுகிறது. தீர்வை சற்று நிதானமாக ஆழ யோசித்து இடுகையில் வெளியிட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. ரொம்ப அயர்ச்சியாக இருக்கிறது.இந்த இரண்டு பீடைகளையும்
  ஒழித்துகட்ட எந்த தேவகுமாரன் வருவான்? மாதவ்ஜி.
  எந்த வளமும் இல்லாத நாடுகள் எப்போதோ சிகரம்
  தொட்டு விட்டன.ஆனால் உலகில் எங்கும் காணப்படாத
  தேசபக்தி இங்குதான் பீறிட்டு கிளம்புகிறது அதுவும் பாகிஸ்தானுக்கு
  எதிராக என்றால் கேட்கவே வேண்டாம்.இவர்கள் தேசபக்தி
  ஏன் தன் நாட்டிற்கு தேவையான ஒரு அறசீற்றமாக
  இதுவரை வெடித்து கிளம்பவில்லை.சொல்வதற்கு வருத்தமாக
  இருந்தாலும் உண்மை இதுதான்.இன்னும் ஐம்பது வருடம் தாண்டி
  உங்கள் பேரனோ என் பேரனோ எழுதிகொண்டிருப்பான்.
  என்ன அப்போது வலைப்பதிவுக்கு பதிலாக முன்னேறிய
  ஏதோ ஒன்றாக இருக்கலாம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. தலைவரே நீங்கள் அவர்களோடு தானே மாறி மாறி கூட்டணியில் இருக்கிறீர்கள் , மேலும் இது ஜெயலலிதா கருணாநிதி
  மோசம் என்ற வார்த்தையை போலி ஜனநாயகம் மோசம் , வோட்டு பொருக்கி அரசியல் மோசம் என்று போட்டுப்பாருங்கள் விடை
  கிடைக்கும். எந்த ஒரு மக்கள் போராட்டத்துக்கும் இறங்காத காங்கிரஸ் கூடங்குளம் விடயத்தில் இணைகிறது . தி மு க
  அ தி மு க காங்கிரஸ் பா ஜ கா வுடன் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைகிறதே, இதில் உள்குத்து இருக்கிறதா .மேலும் தலைவரே
  உங்கள் கட்சியில் இருந்த அ முத்து கிருஷ்ணன் கூடங்குளம் சம்பந்தமாய் புத்தகம் போட்டிருக்கிறாரே , அதை படித்துமா கூடங்குளம்
  உண்மையான விஞ்ஞான தீர்வு என்று நம்புகிறீர்கள் , இதன் பெயர் தான் விஞ்ஞான COMMUNISAMAA

  பதிலளிநீக்கு
 12. மக்கள் நாசமாகப் போக காரணமாக இருக்கும் ஜெயலலிதாவோடும், கருணாநிதியோடும் மாறி மாறி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியும் நாசமாகப் போவதுதான் நியாயம் சார்.

  பதிலளிநீக்கு
 13. All because of us, the careless citizens.

  http://surveysan.blogspot.in/2012/04/blog-post.html

  பதிலளிநீக்கு