பாரதி கிருஷ்ணகுமாருக்கு எனது வருத்தமும், வாழ்த்துக்களும்!

bk

 

இன்று காலையில் பவா செல்லத்துரை எனக்கு போன் செய்து, வம்சி புத்தக வெளியீடு பற்றிய என் பதிவில் ஒரு விமர்சனத்தை முன்வைத்தார்.  “வேலராமமூர்த்தி கதைகளைப் பற்றி  பி.கே (பாரதி கிருஷ்ணகுமார்) பேசும்போது, கதைகளைப் பற்றி பேசாவிட்டாலும், வேல ராமமூர்த்தியின் கதைகள் ஜாதீயத்தை மறுப்பவை என்றும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும் இணைந்து நடத்த வேண்டிய அரசியலை பேசுபவை என்றும் குறிப்பிட்டார். மேலும் கறிச்சோற்றை அந்த மக்களின் வாழ்வியலின் குறியீடாகத்தான் சொன்னார். தங்கள் பதிவில் அந்தத் தொனி வரவில்லை.” என்றார். என் பதிவைப் படித்தபோது என் பக்கமே தவறு இருப்பதை உணர்கிறேன். பி.கேவின் பேச்சை ஆரம்பத்தில் கேட்டேன்.  “நான் வேலாவின் கதைகளைப் பற்றி பேசப்போவதில்லை. கறிச்சோற்றைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.” என்று ஆரம்பித்து சுவையாக பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் முழுமையாக அவரது பேச்சைக் கேட்கவில்லை. அருகிலிருந்த எழுத்தாளர் ஷாஜஹான் எதோ சொல்ல , அவரிடம் பேசினேன். ஒரு போன் வந்ததும் எழுந்து வெளியே சென்று திரும்ப வந்தேன்.  அடுத்த நிகழ்வு பரிசளிப்பு என்பது குறித்த சிந்தனைகளும் ஓடிக்கொண்டு இருந்தன. எப்படியானாலும் முழு உண்மை தெரியாமல் எழுதியது தவறு. வருந்துகிறேன், பி.கே!

 

தொடர்ந்து பவாதான் இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ‘கோடி’ என்னும் சிறுகதை எழுதியதற்காக பி.கேவுக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்திருக்கிறது என்று.

 

‘எழுத வேண்டும்’ என்ற தாகம் எப்போதும் இருந்த போதிலும், தொடர்ந்த வாசிப்பும் தேர்ந்த இலக்கியப் பார்வையும் கொண்டிருந்தாலும் அவர் எழுத ஆரம்பித்தது சமீப ஆண்டுகளில்தாம். பத்துப் பதினைந்து ஆண்டுகள் பாண்டியன் கிராம வங்கியில் தொழிற்சங்கத்தைக் கட்டுவதிலும், நிர்வாகத்துக்கு எதிரான ஊழியர்களின் கோபத்தை கூர்மைப்படுத்தியதிலும்  மிக முக்கியமான பாத்திரம் வகித்தார். பிறகு, வங்கி வேலையை விட்டு விட்டு, இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து சினிமாவை அனுபவரீதியாகவும் தெரிந்து கொண்டார். ‘ராமையாவின் குடிசை’, ‘என்று தணியும்’ எனும் ஆவணப்படங்கள் எடுத்து கவனம் பெற்றார். இப்போது எழுதவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இந்த எல்லாக் காலங்களிலும் தமிழகத்தின்  ஆற்றல் மிகுந்த பேச்சாளர்களில் ஒருவர் அவர்.

 

மிக நெருக்கமாகப் பழகியதால் வருகிற விளைவு போலும். அவரோடு முரண்பட்டு சிலநேரம் பேசாமல் இருந்திருக்கிறேன். அவர் மீது எனக்கு ஏற்பட்ட விமர்சனங்களால் விலகிப் போயிருக்கிறேன். ஆனால் தொடர்ந்து அதே நிலையில் என்னால் இருக்க முடிந்ததில்லை.  அவர்தான் என் கைபிடித்து எனக்கான வழியைக் காட்டியவர் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கிறது. ‘என்னைத் தூக்கிச் சென்ற ராட்சசக் கழுகு’ என்றுதான் அம்மா அவரைப் பற்றிய அபிப்பிராயம் வைத்திருந்தார்கள். அது உண்மைதான். தறிகெட்ட என் இளமைக் காலத்தில் மிகச் சரியான நேரத்தில் அவரை சந்தித்தேன். தன் தோளில் என்னைத் தூக்கி வைத்து  அவர்தான் தொழிற்சங்கம், அரசியல், இலக்கியம் என எல்லாவற்றின் அர்த்தங்களையும் எனக்குச் சொல்லித் தந்தவர். அவர் தந்த  எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறேன்.  அவரோடு எத்தனை இடங்கள் அலைந்து திரிந்திருக்கிறேன்.

 

நான் முதல் சிறுகதை ‘மண்குடம்’ எழுதியபோது, ‘இவன் என் வளர்ப்பு’ என நெஞ்சுதட்டி பெருமைப் பட்டார். அந்தக்  கணம் எனக்கு இந்நேரத்தில் வந்து பனிக்கச் செய்கிறது. அந்த ஈரம் சொட்ட உங்கள் கைபிடித்து பாராட்டுகிறேன். “நீங்கள் என்னை ஆளாக்கியவர்” என பெருமிதம் கொள்கிறேன்.

 

எழுதுங்கள் பி.கே,  நிறைய எழுதுங்கள். உங்களிடம் சொல்வதற்கு நிறைய கதைகளும், சொல்லும் நேர்த்தியும் இருக்கின்றன.

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பாரதி கிருஷ்ணகுமாருக்கு வாழ்த்துகளை உங்கள் பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமை அண்ணே. பி.கே அவர்களின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல், உங்கள் பதிவு..

    பதிலளிநீக்கு
  3. எப்படியானாலும் முழு உண்மை தெரியாமல் எழுதியது தவறு. வருந்துகிறேன்// தன்னைத் திருத்திக்கொள்ள முனையும் ஒருவரால் மட்டுமே தரணியைத் திருத்த முடியும்! தன்னைத் திருத்திக்கொள்ளும் மனம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது! இப்படிப்பட்ட மனம் கொண்டவர்கள் //உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது// என்று நம்பினால் அந்நம்பிக்கை வீண் போகாது வாழ்த்துகள்!

    முத்துக்குட்டி

    பதிலளிநீக்கு
  4. numerology படி தன பெயரை என்று, பாரதி கிருஷ்ணகுமார் தன பெயரை மாற்றிக் கொண்டாரோ andru "ராமையாவின் குடிசை" எரிந்தது போல் எரிந்தது என் மனதும்... வேறு ஏதாவது சமாதானம் சொன்னாலும் என் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது என்றே எண்ணுகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. உங்களைப் போலவே நானும்...மாது!
    எங்கள் மாவட்டத்தில் பாரதி நூற்றாண்டு விழாவை அடுத்து, ஒரு பெரும் இலக்கிய விழா நடத்தினோம். அப்போது இங்கு வந்து சேர்ந்துவிட்ட கந்தர்வன் தான் பி.கே.யை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த விழாவிற்குத் தலைமையேற்க வேண்டிய அருணன் (என்றுதான் நினைக்கிறேன்) வரஇயலாத நிலையில் பி.கே.தலைமையேற்றார்.
    சிறுகதை - நாவல் - திரைப்படம் - நாட்டுப் புறப்பாடல் என விரிந்த தலைப்புகளில் பேச வந்தவர்கள் பேசியதை விட பி.கே. ஒவ்வொன்றைப் பற்றியும் பிரமாதமாகப் பேசியது எல்லாரையும் பரவசப் படுத்தியது, நடத்திய எங்களுக்குப் பெருமை சேர்த்தது... பிறகு ஒரு பத்தாண்டுகள் பி.கே. பித்து விட்டபாடில்லை. பிறகு... ஏனென்றே தெரியவில்லை இடைவெளி அதிகமாகிவிட்டது...
    ஓராண்டு அவர் தன் நாவுக்கு விடுமுறை விட்டபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன்!
    இப்போது பார்க்கும் இடங்களில் பரவசமாக கைகோத்துக் கொள்ளும் அன்பு மட்டும் குறையவில்லை.

    அவர் எழுத வந்திருப்பது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிதான் எனக்கும்...
    உங்களைப்போல இதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன் மாது!

    பதிலளிநீக்கு
  6. அவர் நியுமெராலஜி படி தன் பெயரை மாற்றியிருப்பார் என்று நான் நம்பவில்லை... வேறு காரணம் ஏதும் இருக்கும்.அவரிடமே கேட்கலாமே!

    பதிலளிநீக்கு
  7. the article is a honest voluntary affidavit Madhavaraj...Comrade B.K is having multy dimensional talents which are yet to come out more...

    பதிலளிநீக்கு
  8. miga nermaiyaga thannudauya ennankalai miga sariya pakirthu uleergal madavaraj thozaray.P.K vin bharathi kuritha pechukku naan adimai. arputhamana pechallar. ezutha thodankiulaathu namakku yellam makizchi. thaaan.

    பதிலளிநீக்கு
  9. "உறவுகள் பற்றி யார் மனம் நெகிழப் பேசினாலும் தாங்க முடியாத ஏதோ ஒரு உணர்வுக்குள் போய்விட நேர்கிறது " என்று எழுத்தாள‌ர் த‌மிழ்ச்செல்வ‌ன் எப்போதோ சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து. அதில் நட்பும் அடங்கும். பெரியோர் கேண்மை என்றுமே பொய்க்காது. உங்களுக்கும் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. numerology - குடிபோதையில் எல்லாம் உங்கு வந்து உளறக்கூடாது.

    1000 மேடைகளின் பாரதி யை பற்றி முழங்கியதால் அவரது பெயர் மெல்ல பாரதி கிருஷ்ணக்குமாராக மாறியது, அவரை மிக நெருக்கமாக அறிந்தவர்களுக்கு என்றும் அவர் BK தான்.

    பதிலளிநீக்கு
  11. பா.கி. அவர்களின் பேச்சாற்
    றல் போலவே அவர் எழுத்தாற்றலும்
    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் தோழர். தோழர் பாரதி கிருஷ்ணகுமாரை அருப்புக்கோட்டை பாண்டியன் வங்கியில் பணிபுரிந்ததிலிருந்து தோழர். அருணந்தி மூலம் அறிமுகம். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வாக்கிய மாலையாக கோர்ர்க்கும் வல்லமை பெற்றவர். எங்கள் இயக்கங்களில் எப்போதும்.. எங்களின் தோழராய்.. மூட்டா, அறிவியல் இயக்கம், என்று எங்களின் கூட்டங்களில் ம்னிதர்களின் மனதைதொட்டு சிகரம் சென்றவர். அவரைப்பற்றிய் தங்கள் பதிவைப் படித்ததும் நெகிழ்ந்தேன்.//"உறவுகள் பற்றி யார் மனம் நெகிழப் பேசினாலும் தாங்க முடியாத ஏதோ ஒரு உணர்வுக்குள் போய்விட நேர்கிறது " என்று எழுத்தாள‌ர் த‌மிழ்ச்செல்வ‌ன் எப்போதோ சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து// தோழர். தமிழ்செல்வன் பேசியது உள்ளம் தொடும் உணமை.. வாழ்த்துகள் தோழர் பதிவுக்கு.
    .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!