அரவான் சொதப்பியது எப்படி?

aravaan still

உயிர்பலி பற்றிய கதையென்பதால் படத்திற்கு அரவான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுபோன்று எத்தனையோ பேர் வரலாறு முழுவதும் தலை வெட்டப்பட்டு வீழ்ந்திருந்தலும்,  இந்தப் பெயர் படம் எடுத்தவர்களுக்குப் பிடித்துப் போயிருக்க வேண்டும். அல்லது இதுதான் மக்களுக்குப் பரிச்சயமான பேராக இருக்கும் என நினைத்திருக்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தமில்லை. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடக்கும் பதினெட்டு நாள் சண்டைக்காக பலியாக்கப்படுகிறான் அரவான்  என்பது மகாபாரதக் கதை. சின்னிவீரன்பட்டிக்கும் மாத்தூருக்கும் இடையே சண்டை வரக்கூடாது என்று பலியாக்கப்படுகிறான் சின்னான். இப்படி எதாவது சொல்லிக்கொள்ளலாம்.

 

படத்தின் முடிவில் ‘மரணதண்டனையை ஒழிப்போம்’ என்கிற மாதிரி ஒரு கார்டு போடுகிறார்கள். அது எதற்கு என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. இயக்குனர் வசந்தபாலனுக்கு படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை இருந்த குழப்பங்களையும் சங்கடங்களையும் சொல்லும் துப்பு அதிலிருந்து கிடைக்கிறது.

 

தனது  படுதாவை பெரிதாகவெல்லாம் விரிக்கவில்லை வசந்தபாலன். ஒரே ஒரு பாளையத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கிறார். அதில் மலைகளுக்கு அடியில்  ஒதுங்கிய குழுக்களாக வாழ்ந்த கள்ளர்களின், ஒரு  காலத்து வாழ்வை கோடிட்டுக் காட்டுவதைத் தாண்டி வேறு எதையும் செய்யத் துணியவில்லை. களவு செய்வது, அதன் மூலம் கிடைத்த அரிசி மூடைகளை வண்டிகளில் கொண்டு வந்து ஊரே பகிர்ந்துகொள்வது என ஆரம்ப காட்சிகள் மூலம் வேம்பூரின் வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிட்டு,  சின்னானைக் கொண்டு வந்து நிறுத்தும்போது, ஒரு வடிவம் கிடைக்கிறது. அன்பு, நட்பு, சந்தேகம், துரோகம், பழி, காதல், காமம் என ஊறிக்கிடக்கும் மனிதசமூகத்தின் முகங்களை காட்டக் காட்ட  ஒரு அனுபவம் கிடைக்கிறது. சரிதான். எதைச் சொல்வது எனத் தெரிந்த வசந்தபாலன் எப்படிச் சொல்வது என ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார்.

 

காவல் கோட்டம் நாவலில் புதிராக இருக்கும்  சின்னான் பற்றிய சிறுபகுதியை முடிச்சவிழ்த்துப் பார்க்கிறார்கள். ஊருக்கு வெளியே இருந்த வரும் சின்னானையும், ஊருக்குள் இருக்கும் மாயாண்டியையும் சேர்த்து வைத்து, நாவலில் துண்டு துண்டாக இருக்கும் ஜல்லிக்கட்டு, களவுக்குப் போகிறவனை ஒடவிட்டு துரத்திப் பிடிக்கும் போட்டி, பாதிக்கிணறு தாண்டி விழுந்து மாட்டிக்கொள்வது, நகைத் திருட்டு போன்ற தனித்தனி கதைகளையெல்லாம் ஒட்டவைத்து,  பாளையக்காரர் செய்யும் கொலையாக ஒன்றை உல்டா பண்ணி  கதை போலாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரான  நிலத்தையும், மனிதர்களையும் கொஞ்சமாய் கண்முன் கொண்டு வர பெரும் முயற்சி செய்திருக்கிறார்கள்.  காவல்கோட்டம் நாவலைப் படித்தவர்களுக்கு, தாதனூரை வேம்பூராக மட்டும் மாற்றவில்லையென்பது புரியும்.

 

இந்த மாற்றங்களால் கதை ஒரு சினிமாவுக்குரிய சுவாரசியம் கொண்டதாகியிருக்கிறது. வழமையான சினிமா உத்திகளுக்குள்ளும், விதிகளுக்குள்ளும் படத்தைக் கொண்டு போய்  அடைத்தும் விடுகிறது. நாவலில், பலியிடப்படும் நாள் நெருங்கவும், பொறுக்காமல் தானாகவே ஊரைவிட்டு ஓடிப் போகிறான் சின்னான். சினிமாவிலோ உண்மையான கொலையாளியைத் தேடிக்கண்டுபிடித்து கொண்டு வர முயற்சிப்பதாகவும், அப்போது அருவிக்குள் விழுந்து பாறையில் கால் மாட்டிக்கொள்வதால், பலியிடப்படும் நேரத்தில் வர முடியாமல் போவதாகவும் காட்டப்படுகிறது. அதுபோல அவனுக்காக பலியிடப்பட்டவனின் மகன் அவன் கழுத்தை வெட்டுவதாக வருகிற காட்சிக்குப் பதிலாக, சிறுவனிடமிருந்து அரிவாளை வாங்கித் தானே தலையைத் துண்டித்துக் கொள்வதாக சித்தரிக்கப்படுகிறது. நாயகன் மீது ஏற்றி வைக்கும் பிம்பங்களை விட்டொழிக்க முடியாமல் சமரசம் செய்துகொண்ட இடங்கள் இப்படி அங்கங்கே வந்து விழி பிதுங்கி நிற்கின்றன. காவல்கோட்டம் நாவலில் சு.வெங்கடேசன் எழுத்தில் மிக உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கும் இடங்களில் ஒன்று சின்னான் பலியிடப்படும் இந்தக் காட்சி. அதை அப்படியே படம் எடுக்கத் துணிந்திருந்தால் பார்வையாளர்கள் கதிகலங்கி போயிருப்பார்கள். அந்த வீரியத்தையும் படத்தில் பலிகொடுத்துவிட்டார்கள்.

 

அந்த மக்களின் தோற்றத்தோடும் கூட்டத்தோடும் கதாநாயகனாக வரும் ஆதியும், அவரது காதலியாக வரும் நடிகையும் ஒட்டவேயில்லை. அடிக்கடி பருத்திவீரன் பாணியில்  பேசுகிற வசனங்களும், உச்சரிப்புகளும் அபத்தமாக இருக்கின்றன. நிலாவை தட்டிவிடுவது, எருமை மாடுகள் கூட்டத்தோடு வருவது போன்ற கிராபிக்ஸை ரசிக்கக் கூட முடியவில்லை. படத்திற்கென்று தனியே ஒரு வண்ணத்தை காமிராவால் தீட்டமுடியவில்லை. வெயில் மற்றும் அங்காடித்தெருவில் கதையோடு இணைந்து வந்த  இசை தொலைந்து போயிருக்கிறது.  அவ்வப்போது இடி போன்று டிஜிட்டல்  ஓசையெழுப்புவதன் மூலம் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து விட்டார்கள்  போலும். ஒரு குறிப்பிட்ட காலத்தை அப்படியே பிரதிபலிக்கும் படங்களுக்குத் தேவையான கடுமையான பணியில் அரவான் படக்குழுவினர் பெரிதாக மெனக்கெடவில்லையா அல்லது காலத்தை நிலப்பரப்போடு கற்பனை செய்வதில் வந்த பஞ்சமா என்று தெரியவில்லை. அதனால் படத்தின் சில காட்சிகளை ரசிக்கிற, சில காட்சிகளில் ஒன்றிப்போகிற பார்வையாளர்கள் அனேக நேரங்களில் கடுமையாக கிண்டலும் கேலியும் செய்துகொண்டு இருக்கிறார்கள் தியேட்டரில்.

 

‘ரியலி இட்ஸ் டிஃபரண்ட் மூவி’ என  ஏழாம் அறிவு வரை பீற்றிக்கொண்டு, புளிக்க புளிக்க கதையாட்டிக்கொண்டு இருந்தவர்களுக்கு மத்தியில், வசந்தபாலன் உண்மையாகவே ஒரு மாறுபட்ட புதிய கதைவெளியை தேர்ந்தெடுத்திருக்கிறார்தான். இருளுக்குள் மங்கலாகத் துலங்கும் மனிதர்களின்   அடர்த்தியான வாழ்க்கை அது.  சரியாக படமாக்கியிருந்தால் அரவானின் தரமும், தளமும் நிச்சயம் வேறு. அற்புதமான நடிகையான அஞ்சலிக்கு  இந்த படத்தில் நேர்ந்த கதியே, இந்தப்படத்துக்கும் கடைசியில் நேர்ந்திருக்கிறது.

 

படத்தில் இரண்டு பெண் முகங்களை மறக்கவே முடியவில்லை. அந்த பாளையக்கார ராஜாவின் ராணியாக வரும் பெண் பார்வையாளனை பொறி கலங்க வைக்கிறாள். நாக்கை நீட்டிச் சுழற்றுவதில் இருக்கும் பாவனையில் காமமா வெளிப்படுகிறது. வன்மமும், பழிவாங்கும் உணர்வும் அப்படி கொப்பளிக்கிறது.   “வெட்டி மட்டுமா கொல்லலாம், விதைச்சும் கொல்லலாம்” எனும் அந்த வார்த்தைகள் கதைக்கு  வேறு பரிமாணத்தையும் கொடுக்கிறது. சொல்லப்போனால், இந்த அரவானின் கதை துவங்குற இடம் அவளிடமிருந்துதான். இன்னொரு பெண் கதையை முடித்து வைப்பவளாய் இருக்கிறாள். படத்தில் பல காட்சிகளுக்கு  பின்னணியாக மலையும் பாறைகளும் கூடவே வந்துகொண்டு இருந்தாலும், குலத்தின் வேரான ‘கருப்பன்’ சாமி கல்லாக நின்று எல்லாவற்றுக்கும் சாட்சி போல இருந்தாலும்,  கடைசியில் தன் தலையை தானே அறுத்து சின்னானும் கல்லாகிப் போனாலும், நம்மை உறைய வைப்பது  சின்னான் பலியிடப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் கல் போல சலனமற்ற அந்தப் பெண்ணின் முகம். இழப்பின் உச்சத்தில் மனிதர்கள் என்னவாகிப் போகிறார்கள் என்று அந்த முகம் எல்லா அர்த்தங்களையும் சொல்கிறது. இந்த இரண்டு பெண் முகங்களும் காட்டப்படுவது மொத்தமே நான்கைந்து நிமிடங்களுக்குள்தான் இருக்கும். படம் முழுக்க வருகிற நாயகி அப்படி நம் நினைவில் வாழ்பவளாக இல்லை. அரவானின் வரமும், சாபமும் இதுதான். 

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நாவல் வாசித்து விட்டு படம் பார்த்தால் மனம் அதனுடன் ஒப்பிட்டு கொண்டே இருக்கும். நாவல் படிக்காத என்னை போன்றோருக்கு படம் பிடிக்கவே செய்தது

    பதிலளிநீக்கு
  2. இன்று அரவான் போகலாம் என்றிருந்தேன்..முடிவை மாற்றிக்கொண்டேன்.. மாதவராஜுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. படத்தின் தலைப்பு எஸ்.ராமகிருஷ்ணனின் அரவான் நாடகத்தில் இருந்து எடுக்கபட்டது, அத்துடன் அந்த நாடகத்தை ஒரு பாட்டுடாஜ அப்படியே எடுத்துவிட்டார்கள். அடுத்து கிணற்றுக்குள் ஒளிந்து இருப்பது மிக விரிவாக நெடுங்குறுதி நாவலில் வரும் காட்சியே, அங்கே கைவைத்து இங்கே கைவைத்து கடைசியில் எஸ்.ராமகிருஷ்ணனின் மடியிலேயே கைவைத்துவிட்டார்கள் படகுழுவினர். களவு செய்.....

    பதிலளிநீக்கு
  4. எதிர் பார்க்கும் படங்கள் இப்படி சொதப்புவதும்,(அரவான்) எதிர்பார்க்காத படங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும், (அங்காடி தெரு )
    அடுத்த முறை பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  5. நாவலில் சு.வெங்கடேசன் எழுத்தில் மிக உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கும் இடங்களில் ஒன்று சின்னான் பலியிடப்படும் இந்தக் காட்சி. அதை அப்படியே படம் எடுக்கத் துணிந்திருந்தால் பார்வையாளர்கள் கதிகலங்கி போயிருப்பார்கள்.//

    இந்த ஒரே வரியில் நாவலின் சிறப்பையும், படத்தின் வீழ்ச்சியையும் பதிந்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. திரைப்படத்தின் மீது அதன் இயக்குனருக்கு இருக்க வேண்டிய எந்த ஆளுமையும் இப்படத்தில் இல்லை. சுட்டிக்காட்ட வேண்டிய பல குறைகள் இப்படத்தில் உண்டு.

    பாராட்டும்படியாகவும் மிகச்சில விஷயங்கள் இப்படத்தில் உண்டு..அதை பலர் செய்யக்கூடும் என்பதால், அதை இங்கே குறிப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.

    மற்றபடி.. ஏமாற்றத்தையும் மீறி வருத்தம் மேலோங்குகிறது.

    பதிலளிநீக்கு
  7. அரவான் கதை சொதப்பியது என்பது உண்மை' ஆனால் அதில் நடித்த ஆதி, பசுபதி , சிறந்த நடிகர்கள் "

    பதிலளிநீக்கு
  8. ’எது இருந்து என்ன பிரயோஜனம் பாஸ்.. படத்துலதான் சுத்தமா சுவாரஸ்யமும் இல்ல ஒன்னும் இல்லையே! மகா மட்டமான இசை, கேவலமான எடிட்டிங், ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத காட்சிகள், தியேட்டர்காரன் எடிட் பண்ணினதா இல்ல டைரக்டர் ஓவரா படமெடுத்து எதை வெட்டறதுனு தெரியாம வெட்டினாரானு தெரியல..

    படத்தின் முதல் பாதியில ஹீரோயின் மாதிரி ஒருபொண்ணு வருதே.. அந்த பொண்ணும் படத்தோட ஹீரோ ஆதியும் சேர்ந்து வர காட்சிகள் மொத்தமா இரண்டுதானு நினைக்கிறேன்.. திடீர் ஒருநாள் கட்டிக்கின்னா ஒன்னதான் கட்டிப்பேன் இல்லாட்டி செத்துடுவேனு சொல்லுது.. காரணம் வேணாமா பாஸு.. படம் பாக்கும்போது ஒருத்தர் யாரு சார் அந்தப்பொண்ணுனு வேற கேக்கறாரு.. அதை விடுங்க கடைசில எதுக்கு மரணதண்டனை பில்டப்பு.. பலி குடுக்கறதுக்கும் மரணதண்டனைக்கும் என்ன பாஸ் சம்பந்தம்..

    திரைக்கதைக்கு வருவோம்.. இது ஆதியோட கதையா? இல்ல பசுபதியோட கதையா? இல்ல இரண்டுபேத்தோட கதையா? இல்ல வரலாற்றோட ஒருபகுதியா? எந்தக்கதைய முழுசா சொல்றதுனு ஒரே குழப்பத்தோடயே படமெடுத்திருப்பார் போல வசந்தபாலன்! அதனால எதையும் முழுசாவும் சொல்லாம , எல்லா கதையையும் மென்னு முழுங்கிருக்காப்ல.. இரண்டாம் பகுதில வர துப்பறியற சீன்லாம் எதுக்குனே தெரியல.. அதுவும் காவலில் சிறந்த ஊருக்குள்ள ராஜாவே புகுந்து கொலையெல்லாம் செஞ்சிட்டு போயிடறாராம் யாருக்குமே தெரியலையாம்? என்னங்க லாஜிக்கு! பத்து வருஷம் மறைஞ்சி வாழறவன் கொள்ளையடிச்சி வாழ்வானாம் அதுவும் ராஜாகொள்ளையாம்ல..

    அட ஆர்ட் டைரக்சன் பிரமாதம்னு சொல்றாங்களே.. நாலு குடிசையும் இரண்டு செட்டிநாட்டு வீடும்தான் ஆர்ட் டைரக்சனா? ஏன்ங்க் இப்படிலாம் கடுப்பேத்தறீங்க.. பில்லா படத்துல அஜித்து நடந்துகிட்டே இருப்பாரே அதே மாதிரி இந்தப்படத்துல ஏன் எல்லாரும் காரணமேயில்லாம ஓடிகிட்டே இருக்காங்க..

    அப்போகலிப்டோ படம் மாதிரி ஒரு படம் எடுக்கணும்ங்கற ஆசை புரியுது.. அதுக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன்னால வரைக்கும் கூட தமிழர்கள் அப்போகலிப்டோல வர ஆதிவாசிங்க மாதிரி இருந்தாங்கன்னு காட்றதெல்லாம் அநியாயம். படத்தோட பல காட்சிகள் அபோகலிப்டோலயும் வருது.. கிளைமாக்ஸும் மெல்ஜிப்சனோட பேஷன் ஆப்தி கிரைஸ்ட் மாதிரியே.. நம்ம ஹீரோவும் சிலுவையெல்லாம் சொமக்குறாரு.. எதுக்குன்னே தெரியல.. இதுமாதிரி ஓட்டைகள் இன்னும் நிறைய இருக்கு.. கதைக்கு சம்பந்தமேயில்லாத இரண்டு மூணு காதல்கள், ஆதிக்கும் பசுபதிக்குமான நட்பு ஆழமேயில்லாம மொன்னையாக இருப்பதுனு நிறைய இருக்கு பேச..

    இதெல்லாம் பார்த்து யாரும் படத்தை ரசிக்கறதில்லைதான். ஆனா இதையெல்லாம் பாக்கதவன் எதிர்பார்க்கிற அடிப்படையான விஷயம்.. சுவாரஸ்யம். அதுதான் இல்லையே! அதுக்கு பிறகுதான பாஸ் மத்த எல்லாமே..’’

    முழு விமர்சனத்தையும் படியுங்களேன்
    http://www.athishaonline.com/2012/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. மாதவராஜ்,

    வணக்கம்,

    நீங்கள் காவல் கோட்டதினையும் அலசியவர், அரவானையும் அலசியர் என்பதால் முழு விவரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும், இரண்டு படைப்புகளும் உண்மையான வரலாற்றினைப்பேசுகிறதா? கள்ளர்களே காவல் உரிமைக்கொண்ட சமுகத்தினரா? இல்லை எல்லாம் முக்குலத்தோர் இனக்குழு என்பதால் பொதுவாக எல்லாவற்றையும் கள்ளர் இனக்குழுவுக்கு சூடி புனையப்பட்டதா? அப்படி எனில் எப்படி 10 ஆண்டு ஆய்வு,வரலாறு என சொல்லிக்கொள்ள முடியும்.

    அரவான்,காவல் கோட்டம் வரலாற்றைப்பேசுகின்றதா?

    பதிலளிநீக்கு
  10. அரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு

    அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு

    http://www.tamilhindu.com/2012/03/aravaan-film-review/

    பதிலளிநீக்கு
  11. நேர்மையான விமர்சனம்...

    http://www.malartharu.org/

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!