சினிமா: தோனி

Dhoni-Tamil-Movie

 

எஸ்.வி.வேணுகோபாலன்

நேற்று இரவு எதிர்பாராமல் ஒரு திரைப்படத்திற்கு எனது குடும்பத்தோடு செல்ல நேர்ந்தது. பிரகாஷ் ராஜ் முதன்முதல் இயக்குநர் பொறுப்பேற்றுத் தாயரித்து வழங்கியிருக்கும் தோனி படம் அது. இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்தும் அந்தப் படம் என்னை மேலும் உணர்ச்சிமயமான சிந்தனைக்குள் சுழல வைத்துவிட்டது.

 

அமீர்கானின் தாரே ஜமீன் பர், டிஸ்லெக்சியா என்ற கற்பதில் சிரமம் எதிர்கொள்ளும் பிரச்சனையை உருக்கமாகக் கையாண்டது. த்ரீ இடியட்ஸ், (இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டு மறு உருவாக்கமாக வந்திருக்கும் நண்பன்) நட்பின் மகோன்னத வலைப்பின்னலின் பின்புலத்தில் கல்வி முறையின் அபத்தங்கள் குறித்து நையாண்டி செய்திருக்கிறது.   தோனி சமகாலத்தில் பெற்றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணுகுமுறை குறித்துச் சாட்டையடியாக விவாதங்களை முன்வைக்கிறது.

 

பதினேழாம் வாய்ப்பாடு தெரியாது. இரண்டு பக்க அறிவியல் பாடத்தை எந்தக் காலத்திலும் மனப்பாடம் செய்ய முடியாது. ஒரு பாடத்திலும் பாஸ் மார்க் கூட அல்ல, ஒற்றை இலக்கத்திற்கு மேல் மார்க் வாங்க இயலாது. இப்படியான மாணவனை ஒன்பதாம் வகுப்பு வரை அரசு விதிகளின் படி தாங்கிவந்த பள்ளிக் கூடம் அதற்குமேல் படி ஏறாவிட்டால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பாஸ் சதவீதத்தைக் குறைத்து பள்ளியின் பெருமையைச் சிதைத்து அடுத்தடுத்து புதிய மாணவர் சேர்ப்பு விகிதத்திலும் கை வைத்து விடும் அபாயம் உண்டு என்பதால் பெற்றோர் அவர்களாகப் பையனை ஒன்பாதம் வகுப்பிலேயே பையனைத் தங்க வைத்துவிட விண்ணப்பம் கொடுக்க வேண்டும் அல்லது டி சி வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு ஓடிவிட வேண்டும். ஏன் என்றால் அவன் மண்டு, மடையன், முட்டாள், படிப்பு ஏறாத ஜடம்....

 

அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக்கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப்பிலேயே சொல்லி இருப்பது மாதிரி அவன் தோனியின் தீவிர பக்தன். கிரிக்கெட் அவனது உயிர். அபாரமான ஆட்ட நாயகனாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அவனது விளையாட்டுத் திறமை பற்றி கிரிக்கெட் கோச் என்ன சத்தியம் செய்தாலும் அதைக் கேட்பதற்கான காதுகள் கல்வித் திட்டத்தில் இல்லை. அதன் வழி மூளையை வடிவமைத்து விட்ட பள்ளி முதல்வருக்கோ, வகுப்பு ஆசிரியருக்கோ இல்லை. மனைவியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசுப் பணியில் இருந்து கொண்டே ஓவர் டைம் வேலையும், வீட்டில் ஊறுகாய் தயாரித்து பாட்டில்களில் அடித்துத் தெருத்தெருவாய் அலைந்து விற்றபடி வருவாயையும், தனது உளவியல் விடுதலையையும் தேடியபடி அல்லும் பகலும் அலையும் தந்தைக்கும் பிடிபடுவதில்லை.  டியூஷன் உலகமும் ஏற்கெனவே படிப்பில் மின்னுபவர்களுக்கே கை கொடுத்து தூக்கிவிடும் எந்திரபுரியாகவும், எழுந்து நடக்க முடியாதவர்களுக்குப் பழக்கித் தரும் சரணாலயம் இல்லை என்றும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டியாதாக இருக்கிறது.

 

மகனின் கல்வி வேட்டைக்கு ஒருபுறமும், தங்கை வீட்டு விசேஷம் போன்ற திடீர் செலவுகளுக்கு மறுபுறமும், இடையே வயதுக்கு வந்துவிடும் மகளின் சடங்குச் செலவுகளுக்காகவும்...நிரந்தரமாகவே கந்துவட்டிக்காரனின் தயவிற்கும், துரத்தலுக்கும் இடையே நிம்மதியற்றுத் துடிக்கும் நாள் ஒன்றில் நடந்துவிடும் அதிர்ச்சி நிகழ்வில் பெற்ற மகனையே தந்தை அடிக்கும் அடியில் தரையில் விழுந்து ஏற்படும் காயத்தில் கோமா நிலைக்குப் போய்விடும் மகன், அதுவரை கோமா நிலையில் இருக்கும் தந்தையையும் கல்வி உலகத்தையும் சமூகத்தையும் உலுக்கி எழுப்புவது தான் தோனி திரைப்படம்....

 

குழந்தைக்குப் பிடித்த துறையில் அவனுக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்ட இடம் தராது அவனை எதற்கும் உதவாதவனாகப் பட்டம் சுமத்த நாம் யார் என்பது தான் மையக் கேள்வி. தன்னை ஓரளவு புரிந்து கொண்டு தனக்கு உதவி செய்யும் தங்கையோடு கணிதம் கற்கும் முயற்சியில் பதினேழாம் வாய்ப்பாடு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா என்று அவள் பொறுமை இழந்து கேட்பதும், தனக்கு கணக்கு தெரியாது கிரிகெட் தெரியும் என்று கோபமாகப் பேசத் தொடங்கும் அந்தச் சிறுவன் கிரிகெட் நாயகன் தோனியின் சாதனை மைல் கற்களின் துல்லியமான புள்ளிவிவரங்களையும், கிரிகெட் ஆட்டக் களம், பந்தின் சுற்றளவு, மட்டையின அதிகப்படி நீளம், இன்ன பிற அடிப்படை கணக்குகளையும் இமை மூடித் திறக்கும் நேரத்தில் சரமாரியாக மனத்திலிருந்து எடுத்துக் கொட்டுவதும், நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்று நிறுத்துவதும் அதிர வைத்துக் கண்ணீரைப் பெருக்கும் இடம்.

 

படம் கல்வியை மட்டுமல்ல, விலைவாசி உள்ளிட்ட வேறு சில பிரச்சனைகளையும், இது எது பற்றியும் வெறும் புலம்பல் மட்டும் செய்துவிட்டுப் பொது வெளியில் குரல் கொடுக்காது தனது அன்றாடத்தில் உழலும் நடுத்தர வர்க்கம் பற்றியும் அற்புதமாக விமர்சனம் செய்கிறது. எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வந்தால் சந்திக்க வேண்டிய தாக்குதலையும் ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்கிறது. ஆனால் தொடர் போராட்டத்திற்கான சாதகமான விளைவுகள் குறித்த நம்பிக்கையையும் முன்வைக்கிறது.

 

நில அபகரிப்பு முதற்கொண்டு கம்ப்யூட்டரையும் டி வி யையும் விலைகள் குறைத்து காய்கறி விலையை உயர்த்திக் கொண்டிருக்கும் மோசமான பொருளாதாரக் கொள்கை வரை நடப்பு கால விஷயங்கள் வசனங்களில் கூராகத் தெறிக்கிறது. இன்னிக்கு என்ன டிபன் என்று கேட்கும் மகனுக்கு FRIED இட்லி என்று சொல்லும் அப்பன், மிஞ்சி இருக்கும் இட்லியை வைத்து இட்லி உப்புமா செஞ்சுட்டு ஸ்டைலா பேரு வேறையா என்று மகன், ஆமா வித விதமா டிபன் சாப்பிடனும்னா அம்பானி வீட்டில் பிறந்திருக்கணும் - இது தந்தை, நீங்க அம்பானியா ஆனப்புறம் எங்களைப் பெத்திருக்கணும் என்று மகன் சொல்லும் இடமும்,  சின்ன ஸ்கூட்டி வாகனத்தில் இரண்டு வளர்ந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் இடத்தில், உட்கார்ந்துட்டியா என்று தந்தை கேட்கும் கேள்விக்கு மகன் நின்னுட்டியா அப்படீனு கேளு, எங்கே உக்கார என்று சொல்வதும்....இப்படியாக நடுத்தர வாழ்க்கையின் அன்றாடத் தடுமாற்றங்களை ரசமாக சித்தரிக்கிறது படம்.

 

பிரகாஷ் ராஜ் (சுப்பிரமணி என்கிற சுப்பு பாத்திரம்) ஓர் உணர்ச்சி ஜீவி. கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சியை அவர் அபியும் நானும் படத்திலேயே வெளிப்படுத்தியவர். இதிலும் அதே தன்மைகள் உண்டு. ஆனால் தோனி படம் அதை மன்னித்து அவரது நடிப்பை மதிக்கவே தூண்டுகிறது. கிரிகெட் விளையாட்டில் உயிரை வைத்திருக்கும் மகன் வேடத்தில் ஆகாஷ் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் தங்கையாக வரும் ஸ்ரீ ஜா நடிப்பு நிறைய எதிர்பார்புகளை வழங்குகிறது. ராதிகா ஆப்தே, வாழ்க்கையின் போக்கில் உடலை முன்வைத்துக் குடும்பத்தை நகர்த்த வேண்டிய துரதிருஷ்ட இளம் பெண் (நளினி) வேடத்தில் (அது அத்தனை காத்திரமாக நிறுவப்படவில்லை என்றாலும்..) மிக அருமையாக நடித்திருக்கிறார். சுப்பு-நளினி சந்திப்புகள் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பின்புலத்தில் வெவ்வேறு உணர்வுகளின் தளத்தில் படம் முழுக்க சிறப்பாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. கிரிகெட் கோச் வேடத்தில் நாசருக்கு வாய்ப்பு குறைவு. அதற்கு நிறைவான பங்களிப்பு. நா முத்துக்குமார் எழுத்தில் 'வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்ல,  பட்டப் படிப்புக்கும் பாக்குற வேலைக்கும் சம்பந்தமில்ல' என்கிற பாடல் எஸ் பி பி குரலில் பிரபுதேவா நடிப்பில் கவனம் ஈர்க்கிறது. இந்த இடத்தில் முத்துக்குமார் பற்றியும் சொல்லத் தூண்டுகிறது. தமிழ் ஆர்வத்தில் சிறுவயதில் இருந்தே கதையும் கவிதையும் எழுதி வளர்ந்தவரை அவரது விருப்பபடி எம் ஏ தமிழ் படிக்கும் வரை அனுமதிக்கும் அவரது தந்தை அதற்குப் பிறகு மூன்று லட்ச ரூபாய் சம்பளத்தில் அமெரிக்காவில் கிடைக்கும் வேலையையும் மறுத்துக் கொண்டு  திரை உலகில் நுழையவே விரும்பும் அவரது வேட்கைக்கும் தடை போடாது ஏற்பது வரை அவரது வாழ்வில் அவருக்குத் திறக்கப்பட்ட வெளிச்ச வாசல் இந்தப் படத்தின் கதையோடு பொருத்திப் பார்க்கத் தக்கது.  படம் நெடுக இளையராஜா பின்னணி இசை முக்கியமானது.

 

அதிக உணர்ச்சிமய கொந்தளிப்பு, ஊரை அடித்து உலையில் போடும் கந்துவட்டிக்காரன் மனசாட்சி உள்ளவனாகவும் காட்சி தருவது போன்ற சினிமாத் தனம், கிளைமாக்சில் வலிய ஓர் அதிரடி கிரிகெட் சாதனை போன்ற நெருடல்களைக் கழற்றி தூர வைத்துவிடலாம். படம் அதற்கு அப்பால் மிக அடிப்படையாகச் சில கேள்விகளைப் பார்வையாளர் முன் வைக்கிறது. சமூக கோபத்தை விசிறுகிறது.  அதை உணர்ச்சிவயப் பின்புலத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருந்தாலும் சிந்தனைகளைத் தூண்டித்தான் விடை பெறுகிறது.

 

கல்வி முறை, ஆசிரியர்-மாணவர் உறவு, பெற்றோர் கடமை, சமூகத்தின் பொறுப்பு என அனைத்தையும் இன்று விவாதிக்க வைத்திருப்பது ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களது குரூர மரணம். தனது பாதுகாவலனே தனக்கு எதிராகத் துப்பாக்கி தூக்குவான் என்று எந்தக் காலத்திலும் எதிர்பார்த்திராத மிரட்சியோடு க்யா கர் ரஹே ஹோ என்று கடைசி சொற்களை உதிர்த்தபடி மரணத்தைத் தழுவினார் பிரதமர் இந்திரா காந்தி. அதைவிடவும் அதிர்ச்சியாக தான் சொந்தப் பொறுப்பில் தவறு இழைக்காத ஆனால் சூழலின் வெப்பக் குவி மையமாக ஆக்கப்பட்டு நின்ற இடத்தில் தமது மரணத்தை சந்தித்திருக்கிறார் உமா. உமா மரணம் நிகழ்ந்த அதே தினத்தில் பல்லாவரம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாளில் டான் பாஸ்கோ மாணவர் ஒருவர். நாலாம் நாள் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்திருக்கிறார். தற்கொலைகள் தனி மனித, தனிக் குடும்ப சோகமாகவும், பரிதாபப் பார்வையைத் தாண்டி வேறு யாரும் அதற்குப் பொறுப்பில்லை போலவும் பழகிப் போகிற அளவு பொது புத்தி கட்டமைத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் கொலை அதிர்ச்சியுற வைக்கிறது. கோணங்கள் தவறான மூலையில் இருந்தும் கூட வைக்கப் படுகின்றன.

 

ஒரு மாணவனின் தோல்வி அவனது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்றும், சமூகத்தின் பொறுப்பு என்ன என்பதையும் சொல்லும் இடித்ததில் தோனி திரைப்படம் இப்போதைய தமிழக கல்விச் சூழலில், மேற்படி அதிர்ச்சி நிகழ்வின் பின்புலத்தில் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக உருப்பெறுகிறது. பார்க்கவும், விவாதிக்கப்படவும் முக்கிய கருப்பொருளையும் நமது கையில் வைக்கிறது.

 

த செ ஞானவேல், பிரகாஷ் ராஜ் கூட்டு உழைப்பு கதை, வசனத்தில் முக்கிய பாராட்டுக்கு உரியது. விஜய் டி வி பிரபல நிகழ்ச்சியான நீயா நானா மேடையை திரைக்கதை அழகாக பயன்படுத்துகிறது. கோபிநாத் பாராட்டுக்குரியவர்.

 

மேடை நாடகம் போன்ற வசனக் கத்தல்கள், வழக்கமான முறையில் செல்லாத திரைக்கதை போன்றவற்றை பலவீனமாக நினைப்பவர்கள் மதிப்பெண்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் படம் மதிப்பெண்களுக்கு எதிரானது.

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமை விமர்சனம் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. "பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம். ஆனால் பள்ளிப் படிப்பில் உள்ள பிள்ளைகளுக்கு உகந்த படமாகத் தெரியவில்லை.

    ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எங்கள் பாப்பாவிடம் 17 x 8 எவ்வளவு என்று கேட்டேன். அவள் சத்தமாக, 8 x 10 = 80; 8 x 7 = 56; 80 + 56 = 136 என்றாள். (இவள் படிக்கும் பள்ளியில், பத்தாம் வாய்பாடு வரைக்கும் அதுவும் 10 x 10 = 100 வரைக்கும்தான் போதிக்கப் படுகிறது.) இந்தப் படம் இவளுக்கு எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கிவிட்டால் என்ன செய்வது என்கிற கவலை எனக்குள் எழாமல் இல்லை.

    ஆனால் இது சினிமாக் காரர்களின் ஈகோவுக்குப் பொருத்தமான படம். படிப்பறிவால் அல்ல, திறமைகளால் பிழைப்பவர்கள் அவர்கள். 'வெளிச்சொல்ல முடியாத சம்பாத்தியம் அல்ல, பிள்ளைகளைச் சிறந்த பள்ளிகளில் படிக்க வைக்கிறோம் என்பதே மதிக்கப்பட வேண்டியது' என்பதும் அவர்களுக்குப் பொருந்த வருவதுதான்.

    'படிக்கிற பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்; படிக்காத பிள்ளைகளை வேறு திறமைகளில் பழக்குங்கள்' என்றாவது தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா? கல்வியாளர்கள் அப்படி என்றால் திறமைசாலிகள் (சினிமாக் காரர்கள்) இப்படி! முயலுக்கு மூணுகாலுதான்."

    மேலே உள்ள்து கேபிள் சங்கர் எழுதிய "தோனி" விமர்சனத்துக்கு என்னால் இடப்பட்ட பின்னூட்டம்.

    சூழ்நிலையைப் பற்றிப் பேசுவதுபோல் ஆனால் 'தனித் திறமை', 'தனிமனிதனாகவே போராடி வெல்லுதல்' என்றிப்படி, ஈசாப்பின் 'சிங்கம் x எருதுகள்' கதையில் எருதுகளைப் பிரிக்கும் தந்திரம் ஓதப் படுகிறது.

    நாயகன் (பிரகாஷ் ராஜ்) முதல்வரிடம், கல்வி வியாபாரமாக்கப் பட்டிருப்பதற்காகப் பொங்கவில்லை; கற்பிக்கும் முறை பற்றி மட்டுமே நொந்துகொள்கிறான்.(கல்வி வியாபாரமாக்கப் பட்டதினால்தானே கற்பிக்கும் முறை இப்படித் திரிந்திருக்கிறது - இல்லையா?)

    ஒன்றாம் வகுப்பில் இருந்தே சிறப்புக் கல்வி சாத்தியமா தெரியவில்லை. பொதுக்கல்வி ஒரு குழந்தைக்கு எத்தனை வயதுவரை கட்டாயம் என்பதிலும் எனக்குத் தெளிவில்லை.

    பதிலளிநீக்கு
  3. by publishing S.V.VENUGOPALAN article you have shown your broad mind and encouraging best things

    பதிலளிநீக்கு
  4. தோனி படம் பார்த்தேன். நறுக் வசனங்கள் இனிய இசை நா. முத்துக் குமாரின் சிந்தனையைத் தூண்டும் பாடல்கள் பிரகாஷின் நடிப்பு

    எல்லாமே அருமை. சில சினிமாத் தனங்கள் இருப்பினும் அண்மைக் காலத்தில் ஒன்றிப் பார்த்த படம். பாராட்டுக்கள். தோழர் எஸ்.வி.

    வியின் விமரிசனம் உடன் படம் பார்க்கத் தூண்டியது. மராத்தியப் படைப்பு தமிழாக்கம் செய்யப் பட்டிருந்தாலும் தோனி வெற்றி பெற

    வாழ்த்துக்கள்.----ஆர்.எஸ்.மணி.

    பதிலளிநீக்கு
  5. தமிழில் ஒரு நல்ல படம் வந்து, அதைப் பற்றி கேட்கும் போது , மிக பெருமையாத இருக்கிறது.

    நடுநிலை விமரிசனமும் மெருகூட்டுகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தோழர் மாதவ்

    உங்களது அன்பு மிக்க இடுகை எப்போதும் போல் நன்றி கெழுமிய வணக்கத்திற்குரியது..

    வருகை தருவோர், கருத்திடுவோர் அனைவருக்கும் நன்றி..

    ராஜா சுந்தரராஜன் சார் சில கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
    கல்வி முறை பற்றிய விவாதத்தை சமூகம் நடத்த வேண்டும். தனி மனிதராக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடி வாங்கிய தந்தையின் எதிர்வினையை அதற்குரிய வெளிப்பாடுகளோடு படம் வழங்குகிறது. அதீதமாகப் பேசினால் நாமே நகர்ந்து போய்விடுவோம்.
    நடுத்தர வர்க்கத்தின் பல ஊசலாட்டங்கள், இரட்டைத் தன்மை, தனக்கென்று வரும்போது துடிப்பது, தான் மட்டும் கரையேறிவிட முடியும் என நம்புவது....இவற்றை மிகப் பெரிய அளவில் இயல்பிலிருந்து சிதைக்காமல் இந்தப் படம் எடுத்து வைக்கிறது.

    உனக்கு வேலை மீண்டும் தரப்படும், கடன் கொடுக்கப்படும் என்று முதல்வர் சொன்னவுடன் பிரகாஷ்ராஜ் சமாதானம் அடைந்து விடுவதில்லை...

    கல்வி முறையில் அடிப்படையில் தவறுகளைச் சரி செய்யாவிட்டால் தன்னைப் போலவே பாதிப்புறும் மற்றவர்களுக்கு நியாயம் கிடையாது என்று பதில் சொல்வது படத்தின் ஆக்கக் கூறு.

    கல்வி முறை, பாட திட்டம், ஆசிரியர் மாணவர் உறவு, பள்ளி நடத்தப் படும் விதம் என நுணுக்கமான செய்திகளை வசனங்கள் கவனித்துக் கொள்ளவே செய்திருக்கின்றன. நன்கொடை, அதீத கட்டணம், யூனிஃபாரம், புத்தகங்கள், ஷூ எல்லாவற்றையும் தாமே மாணவர்களுக்கு வழங்கத் துடிக்கும் தனியார் பள்ளிகளின் கொள்ளையை தோனி அழகாக இடித்துரைக்கிறது.

    நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு பெறும் பிரகாஷ் ராஜ், தங்களது பிரச்சனைகளுக்குப் போராடும் ஆசிரியர்கள், கல்வி முறை மாற்றப்படவேண்டும் என்று இப்போதாவது வேலை நிறுத்தம் செய்ததுண்டா என்று கேட்பது அற்புதமான அரசியல் கேள்வி..

    பள்ளி பிள்ளை, கல்லூரி பிள்ளை என்பதில்லை, இத்தகு படங்களுக்குப் பெற்றோர் குடும்பமாகவே பார்த்து விவாதிப்பது ஆரோக்கியமான உறவுகளை சமூகத்தில் உருவாக்கும்.
    சில குறைபாடுகள் படத்தில் உண்டு..பளிச் என்று தெரியும் அளவுக்கு உண்டு..
    ஆனால் அதை மனிக்கவேண்டிய அளவு இந்தப் படம் சமூகப் பிரச்சனையை அற்புதமாகக் கையாள்கிறது..

    நன்றி மாதவ்

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  7. yen magan intha padathai partuvittu appa neenga avasiyam intha padathai parkka vendum yendu valiurthy ullan. svv yin yezthu yennai udan parkka thoondukirathu.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!