ஜெயமோகன் செய்யும் அரசியலும், சு.வெங்கடேசன் செய்யத் தவறிய அரசியலும் - 2

venkatesan1

 

இந்த விவாதங்கள் அலுப்பூட்டுகிறது என்றும், தேவையற்றது என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள். பரவாயில்லை. நாவலைப் படிக்காமல் இருந்தால் நானும் இதுபோலவே கருத்தைக் கொண்டு இருப்பேன். பிரக்ஞையற்றவர்கள் பாக்கியவான்கள்! இருப்பினும் சுருக்கமாகவும், இறுதியாகவும் இப்படி சொல்லி முடிக்கிறேன்.

 

காவல் கோட்டம் நாவல் குறித்த விமர்சனங்களில்  பொதுவான அம்சங்களாக சில காணப்படுகின்றன.

 

1. அதிகமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனதில் பதியும் கதாபாத்திரங்கள் ஒன்றிரண்டே. தொகுக்கப்பட்ட ஆவணங்களும், கதையாடல்களும் தனித்தனியாகவே இருக்கின்றன. ஒரு இயல்பான சித்திரத்தை எழுப்ப முடியவில்லை. காட்சிகளாக சொல்லப்படுகிற கதைகளில் மன ஓட்டங்கள் இல்லை. இவைகளின் மூலம் ஒரு தெளிவு கிடைக்கிறது. அது, நாவலில் உயிரோட்டம் இல்லை என்பதே.

 

2. நாவல்களில் கள்ளர் பற்றிய சித்திரம், அவர்களின் பார்வையிலேயே இருக்கிறது. மற்ற சமூகங்களின் கருத்துக்களும் , மன ஒட்டங்களும் இல்லை. மதுரையின் வரலாறு என்றாலும், கள்ளர் வரலாறு என்றாலும் சொல்லப்படாத விஷயங்கள் பல இருக்கின்றன. இதனால் நாவல் முழுமையானதாக இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது.

 

3. அடுத்தது நாவலின் மொழி. உரையாடல்கள் மிகச் சரியாகவும், நேர்த்தியாகவும் கையாளப்பட்டு இருக்கின்றன (எஸ்.ராஅவுக்கு இதிலும் உடன்பாடில்லை). ஆங்காங்கே சில இடங்கள் ரசிக்கும்படியாக இருப்பினும் பொதுவாக  நாவலில் வருணனையாக வரும் புனைவு மொழி வலிந்து வலிந்து எழுதப்பட்டதாகக்  காணப்படுகிறது. அது நாவலோடு இணைந்து, இயைந்தும் இல்லை. தனியாக எழுத்தாளரின் குரலாக ஒலிக்கிறது. எனவே நாவலில் பொதுவான குரலே இல்லை.

 

இனி முரண்பாடான விஷயங்களைப் பார்ப்போம்.

 

1. எஸ்.ராமகிருஷ்ணன், இந்த நாவலின் பல பகுதிகள் அப்படியே  ‘கட்டிங் அண்ட் பேஸ்டிங்’ என சொல்கிறார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிடுகிறார். இதுகுறித்து வெங்கடேசனும், வக்காலத்து வாங்கும் இன்ன பிறரும்    எங்கேயும் மறுத்ததாகத் தெரியவில்லை. பெத்தானியபுரம் முருகானந்தமும்  இதைத்தான் முதன்மைப்படுத்துகிறார். நாவல் எழுதுவதற்கு உத்வேகமளித்த தனது துணைவியார், குழந்தைகள் என அனைத்து உறவினர்களின் பெயர்களையும் மறக்காமல் குறிப்பிட முடிகிறது சு.வெங்கடேசனுக்கு. அதேவேளையில், ஒரு வரலாற்று நாவலுக்கான ஆதார மனிதர்களையும், நூல்களையும், குறிப்புகளையும் சொல்லாமல் விட்டது பெரும் தவறு. அது  படைப்பாளியின் நேர்மையும் ஆகாது. அந்த வகையில் காலத்தின் முன்னே படைப்பாளி தலைகுனிந்தேயாக வேண்டும்.

 

2. ஜெயமோகனோ, ஒரு வரலாற்று நாவலுக்கு தகவல்களும், சொல் நுட்பங்களுமே முக்கியமானவை என்கிறார்.  இந்த நாவலில் தகவல்கள் முழுமையாக இல்லை. சொல் நுட்பங்களும் சரியாக இல்லை. ஆனாலும் இதனை  ‘நல்ல நாவல், ஆனால் மகத்தான நாவல் இல்லை’ என்கிறார். வழக்கம் போல அவரது தெளிவின்மையும், அரசியலும் நமக்குப் புரிகிறது. அவர் நேர்மையற்றவர் என்பதை அறிய  அவரது ஐந்து பாக விமர்சனங்களைப் படித்தால் போதும். தமிழினியின் நாவல் என்கிற விசுவாசமே அவரை இது நல்ல நாவல் எனச் சொல்ல வைக்கிறது. அதே நேரம் பிராமணர்களை இந்த நாவல் கேலி செய்வதை அவரால் தாங்க முடியவில்லை. கிறித்துவ மிஷனரிக்கு நாவலில் ஒரு மனித முகத்தைக் கொடுப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவைகளை வெளிப்படையாக அவரது விமர்சனங்களில் வைக்கிறார். மகத்தான நாவல் எனச் சொல்ல முடியாமல் போவதற்கு இவைகளே காரணம்.  அவரது ‘இந்துத்துவா அரசியலை’ காவல் கோட்டத்திலும் நுழைக்கிறார்.

 

3. என்னைப் பொறுத்த வரையில், இந்த நாவல் உருவத்தில் பலவீனமாக இருக்கிறது. உள்ளடக்கத்தில் மோசமாக உள்ளது. மதுரையின் வரலாற்றில் அன்றும், இன்றுமாக இருக்கும் இரு  ஆதிக்க சக்திகளின் வரலாற்றையே  பேசுகிறது. காவியப்படுத்துகிறது. நாயக்கர் மற்றும்  கள்ளர் சமூகங்களின் வரலாறே, மதுரையின் வரலாறு என்று பதிவு செய்கிறது. இதர சமூகங்கள் எதோ துணுக்குச் செய்திகளாக வருகின்றன. தலித் சமூகம் அதற்கான இருப்பை இந்த நாவலில் ஏறத்தாழ இழந்தே போகிறது. அரசியல் தெளிவும், இடதுசாரி சித்தாந்தமும் கொண்ட ஒரு எழுத்தாளர்  எழுதியிருப்பதால்தான் இவ்வளவு தீவீரமான விசாரணைக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. ‘தடித்த உங்கள் இதிகாசங்களில் எந்தப் பக்கம் எங்கள் வாழ்க்கை?’ என்னும் ஆதவன் தீட்சண்யாவின் கேள்விக்கு , சு.வெங்கடேசனால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது. அந்த மௌனம் கசப்பாகவே இருக்கும்.

 

பத்து வருடம் உழைப்பு என்பதும், ஆயிரம் பக்கங்கள் என்பது மட்டுமே பிரமிக்கக் கூடிய விஷயங்கள் அல்ல! உண்மையும், நேர்மையும் அதைவிட பிரமிப்பானது. பிரம்மாண்டமானது.

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உங்களுக்கெல்லாம் ஜெயமோகன் மீது ஏன் தான் இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை?.
    அவர் காவல்கோட்ட விமர்சனத்தை நன்றாக தான் செய்து இருக்கிறார்.

    அ.சேஷகிரி

    பதிலளிநீக்கு
  2. உயிர்மை விமர்சனமே எழுத மறுத்து புறம் தள்ளியதை ஏன் யாருமே சுட்டிக்காட்ட வில்லை?

    பதிலளிநீக்கு
  3. அட எல்லா பத்திரிக்கையு விமர்சனம் எழுதவில்லை என்றால் அதன் அதன் ஆசிடியர் தலையில் துப்பாகியை வைப்பீர்கள் போல இருக்கே kasampattysuresh

    பதிலளிநீக்கு
  4. இந்த நாவலை தூக்கிபிடிக்க ஜெயமோகன் வரும் போதே திருவிளையாடல் புராணத்தில் தருமி மாட்டிக் கொண்டதும் எழுதிக் கொடுத்தவரே மண்டபத்திற்கு வரும் காட்சி தான் தோழர்கள் அனைவருக்கும் இங்கு ஞாபகம் வந்தது.

    இதனுடம் கிராம கோவில் பூசாரிகள் மாநாடு, சிறு தெய்வங்களுக்கு குட முழுக்கு விழா, சிறு தெய்வ கோவில்களுக்கு பார்பன பூசாரிகள் முதல் ஜாதிய வரலாறுகள் எழுதுவது வரை இதை எல்லா கடந்து 20 வருடங்களாக யார் செய்கிறார்கள் என்ற அரசியலை புரிந்துகொள்வதும் அவசியமானது.

    பதிலளிநீக்கு
  5. நண்பர்களே உங்களது கருத்துக்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.நான் வலைத்தமிழ் என்ற இணையதளத்தில் சிலகட்டுரைகளை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி http://www.valaitamil.com/spiritual-astrology-subcategory20-62-0.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!