வேடிக்கை கதைகள் - 1

snake painting print

இந்த சம்பவத்தை சத்தமாய் பேசிக்கொள்ள முடியாது. கொஞ்சம்  இறங்கிய குரல் தேவை. அப்படியேதான் நாங்கள் இப்போதும் பேசிக்கொள்கிறோம். முக்கியமாக அழகப்பனைப் பார்க்கிற சமயங்களிலெல்லாம் எங்கள் உரையாடலில் கண்டிப்பாக இடம்பெறும்.  அப்படி அவனுடைய நினைவோடு கலந்து விட்டிருக்கிறது.  .

 

அழகப்பனுக்கு காரைக்குடி சொந்த  ஊர். வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள்தான் கொடி கட்டும். என்ன இடம், பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. சூனா, பூனால்லாம் தங்கு தடையில்லாமல் வரும். ‘யப்பா, கொஞ்சம் பாத்துப் பேசு..” என்று சொன்னால் போதும்  “போடா மயிரு. இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்..”என மேலும் சத்தமாய் ஆரம்பிப்பான். சொன்னவருக்குத்தான் நாடியறுந்து போகும். அவனுக்கு இயல்பே அதுதான். முகம் சுளித்தாலும், அவன் பேச்சுக்கும், கதைக்கும் ஒரு தனி ரசிகக் கூட்டமே இருந்தது.

 

சாத்தூரில் பிரம்மச்சாரிகளாய் நான், காமராஜ், ஜீவா, பெருமாள்சாமி தங்கியிருந்த  அறைக்கு ஒருநாள் வந்து சேர்ந்தான். வங்கியில் கடைநிலை ஊழியர் அவன். ஆள் ஒரு தெனாவெட்டாய் இருப்பான். அதை திருட்டு முழி என்று சொல்ல முடியாது. ஆனால் கண்கள் நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். கிராமத்து வழக்கும், சொலவடைகளுமாய் ததும்பும் அவன் மொழிதான் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அலுவலகம் விட்ட பிறகு ஒன்றாகவே அரட்டையடித்துக் கிடப்போம். சினிமா, பஜார் என கூடவே அலைந்து திரிவோம்.  எங்கும் நிலையாகத் தங்க முடியாமல் கடைசியாக நாங்கள் எல்லோரும் சங்க அலுவலகம் போய்ச் சேர்ந்தோம்.

 

பாரதி கிருஷ்ணகுமார்தான் அப்போது எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். மின்சாரம் இல்லாத ஒருநாள் இரவில்  சங்க உறுப்பினர் ஒருவருக்கு எழுத வேண்டிய கடிதத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய மேஜையின் ஒருபுறத்தில் உட்கார்ந்து கிருஷ்ணகுமார் டிக்டேட் செய்ய, எதிர்ப்புறத்தில்   நான் எழுதிக்கொண்டு இருந்தேன். அழகப்பனும், ஜீவாவும் அடுத்த அறையில் படுத்து பேசிக்கொண்டு இருந்தனர். பெருமாள்சாமி எங்களுக்குக் கொஞ்சம் தள்ளி வாசலில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

 

“தனக்குத் தனக்குன்னா புடுக்குக் கூட எறங்கி களை வெட்டும்” என்று அழகப்பன் சொன்னது எங்களுக்கும் கேட்டது.  “அழகப்பா!” எனக் கத்தி கிருஷ்ணகுமார் பலமாகச் சிரித்தார். எல்லோரும் “அது எப்படி, அது எப்படி..” என கேட்டுச் சிரிக்க, குஷியாகிப் போனான் அழகப்பன்.  “பொல்லாத வேளைன்னா பூளு கூடப் பாம்பாயிரும்” என அடுத்த வெடியை வைத்தான். ஹோவென பெரும் இரைச்சலோடு சிரித்தோம். கிருஷ்ணகுமாருக்கு கண்ணில் நீரே வந்துவிட்டது. மெல்ல அடங்கிப் போக ஒரு அமைதி இறங்கியது.

 

சரியாக அந்த நேரம் பெருமாள்சாமி “இது என்ன..” என தலை உயர்த்தி மங்கிய வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்து, “யம்மாடி உண்மையிலேயே பாம்பு!” எனக் கத்தினான். நான் துள்ளி எழ, கிருஷ்ணகுமார் மெழுகுவர்த்தியை எடுத்து, அருகில் போய் உயரத்தில் வைத்துப் பார்க்க, பாம்புதான்! நெளிந்து கதவுக்குப் பின்னால் சென்றது. ஜீவாவும், அழகப்பனும் பாய்ந்து வந்தனர். பக்கத்து அறையில் இருந்து டார்ச் லைட் வாங்கி வந்து, கம்பு தேடி,  ஆள் ஆளுக்காய் “அங்க,”, “இங்க” எனக் கத்தி, ஒடி ,  அடித்து முடித்தோம்.

 

அழகப்பன்தான் பாம்பின் வாலைப் பிடித்துத் தூக்கினான். வெளியே கொண்டு போடப் போனவன் எதோ யோசித்தவனாய் திரும்பி எங்களைப் பார்த்து, “அது சரி. எல்லோரும் தூக்கிக் காட்டுங்க. யாருக்கு பொல்லாத வேளைன்னு பாக்கணும்” என்றான். பத்தாயிரம் சர வெடி அது.

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அவர் முதலில் அவிழ்த்துக் காட்டிவிட்டு, அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்னா, அது லட்சம் சரவெடியாப் போயிருக்கும்!:)) நல்ல [வேடிக்கைக்] கதை! தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  2. அழகப்பன்' ஒரு " அழகப்பா உனிவேர்சிட்டி தான் " அருமையான காரைக்குடி தக்காளி சட்னி தான்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!