வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகளும், வாழ்த்துக்களும்!

சற்றுமுன் வம்சி பதிப்பகத்தின் சார்பில் சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. (நடுவர்கள்: எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பிரபஞ்சன், தமிழ்நதி)
முதல் பரிசுக்குரிய சிறுகதை: (பரிசுத் தொகை ரூ.10000)
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப்
இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைகள்: (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.5000/-)
1.இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்
2. யுகபுருஷன் – அப்பாதுரை
தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (ஒவ்வொன்றுக்கும் பரிசுத் தொகை ரூ.1000/- வீதம்)
1.படுதா - போகன்
2.சுனை நீர் – ராகவன்
3.உயிர்க்கொடி - யாழன் ஆதி
4,அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
5.பெருநகர சர்ப்பம் - நிலா ரசிகன்
6.கொடலு - ஆடுமாடு
7.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
8.பம்பரம் - க.பாலாசி
9.அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
10.முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்
11.கல்தூண் - லதாமகன்
12.கருத்தப்பசு - சே.குமார்
13.மரம்,செடி,மலை - அதிஷா
14.அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
15.வார்த்தைகள் - ஹேமா
இந்த சிறுகதைத் தொகுப்பிற்கு முதல் பரிசு பெற்ற கதையான “காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்” என்ற பெயரே வைக்கப்படுகிறது. தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாக வம்சி பதிப்பகத்தின் சார்பில் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் புத்தக வெளியீடு நடத்தி அதில் பரிசுத்தொகை வழங்குவதற்கு திட்டம் இருக்கிறது. அதுகுறித்து வம்சி பதிப்பகத்திலிருந்து, வெற்றிபெற்ற பதிவுலக எழுத்தாளர்களுக்கு மெயில் அனுப்பப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வம்சி சிறுகதைப் போட்டி மற்றும் குடும்ப நூலகம்

“வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள் என்ன ஆச்சு?”. தொலைபேசிகள், பின்னூட்டங்கள், தனி மடல்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் பதிலுக்கு பவா.செல்லத்துரையையும், அவரது துணைவியார் ஷைலஜா அவர்களையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
“பொறுங்க தோழர், நடுவர் குழுவில் நாஞ்சில் நாடனுக்கும், பிரபஞ்சனுக்கும் அனுப்பி வைத்துவிட்டோம். தமிழ்நதி அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. விரைவில் அனுப்பி வைத்துவிடுகிறோம்”
“நாஞ்சில் நாடன் காரைக்குடி பக்கம் ஷூட்டிங் சம்பந்தமாக இருக்கிறார். வர சில நாட்கள் ஆகுமாம்.”
“பிரபஞ்சன் இன்னும் சில கதைகள் மட்டுமே படிக்க வேண்டியிருக்கிறதாம். ஓரிரு நாட்களில் அவரது முடிவைச் சொல்லிவிடுவார்.”
”தமிழ்நதிக்கு தாமதமாக அனுப்ப முடிந்தது. விரைவில் படித்துவிட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.”
“நாஞ்சில் நாடன் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்.”
“பிரபஞ்சனும் படித்துவிட்டு முடிவுகள் சொல்லிவிட்டார்”
இப்படியே தொடர்ந்த உரையாடல்களின் கடைசியாக இன்று காலை வம்சி பதிப்பத்தின் சார்பில் ஷைலஜா அவர்கள், ”நாளை தமிழ்நதி முடிவுகள் சொல்லி விடுவார். புத்தாண்டுச் செய்தியாக அறிவித்துவிடலாம்” எனச் சொன்னார். கொஞ்சம் தைரியமாக தீராத பக்கங்களின் பக்கம் வந்திருக்கிறேன்.
நண்பர்களே, மன்னியுங்கள். இந்த சிறுகதைப் போட்டியில் அறிவித்த தேதிக்கு ஒரு மாதம் கழித்துத்தான் முடிவு சொல்கிற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. தொகுப்பிற்கான கதைகள் ஒரளவுக்கு முடிவு செய்து அச்சுக்கு அனுப்பக் கூடிய நிலையில் இருப்பதாகவும், தமிழ்நதி அவர்கள் முடிவுகள் தெரிவித்தவுடன் இறுதி செய்துவிடலாம் எனவும், நிச்சயம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தொகுப்பை கொண்டு வந்துவிட முடியும் எனவும் பவா.செல்லத்துரை இப்போதும் உத்திரவாதம் கொடுத்திருக்கிறார். எழுத்தாளர்கள் பிரபஞ்சனும், நாஞ்சில்நாடனும் அறிவித்த முடிவுகளைக் கேட்டேன். சொல்ல முடியாது, அதை வம்சி இறுதி செய்தபிறகே சொல்வோம் என்று சிரிக்கிறார். ஆனால் பிரபஞ்சனும், நாஞ்சில் நாடனும் முதலிரண்டு கதைகளை ஒன்றுபோல் சொல்லியிருக்கிறார்கள் என ஆச்சரியமாகச் சொன்னார்.
நண்பர்களே இன்னும் ஒருநாள் பொறுத்துக்கொள்ளுங்கள் முடிவுகளுக்காக. உங்களோடு நானும் காத்து இருக்கிறேன்.
பாரதி புத்தகாலயம் சார்பில் குடும்ப நூலகம் என ஒரு திட்டம் யோசிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கொரு நூலகம் அமைப்பதற்கான ஆரோக்கியமான சிந்தனையுடன் இது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறைந்த பணம் செலுத்தி, அதிக தள்ளுபடியில் உங்களுக்குத் தேவையான எவ்வகையானப் புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.100 செலுத்தி குடும்ப நூலகத்தின் உறுப்பினராகுங்கள்.
ரூ.2000/- செலுத்தி ரூ.3000/- மதிப்புள்ள புத்தகங்களையும்,
ரூ.5000/- செலுத்தி ரூ.8000/- மதிப்புள்ள புத்தகங்களையும்
ரூ.12000/- செலுத்தி ரூ.20000/- மதிப்புள்ள புத்தகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
அணுகுவீர்:
பாரதி புத்தகாலயம்
421,அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை- 18
தொலைபேசி: 044- 24332424 / 24332924
ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்றும் புதிது!
அடிக்கடி நான் வாசிக்கும் புத்தகங்களில் ஒன்று “the greatest works of kahlil Gibran". கலீல் கிப்ரான் எப்போதும் மிக நெருக்கமானவராக இருக்கிறார். கவிதைகளாய், சொற்சித்திரங்களாய் அவர் தரும் காட்சிகள் நமக்குள் காலவெளிகளைத் தாண்டி விரிகின்றன. அங்கே வாழ்வின் தத்துவங்ளும், உண்மைகளும் கனிந்து கிடக்கின்றன. அவை எப்போதும் அன்றலர்ந்ததாக இருக்கின்றன. நமக்குள் நிறைந்திருக்கும் புதிர்களை அவிழ்க்கின்றன. இதையெல்லாம் கலீல்கிப்ரான் யாருக்குச் சொல்கிறார், எதற்குச் சொல்கிறார் என்ற கேள்விகள் நமக்குள் எழுந்தால், இலக்கியத்தின் மேன்மை தெரிய வரும்.
ஒருவரியில் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளைத் தாண்டிச் சொல்லும் இந்த இரு சொற்சித்திரங்களை நான் பலமுறை வாசித்திருந்தாலும், ஒவ்வொரு தடவையும் அவை புதிய செய்திகளைச் சொல்கின்றன. இதற்கு விளக்கம் அளிப்பது கலீல் கிப்ரானையும், இலக்கியத்தையும் அவமரியாதைச் செய்வதாகும்.
(1)
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டை வீட்டுக்காரன் என்னிடம், “துயரம் மிகுந்ததாகவும், வெறுமை நிறைந்ததாகவும் இருப்பதால், நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்” என்றான்.
நேற்று, இடுகாடு வழியாகச் செல்லும்போது அவனது கல்லறை மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.
(2)
ரொம்ப காலத்துக்கு முன்னால், எல்லோரையும் நேசித்ததாலும், எல்லோராலும் நேசிக்கப்பட்டதாலும் அந்த மனிதனை சிலுவையில் அறைந்தார்கள்.
நேற்று அவனை மிக விநோதமாக மூன்று தருணங்களில் பார்த்தேன்.
முதல் தடவை, ஒரு போலீஸ்காரனிடம், ஒரு விபச்சாரியை சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேண்டிக்கொண்டு இருந்தான். இரண்டாவது சமயம், எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவனோடு உட்கார்ந்து மதுவருந்திக்கொண்டு இருந்தான். மூன்றாவதாக ஒரு தேவாலயத்தில் உணவுக்காக அதை வழங்குபவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
சு.வெங்கடேசனுக்கு சாகித்திய அகாதமி விருது!
எனது நெருங்கிய நண்பரும், எங்கள் இயக்கத்தின் தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமாகிய சு.வெங்கடேசனுக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அவர் எழுதிய ஒரே நாவலும், முதல் நாவலுமான ‘காவல் கோட்டத்திற்கு’ இந்த விருது கிடைத்திருக்கிறது. சந்தோஷம்தான். சி.பி.எம் கட்சி, எழுத்தாளர் சங்கம், எங்களைப் போன்ற அவரது நண்பர்கள் இதுகுறித்து பெருமிதமும், புளகாங்கிதமும் அடையும் இந்த நேரத்தில் பணிவோடு சில விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்களை பகிர்வதற்கு முன்பு சில விஷயங்களை மனந்திறந்து பேச வேண்டியிருக்கிறது.
வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற தமிழ் இலக்கிய உலகின் வசீகரமான பரப்பில் சு.வெங்கடேசனோடு நம்மையும் சேர்த்து ஆட்கொண்டவர்களுக்கு இந்த விருது இன்னும் கிடைக்கவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் படைத்த நாவல்களையும், இலக்கிய படைப்புகளையும் தாண்டி சு.வெங்கடேசனுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. ‘ஆழி சூழ் உலகு’ , ‘கொற்கை’ படைத்த ஜே.டி.குருஸும் ‘மீன்காரத்தெரு’, ‘கருத்த லெப்பை’ போன்ற அற்புதமான நாவல்களைப் படைத்த ஜாகீர் ராஜாவும் காத்திருக்கிறார்கள். இவர்கள் எனக்குத் தெரிந்த ஆளுமைகள். இன்னும் இது போல பலரைச் சொல்லலாம். இவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்திய அரசின் இலக்கிய பீட விருதுகளில் ஒன்று சு.வெங்கடேசனுக்கு கிடைத்திருக்கிறது.
சென்றமுறை எழுத்தாளர். நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோது அவர் இதனை சொல்லாமல் சொல்லி, தமிழுக்கு இன்னும் இருபத்தைந்து பேருக்காவது விருது கொடுக்க வேண்டும் என்றார். தோழர். சு.வெங்கடேசனும் அந்த உண்மையையும், பண்பையும் இச்சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். அதுதான் தமிழ் இலக்கிய உலகிற்கும், படைப்பாளிகளுக்கும் அவர் செய்கிற மரியாதை.
அந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி, உங்களையும் வாழ்த்துகிறேன், வெங்கடேசன்!
யார் நல்லவர், யார் கெட்டவர்?
நாற்காலிக்கு மிக நெருக்கமாக யாரும் சுற்றி வரக் கூடாது என்பது ஆட்டத்தின் கணக்கு. நாற்காலியை விட்டுத் தள்ளிப் போய் சுற்றக் கூடாது என்று ஆட்டக்காரர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றுபோல ஒரே பாதையில் அவர்கள் வட்டமாக சுற்றிச் சுற்றி வருகிறார்கள். யாவரும் தத்தம் இடைவெளிகளில் கவனமாயிருக்கின்றனர்.
யாரும் யாரையும் தள்ளிவிடக் கூடாது என்பது ஆட்டத்தின் ஒழுக்கம். தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதில் ஒவ்வொரு ஆட்டக்காரனும் எச்சரிக்கையாயிருக்கிறான். பாட்டு நின்று நாற்காலியை நோக்கிப் பாயும் வேகத்தில், யாராவது ஒருவன் கீழே விழுந்து யாரோ ஒருவர் தன்னை தள்ளிவிட்டதாக எப்போதும் சொல்கிறான். அந்தக் குரலுக்கு அவகாசம் கொடுக்காமல் பாட்டு மீண்டும் ஆரம்பித்துவிடுகிறது.
யாரையாவது ஒருவனை வெளியேற்ற வேண்டும் என்பது ஆட்டத்தின் விதி. காதில் பாட்டும், கண்ணில் நாற்காலியுமாக சுற்றிக்கொண்டு இருக்கும் அவர்கள் நெஞ்சில் எப்படியாவது தனக்கு ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே முழுக்க நிறைந்திருக்கிறது. யாரிடமும் மற்றவர்களுக்கான இடம் துளியும் இல்லை.
ஒரே ஒரு நாற்காலியில் யார் உட்காருகிறார் என்பதே ஆட்டத்தின் முடிவு. தமக்கான ஆட்டக்காரனை அடையாளம் கண்டபடி சுற்றி நிற்கும் கூட்டம் பிரிந்து பிரிந்து கிடக்கிறது. யார் வெற்றி பெறுவார், யார் தோற்பார் என அலைமோதிக் கொள்கிறது.
இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் யாரறிவார்?
பாதை தெரியுது பார்!
திங்கள் அன்று காலை தீக்கதிரின் முதல் பக்கத்தில் பார்த்த அந்தப் புகைப்படம் நிறைய சிந்தனைகளைக் கிளர்த்திப் பரவசம் கொள்ள வைத்தது.. சாலையில் ஒரு பெண் கைப் பையோடு நடக்கிறார். அதில் என்ன புதிதாய் என்று எடுத்துக் கொள்ள முடியாத அருங்காட்சி அது. அவர் எங்கே, எந்தப் பின்னணியில் இப்படி நடக்க நேர்ந்தது என்பது தான் அந்தப் படத்தின் அழகைக் கூட்டுவது. சொல்லப் போனால் அந்தப் படம் ஏன், இன்னும் கூடப் பெரிதாய் செய்தித் தாளின் ஆறு பத்திகளையாவது அடைத்துக் கொண்டு இடம் பெற்றிருக்கக் கூடாது என்று கூடத் தோன்றியது. சங்ககிரி அருகே சந்நியாசிப்பட்டி கிராமத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து இடிக்கப் பட்ட தீண்டாமைச் சுவர்....என்ற குறிப்புடன் வந்திருக்கும் இந்தப் புகைப்படத்தில், இன்னும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் தீண்டாமை வெளியில் - நொறுக்கப்பட்ட கற்குவியல்களைக் கடந்து அந்தப் பெண் நடக்கும் திசையில் அவரை வரவேற்கும் வெயில் சுடர்விட்டுத் துலக்கமாகத் தெரியவும் செய்கிறது.
சுவர் இடிக்கப் பட்ட இடம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி என்றாலும், அது திறந்து வைத்த பாதையில் இதுவரை இடித்துத் தகர்க்கப்பட்ட சுவர்களின் கதையும், இனி அப்படியான கட்டுமானத்திற்கு எதிரான விழிப்புணர்வுக்கும் உறுதிக்குமான பிரகடனங்களும் சேர்ந்தே வெளிப்படுகின்றன.
உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வின் போது மதுரை மாவட்ட முன்னணிச் செயல்வீரர்களின் கண்களில் பட்டது. தீக்கதிரிலும், ஹிண்டு நாளேட்டிலும் செய்தி வெடித்தது. சுவர் மீது மின்சாரக் கம்பிகளை நட்டவர்களுக்கே 'ஷாக்' அடிக்கும் வண்ணம் கொதித்தெழுந்தது போராட்டம். வழக்கம்போல் தொடர் பேச்சுவார்த்தைச் சுழலில் சோர்வடையவைத்து விஷயத்தைத் தானாக மரித்துப் போக விடச் செய்வதில் வல்லவராக இருந்த ஆட்சியாளர்களையும், அதிகார வர்க்கத்தையும் அதிர வைக்கும் முனைப்போடு போராட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரவும், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் சுவர் அது செல்ல வேண்டிய கதிக்குக் கொண்டு சேர்க்கப் படும் என்று அறிவிக்கப் படவும் தட தட என்று ஒரு பகுதிச் சுவரை இடித்துத் தள்ளுகிற வேலையை மாவட்ட நிர்வாகம் செய்து முடித்தது.
சுவர் இடிப்பு ஒரு பெரிய சாதனை என்று நாம் சொல்லிக் கொள்ளவில்லை. அவமானத்தின் சின்னம் தகர்க்கப்பட்டதை அடையாளபூர்வமாக அங்கீகரிக்கவே கேட்டுக் கொண்டோம். சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறுக்குச் சுவர் என்பது எத்தனை வன்மம் நிறைந்தது என்பதை அம்பலப் படுத்திய இயக்கத்தையும், அது உடைத்தெறியப்படுவது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உரக்க எடுத்துச் சொன்னோம். துரதிருஷ்டவசமாக ஒரு சில வட்டாரங்களில் இருந்து இது ஒரு பெரிய வேலையா என்ற மிகுந்த ஏளனப் பார்வையோடும், ஆலய நுழைவு-தீண்டாமைச் சுவர் இடிப்பு...இதெல்லாம் இந்தக் காலத்திற்கான செயல் திட்டங்களா என்ற நிராகரிப்போடும், இதனால் எல்லாம் சாதியம் ஒழிந்து விடுமா என்ற கொச்சையான கேள்வியோடும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன.
சுவர் ஓரிடத்தில் அல்ல, ஒரு மாவட்டத்தில் மட்டிலுமல்ல....என தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு சாதியவாதிகள் ஊர் ஊராய் வைத்திருந்த வேலைகள் ஒவ்வொன்றாக பொதுமக்கள் பார்வைக்குத் தெரியவந்தன.....அது இன்னதென்று தெரியாதிருந்த தலித் மக்களும் தாமாகவே அதன் பிறகு அப்படியான தடுப்பு அரண்களை அவர்களாகப் பின்னர் ஒரு கட்டத்தில் கண்டு பிடிக்கவும், அகற்றியாக வேண்டும் என்று குரல் கொடுக்கவும் தொடங்கினார்கள்.
திருச்சி எடமலைப் பட்டி புதூர், சேலம் ஆட்டையம்பட்டி, வேலூர், துரைப்பாடி இரும்பு கேட், சேலம், மகாத்மா காந்தி நகர், கோவை பெரியார் நகர், கோவை நாகராஜபுரம்............என இதுவரை இடிபட்ட சுவர்களின் வரிசையில் தற்போது புதிதாகக் கட்டிய மாத்திரத்தில் அடையாளம் கண்டு இடிக்கப்பட்ட சுவராய்ப் போனது சங்ககிரி சன்னியாசிப்பட்டி சுவர்.
எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் சண்டிகார் அருகே ஒரு சிற்றூரில் இருக்கும் நாடறிந்த பெரிய பொதுத் துறை வங்கி ஒன்றின் மேலாளர் எழுதியிருந்த கடிதம் வந்திருந்தது. அவரது கிளையின் கடை நிலை ஊழியர் ஒன்பது முறை வீடு மாற்ற முடிந்திருக்கும் அந்த ஊரில், தன்னால் ஒரே ஒரு வீட்டில் கூடக் குடியேற முடியவில்லை என்றும், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்றும் குமுறி வெடித்திருந்தார் அவர். இட மாற்றலில் சென்னைக்கு வந்த எனது நண்பர் ஒருவர், புதிய இடத்தில் மதிய உணவு நேரத்தின் போது தாம் கொண்டு வந்திருந்த உருளைக் கிழங்குக் கறியை ஆசையோடு வாங்கிக் கொண்ட சக ஊழியர் ஒருவர், பிறகு யாரோ சாடையால் இவரது சாதியை உணர்த்தியத்தில் அருவருத்துப் பின்னர் தான் பாராதவாறு அதைக் குப்பைக் கூடையில் கவிழ்த்துவிட்டுப் போனதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு காலமான எழுத்தாளர் ஆர் சூடாமணி அவர்களின் "நெருப்பு" என்ற அருமையான சிறுகதையில் தனது மகனின் நண்பனே ஆனாலும், தன்னால் தனது வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வாலிபன் அந்த வீடு எரியும்போது உட்புகுந்து தனது பேரக் குழந்தையின் உயிரைக் காப்பதான நிலையில் உளவியல் அதிர்ச்சிக்குள்ளாகும் பெரியவர் ஒருவரின் சாதியத் தீ பேசப்படும். அந்த இடத்தில் அவர் இப்படி உணர்வதாக சூடாமணி எழுதியிருப்பார்: "என்னுள் நேர்ந்த இந்த மன மாற்றம் யாரும் அறியாமல் இரவில் மடலவிழும் பூவாய் இருப்பதில் என்ன பிரயோசனம், எல்லோரும் அறியும் வண்ணம் ஓர் ஓவியச் செயலால் இந்த உலகுக்கு நான் உணர்த்த வேண்டாமா.." பின்னர் அவர் அவனை தமது இல்லத்தில் தம்மருகே உட்கார்ந்து உணவுண்ணச் சொல்லும்போது, வட மாநிலம் ஒன்றில், தாழ்த்தப்பட்ட ஒருவர் தவறான புகாரை முன்வைத்து மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட செய்தியைக் காட்டி விட்டு அந்த வாலிபன் நகர்வதாக முடியும் அந்தக் கதை.
விதவிதமான வடிவங்களில் இன்னும் தொடரும் தீண்டாமை, தீண்டாமையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அடிப்படை வருணாசிரம ஏற்பாடு, ஏகாதிபத்திய உலகமயத்தின் நெருப்பில் எரிந்து விடாத பக்குவத் தொலைவில் இருந்து கொண்டு சொகுசாகக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் நிலவுடைமை சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறை இன்னவற்றுக்கு எதிரான போராட்டம் பல வடிவங்களில், பல முனைகளில், பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப் பட வேண்டியதாகிறது. கண்ணுக்குத் தெரியும் சுவர்களை அதிகாரத்தின் எதிரே நின்று தகர்த்தெறிய நடக்கும் போராட்டங்கள் ஒரு புறம். மனிதர்களின் மரபணுக்குள் வளைக்கமுடியாத கம்பிகளின் வலுவோடு எழும்பி நிற்கும் சாதியச் சுவர்களை இடிப்பது எத்தனை சவாலான வேலை என்பதையும் அன்றாட வாழ்க்கை நமக்குக் கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
முதல் மனிதனாக, நிலவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்டிராங், தான் சாதாரணமாய் எடுத்து வைத்த ஓரடி அது, ஆனால் மனிதகுலத்திற்கு ஒரு அசுரப் பாய்ச்சல் என்று வருணித்தார். சன்னியாசிப்பட்டி சுவர் நொறுக்கப்பட்டு விரியும் பாதையில் இந்தப் பெண்மணி நடப்பதும் அப்படித் தான். அது அவருக்கு சாதாரண ஒரு நடை தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் கம்பீரத்தோடு எடுத்துவைக்கும் வெற்றி நடை அது.
- எஸ்.வி.வேணுகோபாலன்
(இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள். அவரது வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது)
மாதவராஜ் பக்கங்கள் - 38
“அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, வயிற்று வலியில் கஷ்டப்பட்டார். ஆஸ்பத்தியில் சேர்த்திருக்கிறோம்” என தீபா போன் செய்து, ஞாயிறோடு ஞாயிறு எட்டு, இன்று ஒன்பது நாளாகிவிட்டது. மருத்துவரீதியான காரணங்கள் அறிவதற்கு இரண்டு மூன்று நாட்களாக, எங்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்கள் வந்து ஆதரவாய் இருந்தபோதிலும் அந்த சமயத்தில் அருகிலிருந்து உறுதியோடு எதிர்கொண்ட தீபாவை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
பித்தப்பை அகற்றப்பட்டு, இரண்டு நாட்கள் இன்டென்சிவ் கேரில் கவனிக்கப்பட்டு, தனியறையில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பகலில் உறவினர்களும், அவரது நண்பர்களும் வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு இரவுகளில் அவரும் நானும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம். கண்கள் மூடியபடி இழுத்துவிடும் மூச்சுக்கு அசையும் அவரது உடலைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். உற்சாகமாய் நண்பர்களோடு பேசுகிற, கடகடவென்று சிரிக்கிற, ஆங்காரமாய் முகம் நிமிர்ந்து ஆரவாரிக்கிற, சிலிர்த்து பாரதியாரின் கவிதைகளை பாடுகிற, கர்வம் அடைகாக்கும் மௌனம் சாதிக்கிற அவரின் கோலங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துகொண்டு இருந்தன. இடியோசையுடன் மின்னிய வெளிச்சங்கள் இளகி, ஒரு விளக்கின் திரியின் மீது கொண்ட அமைதியான ரூபம் போலிருந்தது.
ரீபிரிண்ட் செய்யப்பட்ட அவரது புத்தகங்கள் சிலவற்றை நண்பர் ஒருவர் கொடுத்துச் சென்றிருந்தார். எனக்குப் பிடித்தமான அவரது முன்னுரைகளின் தொகுதி அதிலிருந்தது. எடுத்துப் படித்தேன். ஜெயகாந்தன் என்னோடு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். மங்கிய அறை பிரகாசமானது.
நேற்று இந்த நேரம் சென்னையிலிருந்து சாத்தூருக்குக் கிளம்பினேன். இன்று மாலை அம்மு போன் செய்தாள். “அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறதாம். இன்னும் இரண்டு நாட்களில் அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடலாம் என டாக்டர் சொன்னார்”.





