கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை கோணங்கி
உதயசங்கர், கிருஷி, சாரதி, பவா செல்லத்துரை, ஷைலஜா, நான் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். எழுத்தாளர்கள் சங்க மாநாட்டையொட்டி நிகழ்கிற இதுபோன்ற சந்திப்புகளும், அரட்டைகளும் அழகானவை. கொஞ்சம் மௌனம் நிலவிய ஒரு தருணத்தில் “மாது இதப் படிச்சுட்டு சொல்லுங்களேன்” என்று அப்போதுதான் பிரிண்ட் எடுக்கப்பட்ட தாள்களை என்னிடம் நீட்டினார் பவா செல்லத்துரை. ‘கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை கோணங்கி’ என ஆரம்பித்து அவர் எழுதியிருந்தார். கசகசவென்று அங்குமிங்கும் மனிதர்களின் பேச்சுச் சத்தங்களும், நடமாட்டங்களும் இருந்தன. யாவும் படிக்க ஆரம்பித்த சில வரிகளில் காணாமல் போக பவாவும், நானும் மட்டுமே அங்கு இருந்தோம். பார்த்ததும் சந்தோஷங்களைத் தருகிற, தூரத்து மலைகளை கைகளால் பிடித்திட விழைகிற, இருட்டில் வழியறிந்தவனாய் நடந்து செல்கிற ஒரு பித்த வெளிக்காரனைப் பற்றிய நினைவோட்டங்கள் அவை. அடுத்த சில வரிகளில் நானும், பவாவும் காணாமல் போக கோணங்கி மட்டுமே அங்கு இருந்தார்!
படித்து முடித்து வார்த்தைகளற்று இருந்தேன். பவாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கசிந்து போனேன். அடுத்து உதயசங்கரை கோணங்கி அள்ளி எடுத்துக்கொண்டார். எல்லோருக்குள்ளும் ஒரே மாதிரியான உணர்வும், நெகிழ்வும், ஒரு மௌனமும் நிறைந்திருந்ததைப் பார்த்தேன்.
பவாவுக்கு ஒரு வணக்கம். பவாவின் எழுத்துக்கு ஒரு வந்தனம்!
*
எஸ். ராமகிருஷ்ணனின் தலைப்பு மறந்து போன ஒரு சிறுகதையில் மார்கழி மாதத்தில் ஏதோ ஒரு இரவின் மூன்றாம் ஜாமத்தில், ஒரு வீட்டின் ஓடுகளைப் பிரித்து களவுக்கு இறங்கும் ஒரு திருடன், அந்தப் பனிபொழியும் நிசப்தத்தில் அவனுக்கு மட்டுமே கேட்கும் ஒரு அபூர்வ ஒலியில் ஒரு நிமிடம் உறைந்து போவான். கொஞ்சம் நிதானித்து அது அந்த வீட்டின் மேல் படர்ந்திருக்கும் பூசணிப்பூ பூக்கும் சப்தம் என்பதை உணர்வான். இந்த அபூர்வங்கள் எப்போதும் எல்லோருக்கும் கிடைக்காது. எப்போதாவது இந்த ஒலி திருடர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மட்டுமே கேட்கும். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, கோணங்கி இப்படி ஏதாவதொரு நள்ளிரவில் பூசணிப்பூ பூக்கும் அபூர்வத்தோடேயே மட்டும்தான் என் வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அவனுடன் ஒரு எழுத்தாளனோ, கலைஞனோ, வாசகனோ உடன் வருவார்கள். இவன் பாரதி, இவன் கைலாஷ், இவன் ராமகிருஷ்ணன் என மின்னல் மாதிரியான அறிமுகம் போதும் அவர்கள் என் வீட்டில் புழங்க.
அவன் குரல் கேட்டு உடலெங்கும் சந்தோஷம் பொங்கும் உவகையோடு அப்பா விளக்கைப் போடுவார். அப்பாவும், கோணங்கியும் மட்டுமே பேசித் தீர்த்த இரவுகள் உற்சாகமாய் விடிந்திருக்கின்றன.அப்பாவின் தோள்பட்டையில் ‘பட்டப்பன்’ என்ற அவரின் உற்ற நண்பனின் பெயரைப் பச்சைக் குத்தி இருப்பார் என்று அப்பாவின் மரணத்தின் போது கோணங்கி சொல்லி அழ, போர்த்திய துணி விலக்கி பார்த்துக் கதறினேன்.
அவன் எப்போதும் அந்தப் பூசணிப்பூவின் மலரும் ஒலி போல எங்களுக்கு அபூர்வமானவன்தான்.
முப்பது வருட காலத்தை நான்கு A4 பக்கங்களில் அடைத்துவிட முடிய வில்லை. அதில் மார்கழிப்பனி, சித்திரை வெயில், சிபியின் இரத்தம், வம்சியின் பிறப்பு, உரையாடல்களின் கனமென, வாழ்ந்துத் தீர்த்த பாதையெல்லாம் தானியங்கள் கொட்டி இறைந்து கிடக்கிறது. நான் சிட்டுக் குருவியாகக் கொத்தினாலும் நான்கைந்து பருக்கைகளை மட்டுமே கொறிக்க முடிகிறது. கோணங்கியே எப்போதும் சொல்வது போல, “நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்கமுடியாது”. நான் மரமாக மாற முடியாத ஒரு மரண அவஸ்தை இது.
மதினிமார்கள் கதைகளின் வழியே என்னை வந்தடைந்தவன் கோணங்கி. எப்போதும் தமிழின் ஆகச் சிறந்த கலைஞன் இவன் என என் வாசிப்பில் உணர வைத்த படைப்புகள் அவை. ஆளரவமற்ற சாத்தூர் ரயில் நிலையத்தில் பிரியத்தை மடி நிறையச் சுமந்து கொழுந்தன்கள் கையில் வெள்ளரிப் பிஞ்சுகளைத் திணிக்கும் கைகளை நேரடியாய்ப் பார்க்கும் ஆசை மேலெழுந்த காலமது.
கவிஞர் சச்சிதானந்தன் சொல்வார், என் பாட்டியின் தங்கை முழுப்பைத்தியம், என் சித்தியும் அப்படியே, குடும்பத்தில் பலரும் இந்த மனப்பிறழ்வின் எல்லைகளைத் தொட முயற்சிப்பவர்கள். அவர்களின் விதை நான். நான் மட்டும் எப்படி கோழிக் கொண்டைகளின் சிவப்பைப் பற்றி கவிதை எழுதாமல் இருக்க முடியும்?
மனப்பிறழ்வுக்கும் எழுத்துக்குமான இடைவெளி ஒரு மெல்லிய கோடு மட்டுமே. காலம் முழுக்க இருவருமே இதைக் குறுக்கும் நெடுக்குமாக இரகசியமாகவேனும் கடந்து கொண்டேதான் இருக்கிறார்கள். கோணங்கியின் எழுத்துகளும் அப்படியே. என்ன செய்ய, என்னைப் போல மரமாக மாறமுடியாதவனின் கிளைகளில் ஒரு கிளியும் உட்கார மறுக்கிறது.
கோணங்கி ஆரம்பத்தில் கூட்டுறவு சொசைட்டியில் செகரட்டரியாக வேலை பார்த்தான். இப்போது நினைத்தால் அதை யாராலும் நினைவின் முற்றத்திற்குச் சிரிப்பில்லாமல் கொண்டுவர முடியாது. விவசாய வாழ்வு, தொடர்ந்து அதன்மீதே கொட்டிய அமில மழை, நேசித்த நிலம் அவனையே காவு கொண்ட கொடூரம் இதையெல்லாம் தமிழில் அவன் ஒருவன் மட்டுமே தன் ‘கைத்தடி கேட்ட நூறு கேள்விகளில்’ படைப்பாக்கி இருக்கிறான். அக்கதை விவசாயியையே பலிகேட்ட விவசாயத்தைப் போலவே அவனுடைய அரசாங்க வேலையை காவு கேட்டது அக்கதை. ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்து, தன் தோள்ப் பையோடு தேசாந்திரியாக இந்தியாவின் வடக்கும், தெற்குமாக அவன் பயணித்த காலங்களும், தூரங்களும் பட்ட அனுபவமும், பெற்ற வலியும் ஏராளம்.
அப்படி ஒரு பயணத்தினிடையே அதே போலொரு அகாலத்தில் தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறந்த என் முன் கோணங்கியும் அவன் நண்பன் பாரதியும், மழையில் நனைந்தும், குளிரில் விறைத்தும் நின்றிருந்த காட்சி கேன்வாஸில் வரையப்பட்ட கோட்டோவியம் போல் அப்படியே தெரிகிறது.
கல்வராயன் மலைக்கு ‘கல்குதிரை’ பிடிக்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போனான். கல்வராயன் மலையில் அப்போது போதகராயிருந்த என் நண்பர் கிடியன் தேவநேசனுக்கு அவன் வருகையைச் சொன்னேன். மூன்று இரவுகளுக்குப் பின் ஒரு ஞாபகம் மேலிட்ட மாலையில் அவரை அழைத்து கோணங்கியைப் பற்றி விசாரித்தேன். அவரின் கள்ளச் சிரிப்பொலி தொலைபேசியில் வழிந்தது. சுவாரஸ்யமுற்று நான் ஊடுருவியதில், அவன் முதல்நாளே அவர் தந்த அறையை நிராகரித்து கல்வராயன் மலை பழங்குடிகளோடு இரண்டற கலந்து விட்டார் என்றும், இரண்டாம் நாள் அதிகாலை தன் நடைப்பயிற்சியின்போது இரத்தம் சொட்டச் சொட்ட மூங்கில் கட்டி தூக்கி வந்த காட்டுப் பன்னியைச் சுமந்து வந்த நால்வரில் ஒருவர் உங்கள் நண்பர் கோணங்கி என்றும் சொன்னார்.
அவனுக்கு எப்போதும் தானிய வகைகளும், காட்டுப்பன்னியின் இரத்தக் கவிச்சியும், தீப்பெட்டியில் இரண்டு கொடுக்காப்புளி தழைகளோடு படுத்துக் கிடக்கும் பொன் வண்டுகளும்தான் வேண்டும். நவீனத்தையும் நாம் வசதி எனப் போற்றும் பலதையும் அவன் தன் சுண்டு விரலால் தள்ளிவிட்டு வந்திருக்கிறான்.
வாழ்வின் பேருவகையில் பொங்கும் ஒரு காதலுக்கான இரகசியக் கணம் காதலியின் மடியில் படுத்து சரீரத்தால் அதிகமும், வார்த்தைகளால் கொஞ்சமுமாய் உரையாடின பொழுதுகள்தான். அது அவர்களுக்கு மட்டுமேயானது. அதை உள்ளுக்குள் ஒளித்து வைத்து எல்லாம் வறண்டுபோன ஒரு வெற்றிட காலத்தில் அவர்கள் மட்டுமே எடுத்துப் பருகிக் கொள்ள அவர்களுக்குள்ளேயே ஒரு திறக்கப்படாத ஊற்று மாதிரி பொதிந்து கிடப்பது.
அதை அடைத்து நிற்கும் அச்சிறுகல்லை மெல்ல எடுத்தால் . . . . . . . . ஓ . . . நானும் என் நண்பனும் மட்டும் தாமரைக் குளத்தின் பச்சை நீரில் முட்டிக்கால் வரை நனைய விட்டு நாங்கள் பருகிய எங்கள் காதல் காலங்கள். எனக்குக் காதலியின் மடியில் படுத்துக் கிடந்த நாள் ஞாபகத்தில் இல்லை. கோணங்கியுடன் நீரில் பாதியும், நினைவில் பாதியுமாய்ப் புதையுண்ட அந்த நாளே இவ்வெறுமையைத் துடைத்துக் கொள்ளும் ஒரே ஈரிழைத் துண்டு எனக்கு.
அதன் பிறகான நாட்களில் தமிழ் வாழ்விலிருந்து தன் உடைநடையை ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, வெகு தூரத்திற்கு அவனே வலிய சுமந்து சென்று மந்திரவாதியின் தலையில் உட்கார்ந்திருக்கும் கிளிக் கழுத்தில் ஒளித்து வைத்துக் கொண்டான். கிளியைக் காப்பாற்ற கோணங்கி விதவிதமான பல புதிரான விடுகதைகளில் வாழ வேண்டியுள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் திருவண்ணாமலைக்கருகில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டில் தமிழ் நிலப்பரப்பை முல்லை, மருதம், நெய்தல் என ஒவ்வொன்றாகப் பிரித்து அவன் கண்டராதித்தனுக்கும், ஸ்ரீநேசனுக்கும், பழனிவேலுவுக்கும் சகட்டு மேனிக்கு கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கிளியின் உயிர் இரகசியம் அறிந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களுக்கான, அவனால் முடிந்த எளிய நலத்திட்ட உதவிகள் அது.
ஆனால் இதெல்லாம் இல்லை அவன் மனம் என்பதை நானறிவேன். என் சிபிக்குட்டியை ஒரு விபத்தில் இழந்து, பித்து பிடித்தலைந்து, என் வம்சியின் பிறப்பின் கணத்திலேயே மீண்டும் என்னை மீட்டெடுத்தேன். வம்சியின் வருகைக்காக ஐந்து கிலோ கருப்பட்டி மிட்டாய்களோடு கோவில்பட்டியிலிருந்து புறப்பட்டு வந்து, மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாட்களில் என் பழைய கோணங்கியைக் கண்டேன்.
போர்ட் கொச்சினுக்கு கதை சொல்லப் போய், மொழி தெரியாத அந்த நண்பர்களின் அன்பில் கரைந்து, அங்கிருந்து கோணங்கியைத் தொலைபேசியில் அழைத்த இரவின் விடியலில் அவன் என்னுடன் இருந்தான். வேண்டுதல்கள் சுமந்த இரு யாத்திரிகர்களைப் போல, நாங்களிருவரும் கொச்சியிலிருந்து புறப்பட்டு கொடுங்கல்லுhரில் போய் கண்ணகிச் சிலையைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு அந்த அதிகாலை மழையினூடே ஒரு கூரைக்கடையில் கள்குடித்து, மீன் தின்ற நாள் எழுதி முடித்த ஒரு உன்னதப் படைப்பிற்கு நிகரானது.
இலக்கிய கூட்டங்களில் எப்போதும் பேசும் பேச்சாளனல்ல கோணங்கி. இருபது வருடங்களுக்கு முன் நாங்கள் நடத்திய ஒரு இலக்கிய கருத்தரங்கில் திடீரென ஒரு புயல் மாதிரி பிரவேசித்து அவன் ஆற்றிய உரை அதற்கு முன் வேறு எவராலும் எப்போதும் கேட்டறியாதவைகள். அக்கருத்தரங்கில் அதன்பின் பேச வேண்டிய மூன்று முக்கிய இலக்கியவாதிகளும் பேச முடியாமல் அதோடேயே அக்கூட்டத்தை முடிக்க வேண்டியதிருந்தது. இதுதான் ஆத்மாவின் உள்ளிருந்து எழும் ஒரு நிஜப்படைப்பாளியின் ஆவேசக் குரல். அதைக் கேட்ட பாக்கியம் இருமுறை திருவண்ணாமலை வாசகர்களுக்கு வாய்த்திருக்கிறது.
இதோ இப்போதும் மகாராஷ்டிராவின் பெயர் தெரியாத ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து காய்ந்த சுரைக் குடுக்கைகளைச் சேகரித்தவாறு அலையும் இந்த நாடோடிக் கலைஞனின் வருகைக்காக, திக்கித் திக்கி அவன் உதிர்க்கும் ஆதித் தமிழ்ச் சொல்லை அள்ளிப் பருகுவதற்காகக் காத்திருக்கும் ஆளுமைகளை நானறிவேன்.
அவனை ஒரு பேட்டி எடுக்கவோ கதை எழுதி வாங்கவோ பிரபலமான தமிழின் பத்திரிக்கைகள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வுயுற்றதையே கோணங்கியின் ஒரு புகைப்படங்களை வேண்டி தவமிருந்த பத்திரிக்கைகளை நானறிவேன். நேர்காணலுக்காக கோவில்பட்டி வரை சென்று பேட்டி எடுக்க முடியாமல் திரும்பிய தமிழ்ச் சேனல்களின் வாடிய முகங்களையும் நான் எதிர் கொண்டிருக்கிறேன். கமலஹாசன் தன் வாழ்வில் சந்திக்க விரும்பும் ஒரே படைப்பாளி கோணங்கி என்று பல நேர்காணல்களில் சொல்லியும், அதை உதறிச் செல்லும் செம்போத்து பறவை அவன்.
அடர்மழை நாளொன்றின் அதிகாலை அது. நான் என் கிணற்று மேட்டில் காவலிருக்க, கிணற்றில் குதித்து நீந்திக் கொண்டே வேலா, ‘என் கோட்டைக் கிணறு கதைச் சொல்லவா?’ என இரு மடங்கு சத்தத்தில் கத்துகிறார். உள்ளேயிருந்து கேட்கும் குரலைக் கரையிலிருந்து அள்ளுகிறேன். கதையின் உக்ரத்தை நீரில் கரையாமல் அப்படியே வைத்து விட்டு.
‘பவா இந்நேரம் கோணங்கி இங்க வந்தா எப்படி இருக்கும்?’ இது வேலா.
ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, மேற்கு திசையில் திரும்பிப் பார்க்கிறேன்.
தோளில் தொங்கும் நீண்ட தோல்பையோடு இரவெல்லாம் விழித்த களைப்பின்றி சட்டைப்பட்டன்களைக் கழட்டியபடியே ஓடி வந்து அந்தக் கிணற்றில் குதித்த கோணங்கியின் அந்நிமிடம், பூசணிப்பூவின் அபூர்வ சத்தம் அருந்தின அத்திருடனுக்கும், எங்களுக்கும் மட்டுமே வாய்த்தவை.
Little terrorist
வாதுமைப் பழங்கள் பறிக்கத்தான் தில்ஷான் அந்த இராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்தான். வெறிபிடித்த மிருகமாய் ஒரு இராணுவ அதிகாரி அவனைச் சுட்டுக்கொன்றான். இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இந்த கொடூரம், இரண்டு நாட்களுக்கு முன்பு 'Littile terrorist' படத்தின் ஆரம்ப காட்சிகளின் போது நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில், அழுத்தமாய் பார்வையாளர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அஷ்வின்குமார். பல சர்வதேச விருதுகள் பெற்றிருக்கிறது இப்படம்.
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதி அது. வேலி தாண்டி விழுந்த பந்தை எடுப்பதற்காக ஜமால் என்னும் முஸ்லீம் சிறுவன் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து விடுகிறான். காவலர்கள் பார்த்துவிட அவன் ஓடி ஓளிகிறான். ஒவ்வொரு கணமும் பதற்றமாய் நகரும் இந்தக் குறும்படத்தின் கடைசிக் காட்சி அழகிய கவிதை. கம்பி வேலியைத் தாண்டிய மனிதம் நம்மைப் பார்த்து புன்னகைக்கிறது. பாருங்கள்.
ஆனால் ஜமாலாய் இருந்தாலென்ன, தில்ஷானாய் இருந்தாலென்ன, இரக்கமற்ற இராணுவத்துக்கு அவர்கள் 'Little Terrorist' தான்.
மோடி வித்தை
கொட்டு அடித்து ஊரைக் கூட்டினான் மோடி மஸ்தான். “இதோ பாருங்க, இங்கே பாருங்க..” என்று எல்லோர் முன்பும்தான் அந்தக் காரியத்தை செய்தான். கையிலிருந்து கூரான வாளை இன்னொரு மனிதனின் கழுத்தில் வைத்தான். ”ஜெய்..’ என உரக்கக் கூவி அறுத்தான். வதைபடுபவனின் கை கால்கள் துடிதுடித்தன. எந்தச் சலனமுமற்ற மோடிமஸ்தானின் முகமெங்கும் மனித ரத்தம் தெறித்து வழிந்தோடியது. வெட்டப்பட்ட தலையை கையில் தூக்கி எல்லோருக்கும் காட்டினான். முகம் பொத்தியும், பதைபதைத்தும் நின்றது கூட்டம்.
வெறி பிடித்தவனாய் சுற்றிச் சுற்றி வந்தவன் மெல்ல அடங்கினான். மீண்டும் கொட்டு அடித்து “இதோ பாருங்க, இங்கே பாருங்க” என்று உரக்கக் கத்திவிட்டு, தன் முகத்தை ஒரு வெள்ளைத் துண்டால் மூடி அப்படியே உட்கார்ந்தான். மயான அமைதியோடு வெறித்துப் பார்த்தது கூட்டம். துண்டை விலக்கியபோது அவன் முகத்தில் ரத்தக் கறைகள் இல்லை. சாந்தமாய் புன்னகைத்தான். ஜெய்...” என ஓங்காரக் கூரலிட்டு எழுந்து கைகளை பரிசுத்தமானவனாய் விரித்தான். வித்தையை மெச்சி சிலர் கைதட்டினார்கள்.
கீழே ஒரு தலையும், முண்டமும் தனித்தனியாகத் தரையில் கிடந்தன. கைதட்டியவர்களின் உள்ளங்கைகளில் ரத்தம் அப்பியிருந்தது.
மாதவராஜ் பக்கங்கள் -36
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு இன்று விருதுநகரில் ஆரம்பிக்கிறது. மிக அருகில் நடந்தும்கூட இந்த தடவை, மாநாட்டின் ஏற்பாடுகளில் ஒன்றும் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப்போது தோழர்கள் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள் என அழைப்பார்கள். புன்னகையோடும், பெருமூச்சோடும் கடந்துவிடுகிறேன். கோரிக்கைகள், உறுப்பினர் சேர்ப்பு, நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வக்கீல் போல பணியாற்றுவது, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைகள், கமிட்டிக் கூட்டங்கள் என வேறு பணிகளில் மூழ்கி இருக்கிறேன். வலைப்பூக்கள், வாசிப்பு, பகிர்வு, இலக்கிய நண்பர்கள் என லயித்துக்கிடக்கும் வெளியிலிருந்து அறுத்துகொண்டு பயணிக்கிறேன். அவ்வப்போது எட்டிப் பார்த்து, எல்லோரும் அங்கே இருப்பதைப் பார்த்ததும் ஒரு நிம்மதி வருகிறது.
‘கரிசல் காட்டில் கலை இலக்கியத் திருவிழா’ என்ற எழுத்தாளர் சங்க மாநாட்டு அழைப்பிதழை அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன். கடந்த மாநாடுகளின் நினைவுகள் வந்து செல்கின்றன. நண்பர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களோடு கூடிக் களித்த தருணங்கள் அவை. மாநாட்டின் நிகழ்வுகளைத் தாண்டி, விவாதங்களைத் தாண்டி அவையே மனதில் சுகமாகவும், அழுத்தமாகவும் நிறைந்திருக்கின்றன. வரும் மூன்று நாட்களில், அவைகளை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் செல்ல வேண்டும் என இருக்கிறேன்.
பஸ் பயணங்களில், காத்திருக்கும் பொழுதுகளில், வெறுமனே சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதை உடைத்து புத்தகம் படிக்க முனைந்திருக்கிறேன். படிக்க வேண்டியவை ஏராளமாய் இருக்கின்றன. ‘இடையில் ஓடும் நதி’ என்னும் கென்ய நாவல் இப்போது என்னுடனேயே இருக்கிறது. ‘கூகி வா தியாங்கோ’ என்னும் ஆப்பிரிக்க எழுத்தாளர் எழுதியதை, தமிழில் இரா.நடராஜன் மொழி பெயர்த்திருக்கிறார். காமனோ மற்றும் மக்குயு என்னும் இரு குன்றுகளின் இடையே ஓடும் ஹோனியோ என்னும் நதி பார்த்துச் செல்கிற மனிதர்களின் கதை இது. ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தில் சிதைந்து போன வாழ்க்கை இது. கூகியை மிக நெருக்கமாக உணர முடிகிறது.
இரண்டு சிறுவர்கள் சண்டையிடுவதை அவர் காட்டுகிற விதம் இது: “புதரிலிருந்து தாங்கள் உடைத்துக்கொண்டு வந்த கழிகளோடு அவர்கள் முதலில் சண்டையிட்டார்கள். பலமுறை காற்றில் ஒன்றையொன்று பலமாக அடித்தபடி கழிகள் விரைவில் உடைந்து போயின. சிறுவர்கள் ஆத்திரத்தோடு அவற்றைத் தூக்கியெறிய ஒரு பட்டைக் கழி படுத்திருந்த ஒரு மாட்டைப் போய்த் தாக்கியது. அது பயந்து ஓட்டமெடுத்தது. அதன் ஒட்டம் மேலும் ஒன்றிரண்டு மாடுகளை எழுப்பியதோடு புழுதியையும் கிளப்பியது. பிறகு மாடுகள் சண்டை பற்றி எந்தச் சலனமும் இன்றி எதிர்த்திசையில் பார்த்துக்கொண்டு நின்றன”
இதுபோன்ற வரிகளே எழுத்துக்களின் மீது வசீகரத்தையும், வற்றாத மோகத்தையும் கொள்ள வைக்கின்றன போலும். முழுமையாக இந்த நாவலைப் படித்துவிட்டு பகிர்ந்துகொள்வேன்.
இந்த மாத ‘புத்தகம் பேசுது’ இதழில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. தீராத பக்கங்களில் அவ்வபோது கவிதைகள், உடல்நலம் குறித்தெல்லாம் எழுதும் தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் சென்னையிலிருந்து இதற்காக சாத்தூர் வந்து ஒருநாள் கூடவே இருந்துவிட்டுச் சென்றார். பேட்டியாக இல்லாமல் இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். அவ்வளவுதான். அதையே ஒரு நேர்காணலாக்கியிருக்கிறார். அத்தோடு தனக்குப் பிடித்தமானவர்களிடம் அதனை பகிர்ந்துகொள்ளவும் செய்திருக்கிறார். அப்படி அதனை படிக்க நேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள், எஸ்.வி.வேணுகோபாலனிடம் இ-மெயிலில் பகிர்ந்துகொண்டதை எனக்கு அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிரத் தோன்றியது.
அன்புமிக்க வேணுகோபாலன்,
வணக்கம்.
எனக்கு தமிழ்ச் செல்வன் போல, மாதவராஜையும் பிடிக்கும். அவருக்கு கோவில்பட்டி இடதுசாரிப் பள்ளிக்கூடத்து மாணவர்களிடம் இருப்பதாக நான் உணர்ந்த ஒரு நெகிழ்ச்சிக் குறைவும் இறுக்கமும் கிடையாது. அவர் கோவில்பட்டிக்காரர் இல்லை, சாத்தூர் காரரும் இல்லை. அவர் காலில் கழுவமுடியாமல் அப்பியிருக்கும் பிறந்த மண் திசையன்விளையோ நாசரேத்தோ அல்லவா. மேலும் தத்துவம் எல்லாம் வாழ்வோடும் உடன் வாழும் சக மனிதரோடும் ஒன்றிப் பொருந்தும்போது அல்லவா முழுமை பெறுகிறது. உண்பது செரித்து ரத்தத்தோடு கலக்க உள் உறுப்புக்களின் அமிலமும் சுரப்பும் செயல்பாடும் தேவைப் படுமே.
மாதவராஜ் தத்துவததைப் புத்தகங்கள் வழி அல்ல, இயங்குவதன் வழி, அப்படி இயங்கும்போது உடனியங்கும் மனிதர் வழியாக அறிந்தவர். அப்பாவும், அண்ணனும், அம்மாவும் தங்கையும், மனைவியும் மகளும் மகனும் என்ற குடும்ப மனிதர்கள், அவருடைய சமூக மனிதர் போலவே அவருக்கு முக்கியமானவர். அவருடைய அறம் ஒழுக்கம் சார்ந்தது மட்டுமில்லை, பலம் சார்ந்தது மட்டுமில்லை. கூட்டு ஒழுக்கம், கூட்டு பலம் எவ்வளவு தெரியுமோ, அதே அளவுக்கு தனிமனித ஒழுக்கமின்மை, தனிமனித பலவீனம் பற்றியும் அவர் புரிந்தே இருக்கிறார். நாவல் பழங்களைக் குனிந்து பொறுக்கவும், மணலை ஊதித் தின்னவும் முடிகிற அளவுக்கு அவர் ஒரு உதிர் பழத்தின் கனிவை அவரால் கௌரவிக்க இயலும்.
இவ்வளவையும் அவருடனான சில சிறு அவகாசமே நீடித்த சந்திப்புகளின் மூலமாகவும் அவருடைய வலைப் பூவை எப்போதாவது வாசித்ததன் மூலமாகவும். த.மு.எ.ச ஒழுங்கு செய்த அவருடைய மூன்று வம்சி புத்தகம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலமாகவுமே நான் என் போக்கில் அறிந்துகொண்டேன். ஒரு சக மனிதனை மனதார அறிய இதைவிட வேறென்ன முகாந்திரங்கள் வேண்டும். சொல்லப் போனால் முகத்தை விட வேறென்ன முகாந்திரம்?
அவரை நேர்கண்டது மட்டுமின்றி, அதை என் பார்வைக்கும் அனுப்பிய உங்கள் தோழமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும். நேர்காணலுக்கு முந்திய உங்கள் முன் குறிப்புகள். நீங்கள் அவரை நேர்கண்ட அந்த தினத்தின் சாயல்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விதம் எல்லாம் , அவருடைய வீட்டில் அவரைப் பார்க்க வந்திருக்கும் என்னை, என்னைப்போலவே அவரைப் பார்க்கவந்து அவருடன் இருக்கும் நீங்கள் எழுந்துவந்து, கதவு திறந்து, (அது சும்மா வெயிலுக்கு சாத்தப் பட்டிருந்திருக்கும்) ,'வாங்க' என்று உள்ளே அழைப்பது போல இருக்கிறது.
தமிழின் அற்புதமான எழுத்தாளர் வண்ணதாசனின் இந்த வார்த்தைகளை விட வேறென்ன வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேவேளையில், இதற்கு நான் தகுதியானவனா என என்னை நான் உற்றுப்பார்க்கவும் வைக்கிறது.
முதுகு
அதென்ன தெரியவில்லை. அவை பாட்டுக்கு மேய்ந்து கொண்டு இருக்கும் மாடுகளின் மீது எப்படியும் காகம், கொக்கு, கருங்குருவி என ஒன்றைப் பார்க்க முடிகிறது.
சிறகுகளைச் சுத்தம் செய்துகொண்டோ, தூரத்து வெளியை உற்றுப் பார்த்துக்கொண்டோ அவை வீற்றிருக்கின்றன. சிலசமயம் தலை உயர்த்திக் கூவிக்கொள்கின்றன. போதும் என்பதாய் புறப்பட்டு வானத்தில் புள்ளியாகிப் போகின்றன.
அந்தக் கொஞ்ச நேரத்துக்கு தலைகுனிந்திருக்கும் பெரிய மாடு, முற்றிலும் ஒரு சின்னப் பறவைக்குரியதாகி விடுகிறது.
அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…
“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள் சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும், சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம்.
தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது. இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும், மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல். ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். 30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.
பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று, “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா. கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம். மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள். சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.
தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.
சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார். அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.
ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.
சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு, ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க, எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.
இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.
இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.
சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு, திருச்சியில் இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.





