காலத்துளி
இரவின் நிசப்தத்தை
மெலிதான ஒலியில்
கலைத்துக் கொண்டிருந்த
கடிகாரத்திலிருந்து
டொக் டொக் என்று
சொட்டிக் கொண்டே இருந்தது காலம்...
- எஸ் வி வேணுகோபாலன்
(pic: Salvador-Dali-Painting)
உயிர்த்தெழும் நேரம்
பல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திறங்கினான். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், அடுக்குமாடி ஆஸ்பத்திரிகளுக்கும், வண்ண மயமான டிஜிட்டல் சென்டர்களுக்கும், பழங்களில் லேபிள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்த பழமுதிர்ச்சோலைகளுக்கும் இடையே சாலை போய்க்கொண்டு இருந்தது. வேப்ப மரங்களும், புங்கை மரங்களும் சூழ நடராஜா தியேட்டர் இருந்த இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்று கண்ணாடிக் கட்டிடமாய் பளபளத்தது. திருட்டு தம் அடிக்க நண்பர்களோடு மறைந்த பூங்காவில் நான்கைந்து இரும்பு டவர்கள் செங்குத்தாய் முளைத்திருந்தன. தனது மகனுக்கு ‘இங்குதான் அப்பா....’ என்று காட்ட எதுவுமில்லை. எல்லாம் காணாமல் போயிருந்தன. ஒரு குழந்தையைப் போல கிறுக்கி கிறுக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான் நினைவுகளில்.
இரவில், வெளியே சென்றபோது யாவும் சோடியம் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந்தன. பெரும்போதையில் தள்ளாடியது போலிருந்தது ஊரே. “அப்பா, இதைத்தான் நான் வாங்க விரும்புகிறேன்” என ஷோரூம் ஒன்றிலிருந்த பைக்கை காண்பித்தான் மகன். அவனுக்கு இது இன்னொரு நகரம். அவ்வளவுதான்.
வெளிச்சம் பரவாத அதிகாலையில் வாக்கிங் செல்ல வெளியே வந்தபோது அதிசயம் போலிருந்தது. அவனது இடங்கள் யாவும் பனிமூட்டம் போல ஊரின் மீது மிதந்துகொண்டு இருந்தன. மரங்களுக்குள், வீடுகளின் உச்சியில், தூரத்து ரயில் பாலங்களின் மீது, மின்சாரக் கம்பிகள் அடைந்த தெருக்களின் ஊடே, கோவில் மணியோசை வழியே அவை ஒவ்வொன்றாய் அவனுக்குத் துலங்கின. பெருமூச்சுவிட்டு மௌனமாய் அவனோடு பேசின. வெளிச்சம் வர வர மெல்லக் கலைய ஆரம்பித்தன. ஹாரன் அடித்து வேகமாய்க் கடந்த மினரல் வாட்டர் வண்டி சட்டென எல்லாவற்றையும் அழித்துச் சென்றது ஒரு டஸ்டரைப்போல.
காமராஜ் தம்பதியருக்கு இருபத்தைந்து!
தெருக்குழாயில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டி ஊருக்குள் எங்கள் வேன் நுழைந்தது. நான், பாரதி கிருஷ்ணகுமார், டாக்டர் வல்லபாய், வக்கீல் மாரிமுத்து இன்னும் நண்பர்கள் நிறைந்திருந்தோம். செம்மண் பாவிய நிலத்தில் குறுகிய தெருக்களும், ஒட்டு வீடுகளுமாய் இருந்த நடுச்சூரங்குடிக்குள் எங்களது முதல் பிரவேசம் அது. ஸ்பீக்கர் செட் வழி காட்டியது. பந்தல் போட்டு இருந்த வீட்டைச் சுற்றி சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டு இருந்தனர். இளவட்டங்கள் எங்களைப் பார்த்து, மரியாதையோடும், புன்னகையோடும் வரவேற்றனர். யாரும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பட்டு வேட்டி சட்டையில் இருந்த காமராஜ் உள்ளேயிருந்து பரவசத்தோடு அழைக்க ஒடி வந்தான். “வாடா கல்யாண மாப்பிள்ள” என்று கிருஷ்ணகுமார் அவனை வாஞ்சையோடு இழுத்தார். “மாது” என கைகளைப் பற்றி, ‘மாமா’, ‘அண்ணன்’, ‘தம்பி’, ‘அம்மா’, ‘அப்பா’ எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தான். “பொன்னு எங்க” என்று வக்கீல் மாரிமுத்து அவனது தோளில் தட்டினார். எங்களது கிண்டல்களில் அவனுக்கு வெட்கமும், சந்தோஷமும் பொங்கிப் போனது.
எல்லாம் இன்று நடந்தது போலிருக்கிறது. அதற்குள்ளாகவா இருபத்தைந்து வருடங்கள் ஒடிவிட்டன! இன்று காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து, “மாது, இன்னிக்கு எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாள்” என காமராஜ் சொன்னதும் வாழ்வின் சுவாராசியத்தை அறிந்தேன்.
1984ம் ஆண்டிலிருந்து காமராஜ் எனக்குப் பழக்கம். ஒரு சாயங்காலத்தில் அவனை நான் கிருஷ்ணகுமாரின் அறையில் சந்தித்தேன். கையில் எதோ புத்தகத்தோடு இருந்தான். அதுவே அவனை எனக்கு நெருக்கமானவனாக உணர வைத்திருக்க வேண்டும். கொஞ்சநாளில் ‘நீ’,’நான்’ என்றும், ‘வாடா, போடா’ என்றும் பேசிக்கொள்ள முடிந்தது. பல நேரங்களில் நானும், அவனுமே சங்க அலுவலகத்தில் தனித்திருப்போம். பேசிக்கொண்டே இருப்போம். ரசனைகளும், பார்வைகளும் ஒத்துப் போன சுகமான காலங்கள் அவை. சாயங்கால நேரங்களில், அவனுக்குப் பிரியமான அந்த முகம் பார்க்க அலைபாய்வான். அவனது மாமா வீட்டின் அருகே இருந்த அந்தப் பெண்ணின் நினைவுகளோடு எங்கள் மத்தியில் இருப்பான். ஒருநாள், அவனது வீட்டிலும், அந்தப் பெண்ணின் வீட்டிலும் சம்மதித்து விட்டதாய் வந்து சந்தோஷமாய்ச் சொன்னான். அன்று நாங்கள் இருவரும் அளவுக்கு மீறி மது அருந்திக் கொண்டாடினோம். இன்றும் அந்த மது எங்களோடு கூடவே வருகிறதுதான். ஆனால் எப்போதாவது, அளவு மீறாமல்.
(அடர் கருப்பு)காமராஜ்க்கும் அவனது பிரிய சகி சுகந்தாவிற்கும் இருபத்தைந்தாவது திருமணநாள் வாழ்த்துக்கள்!





