சீட்டுக்கட்டு
மாற்றங்களின் ஊடே விடாமல் நடந்து கொண்டு இருக்கிறது ஆட்டம் முன்னும் பின்னுமாய். சூதுவாது அறியாதவர்கள் இங்கே தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சீட்டுக்கட்டுக்குள்ளிருந்து கதைகளும், கண்ணீர்க் கடல்களும் நிரம்பி வழிந்துகொண்டே இருக்கின்றன. ரொம்பநாளாய் எழுத யோசித்துக் கொண்டிருந்த சில தலைமுறைகளின் கதை இது. நாவலாய் எழுத முயற்சி செய்கிறேன். பார்ப்போம்.
1.ஆட்டம் ஆரம்பம்
இஸ்பேட் ஏஸை எடுத்து, “நாந்தான் பெருசு.” என்கிறீர்கள் நீங்கள்.
இப்போது உங்களுக்கு நான் சீட்டுகளைக் கலைத்துப் போட வேண்டிய முறை. இஸ்பேட் ஏஸ் என்றதும் எனக்கு வேல்துரை ஞாபகம்தான் வருகிறது.
“வேல்துரைன்னா யாரு? இஸ்பேட் ஏஸுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?” கேட்கிறீர்கள்.
சீட்டுகளை கையில் வைத்தபடியே சொல்ல ஆரம்பிக்கிறேன்.
அப்போது ஊருக்குள் வரவேண்டுமென்றால், வாய்க்காங்கரைப் பாலத்தைத் தாண்டித்தான் வரமுடியும். தேரிக்காடு வழியே லேசில் வரமுடியாது. கள்ளுக்கடை மறியல் செய்தவர்களைப் பிடிக்க பாளையங்கோட்டையிலிருந்து மலபார் போலீஸ் வந்தது. தூரத்தில் புழுதியோடு ஜீப்புகளைப் பார்த்ததும் தண்ணி எடுக்கப் போகும் பெண்கள் பத்ரகாளியம்மன் கோவில் மணியை அடிப்பார்கள். சம்பந்தமேயில்லாமல் திடுமென மணிச்சத்தம் கேட்டதும், விபரீதம் உணர்ந்து தேடப்படும் ஆண்கள் எல்லாம் ஊரிலிருந்து வெளியேறி, தேரிக்குள் புகுந்து கொள்வார்கள். பிறகு அவர்களைப் பிடிக்க முடியாது. செம்மண் பெருவெளியில் அடர்ந்து கிடக்கும் முந்திரி மரங்கள் அவர்களை அப்படியே விழுங்கி வைத்துக் கொள்ளும்.
முதலில் ஏமாந்த போலீஸ், மூன்றாவது முறை ஜீப்புகளை வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திலேயே நிறுத்திவிட்டு அரவமில்லாமல் தென்னந்தோப்புகளின் வழியே நடந்து வந்தார்கள். ஊருக்குள் திடுமென காக்கிச் சட்டைகளைப் பார்த்ததும் மிரண்டு போனார்கள். தப்பித்து ஓடக்கூட யோசனையற்று பலர் பிடிபட்டார்கள். சபாபதி வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து சீட்டு விளையாடிக்கொண்டு இருந்த வேல்துரை தன்னை நோக்கி ஓடிவந்த ஒரு போலீஸ்காரனை லாவகமாய் கீழே தள்ளிவிட்டு பானைக்காரர் முடுக்கு வழியே ஓடி, பெரிய பெரிய மாமரங்களின் நிழல்களின் ஊடே தேரிக்குள் விரைந்து விட்டார். திண்ணையில் கிடந்த சீட்டுகளை தூக்கி எறிந்தவாறே “இஸ்பெட் ஏஸ் தப்பித்துவிட்டது” என கத்தினான் ஒரு போலீஸ்காரன். அந்த வேல்துரை வேறு யாருமில்லை. தருமதுரையின் அப்பாதான்.
சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன்.
“கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்தானே ஒரு போலீஸ்காரனை தேரிக்காட்டுக்குள் வைத்துக் கொன்றது?” என்று பரக்கிறீர்கள் நீங்கள். ஒரு சாகசக் கதையைக் கேட்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு ஆர்வம். ஆனால் நான் கதை சொல்கிறவனில்லையே. ஒரு சீட்டாட்டக்காரன். இந்த ஆட்டத்தில் எப்போதாவதுதான் கேட்டது உடனே கிடைக்கும். அதுவாக வருகிற சீட்டுகளை எடுத்துச் சேர்க்க வேண்டியது நீங்கள்தான்.
உங்களுக்கு பொறுமையில்லை. “அப்புறம் போலீஸ் என்ன செய்தார்கள்?” என்று திரும்பவும் என் முகத்தையேப் பார்க்கிறீர்கள். சீட்டுகளை கலைத்தபடி சொல்ல ஆரம்பிக்கிறேன்.
இன்று காலையில் தரும துரைக்கு ஒரு போன் வந்தது. நம்பராக இருந்ததால் ஒரு யோசனையோடுதான் எடுத்து “ஹலோ” என்றார்.
“நீங்கதான் தரும துரையா” என்று மறுபக்கம் ஒரு குரல் கேட்டது. ஆமாம் என்றார்.
“நா இன்ஸ்பெக்டர் பேசுறேன். என்ன, ஒங்க வீட்டுல எப்பப் பாத்தாலும் சீட்டு விளையாட்டு நடக்குதாமே?”
“அப்படியெல்லாம் இல்லயே சார்”
“என்ன இல்ல. இங்க புகார் வந்துருக்கே”
“இல்ல சார். வேண்டாதவங்க யாரோ குடுத்துருப்பாங்க. நாங்க வீட்டுல உள்ளவங்கதான் நேரப்போக்குக்கு வெளையாடுவோம் சார்.”
“இல்லய.... காசு வச்சு வெளையாடுறீங்களாமே. தரும துரைன்னு பேரு வச்சுக்கிட்டுப் பொய் சொல்லாதீங்க.”
“இல்ல சார்... அப்படில்லாம் இல்ல சார்... ”
அதற்கு மேல் முடியாமல் மறுபக்கம் சிரிப்புச் சத்தம் கேட்டது. “தாத்தா நாந்தான் ராஜேஷ். பயந்துட்டீங்களா....” என சென்னையிலிருந்து ராஜேஷ் சிரித்தான். இன்று காலையில்தான் அவனுக்கு ‘ஹேப்பி பர்த்டே’ எஸ்.எம்.எஸ்ஸை தருமதுரை அனுப்பியிருந்தார். அதைத்தான் இப்படிக் கொண்டாடினான் தனது நண்பனின் போன் மூலமாக. வாயில் நுழையாத ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான் அவன்.
“ஏலே நீயா” என்று தரும துரை அசடு வழிந்தார்.
“நோ நோ. அப்படி மரியாத இல்லாமல்லாம் பேசக் கூடாது. சார்னு சொல்லணும். எத்தன சார் போட்டீங்க இப்ப”
“அடச்சீ நாயே. சாராம்ல சாரு” என்றார். அவன் சிரித்துக்கொண்டே போனை வைத்துவிட்டான். தரும துரைக்கு அவமானமாய் இருந்தது. செருமிக்கொண்டார். கனிமொழி கைது பற்றிய செய்தியைப் பார்க்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் போனில் சிரித்தபடியே மங்களம் முன்னறைக்கு வந்தாள். நோக்கமில்லாமல் சேனலை மாற்றினார்.
“என்னப்பா, ராஜேஷ் உங்கள மிரட்டிட்டானாம்ல” என்றாள். “ம்ம்..” என்று லேசாய் சிரித்து வைத்தார்.
“ஏம்ப்பா, அவங்குரல் கூடவாத் தெரியாமப் போச்சு!”
“அந்தச் சின்ன நாய் குரலை மாத்திப் பேசுது” என்றார் அப்பாவியாய்.
“அப்பா... அப்பா. இப்படியிருக்கீங்களே” என்று செல்லமாய் அவரது தோளைத் தொட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் மங்களம். தரும துரை முகம் வாடிப்போனது. இனி ஹைதராபாத்திலிருந்து, பெங்களூரிலிருந்து, கொச்சியிலிருந்து என பேரன்மார், பேத்திமாரெல்லாம் போன் செய்வார்கள். இரவில் எப்படியும் சென்னையிலிருக்கிற மூத்தவன் பொன்பாண்டியும், மதுரையிலிருக்கிற இரண்டாவது மகன் ஜெயபாண்டியும் சிரிக்கப் போகிறார்கள். சில நாட்கள் இதே பேச்சுத்தான் மொத்தக் குடும்பத்திற்குள்ளும் நடக்கும்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏனிந்தக் கதையைச் சொல்கிறான் என்றுதானே பார்க்கிறீர்கள்? சில சீட்டுகள் முதலில் தேவையில்லாத சீட்டுகளாய்த்தான் தெரியும். பின்னர் இன்னொரு சீட்டு அதனோடு சேரும் போதுதான் அருமை தெரியும். போகப் போக உங்களுக்கு அடைபடும். நான் உங்களிடம் கேட்க வந்தது என்னவென்றால், தருமதுரையை நினைத்தால் பாவமாய் இருக்கிறதா? ஒரு ஜோக்கர் போலத் தெரிகிறாரா? எனக்கோ அவரை இப்படிப் பார்ப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. எல்லோரிடமும் தோற்றுப் போன அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட என்னை ஜெயிக்க விட்டதில்லை, தெரியுமா? அது ஒரு தனி ஆட்டம். பிறகு பார்ப்போம்.
என்னை நீங்கள் வித்தியாசமாய் பார்ப்பது தெரிகிறது. நான் யாரென்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள். அது இப்போது தேவையில்லாதது.
சீட்டுகளை உங்களிடம் நீட்டுகிறேன். கத்தையாக வெட்டுகிறீர்கள். அதிலிருந்து ஜோக்கரை எடுத்து கீழே வைத்து மற்ற சீட்டுகளை கவிழ்த்து நீட்டி இழுக்கிறீர்கள். ரகசியங்களின் பாதையான அது நீண்டு கிடக்கிறது.
ஆமாம். ரம்மியாட்டத்தில் ஜோக்கர் முக்கியமான ஒரு சீட்டு. இப்போது தருமதுரையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியம். யாரும் தன்னை மதிக்கவில்லையென்று கவலைப்படுகிறார் அவர்.
எனது கையிலிருக்கும் சீட்டுகளை உங்களுக்கும் எனக்குமாக போட ஆரம்பிக்கிறேன்.
தருமதுரை ஒரு சங்கடத்தில் இருக்கிறார். தனது ஆட்டம் முடிந்துவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். பேரக்குழந்தைகள் தலையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றாலும் தானும் ஆடுவேன் என அடம்பிடிக்கிறார். ஊரில் மகள் வீட்டிலிருக்கும் அவர் தனது இரு மகன்களிடமும் செருப்புக்கடை ஒன்று வைக்க பணம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். மகன்களோ “இந்த வயசுக்கப்புறம் எதுக்கப்பா அதெல்லாம். செலவுக்கு நாங்கள் பணம் அனுப்புகிறோம். வீட்டிலிருங்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
தருமதுரையின் மனைவி பெரியநாயகிக்கு இது நல்ல யோசனையாகத் தெரிந்தாலும், தன் வீட்டுக்காரர் சும்மாயிருக்க மாட்டார், செலவுக்கு அனுப்பும் பணத்தைக் கொண்டு போய் மந்தையில் வைத்து சீட்டு விளையாடித் தொலைத்துவிடுவார் என்ற பயமும் இருந்தது. தருமதுரைக்கு ஆடத் தெரியாது என்பதும், வீட்டிற்கு வெளியே யாவரும் கள்ள ஆட்டக்காரர்களாய் இருக்கிறார்கள் என்பதும் அவருடைய நம்பிக்கை. அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்கென்றே பிறந்தவர்கள்தான் அவருடன் பிறந்த இருவரும் என்பதை இந்த நாற்பத்தெட்டு ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கையில் பெற்ற ஞானமாக பெரியநாயகி வைத்திருக்கிறார். அதிலும் அந்த மூத்த மைத்துனர் செல்லத்துரை பேரையெடுத்தால் போதும். புலம்பித் தள்ளிவிடுவார். கல்யாணமான புதிதில் தனது இரு ஜோடி வளையல்களையும் எடுத்துக்கொண்டு எவளோ ஒருத்தியோடு பம்பாய்க்கு ஒடிப்போன செல்லத்துரைதான் இந்த உலகிலேயே பெரிய கள்ள ஆட்டக்காரன் அவருக்கு. போட்டோவில் இருக்கும் வேல்துரையின் முன்னால் நின்று, “மாமா, நீங்கதா எல்லாத்துக்கும் நியாயம் கேக்கணும். ஒங்க மகனைக் காப்பாத்தணும்” என்று வேண்டி கண்ணீர் மல்க நின்ற நாட்கள் எவ்வளவோ உண்டு.
அண்ணன் மீது மரியாதை இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், செல்லத்துரையும் ஜோக்கராகவே தருமதுரையை நினைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸில் ஊறிய அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலாக தி.மு.கவுக்கு ஓட்டுப் போட்டது அவர்தான். எப்படி வேண்டுமானாலும் ஜோக்கரை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிந்த அவர் இன்னும் ஆடிக்கொண்டு இருக்கிறார். இன்னொரு தம்பி பொன்னுதுரையும் ஆடிக்கொண்டு இருக்கிறார். இருவருக்கும் நிலங்கள் இருக்கின்றன. தரும துரையால் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வாழ்வில் ஒருமுறையாவது ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என வெறியாய் இருக்கிறது.
கதைவிரும்பிகளான நீங்கள் ஆட்டத்தை விட்டு விட்டு தரும துரையைப் பார்த்து அவரிடமே எல்லாவற்றையும் கேட்டறிய துடிக்கிறீர்கள். தெரிந்தே எந்த ஒரு சீட்டாட்டக்காரனும் தன்னிடம் இருப்பதை அடுத்தவருக்கு காண்பிக்க மாட்டான். அவரது டைரியின் எழுதிய பக்கங்களில் கூட இத்தனை காலம் அவர் விளையாடிய ரம்மி ஆட்டங்களின் ஸ்கோர்கள் மட்டுமே இருக்கின்றன. அவரைப் பற்றி முழுமையாகச் சொல்வதற்கு என்னை விட வேறொரு ஆள் உங்களுக்குக் கிடைக்கவே மாட்டான்.
நேரம் வரும்போது ஒருநாள் நானே உங்களை தரும துரையிடம் அழைத்துச் செல்கிறேன். இதோ உங்களுக்கான சீட்டுகளை போட்டாகிவிட்டது. எடுத்து அடுக்க ஆரம்பியுங்கள். தரும துரையின் டைரிகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆட்டங்களை ஆடுவோம்.
(ஆட்டம் ஆரம்பிக்கிறது)
புன்னகை என்ன விலை?
பெட்டிக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகையொன்றை வாங்கும்போது அருகில் நின்றிருந்த அவன் என்னைப் பார்த்து புன்னகைப்பது போலிருந்தது. பார்த்தேன். “வணக்கம் சார்” என்று நட்புடன் சொல்லி திரும்பவும் புன்னகைத்தான். அவனை அதற்கு முன் பார்த்திருந்தேனா என்று தெரியவில்லை. நானும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு, யாராயிருக்கும் என அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அதைப் பார்க்காதது போல சென்று விட்டான்.
இன்னொரு நாள் வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டுத் திரும்பிய போது பக்கத்தில் வந்து பைக்குடன் நின்று “வணக்கம் சார்” என்று புன்னகைத்தான். நானும் “வணக்கம்” என்று அவனைப் பற்றி யோசித்தபடியே புறப்பட்டேன். அப்புறம் ஒரு தடவை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போதும் இதுபோலவே நிகழ்ந்தது. இப்படியே அங்கங்கு பார்க்க ஆரம்பித்தேன் . எப்போதும் முதலில் புன்னகைப்பது அவனாகவே இருந்தான். முகம் பரிச்சயமாகி விட்டாலும் யாரென்றே தெரியவில்லை. கேட்டுக்கொண்டதும் இல்லை. சொன்னதும் இல்லை.
வங்கியில் கேஷ் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள் அவன் குரல் “வணக்கம் சார்” என்று அருகே கேட்டது. வரிசைப்படி டோக்கன் நம்பரைச் சொல்லி அழைத்து பணம் கொடுத்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். புன்னகைத்தபடியே, “நீங்கதான் கேஷியரா” என்று கேட்டு தனது டோக்கனைத் தந்தான். “ஆமாம்” என்று புன்னகைத்து அவனுக்குரிய பணத்தைக் கொடுத்தேன். நான் அழைக்காமல் அவர்களாகவே வந்து பணம் கேட்டு இப்படி மற்றவர்கள் அவசரப்படுத்தியிருந்தால், “கூப்பிடும்போது வந்தாப் போதும். போய் உட்காருங்க” என்று எரிந்து விழுந்திருப்பேன். அவன் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தேன் இப்போது அடுத்த டோக்கனை அழைக்காமல்.
டூப்பு
அவனால் முடியாதவற்றை செய்வதற்கென்று அவனைப் போலவே ஒருவன் அவனுக்கு இருந்தான். எகிறி அந்தரத்தில் குட்டிக்கரணம் போட்டு, அப்படியே சுழன்று பின்னங்காலால் வில்லனின் நெற்றிப் பொட்டில் அடித்தான். நாயகியின் கற்பைக் காப்பாற்ற அதிவேக ரெயிலுக்கு இணையாக ஓடி, சட்டென்று பெட்டிக்குள் பாய்ந்து, ஒரே அடியில் நாற்பத்து ஏழு பேரை சிதற வைத்தான். இசைக்கேற்ப இடதுகாலை லேசாய் பின்னுக்கு வைத்து சட்டென்று இடுப்பை வெட்டி உடலை முன்னுக்கு ஊர்வது போல நகர்த்தி, மீண்டும் இடதுகாலை பின்னுக்கு வைத்து நளினமாக ஆடினான். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அவனுக்கு முடியாமல் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவனைப் போலவே இருந்தவனால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் இப்போது பிரார்த்தனை செய்தனர்.
ஆயிரங்கண்
நெடுநேரமாய் யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லையென்பது உறைத்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். திரை இருண்டிருந்தது. தானாக அணைந்திருக்க வேண்டும். சக்தி கொடுக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான். காத்திருந்த ஐந்தாறு குறுஞ்செய்திகள் சத்தமிட்டுக்கொண்டே ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்தன. அவைகளைப் பார்க்குமுன்னர் நண்பனின் அழைப்பு இடைமறித்தது. ஏற்றுக்கொண்டு காதில் வைத்தேன். “எத்தனை தடவை போன் செஞ்சேன். சுவிட்ச் ஆப் பண்ணிட்டியா” கத்தினான்.
“ஸாரி”
“என்ன ஸாரி. இதே வழக்கமாப் போச்சு. உனக்கெல்லாம் ஒரு செல்போன்..” எரிச்சலடைந்தான். “சென்னைக்கு வந்தேன். காவேரி லாட்ஜ் அட்ரஸ் வேண்டியிருந்துச்சு. அதுக்குத்தான் உனக்கு போன் செஞ்சேன். எடுக்கல. அப்புறம் சங்கருக்கு போன் செஞ்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.
அவன் வைக்கவும் அலுவலக மேலாளரிடம் போன். “சாயங்காலத்திலிருந்து போன் செய்றேன். சுவிட்ச் ஆப் சுவிட்ச் ஆப்னு வருது” என்றார்.
“ஸாரி”
“இன்னிக்கு ஒரு பார்ட்டிக்கிட்ட அம்பது லட்சம் டெபாசிட் வாங்கியாச்சு. அதை உடனே உங்கக் கிட்ட ஆசையா சொல்லணும்னு பாத்தா...” என்று சந்தோஷம் வடிந்த மனநிலையிலிருந்தார்.
ஒருவழியாய் அவரைப் பாராட்டியும் தேற்றியும் போனை வைத்தேன். திரும்பவும் ஒலித்தது. வேறு மாநிலத்திலிருக்கிற அண்ணன்.
“என்னடா போனை சுவிட்ச் ஆப் செஞ்சுட்ட”
“ஸாரி. என்னண்ணா?”
“ஒண்ணுமில்லை. பேசி ஒரு வாரத்துக்கும் மேல ஆச்சேன்னு போன் பண்ணேன். அப்புறம் எப்படியிருக்கே?”
கொஞ்ச நேரம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தேன். அதுபாட்டுக்கு இருந்தாலும், யார் யாரெல்லாமோ என்னைப் பார்த்துக்கொண்டு இருப்பதாய்த் தெரிந்தது.
கனிமொழி: தந்தையின் சாயல்
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம். முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா?” எனக் கேட்டார். கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார். சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார். வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன். அருகில் நின்றிருந்தாலும் மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார். முன்பெல்லாம் அவர் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்.
ஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது. சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான் அவருடனான உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.
சில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார். தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும்? இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.
முதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள் பொதுவாக இருந்தன. ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை. அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.
கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார். சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....
அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன்,
சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...
மாதவராஜ் பக்கங்கள் - 34
பெங்களூரில் அண்ணன் மகன் திருமணத்திற்குச் சென்றுவிட்டு நேற்றுதான் சாத்தூர் வந்தேன். இடையில் ஒருநாள் சென்னையையும் எட்டிப்பார்த்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது வீட்டிற்குள் நுழையும்போது உள்ளே படுத்திருந்தார் . என்னையும், அம்முவையும் பார்த்ததும், ‘வாங்க’ என்று படுத்திருந்தபடியேச் சொன்னார். மேலும் அங்கிருப்பது தொந்தரவாக இருக்கக் கூடும் என அங்கிருந்து மாடியில் தீபாவின் வீட்டிற்குச் சென்றோம். பகற்பொழுதுகள் குழந்தைகளோடு கழிந்தனவென்றாலும் பெரும்பாலும் தூங்கிக்கொண்டுதான் இருந்தேன். சாயங்காலம் ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கும்போது, ஜே.கே போன் செய்தார். “இன்னிக்கே கிளம்புறீங்களா... கீழே வருவீங்கதான?” என்றார். ஆச்சரியமாய் இருந்தது. இப்படியெல்லாம் அழைத்துப் பேசுகிறவர் இல்லை அவர். சென்றேன்.
ஹாலில் உட்கார்ந்திருந்தார். அண்ணன் மகன் திருமணம், அப்பாவின் உடல்நலம் எல்லாம் விசாரித்தார். கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தார். அதுபோன்ற சாயங்காலங்கள், அவரது வசீகரமான உலகமாயிருந்த காலங்கள் தெரியும். வீட்டு மொட்டைமாடியில் இருந்த கீற்றுக்கொட்டகையில் அவரது சபை கூடும். சிலசமயங்களில் நானும் கூட இருந்திருக்கிறேன்.“ஜே.கே”, “ஜே.கே”வென்று நண்பர்கள் வந்துகொண்டும், சென்றுகொண்டும் இருப்பார்கள். புகையை ஆழமாய் உறிஞ்சிவிட்டு, தீர்க்கமாய் எல்லோரையும் பார்ப்பார். பெரும்பாலும் அவரேதான் பேசிக்கொண்டு இருப்பார். ஒரு கேள்வி அவரிடமிருந்தே வரும். ஒரு அமைதி ஆட்கொள்ளும். சட்டென்று உடைத்துக்கொண்டு பதிலும் அவரிடமிருந்தே வரும். அதில் இருக்கும் தர்க்கங்களும், நகைச்சுவையும் சுவாரசியமாக இருக்கும். அங்கு ஆட்டோ டிரைவர்கள் இருப்பார்கள். எழுத்தாளர்கள் இருப்பார்கள். வைர வியாபாரிகள் இருப்பார்கள். டாக்டர்கள், ஆசிரியர்கள் என்று பலவகை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். ஆரவாரமும், கொண்டாட்டமுமாய் நேரங்கள் கழியும்.
இப்போது எல்லாம் வடிந்து வீடும், சாயங்காலமும் அமைதியாக இருக்கிறது. மது, புகை எல்லாம் விட்ட பிறகு ஜே.கே தியானத்தில் ஆழ்ந்திருப்பது போன்று இருக்கிறார். பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரைப் பார்க்க வருகிறவர்களும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டுவிட்டார்கள். “யாரும் இப்போ வர்றதில்ல” என்றார்கள் ஜே.கேவின் துணைவியார். “நான்தான் பேசுறது இல்லய. பிறகு அவர்கள் வந்து என்ன செய்யப் போகிறார்கள்” என்றார் ஜே.கே. என்னிடம் திரும்பி, “இவ்வளவு காலம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது சிந்தித்துக்கொண்டு மட்டும் இருக்கிறேன்” என்று சொல்லி கண்களை கொஞ்ச நேரம் மூடிக்கொண்டார். ஜே.கேவின் பேச்சுக்கள், எழுத்துக்கள், சில முக்கியமான சம்பவங்கள் குறித்து அவரது துணைவியார் சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்.
பேச்சு, தீபாவின் மகள் நேஹா குறித்து வந்தது. வீட்டின் அலமாரிகளில் இருக்கும் புத்தகங்களை நேஹாவிடம் காட்டி, “இதுல்லாம் ஜே.கே தாத்தா எழுதிய புத்தகங்கள்” என்று ஒருமுறைச் சொன்னார்களாம். இப்போது அவளே அந்த அலமாரிகளிடம் போய், “தாத்தா எழுதியது”, “தாத்தா எழுதியது” என்று எல்லோரிடமும் காட்டிக்கொண்டு இருக்கிறாளாம். ஜே.கேவின் முகம் மலர்ந்து, லேசாய் சிரித்ததைப் பார்த்தேன்.
பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டபடியால் புறப்பட எழுந்தேன். “கொஞ்சம் அடிக்கடி போனிலாவது பேசுங்க” என்றார்கள் ஜே.கேவின் துணைவியார். நான் ஜே.கேவைப் பார்த்தேன். புன்னகைத்தார். விடைபெறும்போது கைகொடுத்து அனுப்பினார். அந்த ஸ்பரிசத்தில் ஜே.கே நிறைய பேசியது போலிருந்தது.
போதை, கற்பழிப்பு எல்லாம் ராணுவப்பணிதானாம்!
கட்டுப்பாடு இழந்து அதிவேகமாக வந்த கார், சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 19 வயது இளைஞனின் உயிரைப் பறித்திருக்கிறது. ஜப்பானின் ஒகினாவா மாவட்டக் காவல்துறை திரட்டிய தகவல்களில், காரை ஓட்டிச் சென்றவன் சரியான குடிபோதையில் இருந்திருக்கிறான் என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் ஜனவரி மாதம் நடந்த இந்தக் கொடூரத்திற்கு காரணமானவன் மீது இன்றுவரை வழக்குக் கூட ஜப்பான் அரசால் பதிவு செய்ய முடியவில்லை. காரணம், அவன் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவன்.
1956ம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதாம். பணியில் இருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் செய்யும் குற்றங்கள் மற்றும் விபத்துக்களை விசாரிக்கும் அதிகாரம் அமெரிக்க நீதிமன்றங்களுக்கே உண்டு என்பது அதில் ஒரு ஷரத்தாம். அமெரிக்க இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு மதுவருந்திவிட்டுத்தான், தங்கள் வீரன் கார் ஓட்டினான் என்று ஒகினாவா படைத்தளத்தைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் சொல்கிறார்களாம். மதுவருந்துவதும் இராணுவப்பணி என்பது அவர்கள் கருத்தாம். அதனால் ஜப்பான் நீதித்துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்.
இதுபோன்ற சம்பவங்களும், கையாலாகாத்தனங்களும் ஜப்பானில் வாடிக்கையான ஒன்றாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜப்பானிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இராணுவப்பணியின் போது நடந்தது என ஜப்பான் விசாரிக்க அமெரிக்கா தடை போட்டதாம். ஜப்பான் மக்கள் அந்த நேரம் கொதித்து குரல் கொடுக்கவும், அமெரிக்காவுடனான 1956 ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று ஜப்பான் அரசு அறிவித்துவிட்டு பிறகு கிடப்பில் போட்டு விட்டதாம். சகலக் குற்றங்களையும் இராணுவப்பணியின் பேரில் அங்கு அமெரிக்க இராணுவத்தினர் தாராளமாக செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க இராணுவம் செய்யும் எதுவும் இந்த உலகில் குற்றங்கள் கிடையாது. கார் ஏற்றிக் கொல்லப்பட்ட அந்த இளைஞைனின் தாய் கதறி அழுதது அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டு இல்லை. வல்லான் வகுத்ததே விதியாகி இருக்கிறது. ஜப்பான் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. வேறு எந்த கட்சியும் இதுகுறித்து கவலை கூட தெரிவிக்கவில்லை.
.
வெறிபிடித்த இந்த நாய்களை தெருவில் இழுத்துப் போட்டு ஜப்பான் மக்கள் அடிக்க மாட்டார்களா என்றிருக்கிறது. நேற்று, ஆந்திராவில் அந்த எம்.எல்.ஏவை மலைவாழ் மக்கள் அடித்து விரட்டிய காட்சி எவ்வளவு கொண்டாட்டமாய் இருந்தது!
பின்லேடன்கள் உயிருடன் இருக்கிறார்கள், மிஸ்டர் ஒபாமா!
பிரம்மாண்டமான ஹாலிவுட் சினிமாதான் இது. பழிக்குப் பழி வாங்கி விட்டார்கள். சொன்ன மாதிரி கொன்று விட்டார்கள். அமெரிக்கா என்றால் அமெரிக்காதான். உலகம் முழுவதும் ரசிகர்கள் திளைக்கிறார்கள். இயக்குனர் ஒபாமாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
உண்மையான கதை வேறு. அமெரிக்கா தனது வேட்டைநாய் ஒன்றை அழித்திருக்கிறது. அதன் நாடி நரம்புகளெல்லாம் ரத்த ருசி ஏற்றி, மற்றவர்கள் மீது ஏவிவிடப்பட்ட அந்த நாய், பின்னொருநாள் தன் எஜமானனையே பதம் பார்த்தது. அவ்வளவுதான், ‘வெறி நாய்’ என முத்திரை குத்தி, ‘அதனால் உலகத்துக்கே ஆபத்து’ என அறிவித்து, துரத்தோ துரத்து என்று துரத்தி கடைசியில் கொன்றிருக்கிறது. இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இப்படி கூச்சல், கொண்டாட்டம் ?
“இப்போதுதான் அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது” என்று சொல்லி பூரிக்கிறார் அதன் அதிபர் ஒபாமா. இவ்வளவு வெட்கம் கெட்டவரா அவர்! கடந்த சில நூற்றாண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும், அமெரிக்கா இப்படி ஏவிவிட்ட வேட்டைநாய்கள் எத்தனை கோடி மனிதர்களின் ரத்தத்தையும், சதையையும், வாழ்வையும் ருசி பார்த்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் எப்போது நீதி கிடைக்கும் மிஸ்டர் ஒபாமா?
‘அல்லாவை நம்புகிறவர்களுக்கும், அல்லாவை நம்பாதவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்றார் பின்லேடன். ’அமெரிக்காவை நம்புகிறவர்களுக்கும், அமெரிக்காவை நம்பாதவர்களுக்கும் இடையேயான யுத்தம்” என்றார் புஷ். தங்கள் மீது நம்பிக்கையற்றவர்களை அழிக்கத் தயாரான இருவரில் ஒருவர் வில்லனாகிப் போனார். இன்னொருவர் ஹீரோவாகிப் போனார். உலகின் நிஜமான அச்சுறுத்தல் இதுதான்.
இப்போது உலகின் தீயசக்தி அழிந்துவிட்டதாகவும் , பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது போலவும், இனி உலகம் அமைதியிலும், நிம்மதியிலும் பூத்துக் குலுங்கலாம் என்றும் ஊடகங்கள் பேசிப் பேசி மாய்கின்றன. அப்புறம் எதற்கு, பின்லேடனின் உடலைக்கூட யாருக்கும் கிடைக்காமல் மறைக்க வேண்டும்? யாருக்கும் கிடைக்காமல் கடலுக்கு அடியில் புதைத்துவிட்டதாய் அறிவிக்க வேண்டும். அதில் தொக்கி நிற்பது அச்சமில்லாமல் வேறென்ன? பழிக்குப் பழி என்கிற இந்த ஹாலிவுட் சினிமாவின் கிளைமாக்ஸ் இதுவல்ல என்று அமெரிக்காவுக்குத் தெரியும்.
அமெரிக்கா தனது வேட்டையை, உலகின் மீதான மேலாதிக்கத்தை நிறுத்தினால் மட்டுமே பின்லேடனின் சரித்திரம் கடந்தகாலமாகும். அதுவரை- பின்லேடன் இறந்துவிட்டாலும், பின்லேடன்கள் உயிருடனே இருப்பார்கள்.
ஆனாலும் இயக்குனர் பாலச்சந்தரைப் பாராட்டலாம்!
நல்ல செய்திதான் இது. தாதா சாகேப் பால்கே விருது இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியச் சினிமாவில் மிக உயர்ந்த கௌரவம் இந்த விருது என்கிறார்கள். வழக்கம்போல ‘அந்த விருதுக்குப் பெருமை’, ‘காலதாமதமான மரியாதை’, ‘தகுதி வாய்ந்தவருக்கு விருது’ என்று குரல்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த விருது அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது, யார் யாரெல்லாம் இதற்கு முன்னால் அந்த விருது பெற்றிருக்கிறார்கள், அவர்களின் சாதனைகள் என்ன என்ற விபரங்கள், தீர்மானங்கள் எதுவும் இன்றி முதலில் சொல்லத் தோன்றுவது “வாழ்த்துக்கள் கே.பி சார்!”.
பாலச்சந்தர் ஒரு நடுத்தர வகுப்பினரின் இயக்குனர். இந்த வகை மனிதர்கள் சந்தித்த அக வாழ்வின் சிக்கல்களைச் சொல்லி, அவர்களையே சுவாரசியத்தோடு பார்க்கச் செய்தார். பிரச்சினகளை மையப்புள்ளியாக்கி, அவைகளைச் சுற்றிச் சுற்றி பார்வையாளர்களை பயணிக்க வைத்தார். சாமானிய மக்களைப் பற்றி அவர் தொட்ட கதைகளென்றால் ‘தண்ணீர், தண்ணீர்’, ‘தப்புத்தாளங்கள்’ போன்றவைகளே தெரிகின்றன. மற்றபடி அவரது கதாபாத்திரங்கள் பலவீனங்களும், சமரசங்களும் நிறைந்த நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும். அதற்கான புத்திசாலித்தனங்கள் கொண்ட அவர்களுக்குள் மற்றவர்களை விடக் கொஞ்சம் அதிகப்படியாய் ஊடுருவி அடிமனதில் இருக்கும் வக்கிரங்கள், ஏக்கங்கள், கனவுகளை சொல்லியபோது, அவை திகைப்பூட்டுவதாய் இருந்தன. அவனது நண்பன், தன் காதலிக்கு வாங்கி வைத்திருக்கும் புடவையை சிகரெட்டால் சல்லடையாக்குபவனாக ஒருவன் இருப்பான். தன்னைக் காதலித்தவனை விதவையான தங்கைக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டு, அடுத்த அறையில் எழும்பும் வளையல் சத்தங்களைத் தாங்காமல் வெதும்புகிறவளாக ஒருத்தி இருப்பாள். குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் தாங்கி நிற்பவர்களின் உணர்வுகளை அறியாமல் மற்றவர்கள் இருப்பார்கள்.
பாலச்சந்தரின் சினிமாக்களில் பொதுவாக ஏமாந்தவர்களும், ஏமாற்றுபவர்களுமே கதை மாந்தர்கள். ஏற்றுக்கொண்டு போகிறார்கள் சிலர். ஏற்க முடியாமல் போராடித் தோல்வியுறுகிறார்கள் சிலர். மீறி நிற்கிறார்கள் சிலர். இங்கே ஏமாற்றியவர், ஏமாறியவர் இருவருமே அருகருகே நிற்கிறார்கள். சிரிப்பு, உற்சாகம், வலி, வெறுமை, நம்பிக்கை எல்லாமும் இருக்கும் . முடிவுகளில் பெரும்பாலும் சோகம் பாவித்தவர்களாகவே பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியேறுகிறார்கள். வழக்கமான சுபம் எப்போதாவதுதான். இது அவரது பாணி.
ஒரே ஆட்டத்தைத்தான் திரும்பத் திரும்ப, வெவ்வெறு காலக்கட்டங்களில் வெவ்வெறு மனிதர்களை வைத்து பாலச்சந்தர் ஆடிப்பார்த்திருக்கிறார். எதிரொலி படத்தில் சிவாஜி, வெள்ளி விழாவில் ஜெமினிகணேசன், நூல்வேலியில் சரத்பாபு, சிந்துபைரவியில் சிவகுமார் எல்லாம் ஒரு வகையானவர்கள். அவர்களின் தடுமாற்றங்களில் வாழ்க்கை அலைக்கழிக்கப்படுவதோடு ரசிகர்கள் ஒன்றிப்போனார்கள். நேர்மை கொண்ட மனிதர்களை முன்வைத்து, அவர்களின் போராட்டங்களையும் சொல்லி இருக்கிறார். வறுமையின் நிறம் சிகப்பு, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் இத்தகையவை. ‘நான் அவனில்லை, ‘மன்மதலீலை’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்கள் தனிமனித வக்கிரங்களை ரசிக்கிற மாதிரிச் சொல்லியவை. சினிமாக் கதாபாத்திரங்களின் மீது மயக்கம் கொண்ட ‘பாமா விஜயம்’, ஒருவகை என்றால் ’வானமே எல்லை’ இன்னொரு வகை. வாழ்வின் நெருக்கடிகளில் புதையுண்டு மீள முடியாதவர்களை அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் போன்றவை காண்பிக்கின்றன. துரோகங்களைச் சொல்லியவாறு மூன்று முடிச்சு, 47 நாட்கள் வெளிவந்தன. சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் இன்னொரு பிரதியாக கல்யாண அகதிகள். அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதா என்றால், மனதில் உறுதி வேண்டும் என சுஹாசினி.இவைகளுக்கிடையே அவ்வப்போது நினைத்தாலே இனிக்கும், டூயட், புன்னகை மன்னன் போன்ற காதல் படங்கள்.
இப்படியான சுழற்சிகளுக்குள் இருந்து வெளிப்பட்ட காட்சிகளாய் பாலச்சந்தரின் சினிமாக்கள் இருக்கின்றன. ஆனால் எத்தனை தடவை ஆடினாலும், ஆட்டம் ஒரே மாதிரியாகி இருப்பது அவருக்கு ஆடத்தெரியாததையே காட்டுகிறது. இன்னொருத்தியைக் காப்பாற்ற சொல்லத்தான் நினைக்கிறேனில் தன் உடலை இழக்கும் ஜெயசித்ராவின் உத்தியையே இருபது வருடங்களுக்குப் பிறகு வந்த அவரது கல்கியின் கதாநாயகியும் பின்பற்றுகிறாள். இருகோடுகளில் சௌகார் ஜானகிக்கு நேர்ந்ததுதான் சிந்துபைரவியில் சுஹாசினிக்கும். மரோசரித்திராவில் இறந்த காதலர்கள், புன்னகை மன்னனிலும் பிழைக்க மாட்டார்கள். இப்படிப் பார்த்தால், பெரிதாக எந்த கலகத்தையும் மீறலையும் செய்யாத, புதுமைகள் புரியாத இயக்குனர் பாலச்சந்தர் என்பதை அறியலாம்.
“மற்றவர்களைப் போல பெண்களின் உடலை நம்பி, அவர் படம் எடுக்க மாட்டார்தான், ஆனால் தவறாமல் அவரது படங்களில் கதாநாயகி மாராப்பு விலகி நிற்பதாய் ஒரு காட்சியாவது இருக்கும்” என நண்பர் ஒருவர் சீரியஸாகவே பாலச்சந்தர் படம் குறித்து அபிப்பிராயம் சொன்னார். இது ஒரு குறியீடு போல இப்போது தெரிகிறது. எதாவது ஒரு கணத்தில் ஒரு ஆணிடம் விரும்பி உடலைப் பகிர்ந்துகொள்கிற பெண்களே மையமாகிறார்கள். மேஜர் சந்திரகாந்த்திலிருந்து ஆரம்பித்து, இருகோடுகள், நூற்றுக்கு நூறு எனத் தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, பட்டினப்பிரவேசம், நூல்வேலி, சிந்துபைரவி என வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் பாலச்சந்தருக்கு முக்கியப் பிரச்சினையாக தெரிந்திருக்கிறது. அடுத்தது ஒருவனுக்கு இரண்டு பெண்களோடு உறவு இருப்பதில் நேரும் சிக்கல்களைப் பற்றிய கதைகள். இவைகளுக்கும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம். இவைகளோடுக் கலந்து கூட்டுக்குடும்பம், வேலையின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வார்.
உடலையோ மனதையோ இழந்த பெண்கள், குடும்பத்துக்காகத் தேய்கிற பெண்கள் என வலம் வரும் இவர்கள் கேள்விக்குறியாகப் போகிறார்கள். ஆண்களுக்கு அக்கதி ஏற்படவில்லை. காவியத்தலைவி சௌகார் ஜானகியும், நிழல் நிஜமாகிறது ஷோபாவுமே தலை நிமிர்ந்து ஆச்சரியக் குறிகளாகிறார்கள். இந்த இருபடங்களும் முக்கியமானவை. இவைகளும் பிற மொழிப்படங்களின் தழுவல்கள், அல்லது அப்பட்டமான பிரதிகள் என்று சொல்கிறார்கள். அவரது பல படங்களின் காட்சிகள் வங்காளப் படங்களிலிருந்து அப்படியே எடுக்கப்பட்டவை, ஒரிஜினாலிட்டியும், கிரியேட்டிவிட்டியும் இல்லாதவர் என்ற விமர்சனமும் அவர் மீது படிந்தே இருக்கிறது.
அவரது படங்கள் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம், வசனங்கள்தாம். வார்த்தைகளில் வெளிப்படும் பொறிகளும், அர்த்தங்களும் புதிதாக இருந்தன. காட்சியமைப்புகளில் இருக்கும் பலவீனங்களைச் சரிக்கட்டி, பார்வையாளர்களை பாத்திரங்களோடு ஒன்றச் செய்தன. அவர் வந்த நாடக உலகிலிருந்து சுவீகரித்துக் கொண்ட வித்தை இது. அதில் மேலோங்கி இருக்கும் ஒரு‘புத்திசாலித்தனத்தை’ நடுத்தர வகுப்பினர் சிலாகித்தார்கள். அதில் இருந்த தெறிப்புகளைக் கொண்டாடினார்கள். சினிமா என்பது காட்சி ஊடகம். அதற்கு என்ன நியாயம் பாலச்சந்தர் செய்தார் என்பது விவாதத்திற்குரியது.
ஆனாலும், சந்தேகமில்லாமல் அவர் தமிழில் முக்கிய இயக்குனர். அவரது பல படங்களில், சமகாலத்தின் நிகழ்வுகளும், போக்குகளும் பிரதிபலித்திருக்கின்றன. தப்புத்தாளங்கள், நிழல் நிஜமாகிறது போன்ற நல்ல படங்களைத் தந்த அவரின் மாஸ்டர் பீஸ் என்றால் ஒரு வீடு இரு வாசல்தான். சினிமாவின் துணை நடிகர், நடிகையரின் வாழ்வை மிக நெருக்கத்தில் காட்டிய படம் அது. சாபம் படிந்த அந்த மனிதர்களின் வாழ்வை தமிழ்ச்சினிமாவில் அதற்கு முன்னும், பின்னும் யாரும் அவ்வளவு வலியோடுச் சொல்லவில்லை.
அவர் இயக்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். யாரின் இயக்கத்திலும் இவ்வளவு படங்களை பார்த்திருக்கவில்லை. முடியாது என்றும் நினைக்கிறேன். இந்த அளவுக்கு யாரேனும் இப்படிதொடந்து இயக்கி இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. இது ஒரு சாதனை. 1970களிலிருந்து முப்பது வருடங்கள் போல தமிழ்ச்சினிமா உச்சரித்துக்கொண்டே இருந்த பேர் ‘கே.பாலச்சந்தர்’. அவரது படங்களை வைத்து விமர்சனம் செய்வதற்கு இருந்த போதிலும், நினைப்பதற்கும் கொண்டாடுவதற்கும் செய்திகள் இருப்பதாகவே இச்சமயத்தில் உணர்கிறேன். வெறும் நாயகத்தன்மைக்கு இடமளிக்காமல், கதைகளை நம்பி சினிமா எடுத்திருக்கிறார். சினிமா என்னும் அற்புதத்தையும் சக்திவாய்ந்த ஊடகத்தையும் தமிழில் சீரழித்துக் குட்டிச்சுவராக்கிய எம்.ஜி.ஆரின் காலத்திலேயே இதை அரவமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறார். முதன்முதலாக எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதிய அவர் பிறகு இயக்கிய படங்களில் ஒன்றில் கூட எம்.ஜி.ஆருக்கு இடமில்லை. இது தற்செயலாக மட்டுமே பார்க்க முடியாதவாறு அவரது கதைகளும், பார்வையாளர்களும் இருந்திருக்கின்றனர்.
மீண்டும் “வாழ்த்துக்கள் கே.பி சார்”.
ஒன்றுமில்லை அது
தனியாக சிந்திக்கும்போதும், இன்னொருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போதும் நீங்கள் அதனை கைகளால் வெறுமனே உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றுமில்லை அது.
குழந்தைகளோ கண்கள் விரிய பார்க்கிறார்கள். மேகங்கள், பூக்கள், நீர்ச்சுழிவுகள் எல்லாம் அசையாமல் உள்ளே இருக்கின்றன. வண்ணச் சிதறல்கள் வெடித்து அழகழகாய் சிந்திக் கிடக்கின்றன. அவற்றைப் பிடித்துவிட குழந்தைகளின் விரல்கள் தடவுகின்றன. அப்படியே அதை விழுங்கிவிட ஆசை கொள்கிறார்கள். உறைந்த நீர் போலிருக்கும் அதற்குள் புகுந்து அதிசயங்களைக் காணத் துடிக்கிறார்கள். மீன்களாகவும், பறவைகளாகவும் உருமாறுகிறார்கள்.
பெரும் ஆர்வத்தோடு உங்களிடம் கேட்கிறார்கள், “இது என்ன முட்டை” என்று. பெரியவர்கள் நீங்கள் அவசரம் அவசரமாய் திருத்துகிறீர்கள், “அது பேப்பர் வெயிட்” என்று.





