10 கிராம் நகையும் அஞ்சலக சேமிப்பும்!
கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலபாரதியின் சொத்து 10 கிராம் நகையும், அஞ்சலகச் சேமிப்புமாக ரூ.1 லட்சம் மட்டுமே.
திண்டுக்கல் ஸ்டேட் பாங்க் (மெயின்)கில் ரூ.3,170ம், சென்னை அண்ணா நகர் இந்தியன் வங்கியில் ரூ.38ம் பணம் வைத்துள்ளார். வேட்புமனுத் தாக்கலை தொடர்ந்து, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்பேரில் திண்டுக்கல் நேருஜி நகர் இந்தியன் வங்கியில் ரூ.1000 கட்டியுள்ளார்.
தனது ஊரான கதிரணம்பட்டி அருகேயுள்ள ரெட்டியார் சத்திரம் அஞ்சலகத்தில் சிறு சேமிப்பில் ரூ.42,472ம், தொடர் வைப்பு நிதியில் ரூ.43 ஆயிரமும் வைத்துள்ளார். கட்சியில் கொடுக்கும் ஊதியத்தைக் கொண்டு மாதா மாதம் கடந்த பல வருடங்களாக சேமித்த தொகைதான் இந்த 85,472 ரூபாய் ஆகும்.
மேலும் நகைகளாக 2 கிராம் தோடு, 8 கிராம் செயின் வைத்துள்ளார். இந்த 10 கிராம் நகையும் கடந்த 10 வருடங்களாக அவர் வைத்துள்ள நகைதான். கடந்த தேர்தலின் போதும் இந்த நகைகளை கணக்கில் காட்டினார். அன்றைக்கு 2 கிராம் தோடுக்கு ரூ.1200 விலை கொடுத்து வாங்கியுள்ளார். அதன் இன்றைய மதிப்பாக ரூ.3950 காட்டப்பட்டுள்ளது. இதே போல் 8 கிராம் செயினுக்கு ரூ.6400 அன்றைய மதிப்பு. அந்த செயினுக்கு இன்றைய மதிப்பு ரூ.15,600 காட்டப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து230 ரூபாய் 96 பைசாதான் அவரது சொத்து மதிப்பு. கையிருப்பு ஏதும் இல்லாமல் போட்டியிடுகிறார். வேட்புமனுத்தாக்கலின்போது அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை பார்த்து கையிருப்பே இல்லாத வேட்பாளர் கே.பாலபாரதி என பத்திரிகைகள் எழுதின.
எதிரணியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பால்பாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் இந்த முறையும் போட்டியிடுகிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற சொற்களுக்கு சொந்தக்காரர்கள் மார்க்சிஸ்ட்டுகள் என்பதற்கு ஓர் இலக்கணமாக உள்ளார் கே.பாலபாரதி.
- இலமு, திண்டுக்கல்
நன்றி: தீக்கதிர்
தொடர்புடைய இடுகை::
மிக்ஸி!
“கிஸ்தி, திரை, வரி, வட்டி” பாணியில் “உனக்கேன் 63 சீட்” என காங்கிரஸுக்கு எதிராக சினிமா கட்டபொம்மனாக இரண்டு வாரத்துக்கு முன்பு கர்ஜித்த கருணாநிதி “இது கொள்கைக்காக உருவான கூட்டணி” என்று இபோது கரகரத்துக்கொண்டு இருக்கிறார். சசிகலா அன் கோவை அருகில் வைத்துக்கொண்டே “குடும்ப ஆட்சியை தூக்கி எறியுங்கள்” என பின்னோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி போர்க்கோலம் பூண்டு போகிறார் ஜெயலலிதா. “நான் பதுங்குகிறேன், பாய்வேன்” என ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார் வைகோ. “அன்னை சோனியா, அன்னை சோனியா” என்ற மந்திரம் திரும்பத் திரும்ப ஒரிடத்தில் கேட்க, சுற்றி நின்று “தங்கபாலு ஒழிக, நாசமாய்ப் போக” என செருப்பால் அடித்துக்கொண்டு இருக்கின்றனர் பக்தர்கள். திடீர் திடீரென்று அழகிரியும், ஸ்டாலினும் குதித்து குதித்து தாங்களும் இருக்கிறோம் என கத்திக் கொண்டிருக்கின்றனர். “நான் மக்களோடும், ஆண்டவனோடும் கூட்டணி வைத்து இருக்கிறேன்” என்று கண்போன போக்கில் கையசைத்துக்கொண்டு போகிறார் விஜய்காந்த். போதாதென்று குஷ்பு, பாக்கியராஜ், வடிவேலு இன்னபிற கலாநிகழ்ச்சிகள் அங்கங்கு. “ஊழல், விலைவாசி உயர்வு, மக்கள்” என அக்கறையோடு பேசிய குரல்கள் சத்தமாய் எழவில்லை. “அமைதி, அமைதி” என்று கறாராக குறிப்பிட்ட இடைவேளையில் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள் தேர்தல் கமிஷன்காரர்கள்.
ஆள் ஆளுக்குச் சத்தம் போட்டு பேச, மிக்ஸியின் சத்தம் போல ஒரே இரைச்சலாகக் கேட்கிறது. அரைபடுகிறது இந்திய ஜனநாயகம்.
இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?
“அப்பா, இதென்ன உங்க கையில கருப்பா மை இருக்கு?”
“ஓட்டு போட்டேன்”
“ஓட்டுன்னா என்னப்பா?”
“இதோ டிவில காண்பிக்கிறாங்க... பாரு!”
“கருணாநிதி ஓட்டு போடுறாரா?”
“ஆமா”
“இப்ப... ஜெயலலிதா ஓட்டுப் போடுறாரா?”
“ஆமா”
“அப்பா... விஜய்காந்த்தும் ஓட்டுப் போடுறார்!”
“ஆமா”
“எதுக்குப்பா ஓட்டுப் போடுறாங்க?”
“நிறைய ஓட்டுக் கெடைச்சவங்க ஜெயிப்பாங்க”
“கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த்துல்லாம் ஜெயிச்சுருவாங்களா?”
“யாராவது ஒருத்தர்தான் ஜெய்ப்பாங்க”
“இவங்க எல்லாம் ஜெயிக்க மாட்டாங்களா?”
“................”.
டி.வியில் மக்கள் வரிசையில் நின்று ஒட்டுப் போட்டுக் கொண்டு இருந்தார்கள் அப்போது.
(இது ஒரு மீள் பதிவு. அதுவும் மே,13 2009ல் எழுதியது.)
ஏ பிச்சுக்கா...குப்பாச்சி எங்கே இருக்கே?
'ஏ குருவி, சிட்டுக் குருவி...எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு....'என்று போகிற (அண்மையில் மறைந்துவிட்ட அற்புதப் பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில்..) முதல் மரியாதை திரைப்படப் பாடலை யார்தான் கேட்டு ரசித்திருக்க மாட்டோம்? இளமைப் பருவங்களில் இயற்கையின் தோழர்களாகத் தொடங்கும் மனிதர்களின் வாழ்வில் பறவைகள் முக்கியமானவை. கண்ணுக்கும், கைக்கும் அடக்கமான செல்லப் பிஞ்சுக் குட்டியாகக் காட்சியளிக்கும் குருவிகள் வசீகரமானவை.
உலகின் தேர்ந்த சிற்பி செதுக்கிய கழுத்தும், மகத்தான ஓவியரின் தூரிகை தேர்ந்தெடுத்த வண்ணங்களும் ஒயிலான சிறகு மடிப்பும், ஓர் இராணுவ அதிகாரி கற்றுக் கொடுத்தது மாதிரியான மிடுக்கான கம்பீரமும், அதிலிருந்து ஒளிச் சிதறலான பார்வையும், திருவிழாக் கடைத்தெருவில் இதை வாங்கிக் கொடு, அதை வாங்கிக் கொடு என்று ஓயாமல் சிணுங்கிக் கவனத்தை ஈர்த்துவிடுகிற குழந்தை மாதிரியான கீச்சொலியுமாய் எப்படி மறக்க இயலும் குருவிகளின் உலகத்தை....
பறவை மனிதர் என்று பார் அறியப் புகழ் வாழ்வு வாழ்ந்து மறைந்த டாக்டர் சலீம் அலி அவர்களது இளைமைக் காலத்தில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, பறவைகளின் தோழனாய் அவரை வடிவமைத்த பெருமை, அவரது விளையாட்டு துப்பாக்கியின் கல் தோட்டாவிற்கு பலியான குருவியைத் தான் சாரும். டபிள்யூ எஸ் வில்லார்ட் என்ற பறவை நிபுணரிடம் பின்னர் அவர் கேட்டறிந்த அந்தப் பறவையின் பெயர் மஞ்சள் கழுத்துக் குருவி. அவரிடம் பறவைகள் குறித்த ஞானத்தின் பால படத்தைக் கற்ற சலீம் அலி, இந்தியா நெடுக பறவைகள் சரணாலயம் அமையவும், மனிதர்கள் இயற்கையைக் கொண்டாட வேண்டிய அருமையைப் புரிந்து கொள்ளவும் தமது வாழ்வை அர்ப்பணித்தவர்.
இப்படியான பறவைகளைத் தான் நமது நவீன வாழ்வுச் சூழல் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இன்ன காரணம் என்று வரையறுக்க முடியவில்லை என்றாலும், நமது உணவு முறை, குருவிகளுக்கு ஒரு கூடு கட்டிக் கொள்ள இடம் தராத நவீன அடுக்ககங்களின் வடிவமைப்பு, குருவி போன்ற பறவைகளின் முக்கிய உணவான பூச்சி, புழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருவது., கான்கிரீட் உலகம் வெளியேற்றிக் கொண்டிருக்கும் புல் தரைகள், பூந்தோட்டங்கள், தலையில் தட்டிக் குறுக்கி வளர்க்கப்படும் தாவரங்களால் விடைபெற்றுப் போகும் நீண்ட நெடிய மரங்கள்....என பறவைகளுக்கு ஒவ்வாத புறவுலகில் தான் நாம் நம்மைக் குடியமர்த்திக் கொண்டு வருகிறோம்.
அலைபேசி தொடர்புக்காக அமைக்கப்படும் கோபுரங்கள் கூட, அவற்றின் அலைவீச்சு கூட குருவிகளின் இனப்பெருக்கத்திற்கு எதிராக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. நகர வாழ்விலும், நமது வேளாண்மையிலும் மிகையாகிக் கொண்டு வரும் வேதியல் பொருள்களும் ஒரு காரணம். இந்த காரணங்களைச் சொல்லும் ஹிந்து நாளேட்டின் சிறுவர்களுக்கான யங் வேர்ல்ட் இணைப்பில் அண்மையில் வந்திருக்கும் கட்டுரையில், ஈயம் பிரிக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டினால் வெளிவரும் புகையில் இருக்கும் மீதில் நைட்ரைட் கூட குருவிகளின் உணவான புழுக்களை ஒழித்துக் கட்டிவிடுகின்றன என்று சொல்கிறது. குருவிகள் இனத்தைக் காக்க வேண்டியது இப்போது விரிவான விவாதப் பொருளாகி வருகிறது.
உலகு முழுக்க இயற்கை நேயர்கள், மார்ச் இருபதாம் தேதியை, குருவிகள் தினமாக அனுசரிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழில் நாம் குருவி என்று வாய் நிறைய விளித்து மகிழும் இந்தச் செல்லச் சிட்டுக்கு, தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா, பிச்சுக்கா!கன்னடத்தில்? குப்பாச்சி. இந்தி மொழியில் கொரையா. குஜாராத்தி மக்கள் சாக்லி என்று அழைத்தால், மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் பெயர் சிமானி. மேற்கு வங்கத்தில் சராய் பகி, உருது மொழியில் சிரியா, சிந்தியில் ஜிர்க்கி. நமக்கு, குழந்தையின் உதடுகளைக் குவித்து ஒயிலாகச் சொல்லும் குருவி...
வீட்டுச் சமையலுக்கே காணாத தானியங்களை எடுத்து, காக்கை குருவி எங்கள் சாதி..என்று மகாகவி, பறவைகளுக்காக இறைத்து வைப்பாராம். எளிய தோட்டம், சிறிய நீர்த்தொட்டி, சிந்திக் கிடக்கும் தானிய மணிகள், குறைத்துக் கொள்ளப்படும் வேதியல் பயன்பாடு...என நாமும் பறவைகளின் காதலர்களாக எத்தனையோ சாத்தியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
குஞ்சுகளைக் காப்பதில் தாய்க் குருவியும், தகப்பன் குருவியும் ஒன்று போல் ஆசையாயிருக்குமாம். குருவிகளைக் காப்பதில் மனித சமூகம் மட்டும் அலட்சியம் காட்டினால் எப்படி? பறவைகளுக்கு அந்நியமாகிவிட்ட மண்ணில், மனித இனம் மட்டும் தழைத்துவிட முடியுமா என்ன! மார்ச் இருபது, மானுட தினம் என்றே கொள்ள வேண்டும். சலீம் அலி இதைப் புரிந்து வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது.
- எஸ்.வி.வேணுகோபாலன்
இன்று உலகக் குருவிகள் தினம்!
இதையும் படியுங்கள்: எங்க போச்சு?
தொகுதிப் பங்கீடுகள்: பல குழப்பங்களும், சில தெளிவுகளும்
தமிழக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடந்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது.
முதலில் திமுக அணியில் அது ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு அறுபதா, அறுபத்துமூன்றா என்ற கணக்கில் தன்மானம், சுய கவுரவம் என்ற வார்த்தைகளைக் கொட்டி வெடித்தது. இதுதான் சமயம் என ஜெயலலிதாவோ காங்கிரஸோடு கூட்டணி சேர ஆட்களை அனுப்பினார். டெல்லி போன தி.மு.க பொத்திக்கொண்டு வந்து நல்லபிள்ளையாக ‘அறுபத்து மூன்று’ என்று கீச்சுக்குரலில் சொல்லியது. எதிர்பார்த்த விருந்தினர்களைப் போல சி.பி.ஐயை வரவேற்று அனுப்பிய கனிமொழியின் முகத்தில் மொத்த பேரங்களும், பேச்சுவார்த்தைகளும் வெளிச்சமாய்த் தெரிந்தது. தி.மு.கவின் கொந்தளிப்பைப் பார்த்து முதலில் சிலிர்த்த திருமாவளவன், பிறகு ‘இது வெற்றிக்கூட்டணி’ என்று ராமதாஸைக் கட்டிப் பிடித்து புளகாங்கிதம் அடைந்துகொண்டார்.
அடுத்து, அ.தி.மு.க அணியில் தொகுதிப் பங்கீட்டில் கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கவில்லையென்பதால் ‘கொடுத்ததை வாங்கிக்கொள்ள நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல!” என்னும் ‘அறச்சீற்றத்துடன்’ தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ, புதிய தமிழகம் எல்லாம் ஒன்று திரண்டு அதிருப்தியை வெளிப்படுத்தின. தனக்கே உண்டான அலட்சியத்துடனும், அகங்காரத்துடனும் நின்ற ஜெயலலிதா, அதிகார வடை போய்விடுமோ என்ற அச்சத்தில் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு கட்சிகளுடன் தூது அனுப்பி, விடிய விடியப் பேசி இப்போது சமாதானம் செய்து வருகிறார். எதாவது நடந்து இந்தக் கூட்டணி உடைந்து போகாதா, நம் எதிரி அணி பலமிழந்து போகாதா என்கிற நப்பாசையில், மாறி மாறி கொடும்பாவி எரிப்புக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த சன் டி.வி இப்போது உதட்டைப் பிதுக்கி, ப்ச்சென்று காமிராவை திசை திருப்பி இருக்கிறது.
இவ்வாறு ‘எரிமலைக்குழம்புகள்’ எல்லாம் நீர்க்குமிழிகளாகி வடிந்தவிட்ட நிலையில், அடுத்து தர்ம யுத்தம்தான். இருபக்கமும் தத்தம் ரஜ கத சூட்கேஸ் இத்யாதிகளோடு வில்பூட்டி நிற்பார்கள். அம்புகள் மாறி மாறி பறக்கும். வாள்சண்டை, கதச் சண்டை என தூள் பறக்கும். ‘சபாஷ்’, ‘பேஷ் பேஷ்’ என மைதானத்துக்கு வெளியே நின்று மக்கள் கூட்டம் ஆரவாரிக்கும். எல்லாவற்றுக்கும் ஒருநாள் கறுப்பு மையால் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஐந்து வருடம் யாருக்கு குத்தகை கிடைத்திருக்கிறது என்னும் தீர்ப்பாகவும் அது இருக்கும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என பட்டொளி வீசும் தேசீயக் கொடி.. பிறகு வழக்கம் போல விலைவாசி உயர்வு, வழக்கம் போல மக்களைச் சுரண்டும் ஆட்சி, வழக்கம்போல் கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரங்கள், போராட்டங்கள்.
நிற்க. இந்தக் கூத்துக்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கும்போது டாக்டர் ராமதாஸ் அவர்களிடம், மைக்கை நீட்டி, “மூன்றாவது அணி உருவாகுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பேச வேண்டும் போல் இருக்கிறது. “அரசியல்ல இதெல்லாம் சகஜம்” என்று செத்துப்போன சிரிப்போடு அவர் சொன்னதை எத்தனை பேர் பார்த்தார்கள் எனத் தெரியவில்லை. அந்த முகம் அவ்வளவு அருவருப்பாய் இருந்தது! உண்மைதான். அவர்களுக்கு இதெல்லாம் சகஜம்தான். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு? தே.மு.தி.க தொண்டர்களின் ஆர்ப்பரிப்புகளுக்கிடையில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் விஜய்காந்தைப் பார்க்கச் சென்றபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது போலவே தெரிந்தது. முதலாளித்துவ ஜனநாயகம் இழுத்த இழுப்புக்கெல்லாம் அசைகிற அவலத்தை அப்பட்டமாய் உணர முடிந்தது.
இன்று காலையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, “அடிச்சுப் புடிச்சு ஒரு வழியா நீங்களும் ஒங்க தொகுதிகளை வாங்கிட்டீங்க போலுக்கு” என்றார். எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல், மிக இயல்பாய் அதன் போக்கில் வந்து விழுந்த வார்த்தைகள் இவை. ஆனால் ‘அடிச்சுப் புடிச்சு’, ‘ஒரு வழியா’ ‘நீங்களும்’ என்று ஒவ்வொரு வார்த்தையும் அடர்த்தி கொண்டவையாய் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்தத் தேர்தல்களை கம்யூனிஸ்டுகள் எப்படிப் பார்க்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்பதை அவருக்கு எப்படிப் புரியவைப்பது என எனக்குத் தெரியவில்லை.
காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இந்தத் தேர்தல்கள் வாழ்வா, சாவா என்று தோன்றலாம். ஆட்சிஅதிகாரம் மட்டுமே அவர்களின் இறுதி லட்சியம். அதன் பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு இந்தத் தேர்தல்களின் மூலம் அதிகாரத்தை நோக்கி நகர்வதும் அல்லது அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதும் நிச்சயம் நோக்கமாய் இருக்க முடியாது. அவர்கள் செல்வாக்கு பெற்று ஆட்சியமைக்கும் மாநிலங்களையும் உள்ளடக்கியே இதனைச் சொல்ல வேண்டும். சுரண்டலற்ற, வர்க்க பேதங்களற்ற சமுதாயத்தைப் படைக்கும் தங்களின் மகத்தான லட்சியப்பாதையில் இருக்கும் தடைகளை அகற்ற கம்யூனிஸ்டுகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துகிறார்கள். தங்கள் வரலாற்று லட்சியத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இது ஒரு அரசியல் நிலைபாடு. அவ்வளவே. இந்தக் காரியத்தைச் செய்யத் துணிகிற போது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கிற அழுக்குகளும், அசிங்கங்களும் தங்களைப் பீடித்துக்கொள்ளாமல் அவர்கள் உதாரண புருஷர்களாகவும், தங்கள் தனித்துவத்தை இழக்காமலும் இருக்க வேண்டும். தேர்தல்களை நாற்காலிச் சண்டைகளாக வேடிக்கை பார்க்கும் மக்களை சரியான அரசியல் நோக்கி நகர்த்த வேண்டும். தங்களையும், தங்களுடைய கொள்கைகளையும் மற்றவர்களுடன் வேறுபடுத்துப் பார்க்குமாறு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் சாத்தியமாயிருந்தால், “அடிச்சுப் புடிச்சு ஒரு வழியா நீங்களும் ஒங்க தொகுதிகளை வாங்கிட்டீங்க போலுக்கு” என்ற வார்த்தைகள் கம்யூனிஸ்டுகளை நோக்கி வந்திருக்காது. முதலாளித்துவ ஊடகங்களும், சீர்குலைவு சக்திகளும் கம்யூனிஸ்டுகளை கொச்சைப்படுத்தவும், தனிமைப்படுத்தவுமே அல்லும் பகலும் இயங்குவார்கள். அவர்களின் பிரச்சாரத்தினால்தான் இப்படியான வார்த்தைகள் நம்மை நோக்கி வருகின்றன என்று ஒரேயடியாக முகத்தைத் திருப்பிகொள்வது சரியாய் இருக்காது என்று தோன்றுகிறது. இந்தத் தேர்தல் முறையில், தங்களுக்கு இருக்கும் இத்தனை வருட அனுபவங்களை வைத்து எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்வதும், மறு பரிசீலனை செய்வதும் அவசியம் என்றே படுகிறது.
இந்தத் தேர்தல் முறையில், சித்தாந்தங்களையும், லட்சியங்களையும் முன்வைக்கிற அரசியலுக்கு சுத்தமாய் இடமில்லை . எதுவும் நிகழும், யாரும் யாருடனும் அணி சேரலாம் என்பதே இங்கு விதி. நேர்மை, எளிமை எல்லாம் காலாவதியாகி விட்டன. கரன்சிகளை விதைத்து ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்பது சாத்தியமாகி விட்டது . ஜாதிய அமைப்புகளை சேர்த்துக்கொண்டு ‘போடுங்கம்மா ஒட்டு’ என கேட்பதற்கு எந்தத் தடையுமில்லை. மக்களை இவ்வளவு கொச்சைப்படுத்தும் ஜனநாயகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நாளுக்கு நாள் இந்த தேர்தல் முறை அழுகி நாற்றமெடுக்கிறது. பனைமரத்தடியில் உட்கார்ந்து பாலைக் குடித்து எந்த பயனுமில்லை, தோழர்களே! வீடியோ கண்காணிப்புகள், பணம் பறிமுதல் என்ற நடவடிக்கைகள் பேரில் இந்தத் தேர்தல் முறையின் மீது நம்பகத்தன்மையை தக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன்கள் மூலம் முதலாளித்துவ அமைப்பு முயலலாம். மக்களும் ஏமாறலாம். கம்யூனிஸ்டுகளும் கூடவா?
‘நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்போம், அதை நமது மேடையாக்கி நமது அரசியலை முன்வைப்போம்’ என்னும் கம்யூனிஸ்டுகளின் திட்டமிடுதல் சரியே. ஆனால் இந்தத் தேர்தல் முறை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான பாதையில்லை. வேட்பாளர், சாதி, பணம், சந்தர்ப்பவாதம் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி கொள்கையை மட்டும் முன்வைத்துப் பேசுகிற விகிதாரச்சார தேர்தல் முறையே அதற்கான வழியும், மாற்றாகவும் இருக்கும். இப்படித்தான் என சிற்றறிவுக்குப் படுகிறது. கம்யூனிஸ்டுகள் விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவதும், அதுவரை இந்தக் கேடுகெட்ட தேர்தல் முறையில் பங்கேற்காமல் இருப்பதுவுமே சரியான பாதையாய் இருக்கும்.
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
மகாகவியின் இந்தக் கவிதை வரிகளை சத்தம் போட்டு வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்? - 2
இதற்கு முன்பு கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள் என்று ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதன் இறுதியில் “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?” இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா? என்று கம்யூனிஸ்டுகளின் நோக்கங்கள் குறித்த கேள்வியோடு முடித்திருந்தேன். வராத பதில்கள், கம்யூனிஸ்டுகள் மீது பழிசுமத்த முடியாமல் இருப்பதையே காட்டுகின்றன. வந்திருந்த பின்னூட்டங்களில் ஆதங்கங்கள் வெளிப்பட்டு இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் மீதான மரியாதையே தொனிக்கின்றன. நோக்கங்கள் குறித்து விவாதங்கள் பெரிதாக இல்லை.
சரி. இப்போது திரும்பவும் அதே கேள்வியைக் கேட்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்தமுறை விளைவுகளிலிருந்து எழும்பியிருக்கும் கேள்வியாக வைத்துப் பார்க்கலாம். கடந்தகால பரிசீலனைகளை கம்யூனிஸ்டுகள் குறித்தே வைத்திருப்பார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இந்த ஜெயலலிதாவோடு தொகுதி உடன்பாடு வைத்து, அவர் ஆட்சியில் அமர உதவிகரமாய் இருந்த கம்யூனிஸ்டுகள், அந்த அனுபவங்களை மறந்திருக்க மாட்டர்கள்.
அவைகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் என்னவெல்லாம் தெரிகிறது! இலவச மின்சாரம் ரத்து செய்ததிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாய் முன்வருகின்றன. எலிக்கறிச் சாப்பிட்ட தஞ்சை விவசாயிகளும், மாடுகள் போல கஞ்சித் தொட்டிகள் முன்னால் நின்ற நெசவாளர்களும் தெரிகின்றனர். டிஸ்மிஸ் செய்யப்பட்ட பத்தாயிரம் சாலைப்பணியாளர்களின் அவல வாழ்வு தெரிகிறது. ஒரே கையெழுத்தில் 1,77,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த குரூரப் புத்தி தெரிகிறது. பொடா ராஜ்ஜியம் விரிகிறது. கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் கைகொட்டிச் சிரிக்கின்றன. இன்னும் இன்னும் எவ்வளவு தெரிகின்றன! தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்ட அதே கம்யூனிஸ்டுகள், இந்த ஜெயலலிதாவை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள். அவைகளும் தெரிகின்றன. இந்த அம்மையாரை அதிகாரத்திலிருந்து அகற்ற, கம்யூனிஸ்டுகளே அடுத்த தேர்தலில் தி.மு.கவுடன் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டு எவ்வளவு முனைப்புடன் பணியாற்றினார்கள். அவைகளும் தெரிகின்றன.
இவ்வளவுக்கும் பிறகு “கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்? என்ற எளிமையான, நேரிடையான கேள்விக்கு பதில் என்ன சொல்ல முடியும்? தி.மு.க ஆட்சி மக்களுக்கு விரோதமாய் இருக்கிறது. காங்கிரஸோடு அது வைத்திருக்கும் கூட்டணி நாட்டுக்கே ஊறு விளைவிப்பதாய் இருக்கிறது . இதுதான் ஜெயலலிதாவிடம் போய் கம்யூனிஸ்டுகளை நிறுத்தியிருக்கிறது. சரிதான். இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்? இங்கே எந்தவிதமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட முடியும்?
கொள்கை, கோட்பாடு, லட்சியம் என்று எதுவும் மற்றவர்களிடம் இல்லை. பொய், புரட்டு, சூது, வாது, பித்தலாட்டம், சந்தர்ப்பவாதம் என அத்தனை சமூக அழுக்குகளும் அரங்கேறும் மேடையாக இந்த தேர்தல் முறை ஆகிப் போய்விட்டது. கள்ளப்பணமும், கறுப்புப்பணமும் கோடி கோடியாய் புழங்கும் பிஸினஸ் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் இந்த தேர்தல் மேலும் மேலும் அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது. அதிகாரம் ஒன்றே குறியகவும், அதற்காக எதையும் செய்யத் துணிபவர்களாக மற்றவர்கள் இருக்கிறார்கள். தொண்ணூற்று எட்டு சதவீதம் இப்படிப்பட்டவர்களாக நிறைந்திருக்க, அவையோடு இரண்டு சதவீத நேர்மையானவர்கள் போய் தொகுதி உடன்பாடு வைத்துக்கொண்டால் என்ன ஆகும்? கடலும், பெருங்காயமும்தான் நினைவுக்கு வருகிறது.
மத்தியில் காங்கிரஸை எதிர்ப்பதை குறிவைத்து வைத்து உருவாக்கப்படும் இந்த தொகுதி உடன்பாடு எந்த வகையில் அர்த்தம் கொண்டது எனவும் தெரியவில்லை. காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் தொகுதி உடன்பாட்டில் பிரச்சினை வந்தவுடன், காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெயலலிதா துடித்த காட்சிகளை உலகமே பார்த்தது. தேர்தல் முடிந்த கையோடு காங்கிரஸோடு சேராது என எந்த உத்திரவாதமும் இல்லை. எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை. இதுபோன்ற துரோகங்களை எத்தனை முறைதான் திரும்பத் திரும்ப சந்திப்பது? கம்யூனிஸ்டுகள் கொஞ்சமும் தயங்காமல், சளைக்காமல் அப்போதும் தெருவில் நின்று போராடுவார்கள். அதிலும் எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை.
ஆனால், மக்கள் “நீங்கள்தானே அவர்களைக் கொண்டு வந்தீர்கள்?” எனக் கேட்கும் அல்லது கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில்கள் புத்தகங்களில் நீள நீளமான பத்திகளில் இருக்கக் கூடும். பழைய சலூன் கடைகளில் முடி வெட்டுவதற்கு முன்பு தலையில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பார்கள். அதற்கென்று ஒரு பாட்டில் இருக்கும். அதன் மேல்பாகத்தில் சுருண்டு சுருண்டு நீண்டு ஒரு சிறு குழாய் போன்ற அமைப்பு இருக்கும். சாதாரண மக்களுக்கு கம்யூனிஸ்டுகளின் ஆழமான அரசியல் மொழியும், தொலைநோக்கு நிலைபாடுகளும் அப்படித்தான் தெரிகின்றன. ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், தொகுதி உடன்பாடு, கூட்டணி, ஐக்கிய முன்னணித் தந்திரம் என்ற வார்த்தைகளோடு வெளிப்படும் அவை சட்டென்று மக்களுக்கு புரியக்கூடியவையாகவும், நேரடியாகவும் இருப்பதில்லை.
என்ன இருந்தாலும் பேய்க்கு எதிராக பிசாசோடும், பிசாசுக்கு எதிராக பேயோடும் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ளும் இதனை ஐக்கிய முன்னணித் தந்திரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க முடியவில்லை. அனுபவங்களிலிருந்து பாடம் கற்று, நிலைமைகளில் முன்னேற்றம் காணக் கையாளும் உத்தியாகவும் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதும் வீதிகளில் நின்று மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த தேர்தல் வியூகங்களால் தொடர்ந்து தேய்ந்து போவதுதான் நடக்கிறது. அந்தக் கவலையே வாட்டுகிறது. தேர்தல் முடிவுகள் எந்தக் கண்றாவியாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.
யோசிக்கவும், விவாதிக்கவும் நிறையவே இருக்கின்றன இன்னும் .....
தேர்தல்
இப்போது எல்லா வெற்றிகளும் அவர்களுக்கே. முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட பிறகுதான் ஆட்டமே தொடங்குவது போல் இருக்கிறது. நம்பிக்கைக்கு இடமேயில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் அவர்களது விதிகளே வந்து வழி மறிக்கின்றன. நாம் தொடர்ந்து இழந்து கொண்டே இருக்கிறோம். தெரிகிறது.
இது சகுனியின் காய்கள். சகுனியின் கட்டங்கள். இங்கு எதுவும் அவர்கள் சொல்படிதான் நடக்கும். தெரிகிறது.
நமக்காக ஒரு குருசேத்திரம் காத்திருக்கிறது. அதுவும் தெரிகிறது.
அதற்குமுன் இழப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறதோ? அதுதான் தெரியவில்லை.
மாதவராஜ் பக்கங்கள் - 31
கடந்த சனி ஞாயிறு எங்கள் சங்கத்தின் 19வது மாநாடு நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக, மாநாடு குறித்த ஏற்பாடுகள், சிந்தனைகள், கூட்டங்கள் என நாட்கள் சென்றிருந்தன. சங்கம் ஆரம்பித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது. முதன் முறையாக இந்த தடவைதான் பெண்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தோம். சனிக்கிழமை வங்கி அலுவல்கள் இருந்ததாலும், கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாய் லீவு கிடைக்காததாலும் முப்பது பெண் தோழர்களே கலந்துகொள்ள முடிந்தது. துவக்கிவைத்துப் பேசும்போது, “ஆண்களாகிய எங்களுக்குள் ஆதிக்கத்தின் வேர்கள் நாடி நரம்புகளுக்குள்ளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் பிரச்சினைகள் எங்கள் கண்களுக்குப் படுவதுமில்லை, பட்டாலும் புரிவதில்லை, புரிந்தாலும் முக்கியமில்லை என்பதாகவே இருக்கிறோம். உங்களைப் பற்றி நீங்கள்தாம் பேச வேண்டும். அதற்குத்தான் இந்த மாநாடு!” என்ற அர்த்தத்தில் பேசினேன். முதலில் தயங்கியவர்கள். பிறகு கொஞ்சம் பேசத் தலைப்பட்டர்கள். கழிப்பிடங்களிலிருந்து கம்ப்யூட்டர்கள் பயன்படுத்துவது வரை ஒரு அலுவலகத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை மெல்லிய குரலில்தான் பேசினார்கள். இவை எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் நம் பெண்கள் நம்மோடு பணிபுரிகிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருந்தது. முணுமுணுப்புகளே சுடுவதாய் இருந்தன. வெடிப்புறப் பேசினால்...? இந்த நோக்கத்தில், மாநாட்டின் இறுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு உபகுழு அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த பொது மாநாட்டில் எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். “ஒரு தொழிற்சங்க மாநாட்டில், எழுத்தாளனை ஏன் பேச அழைத்தீர்கள்?” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது. மெனக்கெடும் முன் தயாரிப்பு இல்லாமலும், இயல்பாகவும் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு எனக்குப் பிடிக்கும். நகைச்சுவையும், சுயவிமர்சனங்களும் தன்போக்கில் கலந்திருக்கும். “நாம் எல்லோரும் குரங்கிலிருந்துதான் வந்தோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உலகத்தின் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்” என்று சொல்லிவிட்டு அவர் அடுத்தடுத்து பேசிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகளைக் கடக்க முடியாமல் நான் ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன். “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து culture செய்வதை நாம் அனுமதிப்போமா? வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா?” என்பது போல பல கேள்விகளை விதைத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார். மாநாட்டின் நிகழ்வுகள் தொடர்ந்து இருந்ததால், சில சம்பிரதாயமான வார்த்தைகளைத் தவிர அவரோடு பேசிக்கொள்ள முடியாமல் போனது. மீண்டும் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். இது தமிழ்ச்செல்வனுக்கு நிச்சயம் பிடிக்காது. “எழுத வாருமய்யா” என எப்போதும் அவரது குரல் இழுத்துக்கொண்டே இருக்கும். பார்ப்போம்.
1989க்குப் பிறகு எங்கள் வங்கியில் புதிய பணி நியமனங்களே இல்லை. அதற்குப்பிறகு 2009ல் தான் புதிதாக நூற்றுச் சொச்சம் பேர் பணிக்கு வந்தார்கள். இந்த வருடம் இருநூற்றுச் சொச்சம் பேர் வர இருக்கிறார்கள். இந்த இருபது வருட இடைவெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. பல ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இறந்து போயிருக்கிறார்கள். இவைகளோடு கணக்கிட்டால் இப்போது வரும் பணி நியமனங்கள் மிக மிகக் குறைவே. இன்னும் ஐந்தாறு வருடங்களில் பழையவர்களில் 90 சதவீதம் பேர் ஓய்வு பெற்றிருப்பார்கள். புதியவர்களே எங்கும் நிறைந்திருப்பார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கம் குறித்த பார்வையும், சிந்தனைகளும் வேறாக இருக்கின்றன. தங்களை முன்னிறுத்திக் கொள்வதில் மட்டுமே வேகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரும் இடைவெளியோடு உருவாகி இருக்கும் புதிய தலைமுறையினை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது எங்கள் வங்கியில் மட்டுமில்லை, இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டு வருகிற முக்கியமான பிரச்சினை . பழைய முறைகளும், வழக்கமான நடவடிக்கைகளும் இனி கதைக்கு ஆகாது. புதிய திசைகளையும், வழிமுறைகளையும் ஆராய்ந்து தொழிற்சங்கங்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. பார்ப்போம்.
நேற்றும் நாளையும் காணாமல் போனது
இப்பெரும் கோளத்தில் இயற்கையின் மிகச் சிறிய விபரீத அசைவு. அவ்வளவுதான். நேற்றும், நாளையும் காணாமல் போய்விட்டது அங்கு. நீரிலும், நெருப்பிலும், புகையிலுமாய் பெரும் மனிதக்கூட்டத்தின் சுவாசம் நின்றுபோன வினாடிகள் காட்சிகளாய் உறைகின்றன. அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியில் பெரிய படகு ஒன்று நிற்க, கட்டிடங்களும், மனிதர்களுமாய் நிறைந்திருந்த நகரமே சுக்கல் சுக்கலாக கிழித்துப் போடப்பட்டு இருக்கிறது. பறவைகளற்ற வெளியில் பேரழிவின் காட்சிகள் விளிம்புகளுக்கு அப்பாலும் கடந்திருக்கின்றன.
எஞ்சியவைகளும், எஞ்சியவர்களும் நொறுங்கியும், சிதைந்தும் போயிருக்கின்றனர். இழப்புகளின் சாட்சி போல கறுப்பு வெள்ளைக் கோடுகளோடு பியானோ ஓரிடத்தில் கிடக்கிறது. ஓட்டி நிற்கும் கதிர்வீச்சு பாய்ந்த பெண்ணுக்கும், அவளது தாய்க்கும் நடுவே கண்ணாடிச்சுவர் இருக்க, கால்களைத் தூக்கிக்கொண்டு பிரியத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது செல்ல நாய். கறுப்புச் சகதியில் தலையெட்டிப் பார்க்கும் டிஜிட்டல் போட்டோவில் குழந்தை ஒன்று சிரித்துக்கொண்டு இருக்கிறது. அலைகள் துரத்த கால் நனைய விடாமல் கடலோடு ஒருநாள் விளையாடி இருக்கலாம் அந்த உயிர்.
கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?
இந்த 101வது சர்வதேச மகளிர் தினத்தன்று, இரண்டு பெண் தலைவர்கள் இறங்கி வருவதற்காக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தவமிருந்தன. சோனியா காந்தியின் சம்மதம் கிடைக்க டெல்லியில் உடன்பிறப்புக்கள் காத்திருந்தனர். ஜெயலலிதாவின் அழைப்புக்கு தோழர்கள் சென்னையில் காத்திருந்தனர். தேர்தல் என்னும் ஜனநாயக ஹம்பக்கில் மான, ரோஷங்களுக்கு சற்றும் இடம் கிடையாது போலும். இதெல்லாம் சகஜம் என்று மடிப்புக்கலையாத சட்டைகளில் உடன்பிறப்புக்கள் தங்கள் அரசியல் குறித்து பெருமிதம் கொள்ளவும் செய்வார்கள். வருத்தமானது, கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட நிலைதான்.
சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனைகளைப் பெற்று, ஒட்டு மொத்த மானுட விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை இப்படிப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக அல்லும் பகலுமாய் இயக்கங்கள் நடத்தி, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பும் ஒரு மகத்தான இயக்கத்திற்கு நேரும் கதி சகிக்க முடியாததாய் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் எளிமையும், நேர்மையும் கொண்டவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சோதனை இது. வரலாற்றின் நெடிய பக்கங்களில் முக்கியமான பாத்திரம் வகிப்பவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற அவலக் காட்சி இது.
மற்ற கட்சிகளைப் போல, ‘ஐந்து வருடங்களுக்கான மக்களின் இறுதித் தீர்ப்பாக’ கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தேர்தலை பார்ப்பதில்லை. இந்த அமைப்பின் அவலட்சணங்களையும்,, அரசின் அநியாயங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு மேடையாகவே தேர்தலை பார்க்கிறார்கள். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எதிராகத் திரள்பவர்களோடு கைகோர்த்து, பிரச்சாரம் செய்து தங்கள் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி சேர்க்க முயல்கிறார்கள். மக்களின் எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பயன்படுத்துகிறார்கள். தேர்தல் கூட்டணி என்பதன் பொருளை இப்படித்தான் புரிந்தும், செயல்படுத்தியும் வருகின்றனர் கம்யூனிஸ்டுகள்.
இப்படித் தேர்தலில் நின்று கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் மற்ற கட்சியினரைபோல் நாலு காசு பார்க்கப் போவதில்லை. எந்தக் கோட்டையையும் கட்டப் போவதில்லை (அப்படி கட்டுகிறவர்களுக்கு இயக்கத்தில் இடமிருப்பதில்லை). பஸ்ஸிலும், மொபெட்டிலுமே வாழ்நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள். தெருவோரக் கடைகளில் டீயும் பன்னையும் சாப்பிட்டுவிட்டு. “தோழர்” என உற்சாகமாய்ச் சிரிப்பார்கள். அவ்வளவுதான். இப்படித் தேர்தலில் நிற்பதன் மூலம் முடிந்த வரையில், சட்டசபைகளிலும், பாராளுமன்றங்களிலும் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் குரலை கூடுதல் சக்தியோடு பிரதிபலிக்கிறார்கள். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துகிறார்கள். சாத்தியமானவைகளில், தலையீடு செய்து தடுத்து நிறுத்தவும் செய்கிறார்கள். ஆனால் அதுமட்டுமே தங்கள் முக்கியமான நடவடிக்கையாகக் கருதுவதில்லை.
எல்லாவற்றையும், மக்களிடம் கொண்டு செல்ல வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். போராடுகிறார்கள். ஒரு ஊரின் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து, ஒரு தேசத்தின் மிகப்பெரும் பிரச்சினையான ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை அவர்கள் இயக்கங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். சாலைகளில், தெருவோரங்களில் பத்துப்பதினைந்து பேர் சிவப்புக் கொடிகளோடு மறியலும், ஆர்ப்பாட்டமும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவ்வழியே போகும் மக்கள் இன்று அவர்களைக் கவனிக்காமல் இருக்கலாம். ஒருநாள் அவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள், ஒருநாள் அவர்கள் அணி திரள்வார்கள், ஒருநாள் தங்கள் துயரங்களுக்கான விடியலைக் கொண்டு வருவார்கள் என்னும் மகத்தான கனவோடு கம்யூனிஸ்டுகள் முஷ்டி உயர்த்தி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் மேல் இருக்கிற நம்பிக்கை இது.
இதுதான் கம்யூனிஸ்டுகளின் பாதையும் பயணமும் . இதன் போக்கில் கம்யூனிஸ்டுகள் அடையும் துன்ப துயரங்களில் ஒன்றுதான், ஜெயலலிதா போன்றவர்களுக்காக காத்திருப்பது. அவர் போன்றவர்கள் தேர்தலில் ஒதுக்கும் சீட்டுகளுக்காக பேச்சுவார்த்தை நடத்துவது. கருணாநிதி, ஜெயலலிதாக்களின் பின்னால் மக்கள் அணி திரண்டு நிற்பதால், இந்த அவமானங்களை கம்யூனிஸ்டுகள் பொறுத்தாக வேண்டி இருக்கிறது. அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் நடைமுறை தந்திரமாக, இந்த அழுத்தங்களை சுமக்க வேண்டி இருக்கிறது.
இந்த இடத்தில்தான் கம்யூனிஸ்டுகள் கேலிக்குரியவர்களாகவும், தரமிறங்கி நிற்பவர்களாகவும், பத்தோடு பதினொன்றாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். முந்தையப் பதிவில் கூட ரம்மி என்னும் நண்பர் “ கதவு எப்போது திறக்கும், சுண்டல் எவ்வளவு கிடைக்கும் என செம்படை வீரர்கள் காத்திருப்பதாக” கிண்டலடித்திருக்கிறார். அந்த நண்பர்களுக்கெல்லாம் என் கேள்வியும், என் பதிலும் மிக எளியது, நேரிடையானது. “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?” இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா?
(இன்னும் யோசிப்போம். ... விவாதிப்போம்...)
வம்பரங்கம் 13: அறுபதா? அறுபத்து மூன்றா?
“உன்னாலே நான் கெட்டேன்”
“உன்னாலே நான் கெட்டேன்”
“நீ என்னைக் காட்டிக் கொடுத்தாய்”
“நீ என்னைக் காலை வாரி விட்டாய்”
“நீ என் கழுத்தறுக்க வந்தாய்”
“நீ என் கருவறுக்க துடித்தாய்”
“உன்னாலே நான் கெட்டேன்”
“உன்னாலே நான் கெட்டேன்”
“நீ என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது”
“நீ என்னைக் காலை வாரி விடக் கூடாது”
உள்ளே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. நாளைக்குள் அறுபதா, அறுபத்து மூன்றா என்பது வெளியே தெரிந்துவிடுமாம்.
இப்போது கம்யூனிஸ்டுகளின் நிலைமை என்ன?
"தோழர்! அ.தி.மு.கவுக்கும், காங்கிரஸுக்கும் கூட்டணி உருவாகப் போகிறதாமே! இப்ப நம்ம நிலைமை என்ன?” இப்படியான கேள்விகள் செல்போனில் வந்து பதம் பார்க்கின்றன. எஸ். எம்.எஸ்ஸில் வந்து முறைக்கின்றன. “இருந்தாலும் உங்களுக்கு இந்த கஷ்டகாலம் வர வேண்டாம்” என நேரில் உச் கொட்டுக்கின்றனர்.
இந்தியாவில் இன்று இருக்கிற கட்சிகளில் உருப்படியான கட்சி சி.பி.எம் என்ற என் நம்பிக்கைக்கு எந்த பங்கமும் இதனால் வந்துவிடப் போவதில்லை. அக்கட்சியின் அரசியல் திட்டங்களில் இருக்கும் தெளிவுக்கு இதனால் எந்த கேடும் சூழப் போவதில்லை. எனவே, இந்தச் செய்திகளை சந்தோஷமாகவே எதிர்கொள்ள முடிகிறது.
“ச்சே, அப்படியெல்லாம் அ.தி.மு.க முடிவெடுக்காது” என்று பித்துக்குளித்தனமாகவோ, மூட நம்பிக்கையாகவோ எதுவும் சொல்லித் தப்பிக்க முடியாது. எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் அவர்கள் பேரம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. சமரசம் செய்துகொள்வதற்கு சங்கதிகள் இருக்கின்றன. சகலமும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதங்களால் தீர்மானிக்கப்படுகிற ஒரு புள்ளியில் நாம் எங்கே இருக்கிறோம் என்கிற அரசியல் தெளிவு இருப்பதால், இக்கேள்விகளை சந்தோஷமாகவே எதிர்கொள்ள முடிகிறது.
காங்கிரஸ், அ.தி.மு.க பக்கம் சாய்ந்துவிட்டால், சி.பி.எம் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி தி.மு.க பக்கம் வருமென, சில அதிமேதாவிகள் கணிக்கின்றனர். அவ்வளவுதான் அவர்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றிய அறிவும், புரிதலும். கம்யூனிஸ்டுகள் மக்கள் பக்கம் நிற்கிறவர்கள் என்று அவர்களுக்கு உறைப்பதேயில்லை.
விலைவாசி, ஊழல், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவு, தேசத்தின் வளங்களைச் சூறையாடுவது என தங்கள் ஆட்சிக்காலத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு எதிராக, மக்களின் மனநிலைகளை உருவாக்கவும் அல்லது மாற்றவும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து சமூகத்தில் பணியாற்றுகின்றனர். ஆனால் ஜெயலலிதாவுக்கு மாற்றாக கருணாநிதியையும், கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதாவையுமே இந்த அமைப்பு முன்நிறுத்துகிறது. மன்மோகனுக்கு எதிராக, அத்வானியையும், அத்வானிக்கு எதிராக மன்மோகனையுமே முன்வைக்கிறது. வேறு சாத்தியங்கள் தெரியாத அல்லது முன்வைக்கப்படாத சமூகத்தில், மக்கள் இந்த இரண்டில் ஒன்றையே மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து ஏமாந்துகொண்டும், பரிதவித்துக்கொண்டும் இருக்கின்றனர். மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுகிற கம்யூனிஸ்டுகள், ஆட்சியாளர்களை த் தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இங்கு ஆட்சியதிகாரத்தை மாற்றுகிற யுத்தியில் ஏற்படுத்தப்படுகிற கூட்டணிகள் குறித்து சுவாரசியத்துடன் பிரஸ்தாபம் செய்கிற ஊடகங்கள், கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்கின்றன. இதில்தான் அரசியலின் சூட்சுமங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன.
அதிகாரத்திற்கான போட்டியில், ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக்கொண்டு, தங்களை மக்கள் தேர்ந்தெடுக்க எல்லாவிதமான பித்தலாட்டங்களிலும் முதலாளித்துவக் கட்சிகள் ஈடுபடுகின்றன. இந்தக் காட்சிகளின் ஊடே, இந்த அனுபவங்களின் வழியே ஒருநாள் மக்கள் இவர்கள் அனைவருமே ஒரே ஆள்தான் என்பதையும், இவர்கள் அனைவருமே தங்கள் எதிரிகள் என்பதையும் காண்பார்கள். எந்தக் கட்சி, ஆட்சியிலிருந்தாலும், மக்களுக்காக போராடுகிறவர்களை கம்யூனிஸ்டுகள் என்பதை உணர்வார்கள் . இதுதான் கம்யூனிஸ்டுகள் மக்கள் மீது கொண்டு இருக்கிற அன்பு. நம்பிக்கை. எல்லாம்.
அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை, இந்த சந்தர்ப்பவாதம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் சந்தோஷம். தாங்களே கற்பதை விடவும், தங்கள் எதிரிகளால் கற்பிக்கப்படுவதுதான் அடர்த்தியானதும், வலிமையானதும் ஆகிறது. இது மக்களுக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளுக்கும் பொருந்தும். நடப்பவையெல்லாம் ஒரு பாடம். நல்ல அனுபவம். கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவை மட்டும் நம்பினால், இந்தக் கேள்விகளால் அவமானமடையவும், தலைகுனியவும் நேரலாம். அவர்கள் மக்களை நம்புகிறவர்கள். தலைநிமிர்ந்தே எதிர்கொள்வார்கள்.
எனவே, சந்தோஷமே....!
| தொடர்புடைய இடுகைகள்: |
உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!
இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.
துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.
மகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது ஆன்மாவின் சுருதியை மீட்டியிருக்கிறது. ஏகபோகங்களையும், அதிகார பீடங்களையும் வீழ்த்தி, பறவைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது. இன்று காலையில் எஸ்.வி.வேணுகோபாலன் தனது இ-மெயிலில் இச்செய்தியினை பகிர்ந்து கொண்டிருந்தார். அவள் பெயர் அமல் மத்லூதி! தானே எழுதி, தானே ராகம் கொடுத்து, தானே பாடுகிறார். தேச எல்லைகளையெல்லாம் ஒரு பறவையின் சிறகசைப்பாய் அவள் குரலும், வார்த்தைகளும் கடந்து செல்வதைக் கவனியுங்கள்.
000
சுதந்திரமாயும், அச்சமற்றும் இருப்போரின் உருவம் நான்
இறவா ரகசியங்களின் உருவம் நான்
இறுதிவரை போராடுபவர்களின் குரல் நான்
கூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்
அந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள்
எம்மக்களின் அன்றாட உணவைப் பறித்தார்கள்
கருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள்
ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் உரிமைதான் நான்
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
ஒரு வாய் உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள்
நம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள்
நாம் உதவி உதவி என்று கதறிய போது
துரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
வருஷங்கள் காதலித்த வண்ணம்
நதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம்
தீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும்
சுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும்
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
இருளில் ஒளிரும் தாரகையும் நானே
கொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே
அக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே
மறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே
என்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே நானே
நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்
அதிலிருந்து எழுப்புவோம்
பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும்
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
000
இன்று அவளது பாடல் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு, மனிதர்களுக்குள் ஊடுருவிக்கொண்டு இருக்கின்றன. தமிழில் இந்த அற்புதமான காரியத்தைச் செய்திருப்பவர் இக்பால். அவருக்கு மிக்க நன்றி. எஸ்.வி.வேணுகோபாலுக்கும் நன்றி.
“சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான் ”
ஆஹா! உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி இவள்.
(இங்கே அமல் மத்லூதி பாடுவதை பார்க்கலாம்)



















