அவர்களின் சட்டமும், அவர்களின் ஒழுங்கும் நாசமாய்ப் போகட்டும்!
காவல்துறையின் தடிகளில்தான் அவர்களின் சட்டமும், ஒழுங்கும் இருக்கிறது.
தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 3 நாட்கள் ஆகியும் அரசு இவர்களது கோரிக்கைகளை குறித்து அழைத்து பேசாததால் முதல்வரை சந்திக்க புதிய தலைமை செயலகத்திற்கு பேரணியாக சென்ற தமிழக அரசு ஊழியர்கள் மீது காவல்துறை தடுத்து நிறுத்தி தடியடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. மிருகத்தனமான அந்தக் காட்சிகள்தாம் இவை.
தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதும், அவைகளை வலியுறுத்துவதும் தொழிலாளர்களின் உரிமையாக இந்தச் சட்டம் சொல்கிறது. ஜனநாயக ரீதியான போராட்ட முறைகளை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. அதை ஏற்று, அதை நம்பி, தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இந்த அரசும், அமைப்பும் அந்தச் சட்டங்களை தாங்கள் ஒருபோதும் மதிப்பதேயில்லை என இப்படி, மிகக் கொடூரமாக காட்டி வருகின்றனர்.
அவர்களின் சட்டம் இது! அவர்களின் ஒழுங்கு இது. அவைகளைக் காப்பாற்றும் அவர்களின் ஜனநாயகம் இது.எல்லாம் நாசமாய்ப் போக!
இனி- தொழிலாளர்களும், மக்களும் இங்கே தங்களுக்கான சட்டங்களையும், ஒழுங்கையும் திருத்திக்கொள்ளட்டும். ஒரு கன்னத்தில் அடித்தவனின் இரண்டு கன்னத்திலும் அடிக்கத் தயாராகட்டும்! அடக்க வரும் இரும்புக்கரங்களை, ஆயிரமாயிரம் மனிதக்கரங்கள் உடைத்து நொறுக்கட்டும்!
அப்படி ஒருநாள் விரைவில் வரட்டும்!!
எகிப்து: விடுதலை வேட்கையின் புரட்சி முழக்கம்!
வாழ்க்கையின் தேர்வின்படி
வாழ்ந்துவிட
மக்கள் துணிந்து விடுவார்களானால்
விதியால் என்ன செய்ய முடியும் -
வழிவிட்டு நிற்பதைத் தவிர ?
இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..
சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..
-அப் அல் காசிம் அல் ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி) - எகிப்திய கிளர்ச்சியின்போது மக்கள் இசைத்த பாடல்களில் ஒன்று.
முப்பத்து மூன்று வயது ஹொஸாம் எல் ஹமாலவி,
கிட்டத்தட்ட இதே வயதுக் காலம் நிரம்பி வீழ்த்தப்பட்டிருக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர். உலகைக் குலுக்கி இருக்கும் எகிப்து நாட்டின் 18 நாள் மக்கள் பேரெழுச்சியின் வெற்றிக் களிப்பில் இருக்கும் சுமார் எட்டுக் கோடி மக்கள் தொகையில் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களாயிருக்கக் கூடும். அதிபர் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து வீழ்த்த வேண்டும் என்பது ஹமாலவி போன்ற பல்லாயிரக்கணக்கானோர்க்கு நீண்ட கால இதய தாகம்.
லஞ்சம், ஊழல், வேலையின்மை, உணவுப் பொருள் தட்டுப்பாடு, காட்டாட்சி....என பெருகிவந்து கொண்டிருந்த கொடுமைகளுக்கு எதிராகப் பல்லாண்டுகள் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய போது, உலகின் மொத்த கவனமும் வரலாற்றுப் புகழ்மிக்க இந்த நாட்டின் பக்கம் திரும்பியது. பிப்ரவரி 11 புனித வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் ஓர் இறுதி நாள் போர்கோலம் பூண்டு திரண்ட போது, கொடுங்கோல் ஆட்சி புரிந்துவந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவதாக துணை அதிபரை அறிவிக்கச் சொல்லிவிட்டுக் குடும்பத்தோடு செங்கடல் பகுதியின் உல்லாச விடுமுறை இல்லத்திற்கு ஓடிவிட்டிருந்தான். உற்சாக வெடி வாணங்கள் தலைநகர் கெய்ரோவின் உச்சியில் கலக்கிக் கொண்டிருந்தன. தஹிரிர் சதுக்கத்தில் லட்சோப லட்சம் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தனர்.
அதற்குச் சில நாட்கள் முன்னதாகத் தான் மற்றுமொரு அரபு நாடான துனிசியாவில் இதே மாதிரி இன்னொரு போக்கிரி சர்வாதிகாரியான பென் அலி வாரக்கணக்கில் தொடர்ந்து நடந்த மக்கள் எழுசிக்குமுன் தாக்குப் பிடிக்க முடியாமல் நாட்டை விட்டு ஓடினான். நாம் இங்கே தைப் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்த இந்த ஜனவரி 15 அன்று துனிசியா மக்கள் மேற்படியான அவர்களது பேரானந்தப் பொங்கலைக் கொண்டாடியது அருகில் இருந்த எகிப்து மக்களை அடுத்த பத்து நாளுக்குள் மேற்காசியாவின் அந்தப் பகுதியின் அரசியல் கூர் முனைக்குக் கொண்டு நிறுத்த மிகப் பெரும் உத்வேகத்தைத் தந்துவிட்டது. சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை....இது தான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏமன், ஜோர்டான், லிபியா என்று வட ஆப்ரிக்க - மேற்கு ஆசியா பிராந்தியத்து மக்களை 'இது பொறுப்பதில்லை....'என்று தத்தமது ஆட்சியாளர்க்கு எதிராகத் திரண்டெழ வைத்துக் கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?
"எந்த நோக்கமற்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் ஏதாவது உயரிய நோக்கிற்காக உயிரை விடுவது மேல்" என்று எழுதியிருந்த மிகப் பெரிய பதாகைகளோடு ஆண்களும் பெண்களுமாக எகிப்து மக்கள் திரண்ட கெய்ரோ மாநகரின் அந்தச் சதுக்கத்தின் பெயரான தஹிரிர் என்பதற்குப் பொருளே விடுதலை என்பது தான்.
உலகின் தொன்மை வாய்ந்த நாகரிகங்களில் நைல் நதி ஓடும் எகிப்து வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பிரமிக்க வைக்கும் பிரமிடுகளும், கம்பீர ஸ்பிங்க்ஸ் உருவங்களும், இன்ன பிறவும் அலங்கரிக்கும் இந்த தேசத்தின் வரைபடம் வட ஆப்ப்ரிக்காவில் ஒரு காலும், சூயஸ் கால்வாய் கரையைக் கடந்து மேற்கு ஆசியாவில் ஒரு காலுமாக இருக்கிறது. இரண்டு கண்டங்களில் கால் பாவி நிற்பதால் இவற்றின் இணைப்புப் பாலமாகவே அழைக்கப்படுவது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய உலக நிலைமைகளில் கூட்டுச் சேரா நாடுகளின் அணிவகுப்பு உருவானதில் எகிப்துக்குப் பெருமிதமிக்க பங்கு உண்டு. அப்போதைய அதிபர் கமால் அப்துல் நாசர் அதன் சிற்பி. அவரை அடுத்து வந்த அன்வர் சதாத் ஆட்சிக் காலத்தில் இராணுவப் பொறுப்பில் இருந்தவன் தான் ஹோஸ்னி முபாரக். சதாத் காலத்திலேயே மக்கள் பெருந்துயரங்களுக்கு ஆளாகி இருந்தனர். குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அதற்கு எதிராகப் போராடி, சிறையில் அடைக்கப் பட்டு பல இன்னல்களை எதிர்கொண்ட டாக்டர் நவால் எல் சதாவி என்ற போராளி சிறைக்குள் இருந்தபோது ஐப்ரோ பென்சிலைக் கொண்டு கழிப்பறை உபயோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த சன்னக் காகிதங்களில் எழுதி வெளியே கடத்திப் பின்னர் பிரசுரித்த நினைவுக் குறிப்புகளில் இருப்பதை பத்திரிகையாளர் கல்பனா ஷர்மா (ஹிந்து: ஞாயிறு சிறப்புப் பகுதி: பிப்ரவரி 5) விவரிப்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
சதாத் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னணியில் அமெரிக்காவின் ஆதரவுடன் இராணுவ அதிகாரத்தைக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஹோஸ்னி முபாரக் அடுத்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக எகிப்தை ஆட்டிப் படைத்ததன் குமுறல்களின் கூட்டு வெடிப்புதான் இப்போது மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட மக்கள் எழுச்சி. இந்த ஆண்டு அக்டோபரில் முபாரக் பதவி இறங்கிக் கொண்டு அடுத்து நாட்டை ஆள அவனது மகன் கமால் தாயாரிப்பில் இருந்த நிலையில் தான் துனிசியாவின் வெற்றிக் களிப்பின் அடுத்த உற்சாகப் பகுதி எகிதில் அரங்கேறியிருக்கிறது. தொடர்ந்து தொழிற்சாலைகளில் போராட்டங்கள், உரிமைகளுக்காகவும், அடிமட்டக் கூலிக்கு எதிராகவும் வேலை நிறுத்தங்கள், உணவுப் பொருள் விலையேற்றத்திற்கு எதிரான சிறு சிறு கலகங்கள், முபாரக்கின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டிற்கு எதிரான அரசியல் உணர்வுடனான உள் முரண்பாடுகள் எல்லாம் எப்போது கொதி நிலையை எட்டலாம் என்று தத்தளித்துக் கொண்டிருந்தது.
இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நாம் சந்தித்த ஹொஸாம் எல் ஹமாலவி ஒரு துடிப்பான பத்திரிகையாளர். மாணவப் பருவத்திலேயே கொழுந்துவிட்டெரிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரது அரசியல் பார்வையைச் செதுக்கத் தொடங்கியிருந்தது. 1998ல் அவரது தூண்டுதலால் அதற்குமுன் பல்லாண்டுகளாக பல்கலைக் கழக வளாகங்கள் காணத் தவறியிருந்த மாணவர் கலகத்தைச் சந்தித்தன. இராக்கில் அமெரிக்கா குண்டுவீச்சை நடத்துவதற்கு எதிராக அவர் திரட்டிய சில நூறு மாணவர்களுக்கும் அது புதிய அனுபவம். ஒரு கணம் அசந்துபோய் நின்றுவிட்டுப் பிறகு அவர்களை இரும்புப்பூண் போட்ட கழிகளால் புரட்டி எடுத்த காவல் துறைக்கும் அந்தக் கலகம் புதிய காட்சி. பின்னர் உள்நாட்டில் ஓர் ஆங்கில நாளேட்டில் வேலைக்கான நேர்காணலில் அந்த வேலையெல்லாம் சும்மா ஒரு பக்கத்தில், தமது இலட்சியம் முபாரக் ஆட்சியை வீழ்த்துவது என்று அவர் சொன்னதைக் கேட்டு பத்திரிகை ஆசிரியர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். வேடிக்கையை நிறுத்திவிட்டு வேலைக்கு வா என்று வேலை போட்டும் கொடுத்திருக்கிறார். ஹமாலவியினது கனவு இத்தனை துலக்கமாக நிறைவேறியிருக்கிறது இப்போது.
துனிசியா எழுச்சி வெற்றி பெற்ற அடுத்த நாளே தொடங்கி முடிய எகிப்து கிளர்ச்சி ஒன்றும் அத்தனை திடீர் போராட்டம் அல்ல...அதன் விதைகள் பல்லாண்டுப் பெருந்துயரத்தின் வெறுப்புணர்வில், அடங்க மறுக்கும் உள் கொதிப்பில், முற்போக்கு சக்திகளின் உள்ளோட்ட கருத்துப் பரப்புதலின் ஆழ் நிலத்தில் ஊன்றப்பட்டிருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆண்டாண்டுகளாய் அடக்கிவைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் கலகம், டிசம்பர் 2006ல் தலைநகர் கெய்ரோவிற்கு வடக்கே மகல்லா நூற்பாலையில் பெரும் போராட்டமாக வெடித்ததைச் செய்தியாளராக அருகிருந்து பார்த்ததோடு அதற்கு ஆதரவும் திரட்டியவர் ஹமாலவி. தங்களது சர்வதேச செய்தித் தொடர்பாளராக அவரை அந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் கொண்டாடியிருக்கின்றனர். மாணவர்கள், பல் துறை ஊழியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள்.... எல்லாம் தற்போதைய வரலாற்றுப் போராட்டத்தில் அணிவகுத்ததற்கு இப்படியான சின்னஞ்சிறு உள் வரலாறுகள் உண்டு. துனிசியாவின் வெற்றிக் களிப்பின் தீப்பொறி சட்டென்று இங்கும் பெரிய தீயைப் பற்றவைத்துவிட்டது.
மகம்மது அப்டெலஃப்தா என்கிற எகித்திய பத்திரிகையாளர் "துனீசியா, உனக்கு எங்கள் நன்றி" என்று எழுதிய கவித்துவமான உரைச் சித்திரம், துனீசியா எமக்கு எரிபொருள் ஊட்டியது, எமது எந்திரத்தைப் பற்ற வைத்தது, எமது இரத்தத்தைப் புதுப்பித்தது, எமது ஆர்ப்பாட்டங்களைச் சுற்றி வளைக்கத் திரண்ட பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் கண்களில் அச்சத்தை விதைத்தது, பென் அலியின் ஆட்சி அங்கே வீழ்ந்து கொண்டிருக்க இங்கே எமது நாட்டு தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிக் கொண்டிருந்த அதிகாரிகளை துனீசியா கிறங்கடித்தது, எமது ஆட்சியாளரை இங்கே எல்லாம் நன்றாயிருக்கிறது, நலத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும், லட்சக் கணக்கில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கச் செய்யுமளவு நடுங்க வைத்தது... என்று நிலைமைகளின் தாக்கத்தை விளக்குகிறது.
ஆனால் முபாரக் இறுதிக் காட்சி வரை நம்பிக் கொண்டிருந்தார். தாம் நினைத்தபடி ஓய்வு பெறலாம், தமது மகனை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்து நடலாம் என்று அமெரிக்காவின் ஆசியை எதிர் நோக்கிய பிரார்த்தனையில் இருந்தார். இங்கோ, வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை மக்கள் ஆட்சிக்கு எதிரான தீர்மானமான கலகமாக அனுசரித்துக் கொண்டிருந்தனர். அதனால் அமெரிக்க ஆட்சியாளர்களும் தங்களது திரைக்கதை வசனங்களை அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டிருந்தனர்.
அனுபவசாலியான பெரிய திருடன் கன்னம் வைக்கப் போன இடத்தில் சிக்கிக் கொண்டால் சின்ன திருடனைக் காட்டிக் கொடுத்து விட்டுத் தான் மட்டும் தப்பித்து ஓடுகிற வேலை மாதிரி கிட்டத்தட்ட நமது திரைப்படங்களில் வருவது போன்ற சாதுரியத்தை அமெரிக்கச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் உதவியோடு அதிபர் ஒபாமா வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அரபு மண்ணின் எண்ணெய் வளம் சிந்தாமல், சிதறாமல் தங்களை வந்தடைவதற்கும், பாலஸ்தீனர்களின் உரிமைப் போர் நடக்கும் மேற்கு காஜா பகுதியில் தங்களது செல்லப் பிள்ளையான இஸ்ரேல் செய்யும் அராஜக நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கும் மிகவும் வாய்ப்பான மண் அது என்று அமெரிக்காவிற்குத் தெரியும்....ஆகவேதான், ஜனநாயகம் தேவை என்ற 'டப்பிங்' குரலைத் தாங்களே கொடுத்துவிடுவது என்று பேசத் துவங்கியது அமெரிக்கா. சவூதி அரேபியா உள்ளிட்டு அரபு நாடுகளின் எந்தப் பகுதியிலும் ஜனநாயகம் பற்றி பேசாத அமெரிக்கா இப்படி திடீரென்று ஜனநாயகத் துடிப்போடு புறப்பட்டதேன் என்று யாரும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தனக்கு சலாம் போட்டுத் தனது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதுதான் ஒரு நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் அடையாளம் என்று அமெரிக்கா பல முறை தெளிவாக்கி இருக்கிறது.
அப்படியான ஒரு பொம்மையாக முபாரக்கை இங்கே இருக்க விட்டு, அதற்காக ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கில் டாலர்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அரேபிய தேசிய வாதத்தை முன்னிறுத்தக் கூடாதென்பதற்காகவும், இஸ்ரேலின் திமிர்த்தனங்களுக்குத் துதி பாடவேண்டும் என்பதற்காகவும் மட்டுமே எகிப்து அரசுக்கு 80 பில்லியன் டாலர்கள் கொட்டிக் கொடுத்தது அமெரிக்கா. அடுத்தடுத்த தலைமுறைகள் இத்தகைய அமெரிக்க அடிமைத்தனத்திற்கு எதிரான சிந்தனைகளோடு வளர்வதற்கும் முபாரக்கின் ஆட்சி உதவியிருக்கிறது. ஆனால், இப்படி உருவெடுத்து வெடித்திருக்கிற எழுச்சி, இஸ்லாமிய மதவாதத்தின் குரலாக அல்ல, ஜனநாயக-சுதந்திர வேட்கையின் தெறிப்பாக வெளிப்பட்டிருப்பது தான் அற்புதமானது என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது. (ஃ பிரண்ட்லைன் - பிப்ரவரி 12 - 25). இஸ்லாமிய இளஞர்களை மதவெறியைத் தூண்டித் தான் திரட்ட முடியும் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்போரைக் குப்புறப் புரட்டிவிட்டது இந்த எழுச்சி என்கிறார் ரஷீதா பகத் (பிசினஸ் லைன் - பிப் 15). அது மட்டுமல்ல, பெரிய அரசியல் சக்தி என்கிற வகையில் இஸ்லாமிய சகோதரத்துவம் என்கிற அமைப்பும் கூட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க மத ரீதியாக ஒருங்கிணைத்துக் கொள்ள முயற்சி எடுக்கமுடியவில்லை. இது இஸ்லாம் தொடர்பான பிரச்சனை அல்ல, ஜனநாயகத்துக்கான கிளர்ச்சி என்று அவர்களே அறிவிக்க வேண்டியிருந்தது.
இரவும் பகலுமாக, ஹோஸ்னி முபாரக் பதவி விலகும் வரை இடத்தை காலி செய்வதில்லை என்று தஹிரிர் சதுக்கத்தில் பாய் படுக்கை தலையணைகளோடு சென்று குடியேறியிருந்த போராளிகளைக் கலைக்க முபாரக் ஆதரவாளர் கும்பல் வந்து தாக்கியபோது, அச்சப்படுவதற்குப் பதிலாக அவர்களின் இலக்கு இன்னும் கெட்டிப் படுத்தப்பட்டு விட்டது. இணையதள தொழில்நுட்பத்தின் வழியாக ஃபேஸ் புக், டுவிட்ட்டர்..போன்ற செய்திபகிர்வு சாத்தியங்களையெல்லாம் இளைய தலைமுறை அற்புதமாகப் பயன்படுத்தியது நூதனமான விஷயமாகும். தமது மக்களைத் திரட்டவும், உலக மக்களுக்கு இந்தப் போராட்டத் தீவிரத்தின் பரவசத்தைப் பரப்புவதும்...என வலைத் தளம் அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பெண்களின் ஈடுபாடும், பங்களிப்பும், தீரமும் இந்தக் கிளர்ச்சியின் இன்னொரு முக்கிய பரிமாணம். 'கடந்த காலங்களில் போராட்டங்களின் போது எங்களை பத்திரமாக விலகி இருக்கச் சொன்ன ஆண்கள், இந்த முறை எங்களையும் உள்ளடக்கிய போராட்டங்களாக அவற்றை முன்னெடுத்தது புதிய சரித்திரம்' என்கின்றனர் வீராங்கனைகள். சதுக்கத்தில் சக போராளி ஆண்களோடு எந்தப் பாலியல் தொல்லையோ, பிரச்சனையோ இன்றி சகஜமாமாக இரவுகளில் தங்கி போராடியதை அவர்கள் இன்று பெருமிதத்தோடு உலக இயக்கங்கள் முன் அனுபவமாக முன்வைக்கின்றனர்.
அரசின் ஆதரவுக் கையாட்படை தேசத்தின் உன்னத கலைச் செல்வங்கள் வைக்கப்பட்டிருக்கும் மியூசியத்தைச் சூறையாடச் சென்றபோது, சாதாரண மக்கள் மனிதச் சங்கிலியாகக் கை கோத்து அரணாக நின்று காத்ததை ஹிந்து நாளேட்டின் வாசகர்களின் ஆசிரியர் எஸ் விசுவநாதன் (பிப்ரவரி 14) பெருமிதத்தோடு சுட்டிக் காட்டுகிறார். தேசத்தின் பாதுகாப்பு யார் கையில் என்பதன் பிரதிபலிப்பு அது.
அமெரிக்க அரசின் சார்பாக உடனே எகிப்துக்குப் பறந்து சென்ற அதிகாரி நிலவரங்களை தங்கள் அரசுக்குச் சொல்லி இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதில் பின்வாங்கிய இராணுவம் எடுத்த நிலைக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும். துவக்கத்தில் கொல்லப்பட்ட 300 பேரின் படுகொலையும், சுதந்திர வேள்வியில் தாங்களாகத் தங்களை எரித்துக் கொண்டோரின் தியாகமும் இராணுவத்தின் போக்கை தீர்மானிப்பதில் பங்கு வகித்திருக்கலாம். இனியும் நீடிக்க முடியாது என்ற கட்டத்தில் முபாரக் ஓடிவிட்டார். ஆரம்பத்தில் சவாலுக்கு நின்றவர், அதற்காகவே பரவலான வெறுப்பை ஈட்டியிருக்கும் மக்கள் விரோதி சுலைமானை தமக்குத் துணையாக துணைத் தலைவராக நியமித்தவர் பிறகு அந்த சுலைமான் மூலம் அறிவிப்பு கொடுத்துவிட்டு பதவி விலகிச் சென்றுவிட்டார்.
பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த கதையின் அடுத்த அத்தியாயம் இப்போது இராணுவத்தின் கைக்குச் சென்றுவிட்டது. அது ஜனநாயகத்தை நோக்கி நடை போட்டு வர வேண்டியது எதிர்காலத்தின் கையில் இருக்கிறது. ஒரு ஜனநாயக ஆட்சி அரும்பவேண்டுமென்ற மக்களின் விருப்பம் அத்தனை சீக்கிரம் நிறைவேறிவிட முடியாத சவால்கள் நிரம்பவே உண்டு.
புரட்சி முற்றுபெற்றுவிடவில்லை என்கிறார் ஹமாலவி. இன்னும் தொடரவேண்டியதிருக்கிறது...கிளர்ச்சிக்கு வந்த மத்திய தர அறிவுஜீவிகள் இந்தக் கட்டத்தோடு எல்லாவற்றிற்கும் ஆறு மாதம் ஓய்வு கொடுத்துவிட்டுத் தங்களது உயர் ஊதிய வேலையை நோக்கிச் சென்றுவிடலாம், ஆனால் குறைந்த ஊதியத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஆலைத் தொழிலாளி போராட்ட ஆயதத்தைக் கீழே போட முடியாது என்கிறார் அவர். தொடரும் வங்கி வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டங்கள் அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
எகிப்து உள்ளிட்டு மத்திய கிழக்குப் பகுதியெங்கும் கிளர்ந்து பொங்கிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி, உலகெங்கும் சுதந்திர வேட்கை கொண்டிருப்போரை வசீகரித்து ஈர்க்கிறது. புதிய தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தின் விளைவால் பாதிப்புறும் நாடுகளிலுள்ள மக்களை மாற்றுக் கொள்கைகளின் சாத்தியங்களை நோக்கிச் சிந்திக்க உசுப்புகிறது. அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும், ஆயுத பலமிக்க இராணுவத்திற்கும் எதிராக மிகச் சாதாரண மக்கள் ஒன்றுபட்டு உறுதியாக அணி திரண்டு நிற்கும்போது ஆட்சியாளர்களின் நாற்காலிகளை உடைத்தெறிய முடியும் என்ற நம்பிக்கையைப் புதுபித்துத் தந்திருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் தன்மையை மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்திய மக்களுக்கு - அவர்களை அணிதிரட்ட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களுக்கு உத்வேகமும், புது இரத்தமும், செய்திகளும், பாடங்களும், நம்பிக்கையும் வழங்குகிறது இந்த வரலாற்றுத் தருணம்.
துனிசியாவிலும், எகிப்திலும் கிளர்ச்சிக் காலத்தில் பாரம்பரிய இசையையும், புரட்சி கீதங்களையும் இசைத்தபடி வீதிகளில் திரண்ட மக்கள் கோரியது விடுதலையை.. ஜனநாயகத்தை..சுதந்திரக் காற்றை.
பஹ்ரைனில், துப்பாக்கிச் சூட்டைச் சந்தித்தும் போராட்டங்கள் தொடரும் லிபியாவில், ஜோர்டானில், இன்னும் போராட்டத்தின் அடுத்த கட்டங்களைத் தொடரும் துனிசியாவில் ....ஜனநாயகத்தின் குரல்கள் எதிரொலித்தபடி மத்திய கிழக்கில் இருக்கும் அரபு நாடுகளின் வரலாறு இப்போது இந்த நூற்றாண்டில் புதிய வரலாறை எழுதத் தொடங்கி இருக்கிறது. உலகெங்கும் வாழும் மனிதகுல விடுதலையின் முகவரியைத் தேடி.....
-எஸ்.வி.வேணுகோபாலன்
மிஸ்டு கால்
பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகுதான் செல்போனை பார்க்க முடிந்தது. மிஸ்டு கால் ஒன்று இருந்தது. நம்பர். யாரென்று தெரியவில்லை. அழைத்துப் பார்க்கவும் மனமில்லை. சோர்வாக இருந்தது.
செல்போன் அழைத்தது. அந்த மிஸ்டு கால் நம்பர்தான். எடுத்து, “ஹலோ” என்றேன்.
“வசுமதி டீச்சரா”. எதோ மாணவியின் குரல் போல மெலிதாக ஒலித்தது.
“ஆமாம், நீ யாரும்மா?”
“.............”
“ஹலோ, யார் பேசுறதும்மா?”
“டீச்சர். நாந்தான் திவ்யா. ஞாபகம் இருக்கா டீச்சர்”
“திவ்யாவா...... எந்த திவ்யா..?”
“போன வருஷம் பிளஸ் டூ உங்கக் கிட்ட படிச்சேன்ல, எங்கையெழுத்து கூட ரொம்ப நல்லாயிருக்கும்னு அடிக்கடிச் சொல்வீங்களே, அந்த திவ்யா..”
ஞாபகத்துக்கு வந்தது. வகுப்பில் இரண்டாவது பெஞ்ச்சில் வலப்பக்கம் உட்கார்ந்திருந்த அவள், எப்போதும் அமைதியாக இருந்த அவள், எதைச் சொன்னாலும் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த அவள், புத்திசாலிப் பெண் என பேரெடுத்த அவள், பள்ளியாண்டு விழாவில் அழகாக நடனமாடிய அவள், ‘டீச்சர், ‘டீச்சர்’ என சுற்றி சுற்றி வந்த அவள் என ஒவ்வொன்றாய் விரிய, ஆச்சரியத்துடன் “ஏய்.... திவ்யா, நீயா! எப்படியிருக்கே? எங்கயிருக்கே?”
“.................”
“திவ்யா...”
“................”
“திவ்யா... என்னம்மா?
“சும்மாத்தான் போன் செஞ்சேன். டீச்சர் உங்க குரல ஒருதடவ கேக்கணுமுன்னு தோணிச்சு. வச்சுர்றேன்..”
வைத்துவிட்டாள். ஒன்றும் புரியவில்லை. ப்ளஸ் டூ பரீட்சைக்கு மூன்று மாதம் போல இருக்கும் போது படிப்பை நிறுத்தி விட்டாள் அவள். யாரோடோ ஓடிப்போய்விட்டாள் என்றார்கள். கருக்கலைப்பு செய்து கொண்டாள் என்றார்கள். இல்லை என்றார்கள். கல்யாணமாகி வெளியூருக்குச் சென்றுவிட்டாள் என்றார்கள். வகுப்பில் காலியான அவளது இடம் கொஞ்சநாள் உறுத்தி விட்டு, உதிர்ந்து போனது. ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இப்போது எதற்கு போன் செய்தாள்? அவள் குரலும், பேசியதும் என்னவோ போலிருந்தது.
ஒருவித பதற்றத்துடன் அந்த நம்பருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
இன்னும் எத்தனை மீனவர்களை பலி கொடுக்கப் போகிறார்கள்?
முந்தா நாள் இரவில் கலைஞர் டிவியில் சற்றுமுன் செய்தியாக ‘கைதானவர்கள் விடுதலை’ என்று ஓடிக்கொண்டு இருந்தது. தமிழக மீனவர்கள் 127 பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்களோ என கவனிக்க ஆரம்பித்தேன். பார்த்தால், தமிழக மீனவர்களுக்காக களம் கண்ட கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை என்று பின்னால் வருகிறது. கடிதம் எழுதி, ஆள் அனுப்பி, நேரில் வற்புறுத்தியும் இலங்கையின் அத்துமீறல் அடங்கவில்லையென்றான பிறகு, பேருக்கு நடத்திய போராட்டத்தின் கதை இப்படி சுபமாக முடிந்திருந்தது. நேற்றைய தினகரனில் முதல் பக்கத்தில், “இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை!” என்று கொட்டை எழுத்துக்களில், மன்மோகன்சிங்கின் படம் போட்டு, செய்தி வெளியிட்டு, மங்களம் பாடியிருந்தார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில், நேற்று இலங்கைக் கடற்படையினர் பெட்ரோல் குண்டு வீசி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேலும் 21 மீனவர்களை சிறை பிடித்திருக்கிறது. முகமெல்லாம் சிதிலமடைந்து, ராஜா முகம்மது என்பவர் தீக்காயங்களோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சகலதரப்பினரிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தினகரனில் முதல் பக்கச் செய்தி, “உலகக் கோப்பை கிரிக்கெட் கோலாகலமாய் தொடங்கியது” என்பதாக இருக்கிறது! பற்றியெரியும் தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினையில் இவர்களின் அக்கறையும், கவலையும் இப்பேர்ப்பட்டது!
தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா வலியுறுத்திக்கொண்டும், எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கையினால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கிறது. வெற்று வார்த்தைகள் ஒருபுறமும், மனித உயிர்கள் இன்னொருபுறமும் விழுந்துகொண்டேயிருக்கின்றன. அடங்காத ஆத்திரமே இப்போது மிஞ்சுகிறது. கோடி கோடியாய் ஊழல் செய்யவும், அதை மறைக்கவும், பிறகு சப்பைக்கட்டு கட்டவுமே நேரமற்றுப் போயிருக்கும் ஒரு இழிவானக் கூட்டத்திடம் இந்த தேசம் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல், ஆட்சியைப்பற்றி மட்டுமே கவலைப்படும் இந்த ‘மக்களாட்சியில்’ நம்பிக்கை கொள்ள என்ன இருக்கிறது என யோசிக்க வேண்டியிருக்கிறது. ’பொறுத்தது போதும், பொங்கியெழு!” என்ற மனோகரா வசனங்களை தூக்கியெறிந்துவிட்டு, “இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்திழந்தான், அண்ணன் கையை எரித்திடுவோம்” என்னும் பாரதியின் ஆவேசம் நமக்குள்ளிருந்து கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது!
அப்படித்தான் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கொதிப்படைந்து கடைவீதிகளில் மறியல் செய்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியரும் அவர்களைச் சந்தித்து, வழக்கம்போல் வாக்குறுதிகளைத் தந்துவிட்டு, ராஜா முகம்மதுவின் மனைவியிடம் ருபாய் ஐம்பதாயிரம் வழங்கியிருக்கிறார்கள். வெப்பத்தை அணைப்பதும், தணிப்பதுமே அரசின் வேலையாய் இருக்கிறது. தீர்வுகள் மட்டும் கண்ணுக்குத் தெரியாமலே இருக்கின்றன.
இப்போது நாகப்பட்டினத்திலும், இன்னும் பல மையங்களிலும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். பல்வேறுதரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இலங்கையில் சிறைபட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டுத்தரக் கோரியும், அட்டை சங்கு மீதான அரசின் தடையை நீக்கக் கோரியும் பிப்ரவரி 22 அன்று டெல்லியில், நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சி.ஐ.டி.யூ அறிவித்திருக்கிறது.
இந்தத் தீ மேலும் மேலும் கொழுந்துவிட்டு எரியட்டும். இத்தகைய போராட்டங்களே திர்வுகளை உருவாக்க முடியும். துனிசியாவில் ஒரு மனிதன் தள்ளுவண்டியில் காய்கறி விற்றதை, லைசென்சு இல்லை என காவல்துறை அப்புறப்படுத்தியதை அடுத்து, அம்மனிதன் தன் மீது வைத்துக்கொண்ட தீ, இன்று தேசத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதி இருக்கிறது. இங்கே தொழிலாளிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். எப்போது இந்தியா பற்றிக்கொள்ளும்?
மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்!
இறுக்கக் கட்டியிருக்கும் அவரது மண்டைக்குள் இருப்பதில் கொஞ்சம் வெளிவந்திருக்கிறது. பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டு கள்ளமௌனம் சாதித்துக் கொண்டும், அவ்வப்போது, ‘எனக்குத் தெரியாது’, ‘விரைவில் சரி செய்யப்படும்’, ‘பரிசீலனை செய்கிறது அரசு’ என்று இரண்டொரு வார்த்தைகளால் முனகிக்கொண்டும் இருந்த இந்தியப் பிரதமர் நேற்று காலை 11 மணிக்கு , அவரது இல்லத்தில் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர்களுக்கு பேட்டியளித்து இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவகாரங்கள் தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லையென்றும், தனக்கும் அதற்கும் எப்போதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லி இருக்கிறார். சம்பந்தப்பட்ட முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு தனது அரசு சித்தமாக இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஆ.ராசாவை திரும்பவும் அமைச்சராக்கியதற்கு கூட்டணி அரசுக்காக செய்துகொண்ட சமரசமே காரணம் என்றிருக்கிறார். தான் ஒன்றும் நொண்டி வாத்து அல்ல என மறுத்திருக்கிறார். சிறு சிறு தவறுகள் தன்னிடம் இருந்திருக்கலாம், ஆனால் மற்றவர்கள் சொல்வது போல குற்றவாளி அல்லவென்று சொல்லி சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். தன் மீது எந்த களங்கமுமில்லை என்பதை அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் செய்துகொண்டு இருந்தன. ஆனால், அவரது முகம் கிழிந்து தொங்கியதையும், வார்த்தைகள் நாற்றமெடுத்ததையுமே பார்க்க முடிந்தது.
ஊழலும், விலைவாசி உயர்வும் நாட்டில் முன்னுக்கு வந்துள்ள இரு வேறு பிரச்சினைகள் என்று சொல்லிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழலைத் தடுக்க முடியாது எனவும் ஒருக் கட்டத்தில் சொல்கிறார். நான் மட்டுமல்ல, யார் வந்தாலும் இதுதான் கதி என்பதே அதன் அர்த்தமாயிருக்கிறது. சுனாமியைப் போல, புயலைப் போல அவையெல்லாம் இனி இயற்கைச் சீற்றங்கள் என்னும் லேபிள்களில் அடங்கும் என்று சொல்லிவிட்டார். ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘அமெரிக்கப் பேரரசு’ புத்தகத்தின் பக்கங்களும், அதில் வந்த சில முகங்களுமே இந்த நேரத்தில் உள்ளுக்குள் ஓடுகிறது.
அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான் இந்த ஊழலும் என்று விளக்கம் அளிக்கிறார். அதாவது, உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து தேசத்தின் முன்னே காட்டுகிறார். அதாவது, 2ஜீ அலைவரிசையை, தாங்கள் விருப்பப்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததும் மானியம் என்கிறார். என்ன புத்தி இது?
மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பிரதமர் மன்மோகனன்சிங்கிற்கு இப்போதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருப்பது, கோடி கோடியாய் ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு, அன்றாடங்காய்ச்சிகளுக்கு மானியமாய் கொடுப்பதன் மூலம் ஏற்படும் வருமான இழப்புத்தான். இந்த ஒரு ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடியைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் இரண்டு முழு ஆண்டுகளுக்கு முழுமையான உணவு மானியம் வழங்க முடியும் என்கிறார் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி.
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார நிபுணர்?
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார மேதை?
பெரும் ஊழல்களால் தேசத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிற- பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கிற- ஒரு ஆபத்தான பொருளாதார அடியாள்!
தொட்டால் நீர் சிரிக்கும்!
சில்லென்ற அனுபவம் இது!
சிறுகுழந்தை போல நம்மை கைகளால் நீரில் அளையச் செய்கிறது.
குளிர்ச்சியும், சிலிர்ப்பும் நமக்குள் பரவுகிறது.
நிரம்பிக்கிடக்கும் தனிமையும், அமைதியும் சட்டென கலைகிறது.
நீர் சிரிக்கிறது. நாமும்தான்…..
(நீர் இருக்கும் இடங்களில் மவுசை மெல்ல நகர்த்திப் பாருங்கள்)
இந்த லிங்கை forward செய்த எஸ்.வி.வேணுகோபால் அவர்களுக்கு நன்றி. மேலும் இது போன்ற அனுபவங்களைப் பெற இங்கே செல்லவும்.
தி.மு.க தலைவருக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் கொடுத்த சர்டிபிகேட்!
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் வீட்டில் இருக்கிற பாக்கியம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பயணங்களும், தொழிற்சங்கக் கூட்டங்களுமாய் கழிந்த நாட்களிலிருந்து ஆசுவாசமாகி இணையப்பக்கம் வந்தால், மெயிலில் ஒரு சோதனை காத்திருந்தது. “எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள், தி.மு.க ஆட்சிக்காலம் தமிழர்களுக்குப் பொற்காலம் என்று சொல்லியிருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்துக்களைப் பதியவும்” என்று நண்பர் ஒருவர் மெனக்கெட்டு இருந்தார். இதுகுறித்து நான் சொல்கிற கருத்துத்தான் அவருக்கு ரொம்ப முக்கியம் போல தெரிந்திருக்கிறது! இப்படியொரு கேள்வி எழாவிட்டால், ஏதும் பிரச்சினையில்லை. நாம் பாட்டுக்கு எதையாவது வாசித்துக்கொண்டு, எதையாவது எழுதிக்கொண்டு போய்விடலாம். முன்வைக்கப்பட்ட பிறகு, எதையாவது சொல்லித்தான் தீர வேண்டி இருக்கிறது.
அண்மையில் தமிழக அரசின் கவிஞர் பாரதி விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு அவர் பேசுகையில், “தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி. அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் அவர். இன்னும் பல எழுத்தாளர்களை வருங்காலத்தில் அவர் கௌரவப்படுத்த வேண்டும் ” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதே விழாவில், கவிஞர் வைரமுத்து தலைகால் புரியாமல் பேசியதை யாரும் பொருட்படுத்தவில்லை. ‘எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்படிப் பேசிவிட்டாரே!’ என்பதுதான் பலருக்கும் வருத்தமளித்திருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம், தன் காலத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் காட்டுவதாகவே இந்தக் கேள்வி படுகிறது.
‘தம் மக்களின் நலன்’ மட்டுமே இந்த தமிழ்நாட்டை விட, தமிழ்நாட்டு மக்களை விட முக்கியம் என நடைபெறும் ஒரு ஆட்சியை, ‘தமிழர்களின் பொற்காலம்’ எனச் சொல்வது எப்படிச் சரி என்பது இந்தக் கேள்வியிலேயே தொக்கி நிற்கிறது. தமிழகத்தையே இருளில் மூழ்க வைத்த கட்சிக்கு இப்படியொரு பொய்யான மதிப்பீடா என்னும் கோபம் இருக்கிறது. ஊருக்கும் உலகுக்கும் தெரிந்த உண்மை, தமிழ்நாட்டின் மிக முக்கிய எழுத்தாளருக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கிண்டலும் தெரிகிறது. திராவிடக் கட்சிகள் மீதும், கருணாநிதி மீதும் கடுமையான விமர்சனங்களை காத்திரமாக முழங்கிய மனிதருக்கு இப்போது என்னவாகிவிட்டது என்ற இன்னொரு கேள்வியும் இதற்குள் இருக்கிறது. ஆனால், இதுகுறித்து அவஸ்தைப்படவோ, ஆச்சரியப்படவோ எதுவுமில்லை என்பது மட்டுமல்ல, தேவையுமில்லையென்பதே எடுத்த எடுப்பில் தோன்றுகிறது. அதிகம் பேசாமல், பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற எழுத்தாளர் ஜெயகாந்தனும் இப்போது ஒரு சிறு புன்னகையால் இதனைக் கடந்து விடுவார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கிய உலகுக்கும், அரசியல் உலகுக்கும் இடையில் பெரும் பள்ளத்தாக்குகளும், சரிவுகளும் உண்டு. அதை அவரே கண்டும் இருக்கிறார். “நான் சம்பந்தப்பட்ட பிறதுறையின் தன்மை எதுவாயினும், அவற்றின் பாதிப்பு எனது இலக்கியத்தோடு சமப்ந்தப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் இப்படிப்பட்ட முன்கூட்டிய ஒரு தீர்மானத்துடனேயே நான் பிற துறைகளில் பிரவேசித்தேன்” என அவரே உணர்ந்தும் இருக்கிறார். அவருடைய படைப்புகளில் பொதுவாக (எல்லாவற்றிலும் அல்ல!) இருக்கும் தர்க்க நியாயங்கள் அவருடைய அரசியல் பார்வைகளில் இருப்பதில்லை. சமூகத்தின் ‘முரண்பாடுகளை’ப் பற்றிப் பேசுவதற்குப் பதில் அவர் சமூகத்தில் இணக்கத்தையும், இசைவையும் பற்றியுமே அதிகமாகக் கவலைப்பட ஆரம்பித்தார், பேசினார். அடங்காத செருக்கு கொண்ட அவரின் அரசியல் தெளிவுகள் எல்லாம் இப்படியாக, கால ஓட்டத்தில் ‘போதும்’ என்கிற ரீதியில் மெல்ல மெல்லக் கரையொதுங்க ஆரம்பித்தன.
எல்லோருடனுமான இந்த இணக்கமும், இசைவுமே அந்த மேடையில் எழுத்தாளர் ஜெயகாந்தனை அப்படிப் பேச வைத்திருக்க வேண்டும். தமிழர்களின் பொற்காலம் என்றவர், தி.மு.கவின் ஆட்சியைப் பற்றி பேசவில்லை. கலைஞர்களையும், கலையையும் போற்றுகிற தன்மையைத்தான் பட்டும் படாமல் குறிப்பிட்டு இருக்கிறார். நடிகை ரம்பாவின் திருமணத்திற்கும் வேலைவெட்டி இல்லாமல் போய், வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வரின் கலைத்தொண்டை பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் பார்த்தவர்களுக்கு, இந்த வார்த்தைகள் பெரும் பகடியாய்க் கூடத் தெரிய நேரலாம். இதற்கு அர்த்தம், பொழிப்புரையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்காமல், ஒரு நகைச்சுவையாக கேட்டுச் சிரித்துவிட்டுப் போகலாம்.
யாருடைய காலத்தையும் பொற்காலம் என்பதை கிண்டலடிக்கிற, கிழிக்கிற தீர்க்கமிக்க எழுத்தாளர் இப்போது, அந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார் என்றால், அதிலிருக்கும் சம்பிரதாயத்தைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு விருது வழங்கியதற்காக, மேடை நாகரீகம் கருதி எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் செய்த ஒரு செய்முறை இது. அவ்வளவுதான். மற்றபடி, இந்த சர்டிபிகேட் ஒன்றும் செல்லாது என்றும், இது அர்த்தமற்றது, பொய்யானது என்றும் அவருக்கும் தெரியும். மேடையில் தான் உதிர்த்த அந்த வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஆல்பமாய் மாட்டிக்கொண்டவர்களைப் பார்த்து அவர் சிரிக்கவே செய்திருப்பார்.
”மனிதன் ஏன் பொய் சொல்கிறான்?” என்ற கேள்விக்கு, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஞானரதம் பத்திரிகையில் இப்படி பதில் சொல்லியிருந்தார்: “தன் பலவீனத்தை மறைக்கவே மனிதன் பொய் சொல்கிறான். எவன் தன்னிடம் பலவீனங்கள் இல்லையென்கிற நிலை எய்துகிறானோ, அவனிடம் பொய் இருப்பதில்லை”. யாரோடும் சத்திய ஆவேசத்தோடு முரண்பட்டு, தர்க்கங்கள் புரிந்து நின்றவர், அதை இன்று இழந்து நிற்பதும், யாரோடும் முரண்பட வேண்டாமே என்கிற மென்மையான அணுகுமுறை கொண்டிருப்பதுவுமே இப்போது எழுத்தாளர் ஜெயகாந்தனின் பலவீனம்.
அகராதி
பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை. அம்மாவுடன் இருந்த பையன் ஜன்னலோரத்தில் உட்கார ஆசைப்பட்டான். இரண்டு இரண்டாய் இருந்த இடதுபக்க இருக்கைகளில் காலியானதாய்ப் பார்த்து அமர்ந்துகொண்டான். பின்னாலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த அவனது அப்பா, பையன் தனியாய் இருக்கிறானே என்று அவன் அருகில் போய் உட்கார்ந்தான்.
“கரம், சிரம் புறம் நீட்டாதீர்கள் என்றால் என்னப்பா?” என்றான்.
“கரம்ன்னா கை, சிரம்ன்னா தலை, புறம்ன்னா வெளியே. கையையும், தலையையும் வெளியே நீட்டக்கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்காங்க” என்றான். கூடவே பையனை எச்சரிக்கையும் செய்தாகிவிட்டது என நிம்மதியடைந்தான்.
சிறிது நேரத்தில் பையன் எழுந்து மீண்டும் அம்மாவிடமே போய் உட்கார்ந்துகொண்டான்.
“என்னடா, வந்துட்ட” என்று அம்மா கேட்டாள்.
“அந்த சீட்டுக்கு மேல பெண்கள்னு எழுதிப் போட்டிருக்காங்க. ” என்றான்.
அம்மா அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள் இப்போது.
அம்மாவின் மகன்
மூர்த்திக்குப் பேரே மலையன் தான் காலேஜ்ல... ஊட்டி மலையின் ஹட்டி ஒன்றிலிருந்து வருபவன்...
ஊட்டி மலையிலிருந்து கீழே இறங்கி, கோவை மாநகரத்தைப் பிடித்து அங்கிருந்து இந்த நகரத்திற்குப் படிப்புக்காக வந்து சேர்ந்தவன்...
முதுநிலைப் படிப்புக்காக வந்திருக்கிறான் மூர்த்தி. அவங்க பக்கத்துல பட்டப் படிப்பு முடிச்ச முதல் ஆளு அவன்தான். அதுக்காகவே அவன் மாமன் பொண்ணு முத்தம் கொடுத்ததை ஒரு நாள் ரகசியமாச் சொல்லி இருக்கிறான் பிரபாகர் கிட்ட. சாயந்திரம் வேற வேற குரூப் பசங்க பதினேழு பேர் கியூவில் நின்னு கை குலுக்கிப் பாராட்டிவிட்டு ட்ரீட் கேட்டார்கள். "ஏண்டா, மனுஷனாடா நீ, நாயே" என்று மூர்த்தி பிரபாகரனைப் பார்த்துக் கத்தியபோது, 'அதை மட்டும் தானே சொன்னேன்...' என்று நிறுத்தி, ஏற்கெனவே கிழிந்து தொங்கிய விஷயத்தில் மேலும் பொத்தல் போட்டது மாதிரி செஞ்சிட்டு இலேசாக் கண்ணடித்துச் சிரித்தான் அவன்.
இன்னும் ஹாஸ்டல் 'அலாட்' ஆகாததால், ஓட்டல் ஒன்றில் குடியிருந்தான். அம்மா கொஞ்சம் நகையை வித்துப் பணம் கொடுத்து அனுப்பி இருந்தாள். ஒரு பெட்டி நிறைய புத்தகங்களும், கவிதை எழுதிய டயரி நோட்டுக்களும் சூழ எப்படா ஹாஸ்டல் அறைக்குள் போவோம் என்று காத்திருந்தான் மூர்த்தி.
ஒசஹட்டியில் ஓர் எளிய குடிசை வீடு மூர்த்தியுடையது. எழுந்து நின்றால் தலை இடிக்கும்..பின்புறம் மலை இறக்கம். சருகுகள் போர்த்திய மண் தரை தாண்டிச் செல்லும்போது நாய்கள் குறைத்து எச்சரிக்கும்...அசந்தால் அதல பாதாளம் தான். ஊருக்குப் புறத்தே ஒரு சிற்றோடை உண்டு..காட்டு மூலிகைகளும், கிழங்குகளும், தோட்டப் பயிர்களும், பூவிரிந்த சோலையாக இரு மருங்கும் இயற்கையின் கொடையை ஏந்திப் பிடித்து அள்ளிப் பருக வேண்டிய நினைவுகளை, இந்த மாநகரத்தின் அசுத்தக் காற்றின் மூச்சுத் திணறலில் கழுவிக் கறைப்படுத்திக் கொள்வதில்லை அவன்.
கிழங்குகளைக் கீறி எடுத்து வந்து புளிக்குழம்பு வைப்பாள் அம்மா. அத்தனை வாசம் அதில்..அதற்கு மேல் அவளது பிரியம் மிதந்திருக்கும். கணவன், சாராயத்திற்கு வாழ்க்கையை ஒப்புக் குடுத்துவிட்ட சோதனைக் காலங்களை அவள் காச நோயின் எச்சிலோடு சேர்த்து விழுங்கிக் கொண்டு விடப் பழகி இருந்தாள். மூர்த்திக்கு அவரது பெயரன்றி வேறேதும் தெரியாது. ஆனால், ஆளற்ற வீட்டில் மோப்பம் பிடித்துவந்த காமாந்தகார நாய் ஒன்றை இத்தனை சாதுவான தன்னுடைய தாய் உயிர்நாடியில் கால்வைத்து உதைத்து விரட்டிய கதையை எஸ் எஸ் எல் சி எழுதி முடிந்த விடுமுறை நாளொன்றில் தான் உறவுக்காரன் ஒருத்தன் சொல்லக் கேள்வியுற்று அரையும் குறையுமாய் அவளது பாடுகளை உணர்ந்து கொண்டிருந்தான்.
மானமான ஒரு வீடு, ஒரு வாழ்க்கை, அவளது கையில் ஒரு வளமான ரூபாய்க் கட்டு, அவளுக்குப் பிடித்தமான வெளிர் நீலத்தில் தரமான ஒரு சேலை... இந்தக் கனவுகளாலான வைராக்கியமும் இருந்தது மூர்த்தியின் பெட்டிக்குள்.
"டேய் மலையா...திங்கக் கிழமை ஹாஸ்டல் கெடச்சிரும்..குடி போயிறலாம்..." என்று நெல்லை மாவட்டக்காரக் கண்ணன் குரல் கொடுத்தான்.
எதிர்பார்த்தபடி அப்படியான குடியேற்றத்திற்குப் போனபோது ஹாஸ்டலைப் பார்த்த மாத்திரத்தில் குமட்டிக் கொண்டு வந்தது மூர்த்திக்கு.
யுகாந்திரக் கறை பிடித்திருந்தது சுவர்களில்.....வாசல் கதவில் நீட்டிக் கொண்டிருந்த ஆணிகளில் ஒன்று அவனது சட்டைப் பாகத்தை ருசித்துக் கிழித்துவிட்டது. கழுவி மாதக் கணக்கு ஆகியிருக்கும் போலான தரை மீது எத்தனை இஞ்சு தூசி கப்பியிருந்தது என்று சொல்ல முடியவில்லை. அறைகளில் ஏற்கெனவே இடம் பிடித்துவிட்டிருந்த பூச்சி வகையறாக்கள் உயிரியல் மாணவனுக்கான புதையல் போலப் பல்கிப் பெருகிப் பரவித் தெரிந்தன. தெரு நாய்கள் நாலைந்து சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தான் உள் பாதை நெடுக.
இதன் அதிர்ச்சியில் இருந்த அவனது தோளைத் தட்டிய கண்ணன், "தம்பி மலையா, இதுக்கே மலைச்சுட்டா எப்படி, பாத்ரூம், டாய்லெட் கண்டிசன்லாம் இன்னும் எந்தக் கதியில் வச்சிருக்கானுவன்னு பாக்காண்டாமா" என்று இழுத்துப் போனான்.
ஒரு மாநகரத்தின் விடுதி அறை குறித்த மூர்த்தியின் குறிப்புகள் அவனது கவிதைப் புத்தகத்தில் ஒரு குறு ஓவியத்துடன் வேறு கற்பனையில் பதிவாயிருந்ததை இப்போது எங்கே கிழித்துப் போடுவது என்று தோன்றியது. எங்கும் போடலாம் என்னும் அளவு குப்பைகளின் காதலராய் இருந்தது ஹாஸ்டல் வெராந்தா.
வெளியே எல்லாவற்றுக்கும் சாட்சியாக வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை, தனது மவுனத்திற்குள் எரிமலையாகக் கேள்விகள் இருக்கக் கூடும் என்பது போல் காட்சியளித்தது.
அன்று காலையில் சாதிச் சான்றிதழை இங்கிட்டும், அங்கிட்டும் எடுத்துக் கொண்டு கல்லூரியில் அலைமோதியதில், புதிய அறை வாசத்துக்காக ஒரு தரை விரிப்பு வாங்க அலைந்ததில் என்று மூண்டிருந்த களைப்பின் வேகத்தில் அழுக்குக் கடலில் சங்கமமாகித் தூங்கித் தொலைத்தான் அந்த இரவு.
காலைப் பொழுதுகள் ரம்மியமானவை ஒசஹட்டியில். மழை போட்ட தரையாயிருந்தாலும், உரச் சாக்குக்குள் புகுந்து கொண்டோ, கைகளை நெருக்கமாகக் கட்டிக் கொண்டு பாட்டு படித்துக் கொண்டோ அந்த சனம் தம்பாட்டில் தங்கள் வேலைக்கு இறங்கிப் போய்க் கொண்டிருக்கும்... எப்பொழுதாவது சத்தத்தோடு கடக்கும் மினி பஸ்கள், உல்லாசப் பயண வாகனங்களைப் பழிப்பு காட்டிவிட்டு ஓடிக் கொண்டிருப்பார்கள் சிறுவர்கள் கிழிந்த கால் சராயோடு. புகையாக இறங்கும் பனி மூட்டத்தின் போது தீக்குச்சி கிழித்துப் போட்ட மாதிரி மின்மினிகள் புள்ளியாய்த் தோன்றி மறையும்.
அன்றைக்கு மாநகர வாழ்க்கையில், நாராசத்தில் கண் விழித்தான் மூர்த்தி. ஒரே கூச்சல்....ரகளை! தண்ணீர் வரவில்லை. குடிக்கவோ, குளிக்கவோ அல்ல, பல் தேய்க்கக் கூட ஒரு போட்டு தண்ணி கிடையாது.
நிராகரிப்பின் சுவையிலேயே வாழப் பழகியிருந்த பணியாளர்களும் இலேசில் பிடிகொடுப்பதாயில்லை. பெருஞ்சண்டை, மோதலுக்குப் பிறகு எங்கிருந்தோ கொண்டு வந்து கொட்டினார்கள் குடங்குடமாய்த் தண்ணீரை.
மூர்த்தியும் கண்ணனும் உடைகளை மாற்றிக் கொண்டு புறப்பட்டார்கள் வெளியே ஏதாவது பார்த்துக் கொள்ளலாம் என்று. அருகே ஏதோ ஒரு பழைய கால ஓட்டலைப் பிடித்து அங்கே போய் குளியல் போட்டு விட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே கல்லூரிக்குப் போயாகிவிட்டது.
முதல் நாள் வகுப்பு ஏதும் பெரிதாய்த் தொடங்கவில்லை. படிப்பின் திசை குறித்த இலேசான பதட்டம் கூடத் தோன்றியது மூர்த்திக்குள்ளாக...இந்த இடம் தனக்குத் தோது பட்டு வருமா.. நமக்கான எதிர்காலம் இங்கிருந்தா வேர் விடப் போகிறது? ரெண்டாம் வகுப்பில் காது வலிக்கக் கிள்ளி இழுத்த முரட்டு வாத்தி எத்தனை நல்லவர், பள்ளி இறுதி ஆண்டில் கணக்கு தெரியாது முழித்த போது தலையில் குட்டிய டீச்சர் எத்தனை பரவாயில்லை என்று சம்பந்தமில்லாமல் கண்ணில் வந்து போனது.
எதற்கு அழுதோம், எதற்குக் கோபப் பட்டோம் வாழ்க்கையில்... சில்லறை சரியாகக் கொடுக்காததைக் கேட்டதற்கு 'அப்பனில்லாம வளர்ந்த வளப்பு இல்ல..' என்று ஓங்கி அறைந்த பக்கத்தூர்க் கடைக்காரனையே ஒண்ணும் செய்ய முடியல..
இரவு விடுதிக்குப் போகையில் கண்ணன் வலுக்கட்டாயமா உணவு சாப்பிட அழைத்துப் போனான். அமரவும், சாப்பிடவும் எதிரெதிர் சிமெண்டு பெஞ்சு, மேலே அடையாளம் பறிகொடுத்த கருங்கல் நீளப் பலகை. தட்டை எடுத்து வைத்து நிமிர்ந்த போது, பரிமாற ஆள் இல்லாமல் சக மாணவன் ஒருத்தனே எழுந்துபோய் உள்கட்டிலிருந்து சோறு எடுத்து வந்த விதத்தைப் பார்த்து அதிர்ந்துபோய் எழுந்து நின்று குமட்டி வாந்தி எடுத்துவிட்டான் மூர்த்தி.
பாதி உசரத்துக்கு உடைந்துபோன பழைய அழுக்கு பிளாஸ்டிக் வாளியில் வந்து கொண்டிருந்தது சோறு. தட்டுக்கள் ஓங்கி அறையப்படும் சத்தம் வலுத்தது உணவறை எங்கும். பட்டப் படிப்பின் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் இருந்த பழைய மாணவர்கள் பொறுமை இழந்து உலகின் அத்தனை கொச்சை வார்த்தைகளையும் அறைகூவி அழைத்துக் கத்திக் கூச்சலை எழுப்பலாயினர்....
அடுத்த இரண்டு மணி நேரங்கள் அவமானத்தின் வலியிலிருந்து புறப்பட்ட கோபத்தின் நெருப்பு பரவிக் கொண்டிருந்தது... மூர்த்தி கழன்றுபோய்க் கிடந்தான். கண்ணன் சொன்ன எந்த வார்த்தையும் சமாதானப் படுத்தலின் பக்கம் கூட நெருங்கவில்லை.
திடுதிப்பென்று உள்ளே நுழைந்த காவல்துறையின் படை நிலைமையை விபரீதப் படுத்தத் துவங்கியது.
என்னடா...என்னடா இங்க கலாட்டா...என்று உதவி ஆணையர் போலத் தோன்றிய அதிகாரக் குரல் ஒன்று உச்சத்தில் ஒலித்தது. மூர்த்தி தலையைத் தூக்கிப் பார்த்தான். குட்டையாயிருந்த ஒரு கருத்த மாணவன் உடைந்து போன அந்த பச்சை வாளிச் சோற்றை எடுத்து வந்து அந்த அதிகாரக் குரலுக்குப் படையல் போலக் கொண்டு வைத்து இது என்னது சார்.....சொல்லுங்க....என்று இரைந்தான்.
அந்தக் கேள்வியில் தெறித்த உரிமையைப் பொறுக்க மாட்டாத அந்த அதிகாரி, அப்படியே அந்தக் கருத்தவனின் தலை முடியைக் கொத்தாகப் பற்றி, "நாய் யாராடா கேக்கறா என்னதுன்னு...ஓசிச் சோத்துக்கே இத்தனை முழக்கமா உனக்கு..வெக்கிற எடத்துல வைச்சிருக்கணுண்டா பன்னிங்கள..அப்பன் பேரே தெரியாத வேத்தாளுக்குப் பொறந்தவனுங்களா.." என்று அறையப் போனான்.
நிறுத்து....நிறுத்து என்று வெறி பிடித்தவன் போல எழுந்த குரல் மூர்த்தியுடையது. "அடிக்கறதுன்னா எல்லாததையும் அடி. உடம்புல அடி....அம்மாவோட கர்ப்பத்துல அடிச்சே செத்தீங்கடா ஒவ்வொருத்தனும்...." என்று இரண்டு கைகளையும் காற்றில் வீசிக் காட்டிப் பெருங்குரலெடுத்துக் கத்தினான். ஓங்கி வரும் பிரம்புகளோ, காத்திருக்கும் தாக்குதலோ எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அருகே அணைகட்டி நிற்க சூழ்ந்த மற்ற மாணவர்களும் தான்...
அம்மாவின் மகனாகி விட்டிருந்தான்....
- எஸ் வி வேணுகோபாலன்
பாத்திரங்கள்
பால்காரன்
பால்காரி
பேப்பர்க்காரன்
கீரைக்காரி
மீன்காரன்
மீன்காரி
காய்கறிக்காரன்
காய்கறிக்காரி
ஆட்டோக்காரன்
கடைக்காரன்
கடைக்காரி
பூக்காரி
பூக்காரன்
வேலைக்காரன்
வேலைக்காரி
வீட்டுக்காரன்
வீட்டுக்காரி
கடன்காரன்
கடன்காரி
என அழைக்கவும் பேரம் பேசவும்
சண்டை போடவும், சமாதானம் கொள்ளவும்
கொடுக்கவும், வாங்கவும் முடிகிறது!
பெயரில் என்ன இருக்கிறது?
யார் இருக்கிறார்கள்?
பால்காரி
பேப்பர்க்காரன்
கீரைக்காரி
மீன்காரன்
மீன்காரி
காய்கறிக்காரன்
காய்கறிக்காரி
ஆட்டோக்காரன்
கடைக்காரன்
கடைக்காரி
பூக்காரி
பூக்காரன்
வேலைக்காரன்
வேலைக்காரி
வீட்டுக்காரன்
வீட்டுக்காரி
கடன்காரன்
கடன்காரி
என அழைக்கவும் பேரம் பேசவும்
சண்டை போடவும், சமாதானம் கொள்ளவும்
கொடுக்கவும், வாங்கவும் முடிகிறது!
பெயரில் என்ன இருக்கிறது?
யார் இருக்கிறார்கள்?
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 16
வரலாறு என்று அறியப்பட்டிருக்கும் தகவல்களின் மீது எழுதப்படாதவற்றை எழுதிப் பார்த்திட எப்போதும் எழுத்தாளர்கள் பெரும் விருப்பத்துடன்தான் இருக்கிறார்கள். அடையாள அரசியல், விளிம்பின் கதையாடல் எனும் சொற்பதங்கள் விவாதத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இப்பின்நவீனத்துவ நாட்களில் எழுதப்படுகிற வரலாற்றுப் புனைவிலக்கியப் பிரதிகளின் வினையாற்றலும் அதன் மீதான வாசகக்கவனமும் நிச்சயம் கவனத்திற்குரியதுதான். அப்படியான வரலாற்றுப் பிரதியின் மீது ஊடாடிக் கலைத்து போடப்பட்டிருக்கும் படைப்பே “மரக்கால்” எனும் சோலை சுந்தரபெருமாளின் நாவலாகும்.
நெற்களஞ்சியமென பெருமிதப்படுத்தப்படும் தஞ்சை மண்ணை வளம் கொழித்த நிலமாக உருமாற்றிய விவசாயப் பெருங்குடியின் குலமரபுகளும், வழக்காறுகளும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களும் புனைவு வெளியில் பதிவாகியுள்ளதா? என்கிற கேள்வியைக் கேட்டு பதிலளிக்கிறவராக இருப்பவர் சோலை. புத்தகங்களைத் திறந்தால் வேர்வைத் துளிகளும் நெல் அவித்த வாசமும் வீசுகிறதா? தம்புரா சத்தமும், புளித்த தயிரின் வாசமும் தானே வீசுகிறது என்று எரிச்சலுற்று தஞ்சையின் அதிகாரக் கோட்பாடான வர்ணாசிரமத்தினை எதிர்த்த ஆதிக்கலகக் குரலின் வெளிப்பாடாக மரக்காலை அவர் எழுதிப் பார்த்திருக்கிறார்.
பெருமதங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தன் அதிகாரத்தை நீடித்து நிலைநிறுத்திடத் தேவையான கருவியென கதைகளே இருந்து வருகின்றன. புனிதம், நியாயம், விதி, கர்மவினை என எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கட்டமைத்திட எத்தனை, எத்தனை கதைகளை விதவிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்! கதைகளால் எங்களை அடிமைகொள்ள நீங்கள் உருவாக்கிய கதைகளை கலைத்துப் போட்டு புதிய வரலாற்றை உருவாக்குகிறோம் நாங்கள் என்கிறார் சோலை.
ஆதனூர் பிரம்மதேயத்தின் அதிகார எல்லையின் வரலாறே நாவலாக பயணம் கொள்கிறது. நந்தன் எனும் விவசாயக் கூலியை நந்தனராக்கி, திருநாளைப் போவார் எனும் சிவனடியாராக உருமாற்றம் செய்த நரித்தந்திரத்தை நாவல் மிக நுட்பமாக கத யாடிக் கலைத்துப் போட்டிருக்கிறது. ஆதனூரின் மூங்கில் குத்தில் துவங்கி, திருபாங்கூர், சிதம்பரம் என வளரும் நந்தனின் சிவதரிசனங்களுக்கான முயற்சிகள், தவிர்க்க இயலாமல் இதற்கு அனுமதிக்கும் அதிகாரவர்க்கத்துடன் ஏற்பட்ட அந்நாளின் அரசியல், சமய நெருக்கடி ஆகியவற்றை பின்னிப் பின்னித் தொடர்கிறது நாவல்.
ஆதனூர் பண்ணையடிமையான நந்தன் தில்லையம்பலத்தின் நடராஜரை வணங்கிட வேண்டி பெரும் முயற்சி எடுத்தான். சிதம்பரத்தில் மூலதரிசனத்தின் போது ஜோதியில் ஐக்கியமானான் என்கிற சிறு குறிப்பை விரித்து விரித்து சாத்தியமான உரையாடல்களை நிகழ்த்திப் பார்த்திருக்கிறார் சோலை சுந்தரபெருமாள்.
“நீசப்பறையன் நீயென” தன்னை தனித்தொதுக்கி சிவதரிசனத்தை மறுக்கும் பிரமதேய அதிபர் முத்துச் சாமி தீட்சிதரையோ, அவரை இயக்கும் வர்ணாசிரமத்தையோ நந்தன் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை; தன் பெருந் தெய்வமான தில்லைநாதரை தரிசித்திட விடாப்பிடியாக முயற்சிக்கிறான். அவன் முயற்சிகள் யாவும் சனாதன தர்மத்தினை, சாதிய இறுக்கத்தை மீறாத தன்மையிலானதாகத்தான் இருக்கின்றன. அப்படித்தான் இருந்திருக்க முடியும். அதிபர்கள், சிவாச்சாரிகள், தீட்சிதர்கள் எனும் மத நிறுவன அதிகார மையங்களிடம் தன்னுடைய விருப்பத்தை இரந்தே தெரிவிக்கிறான். ஒரு போதும் எதன் பெயராலும் மீறலை நிகழ்த்தவில்லை நந்தன். “போதும் நிறுத்துங்க ஆண்டை” என்று உரத்துச் சொன்னதைத் தவிர.
நாவலை வாசித்துக் கடக்கையில் வாசகனுக்குள் எழுதப்படாத பகுதிகளும் அலை அலையாக மேலெழுந்து வருகின்றன. மூங்கில் குத்தில் அமர்ந்து கொண்டு நந்தனும், பண்ணையடிமைகளும் பட்டை, பட்டையாக நெற்றியிலும், உடலெங்கும் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். மாட்டுக்கறி தின்பதையும், நண்டு, நத்தைக்கறி உண்பதையும் நிறுத்துகிறார்கள். தன்னை மேல்நிலையாக்கிக் கொள்ள முயற்சிக்கிற செயலாகத்தான் இவையாவும் நமக்குள் பதிவாகிறது. அரோகரா, சிவ சிவ என நீசப்பறையர்கள் கூத்தாடுவதை அதிபரின் விசுவாசக் காவல்காரனான ராமு மழவராயன் எனும் இடைநிலைச் சாதிக்காரனால் காணச் சகித்திடவில்லை. தண்டம் தரவும், சாட்டையால் விளாசவும் துடிக்கிற அவனின் மன நிலைக்குள் இன்று வரைக்கும் பிராமணியத்தை நிலத்தில் அமல்படுத்துகிற சாதியத்தின் அடையாளத்தை தெளிவாகக் காண முடிகிறது.
நாவலின் காலம் களப்பிரர் காலத்தின் கடைசித்துளி என்று வைத்துக் கொண்டால் மட்டுமே “போதும் நிறுத் துங்க ஆண்டை" எப்படி சாத்தியமிருந்திருக்கும் என்கிற முடிவிற்கு வர முடியும். இந்த ஆதி எதிர்ப்புக் குரலில் இருந்துதான் சாணிப்பாலுக்கும், சாட் டைக்கும் எதிரான போருக்கு உத்வேகம் பிறந்திருக்கும். நந்தன் தனக்கு மட்டும் சிவதரிசனம் கேட்கவில்லை; தன்னையொத்த பண்ணையடிமைகளுக்கும் வழிபாட்டு உரிமையை எழுப்புகிறான். அதனால்தான் நாவலுக்குள் நந்தனின் பயணமெங்கிலும் ஆச்சர்யத்தோடு அவன் பிற பண்ணை யடிமைகளால் பார்க்கப்படுவதோடு அவனுடைய தில்லையம்பல தரிசனம் நிகழ்ந்தே தீர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். பிற சாதிக்காரர்கள் சாதியத்திற்கு எதிரான செயலாகவே நந்தனைக் காண்கிறார்கள். பிரமதேயமும், அரசும் ஏன் நந்தனை சிவ வழிபாட்டிற்கு அனுமதிக்கிறார்கள் என எரிச்சலடைகிறார்கள்.
பிரமதேயம் திருப்பாங்கூர் செல்ல அனுமதித்ததும், தில்லை நடராஜரை வணங்கிட வழிவகை செய்ததும், சிவாச்சாரிகளும் சிதம்பர தீட்சிதர்களும் இதற்கு ஒத்துக் கொண்டதற்கும் பின்னுள்ள புறச்சூழலை நாவல் அழுத்தமாக விரித்துச் சொல்கிறது. பிறவியில் பேதம் காணும் வேதாகமத்திற்கு எதிராக சமணர்கள் செய்து வருகிற பிரச்சாரத்தையும் அதன் மீதான உழைக்கும் மக்களின் ஈர்ப்பையும் அதிபரும், அவருடைய காரியக் கணக்காயரும் கவனிக்கிறார்கள். வர்ணாசிரமக் கோட்டிற்குள் இவர்களை அடைத்து வைப்பது மதமாற்றத்திற்கே வழி வகுக்கும். நீசப்பறையர்கள் வேதமதத்திற்குள் இருந்து சாதியத்தை ஏற்றுக் கொண்டு உழைத்து பிரமதேயத்தின் அடிமைகளாக நீடித்திருக்க வேண்டும் என்றால் தற்காலிகமாக வழிபட உரிமை அளிப்பதில் தவறில்லை என்ற முடிவிற்கு வருகிறார்கள். அதி லும் கவனமாக அடிமைகளின் புழங்கும் வெளி ஆலயத்திற்கு வெளியேதான் என்பதில் உறுதியிலும் உறுதியாக இருக்கிறார்கள்.
பிரமதேய அதிபர் இடைச்சாதியினரின் எரிச்சலைக் கணக்கில் கொள்ளாமல் திருப்பாங்கூருக்கு தரிசனம் காண அனுப்பியதற்கு சமணமதத் தலையீட்டைத் தாண்டிய மற்றொரு காரணமும் இருக்கிறது என்கிற புனைவும் நாவலில் தென்படுகிறது. பிரமதேயங்களும், பட்டமங்கலங்களும் தேவதாசி முறையினை நீடித்திருக்கச் செய்கின்றன என்பது மட்டுமல்ல; அதற்காக சகலவிதமான குரோதங்களையும், தந்திரங்களையும் நிகழ்த்திக் கொண்டுதான் இருந்திருக்கின்றன. நாகபட்டினம் நவமணி எனும் தேவதாசியை ஏலம் எடுப்பதில் தங்களுக்குள் நிகழ்ந்த சச்சரவைக் கணக்கில் கொண்டே ஆதனூர் பிரமதேய அதிபர் முத்துச்சாமி தீட்சிதர் திருப்பாங்கூருக்கு நந்தனை அனுப்பச் சம்மதிக்கிறார்.
வரலாற்று நிகழ்வுகளையோ அல்லது ஒருமுறை எழுதி இறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுக்குள் இப்படி நுண்ணிய சிறு மொழிபுகளைக் கட்டமைத்துப் பார்க்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னுடைய பாலியல் இச்சைக்காக எந்த பலிகளையும், குளறுபடிகளையும் நிகழ்த்துவார்கள் என்பதை எழுதிடத்தான் வேண்டும். இப்படியான குறுமொழிபுகள் புனைவாக பெருகிக் கொண்டேயிருக்கிறது நாவலெங்கும். அவற்றிற்குள் இருந்து அக்காலத்திய தொன்மங்கள் அழகியலாக வெளிப்படுகின்றன.
சிதம்பரம் செல்லும் பயணத்தில் வழித்துணையென மருதன் வந்தமைந்ததும் கூட சிவனின் பெரும் செயல் என்றே நம்புகிறான். மருதன் எப்போதும் நந்தனின் செயலில் அதிருப்தியுறுகிறான். ஆயினும் தன் மக்களின் குரலை அதிகாரத்திற்கு எதிராக முழங்கிய தன்னைப் போன்றவன் என்றே அவனின் வழித்துணையாகி றான். விதிக்கப்படுகிற தண்டத்தை எதிர்த்துக் குரல் தந்திட வேண்டிய அவசியத்தை மருதனுக்கு உணர்த்தியவர் சித்தர் என்கிற குறிப்பு மிக முக்கியமானது. சனாதனத்திற்கு எதிரான குரலை தமிழ்ப்பரப்பில் முழக்கிய சித்தர்களின் வழியாகத்தான் சாணிப்பாலுக்கும், சாட்டையடிக்கும் எதிரான குரலை உயர்த்தி எதிர்க்கலகம் நிகழ்த் திய இடதுசாரிகளையும், சீனிவாசராவையும் நாம் புரிந்து கொள்கிறோம். பண்ணையடிமைகளுக்கு எதிராக நிறுவப்பட்டிருந்த அதிகாரத் தூண்களை தஞ்சை நிலத்தில் உடைத்தெறியும் வல்லமை மிக்கதாக உருவான இடதுசாரி இயக்கத்தின் ஆதிப்புள்ளியாகத்தான் வாசகனுக்குள் மருதனின் சித்திரம் பதிவாகிறது.
சிதம்பரம் தீட்சிதர்களின் சூழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து வருவதையும் வரலாற்றின் பக்கங்கள் நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டேயிருக்கின்றன. மக்களாட்சி பிறந்திருக்கிற நவீனத்துவ காலத்திலும், எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு மனிதர்களை குழுக்களாக அன்றி ஒவ்வொரு தனி மனிதனாக உருமாற்றியிருக்கிற பின் நவீனத்துவக் காலத்திலும் கூட அவர்களுடைய அதிகாரம் கேள்விக்கப்பாற்பட்டதாக நீடித்துக் கொண்டிருப்பதை நாம் அறிந்து தான் வைத்திருக்கிறோம். தமிழ்க் கடவுள் என்ற அடையாளம் பெற்ற சிவனை தமிழ்மொழியால் துதித்திடல் கூடாது. தேவபாஷை தவிர்த்து நீசபாஷை யினை கருவறைக்குள் அனுமதியோம் என்கிற தீட்சிதர்களின் வன்மத்தை தோலுரித்திடும் கருவியாகவும் மரக்கால் நாவலை நாம் வாசித்திடச் சாத்தியமிருக்கிறது. நந்தனை தீக்கிரையாக்கிய நரித்தந்திரத்தை இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாற்றை மீள்பார்வைக்கு உட்படுத்திப் பார்த்திட வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் வரலாற்றின் பக்கங்களில் ஒற்றைப் புள்ளியளவிலான இடம் கூட அற்று புறந்தள்ளப்பட்டிருக்கும் அடித்தளமக்களின் வரலாற்றை உருவாக்கிப் பார்க்க முடியும். அடித்தள மக்களின் வரலாறுகளை காலம் காலமாக வார்த்தைகளால் உருவாக்கி அடுத்த, அடுத்த தலைமுறைகளுக்குள் கடத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் தொடர்ச்சியின் கண்ணியை அறுத்திடும் சூழ்ச்சியை நவீனத்துவம் முன்வைத்த போது, கதை சொல்லிகள் புதிய கதைகளின் மூலமாக சமூகத்தின் வரலாற்றைக் கட்டிப் போட்டு பார்த்திருக்கிறார்கள். எனவே தான் பாட்டிகளின் வாய்மொழிக் கதையாடல்களுக்குள் சமூகத்தின் மனசாட்சியை நம்மால் கண்டுணர முடிகிறது.
தமிழ்ச் சமூகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால தொன்ம வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் ஊடே கூர்ந்துதான் கண்டறிய முடியும். ஆதிக்க வர்க்கம் தில்லைநாதனைத் தரிசிக்க களத்திலும் நிலத்திலும் செய்து முடிக்க வேண்டியவை என நந்தனுக்கு மலையினும் பெரிதாக பணியை நிர்ப்பந்திக்கிறது. அதனால் செய்து முடித்திட சிவனே முன் வந்தார் என்கிற தஞ்சைப் பகுதி விவசாயிகளின் வாய்மொழிக்கதையே மரக்காலை உருவாக்கியிருக்கிறது. சோலை சுந்தரபெருமாளின் ஆச்சரியமான கண்டுபிடிப்புகளான தர்மவர்த்தினியும், மருதனும் தமிழ் புனைவு வெளியில் நீண்ட நாட்கள் வாழ்வார்கள். அப்படித்தான் புனைகதையாளன் புதிய, புதிய வரலாற்றை தன் கதைகளின் வழியே கட்டமைப்பான். அதற்காகத்தான் நாவலெனும் பெரும் விரிவைத் தேர்வு செய்கிறான்.
-ம.மணிமாறன்
ஈயடிக்கிறான் இளைஞன்!
“அண்ணே, இளைஞன் படத்துக்கு கூட்டமே வரலியாம். மாவட்டம், வட்டமெல்லாம் சேந்து மொத்தமா டிக்கெட் வாங்கி, ஆட்களைத் திரட்டி இலவசமா அனுப்பிப் பாத்தாங்களாம். அப்படியும் கதையாகல. இப்ப அடிஷனலா குவார்ட்டரும் இலவசமாம். அடுத்து பிரியாணியும் கொடுக்க திட்டமிருக்காம்” என கார்த்தி நேற்று சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தான். தஞ்சை நகரத்தில் முக்கிய தனியார் பள்ளிகளுக்கு பரிவோடு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இளைஞன் படத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இன்று பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. பாவம் அந்தப் பிஞ்சுக்குழந்தைகள்.
தியேட்டர் உரிமையாளர்கள் திருதிருவென முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். காலியான இருக்கைகளில் கலைஞரின் வசனங்கள் முட்டி மோதிச் சிதறுவதைப் பார்க்க சகிக்க முடியாமல் தவிக்கின்றனர். வேறு படமும் மாற்ற முடியாத நிலைமை. மூன்று வாரங்களுக்கு ஒரேயடியாக இளைஞன் தானாம். கண்டிப்பான உத்தரவு.
இந்தப் படத்துக்குத்தான் டி.வியில் ஐந்து நிமிடத்துக்கொருமுறை எத்தனை சவுண்டு! பாடல் வெளியீட்டு விழாவில் எவ்வளவு எழுச்சிமிக்க உரைகளும், பாராட்டுக்களும்! கவிப்பேரரசுவின் எப்பேர்ப்பட்ட உணர்ச்சிகரமான வார்த்தைக் குவியல்கள்! “நல்ல குணம், பண்பாடு இல்லாத மனிதர்களுக்கு நேர் வழியில் இடம் கிடைக்காது. பைபாஸ் வழியாதான் போயாகணும்… ஊருக்குள்ள நுழைய முடியாது!” என்று தத்துவம் பேசிய ரஜினிகாந்த்! ஆமாம், இப்போது படம் நேர்வழியில்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் இதே தமிழ்நாட்டில்தான் பல ஊர்களில் திரையிட முடியாமல் இருக்கிறது. அரசின் சார்பில் ‘வரி விலக்கு’ என கண்துடைப்பாக அறிவித்துவிட்டு படம் திரையிட முடியாமல் இருப்பதற்கு மறைமுகத்தடைகள் நீண்டுகொண்டு இருக்கின்றன. அதையும் மீறி, இடதுசாரி இயக்கங்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இணைந்து இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் திரையிட்டு இருக்கின்றனர். மேலும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ‘இளைஞன்’ படம் பார்க்க வேண்டும் என விளம்பரத்தில் பேசுகிற தலைவர்கள் எல்லாம் ‘அம்பேத்கர்’படம் திரையிடவும், மக்கள் பார்க்கவும் ஒரு துரும்பையாவது அசைத்திருப்பார்களா?
இவர்களுக்கெல்லாம் தங்கள் படம், தங்கள் கட்சி, தங்கள் ஆட்சி, தங்கள் உறவு என்ற வளையங்களைத் தாண்டி இலட்சியங்கள் எதுவுமில்லை என்பதற்கு இந்த இளைஞனும் ஒரு சாட்சி. அதுதான் அவன் ஈயடித்துக்கொண்டு இருக்கிறான். மக்சிம் கார்க்கி சகித்துக்கொள்ள மாட்டார்.
இங்கே அரசியல் பேசலாம் - 1
2ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழலையும்விட பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய தணிக்கைக் குழு தற்போது ‘கண்டுபிடி’த்திருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் விற்பதில் நடந்த முறைகேடு இது. 2005ம் ஆண்டு 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை தேவாஸ் மல்டி மீடியா என்னும் தனியார் நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் பயன்படுத்திக்கொள்ள கட்டணமாக ரூ.1000 கோடி பெறப்பட்டு இருக்கிறது. அதே வேளையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 மெகாஹெர்ட்ஸ் பயன்படுத்திக்கொள்ளவே கட்டணமாக ரூ 12, 847 கோடி பெறப்பட்டு இருக்கிறது. தனியார்நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த ஊழலால் அரசுக்கு இரண்டு லட்சம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என இப்போதைக்கு உத்தேசமாக சொல்லப்படுகிறது. தொகைகள் மேலும் கூட உயரலாம். அது தட்பவெப்ப நிலையை பொறுத்தது. எப்படியோ காங்கிரஸே மீண்டும் தனது சாதனையை தானே முறியடித்திருக்கிறது.
ஒரு லட்சம் கோடி என்றும், இரண்டு லட்சம் கோடி என்றும் தேசத்தின் வளங்களையும், வருமானங்களையும் இத்தனை எளிதாக மோசடி செய்கிற இவர்கள்தான் இன்னமும் தாங்கள் யோக்கியர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்கிறார்கள். நாட்டுக்காகத் தியாகம் செய்யப் பிறந்தவர்கள் என்று பீற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். ‘பரிசுத்த’ மன்மோகன் சிங் ராஜ்ஜியத்தில் மண்ணிலும், நீரிலும், விண்ணிலும் ஊழல் தேவதைகள் நடனமாடுகிறார்கள். தேவரீரின் கிருபையால் கொழுத்தவன் மேலும் கொழுக்கிறான், இளைத்தவன் அதற்கு மேலும் இளைக்க முடியாமல் சாகிறான்!
சரி, 2005ம் ஆண்டு நடந்த ஊழல் இப்போதுதான் தணிக்கைக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது எனில், இத்தனை வருடங்களாக, தணிக்கைக் குழு என்ன செய்துகொண்டு இருந்தது என்று யாரிடம் கேள்வி கேட்பது?
முப்பது மாதங்களுக்கு முன்பு ‘திருப்பதி’யில் வைத்து ‘ஊழலை எதிர்த்து யுத்தம் செய்யப்போவதாக’ லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி முழங்கியவர் இப்போது ஊழலின் சொர்க்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு விட்டார். பிரஜா ராஜ்ஜியம் என்றால் மக்களின் ராஜ்ஜியம் என்றும், சீரஞ்சீவி என்றால் நீண்ட ஆயுள் கொண்டவர் என்றும் அர்த்தம்! இப்போது ஜோக் ஆகிவிட்டது. சரி, இனி சீரஞ்சீவி யாரை எதிர்த்து யுத்தம் செய்யப் போகிறார்?
ஆந்திராவில் இப்படி மலையை விழுங்கிய காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் எஸ்.வி.சேகர் என்னும் கூழாங்கல்தான் இதுவரைக் கிடைத்திருக்கிறது. காத்திருந்து கவனிப்போம்.
சுப்பிரமணியம் சுவாமி மீது கருணாநிதி வழக்குத் தொடர, கருணாநிதி மீது சு.சுவாமி மீது வழக்குத் தொடரப் போவதாக அறிவிக்க, ஒரே தமாஷாக இருக்கிறது. போயும் போயும் சு.சுவாமியோடெல்லாம் மோதுகிற அளவுக்கு தமிழக முதல்வரின் நிலைமை படு மோசமாகி இருக்கிறது என்பது மட்டும் இதனால் தெளிவாகிறது. கம்மங்கூட்டில் கேஸ்கட்டுக்களை வைத்துக்கொண்டு அலையும் இந்த ‘அரசியல் வைத்தி’க்கும் காலம் எப்படி கழிகிறது, பாருங்கள்!
“ராசா எந்தக் குற்றமும் செய்யவில்லை”
“ராஜினாமா செய்ததால் ராஜா குற்றம் செய்தார் என்று அர்த்தமல்ல”
“கைது செய்யப்பட்டதாலேயே ராசா குற்றவாளி என்று அர்த்தமல்ல”
நெஞ்சுக்கு நீதி?
மரங்களுக்கு உண்டு மறுபிறவி!
இந்த அளவு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்த மரங்களை வெட்டி அழிப்பதில் மனிதன் வெற்றி பெற்றுவிடுகிறாn! மரங்களை வெட்டவேண்டிய கட்டாயம் நேரிடும்போது அவற்றின் கிளைகளை வேறொரு இடத்தில் நட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட நம்மிடம் இல்லை. நட்டம் மரத்துக்கு மட்டுமில்லை. இந்து நாளிதழில் திரு டி. பாலசுப்பிரமணியன் எழுதிய இந்தக் கட்டுரையை பேராசிரியர் ராஜூ இங்கே மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.
-------
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் உள்ள காமகுரா கோவிலில் 800 வயதான பெருமைக்குரிய கிங்கோ மரம் ஒரு பனிப்புயலின் காரணமாக கீழே விழுந்துவிட்டது. அதன் மீது ஒயினை ஊற்றி, பிறகு உப்பு சேர்த்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன! 1219 பிப்ரவரி 12 அன்று காமகுரா சேய்வா கெஞ்சி பேரரசு வீழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த மரம் இதுதான்.
மரங்கள் வரலாற்றை மட்டும் சொல்வதில்லை. பழமையின் பெருமையைப் பறைசாற்றும் நினைவுகளையும் தரவல்லவை. கவுதம புத்தர் அமர்ந்த போதி மரம் ஓர் உதாரணம். கி.மு. 286-ல் இம்மரத்தின் ஒரு கிளை இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. உலகில் மனிதரால் முதன்முதலில் நடப்பட்ட மரம் இதுவாக இருக்கக்கூடும். “எல்லா உயிரினங்களுக்கும் உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எல்லாம் தரும் அற்புதமான ஓர் உயிருள்ள பொருளே மரம். கோடரியைக் கொண்டு அதை வெட்டிச் சாய்க்கும் மனிதர்களுக்கும் அது நிழலையே தருகிறது” என்றார் புத்தர். எவ்வளவு உண்மை !
கர்நாடகாவில் உள்ள 81 வயதான சாலமராதா திம்மக்கா ஓர் உண்மையான உணர்வுரீதியான பௌத்தர். அவரும் அவரது கணவரும் தங்களுக்குக் குழந்தை பிறக்காது என்பதைத் தெரிந்துகொண்டவுடன், மரங்களை நட்டு அவைகளைத் தங்களது குழந்தைகளைப் போல் வளர்க்க முடிவு செய்து அதை அமுல்படுத்தி வருகின்றனர்.
மரங்களில் மிகப் பழமையானவை உண்டு. போதி மரம் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனில் கலிபோர்னியாவில் உள்ள செக்கோயியா (Sequoia) மரங்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவைதான். 275 அடி உயரம், 6000 டன் எடை, 52500 கன அடி கொண்ட மிகப் பெரிய மரங்கள் அவை. கடல் மட்டத்தைவிட 11000 அடி உயரத்தில் உள்ள மெத்தூசிலா (Methuselah) என்றழைக்கப்படும் ஊசியிலை மரம் 48,838 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்படுகிறது. உலகின் மிக வயதான மரம் நார்வே-ஸ்வீடன் எல்லையில் உள்ள டலாமாவில் இருக்கிறது. அது எப்போதுமே பசுமையாக இருக்கும் ஒருவகை ஊசியிலை மரம். அதனுடைய அடிமரம் 600 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது என்று மதிப்பிடும் விஞ்ஞானிகள், அது குளோனிங் (செல்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிக் கொள்ளும்) செய்துகொள்ளும் தன்மையுடது என்கின்றனர்.
இந்த குளோனிங் செய்துகொள்ளும் தன்மைதான் தாவரங்களையும் மரங்களையும் நம்மிலிருந்தும் பிற விலங்குகளிலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. இந்தத் தன்மையின் காரணமாகத்தான் போதி மரத்தின் கிளையைக் கொண்டுபோய் அனுராதபுரத்தில் நட்டு மற்றொரு மரம் வளர்க்க முடிந்தது. இதனால்தான் டாக்டர் ஜெயந்த் நர்லிகரால் ஐ[க் நியூட்டன் புவி ஈர்ப்புவிசையைக் கண்டுபிடிக்க உதவிய ஆப்பிள் மரத்தின் ஒரு கிளையைக் கொண்டுவந்து புனேயில் நட முடிந்தது.
மரங்களைப் போல் குளோனிங் செய்துகொண்டு ஏன் நம்மால் நெடுங்காலம் வாழ முடிவதில்லை? நம்முடைய செல்கள் பிளவுண்டு கொண்டே போக முடியாது. 40 சுற்றுகளைத் தாண்டி அவைகளால் மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியாது. நமது குரோமோசோம்களின் மரபணுக்கள் மறுபிரதி எடுத்துக் கொள்ளும் தன்மையைப் புரிந்துகொண்டால் இந்தப் புதிருக்கான விடை கிடைக்கிறது.
குரோமோசோம் பிளவுண்டு தன்னையே மறுபிரதி எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் முனையில் சிறிதளவு இழப்பு ஏற்படுகிறது. சில தடவைகள் மறுபிரதி எடுத்தபிறகு அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடுகிறது. நமக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஆயுள் முடிகிறதெனில் மொத்த உடலுக்கும் சேர்த்துதான் முடிவு ஏற்படுகிறது. ஆனால் தாவரங்களுக்கு ஆரம்பகட்ட உடல் அமைப்பே இருக்கிறது. அவை வேர்கள், தண்டுகள், கிளைகள், இலைகள் எனத் தனித்தனி பகுதிகளாக வளர்கின்றன. இலைகள் வளர்ந்து உதிர்ந்தபின்னரும் தாவரத்தின் மற்ற பகுதிகள் இறந்துவிடுவதில்லை. ஒரு பகுதியின் செல்கள் ஒட்டுமொத்த உயிரியாக மறுஉற்பத்தி செய்துகொள்ள முடியும். ஒரு மரத்தின் கிளையை அல்லது குச்சியை எடுத்து வேறொரு இடத்தில் நட்டு மற்றொரு மரத்தை வளர்க்க முடியும். அல்லது வேறொரு கிளையுடன் ஒட்டவைத்து புதிய வகை மரத்தையே கூட உருவாக்க முடியும். ஒரு பகுதியின் செல்கள் இறப்பு ஒட்டுமொத்த உயிரியின் இறப்பாக முடிந்துவிடுவதில்லை.
தேகம்
காலையில் வங்கிக்குச் செல்ல வெளியே வந்த போது கவனித்தேன். குருவியைப் போல பெரிதாய் இருக்கும் புனில் ஒன்று கேட் அருகே தரையில் அசையாமல் கிடந்தது. செத்துப் போய்விட்டதோ என்று சங்கடப்பட்டு அருகில் சென்றேன். உடலில் அசைவுகள் இருந்தன. தொட்டுப் பார்க்கவும் ‘க்கீ’ என சத்தமிட்டு அசைந்து துடித்தது. இடது பக்க இறக்கை உடலோடு ஒட்டிக்கொண்டிராமல் விரிந்திருந்தது. நான் அங்கேயே நின்றிருப்பதைப் பார்த்து அப்பா ‘என்ன’ என்று கேட்டுக்கொண்டே வந்தார்கள். “புனில் அடிபட்ட மாதிரி இருக்கு. கீழே கெடந்தா நாயாவது, பூனையாவது தூக்கிட்டுப் போயிரும்” என்று சொன்னேன். அப்பா அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இறக்கைகளை சடசடத்து, கத்தியது. அலகைப் பிளந்து பிளந்து பார்த்தது.
“நீ ஆபிஸுக்குப் போ. நா பாக்குறேன்.” என்றார்கள் அப்பா. தெருமுனை திரும்பும்போது பார்த்தேன், அப்பா அங்கேயே நின்றிருந்தார்கள். அப்பாவின் கையிலிருந்து புனில் பறந்து விடும் என்றுதான் தோன்றியது. அதிர்ச்சியில் இப்படி சில நேரம் விழுந்து கிடக்கும் குருவிகள், காக்கைகள் பிறகு மெல்ல சுதாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பறந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். மெயின் ரோடு வந்ததும் கவனம் எல்லாம் வேறாகிவிட, சிந்தனைகளும் கிளை விட்டு பயணித்தன. சுத்தமாய் மறந்து விட்டேன்.
மதியம் திரும்பவும் வீட்டிற்குச் சென்று கேட்டைத் திறக்கவும், அதில் தொங்க விட்டிருக்கிற பால் பாக்கெட் கூடைக்குள்ளிருந்த புனில் கத்தியது. சோர்ந்து இருந்தது. விழித்துப் பார்த்த அந்தச் பொடிக் கண்களில் வலியும், சோகமும் வழிந்துகொண்டு இருந்தன. வதைபடும் அதன் சிறகுகளை வருடுவதற்காகத் தொட்டேன். சிலிர்த்துக் கத்தி விலக முயற்சித்து முடியாமல் கிடந்தது. அப்பா வெளியே வந்து, “மாது, அத யாரோ கவன்கல்லால் அடிச்சிருக்காங்க. ஒரு பக்கம் இறகு ஒடிஞ்சு போச்சு. ஒண்ணுஞ் செய்ய முடியாது. நாய் தூக்கிட்டுப் போகக் கூடாதுன்னு இந்தக் கூடையில வச்சிருக்கேன்” என்றார்கள். சாப்பிட மனம் வராமல் அங்கேயே நின்றிருந்தேன். மரணம் அந்த சிறு தேகத்தைப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கிக்கொண்டு இருந்தது.
எதிரே பெட்டிக்கடை வைத்திருக்கும் பாய் “என்ன ஸார்” என்று அருகில் வந்து பார்த்து, “பாவமாயிருக்கு” என்றார். கடைக்கு வந்த யாரோ ஒருவரும் அருகில் வந்து பார்த்து, “ரெயில்வே லைனுக்கு அந்தப் பக்கம் சின்னப் பசங்க யாராவது அடிச்சிருப்பாங்க. வலியோட பறந்து வந்துருக்கும். அப்புறம் முடியாம விழுந்துருக்கும். இன்னுங் கொஞ்ச நேரத்துலச் செத்துப் போயிரும். கண்ணுல்லாம் சொருக ஆரம்பிச்சுட்டு” என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே, “பாய் வாங்க. ரெண்டு ஸிஸர் தாங்க” என்றார்.
புனில் தனியாய் இருந்தது. தூக்கிக் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. என் ஸ்பரிசம் பட்டதும் முன்னைப் போல அது விலகவில்லை. தலையைச் சாய்த்து கண்ணை மூடிக்கிடந்தது. பறவை. காற்றில் அந்த பட்டுச் சிறகுகள் மிகவும் லேசாய் அசைந்துகொண்டுதான் இருந்தன இப்போதும்.
அவர் ராசா. ஆனால் ராசா இல்லை.
அவர் ராசா. ஆனால் ராசா இல்லை.
அவர் மந்திரியாக இருந்தார். ஆனால் மந்திரி இல்லை.
அவர் குதிரையோ, யானையோக் கூட இல்லை.
அவர் ஒரு சிப்பாயாய் அருகிலிருந்தபோது, ராசாவுக்கு செக் வைக்கப்பட்டது.
வழிமறிக்கச் செய்து வெட்டுக் கொடுக்கப்பட்டார் அவர்.
ஒருகணம் ஸ்தம்பித்த காய்கள் மீண்டும் கட்டங்களுக்குள் நகர்த்தப்பட்டு அசைகின்றன.
வெறுங்காயாய் அவர் வெளியேக் கிடக்கிறார்.
அவ்வளவுதான்.
ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ராசாக்கள் விளையாடுகிறார்கள்.
Tags:
அரசியல்
,
தீராத பக்கங்கள்
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 15
மொழியின் மீது அக்கறையும், இலக்கியத்தின் மீது தீராத காதலும் கொண்டிருக்கிற வாசகனைத் தடுமாறச் செய்கிற விவாதங்கள் இலக்கியப்புலத்தில் அடிக்கடி நிகழ்வதுண்டு. யதார்த்த வாதம் முதலாளித்துவத்தின் வெளிப்பாட்டு முறை, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைப் படைப்பாக்கிட யதார்த்தவாதத்தில் சாத்தியமில்லை. ஏனென்றால் யதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்று உரைத்தார்கள்.
யதார்த்தவாதத்தின் எல்லா சாத்தியங்களையும் தமிழ்ப் படைப்பாளிகள் பயன்படுத்தியிருக்கவில்லை. யதார்த்த மொழி நடையில் சொல்லித் தீர்ப்பதற்கு ஒராயிரம் விஷயங்கள் இன்னும் படைப்பின் கையில் மிச்சமாக இருக்கிறது என்கிற உண்மையையும் கூட வாச கன் கண்டறிந்திட “ஆழிசூழ் உலகு” - என்கிற பரதவர்களின் வாழ்வியல் வரைபடம் உதவி செய்கிறது. நிலத்தின் விளிம்பில் கடலா, கடலின் விளிம்பில் நிலமா என்கிற மயக்கத்தை எல்லோருக்குள்ளும் கடல் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. கடலின் விஸ்தாரம், அதன் பிரம்மாண்டம், அது கலைத்துப் போட்ட வாழ்வின் அதிகணங்கள் என யாவற்றையும் உள் வாங்கிட எப்போதும் வாசகன் விரும்புகிறான். ஹெமிங்வே யின் ‘கடலும் கிழவனும்’ காலம் கடந்தும் வாசகனின் மனதில் பெரும் கிளர்ச் சியை ஏற்படுத்துவதற்குக் காரணம் வாசகன் அறிந்திட சாத்தியமில்லாத கடலுக்குள் நாவல் நிகழ்வது தான்.
நாவலின் பக்கமெல்லாம் பொங்கிப் பெருகி வருகின்ற விதவிதமான மீன் கள். அவை எப்படிப்பட்டவை தெரியுமா? ஓங்கல் மீன்களின் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மற்ற பகுதிகள் கரு நீலமாகவும் வழவழவென பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். முத லில் பார்ப்பவர்கள் மிரண்டு விடுவதுண்டு. போஸ்கோ எனும் மீனவனும் அப்படித்தான் ஒங்கலைப் பார்த்துப் பயம் கொள்கிறான். அப்போது தொம் மந்துரை எனும் தேர்ந்த கடலோடி அவனுக்குச் சொல்கிறான். “போஸ்கோ, பயப்புடாத. ஒங்கல்வ ரொம்ப நல்லதுவ. காந்திமாரி, சாதுவானதுவ. தோணியள்ல போற நம்ம ஆள்க தவறி கீழ வுழுந்திற்றான் வயின்னா இந்த ஒங்கல்வதாம் சுத்தி நின்னு சுறாப்பயல்வ கிட்ட வராம காப்பாத்துமாம்”. மீனுக்கும் பரதவர்களுக்குமான புரிதலும், கடலோடு இயைந்த அவர்களின் வாழ்வையும் அறிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது இந்த ஒரு துளி.
கடலின் விதவிதமான ரூபங்களை யும் கூட வாசகன் தொம்மந்துரையெனும் தேர்ந்த கடலோடியின் கண்களின் வழியாக கண்டடைகிறான். கருத்துப் பெருத்த வரிப்புலியன் தண்ணீருக்கு அடியில் மற்றொரு கருப்பும் அலைகிறது. அது என்ன தெரியுமா; “வரிப்புலியும் எப்பவும் ஜோடியாத்தாம் அலையும். இப்ப மாட்டிக்கிட்டது ஆணா, பெண்ணா தெரியலா”. “ஆணா இருக்கும் அது தாம் ஜோடியா நிக்கிற பொட்டகிட்ட பலத்த காட்டுறதுக்கு இந்த துள்ளு துள்ளுறாம்”. “சரிதாம் அண்ண, மரத்துகிட்ட சேர்ந்து வரும் போது பார்த்தமில்ல. அதுக்கு கீழேவே ஒரு கறுப்பு வந்துகிட்டேயிருக்கு”. “யாருக்குத் தெரியும், பரந்த கடல்ல ஜோடிய சுத்திக்கிட்டு இருந்திருப்பாவ, இப்ப நம்மாளு எதுலேயோ மாட்டிகிட்டான், நெனச்ச இடத்துக்கு போவ முடியல்லியே, முத்தங்கித்தம் குடுக்க முடியல்லியேன்னு சோகமா சுத்திக்கிட்டு இருக்குமாயிருக்கும்”. ஒரு படைப்பின் அதீதமான சாத்தியங்களையும் தேர்ந்த படைப்பாளியால் எட்டி விட முடியும் என்பதை தன்னுடைய முதல் நாவலில் நிரூபித்தவர் ஜோ. டி. குரூஸ்.
ஆமந்துறையெனும் பரதவர்களின் கிராமத்தில் வாழ்ந்த தொம்மந்துரையெனும் மீனவனின் கொடி வழிக் கதைதான் “ஆழிசூழ் உலகு” என்ற போதும் கதைகள் யாவும் காலக்கிரமமாக வரிசை வரிசையாக அடுக்கித்தரப்படவில்லை. பரதவர்களின் குலப்பாடகனான ஜோ.டி.குரூஸ் அவரது ஞாபகங்களின் ஊடாகப் பயணித்து 1933ல் துவங்கி 1985 வரையிலுள்ள அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலான ஆமந்துறைக்கும், தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சிக்கும் உள்ள உறவு. இந்த ஊரின் காவல் தெய்வம் போல வாழ்ந்த காகுச்சாமியார் எனும் கிறிஸ்தவ பாதிரியின் பிரம்மாண்டமான ஆகிருதி. ஊருக்குள் நிலத்திலும் மனிதர்களுக்குள் நிகழும் மனவெழுச்சி, மாற்றங்கள், கோபங்கள், பாலியல் இச்சைகள், பாலியல் மீறல்கள் என யாவற்றையும் ஒரு குலமரபுப் பாடலின் நுட்பத்தோடு பதிவு செய்திருக்கிறார். கடலின் அலையைப் போல காலத் தின் பெருவெளிக்குள் முன்னும், பின்னுமாக அலைவுறுகிறது நாவல். அவற்றிற்குள் காட்சிப்படுவதெல்லாம் பரதவ மக்களின் தனித்த மனக்கிலேசங்களே என்பதை வாசகன் கண்டடைவான்.
பரதவர்களின் வாழ்விடமான கடல் நிலையாமையின் அடையாளம், விவசாயம், கால்நடை பராமரித்தல் போன்ற தமிழர்களின் நிலம் சார் தொழில்களில் இருக்கும் குறைந்தபட்ச நிச்சயம் கூட பரதவ மக்களின் குலத்தொழிலான மீன் பிடித்தலில் சாத்தியமில்லை. இந்த நிச்சயமின்மையே அவர்களின் குணநலன்களையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இயற்கை முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான பெருத்த நம்பிக்கையை புனித அந்தோணியாரை (அய்யா) தவிர வேறு எவரும் அளித்திடவில்லை. அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிற போதும், சுக்கு நூறாகச் சிதைகிற போதும் அய்யாவின் காலடியில் மண்டியிட்டுக் கதறிக்கடைத்தேறுகிறார் கள். “கண்ணீர்க் கடலில் தத்தளிப்பவர்களின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக இருக்கிறது மதம்”, என மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருப்பார். அதற்கான இலக்கிய சாட்சியை நாவலெங்கும் நாம் வாசித்தறிகிறோம்.
கிறிஸ்தவம் வந்தடைந்த செய்தியை நாவல் ஒரு புள்ளியில் சொல்லிச் செல்கிறது. நாயக்கர்களிடம் இருந்தும்., முகம்மதியர்களிடம் இருந் தும் எங்களைக் காப்பாற்றினால் நாங்கள் கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகிறோம் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று, போரில் எதிரிகளை வீழ்த்தியதற்கு காணிக்கையாக கிறிஸ்தவத்திற்குள் கரைந்தார்கள் என்றொரு வாய்மொழி வரலாறு இத்தென்பகுதி கடற்கரைக் கிராமங்களில் புனித சவேரியாரின் பெயரால் சொல்லப்பட்டு வருவதையும் நாவல் பதிவு செய்கிறது. கடற்கரைக் கிராமத்துக் கிறிஸ்தவ திருவிழாக்களையும் கூட நாவல் அழுத்தமாக அதன் அழகியலோடு பதிவு செய்துள்ளது. தேர்த்திருவிழாக்களில் ஊர்ந்து வரும் சப்பரங்களும், அவற்றில் வீற்றிருக்கும் புனித சவேரியார், அந்தோணியார், தேவமாதா ஆகியோரின் சொரூபங்களும் ஐரோப்பிய கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் புதிதானது.
தென்குமரிக் கடற்கரையில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் மீதான பரதவர்களின் நம்பிக்கை மகத்தானது. கடலையும், கடலுக்குள் மீன்பாடு அமைவதையும், பெரு வெள்ளம், ஆழிப் பேரலை இவற்றில் இருந்தும் தம்மைக் காக்கும் பெரும் சக்தியவள் என்கிற அவர்களின் நம்பிக்கையைக் கண்டறிந்ததால்தான் இங்கே கிறிஸ்த வத்தை பரப்பிட வந்த புனித சவேரியார், அவர்களுக்குள் மாதா வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம் தவிர வேறு எங்கும் யேசுவின் தாயான மேரிமாதாவைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இல்லை. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள், பரதவர்களின் தொல் சடங்குகள், குலமரபு, நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொண்டு அதன் வழியாகவே மதத்தையும், மத நிறுவனங்களையும் கட்டமைத்தனர் என்கிற சமூகவியல் ஆய்வினையும் நாவல் கொண்டிருக்கிறது.
தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருக்கிற கத்தோ லிக்க கிறிஸ்தவத் திருச்சபைகளின் மீதான விமர்சனத்தையும் நாவல் வைத்திடத் தவறவில்லை. கோயில் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கும் பரதவர்களின் வாழ்வை மேலேற்றுவதற்குப் பதிலாக திரு விழாக்கால காணிக்கையிலும் ஏலம் விடும் பொருட்களின் மூலமாக கிடைக் கும் பணத்தின் மீதும் மட்டுமே குறியாக இருக்கும் சாமியார்கள் பாலியல் மீறல்களை நிகழ்த்துவதையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இது மட்டுமல்லாது எல்லா மீனவக் கிராமங்களையும் ஊர்க்கட்சி, சாமியார் கட்சி என இரண் டாகப் பிரித்துப் போட்டு தனக்கு வேண்டியவர்களை மட்டும் நிர்வாகத் தில் வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்பவர்களையும் நாவல் படம் பிடித் துக் காட்டுகிறது. இந்த எளிய விமர்சனங்களை எல்லாம் அழித்து எழுதும் பேராற்றல் மிக்கவராக காகுச் சாமியார், நாவல் எங்கும் பிரம்மாண்ட ரூபம் கொள்கிறார்.
ஆமந்துறையெனும் மீனவ கிராமத்திற்கு பங்குத் தந்தையாக காகுச் சாமியார் வந்த நாள் முதல் அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்கிறவராகவே வாழ்கிறார். புனித சவேரியாரின் மறு வடிவம் போலத்தான் நமக்குக் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரின் மீது கொண்ட பேரன்பினால்தான் நாவலாசிரியர், புத்தகத்தின் பிற்சேர்க்கையில் அவரின் முழுப் பக்க புகைப்படத்தை இணைத்துள்ளார். பலி பூசை நடத்தி விட்டு காணிக்கையை எண்ணிக் கணக்கிட்டு திருச்சபை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிற வெறும் மதப் பிரசங்கியல்ல காகுச் சாமியார் என்பதை நாவலெங்கும் நாம் கண்டுணர்கிறோம். தொம்மந்துரைக்கு விதவை மதினியைத் தாரமாக்குகிறார். விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறவராக மட்டும் அவரை நாம் பார்க்க முடியாது. அப்படியிருந்தால் காகுச் சாமியாரின் மரணம் நிகழ்ந்த போது ஆமந்துறையே திரண்டு போய் அவருக்கான மரியாதையைச் செய்திருக்காது. இறால் மீன் ஏற்றுமதிக்குள் கிறிஸ்தவப் பாதிரிமார்களின் நுட்பமான பங்கும் இருப்பதை அவர்களுடைய கடிதங்களை ஆய்வுக்குட்படுத்தினால் கண்டறிய முடியும். “ஆழிசூழ் உலகு” என்கிற இப்பெரும் படைப்பே கூட காகுச் சாமியார் சொல்கிற “நண் பர்களுக்காக உயிரை விடுறதை விட மேலான தியாகம் ஒன்றுமில்லை”ங்கிற இப்புள்ளியில் தான் சுழல்கிறது என்று நான் நினைக்கிறேன்.
ஆற்ற இயலாத பெருங்கோபம் தன்னுள் நீங்காது நிறைந்திருப்பதால் தான் ஜஸ்டின் வெட்டுண்டு கிடக்கிற போதும் அவனுடைய நெஞ்சாங் கூட்டிற்குள் மண்ணை அள்ளி நிறைக்கிறாள் வசந்தா. தன்னைத் தன் பிராயத்தில் துரத்தி துரத்தி வேட்டையாடியவன்; தன் தகப்பனைத் திட்டமிட்டு வெட்டிக் கொன்றவன் ஜஸ்டின். அவனை எப்படி எத்தனை நாளானா லும் மன்னிக்க முடியும் வசந்தாவால். விதவை மதினி அமலோற்பவத்தைத் திருமணம் செய்த பிறகு பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததா, தன் அண்ணனுக்குப் பிறந்ததா என்கிற குழப்பமின்றி அன்பைக் கொட்டி பிள்ளையை வளர்க்க தொம்மந்துரையால் மட்டுமே முடியும். ஊரையே செல்வச் செழிப்பாக்கிய மிக்கேல் பர்னாந்து இலங்கையில் மரணத்திற்கு பிறகு ஆமந்துறை வந்தடைந்த அவளின் மருமகளான சாராவிற்கு சூசையார் நிகழ்த்திய மிருக குரூரத்தை எண்ணி தனக்குள் வதைபட்டு, அவளின் மகளான சிலுவையை தன் நெஞ்சில் சுமந்து வளர்ப்பதென நாவல் விதவிதமான மனித உணர்வுகளால் நெய்யப்பட்டிருக்கிறது.
கடலும், காலமும் மரணமும் நிகழ்த்துகிற கொடூர விளையாட்டிற்கு பகடையாகிப் போன மனிதத்தொகுதியின் வாழ்க்கையை “ஆழிசூழ் உலகு” பரதவர்களின் மூன்று தலைமுறை வாழ்க்கையின் ஊடாக மனிதர்களின் அன்பு, கோபம், காமம், வக்கிரம், குரோதம் என சகலவற்றையும் படைப்பாக்கியிருக்கிறார் ஜோ.டி.குரூஸ். ஆமந்துறையெனும் கடல்புரத்து மனிதர்களின் வாழ்வதற்கான பெரும் யுத்தமே நாவல். பரதவ கிராமங்களுக்கிடையே மூளும் தீர்க்க முடியாத சண்டைகளுக் கும் வன்கொலைகளுக்கும் நாடார் -பரதவர்களுக்கும் இடையே மூளும் சண்டைகளுக்கும் அதிகாரம், பணம், குத்தகையே காரணமாக இன்று வரை நீடித்திருப்பதை நாவல் வரலாற்றிற்குச் சொல்லிச் செல்கிறது. யதார்த்தவாதம் செத்து விட்டதென கருத்துச் சொன்ன நுண் இலக்கிய வாதிகளின் கருத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திடக் காரணம் ஆழிசூழ் உலகு கட்டித் தந்திருக்கிற பரதவர்களின் சமூக வாழ்வியல் வரைபடம் மிக நேரடியான யதார்த்தமான மொழியில் பதிவு பெற்றிருப்பது தான்.
- ம.மணிமாறன்
“ஆஹா வென..”
இந்தப் படத்தை பார்த்ததும் சட்டென்று உற்சாகம் பற்றிக் கொள்கிறது. மக்களின் கோபம் எப்போதுமே நரம்புகளில்தான் முதலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பயந்து, அடங்கி, மௌனமாய் சகித்து, துயரங்களைச் சுமந்து வாழ்ந்துகொண்டு இருக்கும் மக்கள் எப்போதாவது இப்படி நிமிர்ந்துவிடும்போது, ‘ஆஹாவென’ குதிக்க வைக்கிறது. அதிகாரங்களையும், ஆதிக்கங்களையும் உடைத்து நொறுக்கும் சக்தி மக்களிடம் இருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு சோற்றுப் பதம் இது. ஒருநாள் விடியும் என்னும் நம்பிக்கையை இங்ஙனம் தக்க வைத்துக்கொண்டு காலத்தை எதிர்கொள்ள வைக்கிறது.
இந்தப் படம் ஒரு அடையாளம்தான். உலகம் முழுவதும் அங்கங்கு சமீபத்தில் தென்பட்ட அலைகளின் ஒரு குறியீடு போலவும் தோன்றுகிறது. தமிழக மீனவர்கள் தாக்குதல்களுக்கு எதிராக இங்கு இணையத்தில் எழுந்த சீற்றத்திலிருந்து ஆரம்பித்து சின்னதும் பெரியதுமாய் எவ்வளவு காட்சிகள். இதோ, அருகில் உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகளையும், ஆட்சியாளர்களையும் மீறி, ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு தயாராகிச் சென்று கைதாகியிருக்கிற மூவாயிரம் சி.பி.எம் தோழர்களின் தலித் மக்களுக்கான போராட்டம் ஒரு நம்பிக்கை. ஜார்கண்டில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக்சென் மீது அரசு ‘ராஜதுரோக’ குற்றம் சுமத்தி சிறையில் அரசு அடைத்ததை எதிர்த்து வட மாநிலங்களிலும், லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களிலும் நடைபெற்று வருகிற பேரணிகளும், கண்டன முழக்கங்களும் இன்னொரு நம்பிக்கை.
இப்படிச் சுற்றிப் பார்க்க பார்க்க, தொலை தூரங்களிலும் நெருப்பின் வெளிச்சம் உயரமாய்த் தெரிகிறது. துனீசியா நாட்டின் சாலையொன்றில் காய்கறி விற்று தனது வயிற்றுப்பாட்டை நடத்தி வந்த பவுவாசிசி என்னும் இளைஞனை உரிமம் இன்றி காய்கறி விற்றதாகச் சொல்லி காய்கறிகளை காவல்துறை பறிமுதல் செய்தது. தனது உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அந்த இளைஞன் எதிர்ப்பைக் காட்டினான். அந்தத் தீ, அந்த இளைஞன் வாழ்ந்து வந்த சிடி பவுஜத் என்னும் நகரத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. மக்களின் சீற்றமாய் பரவி துனிசியா முழுவதும் பரவியது. அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த அந்நாட்டு ஆட்சியாளர்களின் சுரண்டல், ஊழல்களால் அவதிப்பட்டு வறுமையிலும், வேலையின்மையிலும் வெந்துகொண்டு இருந்த மக்கள் நெருப்பாய் உருக்கொண்டார்கள். இராணுவம் மக்களின் முன்னால் செயலற்றுப் போக, ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு ஓடினான். ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஓளிவிளக்காய் அந்தத் தீ எரிந்துகொண்டு இருக்கிறது. இது பெரும் நம்பிக்கை!
அதற்குள் அரபு உலகத்தின் முக்கிய தேசமும், பெரும் வரலாறும் கொண்ட எகிப்திலும் இப்போது தீ பற்றிக்கொண்டு இருக்கிறது. முப்பது ஆண்டுகளாய் அமெரிக்கத் தயவோடும், வழிகாட்டுதலோடும் ஆட்சி நடத்தி வரும் அந்நாட்டின் ஹோஸ்னி முபராக் அரசுக்கு எதிராக மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் தாராளமயக் கொள்கைகளின் விளைவுகள் எகிப்தில் சாதாரண, அடித்தட்டு மக்களை வாழ்வின் விளிம்புக்கு தள்ளியிருக்கின்றன. அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறைகளையும் மீறி கெய்ரோவில் பத்து லட்சம் பேர் திரண்டிருக்கின்றனர். தங்கள் குறிவைத்து நின்ற இராணுவத்தினரிடம் அவர்கள் “எகிப்தா, முபாரக்கா” என்று கணைகள் தொடுத்து நிலைகுலைய வைத்துள்ளனர். மக்களின் குரல்களில் எகிப்து இப்போது விழித்துக்கொண்டு இருக்கிறது. மாபெரும் நம்பிக்கை!
இதுதான் காலம். இதுதான் வரலாறு. நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கும் , அராஜகங்களுக்கும், நம்மைச் சுற்றியே தீர்வுகளும் இருக்கின்றன. ‘எதுவும் செய்ய முடியாது’, ‘இப்படியே இருக்க வேண்டியதுதான்’, ‘கலி முத்திட்டு’ என்று அவநம்பிக்கையும், வெறுமையும் கொண்டவர்கள் இந்தக் காட்சிகள் சொல்லும் உண்மைகளைக் கேட்கட்டும். வெங்காய விலையேறினால் என்ன, பெட்ரோல் விலை ஏறினால் என்ன, எத்தனை லட்சம் கோடி ஊழல் நடந்தால் என்ன என்று இருப்பவர்கள், உசுப்பி விடுகிற இந்தச் செய்திகளை வாசிக்கட்டும். ஒரு காய்கறி விற்ற இளைஞன், அதோ மகாகவி பாரதியின் ‘அக்கினிக் குஞ்சாய்’ ஒரு தேசத்தையே வெந்து தணிய வைத்துக்கொண்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளட்டும். சிறு பொறி போதும்! அதுவரை, வெப்பத்தை இழக்காமல் இருப்போம்! அடங்கிப் போகிறவர்கள் ஒருநாள் அத்து மீறுவார்கள். அது மகாகவின் “ஆஹாவென....” எழும்.
























