தமிழக மீனவர் பிரச்சினை: ஆராய்ச்சி மணியடிக்கும் டுவிட்டர்!
“இருண்ட காலத்தில்
ஒலிக்கும் பாடல்
இருளைப் பற்றியதாகவே இருக்கும்”
இந்தக் கவிதை எவ்வளவு அர்த்தமும், ஆழமும் கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பேச்சும் மூச்சும் தமிழக மீனவர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. துயரத்தையும், வலையையும் மீறிய வார்த்தைகள் திமிறி வந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தில் தமிழ் எழுத்துக்கள் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றன. வலைப்பக்கங்களிலும், டுவிட்டரிலும் தங்கள் கருத்துக்களால் ஒரு புயலை மையம் கொள்ள வைத்திருக்கின்றனர். ‘நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என ஆர்ப்பரிப்பாய் நிற்கிறார்கள்.
இவை ஜெயக்குமார் என்னும் ஒரு மனிதனின் கடைசி மூச்சிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது கொந்தளிப்பான மனநிலை என்று குறுக்கிப் பார்த்துவிட முடியாது. ஐநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் மரண ஓலங்கள் கேட்டுக் கேட்டு பொறுமை காத்தவர்கள்தான் இப்போது மௌனத்தைக் கலைத்து வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களும், அரசுகளும் இதற்கொரு முடிவு கட்டுவார்கள் என வைத்திருந்த நம்பிக்கைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடையாளங்களே இவை.
இந்த மண்ணில் பிறந்தவன், தங்களோடு வாழ்ந்தவன், ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அமைப்பில் என்ன இடம் என்பதைக் கவனிக்க முடிந்ததில் எழுந்த வேகம் இது. பிழைப்பு தேடிச் சென்றவனை ஒரு புழு பூச்சியைக் கொல்வது போல, அண்டை தேசத்தின் இராணுவம் கொல்லும்போதும் வேடிக்கைப் பார்க்கிற தன் ராஜாக்களை ‘என்ன மயித்தப் புடுங்குறீங்க’ என்று சாதாரணமானவர்களும் அசாதாரணமாகக் கேட்கவே செய்வார்கள். தங்கள் ராஜாக்களின் மௌனங்களுக்குள் நுரைத்துக் கிடக்கும் சுயநலங்களை அறிந்து, முகம் சுளித்து, ‘கேடு கெட்டவர்களே, விலகிப் போங்கள்’ என முழக்கமிடத்தான் செய்வார்கள்.
இந்த வெற்று இரைச்சல்களால், என்ன செய்துவிட முடியுமென அவர்கள் நினைக்கலாம். இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் கொட்டித் தீர்த்துவிட்டு, பிறகு தத்தம் வீடு, தத்தம் வாழ்க்கைக்குள் புகுந்துகொள்கிற ஆமைகளாகிப் போவார்கள் என அவர்கள் காத்திருக்கலாம். சில வசனங்கள், சில இலவசங்கள், சில காரணங்கள் போதும் இந்த அற்பர்களைச் சமாளிக்க என்று அவர்கள் நப்பாசை கொள்ளலாம். கடந்தகாலங்கள் இப்படித்தானே இருந்திருக்கின்றன என்று கணக்கும் போடலாம். மக்களைப் பற்றி அதிகார பீடங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் வேறெதுவுமாய் இருந்துவிட முடியாதுதான். எல்லோருடைய காலடியோசைகளையும் அறிய முடிந்த திருதராஷ்டிரன், காலத்தின் காலடியோசையை அறிய முடியாமல் இருந்தான் என்பதும் ஒரு உண்மைதான்.
டுவிட்டரில் இப்போது அந்தக் காலடியோசை கேட்டுக்கொண்டு இருக்கிறது! அலைகளென பொங்கி வரும் டுவிட்டர்கள் சொல்லும் செய்திகள் முக்கியமானவையாய் இருக்கின்றன.
நடக்கும் துயரங்களைப் பார்த்துக்கொண்டு நாங்கள் மௌனமாயிருக்க மாட்டோம்.
பொது விஷயத்தில் ஒன்று கூடி நிற்போம். பொதுக்கருத்தை உருவாக்க உரையாடுவோம்.
மக்களுக்கெதிரான அரசுக்கும், அமைப்புக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக கேள்விகள் எழுப்புவோம்.
ரசிக்கிற, நேசிக்கிற நடிகரோ, எழுத்தாளரோ, எப்பேர்ப்பட்டவரோ இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் மௌனம் காப்பதை அம்பலப்டுத்துவோம்.
ஊடகங்களின் அரசியலையும், உள்நோக்கங்களையும் தோலுரிப்போம்.
மேலும் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது என அணி திரள்வோம்.நண்பர்களே!
டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக ஆராய்ச்சி மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அரியாசனங்கள் அதிரட்டும்!
(தமிழக மீனவர்களை பாதுகாக்க எழுப்பும் குரலாக, இந்த லிங்க்கில் உள்ள பெட்டிஷனில் இன்னும் கையெழுத்திடாதவர்கள், கையெழுத்திடுங்களேன்:
Save Tamilnadu Fishermen Petition )
வம்பரங்கம் 12: தமிழர்களே! தமிழர்களே!!
அவர் சொல்கிறார்: "தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்".
கவிழ்ந்துகிடக்கும் கட்டுமரங்கள் சொல்கின்றன: “எவ்வளவு நம்பிக்கை அவருக்கு தமிழர்களின் மீது! எவ்வளவு முடநம்பிக்கை தமிழர்களுக்கு அவரின் மீது!”
கடல் என்ன சொல்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்?
*
Save Tamilnadu Fishermen Petition )
அறிவிப்பு: பாலுமகேந்திரா, மிஷ்கின் புத்தகங்கள் வெளியீடு!
திரைப்பட இயக்குனர்கள் பாலுமகேந்திரா, மிஷ்கின் ஆகியோரது புத்தகங்கள் நாளை, சனிக்கிழமை வெளியிடப்படுகின்றன. சென்னையில், சாலிகிராமத்தில், பிரசாத் லேபில் மாலை 6 மணிக்கு இந்த வெளியீட்டு வழா நடக்கிறது.
பாலுமகேந்திராவின் ‘கதைநேரம் இரண்டாம் பாகத்’தில், ஆறு கதைகளும், திரைக்கதைகளும், குறும்படங்களும் இடம்பெறுகின்றன. இப்புத்தகத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிடுகிறார். புத்தகம் குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசுகிறார்.
மிஷ்கினின் ‘நத்தை போன பாதையில்’ புத்தகத்தில் அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிற நூறு ஹைக்கூ கவிதைகள் இடம்பெறுகின்றன. இப்புத்தகத்தை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட, எழுத்தாளர் பிரபஞ்சன் புத்தகம் குறித்துப் பேசுகிறார்.
நிகழ்ச்சியை எழுத்தாளர் பவா.செல்லத்துரை தொகுக்கிறார்.
வாய்ப்புள்ள சென்னை நண்பர்கள் தாங்களும் கலந்து கலந்துகொள்வதோடு, தங்கள் நண்பர்களிடமும் தெரிவிக்கும்படி வம்சி புக்ஸ் கேட்டுக்கொள்கிறது.
அதே கண்கள்
சுள்ளி பொறுக்கிச் சென்ற பலர் காணவில்லை எனவும் தெற்குத்தெரு வேட்டை நாய்கள் விரட்டிச் சென்றதாகவும் வடக்குத்தெருக்காரர்கள் தங்கள் பெரிய வீட்டுக்காரனிடம் போய் முறையிட்டார்கள் . “நாயென்றால் விரட்டத்தான் செய்யும், நாம்தான் பாத்து இருக்கணும்” என்றான் முதலில். ஆனாலும் தெற்குத் தெருவின் பெரிய வீட்டுக்காரனோடு பேசுவதாக சமாதானப்படுத்தினான். “திருடர்களுக்காகத்தான் நாய்கள் வளர்ப்பதாக” தெற்குத்தெரு பெரிய வீட்டுக்காரன் அறிவித்தான். முடிவில், தெற்குத் தெருவுக்குள் வடக்குத் தெருப் பெரியவனின் கடையொன்று திறக்கப்பட்டது.
சுள்ளி பொறுக்கிச் சென்றவர்களை தெற்குத்தெருவின் வேட்டை நாய்கள் கடிப்பதாக அடிக்கடி வடக்குத்தெருக்காரர்கள் தங்கள் பெரியவீட்டுக்காரனிடம் போய் துயரத்துடன் சொல்லியழுதார்கள். ‘நாயென்றால் கடிக்கத்தான் செய்யும், ஏன் பக்கத்தில் போகிறீர்கள்” என்று முணுமுணுத்தவன், “இருந்தாலும் தெற்குத்தெரு பெரிய வீட்டுக்காரனிடம் பேசுவதாக’ சொல்லி தனது தெருக்காரர்களை அனுப்பிவைத்தான். “என்ன பேசுகிறார் இவர், சுள்ளி பொறுக்காமல் எப்படி அடுப்பெரியும்” என்று சிலர் ஆத்திரப்பட்டபோது மற்றவர்கள் “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று அடக்கினார்கள். தெற்குத்தெரு பெரிய வீட்டுக்காரன் அந்த முறை வடக்குத்தெருவுக்கு வந்தான். வடக்குத்தெரு பெரிய வீட்டில் அவனுக்கு மரியாதையும், வரவேற்பும் அளித்தது, அந்தத் தெருக்காரகளுக்கு பிடிக்கவில்லை. அவனது வேட்டைநாய்களைப் போலவே கண்கள் அவனுக்கும் இருப்பதாய்ப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அப்புறம் தெற்குத்தெருவுக்குள் வடக்குத்தெரு பெரிய வீட்டுக்காரனின் வியாபாரிகள் சுதந்திரமாக பொருட்களை கூவிக் கூவி விற்றுச் சென்றதும் நடந்தது.
சில நாட்களுக்கு முன்பு, சுள்ளி பொறுக்கியவர்களில் ஒருவனது குரல்வளையைக் கடித்துக் கொன்று போட்டுவிட்டது தெற்குத்தெரு வேட்டைநாய்களில் ஒன்று. வடக்குத்தெருக்காரர்கள் எல்லோரும் மொத்தமாக “நாயை அடிக்க வேண்டும்” என்று கொதித்தனர். அவர்களின் பெரிய வீட்டுக்காரன் வெளியே வந்து, “தெருக்காரர்களின் துயரத்தில் தானும் பங்கெடுப்பதாகவும்,தெற்குத்தெரு வேட்டை நாய்களைக் கண்டிப்பதாகவும்” அவசரம் அவசரமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அப்போது பலருக்கும் தெரிந்துபோனது, வடக்குத்தெரு பெரிய வீட்டுக்காரனுக்கும் அதே வேட்டை நாய்களின் கண்கள் இருப்பது!
ஆனந்தமான முதல்வரும், பாவமான ஆனந்தியும்!
அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது; அழகான வீட்டிற்கு நன்றி!
ஒரு சிறுமி, முதல்வருக்கு கடிதம் எழுதுவது போலவும், ஒரு வீட்டின் படத்தை வரைந்து அதில் நன்றி தெரிவித்து முதல்வரிடம் வழங்குவது போலவும், துணை முதல்வரை கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் அழைத்து வருவது போலவும் சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் அடிக்கடியும், சினிமா தியேட்டர்களிலும் காண்பிக்கப்படுகிறது.
பின்னணி இசையோடு, பார்ப்பவர்கள் பூரித்துப் போகும் வகையில், அந்த விளம்பரப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்திற்குப் பின் உள்ள விபரங்கள், அந்த ஆனந்திக்கு தெரியாது.
தமிழகத்தில் 2011ல் 3 லட்சம் கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாகவும், 2016க்குள் மீதமுள்ள 18 லட்சம் வீடுகள், கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கப்படும் என்றும், குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாகும் எனவும், தமிழக அரசால் நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் பாணியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 207 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்ட அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.75,000 ஆகும். இதில் அரசால் சிமெண்ட் 50 மூட்டையும், 160 கிலோ கம்பியும் வழங்கப்படுகிறது.
பயனாளி தானே வீடு கட்டிக் கொள்ள வேண்டும். தரை மட்டம் வந்தவுடன் முதல் தவணை தொகை ரூ.9780ம், இரண்டாம் தவணையாக ரூ.16,000-ம், மூன்றாம் தவணையாக ரூ.10,000-ம் மீதி தொகை சிமெண்ட், கம்பிக்கு பிடித்தம் போக, வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் கொடுக்கப்படுகிறது. வீட்டிற்கு செங்கல் மட்டும் 9000 தேவைப்படுகிறது. ஒரு செங்கல் விலை ரூ.6 ஆக உள்ளது. 9000 செங்கல் விலை சுமார் ரூ.55 ஆயிரம். மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தில் என்ன செய்ய முடியும்? அரசுகொடுக்கும் சிமெண்ட், கம்பி போதுமானதல்ல. அரசு விலையில் சிமெண்ட் மட்டும் ரூ.10,000 கம்பி மட்டும் ரூ.10,000, கம்பி, சிமெண்ட், செங்கல் மட்டுமே ரூ.75,000 ஆகிறது. மற்ற செலவுகளில் கொத்தனார் கூலி, சித்தாள் கூலி, மணல், ஜன்னல், கதவு செலவு குறைந்தது ரூ.80,000 ஆகும். அரசு கொடுக்கும் ரூ.75 ஆயிரத்தை வைத்துக்கொண்டு எப்படி 207 சதுர அடியில் வீடு கட்டுவது மந்திரத்தில் மாங்காய் கதைதான்.
தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான பயனாளிகள் குறிப்பாக விவசாயத் தொழிலாளிகள் வீடு கட்ட முன் வரவில்லை. ரூ. ஒன்றரை லட்சம் இல்லாமல் வீடு கட்ட முடியாது. கந்து வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுவதா, கடனை கட்டுவதா என மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சம் கூரை வீட்டில் வாழ்பவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு 2016க்குள் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என அரசு விளக்கம் சொல்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 16,990 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் வேலை நடந்து வருகிறது. 2016ம் ஆண்டிற்குள் வீடு கட்ட 1,05,761 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு அம்மாப்பேட்டை ஒன்றியம், நெல்லித்தோப்பு கிராமத்தில் 86 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள். இவர்களில் 30 குடும்பங்கள் பாசன வாய்க்கால் ஓரமாக வாழ்கின்றனர். அரசு கணக்கில் இந்த வீடுகள் உள்ள இடம், ஆட்சேபணைக்குரிய வாய்க்கால் புறம்போக்கில் உள்ளது. இவர்களுக்கு குடிமனைப்பட்டா, இதுவரை வழங்கப்படவில்லை. இந்த 30 வீடுகளில் 10 வீடுகள் ஓட்டுவீடுகள்ஆகும். ஓட்டு வீடு என்றால் ஒவ்வொரு வீட்டின் மேல் உள்ள ஓடுகள் 50ல் இருந்து 100 ஓடுகளுக்கு உள்ளாக மட்டுமே இருக்கும். ஆனால் அரசு கணக்கில் இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடையாது. மீதம் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு செப்டம்பர் 21ல் குடிமனைப்பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் உழைப்பாளி மக்கள் மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனுக்கொடுத்தனர். தஞ்சையில் அதே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் 40,000 மனுக்கள் அளிக்கப்பட்டது. அந்த 40,000ல் நெல்லித்தோப்பைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் குடிமனைப்பட்டா கேட்டு மனுக்கொடுத்தனர்.
இதுவரை அந்த மனுவிற்கு எந்த பதிலும் இல்லை. வட்டாட்சியரிடம் கேட்டபோது, நீங்கள் குடியிருப்பது ஆட்சேபணைக்குரிய நீர்வழிப்புறம்போக்கு. எனவே குடிமனைப்பட்டா வழங்க முடியாது என கூறினார். ஆனால் 2011 ஜனவரியில் வாய்க்கால் புறம்போக்கில் குடியிருக்கும் அதே தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 2016க்குள் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2011 மே மாதம் தேர்தலையொட்டி இன்னும் என்னென்ன கூத்துக்களும், பாடல்களும் அரங்கேறப் போகிறதோ?
முதல்வர் சிரித்துக்கொண்டு ஆனந்தமாகத்தான் இருக்கிறார். ஆனந்திகள் தான் பாவமாக இருக்கிறார்கள்.
(தீக்கதிரில், தஞ்சை வசந்த் எழுதியதிலிருந்து…)
மாதவராஜ் பக்கங்கள் - 30
சொந்த வேலைகள், தொழிற்சங்கப் பணிகள், பயணம் என நாட்கள் கடந்த வண்ணமிருக்கின்றன. முன்னைப் போல வலைப்பக்கத்தில் அவ்வளவாக லாந்த முடியவில்லை. பத்திரிகைகளும், சில புத்தகங்களும் படித்தேன். எழுதுவதற்கு நிறைய இருந்தாலும், அதற்கென்று நேரம் வாய்க்க வேண்டும். கூகிள் ரீடர் நிரம்பி வழிகிறது. படிக்க வேண்டும். அதில் அற்புதங்களும், பொக்கிஷங்களும் இருக்கக் கூடும்.
நண்பர் மணிமாறன் ‘தீராத பக்கங்களில்’எழுதிவரும் ‘பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகளை’ மிகக்குறைந்த சிலரே படிக்கிறார்கள். மிக மிகக்குறைவாகவே கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஜ்யோவ்ராம் சுந்தரின் கூகிள் பஸ்ஸைப் படித்து, சூடாகி எழுதிய ‘சாரு நிவேதிதா’ குறித்த பதிவுக்கு ஹிட்ஸ்களும், பின்னூட்டங்களும் குவிகின்றன. இந்த கொடுமையை என்னவென்பது. அதுகுறித்து தொடர்ந்து எழுத வேண்டும் என வந்த துடிப்பையெல்லாம் அடக்கிக் கொண்டேன்.
குறிப்பிட்ட சில எழுத்தாளர்களைத் தவிர்த்து தமிழ் இலக்கியமென பேசவும், எழுதவும் யாருமில்லையென்பது போல, அவர்களைப் பற்றிய செய்திகளும், விவாதங்களுமே நிரம்பி வழிகின்றன இணையத்தில். இதேக் காலக்கட்டத்தில் எந்த முஸ்தீபுகளும் இல்லாமல் பலர் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். அந்தரத்துக் கனிகளைப் பறிக்காமல், சமகாலத்தின் பிரச்சினைகளை நம் வேர்களிலிருந்து சொல்லிக்கொண்டு வருகின்றனர். காதலைப் பற்றி ஒரு கதையும் எழுதாமல் இங்கு, காமுத்துரை என்பவர் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இதனை விமர்சனமாகவும், ஆச்சரியமாகவும் சொல்கிறார். எத்தனை பேர் அவரைப் படித்திருப்பார்கள், அவரைப் பற்றி பேசியிருப்பார்கள்! கீரனூர் ஜாகீர் ராஜாவின் சமீபத்திய நாவல்கள் குறித்து யார் இங்கு பேசுகிறார்கள். பல்ப் ஃபிக்ஷன் தொட்டு உலக இலக்கியம் பேசவும், குழந்தைகளுக்கான இலக்கியம் படைக்கவும் செய்கிற இரா.நடராஜனை யார் எழுதுகிறார்கள், விமர்சிக்கிறார்கள்? பலரும் இயங்குகிற வெளியில் ஒரு சிலரே பீடங்களில் வீற்றிருப்பதாய்ப் படுகிறது. இந்த எளிய எழுத்தாளர்களுக்கு கொள்கை பரப்புச் செயலாளர்களோ, பி.ஆர்.ஓக்களோ, பெரும் ரசிகக்கண்மனிகளோ கிடையாது. அவர்களை அடையாளம் காணவோ, அந்த எழுத்துக்களை அறியவோ, நம் இலக்கிய நுண்ணறிவாளர்கள் பலருக்கு விருப்பமோ, சிரத்தையோ, ஆர்வமோ இல்லை போலும். தாங்கள் படித்ததில், தாங்கள் ரசித்ததில் இருந்தே மகோன்னதம் காண்கிறார்கள். ஆனால் உலகம் பரந்துபட்டதாகவே எப்போதும் இருக்கிறது.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு கோர்ட்டுக்கு சங்க வேலையாய்ச் செல்ல வேண்டியிருந்தது. வக்கீல் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் கவனித்தேன். வளாகத்துக்குள் நிறைய பெண்கள் இருந்தார்கள். விசாரித்தபோது அந்த வக்கீல் சொன்னார், ‘எல்லாம் விவாகரத்து வழக்குகள்’ என்று. என் ஆச்சரியத்தை உணர்ந்தவர் மேலும் , “இப்போல்லாம் வக்கீல்களுக்கு ஆக்ஸிடெண்ட், இப்படியான மெய்ண்ட்டனன்ஸ் கேஸ்லதான் வருமானம்” என்றார் . “ஜனவரி பிறந்து எத்தனை நாளாகியிருக்கும். அதுக்குள்ள எனக்கே ரெண்டு கேஸ் வந்துருக்கு” என அவருடைய மொழியில் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் அந்தப் பெண்களைப் பார்த்தேன். யாரும் தலை குனிந்திருக்கவில்லை.
சாத்தூரிலும் காலை நேரம் மெயின் ரோடு கடும் நெரிசலோடும், சந்தடிகளோடும் ஆகிவிட்டது. குழந்தைகளை அள்ளிக்கொண்டு, ஹாரன் சத்தங்களோடு வாகனங்கள் பறக்கத்தான் செய்கின்றன. சில நாட்களுக்கு முன்பு அப்படியொரு வேளையில், மனைவியையும், பையனையும் பைக்கில் அழைத்துச் சென்று கொண்டு இருந்தபோது, எங்களையொட்டி ஒரு நாயும் கடும் வேகத்தோடு ஓடிக்கொண்டு இருந்தது. “இதென்ன ஸ்கூலுக்காப் போகுது? என்னமோ பஸ்ஸையோ, ரெயிலையோப் பிடிக்கிற மாதிரி இப்படிக் கிடந்து ஓடி வருது” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். பின்னால் உட்கார்ந்திருந்த மனைவி, “அந்த நாய்க்கு என்ன அவசரமோ? இப்படி விழுந்தடிச்சு ஒடிக்கிட்டு இருக்குற நம்மைப் பார்த்தால் அதுக்கு எப்படி இருக்குமோ, யார் கண்டார்கள்?” என்றாள். நான் வாய் திறக்கவில்லை. எப்போதோ பார்த்த “ஜூ” என்னும் குறும்படம் நினைவுத் திரையில் ஓட ஆரம்பித்தது.
மகர ஜோதி குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் சொன்னது தவறா?
நேற்று பின்னூட்டத்தில் ‘பகுத்தறிவு’ என்னும் பெயரில் ஒருவர் கிண்டலாக கேள்வி கேட்டு இருக்கிறார். நாம் சொல்லிய ஒரு கருத்து, இன்னொருவரின் சிந்தனையின் ஒரு மூலையில் இருப்பதும், அதன் தொடர்ச்சியாக நம்மை அறிய முற்படுவதும் மகிழ்ச்சியே.
அயோத்தி தீர்ப்பு பற்றிய எனது பதிவொன்றில் ‘பகுத்தறிவு’ இப்படி கருத்தொன்றைப் பதிவு செய்து இருக்கிறார். “அயோத்தி பற்றிய தங்களுடைய பார்வையும் தீர்ப்பு பற்றிய அலசலும் மிக அருமை! அது சரி! சபரிமலை சோதி இயற்கையா? மனிதனால் உருவாக்கப்படுகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது! கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் 'அது மக்களின் நம்பிக்கை! அதில் எல்லாம் கேள்வி கேட்கலாமா?' என்று கேட்டிருக்கிறார். நீங்களாவது அதைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்! ஏமாற்றம் தான்! ஒரு வேளை கேரளத் தோழர்கள் பாரதிய சனதாவுடன் கூட்டணி பேசிவருகிறார்களோ!”
கடந்த ஜனவரி 14ம்தேதி சபரிமலையில் நடந்த துயரத்தையொட்டி தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், கேரள உயர்நீதிமன்றம் மகரஜோதியின் ஆதிமூலம் குறித்து அறிய முயன்று பார்க்கிறது. ஏதேனும் பெரும் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகுதான், இப்படித் திடுமென தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு விட்டவர்களாய் பரக்கப் பரக்கப் பார்ப்பார்கள் போலிருக்கிறது.
மகரதீபம் என்பது வானில் தோன்றும் அற்புதம் என்றும், மனிதர்களின் காரியம் என்றும் எதிரும் புதிருமாக வாக்குமூலங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. வனத்துறையினரின் கருத்து ஒன்றாக இருக்கிறது. கோவில் நிர்வாகத்தின் கருத்து ஒன்றாக இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும்போது கேரள முதல்வர் அச்சுதானந்தன், “இது லட்சக்கணக்கான மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதில் உண்மையறியும் ஆர்வம் அரசுக்கு இல்லை. ஜோதிடர்களை வைத்தோ, விஞ்ஞானிகளையோ வைத்து ஆராயும் திட்டமும் அரசுக்கு இல்லை” என்றுதான் சொல்லியிருக்கிறார். முதலில் ஒன்றை சுட்டிக் காட்டிவிடுவது நல்லது. பகுத்தறிவு சொல்வது போல “அது மக்களின் நம்பிக்கை, அதில் எல்லாம் கேள்வி கேட்கலாமா?’ என்று அச்சுதானந்தன் சொல்லவில்லை. அந்தத் தொனியும் இல்லை.
அயோத்திப் பிரச்சினையில் எழுப்பப்படுகிற நம்பிக்கைக்கும், மகரஜோதியின் நம்பிக்கைக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அயோத்தி, இரு மதத்தினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை. மேலும் நில உரிமை குறித்த விவகாரமாகவும் இருக்கிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்துகிற அரசியல் அமைப்பில், அரசு அதில் தலையிட்டாக வேண்டிய கட்டாயம் உண்டு. மகரஜோதி விவகாரம் அப்படியானதல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின், ஒரு பிரிவினரது வழிபாட்டுமுறை மட்டுமே சம்பந்தப்பட்டது. அதில் அரசு கருத்து சொல்வதென்பது, வேறுவிதமான விளைவுகளையும் சமூகத்தில் ஏற்படுத்தும் சாத்தியங்கள் கொண்டதாக இருக்கிறது. முஸ்லீம்களின், கிறித்துவர்களின் வழிபாட்டு முறையின் நம்பிக்கைகள் குறித்துப் பேசாத கம்யூனிஸ்டுகள், இந்துக்களின் வழிபாட்டு முறையை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது ஏன் என்ற கேள்விகளும், மூஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் தாஜா செய்து ஓட்டுவங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் என்றும் கொதித்து எழுவார்கள்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், இதுதான் சமயம் என, கிறித்துவர்களின் வழிபாட்டு முறை குறித்தும், முஸ்லீம்களின் வழிபாட்டு முறை குறித்தும் பொதுவெளியில், பழித்துப் பேச ஆரம்பிப்பார்கள். பர்தா அணிவதிலிருந்து ஆரம்பித்து, கன்னி மேரி வரை விவாதங்கள் ஆரம்பிப்பார்கள். ஒருவித சமூகப் பதற்றத்தை ஏற்படுத்த மத அடிப்படைவாதிகள் முனைவார்கள். இவைகளைத் தவிர்க்கும் பொருட்டே, கேரள முதல்வர் என்ற முறையில் அச்சுதானந்தன் பேசியிருக்க வேண்டும். அரசியலில் மதங்களுக்கு இடமிருக்கத் தேவையில்லை என்கிற பார்வையிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும். ஜோதிடங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல், விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை கொண்டு இருக்கிற அவரைப் போன்றவர்கள், “ஜோதிடர்களை வைத்தோ, விஞ்ஞானிகளையோ வைத்து ஆராயும் திட்டமும் அரசுக்கு இல்லை” என்னும் சொல்வதில் இருக்கும் கவனத்தையும், எச்சரிக்கையையும் இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது.
இங்கே, முதல்வர் அச்சுதானந்தனின் சக அமைச்சர் சுதாகர் சொல்வதையும் சேர்த்து பகுத்தறிவு போன்றவர்கள் கவனிக்க வேண்டும். “மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிற வெளிச்சமே. ஆதிவாசிகளின் இந்தப் பழக்க வழக்கத்திற்கு அரசின் மின்சாரத்துறையும், காவல்துறையும் உதவியாக இருக்கிறது. இதை நான் கடந்த காலத்திலும் கூறி வந்திருக்கிறேன். இருந்த போதிலும், இதில் தலையிடுவது அரசின் வேலையல்ல”. மதங்களின் இந்த நம்பிக்கைகள் யாவும் ‘மூட நம்பிக்கைகள்’ என்பது தோழர்.அச்சுதானந்தன் அவர்களுக்கும் தெரியும். இந்த ‘மூடத்தனத்தை’ அகற்றும் பணியை கல்வியாலும், இயக்கத்தின் இடைவிடாத பிரச்சாரங்களினாலும் செய்வதே சரியாய் இருக்கும் என்பது இடதுசாரிகளின் பார்வை. அரசியலைக் கொண்டு வந்து அதில் சேர்க்கும்போது, பிரச்சினைகள் மேலும் சிக்கல் நிறைந்ததாக மாறும். அதைத்தான் அச்சுதானந்தன் சொல்லாமல் இப்படி சொல்லியிருக்க வேண்டும்.
நுட்பமான, உணர்ச்சிகரமான விஷயங்களில் மூக்கை நுழைத்து முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விட்டால், அது காலமெல்லாம் கண்ணி வெடிகளாய் வெடித்துக் கொண்டு இருக்கும். இந்தத் தெளிவும், நிதானமும் இல்லாமல், ராமரை வழிபட, மசூதியின் கதவுகளைத் திறந்துவிட்டு, மத நம்பிக்கைகளில் மத்திய அரசு தலையிட்டதன் விபரீதங்களைத்தான் இந்த தேசம் பார்த்துக் கொண்டு இருக்கிறதே!
சினிமாவும் மழையும்!
தமிழ்ச்சினிமாவில் எவ்வளவு மழைகளைப் பார்த்திருக்கிறோம். எத்தனை இயக்குனர்கள் மழை பெய்யச் செய்திருக்கிறார்கள். எத்தனை நாயகர்களும், நாயகிகளும் மழையில் நனைந்திருக்கிறார்கள். எந்த மழை பார்வையாளனை நனைத்தது என்று ஒன்றிலிருந்து ஒன்றாய் யோசிக்க நேரிடுகிறது. ‘மாற்றுவெளி ஆய்விதழலில்’ ப்ரீதம்.கே.சக்கிரவர்த்தி எழுதிய கட்டுரையின் இந்தப் பகுதியை தீக்கதிர் பத்திரிகையில் படித்துதும் சட்டென சிரிப்பு வந்தாலும், நம் சினிமா குறித்த பார்வையை மேலும் கூர் படுத்துகிறது. இதனை ஒரு முன்னுரையாக வைத்து, சினிமா குறித்த ஞானமும், அக்கறையுமுள்ள பதிவர்கள் மேலும் விளக்கமாக எழுதலாமே!
*
தண்ணீருக்கும், மழைக்கும் திரையியலைப் பொருத்த வரை உலக அளவில் சில அர்த்தங்கள் உண்டு. சுத்தி கரிப்பு, மறுபிறப்பு, பெண்மை ஆகியவற்றுக்கு இவ்விரண்டையும் கற்பனையுடன் பயன்படுத்திய திரைப்படங்களில் சட்டென நினைவுக்கு வருபவை: சிங்கிங் இன் த ரெயின் (1952), காட் ஒன் தெ ஹாட்டின் ரூஃப் (1958), ஸ்ட்ரே டாக் (1949), 7 சமுராய் (1954), பதேர் பான்சாலி (1955), மதர் இந்தியா (1957), ஷஷான்க் ரிடெம்ஷன் (1994), ரோட் டு பார்டிஷன் (2002) எனக்கு மிகவும் பிடித்தது ராஷோமான் (1950) - பளீர் என்ற வெளிச்சமும், இடைவிடாத மழையும் மாறி மாறி விளையாடி, உண்மை, பெண் உடல், காதல், வன்புணர்ச்சி, இச்சை, நம்பிக்கை என்று பல விஷயங்களை ஆராயும் திரைப்படம்.
காதலை வெளிப்படுத்த, வெளியிட முடியாத உண்மையைக் கூற, கிராமத்தைச் சூறையாட, கோடையின் வெக்கையை வெளிப்படுத்த, அடிபட்ட குடும்பத்தை மேலும் காயப்படுத்த, பழிவாங்க, விடுதலையைத் தேட என அடுக்கி கொண்டே போகலாம். காதல் என்று சொல்லும் பொழுது எல்லையில்லா மகிழ்ச்சியை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை. காஸபிளான்காவில் (1942) ஆழமான உறவின் முடிவையும் சேஸிங் ஏமியில் (1997) இயலா காதலை வெளிப்படுத்தவும் கூட இயன்றுள்ளது.
ஏனோ இந்திய சினிமாவிற்கு மட்டும் கற்பனை பற்றாக்குறை வந்து விடுகிறது இந்த விஷயத்தில். இராமநாராயணன் தனது நாயகியுடன், நளினியுடன் தொடங்கி வைத்த பாணியில் இன்றும் கதாநாயகியை, வெள்ளை புடவை, ரவிக்கையில், உள்ளே கறுப்பு பிரா பட்டை பளிச்சென்று தெரிய, மழையிலோ, நீர்வீழ்ச்சியிலோ ஆடவைக்க மட்டுமே விருப்பம் காட்டுகிறது இத்துறை. இந்தக் கண்டுபிடிப்பை ஒரேயடியாக இராம நாராயணனுக்கு மட்டுமே ஒப்புவிப்பது தவறு; அவர் இந்த முறையை அதிகமாகப் பயன்படுத்தியவர், அவ்வளவே.
ஆராதனா (1969) காலகட்டத்தில் மழைக்கு இன்னமும் ஒரு நூதன பயன் ஆரம்பித்தது. இதற்கு நான்கு வருடங்கள் முன்பு திரைக்கு வந்து உலக அளவில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல் ஐ எம் 16 கோயிங் ஆன் 17. அதன் பல இந்திய பதிவுகளின் முதல் பதிவுதான் ரூப்பு தெரா மஸ்தானா என்ற மெட்டு. ஏதோ ஒரு காரணத்திற்காகக் காட்டிற்கு போகும் இளம் காதலர்கள் மழையில் மாட்டி கொள்கிறார்கள். வேறு வழியில்லாமல் காட்டு பங்களாவில் அன்று இரவைக் கழிக்கிறார்கள். தெப்பமாக நனைந்து இருக்கும் நாயகி, குளிரினால் நடுங்குகிறாள். (மாறுதலுக்கு, நாயகன் என்றும் வைத்துக் கொள்ளலாம், தவறில்லை) வேறு வழி தெரியாத காதலன், இருவரின் ஆடைகளையும் களைந்துவிட்டு, அவளை அணைத்து கொள்கிறான். அடுத்த காட்சியில், நாயகி வாந்தி எடுப்பாள். கர்ப்பம்!
உங்களுக்கு ஒரு போட்டி. இதே காட்சியை பார்த்த ஐந்து திரைப்படங்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அவை எந்த இந்திய மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை.
பூவா தலையாவில் (1969) தொடங்கி, புன்னகை மன்னன் (1986) வரையில் கே. பாலச்சந்தர் புதிய உறவில் இருக்கும் நாயகியைக் காட்டவே அருவியையோ, மழையையோ பயன்படுத்தி உள்ளார். உதாரணம்: வான் மேகம். மணிரத்தினத்திற்கோ, இவை இரண்டும் தனது கன்னி கழியாத நாயகியை அறிமுகப்படுத்தவே தேவைப்பட்டது. இதயத்தை திருடாதேவில் (1989) வரும் ஆத்தாடி அம்மாடி. அஞ்சலி (1990) தொடக்க காட்சி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. உதாரணம்: அதில் மழை இனி வரபோகும் ரகசிய வாழ்விற்கு ஒரு அறிகுறியாகும்.
மழையையும் நீரையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்திய படமாக எனக்கு நினைவிற்கு வரும் ஒரே திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் (1975) புயல் அடிக்கும் ஒரு மாலை வேளை, பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் கங்கா என்ற ஒரு இளம் கல்லூரி மாணவியை தனது காரில் ஏற்றிக் கொள்கிறான் ஒரு இளைஞன். காருக்குள் இருவருக்கும் உடலுறவு ஏற்படுகிறது. முதலில் இணங்கும் கங்கா, பிறகு தான் கற்பழிக்கப்பட்டதாக அதை புரிந்து கொள்கிறாள். நேரம் கடந்து வீட்டிற்கு வரும் கங்கா நடந்ததை தனது விதவை அம்மாவிடம் கூறுகிறாள். அதிர்ந்து போகும் தாய் அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்று கிணற்றடியில் அமரச் செய்து, குடம்குடமாகத் தண்ணீரை அவள் தலையில் கொட்டி, ‘‘நீ சுத்தமாயிட்டேடீ, சுத்தமாயிட்டே’’ என்று கதறுகிறாள். திரைப்படம் தொடங்கி பத்து நிமிடத்திற்குள் நீருக்கு இரண்டு பயன்பாடுகள். ஒன்று கங்காவை அசுத்தப்படுத்த மற்றொன்று, அவளை சுத்தப்படுத்த. ஜெயகாந்தனின் படைப்பில், பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் முப்பத்தைந்து வருடங்கள் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு இந்தக் கற்பனாசக்தியே காரணம்.
பெண் உடலுடன் சம்பந்தப்படாத வேறு எந்தப் பயன்பாடும் இந்திய திரைப்படத்தைப் பொறுத்தரையில் சண்டை காட்சிகள் மட்டும் தான். இது ரத்த வெறியை கோடிட்டுக்காட்ட உதவியுள்ளதே தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.
மழைநீரை சேமியுங்கள் என்று ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு, இப்படி நீரை வீண் அடிக்கலாமா?
வாருங்கள் நாம் அனைவருமாகச் சேர்ந்து யோசித்து, திரைப்படத்துறைக்கு மழையின் மாற்று பயன்பாடுகளுக்கு யுக்திகள் சொல்வோம். காரணம் 99 விழுக்காடு இந்தியத் திரைப்படங்கள் ஆண்மையப்பட்டவைதான்.
மாநகர்ப் புதைகுழி
விடியற்காலை பால் வாங்க வெளியில் வந்தபோது பகீரென்றது சண்முகத்துக்கு. கொஞ்சம் இருந்தால் புதைகுழி மாதிரி அப்பிக் கிடந்த சேற்றில் இடறி விழுந்து நாசமாய்த் தான் போயிருப்பான். அவன் குடியிருந்த அடுக்குமனைக் குடியிருப்பு இருந்த வாடை நெடுக தெருவின் ஓரம் முழுதும் கால்வாய்க்குத் தோண்டுவது போல் மண்ணைத் தோண்டிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதன் மீது பெய்திருந்த முந்தைய இரவின் திடீர் மழை செம்மண்ணில் நிரம்பிக் குழைத்துக் கலக்கி காவு வாங்கக் காத்திருப்பது மாதிரி ஆக்கி வைத்திருந்தது. மாநகரின் பேருந்துகளும், வாகனங்களும் இடைவிடாது ஓடிக் கொண்டிருந்த முக்கிய இணைப்புச் சாலை அது. எதிரும் புதிருமாய் ஒரு உயர்நிலைப் பள்ளியும் அதன் விளையாட்டு மைதானமும் வேறு அமைந்திருந்தன அந்தச் சின்னத் தெருவில்.
காலை வைத்த மாத்திரத்தில் குழம்பிக் கிடந்த சேற்றுமண் 'உள்ளே வா வா' என்று காலை இழுக்க ஆரம்பிக்கவும், எல்லாம் முடிந்தது மாதிரி தோன்றிவிட்டது சண்முகத்துக்கு. ஒரே ஒரு தற்காப்பாக அடுத்த காலை அபார்ட்மெண்டின் சிமெண்ட் தரையைவிட்டு வெளியே எடுக்கவில்லை. பின்னாக வளைந்து சர்க்கஸ் வேலை செய்தபடிக்கு இரும்புக் கதவைப் பின்னங்கை வளைத்துப் பிடித்துக் கொண்டு ஒரு உந்து உந்திக் காலை மீட்டுக் கொண்டான். யாரும் பார்க்கவில்லையே என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டான். சாலை இருளிலிருந்து விடுபட இன்னும் நேரம் எடுக்கும் போலிருந்தது. ஆட்டோ ஒன்று உறுமிக் கொண்டு கடந்து செல்லவும், பேரிரைச்சலோடு காலியாக இருந்த பேருந்து ஒன்று தறிகெட்ட வேகத்தில் சண்முகத்தின் குடியிருப்பு இருந்த இடத்தை எச்சரிப்பது போல பார்த்துப் போனது.
விடிந்த பிறகு பெரிய பலகை ஒன்றை எடுத்துக் குறுக்காகப் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறுகோண வடிவிலான சிமெண்ட் வில்லைகள் ஒன்றிரண்டை எடுத்துக் கொண்டுவந்து சேற்றின் குறுக்கே கால்வைத்துக் கடக்கிற திட்டத்திற்கு பரிசோதித்துப் பார்த்துவிட்டு வைத்தான் சண்முகம். பிறகு அச்சத்தோடு காலை வைத்துக் கடந்து அந்தப் பக்கம் போய் பால் பூத்திற்கு விரைந்தான். இன்னமும் அவனது உடம்பில் படபடப்பு விலகாதிருந்தது.
யார் வேலையாயிருக்கும். எவனெவனோ தோண்டிவிட்டுப் போகிறான். தொலைபேசி ஆசாமிகளா, மின்சாரத்துறையா, யார் கண்டது, கொஞ்ச நாட்களாகத் தனியார் செல்ஃபோன் கம்பெனி ஆட்கள் வேறு சாலையில் கை வைக்கிறார்கள். தெருவின் மூலையில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகள் ஏதாவது ஒரு கட்டத்தில் தெருவிற்குச் சொந்தக்காரர் இன்னார் என்று மாற்றப்படும் அளவுக்கு நாடு போய்க் கொண்டிருக்கிறதோ என்று கூட சண்முகத்திற்கு கோபம் கோபமாய் வந்தது. சுரணையற்றுப் போய்க் கொண்டிருக்கிறது நமது சனம் என்றுகூட பட்டது அவனுக்கு.
வரும் வெள்ளிக்கிழமை, குடியிருப்பின் மாதாந்திரக் கூட்டத்தில் இந்தமுறை கடுமையான சண்டை வலிக்க வேண்டுமென்று நினைக்கத் துவங்கிய நேரத்தில் தூறல் போட ஆரம்பித்தது. அவசரம் அவசரமாக பால் பாக்கெட்டுகளை வாங்கிப் பையில் திணித்தபடி சட்டையின் மேல் பொத்தான்களைக் கழற்றிச் சட்டையை இலேசாக முதுகுக்கு மேல் உயர்த்தித் தலைக்கு முக்காடாய் மாற்றியவனாய் வீடு நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தான். பழையபடி அபார்ட்மெண்ட் வாசலில் சேற்றுக் குழம்பைத் தாண்டிக் குதிக்கையில் அச்ச உணர்வு சிலீரென்று நடுமுதுகில் இறங்கியது. அதே வேகத்தில் மனைவி கமலியிடம் போய் இரைந்தான்.
அவள் தனது பங்கிற்கு இவன் மீது விழுந்து பிடுங்கக் காத்திருந்தாள். பாத்ரூமில் ஒரு குழாய் எப்போது உடையலாம் என்ற கதியில் மிரட்டிக் கொண்டிருக்கிறது. வெஸ்டர்ன் டாய்லட் இணைப்புக் குழாயும், மூடியும் தங்களது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருந்தது. என்றைக்கு ஆளை அழைத்துவந்து ரிப்பேர் செய்யப் போறீங்க என்பதாக அவளது கத்தல் இருந்தது. தெரு முக்கிலிருந்த நேரு பிளம்பிங் கடை ஆளுங்க கிட்டே நேரில் பார்த்துச் சொல்லியாச்சு, ரெண்டு முறை ஃபோன் போட்டுப் பேசியாச்சு. அவனுங்க வந்தாத் தானே, நான் என்ன பண்ண...என்று இவன் பதிலுக்குச் சத்தம் போட்டான்.
வீட்டு வேலைக்கெல்லாம் கண்டவனை நம்பி உள்ளே விட்ற முடியாது என்பதில் இரண்டு பேருமே தெளிவாய் இருந்தனர். முதல் வேலையா சாலை முழுக்க அப்பிக் கிடந்த சேற்றுச் சனியனுக்கு என்ன செய்வது என்று யோசிக்கணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே காலையின் அன்றாடங்களின் தொடரோட்டத்தில் போய்ப் பொருந்திக்கொண்டு நல்ல பிள்ளையாய் அலுவலகத்திற்குப் போய்ச் சேர்ந்தான்.
மதியம் உணவுக்காக உட்காரப் போன போது கை கழுவும் இடத்தில் வீட்டுக் குழாய் ரிப்பேர் வேலை நினைவிற்கு வந்தது. சட்டைப் பையிலிருந்து கிழிந்து கந்தர்கோளமாய்க் கிடந்த அழுக்கு தொலைபேசிச் சிற்றேடுகளில் ஏதோ எண்களைத் தேடி எடுத்து பிளம்பரை அழைத்தான். வழக்கம்போல் ஏதோ சால்ஜாப்பு. ' ரெண்டு பய இருந்தாங்கள்ள, ஒருத்தன் போக்கு சரியில்லன்னு நிறுத்தியாச்சு, இன்னொருத்தனை வைத்துக் கொண்டு எத்தன எடத்துக்குத்தான் அனுப்ப'ன்னு கேட்டுட்டாரு கடை ஓனர். 'இன்னிக்குத் தப்பினா நாளை காலையில் எட்டு மணிக்கு ஒங்க வீட்டு வாசல்ல தான் நிப்பான்' என்று இறுதியாக ஓர் உறுதி மொழி. எப்படித்தான் கூசாமப் பொய் பேச வருதோ என்று நினைத்துக் கொண்டான் சண்முகம்.
எந்தப் பையனை வேலையிலருந்து எடுத்துருப்பான் கடைக்காரன். கருப்பா ஒரு குட்டைப் பையன் இருப்பானே, அவன் சூட்டிகையான ஆளாச்சே, அவனா இருக்கக் கூடாது என்று தோன்றியது சண்முகத்துக்கு. இந்த இரண்டு வருசமா இந்த வீட்டுக்குக் குடி வந்ததிலருந்து ஏதாவது குழாய் ரிப்பேருன்னா அந்தப் பையன் தான் வந்து நிக்கறது. வேலை முடிஞ்சு புறப்படறப்ப டீ கொடுத்தா அத்தனை நன்றியோடு கண்கள் சிரிக்க வாங்கி உறிஞ்சிக் குடிப்பான். தனது உயரத்திற்கு எட்டாத ஒரு சைக்கிள். அதில் பெடலைத் தவ்வித் தவ்வி ஒட்டியபடி சிரித்த முகத்தோடு வழியில் வாடிக்கையாளர்களைக் கடந்தபடி போகும் அவனுக்கு என்ன வயதிருக்கும்.....குழந்தைத் தொழிலாளி கணக்கில் வருமோ... ?
எங்கே இல்ல குழந்தைத் தொழிலாளி, காலையில் பேப்பரக் கொண்டு வந்து போடறதில்லருந்து, ஓட்டல், ஆபிஸ், சினிமா தியேட்டர், சலூன் எங்கே தான் இல்ல.....எந்த டீக்கடையில் போய்ப் பார்த்தாலும் அரியலூர்க்காரன் சார் என்று சொல்லிக் கொண்டு அரை டிரவுசரோட சின்னப் பசங்க எத்தனை பேர் அடியும், உதையும் வாங்கிக்கிட்டு அலைஞ்சுக் கிட்டிருக்கானுவ....
அலுவலகக் காகிதத்தில் ஏதோ கண்ட மேனிக்குக் கிறுக்கிக் கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தான் சண்முகம். 'சே' என்று எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விட்டு வேறு காகிதங்களை எடுத்துக் கணக்குகளை எழுதத் துவங்கினான். ஆறு மணி ஆனது தெரியாமல் வேலை இழுத்து ஆட்கொண்டிருந்தது அவனை. திடீரென்று மனைவி தொலைபேசியில் அழைத்து எத்தனை மணிக்கு வருவீங்க என்று கேட்ட போது தான் அந்த உலகிலிருந்து மீண்டான். 'இன்னிக்கு எப்படியும் ஒன்பது ஆகிவிடும் வீடு திரும்ப' என்று மட்டும் சொல்லிக் கொண்டான். பிறகு அவள் வைத்துவிடப் போகிறாள் என்ற பதட்டத்தோடு, 'பிளம்பர் பையன் எவனாவது வந்தானா....'என்று கேட்டான். 'எவன் வரப்போறான், ஒருத்தனையும் காணல இங்க...'என்று பொட்டென்று வைத்தாள் அவள்.
ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தபோது ஆட்டோ எதுவும் தட்டுப்படவில்லை. களைப்போடு நடக்கத் தொடங்கினான் சண்முகம். எங்கும் பெரிய ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. மெலிதான நிராகரிப்பின் ராகம் இழுக்கும் உறுமல்களோடு நாய்கள் ஒன்றிரண்டு அவனை உற்றுப் பார்த்துக் கடந்து போய்க் கொண்டிருந்தன.
வீடு நெருங்க நெருங்க, அப்போதுதான் சேற்றுக் குழம்பாய் வழியும் தெருவோரத்தின் நினைவுகளும், குழாய் ரிப்பேர் வேலையும், இதுவும் அதுவும் என்று வீட்டுக் கவலைகள் ஒவ்வொன்றாய் அலைக்கழிக்கத் தெருவை நெருங்குகையில் அசாதாரண அமைதி குடி கொண்டிருப்பது போலிருந்தது சாலை. இரைச்சலாய்க் கடந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவனை இடிப்பதுபோல் விர்ரென்று கடந்து போகவும் அச்சம் கவ்விச் சென்றது.
அடுக்குமனை வீடுகள் எதிலும் விளக்கு எரிவது போல் தோன்றவில்லை. தெருவிளக்கின் உதவியில் கடிகாரத்தில் நேரம் பார்த்தான் சண்முகம். பத்து முப்பது ஆகியிருந்தது. வீட்டிற்கு முன் வந்து நிற்கவும் அங்குமட்டும் பாதி தெருவிற்குச் சேறு அநியாயத்திற்கு இழுபட்டு இறைந்து கிடந்தது மாதிரி தெரிந்தது. பெரிதும், சிறியதுமாய் சக்கரங்கள் அழுந்தி ஓடியிருந்த தடத்தில் உலர்ந்தும் உலராதிருந்த சேற்றுச் சகதியினூடே ஜாக்கிரதையோடு தாவி அந்தப் பக்கம் குதித்து இரும்புக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தான்.
மாடிப்படிகளில் கூட விளக்கெரியக் காணோம். சத்தம் வராத நகரத்தின் நாகரீகத் தனத்தோடு மெதுவாகப் பாதங்களை வைத்து இரண்டாவது மாடிக்குப் போய்ச் சேர்ந்து, அழைப்பு மணியில் கைவைத்தான். வீட்டுக் கதவு வெடுக்கென்று திறந்து கொண்டதில் ஏதோ பதட்டம் இவனுக்குப் பரிமாறப் பட்டாற் போலிருந்தது.
"உஸ்...ஸ்..உள்ள வாங்க சீக்கிரம், மாடிப்படி விளக்கை எதுக்கு எரிய வச்சிட்டு வர்ரீங்க...கீழ கிரில் கேட்டைச் சாத்திட்டுத் தான வந்தீங்க...இந்த வாட்ச்மேன் வேற எங்க போய்த் தொலஞ்சான் இன்னிக்குன்னு பார்த்து......" என்று ஏதோ வேக வேகமாய்ப் பேசிக் கொண்டிருந்தவளைப் புரியாமல் பார்த்தான் சண்முகம்.
"என்ன ஆச்சு உனக்கு..." என்றான் அவன்.
"ராத்திரி நம்ம அப்பார்ட்மெண்டுக்கு நேர் எதிர ஒரு பஸ் ஆக்சிடண்டுங்க....ஒரு பையன் சக்கரத்துக்குக் கீழ மாட்டிக்கிட்டான்...நம்ம வீட்டுக்குக் கூட குழாய் ரிப்பேர் பாக்க வருவானே, அந்தப் பையங்க.... அடிபட்டுட்டாங்க......." என்று விசும்ப ஆரம்பித்தாள்.
"யாரு யாரு...எவனைச் சொல்ற... என்னன்னு ஒழுங்கா சொல்லு..." என்று திக்கித் திணறியபடி கேட்டான் சண்முகம்.
அவள் மெதுவாய்ச் சொல்லத் தொடங்கினாள். இரவு எட்டு மணி போல இருக்கும். அந்தக் கறுப்பான குட்டைப் பையன் சைக்கிளில் எதிர்ப்பக்கம் இவர்கள் வீட்டை ஒட்டி சாலையில் வந்திருக்கிறான். எதிரே பஸ் ஒன்று, ஆட்டோவையோ வேறு எதையோ ஒடித்துக் கொண்டு வலப்பக்கமாய் முந்த வந்த நேரத்தில் இவன் நேரெதிரே சிக்கிக் கொண்டான். தனக்கு இடப்பக்கமாய் ஒதுங்க அவனுக்கு ஒரு இடமும் வாய்க்கவில்லை. சாலையோரம் தான் சேற்றுப் புதைகுழி கால்வாய் வெட்டப்பட்டிருக்கிறதே... படுபாவிப்பயல், அதில் சைக்கிளை ஓட்டிப்போய் விழுந்து தொலைத்திருக்கக் கூடாதா, அவன் யோசித்திருக்கலாம். அதற்குள் பேருந்து அவனை அரைத்துத் தள்ளிக் கொண்டு போயே விட்டது...... இரைச்சலும், மோதல்களும் வலுத்திருந்த நேரத்தில் யாரோ அதட்டல் போட்டு அந்த வழியாக வந்த வண்டியை நிறுத்திப் பையனை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள்.
"ஏங்க, அவன் பிழைப்பானான்னு பயமா இருக்குங்க. ....சின்ன பையங்க.....பெத்த வயிறு எப்படி பத்தி எரியுமோ...."
கமலி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பதினைந்து வயதில் இரத்தப் புற்று நோயில் மரித்துப் போன தனது தம்பி குமாருடைய நினைவு வந்துவிட்டது.
சண்முகத்திற்கு இயல்பாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்தான், எதையோ முறைத்துப் பார்த்தான், உட்கார்ந்தான், பிறகு எழுந்து, 'கீழே இறங்கிப் போய்ப் பார்த்துட்டு வரேன்' என்று இறங்கினான். வேண்டாம், வேண்டாம் என்று அவள் அரற்றிக் கொண்டிருந்தாள்.
வாசல் நெடுக ஒரு அப்பாவி எதிர்கொண்ட மரணத் துரத்தலின் அவலச் சித்திரம்போல் சேறு சிதறிக் கிடந்தது. டார்ச் லைட் அடித்துப் பார்த்தான். இரத்தம் படிந்து கிடந்ததாகவும் தென்பட்டது, இல்லாதது போலவும் தெரிந்தது.
கிரில் கேட்டைப் பூட்டிக் கொண்டு பதட்டத்தோடு தட்டுத் தடவிப் படிக்கட்டுகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்தான். உடை மாற்றிக் கொண்டதும், குளித்துவிட்டு வந்ததும் அனிச்சையாய் நிகழ்ந்தது மாதிரி இருந்தது. இராத்திரிக்குச் சாப்பிட எதுவும் வேணாம் என்று சொன்னபோது தான் அழுதுவிடுவோமோ என்று கட்டுப்படுத்திக் கொள்ளத் தவித்தான். இரவு வீட்டில் வைத்துப் பார்க்கக் கொண்டு வந்த அலுவலகக் காகிதங்கள் எதையும் தொடும் துணிச்சல் கழன்று போயிருந்தது.
"குழந்தைங்க எங்கே...சாப்பிட்டாங்களா இல்லயா" என்று கேட்டபடி மூன்று வயது மகனின் அருகே உட்கார்ந்து, உறங்கிக் கொண்டிருந்த அவனைத் தனது மடிமீது எடுத்துப் போட்டுக் கொண்டு தலையைக் கோதிவிட்டு முத்தமிட்டான். குழந்தை சடாரென்று அரைகுறையாய்க் கண்விழித்து, "அப்பா, அந்த அண்ணன் செத்துருமாப்பா....." என்று முனகினான். சாக மாட்டான் என்று மெதுவாய்ச் சொல்லியபடி, கண்ணிமைகளை நீவிக் கொடுத்துத் தூங்க வைத்தான்.
அப்படியே படுக்கையில் சரிந்தான். கமலி அருகில் வந்து படுத்தவள் அவனது கையை ஆதுரமாகத் தனது கையில் பற்றியபடி, ஏங்க அந்தப் பையன் பிழைச்சிருவான் இல்ல.....என்றாள். அவனிடமிருந்து பதில் வராமற் போகவே இருட்டில் அவனது கண் இரப்பைகளைத் தீண்டி அவை ஈரமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவனை இதமாகத் தட்டிக் கொடுக்கலானாள்.
பேச்சற்று நகர்ந்து கொண்டிருந்தது அந்தப் பாழிரவு. கடிகாரத்தின் ஓசை கூடத் துல்லியமாக ஒரு மரணச் செய்திக்காக ஒலித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.
ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். திடீரென்று, "அய்யோ.....ஏ ராசா..... போயிட்டியே.... அய்யோ விட்டுப் போயிட்டியே......போச்சே போச்சே எல்லாம் போச்சே, எம் புள்ளையக் கொன்னுப்புட்டாங்களே" என்று பெருங்குரலெடுத்து யாரோ கதறுவது கேட்டது.
விருட்டென்று எழப் போனவனை கமலி தடுத்தாள். 'இருங்க, பதறாதீங்க...மெதுவா மெதுவா.. ' என்றாள். படுக்கையறையின் சன்னல் வழியே இரண்டாவது மாடியிலிருந்து கீழே பார்த்தார்கள் இருவரும்.
அபார்ட்மெண்ட் வாசலில் சேற்றுக் கறைகளின் தடயத்தின்மீது கைகளை அறைந்து அறைந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அரற்றிக் கொண்டிருந்தாள். அவளை சமாதானப் படுத்த முடியாது திணறியபடி மூன்று நான்கு ஆண்கள் அவளை அங்கிருந்து அகற்றி அழைத்துப் போகத் துடித்துக் கொண்டிருந்தனர்.
விளங்கிவிட்டது. மருத்துவமனையில் செய்ய எதுவும் இல்லாது போய்விட்டிருக்கிறது. அவனைப் பறிகொடுத்த நெஞ்சங்கள் அவன் அடிபட்ட இடத்தைத் தேடி வந்து கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தபோது மீண்டும் நடுங்கியது சண்முகத்திற்கு. தனக்கு அறிமுகமான பையனுடைய அறிமுகமற்ற தாயின் கதறல் அவனது உயிரை உறிஞ்சி எடுப்பது மாதிரி அரட்டியது.
அன்றைய இரவு கடக்க மறுத்தது. அவர்கள் போய் நீண்ட நேரம் ஆனபின்னும் யாரோ ஓலமிட்டுக் கொண்டிருப்பது மாதிரியே கேட்டது. தெருவின் இருபக்கமும், மாநகரின் மனிதர்கள் யார் காதுகளிலும் எந்தச் சத்தமும் கேட்காதது மாதிரி இறுக்கமான வீடுகளெங்கும் இருள் நிறைந்திருந்தது.
மறுநாள் விடியற்காலையில் பால் வாங்க இறங்கும்போது அப்பார்ட்மெண்டின் வாசலைக் கடக்கும்போது, இடதுபக்கம் மாடிப்படிக்கட்டுகளின் கீழ்ப் பகுதியில் மின்சார மீட்டர்கள், அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகள் எல்லாம் இருந்த இடத்தின் அருகே தரையில் ஒரு துணிப்பை காலில் இடித்தது.
விளக்கைப் பொருத்திப் பார்க்கவும் அது அந்தப் பையனின் பிளம்பர் வேலைக்கான கருவிகள் வைத்திருந்த பை என்று தெரிந்தது. விபத்தின்போது சைக்கிளில் இருந்து விழுந்ததை யாரோ உள்ளே எடுத்து வைத்திருக்கின்றனர். அதைக் குனிந்து எடுத்த போது இந்தப் பையை கேரியரில் வைத்தபடி அந்தப் பையன் அரை பெடல் அடித்துக் கொண்டே சைக்கிளின் மணியை ஒலித்துச் செல்லும் காட்சி கண்ணுக்குள் விரிந்தது.
சண்முகத்திற்கு தனக்கு எதிரே அந்தக் குடும்பம் முழுக்க நின்று நியாயம் கேட்பது மாதிரி தோன்றியது.
'நான் தான், நான் தான்' என்று அவனது வாய் அனிச்சையாக முணுமுணுத்தது.
-எஸ்.வி.வேணுகோபாலன்
வியூகம்
நான்கு நான்குகளாக கொடுத்துக்கொண்டிருந்த பவுலரை அடுத்த ஓவர் வீசவிடவில்லை. நாக்குத் தள்ளியபடி அவன் மைதானத்தை விட்டு வெளியேற, புதிதாக ஒருவன் கை, கால்களை உதறியபடி மைதானத்துக்குள் நுழைந்தான். விக்கெட் கீப்பரோடும், பௌலரோடும் கேப்டன் நடுவில் நின்று பேசினான். இரண்டு ஸ்லிப்புக்குப் பதில் மூன்று ஸ்லிப்பு இருந்தால் நல்லது என்று தேர்ட் பாயிண்டில் நின்றவனை அருகில் கொண்டு வந்தான். ஸ்கொயரில் தள்ளி நின்றவனை ஸில்லிப் பாயிண்டில் ஹெல்மட்டோடு நிற்கச் செய்தான். மிட் ஆஃபை கல்லிக்கு மாற்றினான். சுற்றும் முற்றும் பார்த்தான். கேப்டனின் புத்திசாலித்தனமான வியூகம் என்று வர்ணனையாளர் ஒருவர் அறிவித்துக்கொண்டு இருந்தான்.
மீண்டும் அதே திசையில்தான் பந்து மைதானத்தைக் கடந்தது. ஆனால், இந்த தடவை தரைவழியாக அல்ல. நடப்பது சூதாட்டம் என்பது தெரியாமல், சுருட்டப்பட்ட தேசீயக் கொடிகளோடு பதினோராயிரம் பேர் கன்னத்தில் கைவைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
எழுதுவதெல்லாம் எழுத்தல்ல (1) : காதலும் காமமும்!
“இடதுசாரிகளின் பார்வையில் காமம், காதல் குறித்தும் எழுதுபவர்கள் வெறுப்புக்குரியவரே’ என்று ராம்ஜி யாஹூ என்னைப் பற்றிய ஒரு கருத்தாக கூகிள் பஸ்ஸில் சொல்லியிருந்தார். என்னைப்பற்றிய கருத்தாக இல்லாமல், ஒட்டுமொத்தமாக இடதுசாரிகள் என்று அவர் குறிப்பிட்டதால் சில விஷயங்களை இங்கே பகிரத்தோன்றியது. இவர் மட்டுமல்ல, இன்னும் பலரும் இப்படி நினைத்திருக்கக் கூடும். இடதுசாரிகளைப் பற்றியோ அல்லது காமம், காதல் பற்றியோ அவரவர்களது புரிதல்களிலிருந்து இவ்வகை அபிப்பிராயங்களும் நிர்ணயிப்புகளும் உருவாகி இருக்க வேண்டும்.
தசைகளாலும், மூளையாலும் இந்த மனித சமூகத்தை சேர்ந்தவர்கள்தாம் இடதுசாரிகள் என்பதையும், காமமும், காதலும் மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடும் உணர்வுகள்தாம் என்பதையும் எடுத்த எடுப்பில் சொல்லி விடுவது அவசியமாகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திரிகையில் ஆச்சரியமாகப் படிக்க நேர்ந்த இந்த ஒரு பக்கக் கதையைச் சொல்ல வேண்டும். ஒரு முதலாளி அவரது செல்லப் பெண்குழந்தையோடு கம்பெனிக்கு வருவார். காக்கிச் சட்டை போட்ட சிலபேர் அவரது அறைக்குள் சென்று மேஜையைக் குத்தியும், ஆவேசமாக தன் தந்தைக்கு எதிரே கைகளை நீட்டியும் பேசுவதை கண்ணாடி அறை வழியே அவள் பார்ப்பாள். தான் அழைத்து வந்த பூனைக்குட்டியோடு நீண்ட ஹாலில் விளையாடிக்கொண்டு இருக்கும் அவள் பயந்து போவாள். சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வருவார்கள். முரடாகவும், தீவீரமாகவும் இருக்கும் அவர்களைப் பார்த்து ஒடுங்கி நிற்பாள். அவளது கையிலிருந்த பூனைக்குட்டி குதித்துக் கீழே ஓடும். அவள் அதை துரத்திப் பிடிக்கச் செல்வாள். பூனைக்குட்டி அங்குமிங்கும் போக்குக் காட்டும். காக்கிச் சட்டை அணிந்த அந்த நான்கு பேரும் அங்குமிங்கும் அந்தப் பெண்குழந்தையோடு சேர்ந்து ஓடுவார்கள். சிறிதுநேரத்தில் பூனைக்குட்டியைப் பிடித்து, அந்தப் பெண்குழந்தையின் கன்னங்களைத் தட்டி, சிரித்தபடியே கொடுப்பார்கள். அவள் ‘தாங்க்ஸ் அங்க்கிள்’ என சிரிப்பாள். சிறிதுநேரம் கழித்து அவள் பார்க்கும்போது, அதே நான்கு பேரும் பழையபடி தன் தந்தையிடம் கடுமையாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அவளுக்கு பயமாய் இருக்காது. அவ்வளவுதான் கதை. அவ்வளவுதான் விஷயமும்.
தோற்றங்களின் மூலமும், ’இப்படித்தான்’ என்னும் முன்கூட்டிய முடிவுகள் மூலமும் யாரையும் அறிந்துகொள்வதில் உள்ள பிரச்சினையே இது. இலக்கியம், கலை, வாழ்க்கை குறித்த இடதுசாரிகளின் பார்வைகளை அறிந்துகொள்ளாமல் இடதுசாரிகளை வறட்டுத்தனமானவர்கள், ‘பிடித்ததையேப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பவர்கள்’ என்றும் பலரும் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இவை. மனித சமூகத்திற்காக மாற்றங்களை விரும்புகிறவர்கள், மாற்றங்களுக்காக தங்கள் அருமையான நேரங்களை பயன்படுத்துகிறவர்கள், எப்படி வாழ்வின் சுவைகளிலிருந்து துண்டித்துக்கொள்ள முடியும்? நாளை தனக்கு தூக்குத்தண்டனை என்ற போதும், முந்திய இரவில் சலனமாகும் நினைவுகளில் திருமணமாகி சில காலமே ஆகியிருக்கும் சிறுகண்டன் தன் மனைவியின் இளம் மார்புச் சூட்டை உணர்வானே, ‘நினைவுகள் அழிவதில்லை’யில், அந்தக் காமமும், காதலும் எவ்வளவு அற்புதமானது. எல்லாவற்றையும் துறந்து, எதிலும் பிடிப்பற்றவன் எந்தப் புரட்சியைக் கொண்டு வந்து விட முடியும்? தங்கள் சமூகப்பணிக்கு இந்த அருமையான உணர்வுகளைத் தியாகம் செய்பவர்களே இடதுசாரிகள். ஆசைகளைத் துறந்து நிற்கும் ‘சாமியார்கள்’ அல்ல.
‘இவ்வளவும், இவ்வளவும் எனக்கா?’ என ‘அம்மா வந்தாளும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ என ‘மோகமுள்ளும்’ தமிழ் வாசகப்பரப்புக்குள் வண்ணம் பொருந்திய வார்த்தைகளைச் சிந்திய போது, அதை ரசிக்காமலா போயிருப்பார்கள் வாசித்த எந்த இடதுசாரியும். கு.பா.ராவின் ‘தாய்’ கதையில் வரும் பாலம் என்னும் இளம்பெண் செய்தது தவறு என்று எந்த இடதுசாரியாவது சொல்வானா. விரிந்து பரந்திருக்கும் தமிழ் இலக்கிய வெளியில் இப்படி காமமும், காதலும் அழகழகாக எவ்வளவோ பூத்துக்கிடக்கிறது. அவற்றையெல்லாம் ‘குப்பை’ என்று எந்த இடதுசாரியும் ஒதுக்கியதில்லை. ‘வெறியெழுந்ததும் தாக்கத் துடிக்கும், ஊடுருவத் துடிக்கும் ஆண்குறி. பெண்கள் நடத்த வேண்டும் புரட்சியை. அது இடித்துத் தள்ளாது. கட்டி எழுப்பாது. பிறிதின் சாரத்தை உண்டு தன்னுள்ளிருந்து உதிரமும் உயிரும் கலந்து தந்து புதிய ஒன்றை பிறக்க வைக்கும். ஆம்... பெண்கள்’ என்னும் ஜெயமோகனின் இந்த படைப்பிலக்கிய வாசகங்களை, அவர் மீது எத்தனை விமர்சனங்கள் வைத்திருந்த போதும் ஒரு இடதுசாரி புறக்கணித்துவிட முடியாது. குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் எழுத்தை ‘ஆபாசம்’, ‘வக்கிரம்’ என்று நான் சொன்னதற்கு, ‘இந்த இடதுசாரிகளே இப்படித்தான்’ என மொத்தமாக சிலுவை அறையப் பார்ப்பது விசித்திரமானது.
ஒரு எழுத்தாளன் இப்படித்தான் எழுத வேண்டும், இதைத்தான் எழுத வேண்டும் என்று ஒழுக்க நெறிகளை யாரும் விதிக்கவில்லை. விதிக்கவும் கூடாது. அது அந்த எழுத்தாளனின் பூரண உரிமை. கல்லிலும், வண்ணங்களிலும், ஒளியிலும் உருவகம் பெற்றுள்ள கலையின் இறவாத சக்தியினைச் சொல்லி மனித சமூகம் தன் துன்பங்களையும், இன்பங்களையும் மீண்டும் மீண்டும் வாழ்ந்து உய்யச் செய்வது படைப்பாளியின் தர்மமும் கடமையும். இங்கே உடல் மட்டும் விதிவிலக்காகி விடுமா, என்ன? காமம்/காதல் குறித்து எழுதுவது கூடாது, அவற்றை வாசிக்கக் கூடாது என்று இடதுசாரிகள் ஒருபோதும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். இங்கு ஆபாசம் என்பதுதான் பிரச்சினை. அதையும் விமர்சனமாகவேச் சொல்கிறோம்.
சம்ஸ்காரா கன்னடப் படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னதை இங்கு பகிரத் தோன்றுகிறது.
“சம்ஸ்காரா பார்த்தேன். நல்ல முயற்சி. அதிலே பிரச்சினைக்குரிய விஷயத்தை வேண்டுமென்றே வலிந்து சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி அதன் கதையிலோ, கருத்திலோ தடை செய்யத் தகுந்த அல்லது வயது வந்தவர்களுக்கு மட்டுமென்று வரம்பு கட்டுகிற பிரச்சினைகள் ஏதுமில்லை.
ஆங்கிலப் படங்களைப் பார்த்திருக்கிற மேற்கத்திய பாதிப்பின் காரணமாக அந்தக் கதையின் கதாநாயகனான கிரிஷ்கர்னாடும் ஸ்நேகலதா ரெட்டியும் நெருங்கிப் புணர்கிற ஒரு காட்சியினை ரொம்பவும் காமிரா நயத்தோடு எடுத்திருக்கிறார்கள். இது இந்தப் படத்திற்கு அவசியமில்லாத ஒன்று. எனவே அருவருப்பானதும் கூட. இந்தக் காட்சியை அவர்கள் சேர்க்காமலிருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது. ஒரு நல்ல படம் என்ற நற்பெயரோடு நின்றிருக்கும்.
இது மாதிரிக் காட்சிகளை வேண்டாமென்று நாம் சொல்வது ஒழுக்கக் கண்ணோட்டத்தோடு அல்ல. விரசம் என்பதாலும் அல்ல. இதிலே வெறும் வியாபாரம் அல்லது கலைக்குப் புறம்பான வேறு ஈடுபாடு இருக்கிறது என்பது நன்றாகத் தெரிந்து போகிறது.
செக்ஸ் பிரச்சினைகளை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். சமஸ்காராவின் கதை செக்ஸ் பிரச்சினை அல்ல. கலையின் subtletyதான் ரொம்ப முக்கியம். அதுதான் கலை.
சமஸ்காராவில், இப்படிப்பட்ட subtlety நுட்பத்தோடு பல பகுதிகள் படைக்கப்பட்டும், இந்த ஒரு காட்சியில் என்ன காரணத்தாலோ இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வியாபாரப் பாணியான performanace of love making என்கிற உத்திக்கு இரையாகி இருக்கிறார்கள்.
ஒருவன் இறந்து போனதும், சம்ஸ்காரா என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் படத்தில், இறந்தவனுக்குச் செய்யப்படுகிற சடங்குகளையே பிரச்சினையாக ஏற்றுக்கொள்ளுகிற ஒரு கதையில், இறந்தவனைக் காண்பித்து ஒரு mix-இல் எரிகிற சிதையக் காண்பிக்கிற அளவுக்கும், வேறு ஒரு பாத்திரம் ஒரு கிராமத்துப் பெண்ணோடு இதே மாதிரி செக்ஸ் உறவு கொள்வதை அவளை இழுத்துத் தள்ளி அவன் மேல் சாய்கிற அளவோடு அந்தக் காட்சியை முடிக்கிற அளவுக்கும், subtletyயாக கையாண்டிருக்கிற டைரக்டர் இந்தக் குறிப்பிட்ட காட்சியில் மட்டும், எதனால் இவ்வளவு விவரங்களோடு தொடர்ச்சியான காட்சிகளின் மூலம் ஒரு performanceஆக ஆக்குகிறார் என்பதற்குக் கலாபூர்வமான ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.”
இந்த இடத்திலிருந்து ஆரம்பித்துப் பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
(தொடர்வோம்)
வம்பரங்கம் 10: பெட்ரோல் விலை உயர்வு!
அத்தியாவசிய பொருட்களின் விலை, எந்த அறிவிப்புகளுமற்று ஒருபுறம் எகிறிக்கொண்டு இருக்க, அறிவிப்புகளோடு பெட்ரோல் அடிக்கடி நள்ளிரவுகளில் உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 2010 டிசம்பர் 14ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, சரியாக ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் இன்னொரு விலை உயர்வு. லிட்டருக்கு ரூ.2.54 பைசா இன்று ‘நள்ளிரவு’ முதல் அமலுக்கு வருகிறது!
“உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும் நள்ளிரவில் இந்தியா விழித்துக்கொண்டது” என்று நாட்டின் முதல் பிரதமர் நேருவின் உலகப் புகழ்பெற்ற இந்த வார்த்தைகள் இப்போது வேறுவிதமான அர்த்தங்களோடு நினைவுக்கு வருகின்றன.
நள்ளிரவில் விழித்துக் கொண்டு இருப்பவர்கள் திருடர்களாகவே இருக்கிறார்கள். மக்கள் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தப் பொங்கல்!
காலையில் எழுந்ததும், “சபரி மலைக்குச் சென்றவர்களில் நூறு பேருக்கு மேலே இறந்துவிட்டதாக’ டி.வி பார்த்து அம்மு சொன்னாள். துயரச்செய்திகளுக்கு நாளும் கிழமையும் இல்லை. அதன் விபரங்களைத் தெரிந்துகொள்ள கஷ்டமாயிருந்தது. வீட்டிற்கு வெளியே ஈரம் சொட்டிய வெளி விரிந்திருந்தது அமைதியுடன். வாசல்களில் கோலங்கள் அழகழகாய் மலர்ந்திருந்தன. இறந்தவர்களின் வீட்டு வாசல்கள் பற்றி யோசனையாயிருந்தது. அய்யப்பன் கைவிட்டு விட்டாரே!
வெளியே செல்வதில்லை எனவும், டி.வியைப் பார்ப்பதில்லை எனவும் உறுதி பூண்டு இருந்தேன். எங்கள் வங்கியில் பணிபுரியும் சுப்பிரமணியன் என்பவரது அலைபேசி அதை உடைத்துவிட்டது. அவருடைய மகன் கணேஷ்வர் சன் டிவியில் நடக்கும் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் பங்கேற்பதாகவும், பாருங்கள் என்றும் சொன்னார். பார்த்தேன். வயது பனிரெண்டு பதிமுன்றுதான் இருக்கும் என நினைக்கிறேன். தேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர்களுக்குரிய சகல அசைவுகளோடும், சொற்பிரயோகங்களோடும் பேசியது ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட விஷயங்கள் என்பது பேச்சில் தெரிந்தாலும், அதை வெளிப்படுத்திய தெளிவும், விதமும் பிடித்திருந்தது. கான்வெண்ட்டில் படிக்கும் பெற்றோர்களின் அவலங்களையும், அந்தக் கல்விமுறைச் சுரண்டும் விஷயங்களையும் போட்டு உடைத்தான். பெரும் ஆரவாரத்துடன் அமர்ந்திருந்த பெரியவர்கள் கைதட்டிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு பாவமாய் இருந்தது.
‘எழுதுவதெல்லாம் எழுத்தல்ல’ என்று சாருநிவேதிதாவைப் பற்றிய எழுதிய பதிவு ‘அபத்தமானது’ என்று நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பஸ்ஸை கூகிளில் விட்டிருந்தார். என் கருத்தொன்றை நான் முன்வைக்கும் அதே வேளையில், அவரது கருத்தை வெளிப்படுத்துவது முற்றிலும் சரியே. இதுதான் சமயம் எனக் காத்திருந்த ‘நண்பர்கள்’ தங்கள் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருந்தனர். நான் அவைகளைப் பொருட்படுத்தப் போவதில்லை. ராம்ஜி யாஹூவும், சித்தார்த் வெங்கடேசனும் பேசியவை மட்டுமே எனக்கு முக்கியமாகப் பட்டன. அவைகள் குறித்து எழுத வேண்டியிருப்பதாகத் தோன்றியது. ஏற்கனவே எழுதி வைத்திருந்ததை இந்தப் பொங்கல் நாளில் முடித்தும் விட்டேன். பதிவுகளாக வெளியிடுவேன்.
இரண்டு ம.க.இ.க தோழர்கள் வீட்டிற்கு வந்து புதிய ஜனநாயகம் பத்திரிகை தந்து சென்றார்கள். ஒவ்வொரு மாதமும் இது போல வழக்கமாய் வருவார்கள். நான் இல்லையென்றாலும், என் மனைவியை “தோழர்” என்று அழைத்துக் கொடுத்துச் செல்வார்கள். “நாங்கள்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆகிவிட்டோமே, எங்களிடம் ஏன் வருகிறீர்கள்” என்றேன் ஒருமுறை. சிரித்துக்கொண்டே, “பேசுவோம் தோழர்” என்பார்கள். “என் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்” என்றாலும், அமைதியாக “பேசுவோம் தோழர்”தான். அவர்களுடைய பொறுப்பும், அதில் இருக்கிற ஈடுபாடும் பிடிக்கும். உள்ளே வாருங்கள் என்றால், ‘பரவாயில்ல தோழர்’ என்று வெளியேதான் நிற்பார்கள். இன்று வலுக்கட்டாயமாய் அழைத்தேன். ஒருவர் உள்ளே வந்தார். சந்தோஷமாக இருந்தது.
கலைஞரின் பொங்கல் வாழ்த்துச் செய்தியினை இன்றுதான் படித்தேன். கல்லூரி நாட்களில் அவரது நெஞ்சுக்கு நீதியை படித்து, பக்கம் பக்கமாக அப்படியேச் சொல்வேன். இப்போதெல்லாம் அவர் என்ன பேசினாலும் சிரிப்பாக வருகிறது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை” என்னும் குறளை அவர் மேற்கோள் காட்டுவது எவ்வளவு முரணானது. பகுத்துண்டு என்றால் என்ன? பல்லுயிர் என்றால் என்ன?
பொங்கலுக்கு வாங்கும் கரும்புகள் வீட்டில் அப்படியே இருந்து விடுகின்றன. குழந்தைகள் விருப்பம் காட்டுவதில்லை. ஒரு வீட்டில் ஒரு மனிதன் மட்டுமே ஒன்றைச் சாப்பிடுவது என்பது பெரும் கொடுமை! ஆனாலும் தொடர்ந்து வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். கரும்பு இல்லாமல் பொங்கல் இல்லை என்பது ஒரு சடங்காக மட்டுமாகி விடுமோ?
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
பிச்சைப் பாத்திரம்
கோவில் வாசலில் வரிசையாக உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களில் அந்த வயோதிகர் பொருத்தமானவராகத் தெரிந்தார் ஓவியக்கல்லூரி மாணவர்களுக்கு. கிழிந்த சட்டையும், வற்றிய தேகமும், குழி விழிந்த கண்களும் பெரும் இரக்கத்தைக் கோருவதாக இருந்தன. தாங்கள் வரையப் போகும் ஓவியம் ஒன்றிற்கு மாதிரியாக இருக்க நூறு ருபாயும், சாப்பாடும் தருவதாகச் சொன்னதும், ஒன்றும் பேசாமல் அவர்களைத் தொடர்ந்தார் அவர்.
கதவு, ஜன்னல்கள், சுவர்கள் கொண்ட ஒரு அறைக்குள் வாழ்வில் முதல்முறையாக அவர் நுழைந்தார். யாரிடமோ யாசகம் கேட்டு எதிர்பார்த்திருப்பது போல சற்றுத் தலையைத் தூக்கி உட்கார வைத்தார்கள். ஒரே இடத்தில் அப்படியே உட்கார்ந்திருப்பது ஒன்றும் அவருக்கு சிரமமாயிருக்கவில்லை ஆரம்பத்தில். அவர்கள் எல்லோரின் கண்களும் அவரைப் பார்த்துப் பார்த்துத் தாழ்ந்த வண்ணமிருந்தன. அவரது சுவாசம் அவருக்கேக் கேட்கும்படியாயிருந்த அமைதி தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெருஞ்சிரிப்பாய் கலைக்க வேண்டும் போலிருந்தது. சுவர்க் கடிகாரத்தின் பின்பக்கமிருந்து ஒரு பல்லி வெளியே வந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டு இருப்பதை அப்போது பார்த்தார். ஒருவன் அருகில் வந்து அவரது முகவாயை லேசாகத் திருப்பி, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்து திருப்தியாகிப் போய் திரும்பவும் வரைய ஆரம்பித்தான். அவருக்கு தூக்கம் வரும்போல இருந்தது.
வேகு நேரம் கழித்து அவர்கள் கலைந்தார்கள். முகத்தை எப்போதும் போல வைத்துக் கொண்டார். மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். தாங்கள் வரைந்தவைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் . அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆசிரியர் வந்து, ஓவியங்களைப் பார்த்து ஆலோசனைகள் சொல்லிக்கொண்டு இருந்தார்.
அந்தப் பிச்சைக்காரர் அவர்கள் அருகில் போய் நின்றார். தாங்கள் வரைந்தவைகளை அவரிடம் காண்பித்தார்கள். கோடுகளால் ஒரு ஓவியம் இருந்தது. கறுப்பு வெள்ளையாய் அடர்ந்து ஒன்று இருந்தது. வண்ணங்கள் சிந்தி இன்னொன்று. எல்லாம் அவரது முகங்கள். அவரது கண்கள். அவரது தேகங்கள். பார்த்துக்கொண்டு வந்தவருக்கு தொடர்ந்து பார்க்க முடியாமல் போனது. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தார். பல்லியொன்று சுவரிலிருந்து தொப்பென விழுந்து அப்படியேக் கிடந்ததை அப்போது பார்த்தார். பணம் கொடுக்கப் பின்னால் சென்றவர்கள் ஒன்றும் புரியாமல் போனார்கள்.
‘மிருக விதூஷகம்’ ஒத்திகை!
சென்ற வாரத்தில் ஒருநாள் கோவில்பட்டியிலிருந்து முருகபூபதி போன் செய்து, “வர்ற சனிக்கிழம திருநெல்வேலில மிருகவிதூஷகம் நாடகம் போடுறோம். பார்க்க வந்துருங்க.” என்றார். சனிக்கிழமையன்று முக்கியமான தொழிற்சங்க கருத்தரங்கம் விருதுநகரில் இருந்தது. வரமுடியாத நிலைமையை தெரிவித்தேன். அடுத்த நாள், வியாழக்கிழமை என்று நினைக்கிறேன், காலையில் போன் செய்தார். “கோவில்பட்டில எங்க வீட்டுல வச்சு ஒத்திகை நடத்துறோம். சாயங்காலம் வரலாமா. நாடகத்தை முழுசாப் பார்க்கலாம்” என்றார். சரியென்று, பிரியா கார்த்தியிடம் பேசினேன். இருவரும் செல்வது என்றானது.
தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி, அவர்கள் தந்தை சண்முகம் என எழுத்தாளர்களும் கலைஞர்களும் வளர்ந்த அந்த வீட்டை அடைந்தபோது, அங்குமிங்குமாய் முற்றத்தில் நிறைய பேர் இருந்தார்கள். முறம், கயிறுகள், மிருக முகமூடிகள், இசைக்கருவிகள், மிருகத்தலைகள் பொருத்திய முண்டு முண்டாய் திருகிய கழிகள் ஒவ்வொரு மூலையிலும் ஒழுங்கற்றுக் கிடந்தன. எதோ காட்சியை விளக்கிக்கொண்டு இருந்த முருகபூபதி, ஆரவாரமற்ற, ஆனால் முகமே மலர்கிற சிரிப்போடு வரவேற்றார். சில வார்த்தைகள் பேசிவிட்டு நானும் கார்த்தியும் ஒதுங்கி நின்றோம். பார்வையாளர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.
நாடகத்தின் ஒரு காட்சியில் திருத்தங்களைப் பேசிவிட்டு, முருகபூபதி வந்தமர்ந்தார். முறத்தின் இடுக்குகளில் ரிப்பன்கள் வண்ண வண்ணமாய்த் தொங்க, தலையில் கவிழ்த்து ஒன்று போல பின்னிருந்து நடந்து வர, தொம் தொம்மென்று ஒசையெழ சட்டென்று வேறொரு உலகம் அங்கே உருவானது. முறங்களிலிருந்து தொங்கிய ரிப்பன்கள் தொன்மையின் அசைவுகளை காட்சிப்படுத்தியது. முன்வந்து உட்கார்ந்து கொண்டு, பார்வையற்றவர்களாய் பாவனை செய்ய, ஓசையடங்கி, மெல்லிய விசும்பலும் பெரும் கரைதலுமாய் ஒரு குரலை முருகபூபதி முகமெல்லாம் சுருக்கி, கண்கள் மூடி இசைக்கிறார். வசமிழந்து நமக்குள்ளிருந்தும் விசும்பல்கள் எழுவது போல இருக்கிறது. ஒவ்வொரு முகத்திலும் வெவ்வெறான குறிப்புகள். உடலின் மொழியும் தேம்புவதாய் இருக்கிறது. வெறுமை அடர்ந்தது எங்கும்.
முருகபூபதி
காட்சி சரியானதும், முதலிலிருந்து நாடகம் போட ஆரம்பித்தார்கள். அருகில் வந்து அமரச் சொன்னார் முருகபூபதி. இருக்கட்டும் என்று சைகையில் சொல்லி கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தடியில் நின்று கொண்டோம். சாயங்காலத்திற்கென்ற ஒரு மெல்லிய சோகம் கவிய, காட்சிகளில் ஒன்றிப்போனோம். இழந்தவைகளை நினைவுகளில் மீட்டியபடி விதூஷகர்கள் அங்கே நடமாட ஆரம்பித்தார்கள். தானியத்தைத் தேடினான் ஒருவன். பறவைகளைத் தேடினான் ஒருவன். மரங்களைத் தேடினான் ஒருவன். நிலங்களைத் தேடினான் ஒருவன். அடிவயிறுகளிலிருந்து வெப்பமான கவிதைகளாய் காலங்கள் வெளிப்பட, அனாதரவான வெளி அங்கே காட்சிகளாயின.
முன்னும், பின்னுமாய் நகரும் நிகழ்வுகளில், நவீனம் எவ்வளவு எவ்வளவு அழித்து வந்திருக்கிறது என்பதை தசைகளும், குரல்களும் முறுக்கேறி விதூஷகர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். பனைமரங்களைத் தேடிய கணத்தில் ஈழத்தின் சோகம் நம்மையறியாமல் நமக்குள் ஊடுருவுகிறது. காடுகளைப் பற்றிய குறிப்புகளில் பழங்குடி மக்களின் வதையை உணர முடிகிறது. செய்திகளைத் தின்றும், செல்போன்களில் பேச்சை இழந்தும் வருகிற நவீன மனிதர்களைப் பார்த்ததும் பெருஞ்சிரிப்பு நமக்குள் எழுகிறது. விதூஷகர்களைப் பார்த்தால் துயரம் படிகிறது. இந்த முரணுக்குள் இருந்து நாடகம் பேசுபவை ஏராளம். பக்கத்தில் எங்கேயோ ஒரு வீட்டில் எதோ விசேஷம் போலிருக்கிறது. பெரும் சத்தமாய் ஸ்பீக்கரில் பாட்டுகள் ஒலிக்க, எங்கள் கவனங்கள் குலைக்கப்பட்டன. விதூஷகர்களை எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் பாட்டுக்கு மண்ணின் துகள்களில் இருந்து வந்துகொண்டே இருந்தார்கள். தெலுங்கு மகாகவி நக்னமுனியின் கவிதைகள் எனக்குள் நிழலாடின.
படிமங்களாய், உடலின் மொழியில் சொல்லப்படுபவைகளை இன்னும் ஊன்றிக் கவனிக்க வேண்டியிருந்தது. நாடகம் முடிந்த பிறகு, எல்லவற்றையும் அவர்கள் ஒதுங்க வைத்துக்கொண்டு இருந்தார்கள். முருகபூபதி என்னைப் பார்த்தார். சரியாக ஒன்றிப்போக விடாமல் சூழல் இருந்தாலும், பெரும் துயரத்தை உணர்ந்ததைச் சொன்னேன். வடிவமைக்கப்பட்ட வெளியில், ஓளியின் வண்ணத்தில் நாடகம் இன்னும் அடர்த்தியாகத் தெரியும் என்றார். அடுத்த மாதத்தில் நாகர்கோவில் அருகே தோவாளை என்னும் இடத்தில் நாடகம் நடத்த இருப்பதாகவும், அதற்கு கண்டிப்பாக வாருங்கள் எனவும் சொன்னார். விடைபெறும்போது கோணங்கி மாடியில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். பார்த்ததும் உற்சாகமாய் வந்து கட்டிப் பிடித்துக்கொண்டார். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் நேசமித்ரன் அவரோடு பேசியதாகச் சொன்னார். விடைபெறவும், விடைகொடுக்கவும் மனதில்லாமல் அங்கிருந்து திரும்பினோம். கார்த்தியின் பைக்கில் உட்கார்ந்தபோது, விதூஷகர்களைப் பார்த்தேன். சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
இரண்டுநாட்கள் கழித்து கார்த்தி போன் செய்தான். “அண்ணா, திருநெல்வேலி போய் நாடகம் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன்” என்றான். அதை இன்னும் பார்க்கவில்லை. பொங்கல் விடுமுறையில் பார்க்க வேண்டும். முருகபூபதி அனுமதித்தால், வலையேற்றலாம். பார்ப்போம்.
(இந்த நாடகத்தில் அற்புதமாக ஒரு பெண் நடித்திருந்தார். ஒத்திகை நடந்துகொண்டு இருக்கும்போது எல்லோருக்கும் காபி கொடுத்துக்கொண்டும் இருந்தார். அவர்தான் லிவிங்ஸ்மைல் வித்யா என அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.)
நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’
சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி நமது வலைப்பக்கப் பதிவர்களின் பலரது படைப்புகள் சிறுகதைகளாகவும், கவிதைகளாகவும் அச்சிலேறி வெளி வந்திருக்கின்றன. உற்சாகமான செய்தி இது. அந்நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி எழுத்துக்களை மொத்தமாய்த் தொகுத்துப் பார்க்கும் போது, எழுதியவர்களுக்கே அவைகள் புதிதாகவும், இதுவரை அறியாத தோற்றங்களும், அர்த்தங்களும் கொண்டதாக இருக்கும். வாசகனுக்கோ எழுத்துக்களைத் தாண்டி, படைத்தவனின் தொனி தென்படத் துலங்கும். இது ஒரு அற்புதமான விளைவு. குவளைகளில் எடுத்து உடல் நனைப்பதைவிட, நீச்சலடித்துக் குளிப்பதில் இருக்கும் பரவசம் அறிய முடியும்.
நிலாரசிகனின் பதிவுகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன் என்றாலும், தொகுப்பாக இப்போது வேறொரு அனுபவமாக இருந்தது. மனநிலையும், புரிதலும் கூட வேறாகவேத் தெரிந்தது. காதல், நட்பு, பூக்கள், வானம், இரவு, அறை, தோட்டங்கள் எல்லாவற்றிலும் துயரத்தின் ரேகைகள் படிந்து கிடக்கின்றன. “நீயோ சலனமின்றி சன்னல் புழுதியில் என் பெயரை எழுதிக்கொண்டு இருக்கிறாய்” என்பதும் சிலிர்ப்பைத் தராமல் நம்முன் தெரிகின்றன. வானம் பார்த்து கதறும் இலைகள், ஈரம் படிந்த சாம்பல் மீது நடனமாடுபவள், வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள், சிறகிழந்த பட்டாம்பூச்சிகள், அறைகளை நிரப்பும் பறவையின் குருதி, வெளி நிரப்பும் உடைந்த ஓவியத்துகள்கள், தாலாட்ட யாருமற்று பீறீட்டு எழும் அழுகை, முள் தைத்த வலியுடன் நொண்டிச் செல்லும் சிறுவன், தலை மீது எச்சமிட்டுப் போகும் பறவைகள், சடலமாக மாறிய விழிகள் என வலி மிகுந்த காட்சிகளும், அவைகளில் உறைந்திருக்கும் மௌனமும் நீள்கின்றன. வெறுமையில் சஞ்சரிக்க வைக்கிறது. இந்த வலியை யாரிடம் பகிர்ந்துகொள்ள என கவிஞன் தேடி மழையைக் காண்கிறான். அவனது வலிகள் மரமாகத் துளிர்விடக் கூடும் என நினைக்கிறான். வெயில் தின்ற மழை என்பது இங்கே பொருத்தமாகவே இருக்கிறது.
கவிதையை ஒரு சுவையான துணுக்காக, உண்மையைச் சட்டெனக் காட்டும் வெளிச்சமாக, உணர்வாக, தனித்த மொழியாக, படிமங்களில் விரியும் காட்சியாக, குரல்களின் எதிரொலியாக, நிகழ்வுகளின் தத்துவ தரிசனமாக ஒவ்வொருவரும் அவரவர்க்கென்ற வழியில் பார்ப்பதையும், கையாள்வதையும் அறிந்திருக்கலாம். நிலாரசிகனின் கவிதைகள் உணர்வுகளின் தளத்திலேயே பெரும்பாலும் இயங்குகின்றன. சேர்ந்திருக்கும் போது கிட்டும் சந்தோஷத்தை விட பிரிவு பன்மடங்கு துயரம் கொண்டதாயிருக்கிறது அவருக்கு. தனிமைகளில் உருமாறும் சித்திரங்களென நினைவுகள் அலைக்கழிக்கின்றன. ‘கனத்த மௌனத்தில் கரைந்தழுதபடி இரவுக்குள் நுழைகிறது இவ்வோவியம்’ என்பதும், ‘அறியப்படாத பூவொன்றின் வாசனையில் லயித்திருக்கும் உனக்கென் பிணத்தின் வாடை திடுக்கிடச் செய்யலாம் அல்லது கைதட்டவும் தோன்றலாம்’ என்பதும், “புரிந்துகொள்ள முடியாத மொழியில் இரு நிழல்களும் பேசுவதை ஊமையாய் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான்” என்பதும், “ உயிரில் படிகிறது நீங்குதலின் ரத்தக்கறை” என்பதும் இப்படித்தான் வாசகனுக்குள் தங்குகின்றன.
நிலாரசிகனால் முடிந்திருக்கும் மொழியின் அடர்த்தியை சொற்றொடர்கள் அங்கங்கு நமக்குத் தெரிவிக்கின்றன. ‘கடல் குடிக்கும் பறவைகள்’, ‘வெயில் தின்ற மழை’, ‘வார்த்தை வடிவ விழிகள்’, ‘கூழாங்கற்களின் கதறல்’, ’உலகின் மிகப்பெரும் துளி’ என்பவைகளில் நின்று நிதானித்தே பயணிக்க முடிகிறது. அவ்வப்போது எழுதியவைகளைத் தொகுக்கும் போது, ஒரே தொனியும், லயமும் வாய்ப்பது முக்கியமானது. அது நிலாரசிகனின் கவிதைகளில் இருக்கிறது. ஒரேவித மனநிலையாகவும் மாறாமல் இருக்கிறது.
பொதுவாகவே கவிஞர்கள் பலரிடம் ஒரேவித வார்த்தைகள் நிறைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். நிலாரசிகனிடமும் அது இருக்கிறது. கனவு, தனிமை, பிரியம், சிதறி, இரவு, உதிர்ந்த, நிறம், வண்ணத்துப் பூச்சி, சப்தம், நிசப்தம், மழை, பறவை, பூக்கள், அறை, காயம், மரணம், சுயம், மௌனம் போன்ற சொற்களும், குறிப்பிட்ட சொற்றொடர்களும் மாறி மாறி தொடர்ந்து வருகின்றன.
கவிதைத் தொகுப்பை படித்து முடித்த பிறகும், ‘கால்களையிழந்த கிழவனொருவன்’, ‘முதலில் அது நத்தையென்றே’, ‘சிறுவனின் மணல் வீட்டை’ , ‘சுயமிழப்பது’, ‘சப்தங்களால் மௌனம்’, ‘நீங்கள் இறந்து போவீர்கள்’ ‘இந்த வலியை யாரிடம்’ போன்ற கவிதைகள் நிழலாடுகின்றன. இந்த கவிதைத் தொகுப்பு அவருக்கும் ஒரு வெளிச்சமாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதிலிருந்து இன்னும் கவிதைகள் அற்புதமாகவும், வீரியமாகவும் வெளிவரும் என நம்பிக்கையிருக்கிறது. வெறுமைகளைத் தாண்டிய நம்பிக்கைகளைச் சொல்லும் இந்த வரி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
’ஒரு இலையை இழுத்துக்கொண்டு
மரமேறிக்கொண்டு இருக்கிறது
கட்டெறும்பு’
நிலாரசிகனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!
வெயில் தின்ற மழை
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ. 50/-
இந்தியாவின் கோட்சேவும், பாகிஸ்தானின் காதரும் வேறு வேறா?
சல்மான் தசீரைக் கொன்ற மும்தாஜ் காதர்
“வந்திருக்கும் பின்னூட்டங்கள் பார்த்து பயமா இருக்கிறது” என்று நண்பர் andygarcia சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானில் சல்மான் தசீர் அவர்கள் கொல்லப்பட்டதையும், கொலை செய்தவன் கொண்டாடப்படுவதையும் கண்டனம் செய்து எழுதிய பதிவிற்கு வந்த சில கருத்துக்களைப் பார்த்து அவருக்கு திக்கென்று ஆகியிருக்க வேண்டும். நேரடியாகவே உண்மைகள் வெளிப்படும் ஒரு விஷயத்தை சில நண்பர்கள் தலைகீழாக திருப்பி வைத்துப் பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். மத நம்பிக்கை போன்ற உணர்ச்சி வயப்படக்கூடிய ஒரு பிரச்சினையில், இதுபோன்ற அர்த்தங்கள் கற்பிக்கப்படுதலும், புரிதலும் இங்கு ஒரு வழக்கமாகவே இருக்கிறது. தங்கள் பார்வை மட்டுமே சரியானது, மாற்றங்கள் அதில் தேவையற்றது எனும் ‘தெளிவு’ பெற்ற பின்னர் இப்படித்தான் நிகழும் போலும். அதுதான் ‘நீங்களுமா மாதவராஜ்?’ என்று, இன்னொரு நண்பரை கேட்கவும் வைத்திருக்கிறது.
‘என் தாயை ஒருவன் குறை சொன்னால் கோபம் வருமா வராதா?” என்று நியாயம் போல் கோபம் வருகிறது. இஸ்லாத்தை எப்படி குறை சொல்ல முடியும் என வரிந்து கட்டுகிறார்கள். நான் இப்போதும் சொல்கிறேன், இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன், நான் எழுதியதில் தவறு இல்லை. இன்னும் கூட அழுத்தமாகவேச் சொல்லியிருக்க வேண்டும் என்றேத் தோன்றுகிறது. முதலில் மத நம்பிக்கை, மத அடிப்படைவாதம் குறித்து அந்த நண்பர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதை உணராமல் ‘சல்மான் தசீர்’ ஒரு மத அடிப்படைவாதி என்று உளறக் கூடாது. ‘நானும் ஒரு இஸ்லாம் அடிப்படைவாதிதான்’ என்று குழப்பக் கூடாது. மத நம்பிக்கை என்பது தங்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வரும் விளக்காக கடவுள்களையும், மதங்களையும் பார்க்கிற எளியவர்களின் நம்பிக்கை. மத அடிப்படைவாதம் என்பது பெரும் சாபம். நோய். இந்து, யூத, கிறித்துவ, முஸ்லீம் என அனைத்து மார்க்கங்களிலும் ஊடுருவி விஷம் கக்குகிறது. மதத்திலிருந்து காரண காரிய ஆய்வுகளையும், நம்பிக்கையிலிருந்து அன்பையும், இரக்கத்தையும் அழித்து விடுகிறது. இறந்தகாலத்தை கிண்டிக் கிளறிப் புதுப்பித்துக் கொள்ளும். சிறுபான்மையினரிடம் பகைமை பாராட்டும். தர்க்கங்களை எதிர்க்கும். சகிப்புத்தன்மை அறவே இருக்காது. ஆணவம் கொண்டு, தன் மதம் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே மறுக்கும். சுதந்திரம், ஜனநாயகம் அனைத்துக்கும் எதிரான நிலை எடுக்கும்.
பாகிஸ்தானில் இந்த மத அடிப்படைவாதம் தலைதூக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் ஆபத்தை சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும். மத அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பிய மகத்தான மனிதர் சல்மான் தசீரை மனிதசமூகம் உள்ளவரைக் கொண்டாடத்தான் போகிறது. அவரைக் கொலை செய்தவன் மனிதகுல விரோதியாகவே காலத்தின் முன் நிறுத்தப்பட்டு இருப்பான். இதுதான் வரலாறு. காந்தியைக் கொன்ற கோட்சேவும், சல்மான் தசீரைக் கொன்ற காதரும் வேறு வேறா?
ஓவியர் உசேன் வரைந்த படங்களில், ‘இந்துக்கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர்’ என இந்தியாவில் பெரும்பான்மை மத அடிப்படைவாதிகளான இந்துத்துவா சக்திகள், அவரைத் தாக்கவும், கொலை செய்யவும் துணிந்தபோது அதை இங்குள்ள ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும்தாம் முன்நின்று கடுமையாக எதிர்த்தனர். அவர்கள்தாம் இப்போது சல்மான் தசீரின் கொலையையும் கண்டிக்கின்றனர் என்ற புரிதல் முக்கியமானது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளது போல, ‘மத நிந்தனைச் சட்டம்’ மூலம் மரணதண்டனை விதிக்கவெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் முடியாது. இந்துத்துவா சக்திகள் முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்தால், அதுவும் நேரலாம். அப்படி ஒரு போதும் நிகழ விடமாட்டார்கள் இங்குள்ள மதச்சார்பற்ற சக்திகள். அதுதான் நம்பிக்கையாக இருக்கிறது. எனது பதிவில் சுட்டிக்காட்டி இருந்தது அதைத்தான். இஸ்லாத்தையோ, மதநம்பிக்கையையோப் பற்றி பேசவில்லை.
காலத்தின் துயரம் தோய்ந்த பாடல்களும், வரலாற்றின் ரத்தக்கறை படிந்த நாட்களும் நம் கண்முன்னால் எவ்வளவோ உண்மைகளைச் சொல்லியபடி இருக்கின்றன. அதிலிருந்து நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?
சாரு நிவேதிதா: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல (2)
புத்தக வெளியீட்டு விழாக்களின் கதைகளையும், அதற்காக படைப்பாளிகளும், பதிப்பகங்களும் செய்கிற ஏற்பாடுகளும் அதீத புனைகதைகளின் தன்மையிலானவை. அவற்றையெல்லாம் பகடி செய்தும் படைப்புகள் உருவாக வேண்டும். மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிற பின்நவீனத்துவ கலாச்சாரச் செயல்பாடாகவும் தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவினை நடத்திப் பார்த்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் இங்கே. ஓடும் ரயிலில் புத்தகம் வெளியிடப்பட்டதும், ஆற்றுப்பாலம் நெருங்கியதும் அப்புத்தகங்களை ஆற்றுநீருக்குத் தாரை வார்த்து, பின் தாகசாந்தி செய்து விழாவினை நிறைவு செய்ததும் நடந்திருக்கிறது தமிழகத்தில்.
இவ்வழியே, சமீபத்தில் நடைபெற்று முடிந்திருக்கிற தன் புத்தக வெளியீட்டு விழாவில் நடைபெற்ற ஒரு விஷயத்தை, பெரும் விவாதமாக்கி, கணிணியின் வெண் திரைகளில் வசைச்சொற்களால் இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கிறார் சாரு நிவேதிதா. அவ்வெளியீட்டு விழாவின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு விவரணப்படத் துல்லியமாக சாருவின் வலைத்தளக் கடிதங்களிலும், விவாதங்களிலும் காண முடிகிறது.
தமிழகத்தின் மார்க்கி தே சேத், கேர்த்தி ஆர்கரான சாரு நிவேதிதாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு புத்தக வெளியீட்டு விழாவின் போதும் இதே காரியத்தை மிகச் சரியாக அரங்கேற்றியவர்தான் இப்பின்நவீனத்துவ பிரதியாளர். உயிர்மை வெளியீட்டு விழாவில் ஜெயமோகனின் புத்தகத்தைக் கிழித்து வீசுகிற கலாச்சாரப் புரட்சியைச் செய்தார். பிறகு என்ன? மூன்று மாத காலம் அவரும், இவரும் மாறி மாறி திட்ட, இருவரின் விசுவாசப் படையும் “உங்களுக்கெல்லாம் இது தேவையா? உங்களுடைய எழுத்துக்களுக்காக தவங்கிடக்கிற எங்கள மறந்துப்புட்டு இப்படி நேரத்த வேஸ்ட் செய்றியே தலைவா” எனக் கெஞ்சிய பிறகு தற்காலிகமாகச் சண்டை ஒத்தி வைக்கப்பட்டது. “போதும்டா சாமி, நிறுத்தித் தொலையுங்க ஒங்க சொந்தச் சண்டய” என்று அக்கறையுள்ள வாசகர்கள் சத்தம் போட்டிருந்தால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாருவின் ‘மிஷ்கின் அத்தியாயங்கள்’ ஒருவேளை நிகழாமல் இருந்திருக்கக் கூடும்.
‘தேகம்’ நாவல் வெளியீட்டு விழாவில், நாவலைப் பற்றியும், நாவலை எழுதியவரைப் பற்றியும் தனது கருத்தை பகிரங்கமாக பதிவு செய்திருந்தார் மிஷ்கின். “தேகம் நாவல், தமிழில் வந்திருக்கிற சரோஜாதேவி வகை எழுத்து என்றும், சாருவை சந்திக்க வேண்டும் என்றால், உயர் ரக மதுவை வாங்கி வைத்துக்கொண்டு கூப்பிட்டால் போதும்” என்பதாக மிஷ்கின் சொன்னதில், சாருவுக்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. இதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று மிஷ்கினின் அந்தரங்கங்களை, அவர் இவரோடு பேசிய விஷயங்களை, கமல்ஹாசன், இளையராஜா பற்றிய விவாதங்களையெல்லாம் பகிரங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இப்போதும் சாருவின் குறுகிய நோக்கமே வெளிப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டுச் சச்சரவுக்குப் பிறகு ஜெயமோகனின் படைப்புகள் உயிர்மையில் வெளியிடப்படவில்லை. இனி கமல்ஹாசனையோ, இளையராஜாவையோ வைத்து சினிமாவை மிஷ்கினால் உருவாக்கிட முடியாது.
சாரு நிவேதிதா தமிழில் இளம் வாசகர்களாலும், தீவீர இலக்கிய அக்கறை கொண்டவர்களாலும் கொண்டாடப்படுகிற எழுத்துக் கலைஞன் என்னும் மாயப்பிம்பம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவரோ, தன்னுடைய கட்டுரைகளில் எல்லாம், தமிழ்ச்சமூகத்திற்கு எழுத்தாளர்களைக் கொண்டாடத் தெரியாது என்றுதான் சொல்கிறார். அவர் கேரளத்தின் விருப்பத்திற்குரிய எழுத்தாளன் என்றும், லத்தீன் அமெரிக்காவில் அவர் பிறந்திருந்தால், அவருடைய புத்தகங்களின் விற்பனை லட்சத்தைத் தொட்டிருக்கும் என்றும் தன் புகழ் பாடுகிறார். இதில் அவருக்கே அயற்சி ஏற்படும்போது, அவர் வீட்டு நாய், அவர் எழுதுகிற பேனா, அவர் குடிக்கிற வாயில் நுழையாத மதுவகை, அவர் கண்ணாடி (அதிகம் இல்லை ஜெண்டில்மேன், நாற்பதாயிரம் ரூபாய்தான்!) என எழுதிக்கொண்டு இருப்பார். அவ்வப்போது வருகிற பாப்புலர் சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதுகிறேன் என, “உலக சினிமாவே என் உள்ளங்கையில் என்பதாக” தொடை தட்டிக்கொண்டு இருப்பார். அறுபதுகளில், நாஞ்சில் மனோகரன், வை.கோபால்சாமி போன்றவர்கள் அரசியல் கூட்டங்களில் நடுநடுவில் ஆங்கிலத்தில் பேசவும் கூட்டம் ஆரவாரிக்குமே... தமிழ்ச் சினிமாவில், கதாநாயகன் திடுமென ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினால் விசிலும், கைதட்டலுமாய் திரையரங்கம் ஆர்ப்பரிக்குமே... அந்த தந்திரத்தையே இலக்கிய உலகில் சாருநிவேதிதா பின்பற்றுவார்.
மிஷ்கின் அப்படியொரு விமர்சனத்தை அப்படி ஒரு நிகழ்வில், அப்படியொரு சபையில் வைத்திருக்க வேண்டுமா என்பது ஒரு கேள்வியாகவே இருந்தாலும், அவரது விமர்சனத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியான முடிவிற்கு வருவதற்கு, சாருவின் எழுத்துக்களே உதவி செய்கின்றன. ’தேகம்’ நாவலைத்தவிர நான் அவருடைய எல்லாப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். அப்பிரதிகள் எங்கிலும், உடல் எனும் எந்திரம் குறித்தும், அது மனித மனங்களுக்குள் ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள் குறித்தும் பேசுவதற்கான வெளிகளும், சாத்தியங்களும் இருந்தபோதும் அவற்றை எப்படி தவற விட்டுவிட்டு மேம்போக்கான எழுத்துக்களாக சிறுமை கொண்டன என்பதை அவரது ஒவ்வொரு நாவலையும் வைத்து என்னால் பேசிட முடியும். வாசக மனதில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் பாலியல் பிரதிகளாக அவை முடிந்து போவதால்தான், அவற்றை சரோஜாதேவி வகை எழுத்துக்கள் என மிஷ்கின் சரியாகச் சொல்லி இருக்கிறார்.
இப்போது சரோஜாதேவி புத்தகங்களின் தேவையை செல்போன் மெமரி கார்டுகள் பார்த்துக்கொள்கின்றன. அந்த நாட்களில் வெளிவந்த சரோஜாதேவி புத்தகங்களின் வெளிப்பாட்டு மொழியும், உள்ளடக்கமும் எதுவாக இருக்கப் போகிறது என்பதை வாசகன் முன் உணர்ந்து கொண்டுதான் அவற்றை வாங்கினான். படித்தான். அப்பட்டங்களைத் தவிர அவைகளில் வேறு எந்தவிதமான வாசக தந்திரமும் இருக்கவில்லை. ஆனால் சாருநிவேதிதா தனது நாவல்களையும், புனைகதைகளையும், தமிழ்மொழிக்குத் தன்னால் வழங்கப்படும் கொடை என்பதாக வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அதுதான் சிக்கலே.
பொதுச்சபையில் தன்னை ’வுமனைசர்’ என்று பொருள்படும்படி எப்படி பேசலாம் என்று கோபப்படுகிற சாருநிவேதிதா, அவருடைய ‘ராஸலீலா’வையும், ‘காமரூபக்கதைகளையும்’ மட்டுமாவது திரும்ப ஒருமுறை படித்துப் பார்க்கட்டும். இப்பிரதிகளில் உலாவரும் கண்ணாயிரம் பெருமாளுக்கும், இளம் பெண்களுக்கும் இடையே நிகழும் கடிதங்களும், அலைபேசி உரையாடல்களும் தமிழ்ச்சமூகத்திற்கு கொடையெனத் தந்தது எதை? வாசக மனதில் ஏற்படுத்திய ஏற்படுத்திய உணர்வுகள் என்ன? ஆளுமைச் சிதைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்டவையாகவே, ஒரு எளிய வாசகன் எனக்கு மதிப்பிட முடிகிறது.
ஒரு படைப்பின் கதாபாத்திர செயல்பாட்டிற்கு எப்படி படைப்பாளி பொறுப்பாக முடியும் என கேட்கலாம். இதற்கான பதிலையும் கூட சாரு நிவேதிதா தனது ஆனந்த விகடன் தொடரில் கூறுகிறாரே. உலகமொழிகளில் இப்போதெல்லாம் ’ஆட்டோ ஃபிக்ஷனல் ரைட்டிங்’தான் கொண்டாடப்படுகிறது என்றும், ‘ஆட்டோ ஃபிக்ஷன்’ என்றால் என்கிற விளக்கத்தையும் சாருநிவேதிதாவே தருகிறார். ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த அனுபவங்களின் மீது புனைவை ஏற்றி, புதுத்தன்மையிலான எழுத்தைப் படைப்பதே ‘ஆட்டோ ஃபிக்ஷன்’ என்கிறார். தமிழில் தன்னைத் தவிர அப்படி வேறு யாரும் தென்படவில்லை எனவும் ஆதங்கப்படுகிறார். தன் வரலாற்றுப் புனைவான தன் நாவல்கள் யாவும் இவரே உலவித் திரிகிறார் என்றால், சாரு நிவேதிதாவை, மிஷ்கினின் வார்த்தைகளால்தானே புரிந்துகொள்ள முடியும்?
இவர் போன்றவர்களை வகை தொகையில்லாமல் பாராட்டிட ஒரு கூட்டம் திட்டமிட்டு உருவாக்கப்படுவதையும், இவருடைய பின்னத்திகளாக வா.மு.கோ.மு போன்றோர் “சாந்தாமணியும் இன்னபிறக் காதல் கதைகளும்” எழுதிக்கொண்டு இருப்பதையும் சகித்துக்கொள்ள வேண்டியிருப்பதே, தமிழ் இலக்கிய உலகைப் பீடித்த சாபக்கேடு. சமகாலத்தில் வந்திருக்கிற தமிழின் முக்கிய நாவல்களைப் படித்துவிட்டு, சாரு நிவேதிதாவின் ஐந்து நாவல்களுக்கு தமிழ் இலக்கிய வெளியில் என்ன மரியாதை கொடுக்கலாம் என்பதை பேசத் துணிவோமே. இதற்கு உலக இலக்கியத்தை எல்லாம் இழுக்க வேண்டிய தேவையில்லை.
- ம. மணிமாறன்
பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 14
எழுத்தில் இறுதி செய்யப்பட்டிருக்கிற இலக்கியப் பிரதிக்குள் இயக்கம் பெற்றிருக்கும் உணர்வுகளின் தன்மைகளை தன் உள்உணர்வோடு பரவ விடுகிற வாசகன் அவற்றின் மூலமாக புத்தகத்துடன் நெருங்கிச்செல்வதோ அல்லது விலகிச் செல்வதோ நிகழ்கிறது. கவிதைகள், காவியங்கள், கதைகள் என யாவற்றின் பாடுபொருளாக காதல் காலாதிகாலத்திற்குமாக நீடித்து நிலைபெற்றிருக்கிறது. காதலை விலக்கி வைத்து விட்டால் உலகின் இலக்கியப் பிரதிகளின் எண்ணிக் கையை கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம் போல. அதனால் தான் காதல் எனும் உணர்விற்கு வாசக மனம் அடைகிற மனவெழுச்சி கொஞ்சம் மிகைபட்டுத் தெரிகிறது. காதலும், காமமும் சந்தித்துக் கொள்ளும் நுட்பமான மன எல்லைகளை எழுதிப் பார்ப்பது எழுத்தாளர்களுக்கு ஆகப் பெரிய சவாலாகும். இந்த சவாலை பிரான்ஸிஸ் கிருபா தன்னுடைய “கன்னி” எனும் பெரும் படைப்பின் வழியாக எதிர் கொள்கிறார்.
நாவல் கடற்புரத்தில் காலூன்றியிருக்கிற கிறிஸ்தவப் பின்புலத்தில் இயங்குகிறது. ஞானஸ்நானம், புது நன்மை, உறுதி பூணுதல், பச்சாதாபம், திருமணம் அல்லது குருத்துவம் என இவற்றில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தல் என்கிற கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் இயங்குகிற பாண்டியன் காதலின் ஆழத்தையும், அதன் மூலமாக கிறிஸ்தவத்தின் சில அடிப்படைகளின் மீதான எளிய கேள்விகளையும் முன் வைக்கிறான். “காதல் என்பது இறையனுபவம், காதலுக்கு காலம் கிடையாது. எந்தச் சொற்களிலும் உணர்த்திட முடியாதது அது. காதல் மட்டுமே காதலை அறியும்” என்கிற தேவதேவனின் கவிதைகளின் வழியாக நாவல் கடல்கோளில் திறவு பெறுகிறது. கடல்கோளில் துவங்கி சுனை, அருவி, காட்டாறு, கார்முகிலென கிளம்பி மழையாகப் பொழிகிறது நானூறுக்கும் அதிகமான பக்கங்களில்.
நாவலுக்குள் விரவிக் கிடக்கும் அசாத்தியமான மன உணர்வுகளை வாசகன் வாசித்து மட்டுமே உணர முடியும். பிரான்சிஸ் கிருபா மட்டுமல்ல. எழுபதுகளில் இருந்து தன்னுடைய வாழ் வனுபவங்களையே படைப்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். கிட்டத்தட்ட தமிழ்மொழியின் மகத்தான நாவல்கள் எல்லாம் “ Auto fictional writing” - ஆகத்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னுடைய அசலான வாழ்வை பக்கத்திற்குப் பக்கம் அப்படி அப்படியே எழுதிப் பார்ப்பதையே நாம் தன் வரலாற்று நாவல்கள் என்று மதிப்பிடுகிறோம். அப்படியான தன் வரலாற்றுப் பிரதிக்குள் படைப்பாளி எழுதி இயக்கிய புனைவெனும் மாயமும் கலந்து நாவலை Auto fiction எனும் நிலைக்கு உருமாற்றம் பெறச்செய்கிறது.
கன்னியின் உள்ளுறைந்து கிடக்கும் கதையென ஒன்றை மட்டும் சொல்லி விட முடியாது என்று நினைக்கிறேன். பாண்டி எனும் கவிஞனின் அகமனச் சிக்கலை அது குறித்த தேடலை நாவலுக்குள் கதையாக்கிப் பார்த்திருக்கிறார் என்று சொல்லிப் பார்க்கலாமா? அல்லது கிறிஸ்தவ தொன்ம நம்பிக்கைக்கு கட்டுப்பட்டு கன்னியாஸ்திரியான அமலாவின் கதையை பாண்டி எழுதிப்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வதா? வாழ்வில் எந்த நிமிடத்திலும் காதலில் விழுந்து விடக்கூடாது என வைராக்கியம் கொண்டிருந்த பிரான்சிஸ் சந்தான பாண்டியன், சாரோன் எனும் காதல் கவிஞனாகி சாராவை தன் பிரியத்திற்குரியவளாக வருவித்துக் கொண்ட நாட்களிலும், அவளும் கூட கன்னியாஸ்திரியாகப் படித்துக் கொண்டிருப்பவள் தான் என அறிந்து மனப்பிறழ்வுக்கு ஆளாகிப் போவதால், இது கிறிஸ்தவத்தில் இருக்கிற துறவு குறித்த விசயங்களை அதன் அடி அழம் வரை ஊடுருவிச் சென்று பார்க்கும் பிரதி எனக் கொள்வதா? என்று நான் யோசிக்கிறேன். இவையெல்லாம் இந்த நாவலுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த போதும் கூட இது போல் எந்த ஒற்றை மதிப்பீட்டிற்குள்ளும் அடக்கிட முடியாத தனித்துவமான படைப்பே “கன்னி”.
நாவலெங்கும் பாண்டி அலைந்து திரிந்த கடல் அலைகளும், அவற்றில் துள்ளிக் குதித்த மீன்களும் அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் கோவிலுக்கு கொடையென கடல் நீரில் படைத்த செந்நிற வளையல்களுக்குள் தாவிக் குதிக்கும் மீனின் நிறமும் கூட செந்நிறமாகிடுமா எனத் தவிப்பதுமாக பாண்டியின் பித்த நிலையே வாசகனுக்குள் நகர்கிறது. பித்த நிலை குறித்த எழுத்துக்களை அதனைக் கவனித்து ஒருவர் படைப்பாக்கியிருப்பார். அது வாசகனிடம் இரக்கத்தை பெறுவதாக மட்டுமே தவிர்க்க இயலாமல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் கன்னியின் “கடல்கோள்” எனும் பகுதிக்குள் மனப்பிறழ்விற்குள்ளான பாண்டியின் உள்மன உரையாடலாகவே பதிவுறுத்தப்பட்டிருக்கும் பகுதிகள் வாசகனை மட்டுமல்ல எழுத்தாளனையும் கூட நிலை குலையச் செய்யும் பகுதியாகும்.
பாண்டி தன் அடியாழ மனதிற்குள் கடவுள் என நம்பப்படுகிறவள் குறித்த வியப்பையும், பரிகாசத்தையுமே கண்டடைகிறான். வாசகனுக்குள்ளும் அதே உணர்வு வாசித்துக் கடக்கும்போது ஏற்படத்தான் செய்கிறது.
நாவலுக்குள் புனையப்பட்டுள்ள வசீகரமான புனைவு கடல் கடவுளாகிய தாடிக்காரனிடம் வைக்கும் கோரிக்கைதான். நீராலான கடல் கண்ணாடி உடலுடைய கன்னியாகிறாள். “சுவாமி நீங்கள் தானே தண்ணீரை ரசமாக்கினீர்கள். கடைசிப் பந்தியில் அந்த திராட்சை ரசம் புகழப்பட்டதைக் கேட்டபோது எனக்கு எச்சில் ஊறுகிறது. என் மீது மனமிரங்கி குனிந்து என் உதடுகளை முத்தமிட்டு இரண்டே இரண்டு அலைகளை மட்டும் இனிப்புச் சுவையுடையதான திராட்சை ரஸத்தால் நிரப்பும் என்கிறாள். ‘‘முத்தமிட்டு அலைகளை இன்பமூட்டியவள் கையோடு கடலையே சுருட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டாளே என்று சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பாண்டி தனக்குள் தடுமாறுகிறான் கடலும், காதலும் அவனுக்குள் ஏற்படுத்திய பித்த நிலையை நாவலெங்கும் உணர்ந்து கொண்டிடவே இவ்வலுவான காட்சி வாசகனுக்குள் கடத்தப்படுகிறது.
தன் வீட்டுப் பிள்ளையை இக்கதிக்கு ஆளாக்கிய சத்ராதிகளைக் கட்டிப் போட வேதக் கோயில் சாமியாரை அழைக்கிறார்கள். அவர் எல்லா பில்லி, சூனியங்களையும் என அடுக்கும் போது தெய்வங்களையும் (பிற மதத்தார்) முப்பத்து முக்கோடி தேவர்களையும் கட்டிப் போட வல்லது அந்தோணி யாருடைய கட்டு என்கிறார். இதற்குள் மாற்று மதக் கடவுளர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் சாத்தான்களோடு மட்டுமே வைத்துப் பார்க்கும் அடிப்படைக் கிறிஸ்தவத்தின் அடையாளம் தென்படுகிறது. பாட்டியோ வேப்பிலைச் சாறால் வைத்தியம் செய்து பார்க்கிறாள். பித்தத்தை தெளியச் செய்திட இஸ்லாமியரான மவுலி யாரைத் தேடிப் போகிறார் தந்தை . ஆனால் பாண்டியோ எல்லாவற்றையும் கவனிக்காது கடலை வெறித்துத் தேடிக் கொண்டிருக்கிறான். பிரியத்திற்குரிய அவனுடைய நாயான ஜிம்மிக்கு முட்டை ஊட்டிக் கொண்டிருக்கிறான். மவுலியார்தான் சொல்கிறார் பெண் தொடர்பு வகையில் பெரிய சிக்கல் உண்டாகி யிருக்கும் என்று. பாண்டியின் வாழ்க்கைக்குள் வருகிற அசாத்தியமான பெண்கள் அமலாவும், சாராவும். அமலா பாண்டியின் பால்யகாலத் தோழி. அவனுக்கு அக்காவும் கூட. சாரா வாலிபத்தில் பாண்டிக்குள் வசீகரமாக நுழைந்தவள். இருவருமே கன்னியாஸ்திரிகளாகப் படித்துக் கொண்டிருப்பார்கள் என்பதே பாண்டிக்கு ஏற்பட்ட மன நெருக்கடிக்கான மையப்புள்ளி.
பாண்டியன் உயிர்த்தோழியாக சுனையாகவும், அருவியாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அமலாவின் தன்மை இதுவரை தமிழ்ப்புனைவுலகம் கண்டிராத அசாத்தியமானது. தன் பாட்டி கண்ட கனவில் தாடிக்கார கோனாரின் கையில் இருந்த நான்காவது ஆடுதான் அமலா என்பதால் அவளை தேவனுக்கு ஒப்புவிக்கிறார்கள். இதனை அமலா விரும்பி ஏற்றுக் கொண்டாளா, இல்லையா என்பதெல்லாம் கலங்கலாகத்தான் நாவலுக்குள் பதிவாகியிருக்கிறது. அமலா அக்காவை விடாது பின் தொடர்பவன் பாண்டி. அமலாவிற்கு புதுநன்மை எடுத்த நாளில் போட்டோ எடுத்தார்கள் என்பதற்காக நெல்லை வரை போய் போட்டோ எடுத்துத் திரும்புகிறாள். அமலா தனக்கு புது நன்மை எடுத்த நாளில் தரப்பட்ட தேவ அப்பம் கிடைக்கவில்லையே என பாண்டி ஏங்கிப் போவானே என திருடி வந்து தருகிறாள். நாவில் பட்ட கிறிஸ்துவின் திருடிய சரீரத்திற்கு ஏன் ருசியில்லை என்று பாண்டி தனக்குள் கேட்டுக் கொள்கிறான். அன்பெனும் பெருவெள்ளம் அடைத்துக் கிடக்கும் எதனையும் உடைத்திடும் வல்லமை கொண்டது என்பதன் அடையாளம் நாவலின் இந்தப் புள்ளியில் தான் வெளிப்படத் துவங்குகிறது. அது தேவநிந்தனை, மதவிரோதம் என எதையும் பார்ப்பதில்லை. இந்த உணர்வினை பல இடங்களில் அமலா பாண்டியிடம் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்.
பாண்டி கன்னியாஸ்திரியாகப் போகப் போகிற அமலாவிற்கு திருச்செந்தூரில் வைத்து மஞ்சள் சுடிதார் எடுத்துத் தருகிறான். பாண்டியை கவிதைக்குள், இலக்கியத்திற்குள் இயக்கிக் கொண்டிருக்கும் அமலா அவனுக்கு தங்கச் சங்கிலியை அவன் எழுதிய இசைப்பாடலுக்காகத் தருகிறாள். அவன் மறுத்திடவே அப்போது அவள் சிலுவை கோர்த்திருந்த சிறு வளையத்தை பல்லால் கடித்துப் பிரித்து செயினை மட்டும் வைத்துக் கொண்டு சிலுவையை அவனிடம் தந்து விடுகிறாள் “வேறு ஒன்றுமில்லடா இது உறுத்திக்கிட்டே இருந்திச்சு அதுதான் உங்கிட்ட கொடுக்கிறேன்” என்கிறாள். இதை வெறும் வார்த்தையாகப் பார்க்க வேண்டியதில்லை. அதற்குள் ஆயிரம் சொல்லாத அல்லது சொல்ல முடியாத வார்த்தைப்பாடுகள் ஒளிந்திருக்கும் என்று தான் படுகிறது.
அமலா பாண்டிக்கு எழுதியதாகச் சொல்லப்படுகிற கடிதங்களை வாசகன் அறிந்திடத் தரவில்லை கிருபா. “நேரடிச் சந்திப்பில் அவள் வாய் தான் பேசுகிறது. எழுத்தில் அவள் இதயம் ஒளித்தது” நேரில் ஒரு அக்காவாகவும், எழுத்தில் ஒரு அக்காவாகவும் இருக்கிறாள் என்கிறார். அப்படியானால் அமலாவின் கடிதங்களுக்குள் மெஸியாவின் உடலில் காயம் ஏற்படுத்திடப் போகும் காரியத்திற்கான துவக்கப் புள்ளிகள் தென்பட்டிருக்கும். அமலாதாசன் என தனக்கு புனைப்பெயர் வைத்துக் கொள்ள பாண்டியைத் தடுத்ததற்கான காரணத்தைக் கூட அவள் சொல்லியிருப்பாள். அமலா கடிதங்களில் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் அடிப்படை பிடிவாதங்களைக் கூட விவாதித்திருக்கலாம். பொங்கிப் பெருகும் அன்பையும் அது தடைகளற்று பிரவகிப்பதையும் கூட வெளிப்படுத்தியிருப்பாள். அன்பின் பெருவழியில் ஏற்பட்ட பெருந்தடை அவள் குருத்துவத்தை ஏற்று கன்னியாஸ்திரியாகியதே. வாசகன் இவற்றை அவனுடைய மனத்திரைகளில் எழுதப் போவது நிச்சயம். இவை யாவும் வாசகனுக்கான இடைவெளிகள்.
நாவலின் பின் பகுதியில் தேரித்துறையின் திருவிழாக் காட்சிகளின் வழியாக சாரா பாண்டிக்குள் நுழைகிறாள். திருச்சபையில் அவளைப் பார்த்தபடியே நாவை நீட்டி அப்பத்தைத் தவற விடுகிற பாண்டி அதன் பின் சாரோன் என்றாகி அவளுக்காக கவிஞனாகித் தவிக்கிறான். தேர்த்திருவிழா நாளில் இருவருக்கும் இடையே இருந்த மனத்தடைகள் நொறுங்கிட ஒன்றாகிப் போகிறார்கள். கார்முகில் எனும் இவ்வத்தியாயம் எங்கும் கவித்துவ மழை பொங்கிப் பெருகுகிறது. மழையாக தனக்குள் இறங்கியவள் ஷெல்லியின் கவிதைத் தொகுப்பைத் தந்து “எபிசை கிடி யான்னு ஒரு கவிதை இருக்கு” அதைப் படிச்சு பாருங்க ஏன்னு புரியும். நேராச் சொல்லி உங்களைச் சங்கடப்படுத்த விரும்பல” என்கிறாள். அதன் பிறகான பாண்டியின் நிலையே நாம் நாவலுக்குள் முதல் பகுதியில் கண்டது. சாராவும் கன்னியாஸ்திரி படிப்பின் கடைசி மாதத்திற்காக தேரித்துறைக்கு வந்தவள் என்பதை அறியும் போது பாண்டியுடன் சேர்ந்து நாமும் தான் தடுமாறி விடுகிறோம். இந்தப் பகுதியெங்கும் சொல்லப்படுகிற டீச்சர் வீட்டுத் தாழ்வாரத்தில் முளைத்திருக்கும் காகிதப்பூ குறியீடாக இவற்றை நமக்கு முன் உணர்த்தி விடுகிறது.
அதனால் தான் கன்னியை படித்து முடித்த நாளில் பெரும் மன அவஸ்தைக்குள்ளாகி மிகப்பெரும் பாரத்தை நெஞ்சில் சுமந்தலைந்திட்ட துயரத்துக்குள்ளாகிறான் வாசகன். மனதிற்குள் இறங்கி நீண்ட நாட்கள் யாவருக்குள்ளும் நீடித்து நிலைபெற்றிருக்கும் கவித்துவப் பெரும் படைப்பே “கன்னி”.
ம.மணிமாறன்
தத்தகா…. புத்தகா
பேச்சு வரத் துவங்கிய புதிதில், எந்தக் குழந்தையும் சொற்களை ஒரு போராட்டத்தோடு உற்சாகமாகப் பேசிப் பழகுகிறது. பெரியவர்கள் போலப் பேச எத்தனிக்கிறது. அதற்கு முந்தைய மாதங்களில் கீழே கிடந்த காகிதத்தை, புத்தகத்தை எடுத்து ஓரங்களை எச்சில் படுத்தியும், கடித்துக் கத்தரிக்கத் துடித்தும் மகிழ்ந்த அதே குழந்தை இப்போது சொகுசாக உட்கார்ந்து கொண்டு, தலைகீழாக ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து "தத்தகா புத்தகா " என்று தலையை எழிலாக இந்தப் புறமும் அந்தப் புறமும் ஆட்டியபடி மிகவும் தெரிந்த தோரணையில் குஷியாகப் படித்துக் கொண்டே போகிறது. கடிக்கப் பழகுகிற குழந்தையிடமிருந்து எப்படி 'சீ சீ கழுதை...' என்று காகிதத்தைப் பறிக்கிறோமோ அப்படியே, வாசிப்பு மோகத்தில் (அதனால் முடியாது என்றாலும்) மழலை மொழியில் புத்தகத்தை சொந்தம் கொண்டாட ஏங்கும் கைகளில் இருந்தும் புத்தகத்தைப் பாதுகாப்பாகப் (?) பிடுங்கி விடுகிறோம். ஒரு சின்ன மாற்று ஆலோசனையாக, அந்தக் குழந்தையின் ஆர்வத்திற்கு அங்கீகாரம் அளித்து 'அவர்' ஒரு புத்தகத்தையும் என்னவும் செய்யட்டும், எப்படியும் படித்துக் கிழிக்கட்டும் (!) என்று அவருக்கான வண்ணமயமான ஒரு வாசிப்பு உலகை அறிமுகப் படுத்திப் பாருங்கள்....விந்தையான அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்.
குழந்தைகள் இயல்பிலேயே கதைப் பிரியர்கள். குழந்தைகளிடம் சளைக்காமல் கற்பனை சரக்கை அள்ளி விட்டுக் கொண்டே செல்பவர்கள், அவர்களது நேயத்திற்கு உரியவராகின்றனர். கால காலமாக அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களாக வீட்டின் மூத்த குடிமக்கள் இருந்து வந்தனர். "பாப்பா பாப்பா கதை கேளு, காக்கா நரியின் கதை கேளு" என்ற அந்த நாளைய (எங்க பாப்பா) திரைப்பாடலின் அடுத்த வரியே, "தாத்தா பாட்டி சொன்ன கதை, அம்மா அப்பா கேட்ட கதை" என்றுதான் போகும். காதில் விழுகிற கதையில் வரும் காடுகள் குழந்தைகளின் மனக் கண்கள் முன் விரியும். விலங்குகள் கம்பீர நடை பயிலும். துள்ளித் துள்ளி ஓடும். பறவைகளின் இன்னிசையும், வண்டுகளின் ரீங்கரிப்பும் கதை சொல்பவரின் வருணிப்பின் துளியிலிருந்து வெள்ளமாகப் பெருகி ஓடும். சில நேரங்களில், தெரிந்த கதையைக் கேட்கும் குழந்தைகள் தாமாகவே கற்பனையில் தங்களது சொந்த வேகத்தில் கதையை ஒருபுறம் அவர்களாகவே நகர்த்திக் கொண்டு சும்மா 'உம் உம்' கொட்டிக் கொண்டிருப்பதும் நடக்கும்.
குழந்தைக்குச் சோறு ஊட்டும் சுகம் பெற்றவர்க்கு இருந்தாலும், குழந்தையின் வளர்ச்சிப் போக்கிற்கு இடம் கொடுத்து அவர்களாக எடுத்துப் பிசைந்து உருட்டி எடுத்து ரசித்து மென்று அரைத்து விழுங்கப் பழக்குவது போலவே, வாசிப்பின் வாசல்களையும் குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோர் வரம் பெற்றோர்.
திரைப் பாடல்களை மிக இலகுவாகக் குழந்தைகள் அதே லயத்தில், ஏன், சுருதி பிசகாமலும் கூட அப்படியே பாடுவதைக் கேட்கிறோம். பாடல் வரிகளை அவர்கள் மாற்றி இசைக்கவோ, திரும்பத் திரும்ப அதே அடிகளைப் பாடிக் கொண்டோ இருக்கக்கூடும். எத்தனையோ சொற்களை அவர்கள் தவறாக உச்சரிக்கக் கூடும். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஓர் இசைப் பயணம். தமது உள்ளத்தில் பதிந்த ஓசையை அதே கதியில் மீண்டும் அவர்கள் பிரதி எடுத்து, பெரியவர்கள் முன் வைக்கின்றனர். இசை கெடாமல் தங்களது சொந்த சொல்லகராதியில் இருந்து புதுப் புது சொற்களை அவர்கள் மிக நுட்பமாக எடுத்து நிரப்பி அந்தப் பாடலைப் பாடுகின்றனர்.
அது புரியாமல் நாம் ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்தது போன்ற பதட்டத்தோடு குறுக்கீடு செய்து அந்தப் பாடலில் இடம் பெறும் சொற்களை எடுத்துக் கொடுக்கும்போது கவனம் சிதறுகின்றனர் குழந்தைகள். ஓவியக் கனவுகளோடு குழந்தைகள் சுவர்களிலும், தரையிலும், கையில் கிடைக்கும் காகிதங்களிலும் தீட்டும் தீற்றல்களைக் காணும்போதும் சில நேரம் பெரியவர்கள் நடுவராக மாறுவதும், விமர்சகராகி திருத்துவதும் நடக்கிறது. வாசிப்பின் துவக்க நேரங்களிலும் இப்படியான குறுக்கீடு குழந்தைகளது பேரார்வத்திற்கு அணை போடுகிறது. தங்களுக்குப் படிக்கத் தெரியும் என்பது அவர்களது ஆளுமையின் பிரகடனம். ஒரு பெருமித அறிவிப்பு. அதை உச்சி மோந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்களது பயணம் தொடர ஊக்கப்படுத்த வேண்டியதே பெரியவர்களது கடமை.
இயல்பாகவே வானவில்லின் காதலர்கள் குழந்தைகள், தங்களது குழந்தைமைப் பருவத்தின் தரிசனம் போலவே! அதனாலேயே, வண்ண வண்ணப் படங்கள் நிரம்பிய - அவர்களுக்கு இலகுவாக வாசிக்கத் தட்டுப்படுகின்ற - பெரிய பெரிய எழுத்துக்களாலான - மிக மிகக் குறைவான சொற்களைக் கொண்ட புத்தகங்களையே அவர்கள் கொண்டாடிக் களிப்பர். அதிலும் நேயமிக்க உறவுகளைக் கொண்ட கதைகள் அவர்களது விருப்பத் தேர்வில் முன் நிற்கும். நீதி போதனைகளைவிடவும் இயற்கையை நேசிக்கும் கதைகளும், நட்பைக் கொண்டாடும் கதைகளும் அவர்களைக் கவ்விப் பிடிக்கும். வீர சாகசங்களும், கற்பனைக் கெட்டாத அதிசயங்களும் அவர்களுக்கு ஏதோ பரிச்சயமான மனிதர்களோடு தொடர்புடைய நிகழ்வுகள் போல் மாறிவிடும். பிறகு புத்தகத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த கதா பாத்திரங்கள் வெளியே வந்து மீண்டும் அவர்களுக்காக அந்தக் கதையினை நடத்திக் காட்டிவிட்டு மீண்டும் புத்தகம் மூடும் போது ஓவியக் கோட்டுக்குள்ளும், சொல்லடுக்குகளுக்குள்ளும் போய் உறைந்துவிடுவதுபோல் கூடத் தோன்றும். அதனாலேயே கூட, குழந்தைகள் தமக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்குப் போடுவதை அனுமதிப்பதில்லை.
வெவ்வேறு ரசனைக்குரிய நூல்கள், குழந்தைகளை விவாதங்கள் நடத்தத் தூண்டுகின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. கேள்விகளும், வாதமும், விவாதமும் குழந்தைப் பருவத்தில் வளர்ச்சிக்கு உகந்த இயற்கை உரம். எல்லாக் கேள்விகளுக்கும் தமக்கு விடைகள் தெரிந்திருக்க வேண்டும் என துடிக்கும் பெற்றோர் தோல்வியின் அச்சத்தில் கடுமையான எதிர்வினைகளைப் புரிகின்றனர். தாங்களும் கற்கிறோம் என்று சுவை உணரும் மனிதர்கள் ஆரோக்கியமான சக பயணிகளாக மாறுகின்றனர்.
கேள்விகளைப் பற்றிச் சொல்லும் போது, கல்வியாளர் அருணா இரத்தினம் ஒரு நேர்காணலின் போது இப்படிச் சொல்லியிருந்தார்: "தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண்மணி சொல்வாராம், கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லி அடைத்துவிட வேண்டியதில்லை. சில கேள்விகள் உள்ளே நின்று உறுத்திக் கொண்டே இருக்கட்டும் - சிப்பிக்குள் விழும் துளிகளில் அரித்தெடுத்துக் கொண்டே இருக்கும் துகள் தான் பின்னர் முத்து உருவாகக் காரணமாகிறது. அதைப் போல....". தம்மின் தம் மக்கள் அறிவுடைமை விரும்புவோர் கொண்டாடும் இடம் இது.
தொலைக்காட்சியின் மாய வலைக்குள்ளோ, கணினியின் மந்திர ஈர்ப்புக்குள்ளோ மணிக்கணக்கில் மயங்கி விழுந்திருக்கும் குழந்தைகளை அற்புதமான நூல்கள் மீட்டெடுக்கும் என்கிறார் குழந்தைகளின் பிரச்சனைகளை அணுகும் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர். குழந்தைகளுக்கு மனத் திண்மை, பண்பாட்டாக்கம், எதிர்ப்புணர்ச்சி, சிந்தனைத் திறன், படைப்பாற்றல், மன ஒருங்கமைவு, கூரிய நோக்கு, தெளிவான பார்வை, பொறுமையோடு அணுகும் தன்மை.....என எத்தனையோ நலன்கள் வாசிப்பின் வழி வந்து சேரும்.
புத்தகம் என்பது சட்டைப்பையில் நந்தவனம் போல என்கிறது சீனப் பழமொழி. பூத்துக் குலுங்கும் வாழ்வுக்கான வழிப்பயணத்தை நூல்கள் அடையாளப் படுத்தும். அதை இளமையிலேயே கண்டறியும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கு அளிப்பது எவ்வளவு மேன்மையான விஷயம்! நூலகங்கள் ஏற்படுத்தும் பிரமிப்பும், தனக்குகந்த இசைக்கருவியைத் தேர்வு செய்வது போல் தமக்குப் பிடித்த புத்தகத்தைத் தொட்டு எடுத்து வாசிக்கும் பழக்கமும் இளம் வயதில் வாய்க்கப் பெறுவது அவர்களது சொந்த செயல்பாடுகளின் துவக்கப் படியாக மாறும். சுயமதிப்பைக் கூட்டும்.
அறிவியல், வரலாறு, புவியியல், இலக்கியம், கணிதம், மொழி....என எத்தனையோ விதமான திறவுகோல்களைக் கொண்டுதான் மனிதர்கள் மென்மேலும் புதிய புதிய தேடல்களில் புதையல்களைக் கண்டெடுக்கின்றனர் என்பது வெவ்வேறு சாத்திரங்களையும் விருப்பு வெறுப்பின்றி கற்கும் ஆர்வத்தையும் நூல் நிலையங்கள் ஏற்படுத்தும்.
திரையரங்குகளுக்கும், திருமண வைபவங்களுக்கும் குடும்பத்தோடு செல்லும் மனிதர்கள் பலர், புத்தகச் சந்தைக்கும் ஏன் குழந்தைகளோடு வரக்கூடாது என்று அண்மையில் ஒரு நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற கல்வி அதிகாரி ஒருவர் வினா எழுப்பினார். தின்பண்டங்களுக்கும், உடை அலங்காரப் பொருள்களுக்கும் ஒதுக்கும் தொகையில் ஒரு சிறிய விழுக்காட்டை புத்தகம் வாங்க எடுத்துக் கொடுக்க ஏன் தயங்குகின்றனர் பெற்றோர் என்று கேட்டார் வாசகர் ஒருவர்.
தாம் இன்புறுவது மற்றவர்களும் இன்புறச் செய்யச் சொல்லி மகிழும் களிப்பை வாசிப்பு அனுபவம் குழந்தைகளுக்குள் கிளர்த்தும். இளமையில் பயிலும் படிக்கும் பழக்கம், முதுமையை எட்டும் பருவத்தில் கூட தனிமை தம்மைத் தின்று விடாதபடி உணர்வு ரீதியாகவும் உடன் நின்று கதகதப்பை ஏற்படுத்தித் தற்காத்துக் கொள்ளச் செய்துவிடும்.
'காலக் கடலில் செய்யும் பயணத்திற்குக் கலங்கரை விளக்கம் புத்தகங்களே' என்றார் ஈ.பி.விப்பிள் என்னும் அறிஞர். இதற்கு மேல் என்ன விளக்கம் தேவை வாசிப்பைத் தூண்ட?
எஸ்.வி.வேணுகோபாலன்
















