-->

முன்பக்கம் , , , , � பாதை தெரியுது பார்!

பாதை தெரியுது பார்!

sangagiri untouchablity wall

 

திங்கள் அன்று காலை தீக்கதிரின் முதல் பக்கத்தில் பார்த்த அந்தப் புகைப்படம் நிறைய சிந்தனைகளைக் கிளர்த்திப் பரவசம் கொள்ள வைத்தது.. சாலையில் ஒரு பெண் கைப் பையோடு நடக்கிறார். அதில் என்ன புதிதாய் என்று எடுத்துக் கொள்ள முடியாத அருங்காட்சி அது. அவர் எங்கே, எந்தப் பின்னணியில் இப்படி நடக்க நேர்ந்தது என்பது தான் அந்தப் படத்தின் அழகைக் கூட்டுவது. சொல்லப் போனால் அந்தப் படம் ஏன், இன்னும் கூடப் பெரிதாய் செய்தித் தாளின் ஆறு பத்திகளையாவது அடைத்துக் கொண்டு இடம் பெற்றிருக்கக் கூடாது என்று கூடத் தோன்றியது. சங்ககிரி அருகே சந்நியாசிப்பட்டி கிராமத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து இடிக்கப் பட்ட தீண்டாமைச் சுவர்....என்ற குறிப்புடன் வந்திருக்கும் இந்தப் புகைப்படத்தில், இன்னும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் தீண்டாமை வெளியில் - நொறுக்கப்பட்ட கற்குவியல்களைக் கடந்து அந்தப் பெண் நடக்கும் திசையில் அவரை வரவேற்கும் வெயில் சுடர்விட்டுத் துலக்கமாகத் தெரியவும் செய்கிறது.

சுவர் இடிக்கப் பட்ட இடம் சங்ககிரி சன்னியாசிப்பட்டி என்றாலும், அது திறந்து வைத்த பாதையில் இதுவரை இடித்துத் தகர்க்கப்பட்ட சுவர்களின் கதையும், இனி அப்படியான கட்டுமானத்திற்கு எதிரான விழிப்புணர்வுக்கும் உறுதிக்குமான பிரகடனங்களும் சேர்ந்தே வெளிப்படுகின்றன.

உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வின் போது மதுரை மாவட்ட முன்னணிச் செயல்வீரர்களின் கண்களில் பட்டது. தீக்கதிரிலும், ஹிண்டு நாளேட்டிலும் செய்தி வெடித்தது. சுவர் மீது மின்சாரக் கம்பிகளை நட்டவர்களுக்கே 'ஷாக்' அடிக்கும் வண்ணம் கொதித்தெழுந்தது போராட்டம். வழக்கம்போல் தொடர் பேச்சுவார்த்தைச் சுழலில் சோர்வடையவைத்து விஷயத்தைத் தானாக மரித்துப் போக விடச் செய்வதில் வல்லவராக இருந்த ஆட்சியாளர்களையும், அதிகார வர்க்கத்தையும் அதிர வைக்கும் முனைப்போடு போராட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரவும், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் சுவர் அது செல்ல வேண்டிய கதிக்குக் கொண்டு சேர்க்கப் படும் என்று அறிவிக்கப் படவும் தட தட என்று ஒரு பகுதிச் சுவரை இடித்துத் தள்ளுகிற வேலையை மாவட்ட நிர்வாகம் செய்து முடித்தது.

சுவர் இடிப்பு ஒரு பெரிய சாதனை என்று நாம் சொல்லிக் கொள்ளவில்லை. அவமானத்தின் சின்னம் தகர்க்கப்பட்டதை அடையாளபூர்வமாக அங்கீகரிக்கவே கேட்டுக் கொண்டோம். சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறுக்குச் சுவர் என்பது எத்தனை வன்மம் நிறைந்தது என்பதை அம்பலப் படுத்திய இயக்கத்தையும், அது உடைத்தெறியப்படுவது  எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உரக்க எடுத்துச் சொன்னோம். துரதிருஷ்டவசமாக ஒரு சில வட்டாரங்களில் இருந்து இது ஒரு பெரிய வேலையா என்ற மிகுந்த ஏளனப் பார்வையோடும், ஆலய நுழைவு-தீண்டாமைச் சுவர் இடிப்பு...இதெல்லாம் இந்தக் காலத்திற்கான செயல் திட்டங்களா என்ற நிராகரிப்போடும், இதனால் எல்லாம் சாதியம் ஒழிந்து விடுமா என்ற கொச்சையான கேள்வியோடும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டன.

சுவர் ஓரிடத்தில் அல்ல, ஒரு மாவட்டத்தில் மட்டிலுமல்ல....என தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு சாதியவாதிகள் ஊர் ஊராய் வைத்திருந்த வேலைகள் ஒவ்வொன்றாக பொதுமக்கள் பார்வைக்குத் தெரியவந்தன.....அது இன்னதென்று தெரியாதிருந்த தலித் மக்களும் தாமாகவே அதன் பிறகு அப்படியான தடுப்பு அரண்களை அவர்களாகப் பின்னர் ஒரு கட்டத்தில் கண்டு பிடிக்கவும், அகற்றியாக வேண்டும் என்று குரல் கொடுக்கவும் தொடங்கினார்கள்.

திருச்சி எடமலைப் பட்டி புதூர், சேலம் ஆட்டையம்பட்டி, வேலூர், துரைப்பாடி இரும்பு கேட், சேலம், மகாத்மா காந்தி நகர், கோவை பெரியார் நகர், கோவை நாகராஜபுரம்............என இதுவரை இடிபட்ட சுவர்களின் வரிசையில் தற்போது புதிதாகக் கட்டிய மாத்திரத்தில் அடையாளம் கண்டு இடிக்கப்பட்ட சுவராய்ப் போனது சங்ககிரி சன்னியாசிப்பட்டி சுவர்.

எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் சண்டிகார் அருகே ஒரு சிற்றூரில் இருக்கும் நாடறிந்த பெரிய பொதுத் துறை வங்கி ஒன்றின் மேலாளர் எழுதியிருந்த கடிதம் வந்திருந்தது. அவரது கிளையின் கடை நிலை ஊழியர் ஒன்பது முறை வீடு மாற்ற முடிந்திருக்கும் அந்த ஊரில், தன்னால் ஒரே ஒரு வீட்டில் கூடக் குடியேற முடியவில்லை என்றும், தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்றும் குமுறி வெடித்திருந்தார் அவர்.  இட மாற்றலில் சென்னைக்கு வந்த எனது நண்பர் ஒருவர், புதிய இடத்தில் மதிய உணவு நேரத்தின் போது தாம் கொண்டு வந்திருந்த உருளைக் கிழங்குக் கறியை ஆசையோடு வாங்கிக் கொண்ட சக ஊழியர் ஒருவர், பிறகு யாரோ சாடையால் இவரது சாதியை உணர்த்தியத்தில் அருவருத்துப் பின்னர் தான் பாராதவாறு அதைக் குப்பைக் கூடையில் கவிழ்த்துவிட்டுப் போனதை  வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு காலமான எழுத்தாளர் ஆர் சூடாமணி அவர்களின் "நெருப்பு" என்ற அருமையான சிறுகதையில் தனது மகனின் நண்பனே ஆனாலும், தன்னால் தனது வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வாலிபன் அந்த வீடு எரியும்போது உட்புகுந்து தனது பேரக் குழந்தையின் உயிரைக் காப்பதான நிலையில் உளவியல் அதிர்ச்சிக்குள்ளாகும் பெரியவர் ஒருவரின் சாதியத் தீ பேசப்படும். அந்த இடத்தில் அவர் இப்படி உணர்வதாக சூடாமணி எழுதியிருப்பார்: "என்னுள் நேர்ந்த இந்த மன மாற்றம் யாரும் அறியாமல் இரவில் மடலவிழும் பூவாய் இருப்பதில் என்ன பிரயோசனம், எல்லோரும் அறியும் வண்ணம் ஓர் ஓவியச் செயலால் இந்த உலகுக்கு நான் உணர்த்த வேண்டாமா.."  பின்னர் அவர் அவனை தமது இல்லத்தில் தம்மருகே உட்கார்ந்து உணவுண்ணச் சொல்லும்போது, வட மாநிலம் ஒன்றில், தாழ்த்தப்பட்ட ஒருவர் தவறான புகாரை முன்வைத்து மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட செய்தியைக் காட்டி விட்டு அந்த வாலிபன் நகர்வதாக முடியும் அந்தக் கதை.

விதவிதமான வடிவங்களில் இன்னும் தொடரும் தீண்டாமை, தீண்டாமையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அடிப்படை வருணாசிரம ஏற்பாடு, ஏகாதிபத்திய உலகமயத்தின் நெருப்பில் எரிந்து விடாத பக்குவத் தொலைவில் இருந்து கொண்டு சொகுசாகக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் நிலவுடைமை சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறை இன்னவற்றுக்கு எதிரான போராட்டம் பல வடிவங்களில், பல முனைகளில், பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப் பட வேண்டியதாகிறது. கண்ணுக்குத் தெரியும் சுவர்களை அதிகாரத்தின் எதிரே நின்று தகர்த்தெறிய நடக்கும் போராட்டங்கள் ஒரு புறம். மனிதர்களின் மரபணுக்குள் வளைக்கமுடியாத கம்பிகளின் வலுவோடு எழும்பி நிற்கும் சாதியச் சுவர்களை இடிப்பது எத்தனை சவாலான வேலை என்பதையும் அன்றாட வாழ்க்கை நமக்குக் கற்பித்துக் கொண்டே இருக்கிறது. 

முதல் மனிதனாக, நிலவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்டிராங், தான் சாதாரணமாய் எடுத்து வைத்த ஓரடி அது, ஆனால் மனிதகுலத்திற்கு ஒரு அசுரப் பாய்ச்சல் என்று வருணித்தார். சன்னியாசிப்பட்டி சுவர் நொறுக்கப்பட்டு விரியும் பாதையில் இந்தப் பெண்மணி நடப்பதும் அப்படித் தான். அது அவருக்கு சாதாரண ஒரு நடை தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் கம்பீரத்தோடு எடுத்துவைக்கும் வெற்றி நடை அது.

- எஸ்.வி.வேணுகோபாலன்

(இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள். அவரது வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது)

Related Posts with Thumbnails

5 comments:

 1. Sanyasipatti photo story by S.V. Venugopalan is EXCELLENT. A comprehensive portrayal of untouchability in India and the continuing movement for its eradication. SVV has conveyed so much useful out of a photo frame. CONGRATS.
  - J.Gurumurthy

  ReplyDelete
 2. இந்திய மனம் என்பது அடிப்படையில் சாதீய மனம்தான், இதை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.இதை ஒருவன் கடந்து வருவது அவ்வளவு எளிதல்ல; ‘வேதம் புதிது! ஆஹா சூப்பர் சார்! அலைகள் ஓய்வதில்லை, சூப்பரோ சூப்பர் சார்’ என்பவர்களும் தன் வீட்டுக்கு வெளியே சாதியை மறுப்பவர்களாக, ஆனால் வீட்டுக்குள்ளும் தன் சிந்தனைக்குள்ளும் சாதீயத்தை கராராக, விடாப்பிடியாக கடைப்பிடிப்பவராகவே இருக்கின்றார்கள், அதுதான் இந்திய மனம், இந்த மனதுக்கு வயது இரண்டாயிரத்துக்கும் மேல்! அத்தனை எளிதல்ல இதைக் கடந்து வருவது!எனவே சாதீயம் ஒழியவும் இதே அளவு காலம் தேவைப்படலாம், நினைக்கவே பயமாக உள்ளது!...இக்பால்

  ReplyDelete
 3. இந்திய மனம் என்பது அடிப்படையில் சாதீய மனம்தான், இதை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.இதை ஒருவன் கடந்து வருவது அவ்வளவு எளிதல்ல; ‘வேதம் புதிது! ஆஹா சூப்பர் சார்! அலைகள் ஓய்வதில்லை, சூப்பரோ சூப்பர் சார்’ என்பவர்களும் தன் வீட்டுக்கு வெளியே சாதியை மறுப்பவர்களாக, ஆனால் வீட்டுக்குள்ளும் தன் சிந்தனைக்குள்ளும் சாதீயத்தை கராராக, விடாப்பிடியாக கடைப்பிடிப்பவராகவே இருக்கின்றார்கள், அதுதான் இந்திய மனம், இந்த மனதுக்கு வயது இரண்டாயிரத்துக்கும் மேல்! அத்தனை எளிதல்ல இதைக் கடந்து வருவது!எனவே சாதீயம் ஒழியவும் இதே அளவு காலம் தேவைப்படலாம், நினைக்கவே பயமாக உள்ளது!...இக்பால்

  ReplyDelete
 4. அன்புத் தோழர் மாதவ் அவர்களுக்கு

  வணக்கம்...
  எனது படைப்புகளுக்கு உங்கள் வலைப்பூவில் கிடைக்கும் இடம்
  பெருமிதம் பூக்க வைப்பது.
  ஆனால் ஏனோ, நிறைய கருத்துக்கள் வெளிப்படவில்லை.
  அமெரிக்கா சென்றிருக்கும் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்
  தலைவர் தோழர் ஜே குருமூர்த்தியும், தோழர் இக்பால் அவர்களும்
  அன்போடு பதிந்திருக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி.
  வாசித்தவர்கள், வாசிக்க வருபவர்கள் அனைவருக்கும்
  எனது நன்றி..
  உங்களுக்கு நெகிழ்ச்சி கலந்த நன்றி..

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 5. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏன் தனக்கு அடுத்த நிலையில் யாரையும் தயார் படுத்த முடியவில்லை. அல்லது அவர் வெளியில் தெரியாமல் போய் விட்டாரா.அம்பேத்கர், இயக்கத்தில் இருந்தாரா அல்லது இயக்கம் இவரில் இருந்ததா. நீண்ட சோகமான சந்தேகம்.
  தனிமனித கருத்தியல் மூலமாக எதையும் சாதிக்க முடியாது. முடியுமாக இருந்தாலும் அது தொடராமலே போகும். இன்றும் அவரின் சிலையை வைத்து, படத்தை வைத்து, பெயரை வைத்துக் கொண்டு அவரின் கொள்கைகளையே மறந்து, மறைத்து கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்துகின்றனர்.
  அவரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள், ஏன் அவருடைய மதமாறுதலை மறுதலிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், இவர்களே மதவாதசக்திகளுக்கு வலுச்சேர்க்கும் சக்தியாக இருக்கின்றனர். அம்பேத்கரின் பேரால் கட்சி நடத்துபவர்கள் யாரும், இந்து மதத்தை மறுப்பவர்களாக இல்லையே. கோவிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடும் இடது வாதிகள் கடவுள் மறுப்பு கொள்கையை ஏன் பொது இடங்களில் பேசுவதில்லை. (இது ஒரு சுய கோபம். நான் அநேக எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளேன்).

  சாதீயம் என்பது பார்த்தீனியம் போன்றது. மதம் என்பது அதற்கு குடை பிடிக்கிறது. இந்திய மதங்களில் அனைத்திலும் இந்துத்துவ சாதிய ஆதிக்கம் உள்ளது. அது கிறித்துவனாக இருக்கட்டும், முஸ்லீமாக இருக்கட்டும், பௌத்தமாக இருக்கட்டும், சீக்கியமாக இருக்கட்டும், அனைத்திலும் பட்டியல் இட்டு ஒதுக்கப்படும் நிலை உள்ளது. உதாரணமாக, ஒரு முறை,
  அயோத்திதாசர் தமிழகத்தில் தனது ஆட்களை மதமாற்றத்திற்காகத் திரட்டியிருந்தார். பிறகு இலங்கை பிக்குகளை அணுகி, அந்த ஆட்களுக்கு மதமாற்ற சடங்குகளை நடத்த கேட்ட போது அந்த பிக்குகள், இவரிகளின் சாதியை காரணம் காட்டி இந்தியா வர மறுத்தனர் என்ற தகவல் உள்ளது.

  ஆக சாதிய ஒழிப்பு என்பது, மதமாற்றத்திம் மூலமாக நடைபெறாது. இது ஒட்டு மொத்த தேசத்திற்கான விடுதலை போரைப் போல் நடத்த வேண்டும். அதை ஒரு கௌரவ நிகழ்வாக ஆக்க வேண்டும். இதற்கு தேசபக்த இடதுசக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.

  மீடியாக்களின் கவன மறுப்பு உள்ள நிலையில் இது கடினமான காரியம் தான். சூடான செய்திகளை தரும் வகையில் இந்த போராட்டம் வெடிக்க வேண்டும். செய்தி சூடாக இருத்தால் போதும் ஐம்பது சத பத்திரிகைகள் அதை வெளீயிட தயாராக இருக்கும். அவர்களுக்கு வேண்டியது காசுதானே.

  தோழர் மாதவ் போன்று பல பல ப்ளாக்குகளை நம்மவர்கள் தோற்றுவிக்க வேண்டும். அதை ருசியானதாக அடிக்கடி பதிவேற்றி முழுமை கொள்ள வைக்க வேண்டும்.

  ReplyDelete