-->

முன்பக்கம் , , , , , � என்ன சொல்ல வருகிறது, தினமணி?

என்ன சொல்ல வருகிறது, தினமணி?

dinmani

தமிழ்க் கவிதைகளில் கணியன் பூங்குன்றனாரின்  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அற்புதச் சொற்சித்திரத்தில் வரும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற வாக்கியம் போல வேறொன்று இஷ்டப்படியான பிரயோகதிற்குக் கையாளப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்தத் தலைப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் தினமணி (18 11 2011) தலையங்கத்தில், தமிழக அரசு அண்மையில் உயர்த்தியிருக்கும் பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டணம் குறித்து அலசப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால், விலை உயர்வை விடுத்து மக்களை அடித்துத் தோய்த்து அலசிப் பிழிந்து காயப் போட்டிருக்கிறார் ஆசிரியர் கே வி.

மின் துறையைப் பொறுத்தவரையில் மத்திய அரசுக்கு இணையாக சம்பளம், கூடுதல் ஆள் நியமனம் தான் பற்றாக்குறைக்குக் காரணமாம். ஆறாவது ஊதியக் குழு வழங்கிய ஊதிய உயர்வில் மிக அதிக சதவீதத்தில் உயர்ந்தது உயர் அதிகாரிகள் ஊதியமே தவிர, சாதாரண நிலையில் இருப்போரது ஊதியம் அல்ல. இன்றும் கூட மின்துறை உள்ளிட்டு அரசின் பல துறைகளில் காலியிடங்கள் லட்சக் கணக்கில் இருக்க ஏதோ தறிக்கெட்ட அளவில் கூடுதல் ஆள் நியமிக்கப் பட்டது போல் பேசுகிறது தினமணி.  இருந்தாலும் தவிர்த்திருக்கலாமே கட்டண உயர்வை என்று அரசுக்கு வலிக்காமல் பஞ்சுப் பொதியால் சும்மா குட்டுவது போல் ஒத்தி எடுக்கிறது. இதுவாவது பரவாயில்லை, பால் விலை குறித்தும், பஸ் கட்டண தடாலடி உயர்வு பற்றியும் அடுத்த பத்திகளில் பிரமாத அலசல் செய்து தினமணி இறுதியாகக் கூறுவது என்ன தெரியுமா..

தமிழர்கள் அநியாயத்திற்குக் குடிக்கிறார்களாம். எங்கே இருந்து இந்தக் கண்டு பிடிப்பு? மது விற்பனை மாதம் தோறும் கூடிக் கொண்டே வருகிறதாம். ஆகவே, குடிக்கிற தமிழன், பாலுக்கும் பஸ்சுக்கும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கட்டுமே என்று அரசு நினைத்தால், அதற்காக யாரைக் குறை சொல்வது என்று தத்துவ முத்தாகக் கொட்டுகிறது நிறைவு வாசகம்.

ஒரு மாநிலத்தின் குடிமக்கள் அனைவருமே 'குடி' மக்கள் என்ற அறிவியல் ஆய்வை எப்படி மேற்கொண்டது தினமணி? ஆராயாமல் சாராயத்தைப் பற்றி தோராயமாகப் பேசுவதன் உட்கருத்து என்ன? உயர் ஊதிய, மேல் தட்டு, நவ நாகரிக உலகத்தினர் வீட்டுக்குள்ளே பார் வைத்துக் கொண்டு பரவசம் கண்டாலும் அவர்களுக்கு வரிச்சலுகை, தொழில் ஊக்கக் கடன்களுக்குக் குறைந்த வட்டி, கடன் திரும்பச் செலுத்த மறுத்தால் வட்டிக் குறைப்பு, வட்டி கழிப்பு, கடனே தள்ளுபடி என்றெல்லாம் சலுகைகள்! சாதாரண மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி மது நுகர்வோராக இருந்தால் ஒட்டு மொத்த மக்கள் மீது தண்டனையா? இது அரசின் அனைத்து அடாவடி விலை உயர்வு, கட்டண உயர்வு நடவடிக்கைகளையும் நியாயப் படுத்திவிடுமா?

தி மு க எதிர்ப்பை மட்டும் வசதியாக வைத்துக் கொண்டு, முந்தைய ஆட்சியில் ஏன் விலை உயர்வு செய்யவில்லை என்று கேட்டு இப்போதைய உயர்வை நியாயப் படுத்தும் தினமணி சாதாரண மக்கள் தன்னெழுச்சியாக எதிர்ப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது..இடதுசாரிகள் எதிர்ப்புக்கு என்ன சால்ஜாப்பைத் தேடப் போகிறது?

இலவசங்களின் அரசியலை, அ தி மு க, தேர்தல் அறிக்கையில் முன்வைக்கும் போதும் சரி, இப்போது இந்தத் தலையங்கத்தில் அதை ஒட்டி விவாதித்து இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் பளுவைப் பற்றி பிரலாபிக்கும் போதும் சரி, வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் பரிவோடு எழுதுகிறது தினமணி.  கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான பணம், தாழ்த்தப்பட்ட / மலை சாதி மக்களுக்கான சிறப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து எடுக்கப் பட்டது என்ற விஷயங்கள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப் படுத்தியதை எல்லாம் மறந்து விட்டதா தினமணி?

தி மு க அரசின் நடவடிக்கைகளின் மீதும், தனி நபர்களின் மீதும் கட்டம், கட்டமாக, பக்கம் பக்கமாகக் கட்டுரை ஸைசுக்கு வசனம் எழுதி கேலிச் சித்திரங்கள் தீட்டிக் கொண்டிருந்த கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள், அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம் பிரச்சனையோ, இப்போதைய இந்த விலை உயர்வு-கட்டண உயர்வு விஷயங்களையோ கண்டித்தோ, விமர்சித்தோ தனது தூரிகையை எடுத்து மையில் தோய்க்கவே இல்லையே, நெடுநாள் விடுப்பா, தவிர்க்க வேண்டிய கடுப்பா?

மத்திய அரசு கடைப்பிடிக்கும் தவறான உலகமயக் கொள்கைகளால் ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை இந்த உயர்வுகள் இன்னும் எத்தனை மோசமாகத் தாக்கும் என்று ஒற்றை வரி கூட இல்லாத இந்தத் தலையங்கம் யார் ரசிப்புக்காக எழுதப்பட்டது?

யார் செய்தாலும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றி நடுநிலை நின்று பேசுவது என்பது தானே தினமணியின் அறிவிக்கப்பட்டிருக்கும் குறிக்கோள். மன்னவரே எதிர் நின்றாலும், புலி தின்ன வரேன் என்றாலும் மெய் சொல்லல் நல்லதப்பா தம்பி என்ற பாவேந்தன் குரல், பாரதி கொண்டாடியான ஆசிரியர் அறியாததா?

குசும்புக்கெல்லாம் குசும்பாக - அன்றாடம் தலையங்கத்தின் கீழே பொருத்தமான திருக்குறளைத் தேடி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் தினமணி ஆசிரியர், இந்தத் தலையங்கத்தின் கீழே, இடுக்கண் வருங்கால் நகுக என்ற திருக்குறளைத் தேடி எடுத்துப் போட்டிருப்பது கிண்டலுக்கா, சமாதானத்தை உற்பத்தி செய்வது (Manufacturing the consent) என்று அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி வருணிப்பாரே அந்த வேலையா?

- எஸ் வி வேணுகோபாலன்

Related Posts with Thumbnails

7 comments:

 1. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான பணம், தாழ்த்தப்பட்ட / மலை சாதி மக்களுக்கான சிறப்பு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து எடுக்கப் பட்டது "

  அருமை..

  அண்ணா நூலகம் கட்ட செலவான நிதி 200 கோடி எந்த நிதியில் இருந்து எடுக்கப்ப்பட்டது.. பரமாரிப்பு, இயக்க, பாதுகாப்புக்கு , ஆண்டொன்றுக்கு முப்பது கோடி தேவைப்படும். இந்த நிதி எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதை இடது சாரிகள் ஏன் பேசுவதில்லை?

  ReplyDelete
 2. வைத்தியநாதன் ஆசிரியரானதிலிருந்துதான் அந்த இதழ் இப்படி ஒரு கேவலமான ஜிஞ்சா,ஜிக்குஜா அடிக்கும் நிலையை அடைந்துள்ளது.அம்மா ஆட்சியை கிண்டலடித்தால் மதியோட கதி?மக்களை மாக்களாக இவர்கள் நினைத்துக்கொண்டு பத்திரிகை நடத்துகிறார்கள்.இதில் நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை என்ற வாசகம் வேறு முகப்பிலேயே. அதற்கு தகுதியில்லாத பத்திரிகை அது என்பதுதான் உண்மை.

  ReplyDelete
 3. ஓட்டு போடும் முன் அஞ்சு நிமிஷம் யோசிச்சிருந்தா, இந்த அஞ்சு வருஷ தொல்லை வந்திருக்காது... யாராவது இனிமேலாவது யோசிப்பீங்களா?

  ReplyDelete
 4. தலையங்கம் வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட அதே நியாயமான சந்தேகங்களை முன்வைத்திருக்கிறீர்கள் எஸ்.வி.வி.

  மிகவும் ஏழ்மையான ஒரு நகரக் குடிமகனுக்கு( தினமணி சொன்ன குடிமகன் அல்ல) மாதத்துக்குக் குறைந்தது ஆயிரம் ரூபாயைச் சுமையாய் ஏற்றியிருக்கிறது இந்த அரசு.

  சாராயத்திலிருந்து வரும் வருமானத்தை வைத்து இலவசங்களை வாரி இறைத்துவிட்டு எங்கிருந்து அடிப்படையான நிர்வாகச் செலவுகளுக்கு ஒதுக்குவது?

  கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டுப் பல துணிச்சலான முடிவுகளை எடுத்து முன்னேறி வரும் குஜராத் அரசு இந்த கழக ஆட்சிகளுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருப்பது இவர்களின் பார்வையில் என்றும் படாது.

  நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது தினமணி.

  ReplyDelete
 5. 'தினமணி'யில் கூடங்குளம் பற்றி வருவதெல்லாம் உங்கள் இருவருக்கும் தெரிவதில்லையா? பத்தாயிரம் பேர் ஒன்று திரண்டு வல்லாதிக்கப் போட்டியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவுடைமையை வலியுறுத்தும் உங்களைப் போன்றவர்கள் கூட, சார்ந்திருக்கிற கட்சிக்காக மனசாட்சியை விற்றுவிட்டு அமைதியாக இருப்பது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. 'நல்லோர் அமைதி நாட்டுக்குக் கேடு!'

  ReplyDelete
 6. தினமணி தலையங்கத்தை பார்த்தவுடன் எரிச்சலாகத்தான் இருந்தது.அநியாயமான பேருந்துக்கட்டணத்தை கண்டிக்க மனமில்லாத ஆசிரியர் ஜால்ஜாப்பு செய்கிறார்.இக்கட்டண உயர்வை வைத்துக்கொண்டு இனி டீ காபி உட்பட எல்லா விலைகளும் உயரப் போகிறதே அதையெல்லாம் கட்டுபடுத்துமா? அரசு அதையும் சரி என்றுதான் சொல்லும் தினமணி.முழுக்க முழுக்க ஆளுவோரோடு சாய்மானம் தேட முடிவெடுத்த பிறகு ஆசிரியர் பேனா அப்படித்தானே வளையும்,அண்ணா நூற்றாண்டு நூலக விஷயத்திலும் நேரடியாக தவறு என்று சொல்ல மனமில்லாமல் முந்தைய பணவிசயத்தைச் சொல்லி திசை திருப்பியவர்தானே.வாசகர்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.

  ReplyDelete
 7. தினமணி தலையங்கத்திற்கு சரியான சவுக்கடி....
  -பழ.சொக்கலிங்கம்

  ReplyDelete