Type Here to Get Search Results !

நீதிமன்றங்களை விமர்சிக்க நீங்கள் யார்?

mv jayarajan

நீங்கள் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் நோக்கி  ‘யுவர் ஆனர்’ என்பதைத் தாண்டி ஒரு வார்த்தை பேசிவிடக் கூடாது. அவர்கள் அப்படியொரு உயர்ந்த பீடங்களில் வீற்றிருக்கிறார்கள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக போற்றப்படுகிறார்கள். இந்த  ஞானமில்லாமல்  கேரளாவில் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.வி.ஜெயராஜன் சில வார்த்தைகளைப் பேசிவிட்டார்.

 

நடைபாதையோரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கூடாது என கேரளாவில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்து இருக்கிறது.  அதை விமர்சனம் செய்து,  ‘நீதிபதிகள் நடைமுறை வாழ்வைப் பற்றி அறியாதவர்கள்’ என ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.வி.ஜெயராஜன் 2010 ஜூனில் பேசியிருக்கிறார். மக்கள் புழங்கும் இடங்களில் கருத்துக்களைச் சொல்லத்தானே கூட்டங்கள் நடத்துவதன் நோக்கம் என்கிற அர்த்தத்தில் அவர் இதைச் சொல்லியிருக்க வேண்டும்.  ஆனால் வானம் இடிந்து விட்டது. பூமி பிளந்து விட்டது. நீதிபதிகள் நெற்றிக்கண்ணைத் திறந்து விட்டனர்.

 

எம்.வி.ஜெயராஜன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று போடப்பட்டது. வழக்கு விசாரணையிலும் அவர், “மக்களுக்கு விரோதமாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது அதை விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு” என்றே தன் நிலையில் உறுதியாக இருந்தார். இப்போது நீதிமன்றம் அவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யக்கூட அவருக்கு உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் சாசன நெறிகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் கட்சி, இந்தத் தீர்ப்பையே இப்போது குற்றம் சாட்டியிருக்கிறது. நவம்பர் 14ம் தேதி, கேரள உயர்நீதிமன்றத்தின் முன்பாகவே ஆரப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருக்கிறது.

 

இதற்கு முன்னர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் “நீதிமன்றங்களும் வர்க்கச் சார்புடையவை” என்று கூறிய கருத்துக்காக  அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு அப்போது நாடு முழுவதும் பேசப்பட்டது.

 

நீதிமன்றங்களில் ஊழல் நடப்பதில்லை. நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதில்லை.  நீதிபதிகள் நில அபகரிப்பு செய்வதில்லை. நீதிபதிகள் தவறான தீர்ப்புகள் வழங்குவதில்லை. நீதிபதிகள் பாரபட்சம் பார்ப்பதில்லை. அப்படியிருக்கும்போது, “நீதிபதிகள் நடைமுறை வாழ்வைப் பற்றி அறியாதவர்கள்” என்று தோழர். எம்.வி.ஜெயராஜன் சொல்லியிருப்பது குற்றம்தானே? தோழர். இ.எம்.எஸ் பேசியதும் குற்றம்தானே?

 

இதற்கு கொஞ்சங்கூட சம்பந்தமில்லாத செய்தி ஒன்று.  தான் அன்றைய தினம் டெல்லியில் தேசீய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதால், 22.10.2011 அன்று பெங்களூரில் தனி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சொல்லிவிட்டு, டெல்லிக்கும் போகாமல் பெங்களூரூக்கும் போகாமல் போயஸ் கார்டனிலேயே இருந்த ஜெயலலிதா மீது ‘நீதிமன்ற அவமதிப்பு’ குற்றச்சாட்டு ஏன் எழவில்லை? இப்படி யாருக்காவது கேள்வி எழலாம். அது உங்கள் சிந்தனையிலேயே இருக்கட்டும். வாயைத் திறந்து மட்டும் கேட்டு விடாதீர்கள்.

கருத்துரையிடுக

12 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. ஆகவே கணம் _____ (டேஷ்ஷார்) அவர்களே.. (மரியாதையாம்)

  அப்துல் கலாமுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும், உள்துறை அமைச்சருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணம் வாங்கிக்கொண்டு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியை எப்படி அழைப்பது.
  நீதிதேவன் என்றா அல்லது -- (டேஷ்) தேவன் என்றா? (மரியாதி மக்கா)

  பதிலளிநீக்கு
 2. கேள்விகணைகள் துளைத்தெடுக்கின்றன..!!

  பதிலளிநீக்கு
 3. எனது வலையில் இன்று:

  உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

  நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  பதிலளிநீக்கு
 4. //இதற்கு கொஞ்சங்கூட சம்பந்தமில்லாத செய்தி ஒன்று. தான் அன்றைய தினம் டெல்லியில் தேசீய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதால், 22.10.2011 அன்று பெங்களூரில் தனி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சொல்லிவிட்டு, டெல்லிக்கும் போகாமல் பெங்களூரூக்கும் போகாமல் போயஸ் கார்டனிலேயே இருந்த ஜெயலலிதா மீது ‘நீதிமன்ற அவமதிப்பு’ குற்றச்சாட்டு ஏன் எழவில்லை? இப்படி யாருக்காவது கேள்வி எழலாம். அது உங்கள் சிந்தனையிலேயே இருக்கட்டும். வாயைத் திறந்து மட்டும் கேட்டு விடாதீர்கள்//

  வர்க்கபாசத்தில் அது அவமதிப்பு இல்லை.

  பதிலளிநீக்கு
 5. நாங்கள் நேற்றுவரை பி.டி,தினகரனையும், சொமித்ரா சென்னையும் "நீதியரசரே" என்று தான் அழைத்து வந்தோம்.. என்ன செய்வது.. நீதி என்றால் என்னவென்று தெரியாத நிதியரசர் மன்னிக்கவும் நீதியரசர்கள் இருக்கும் போது... தோழர் ஜெயராஜன் கூறியது உண்மை என நிருபிக்கப்பட்டுவிட்டது.. ஆம்.. நீதிபதிகளுக்கு நடைமுறை வாழ்க்கை தெரியாது.. அவர்களின் வாழ்க்கை கிளப்புகளிலும், பார்களிலும் மூழ்கியுள்ளது..

  பதிலளிநீக்கு
 6. பகத் சிங் போல் நீதிமன்றங்களின் சுவர்கள் இடிந்து விழும் அளவுக்கு கேள்வி கேட்க்க முடியா விட்டாலும், பல இளைஞர் கள் கேள்விகளை கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்... முதலாளித்துவ ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் தூண்களான நீதிமன்றம் கேள்விக் கணைகளால் அவதிப் பட்டதால் தான் அனைத்து ஊழல் நாடகங்களும் வெளியில் வந்து புரட்சிக்கு தீ மூட்டி கொண்டிருக்கின்றன... வர்க்க புரட்சி கிளம்ப வெகு தூரம் இல்லை, நான் சாவதற்கு முன் கண்டு விடுவேன் என்ற களிப்பு மட்டும் நெஞ்சில் வைத்து கொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. மாதவ் ஜி அவார்களே! சொமித்ரசென் என் ராஜீனாமா செய்தார்? நம்ம ஊர் நாயினா! ஸ்டூல் முக்காலி ,ஏணி வாங்கியே லட்சக் கணக்கில மாட்டினாரே!லஞ்சம்னு சொல்லும் பொதே ஞாபகத்திற்கு வருவது பத்திரப்பதிவு அலுவலகம்,அர்.டி .ஓ ஆபீஸ், கோர்ட்தான்.கேசு நம்பர் வாங்கணும்னா காசு, கட்ட எடுக்கணும்னா காசு ! செத்தபயலுகள ரோட்ல விட்டு சாத்தணும் ! ஜெயராஜன் மட்டும் சொன்னா தண்டனை!ஊருக்கு ஆயிரம் பேரு கோர்ட் வாசல்ல போய் கத்தினா என்னசெய்வான்? அது நடக்கத்தான் பொகுது...காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 8. podukootdankal aarppatdandal eni mayanathil nadatha order poduvaarkal ,edu pannaiyarkalin neethi mantrame . seenivaasaraavin vaarisukal summa eruka mudiuma /// jananaayakathin kural valaiya nerippadu enpadu eduthanoe

  பதிலளிநீக்கு
 9. எல்லோரும் நீதிமன்றத்தை விமர்சிக்க முடியும் என்றால், அரசியல்வாதிகள் எச்சில் மூலம் சிவப்பு நிறம் நீதிமன்றம் வெள்ளை நிறமாக மாரி இருக்கும். போலீசை மக்களும் அரசியல்வாதிகளும் 99% ஊழல் ஆக போலீஸ் துறை மாற்றிவிட்டனர். நிதிமன்றம் ஒன்று தான் மீதி இருக்கிறது.
  ஒவொரு மாநில அரசும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசு வக்கீலாகவும் , நிதிபதிகளாகவும் பதவி கொடுத்து முப்பது சதவிதம் ஊழல் துறையாக மாற்றிவிட்டார்கள்

  மீதம் இருப்பவர்களையாவது பேனிக்காப்போம்.

  பதிலளிநீக்கு
 10. நீதி மன்றங்கள் மக்களின் நலனுக்காக இங்கே செய்படுவதாக தெரியவில்லை. மனுநீதி தர்ம மடங்களாக மாறிவருகின்றன! ஆமாம் இப்படி கருத்து சொன்னா என்னையும் சிறைக்குஅனுப்புவாங்களா?

  பதிலளிநீக்கு
 11. தோழர் எம்.வி.ஜெ.சொல்வது உண்மைதான். இந்த நீதிபதிகளுக்கு சாதாரண மக்களின் நடைமுறை வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதே போல் இவர்கள் ஒன்றும் புனிதர்களும் கிடையாது. இவர்கள் நீதிபதியாவதற்கு முன்னால் ஒரு சாதாரண வழக்கறிஞராக இருந்த காலங்களில் நிச்சயமாக ஒரு கள்ளச் சாராய வியாபாரிக்கு பணம் வாங்கிக்கொண்டு பினை வாங்கிக் கொடுத்திருக்கலாம், கொலைகாரனுக்கு வாதாடியிருக்கலாம், சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கலாம், எல்லாம் பணத்துக்காக, ஆனால் இவர்கள் என்னவோ திடீர்னு ஆகாயத்திலிருந்து குதித்து வந்த மாதிரி நாங்கள் கறைபடாதவர்கள் என்று சொல்வது எல்லாம் பம்மாத்து வேலைகள். நீதிமன்றம் அதைவிட்டா நீதிபதிகளின் குடியிருப்பு இதைத்தாண்டி எங்கேயும் போகமாட்டாங்க இவங்க...

  பதிலளிநீக்கு
 12. அன்பு நண்பர் குணா அவர்கள் இவ்வளவு வெகுளியாக இருக்கிறார். ஒரு முறையாவது அவருடைய நண்பர் யாராவது கோர்ட் படியேறினால், அவருடன் துணையாக சென்று அதன் பாடுகளை அறியட்டும். வக்கீல்கள் கூறும் நிலைபாடுகளையும் நடைமுறைகளையும் கேட்டால், வடிப்பதற்கு தன் கண்ணீர் தீர்ந்து கடன் கேட்பார்.
  நடைமுறை செயல்பாடுகள் குறித்து பலமுறை உச்சநீதிமன்ற மேநாள், இந்நாள் நீதிபதிகளே கண்ணீர் வடித்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவர்கள் மீது, கேரளாவின் அந்த நீதிபதி கேஸ் போட்டு உள்ளே தள்ளுவாரா.

  நீதிகள் நிதிகளின் போதையில் தள்ளாடும் நிலைதான் இப்போது உள்ளதாக பல முறை மேநாள் நீதிபதிகளே நொந்துகொண்டுள்ளனர்.
  வாழ்க ஜனநாயகம். கேள்வி கேட்பது ஒன்றுதான், உண்மையின் மீதான தூசியை / கலங்கத்தை போக்குவதற்கான வழி. கேள்வி உரிமை தடுக்க இந்தியா ஒன்றும் அரபு 'குடியரசு'(?) அல்ல.ஒரு வேளை 'டெபுடேஷன்' தலைமை மந்திரிகளால் மாற்றப்படலாம்.
  அப்போதும் நாம் ஹசாரே / ஐஸ் ஸின் பிரசவம் பற்றிய செய்திகளை சூடாக விவாதம் செய்து கொண்டிருப்போம்.

  பதிலளிநீக்கு