Type Here to Get Search Results !

நடுவீதியில் நிற்கவைத்து மன்மோகன்சிங்கை விசாரிப்போம்!

manmohan_singh_733795

 

கொஞ்சங்கூட  இரக்கமற்ற  இப்படியொரு பிரதமரை இதுவரை  தேசம் கண்டிருக்காது.

 

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒருபுறம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அடித்தட்டு மக்களுக்குத் தங்கள்  அன்றாட வாழ்க்கையே சுமையாக, மூச்சுத் திணறுகிறார்கள்.  எரிகிற தீயில் எண்ணெயாக மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு இருக்கிறது. கடும் எதிர்ப்புகள் பலதரப்பில்லும் இருந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் மன்மோகனோ, “எரிபொருட்களுக்கு இனியும் மானியம் கொடுக்க முடியாது ” என்று முகத்தில் அறைகிற மாதிரி பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இருந்துகொண்டு இந்திய மக்களுக்கு பதில் சொல்கிறார். அதோடு நிறுத்தவில்லை. இனி டீசல், கேஸ், மண்ணென்ணெய் போன்ற எரிபொருட்களின் விலைகளும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்காது, அவற்றையும் கைவிடத் திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கிறார்.

 

சென்ற ஜூன் 2010ல் பெட்ரோல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, சந்தைக்கு  திறந்துவிடப்பட்டது. அதன் பின்புதான் 13 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 15 மாத காலத்தில் 23 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200/- ஆக உயர்ந்துவிடும் என்கிறார்கள். கேட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை உயர்வு என்றும், ஆயில் கம்பெனிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் எனவும் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆயில் கம்பெனிகளின் நஷ்டத்தைச் சரிகட்ட விலைகள் அவ்வப்போது உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.   மக்களின் பணத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முதலாளிகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான்  ‘சந்தைக்குத் திறந்துவிடுவதன்’ சூத்திரம்.  மக்களிடமிருந்து ஆயில் கம்பெனிகள்    தங்கள் ‘நட்டத்தை சரிகட்ட ’ இப்படிக் கொள்ளை அடிக்கலாமாம். ஆனால் எதிர்காலமே  இடிந்துபோயிருக்கும் மக்களுக்கு அரசு மானியம் கொடுக்கக் கூடாதாம்.  இதுதான் ‘பொருளாதார சீர்திருத்தங்களின்’ சூட்சுமம்.  ஆனால்  இந்த ஆயில் கம்பெனிகள் ஒவ்வொரு வருடமும் லாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.

 

மன்மோகன்சிங் திட்டமிட்டபடி டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை சந்தைக்கே விட்டால் என்னவாகும் என்பதை கற்பனை செய்யவே பயங்கரமானதாய் இருக்கிறது. அரசின் இந்த முடிவை நியாயப்படுத்திப் பேசும்போது, மன்மோகன்சிங் கொட்டிய வார்த்தைகள் கொழுப்பெடுத்தவை. “நமது வாய்ப்புகளுக்கு மேல் வாழ்வதற்கு ஆசைப்படக் கூடாது. பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை.” என்று சொல்ல எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக பறித்துவிட்டு, அவர்களை ஓட்டாண்டிகளாக்கிவிட்டு, ‘இனி நீங்கள் செத்துத் தொலையுங்கள்” என்றுதானே அவர் சொல்கிறார்?

 

சாமானிய மக்களுக்கு  அவர்கள் உழைப்பதற்கான குறைந்தபட்ச ஊதியமே கிடைக்காதபோது, பணம் எப்படி அவர்களுக்கு மரத்தில் காய்க்கும்.  உடலும் உள்ளமும்தான் காய்த்துப் போகிறது. ஆனால் முதலாளிகளுக்கு இந்த தேசத்தின் தூண், துரும்பு அனைத்திலும் பணம்  காய்த்துக்கொண்டே  இருக்கிறது. அப்படிக் காய்த்தவைதான்  சுவீஸ் வங்கிகளில் கோடி கோடியாய் கொட்டி வைக்கப்படுகிறது. மேலும் மேலும் என வெறிகொண்டு  காடு, மலை, கடல் என எல்லாவற்றையும் சுருட்டப்பார்க்கிறது. எம். பிக்களை விலைக்கு வாங்க முடிகிறது. ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் மாடிகளோடு நூறு கோடியில், இருநூறு கோடியில்  ஆடம்பர பங்களாக்கள் கட்டப்படுகின்றன. சுரண்டியேப் பெருத்த அவர்களுக்கு சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலும்  துடிப்பவைதான் மன்மோகன் வகையறாக்களின் சதையும் இரத்தமும்.

 

நேரடியாக மக்களிடமிருந்து வராமல் உலகவங்கியிலிருந்து புறவாசல் வழியாக பிரதமராகி உட்கார்ந்துகொண்டு இப்படியான வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார் மன்மோகன்சிங். சந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அல்லும் பகலும் யோசிப்பவருக்கு, அதற்காகவே உயிர் வாழ்பவருக்கு  இந்த தேசம் சுதந்திரமாக இருக்க வேண்டும், இந்த தேசத்தின் அனைத்து மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?

 

இந்த ஏகாதிபத்திய எடுபிடி நடத்தும் ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்த்து இதோ இன்று நவமபர் 8ம் தேதி மத்தியில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் வீதிக்கு வந்து சிறை புகும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றன. வாழ்த்துவோம்.  சேர்ந்து நிற்போம். மன்மோகன்சிங்கின் ஆட்சி மீதான பொது விசாரணையின் ஆரம்பம் இது. நடுவீதியில் நிற்க வைத்து  மன்மோகன் வகையறாக்களுக்கு ஒருநாள்  தீர்ப்பெழுதுவார்கள் மக்கள். அதுவரை லோக்பால் மசோதாவில் பிரதமரை விசாரிக்கலாமா, வேண்டாமா என அவர்கள் பேசிக்கொண்டு இருக்கட்டும்.

கருத்துரையிடுக

11 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக பறித்துவிட்டு, அவர்களை ஓட்டாண்டிகளாக்கிவிட்டு, ‘இனி நீங்கள் செத்துத் தொலையுங்கள்” மன்மோகன் மட்டுமல்ல,சுதந்திர இந்தியாவை ஆண்ட ஆளும் வர்க்கங்களின் செயலே அதுவாகத்தான் இருக்கிறது! மக்களை சகடிததால் தான் 700 பேர்களின் கள்ளபணமும், வெளிநாட்டில் பதுக்கமுடிந்தது?

  பதிலளிநீக்கு
 2. மன்மோகன் மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு பொம்மைப்பிரதமர். வீணாகிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்களை ஏழைகளுக்கு வழங்கக்கூடாது என்பதில் எவ்வளவு வேகம் காட்டினாரோ அதை விட நூறு மடங்கு கோபம் இருக்கிறது பணம் மரத்திலா காய்க்கிறது என்று சொல்லுவதில். மக்களிடம் வாக்கு வாங்காமலேயே ஆளும் சூத்திரம் கற்றவர். பொருளாதார மேதை(!)

  பதிலளிநீக்கு
 3. எதை கேட்டாலும் தெரியாது,
  எதற்கெடுத்தாலும் முடியாது...
  இது தான் மன்மோகன்...
  முடியும் என்று நினைப்பவர்களால் தான் சரித்திரம் படைக்க முடியும் என்கிறார் அப்துல் கலாம்...
  இங்கே சொல்லாதீங்க,
  அங்கே சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 4. edu manmohanin kodoora thakkuthal matdumalla ,, con i katchien muthalalikal visuvasam . DMK MAMTHA DRAMA vai tholurikanum . ethodu kakka va kathdum BJP in kadantha kaala aatchien petroliya kolkaiyai ampala paduthanum . oru mukkiya porulin meedu vithikkapatda mummunai variya kuraika thuppillaathavarkal .

  பதிலளிநீக்கு
 5. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியாவில் 200 முதல் 300 சதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா ? அப்படி அது உண்மையாயின் அந்தப் பணம் மைய அரசுக்கான வருமானம் தானே ? தகவலைச் சரி பார்த்த பின் அச்சேற்றவும்.

  பதிலளிநீக்கு
 6. அது டம்மி பீஸ்...அது ஒண்ணுக்கும் லாயக்கில்லைன்னு உங்களுக்கு இன்னும் புரியலையா...?

  பதிலளிநீக்கு
 7. வீதியில் இறங்காமல் விடியாது எதுவும்' என தோழர் ச.தமிழ்ச்செல்வன் சொல்வது போல மக்கள் இறங்கி போராடாமல் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது. அப்படியே மக்கள் இறங்கி போராடினாலும் அரசு அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதிஉதவி வருகிறது எனச் சொல்லி விடுவார்கள். எனவே, என்ன செய்வது? இயற்கையை காக்க இனி முடிந்தளவு நடந்து பயணிப்போம், சைக்கிளில் பயணிப்போம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. கோடி கைகள் உயராமல் கோரிக்கைகள் தீராது. நான் 80களில் வீதியில் இட்ட கோஷம், இன்று இன்னும் வீரியமாய் எழட்டும். அமெரிக்காவுக்கு சென்று வேலைப்பார்வர்களுக்கு மத்தியில் இந்தியாவில் இருந்தே அமெரிக்காவுக்காக அரசாங்கம் நடத்தும் அடிமை உத்யோகம் இங்கு தேவைதானா. இன்னும் லோக்பால் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் நமக்கு எல்லோருக்கும் ஒரு நாள் விரைவில் பால் தான். 24 மணிநேரமும் எரியும் விஷயங்களையே விவாத்தித்து கொண்டிருக்கும் தாப்பர்களுக்கு இந்த விஷயம் ஏன் புலப்படவில்லை. சூத்திர தாரிகள்.

  பதிலளிநீக்கு