என்ன சொல்ல வருகிறது தினமணி - 2

dinmani change

சனிக்கிழமை (நவம்பர் 19) அன்றைய தலையங்கத்தின் தொடர்ச்சியாக, தீதும் நன்றும் பிறர் தர வாரா II  என்ற தலைப்பில், திங்கள் கிழமை அதே விஷயத்தின் மீது அடுத்த தலையங்கம் எழுதி இருக்கிறது. தினமணி. முதல் தலையங்கத்தில், குடிக்கிற தமிழன் (!), பாலுக்கும், பஸ்சுக்கும் கூடுதல் காசு செலவழிக்கட்டுமே என்று எழுதிய கை, இப்போது அதே தமிழன் மீது கரிசனம் பொங்கி வழிய (மதுவில் நுரை பொங்குமே அதே போல!), இப்படியா அநியாயத்திற்கு ராவோடு ராவா கட்டணங்களை ஏற்றுவது, திடு திப்பென்று உயர்த்தியதால் மக்கள் எப்படி திக்கு திசை தெரியாமல் திணறிப் போகிறார்கள்...என்று அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போட்டு எழுதி இருக்கிறது.

 

போக்குவரத்து, மின் வாரியம் எல்லாவற்றிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் நிர்வாகச் சீர்கேட்டை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இத்தனை நஷ்டத்திற்கு வந்திருக்காதாம். (அதில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அடக்கம் என்பதைக் குறிப்பிட்டுவிடாத அடக்கம் தினமணியிடம்). கட்டண உயர்வு, வரி உயர்வு என்பதெல்லாம் எந்த அரசாலும் தடுக்க முடியாத விஷயம் என்றாலும் அதைக் கடைசி கட்ட வேலையாகத் தான் செய்ய வேண்டுமாம். அதுவும் தவிர இப்படி கட்டணங்களை உயர்த்தி எல்லாம் பிரச்சனைகளைச் சரி செய்துவிடவும் முடியாதாம். இது ஏனுங்க சனிக்கிழமை கண்ணுக்கே பிடிபடல?

 

அப்புறம், சென்னை மாநகரில் மூன்று கோடி பேர் பேருந்துகளில் பயணம் செய்கிறார்களாம், மாநிலத்தில் அரசு பேருந்துகளை நம்பி இருப்போர் கூலி விவசாயிகள், கணக்கர்கள் என மாதம் ஐயாயிரம் ஊதியம் தாண்டாத அப்பாவிகள் தான் அதிகமாம், அவர்களிடம் முன் அறிவிப்பு செய்யாமல், எந்தத் தேதியில் இருந்து கட்டண உயர்வு என்று சொல்லாமால் கொள்ளாமல் திடீரென்று உயர்த்திய கட்டணம் கேட்டதால் அவர்கள் எத்தனை அவதிக்கு ஆளாகி, எவ்வளவு வசை பாடி, எத்தனை சாபமிட்டு பேருந்திலிருந்து பாதி வழியில் இறங்கிப் போனார்கள், பாவம்  என்று உச்சு கொட்டுகிறது தினமணி.

 

ஆனாலும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், இதற்கெல்லாம் முதல்வர் ஜெயலலிதா காரணமில்லையாம், அவருக்குத் தவறான ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் தானாம் -  பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று முதல்வருக்கு எடுத்துச் சொல்லத் தவறி விட்டார்களாம். இப்படியான ஆட்களைப் பக்கத்தில் வைத்திருப்பது எழுபது கோடி பகைவர்களை வைத்திருப்பதற்குச் சமம் என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறாராம். ஐயோ பாவம், ஒன்றும் அறியாத, முறையான தகவல்கள் சொல்லப்படாத முதல்வர் இத்தனை பழி பாவத்திற்கும், மக்களின் சாபத்திற்கும் உள்ளாக வேண்டி வந்துவிட்டதாம்.

 

ஆனாலும், இப்போது கட்டண உயர்வுக்கும், விலை உயர்வுக்கும் முதல்வர் அளித்திருக்கும் விளக்கங்களை வரிக்கு வரி ஏற்றுக் கொள்கிறதாம் தினமணி. அப்படிப் போடு.

 

பொதுத் துறை நஷ்டப் படக் கூடாது என்னும் கரிசனத்தால் பொது மக்களை போட்டுத் தள்ளுகிறேன், பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற அரசின் திசை மாற்று வேலைக்கு தாளம் போடுகிறது தினமணி. அவ்வளவு கரிசனம் பொதுத் துறை மீது கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், மக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளை அரசின் வசம் எடுத்துக் கொள்ள வேண்டியது தானே....தேவையற்ற போட்டியில் இறங்கி, தரமற்ற ரசாயனக் கலவை சேர்த்து அதிக லாபம் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் தனியார் பால் நிறுவனங்களை தன் வசம் அரசு எடுத்துக் கொள்ளும் என்று சொல்ல வேண்டியது தானே, தமது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்தில்-மின்வாரியத்தில் ஊழலுக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் காரணமாகவும் அல்லது துணை போயிருக்கும்  சொந்தக் கட்சிக்காரர்களும், அரசியல் செல்வாக்காளர்களும் செம்மையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்று பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டியது தானே.

 

தினமணி இந்தத் திசையில் எல்லாம் யோசிக்காதுதான், நமக்கும் தெரியும். ஆனால், தமிழக மக்கள் அத்தனை பேருக்கும் தான் ஏக பிரதிநிதியாகத் தன்னைத் தானே வரித்துக் கொண்டு மேற்படித் தலையங்கத்தின் கடைசி வரியில் போட்டிருக்கிறதே ஒரு போடு, அதைக் கேளுங்கள்: முதல்வருக்காக மக்கள் எந்தச் சுமையையும் தாங்குவார்களாம், நம்பிப் பாரத்தை ஏற்றி வைக்கலாமாம், ஆனால் பாறாங்கல்லை ஏற்றி வைத்தால் எப்படி என்று பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கிறார் ஆசிரியர்.

 

ராவோடு ராவாக ஏற்றப்பட்ட கட்டணங்களின் தாக்குதலில் மக்கள் படும் அவதியை மூன்று நாள் பொறுத்தாவது புரிந்த மாதிரி எழுதியிருக்கும் இந்த தலையங்கத்தில், கட்டண உயர்வையும், பால் விலை உயர்வையும் கேட்டு அடுத்த நொடியே ஆனந்தக் கூத்தாடும் பலதரப்பு முதலாளிகள் சங்கங்கள், ஆளும் கட்சியின் ஜால்ரா அமைப்புகள் பற்றியும், அதன் அரசியல் குறித்தும் இப்போதும் வாய் திறக்காதிருப்பதேன் ?

 

முதல் நாள் தமிழர்களைக் குடிகாரர்கள் என்று சாடிய தினமணி இன்று தான் 'தெளிந்து' கொண்டு உயர்த்திய கட்டணத்தின் அவஸ்தைகளை மக்கள் படுவதைத் திடீரென்று புரிந்து கொண்டது மாதிரி காட்டிக் கொள்வது ஒரு புறம், ஆனாலும் ஆட்சியில் இருப்போரைத் தாங்கிப் பிடிப்பது இன்னொரு புறம்.  பாவங்கள், சாபங்கள், அவஸ்தைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் வலுவான எதிர்ப்பாக உருப்பெறும் என்று தெரிந்ததால் - மக்கள் எதிர்ப்பின் சக்தியைப் புரிந்ததால் ஏற்படும் நடுக்கம் அன்றி வேறென்ன...அதனால் தான், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சனிக்கிழமை சொல்லும்போது, இந்த நிலைமைகளுக்கெல்லாம் மக்களே காரணம் என்று பொருள் படுத்திய தினமணி, அந்த வாக்கியம் ஆட்சியாளர்க்கும் பொருந்தும் என்று இரண்டாவது தலையங்கத்தில் எழுதுவது அதைத் தான் பொருளாக்குகிறது.

 

வழக்கம் போல் இதற்கும் அடியில் பொருத்தமான திருக்குறள் போடவேண்டுமே, விடுவார்களா? மிகவும் படித்திருந்தாலும் உலக இயற்கை நியதி அறிந்து அரசன் செயல்படவேண்டும் என்று வள்ளுவர் சொல்லி இருக்கும் திருக்குறளை ஓசைப் படாமல் கீழே போட்டுக் கதையை முடித்து விட்டது தினமணி. அது தினமணிக்கும் பொருந்தாதா!

- எஸ்.வி.வேணுகோபாலன்

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் உலகு
    -திருக்குறள்.
    இந்த உலகத்தின் பெருமை என்னவென்றால் நேற்று இருந்தவன் இன்றில்லை என்பதுதான். எனவே, நாம் வாழும் வாழ்க்கையை எல்லோருக்கும் பிடித்தமானதாக ஆக்க முடியாவிட்டாலும் இயற்கைக்கு எதிராக ஆடாமல் இருந்தாலே போதும். எளிய மக்களுக்கு எதிராக இருப்பதும் இயற்கைக்கு எதிராக இருப்பதும் ஒன்றுதான். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!