Type Here to Get Search Results !

பா.ஜ.கவுக்கு நெஞ்சுவலி!

KPN photo

எதிர்பார்த்தது போல எடியூரப்பாவுக்கு  நெஞ்சுவலி வந்துவிட்டது.  ஆனால் அதைப் பற்றிய செய்தி அல்ல இது

.

ஊழலை எதிர்த்து பா.ஜ.க பிதாமகர் அத்வானி ஊரெல்லாம்  ரதயாத்திரை செய்துகொண்டு இருக்கும்போது இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது. தென்னிந்தியாவில் இந்துத்துவாவின் முதல் முதலமச்சர் என பீற்றிக்கொண்டதையெல்லாம் இனிச் சொல்லி மார்தட்டிக் கொள்ள முடியாது. அவர்களது எடியூரப்பா  நேற்று நிலமோசடி வழக்கில் சிக்கி  ஊழல் குற்றச்சாட்டில்  சிறையலடைக்கப்பட்டு இருக்கிறார்.   “:பாரத்  மாதா கீ ஜெய்!” பாரத  மாதாவின்  நிலம் தானே அவர் மோசடி செய்ததும்.

 

“அத்வானியின் பிரச்சாரத்தை சீர்குலைக்க காங்கிரஸ் செய்யும் சதி” என ஒப்புக்கு சில குரல்கள் கேட்கின்றன. கடந்த ஒரு வருடமாக  அம்பலப்பட்டு , நாறிப் போன விவகாரம் இது. சுஷ்மா சுவராஜிலிருந்து பல தலைவர்கள் வந்து சமாதானம் செய்து, இந்த ஊழலை மூடி மறைக்க மாறி மாறி  செய்த ஜனநாயக அசிங்கங்கள் யாவையும்  மக்கள் விலாவாரியாக பார்த்து இருக்கின்றனர்.   திடுக்கிடும்படியாக சொல்ல எந்தச் செய்தியும் கைவசம் இல்லையென்று அரசியலில் பழுத்த பழமான அத்வானிக்கு நன்றாகத் தெரியும்.

 

ஏற்கனவே  தங்கள் கட்சியில் ஊழல் செய்தவர்களின் லிஸ்ட்டையெல்லாம்,  இந்த யாத்திரைப் புழுதியில் மறைத்துவிடலாம் என கங்கணம் கட்டியவர் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் எடியூரப்பா. காங்கிரஸின் ஊழலையெல்லாம் பட்டியலிட்டு, தாங்கள் உத்தமர்கள் என காட்டிக்கொள்ள முயன்ற அத்வானியின்  தகிடுதித்தம் இனி பலிக்காது.  பிரதமர் பதவிக்காக அவர் நடத்திய  அசுவமேதயாகத்தில் குதிரையின் கால் ஒடிந்துவிட்டது.

 

காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் பொருளாதாரக் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒருநாள் செலவுக்கு 32 ருபாய்  வைத்திருந்தால், அவர் வறுமைக்கோட்டைத் தாண்டி விட்டார் என அளவுகோலிட்ட அலுவாலியாதான்  காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும்  கைகாட்டி. அந்த  ஏகாதிபத்திய ஏஜண்டை,  முதலாளிகளின் உற்ற நண்பனை  இரண்டு கட்சிகளுமே  பகைத்துக்கொள்ள மாட்டார்கள்.  இதுதான் முதாளித்துவ அமைப்பின் மையப்புள்ளி. இந்திய ஜனநாயகத்தின் ஊற்றுக்கண்.

 

‘காங்கிரஸ் ரொம்பவே அம்பலப்பட்டுவிட்டது. அதனை  இப்போதைக்கு காப்பாற்ற முடியாது” என முடிவுக்கு வந்துதான்  ‘ஊழல்’ என்னும் அஜண்டாவை இந்திய முதலாளித்துவம் தயார் செய்தது. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் சர்வரோக நிவாரணி என அன்னா ஹசாரேக்கள் மூலம் பிரச்சாரம் செய்தது.  அதற்கான விளம்பரம்  வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது ஊடகங்கள் மூலம். மேலும் வரும் ஐந்தாண்டிற்கு தங்கள் கதையை அவர்கள் வளமாக ஓட்ட வேண்டும்.

 

காங்கிரஸ் இல்லையென்றால், இந்திய முதலாளிகள்  ஆட்சி அதிகாரத்துக்கான மாற்றாக தங்களையே முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின்  ஆசை.. அதற்காக சகல குட்டிக்கரணங்களையும் அடித்து பார்க்கிறார்கள். அத்வானியின் ரத யாத்திரை, மோடியின் உண்ணாவிரதம் எல்லாம் அந்த வேண்டுதலின் பொருட்டுத்தான்.  இவை யாவுக்கும் சேர்த்துத்தான் வேட்டு வைத்திருக்கிறார் எடியூரப்பா இப்போது.

 

பா.ஜ.கவுக்கு வந்திருக்கும் நெஞ்சுவலியைப் பற்றிய செய்தியே இது.

கருத்துரையிடுக

6 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. ரதம் புறப்பட்ட இடத்துலெயே ‘கவர்’ கொடுத்தது அம்பலமாகிறிச்சு. கரகாட்டக்காரன் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது. ஆனா பத்திரிக்கைக் காரங்கள பாராட்டனும். போட்டு உடைச்சாங்கல்லா.
  இவங்க ஊழலை ஒழிப்பாங்கன்னு நம்புனா மண்ணு தான் விழும்.

  பதிலளிநீக்கு
 2. //முதலாளிகளின் உற்ற நண்பனை இரண்டு கட்சிகளுமே பகைத்துக்கொள்ள மாட்டார்கள். இதுதான் முதாளித்துவ அமைப்பின் மையப்புள்ளி. இந்திய ஜனநாயகத்தின் ஊற்றுக்கண்//. ஜனநாயகம் என்ற பெயரில் இன்னும் எதையெல்லாம் இந்திய மக்கள் (வாக்காளர்கள் மற்றும் குழந்தைகள்) ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பது தெரியவில்லை. டுனிஷியா, ஜோர்டான், எகிப்து,சிரியா போன்ற நாடுகள் மன்னர்களிடமிருந்து ஜன நாகம் கேட்டுககொண்டிருக்கிறார்கள். நாம் ஜனநாயக நாட்டில் மன்னர்களுக்கான மானியம் ஒழித்தோம் எனறு சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. இவங்க ஊழலை ஒழிப்பாங்கன்னு நம்புனா மண்ணு தான் விழும்...

  உண்மை இதுதான்.

  பதிலளிநீக்கு
 4. இவங்க ஊழலை மட்டுமல்ல வறுமையையும் கூடத்தான் ஒழிப்பேன் என கூறிவருகின்றனர். அதற்காக வெல்லாம் இத நாம ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

  சீய்.... துப்புகெட்டவங்களா...

  இதுங்களுக்கெல்லாம் வெள்ளையுஞ் சொல்லையுமா ஜிப்பா வேற.

  பதிலளிநீக்கு
 5. என்னய்க்கு இவங்க சொல்றதெல்லாம் நடக்கும். ஊழலைமட்டுமல்ல வறுமையை கூட ஒழிப்பேன் என பண்டாரங்கூட்ட தலைவனும், கதர் கட்சி தலைவியும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நாமும் அதை அவை விவாதமாக எடுத்துக் கொள்வோம். தேரை இழுத்து தெருவில் விடாத வரை இது நடந்துக் கொண்டே இருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. ஊழலுக்கு உதரணமாக காங்கிரஸ் கட்சியும் பிஜ பி கட்சியும் இருக்கிறது !
  ஆனால் இவர்களை தவிர வேறு ஊழல் கரை படியாத கட்சி ஏன் ஆட்சிக்கு வரமுடியவில்லை ???

  பதிலளிநீக்கு