கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இங்கு ஒருத்தர் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. பைக்கில் அவசரமாகச் சென்று கொண்டு இருக்கும்போது நேர் எதிரே மறித்தபடி வந்து சிரிப்பார். “என்ன சார் ஆபிஸுக்கா” அல்லது “எங்க பஜாருக்கா” என்று அக்கறை மிகுந்த ஞானத்தோடு கேட்பார். வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கு சிரித்தபடி வேகம் குறைத்து நின்றேயாக வேண்டும். அல்லது அவர் மீது வண்டியை ஏற்றியாக வேண்டும்.
“அப்புறம் சார்” என்று மேலும் கீழுமாக பார்ப்பார். நானும் விழிப்பேன். “சார் ஓட்டு நமக்குத்தான்” என்று அருகில் இருக்கும் இரண்டு மூன்று பேரிடம் சொல்லிக்கொள்வார். “அட அசடே, வழியை விடேன்” என்று சொல்ல முடியாமல் நானும் சிரிப்பேன். பொல்லாத நாகரீகம்! ரொம்ப என்னைத் தெரிந்த மாதிரி, “சார் கம்யூனிஸ்ட் கட்சி தெரியும்ல” என்றும் சொல்லி அவரே சிரித்துக்கொள்வார். மற்றவர்களும் ‘அப்படியா’ என்பது போல பார்ப்பார்கள். எந்த அளவும் மாறாமல் அதே பாவனைகள். நான் சிரிக்க மாட்டேன். முகபாவம் பிடிபட்டுவிடும் போல. “சார் ரொம்ப பிஸியான ஆள். தொந்தரவு செய்யக் கூடாது” என்று சொல்லிக்கொள்வார். நான் அதற்கும் சிரிக்க மாட்டேன். திரும்பவும் சிரித்துக்கொள்வார் அவராகவே. நிதானமாக என்னை உற்றுப் பார்த்து “சார், நம்ம சின்னம் தெரியும்ல?” என்று ஒரு கேள்வியை கேட்பார். அந்த கருமாந்திரம் நினைவுக்கும் வந்து தொலையாது. “தெரியும்” என்று சொல்லி நழுவப் பார்ப்பேன். பைக்கில் கையை வைத்துக்கொண்டு “பாத்தீங்களா, மறந்துட்டீங்க” என்பார். பேண்ட்டின் கால்ச்சட்டைக்குள் கையை விட்டு பிளாஸ்டிக்கில் செய்த ஒரு சாவியைத் தந்து “ இனும மறக்கக்கூடாது” என்பார். சரியென்ற பிறகே வழிவிடுவார்.
இது போதாது என்று வீட்டுக்கும் தினந்தோறும் சாயங்காலம் வந்துவிடுவார். “சார் மேலே நீங்க விரும்புற எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்க. நா அதுக்கு வரல்ல. கீழ வார்டுக்கு மட்டும் எனக்குப் போட்டுருங்க” என்பார். சிரிப்பேன். “என்ன சார் சிரிக்கிறீங்க. நான் மாஸ்டர் டிகிரி படிச்சிருக்கேன். கை நிறைய சம்பாதிக்கேன். எனக்கு இது தேவையில்ல. ஆனாலும் நிக்கிறேன். எதாவது நம்ம வார்டு மக்களுக்குச் செய்யணும்னு பாக்குறேன். இங்க சாக்கடை வசதியில்ல. இந்தப் பகுதிக்கு விளையாட்டரங்கம் இல்ல. ஒரு ருபாய்க்கு ஒரு குடம் மினரல் வாட்டர் ஏற்பாடு செய்ய முடியல. இப்படி நிறைய இருக்கு. எவனுக்கும் துப்பில்ல. அதுக்குத்தான் நாந் துணிஞ்சிட்டேன். சுயேச்சையாய் நின்னு நம்மால முடிஞ்சத செய்வோம்னு நிக்கிறேன். அரசியல்வாதிங்கள நம்பி ஏமாந்தது போதும். எனக்கு ஒட்டுப் போடுங்க” என்று அதே வசனங்களை முன்னே பின்னே மாறாமல் சொல்வார். தாங்கொண்ணா சிரிப்பும், எரிச்சலும் வரும். சரி, சரியென்று தலையாட்டி அனுப்பி வைப்பேன்.
நேற்று அந்த பார்ட்டி, புதிய உத்தியொன்றை கண்டுபிடித்துவிட்டார். சுவரில்தானே சின்னங்களை வரையக் கூடாது, போஸ்டர் ஓட்டக் கூடாது எனத் தடையிருக்கிறது என்பதை யோசித்து தனது மாஸ்டர் டிகிரி அறிவால் ஒரு மாஸ்டர் பிளான் தயாரித்துவிட்டார். ஐந்தாறு சின்னப் பையன்களை பிடித்து அவர்களுக்கு காசு கொடுத்து, இந்தப் பகுதியில் இருக்கும் மரத்தின் இலை, கிளைகளிலெல்லாம் சாவி சின்னப் போஸ்டர்களைக் குத்த வைத்துவிட்டார். அந்தப் புதுமையில் அவரே புளகாங்கிதம் அடைந்து, கிட்டத்தட்ட ஜெயித்தே விட்ட மாதிரி ரவுண்ட் வந்தார். வெறும் இடியும், மின்னலாய் கலையும் வானம் நேற்று உண்மையிலேயே பொங்கி எழுந்துவிட்டது. அடித்த மழையில் எல்லாப் போஸ்டர்களும் தெரு வழியே ஓடிக்கொண்டு இருந்தன. பார்த்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். ‘மழையைப் போற்றுதூஉம், மழையைப் போற்றுதூஉம்!’
இன்று காலையில் அவரைப் பார்த்தேன். வழக்கம் போல் வழியை மறித்துக் கொண்டார். கடுப்பேற்ற வேண்டும் போலிருந்தது. “என்ன சார் ஒங்க போஸ்டரை எல்லாம் நேத்து மழையடிச்சுப் போயிட்டோ?’ எனக் கேட்டேன். “ஆமா சார். அப்படியாவது மழை பெஞ்சுதே” என சிரித்தார். “நம்மால எதாவது நல்லது நடந்தா சரிதான்” என்று சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து, “அப்புறம் சார்...” என மேலும் கீழும் பார்த்தார்.


மாது அந்த இளைஞரின் விடாமுயற்சியை பார்த்தீங்களா. எப்படியாவது ஒரு ஓட்டாவது வாங்கிடணும்னு உங்கள சுற்றி சுற்றி வந்தார், பாவம் ஏமாத்திடலயே?
ReplyDeleteஎல்லா ஊரிலும் லெக்சன் வந்தால் இப்படித் தானே பாடாய்ப்படுத்துறாங்கள்...
ReplyDeleteநல்ல நகைச்சுவை.சாவியிடம் பூட்டப்பட்டு மாட்டியுள்ளீர்
ReplyDeleteநல்லா தான் இருக்கு வாழ்க்கை, இங்க எங்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க என்று சொல்லி ஓட்டு கேக்கிறார்கள்... எவ்வளவு உள்குத்து பிரச்சாரம் பாத்தீங்களா
ReplyDeleteஜனநாயக முறையில் கலந்துக்கொள்ள ஒருவர் தேர்தலில் நிற்க தடையில்லையே? எதாவது கட்சியில் சேர்ந்து தான் ஆகணுமா? பகடி என்பதால் ஓகே.
ReplyDeleteநகைச்சுவைதான் என்றாலும் அவரின் விடாமுயற்சியும் சாதூரியமான பேச்சும் பாராட்டுக்குறியது.
ReplyDeleteதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
மாது!
ReplyDeleteஅவரவர் பிரச்சனை அவரவருக்கு.பழகிய நாட்களில் இது வரையில் ஒரு சாயாகூட வாங்கிக் குடுக்காதவன் கூட வெள்ளை வேட்டி சடடையோடு சிரிச்சு ஒட்டு கேட்குறான். என்னத்தை சொல்ல...
நல்ல பதிவு.
ReplyDeleteஒரு வழியாக தொந்தரவுகள் முடிந்து விட்டது. இனிமேல் தோற்று விட்டால் நம்மைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொள்வார்கள்.
நன்றி.
மேலே உங்க கட்சிக்கே போடுங்க, கீழ மட்டும் எனக்கே போடுங்க - இந்த ஒரு வாரத்தில் மிகவும் புளித்துப் போன வாசகம் இது. தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வெளியே சி.பி.எம் வேட்பாளரோடு அமர்ந்திருந்ததைப் பார்த்து விட்டும் " சார் மறக்காதீங்க" என கேட்டதைப் பார்த்ததும் தோன்றியது. மக்கள் பணி செய்ய இவர்களுக்கெல்லாம் என்ன ஒரு ஆர்வம்!
ReplyDelete@balaravisankar !
ReplyDeleteஇது விடாத முயற்சியா, விடாத கருப்பா?
@♔ம.தி.சுதா♔!
இப்படி பாடாய் படுத்துவதால் யாராவது ஓட்டுப் போடுறாங்களா, என்ன?
@ramanujam!
இன்னொருத்தர் பூட்டிலும் நின்றார். :-))))
@suryajeeva!
ஆமாம், அதென்ன சான்ஸ்? ஆனாலும் மக்கள் இந்த சான்ஸை வாரி வழங்கும் வள்ளல்கள்தான்!
@Vijayashankar!
இங்கே இந்த ஜனநாயகத்தையே முதலில் பகடி செய்தாக வேண்டும் நண்பரே! அது படுத்தும் பாடுத்தான் எல்லாம்!
@சே.குமார்!
பூப்போல மனசு உங்களுக்கு :-))))
@திலிப் நாராயணன் !
ஓட்டுக்கு பணம் கொடுக்குறவனும் அப்படித்தான் கேக்குறான்... :-))))
@ Rathnavel!
ஜெயித்துவிட்டால் மட்டும் திரும்பிக்கொள்ள மாட்டார்களா, என்ன?
@S.Raman,Vellore!
தொண்டு செய்யவேப் பிறந்தவர்கள்!!!!