தமிழ் இலக்கிய உலகம்தான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறது!

tamilselvan 2

எழுத்தாளர் கோணங்கி குறித்து எழுத்தாளர் பவா எழுதிய பதிவை கடுமையாக விமர்சனம் செய்து ஸ்ரீரசா என்னும் நண்பர் பின்னூட்டமிட்டு இருந்தார். “ ஊராரின் உழைப்பையெல்லாம் எழுத்தின் பெயராலும், ஊர்சுற்றி என்கிற உன்னதப் பெயராலும் உறிஞ்சி வாழும் அட்டை வாழ்க்கை வாழ்பவர் கோணங்கி.” என இழிவானக் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இன்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டமிட்டு இருக்கிறார்.


அன்பு மாது..


கோணங்கியின் கூடப்பிறந்த அண்ணன் என்கிற முறையில் ஓரிரு வரிகளை மட்டும் இங்கே பதிவிட விரும்புகிறேன். கோணங்கி எங்களோடுதான் வாழ்கிறார். எங்கள் உழைப்பை அவர் உறிஞ்சுவதாக எங்கள் வீட்டில் யாரும் நினைப்பதில்லை. அவருக்கு உதவிய நண்பர்கள் யாரும் அப்படி நினைப்பதாக இன்றுவரை நாங்கள் கருதியதில்லை. அன்பினாலும் இலக்கிய ஈடுபாட்டினாலுமே அவர்கள் உதவுகிறார்கள். அவருடைய உழைப்பு காசுக்காக இல்லை என்பதில் எங்கள் வீட்டில் யாருக்கும் வருத்தமில்லை. எழுத்துக்காக அவர் அளவுக்குக் கடுமையாக உழைக்கிற படைப்பாளிகள் தமிழில் மிகக்குறைவு. அந்த உழைப்பை எங்கள் குடும்பம் மதிக்கிறது. நண்பர் குறிப்பிடுவது போல கோணங்கி தன்னிடம் உறிஞ்சிவிட்டார் என யாரேனும் கருதினால் அது எத்தனை லட்சமாக இருந்தாலும் அதனைத் திருப்பித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன்


படித்து முடித்ததும் கலங்கிப் போனேன்.  எழுத்தாளர். தமிழ்ச்செல்வனை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற முறையில், இந்த வார்த்தைகளுக்குள் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.  இப்படியொரு விமர்சனம் வர, தீராத பக்கங்கள் எதோ ஒருவகையில் காரணமாயிருந்துவிட்டதோ என வருத்தமும் வருகிறது.  ஆனால் அந்த ஒருவரைத் தவிர கருத்துக்கள் தெரிவித்த அனைவருமே கோணங்கி என்னும் இலக்கிய ஆளுமை குறித்தும்  அவரது அர்ப்பணிப்பு குறித்தும் அழுத்தமாகவேச் சொல்லியிருந்தார்கள் என்ற ஆறுதலும், நம்பிக்கையும் கூடவே இருக்கிறது.  ஒரே ஒருமுறை அவரோடு பேசிய நமது பதிவர் ராகவனின் பின்னூட்டம் எல்லாவற்றையும் சொல்வதாக இருக்கிறது.

 

கோணங்கியோடு பழகியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். கோணங்கியின் பேச்சை மட்டும் கேட்டவர்கள் இருக்கிறார்கள். கோணங்கியின் எழுத்துக்களை படித்தவர்கள் மட்டும் இருக்கிறார்கள். பழகிப் படித்தவர்களும் இருக்கிறார்கள்.  எல்லோருக்கும் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கிறவராகத்தான் கோணங்கியின் சித்திரம் இருக்கிறது. உதயசங்கர் எழுதியிருந்த பதிவு அதைத்தான் காட்டுகிறது.

 

“ஒரு அமைப்பு செய்ய வேண்டியதை ஒருத்தன் செஞ்சிருக்கான்!”.   மார்கோஸ் குறித்த சிறப்பிதழாக கோணங்கியின் கல்குதிரை வந்தபோது இலக்கிய விமர்சகரும், தேர்ந்த வாசிப்பாளருமான எஸ்.ஏ.பெருமாள் சொன்னது இது. தமிழ் இலக்கிய வெளிக்கு கோணங்கி ஆற்றியிருக்கும் நல்ல காரியங்களை  காலம்  அவ்வப்போது சரியாகவேப் பதிவு செய்து வைத்திருக்கிறது.

 

தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்  கோணங்கி குறித்து சொல்ல விரும்புவது ஒன்றுதான் இப்போது.  “தமிழ் இலக்கிய உலகம்தான் அவருக்கு கடன்பட்டு இருக்கிறது!”

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மனதில் பட்டதை சட்டென்று சொல்வது தான் தமிழ்ச்செல்வன் தோழரின் பண்பு.... அதற்கு இங்கு தலை வணங்குகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. கோணங்கிக்கு அண்ணன் தமிழ்செல்வன் மட்டும் சகோதரர் அல்ல, என்போன்று அவர் மேல் மிகுந்த மரியாதைகொண்ட பலரும்தான். அப்படி நினைப்பவர்கள் எங்களிடமும் கேக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. கோணங்கி எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளுள் ஒருவர். படிக்கிற காலத்தில் ஒருமுறை ஆனந்தவிகடனில் ‘கோணங்கி’ குறித்த கட்டுரையொன்று வந்திருந்தது. அதை வாசித்ததிலிருந்து இப்படியொரு ‘தேசாந்திரி’யாயென வியந்து போனேன். அன்றிலிருந்து கோணங்கியை எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரையில் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு கோணங்கி வந்திருந்தார். வாசலில் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் வெகுநாள் பழகிய நன்பரைப் போல புன்னகைத்தார். அவரது வசீகரமான புன்னகை என்னை மிகவும் ஈர்த்தது. அன்று நகுலன் குறித்து அற்புதமாக பேசினார். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வாசகபர்வம்’, ந.முருகேசபாண்டியனின் ‘என் இலக்கிய நன்பர்கள்’, விகடனில் கோணங்கி எழுதிய ‘எனக்கு பயணம் பிடிக்கும்’ என்ற கட்டுரை, சமீபத்தில் வாசித்த பவா’வின் கட்டுரையும், உதயசங்கரின் கட்டுரையும் வாசித்து கோணங்கியோடு நாமும் பயணிக்க முடியாதா என்று ஏக்கமாயிருக்கிறது. அவரது மதினிமார்கள் சிறுகதைத்தொகுப்பு வாசித்து கரிசல்காடுகளில் அவரது எழுத்தினூடாக பயணித்தேன். ச.தமிழ்ச்செல்வன் அனுபவப்பதிவுகளிலும் கோணங்கி குறித்து ஏதேனும் சொல்லியிருக்கிறாரா எனத்தான் தேடுவேன். கோணங்கி நம் காலத்தின் கட்டற்ற தேசாந்திரி, அற்புதமான கலைஞன். உண்மையிலேயே தமிழ் இலக்கிய உலகம்தான் அவருக்கு கடன்பட்டிருக்கிறது. அற்புதமான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நண்பர்களுக்குள் நெருக்கம் இருக்கும், உறவுகளொடு பகிர்ந்துகொள்ள முடியாத பல விசயங்களை நண்பர்களோடுதான் பகிர்ந்து கொள்வோம். இந்த நட்பில் பொருளாதார அந்தஸ்து, பதவி போன்ற மனிதர்களைப் பிரிக்கின்ற material life விசயங்கள் எல்லாம் தூக்கி எறியப்படும்போதுதான் அது உள்ளார்ந்த நட்பாகின்றது. அன்போடு உண்ணும் உணவையும் நட்பு பகிர்ந்து கொள்கின்றது. பல நேரங்களில் பிறர் அறியாவண்ணம், கைமாறு கருதாவண்ணம் பொருளாதார உதவிகளும் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுவதும் இயற்கை. இந்த நண்பர்கள் இலக்கியவாதிகளாக, ஒரே ரசனைகொண்டவர்களாக இருக்கும்பட்சத்தில் காசுபணம் போன்ற விசயங்கள் எல்லாம் பைசா பெறாத விசயங்களாக தூக்கி எறியப்படுவதும் இயற்கையே. கோணங்கியை நான் கூட்டங்களில் மட்டுமே பார்த்திருக்கின்றேன்,அவர் எழுத்தையும் அவர் குறித்தும் வாசித்திருக்கின்றேன். பழகியது இல்லை. கோணங்கியின் நண்பர்கள் யாரும்,பழகிய இலக்கியவாதிகள் யாரும் இப்படியான ஒரு (ஸ்ரீரசா சொல்கின்ற) குற்றச்சாட்டை (?)சொன்னதில்லை. ஸ்ரீரசா தேவையற்ற இப்படியான ஒரு விவாதத்தை கிளப்பி இருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  5. intha maathiri alpamaaka pesubavarkalin natpum uravum konangikku thevaiyaa?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!