Type Here to Get Search Results !

கொள்ளையர் தலைவன்

manmohan_singh

 

2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும்  அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு வெளிவந்து,  ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியாக அதிர்ச்சிகளை ஏறபடுத்தியது முதல் அத்தியாயத்தில். அதைச் செய்தவர்கள் யார் என அம்பலமாகி, ஒவ்வொருவராக  சில பேர் திகார் ஜெயிலுக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்கள் இரண்டாவது அத்தியாயத்தில். இப்போது ஊழலுக்குக் காரணமானவர்கள் யாரெல்லாம் என்பதற்கான குறிப்புகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கின்றன.  தற்சமயம்  ப.சிதம்பரத்தைக் குறிபார்த்துக் கொண்டு இருக்கிறது 2ஜீ.

 

2ஜீயின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’, ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என மன்மோகன்சிங் தன் உள்ளங்கையை  இறுக்க மூடிக்கொள்வதும்,  வெளிவரும் உண்மைகள் பலமாக அவரது முதுகை சாத்தவும், சட்டென்று  இருப்பதை கைவிட்டு விட்டு அப்பாவியாய் நிற்பதும் வழக்கமாகியிருக்கிறது. இவ்வளவு நடந்த பிறகும் கூட  அவரை,  ‘அப்பழுக்கற்றவர்’ என்றும் சொல்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.  ஊடகங்கள் இருக்கின்றன. அவருக்கும், ஊழலுக்கும் சம்பந்தமில்லை என்பதாக ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த முடிகிறது அவர்களால்.

 

இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி, பிரதமர் அலுவலகத்துக்கு பிரணாப் முகர்ஜி  அனுப்பிய முக்கிய கடிதம் ஒன்றில், 2ஜீ  ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அளிக்கப்பட்டபோது, நிதியமைச்சராக இருந்த  ப.சிதம்பரம் உரிமங்களை 2001ம் ஆண்டு கட்டன விகிதத்திலேயே  அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால், அதற்குப் பதிலாக ஏல முறையில் உரீமம் அளிக்க  வலியுறுத்தியிருந்தால், இந்த ஊழலே நடந்திருக்காது” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மிகத் தெளிவாக இந்த ஊழல் நடப்பதற்கு காரணமான ஒருவர் சுட்டிக்காட்டப்படுகிறார். அந்த ஜென்டில்மேன் சிதம்பரம் உடனே  “நான் ராஜினாமச் செய்யப் போறேன், நான் ராஜினாமா செய்யப் போறேன்” என அக்கப்போர் செய்கிறார்.  பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் சமரசம் செய்யப்படுகிறது. “நான் அந்தக் குறிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை” என பிரணாப் முகர்ஜி சொல்கிறார். “இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது” என ப.சிதம்பரம் நிம்மதியடைகிறார்.

 

டிவி மெகா சீரியல்களின் கதை வசனங்களையும், காட்சிகளையும், திருப்பங்களையும்  விட தரமற்று இருக்கிறது இவர்களது நாடகங்கள். எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க வெட்டவெளியில்தான் இத்தனையும் நடக்கின்றன. ஆனாலும் “நிதியமைச்சராக அவர் என் முழு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். உள்துறை அமைச்சராகவும் அவர் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்கிறார்” என ப.சிதம்பரத்தை பொத்தி வைத்துக்கொள்கிறார் மன்மோகன் இம்முறை. இந்த நம்பிக்கைதான் அவரது பலம். வசதியும் கூட.  ஆ.ராசாவும், கபில்சிபிலும், தயாநிதி மாறனும் அகப்பட்டுக்கொண்டால், நம்பிக்கைத் துரோகிகளாகி விடுவர். அவ்வளவுதான். அதற்கு மன்மோகனது நம்பிக்கை என்ன செய்யும்.  “உன்னை எவ்வளவு நம்பி இருந்தேன். இப்படிச் செஞ்சுட்டியே” என்ற பேசும் மனிதர்களை நம் சமூகம் சந்தேகிப்பதில்லை. மாறாக பாவப்படும். அனுதாபம் கொள்ளும். அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.

 

கொள்ளையர்களின் தலைவன் ஒழுக்கமானவனாக, நேர்மையானவனாக ஒருபோதும் இருக்க முடியாது என்கிற எளிய உண்மையைப் புரியவைக்க எவ்வளவு சிரமமாயிருக்கிறது இங்கே!

கருத்துரையிடுக

6 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. பிரதமர் நேர்மையானராக இருந்தால் இந்த கொள்ளை ஏன் நடக்கிறது.

  அவர் கணக்கில் பணம் சேர்க்கவில்லை யென்றாலும் திருடர்களுக்கு உதவியாகவும், கைகொடுத்து காப்பாற்றுவரகவும் இருக்கிறார்.

  கொள்ளைக்கூட்டத்தலைவன் நவீன காலத்தில் இப்படித்தான் இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 2. தலைப்பு அருமை.
  பிரதமருக்கு தெரியாமல் 2ஜி ஊழல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
  அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. ஹரிஹரன்!
  சதீஷ் குமார்!
  வாசன்!
  சே.குமார்!

  மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும்!

  சி.என்.என் - ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தாப்பரின் ‘பிசாசின் வழக்கறிஞர்’ என்னும் நேர்காணல் நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒரு கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஏலத்திற்கு விட வேண்டியதில்லை என்ற முடிவை அமைச்சரவையே எடுத்தது என்றிருக்கிறார். ப.சிதம்பரம் குற்றவாளி அல்ல என்று சொல்ல வந்தவர் ஒட்டுமொத்த அமைச்சரவையையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கிறார். கொள்ளையர் கூட்டம் என்பது சரிதானே?

  பதிலளிநீக்கு
 4. அலிபாபாவும் 40 திருடர்களும். மீண்டும் ஒரு முறை இதே டைட்டிலுடன் ஒரு திகில் படம் எடுக்கலாம்.
  உலகவங்கியில் இருந்து உலகத்தை சுரண்டினான். இப்போது இந்தியாவில் இருந்து இந்தியாவை சுரண்டுகிறான்.
  சுரண்டுபவனுக்கு துணையாக இருப்பவனும் திருடனே.

  பதிலளிநீக்கு