-->

முன்பக்கம் , , , � சீட்டுக்கட்டு - இரண்டாம் அத்தியாயம்

சீட்டுக்கட்டு - இரண்டாம் அத்தியாயம்

marked-playing-cards

 

பரவாயில்லை, உங்களிடம் ஒரு நிதானம் இருக்கிறது. இது ஒரு ஆட்டக்காரனுக்குத் தேவை. தருமதுரை இப்படியல்ல. சீட்டுகள் போட்டுக்கொண்டு இருக்கும்போதே எடுக்க ஆரம்பித்து விடுவார். அப்படியே தொடர்ந்து அடுக்கவும் மாட்டார். சீட்டுகள் சரியில்லையென்றதும் போடப்பட்டுக் கொண்டு இருக்கும் தனக்கான சீட்டுகளின் மீது வெறுப்புடன் வைத்துவிட்டு ஒரு தவிப்போடு  காத்திருப்பார். திரும்ப மொத்தமாக எடுத்து அடுக்கிப் பார்ப்பார், எதாவது வந்திருக்காதாவென.

 

சீட்டுகளை  எடுத்து விரிக்கிற அந்தக் கணத்தில் ஏற்படுகிற உந்துதல் அலாதியானது. உங்களுக்கு மட்டுமேயான ரகசியத்தை  மெல்ல அவிழ்க்கிறீர்கள். ஒன்றிலிருந்து ஒன்றாய் விலக்கி முழுசாய் விரித்து மௌனமாய் ஆராய்கிறீர்கள். அடுத்து என்ன செய்வது என பெருமூச்சோடு அல்லது புன்னகையோடு கீழே பார்க்கிறீர்கள். எதிரே இருப்பவனை அளக்கிறீர்கள்.

 

என் சீட்டுகளை விரிக்கிறேன். ஒன்றில், கிரிக்கெட் பந்தைத் துரத்திக் கொண்டு ராஜேஷ் அவனது பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறான். இன்னொன்றில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீது விமானம் ஒன்று மோதி புகையாய் இருக்கிறது. இடையில் உள்ள ஒரு சீட்டில் தருமதுரை  எஸ்.டி.டி பூத்தில் உட்கார்ந்திருக்கிறார். தனியாக ஒரு ஓரத்தில் ‘என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே’ என்று கண்கள் தெரியாத விக்ரம் பாடிக்கொண்டு இருந்தார். 

 

ஒரு தேர்ந்த ஆட்டக்காரன் தனக்கு போடப்பட்டு இருக்கும் சீட்டுகளை அதே வரிசையோடு  விரித்துப் பார்ப்பான். அங்குமிங்கும் இருக்கிற சீட்டுகளை ரம்மிக்காகவும், ஜோடிக்காகவும் பக்கத்தில் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளாமல், அப்படியே ஒவ்வொன்றின் பூர்வீகத்தை அறிய முற்படுவான். ஏற்கனவே ஆடிய எந்த ஆட்டத்தின் சீட்டுகள் அவை என தனது  ஞாபகங்களைக் கிளறித் தேடுவான். அதன் மூலம் எதிராளியின் கைகளில் இருக்கும் சீட்டுகளை ஓரளவுக்கு அவனால் புரிந்துகொள்ள முயற்சிப்பான். ஆந்திராவில் கேசவ்பூரிலிருந்து வந்த பிறகு தருமதுரை கடைசியாக ஆடியதன் சொச்சங்கள் இந்த சீட்டுகள் என்பதை  கண்டுகொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை எனக்கு.

 

கீழே  மலர்த்தி போட்டிருக்கும் முதல் சீட்டில்,  தனக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்குகிறார் ஜெயலலிதா. அதையெடுத்து வைத்துக்கொண்டு, திருச்செந்தூர் கோவிலில் பெண்கள் வரிசையில் பெரியநாயகி விளக்கு பூஜையில் உட்கார்ந்திருப்பதாக இருக்கும் சீட்டை நீங்கள் கீழே போடுகிறீர்கள்.  எடுத்து தருமதுரையின் பக்கத்தில் சேர்க்கிறேன். பெரியநாயகியின் முகத்தில் ரொம்ப காலம் கழித்து ஒரு நிம்மதி தெரிகிறது. மூத்தவன் பொன்பாண்டி சென்னையிலும், இளையவன் ஜெயபாண்டி மதுரையிலும், மகள் மங்களம் ஆறுமுகநேரியிலும் ஆளுக்கொரு வீடு கட்டிக்கொண்டு விட்டார்கள். தான் பிறந்து வளர்ந்த ஆறுமுகநேரியிலேயே  பார்த்த முகங்கள், பழகிய உறவுகளுடன் மிச்ச காலம் திரும்பியிருக்கிறது.

 

பூத்தில் உட்கார்ந்து  தருமதுரை சாலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரது வாழ்வின் பெரும்பகுதி இப்படி  சாலைகளை ஒட்டியே இருக்கிறது.  கட்டைதொட்டி வைத்திருந்த அம்டன்வாராதியில் டிராம் வண்டிகளும்,  குதிரை வண்டிகளும் ஓடிய காலம் இப்போது கற்பனைகளுக்கு அப்பால் சென்றிருக்கிறது. முக்காணி ரைஸ்மில்லுக்கு எதிரே இருந்த சாலை, அவர் நாலாம் பாரம்  படித்த காலத்து  சென்னையின் மௌபரிஸ் சாலை போல மரங்களடர்ந்து இருந்தாலும், அதைவிட அதிகமான புழக்கம் கொண்டதாய் இருந்தது. அவரது சொந்த ஊர் மன்னன்விளை மந்தையில் சாராயக்கடைக்கு எதிரே இருந்த  சாலையில் மாட்டு வண்டிகளோடு டவுண்பஸ்களும் ஓடிக்கொண்டு இருந்தன. எல்லா சாலைகளிலும் மக்களின் கூட்டம் தாங்க முடியாமல் இருக்கிறது. எங்கோ போய்க்கொண்டும், வந்துகொண்டும் மக்கள் இருக்கிறார்கள். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கூட சைக்கிள்களும், சில ஸ்கூட்டர்களும் தென்பட்ட இந்த சாலைகளில் பைக்குகளும், கார்களும், பஸ்களும், லாரிகளுமாய்  தென்படுகின்றன. நடந்தும், சைக்கிளிலும் செல்கிறவர்களும் எப்போதும் போல இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை யார் கவனிக்கிறார்கள். தருமதுரை இப்போதும் ஒரு இற்றுப்போன சைக்கிள் வைத்திருக்கிறார்.

 

சரியாக இந்த நேரத்தில்  சன்னாசிமுத்துவை யாரோவென்று கீழே போடுகிறீர்கள். அவரை உங்களுக்குத் தெரியாது. இந்த ஆட்டத்தில் அவரும் ஒரு முக்கிய சீட்டுதான். எடுத்துக் கொள்கிறேன். தருமதுரை கசப்போடு முகத்தைத் திருப்பிக்கொள்கிறார். அவரைவிட பத்துப் பதினைந்து வருடம் சிறியவர்தான் சன்னாசிமுத்து. பம்பாயில் இருக்கிறார். முப்பது வருசங்களுக்கு முன்னால் எதோ கடலைமிட்டாய்க் கடையில் வேலை என்று போனவர். அப்புறம் அவரேச் சின்னதாய் ஒரு கடை வைத்து, அவரது தம்பி தவசிமுத்துவையும் அழைத்துக்கொண்டு போனார். கீழத் தெருவில் இருந்த அவர்களது குடிசை வீடுகளை காரை வீடுகளாய்க் கட்டிக் கொண்டனார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் ஊரில் நிலங்களை வாங்கத் துவங்கினார்கள். ஊர்த்திருவிழாவுக்கு வரும்போதெல்லாம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் செலவழித்தார்கள். மேலத்தெருவில்  தருமதுரை, செல்லத்துரை வீடுகளின் ஓடுகள் எல்லாம் கரும்பழுப்பு நிறத்தில் பழமை கொண்டு விட்டிருந்தன.  தருமதுரை சின்னப்பையனாய் இருந்தபோது சன்னாசிமுத்துவின்  குடும்பத்தார் தேரிக்காட்டுக்குள் சென்று சுள்ளி பொறுக்குவார்கள்.  அவர்களது அம்மா மத்தியானங்களில் தவறாமல் வேல்துரையின் வீட்டுக்கு  ஊர்க்கதைகள் பேசி குழந்தைகளுக்கு வடிதண்ணீர் வாங்கிக் செல்வார்.  சன்னாசிமுத்துவின் அப்பா இன்னாசிமுத்து கூலிவிளைத் திரட்டில் இருந்த வேல்துரையின் பனைமரங்களில் ஏறி பாளைச்சீவி, பதனீர் இறக்குவார். அவர் இறந்து நாளாகிவிட்டது. பத்திரகாளியம்மன் கோவிலுக்கு ‘இன்னாசி முத்து கலையரங்கம்’ என்று அவரது புதல்வர்கள் கட்டிக் கொடுத்து இருக்கின்றனர்.

 

ஊரில் இப்போது இல்லாததால், தனது ஓட்டு வீட்டைப் பராமரிக்கக் கூட தருமதுரையால் முடியாமல் இருக்கிறது. ஊர்த்திருவிழா, சொந்தக்காரர்கள் கல்யாணம், சடங்கு என்றால் கூட ஊரில் சென்று தங்குவதற்கு ஒரு நல்ல வீடு வேண்டாமா என்று கவலை கொண்டிருக்கிறார். ஓஹோவென ஒரு காலத்தில் இருந்த தெருவும், வீடும்  அடையாளமற்றுப் போய்விடுமோ என கலக்கமடைகிறார். சென்னையிலும், மதுரையிலும் இருக்கிற பையன்களிடம் அதுபற்றிப் பேசினால், பெரிதாய் அக்கறை காட்ட மாட்டேன்கிறார்கள். ஊரில் என்ன இருக்கிறது, அப்பா அம்மாவுக்குப் பிறகு அங்கு யார் சென்று இருக்கப் போகிறார்கள் என்பதே அவர்களுக்குள் ஒடிக்கொண்டு இருக்கிறது. மூன்று  வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் கேசவ்பூரில் உள்ள கிரானைட் குவாரியை மேற்பார்வை பார்க்கச்  சென்ற போது தருமதுரைக்கு அந்தக் கனவு இருந்தது. திரும்பி வந்ததும் ஊரில் ஒரு காரை வீடு கட்டிவிட வேண்டும் என்கிற வேகமே அந்த வயதில் குடும்பத்தைவிட்டு தொலைதூரத்துக்குச் செல்ல வைத்தது. அவமானப்பட்டு திரும்பியபோது, கிடைத்த பணத்தில் ஆறுமுகனேரியில் இந்த எஸ்.டி.டி பூத்தை வைத்துக்கொள்ள மட்டுமே முடிந்தது. இதன் வருமானத்திலேயே நாலு பேர் மதிக்கும்படியாக எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் ஊரில் வீடு கட்டிவிட முடியும் என்று நம்பிக்கொண்டு இருந்தார். கூட்டாம்புளியில் இருக்கும் தங்கை அழகுரதியின் பேத்தியின் சடங்குக்கு முந்தாநாள் சென்றவர், வந்திருந்த சொந்தக்காரர்களிடம் பெரிய ஜம்பமாக இதை அறிவிக்கவும் செய்தார். “ஆகுறக் கதைய ஒருநாளும் பேச மாட்டாவ” என பெரியநாயகி அங்கேயே பொசுக்கென்று சொல்ல இவருக்கு கோபம் வந்தது. “நடக்குதா இல்லையா பார்” என கறுவிக்கொண்டார்.

 

அதுவரை சாபம் பெற்றவையாய்  சீட்டுக்கட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் ஒவ்வொரு சீட்டும், ஆட்டக்காரனின் தீண்டலில் உயிர்பெறுகின்றன. நினைவுகளை மீட்டியபடி கிளைத்துச் செல்கின்றன. அவைகளின் வண்ணங்கள் மாறி ஒவ்வொரு ஆட்டக்காரனுக்கும், ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வேறு வேறாய்த் தெரிகின்றன. சன்னாசிமுத்துவை இன்னொரு தடவை பார்க்கும்போது எனக்கு வேறு நினைவுகள் வரக்கூடும்.

 

நீங்கள் போடும் சீட்டுகள் எனக்கும், நான் போடும் சீட்டுகள் உங்களுக்கும் தேவையில்லாதவையாய் இருக்கின்றன. அவைகளை நாம் தொடாமல், உள்ளிருந்து சீட்டுகள் வந்து சேரும் என்று ஒவ்வொருமுறையும் ஆசையோடு எடுக்கிறோம். உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறோம். தருமதுரைக்கும் இப்படித்தான் ஒவ்வொரு நாட்களும் கீழே விழ ஆரம்பித்தன. ஆரம்பத்தில் நன்றாக இருந்த வியாபாரம் போகப் போக டல்லடித்தது. பஜாரில் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சடசடவென்று ஆறு எஸ்.டி.டி பூத்கள் முளைத்துவிட்டன. நேர் எதிரே சைக்கிள் கடை இருந்த இடத்தில்,  மஞ்சள் கலர் பெயிண்டாய் அடித்து கறுப்பு எழுத்துக்களோடு பன்னீர்செல்வம் புதுசாய் ஒரு எஸ்.டி.டி பூத் திறந்து அதில்  ஒரு வயசுப் பெண்ணையும் சம்பளத்திற்கு உட்கார வைத்த போது தருமதுரை மிகவும் எரிச்சலடைந்தார்.

 

இந்தியா ஓளிர்கிறது என்னும் சீட்டை உள்ளிருந்து எடுத்து கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, கீழே போடுகிறீர்கள் நீங்கள்.

(இந்த ஆட்டம் இன்னும் இருக்கிறது...)

பி.கு: அத்தியாயத்தின் நீளம் கருதி, பகுதிகளாக பதிவிடுகிறேன்.

Related Posts with Thumbnails

2 comments:

 1. அண்ணா! உங்களது சுவரஸ்யமான எழுத்து நடைக்கு நீளம் ஒரு பிரச்சனையல்ல....அத்தியாயங்களாக தந்தாலும் அள்ளிப்பருகுவோம்! இதில் நீங்கள் சீட்டாட்டத்தை கதை சொல்லும் கருவியாக தேர்தெடுத்ததில் எனக்கு வியப்பேதுமில்லை.....ஏனென்றால் எந்த ஆட்டத்தை விடுவது எந்த ஆட்டத்தை தொடர்வது என்பதை ஆரம்பத்திலேயே உங்களால் அனுமானித்துவிட முடியும் என எனக்கு தெரியும்!!!! எனது வேண்டுகோள் ஒன்று தான்.....தொடர்ந்து ஆடுங்கள்.....!!!!!!!!

  ReplyDelete
 2. அன்பு மாதவராஜ்,

  வசீகரமான நடை... உள்ளீடுகளில் நிறைந்திருக்கும் மறைபொருள்கள்... குறியீடு என்று சொல்லாமல் மிளிரும் வார்த்தை அடுக்குகள்...

  சமகாலப் பார்வைகள் உலகத்தைப் பற்றி, மனிதர்களைப் பற்றி ஒரு தீர்க்கமான ஒரு நெம்புகோல்காரனின் பார்வை...

  கதாபாத்திரங்களின் பெயர்களில் இருக்கும் (சில)பாத்திரவிளக்கம்... எல்லாப் பாத்திரங்களின் பெயர்களிலும் இல்லை... அப்புறம்... இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...

  படிப்பவரை உள்ளுக்குள் இருக்கும் நுவலுநரின் சம்பாஷனைகள் ஏனோ ஒரு சுவாரசியக்குறைவுடன் இருக்கு... முழுப் புத்தகமாய் படிக்கும் போது இந்த மாதிரி தோன்றாது என்று நினைக்கிறேன்...

  காட்சி களம் மாறுமிடங்களில் கொஞ்சம் இடறலாய் அல்லது எனக்கு குழப்பமாய் இருப்பது போல படுகிறது... இது ஒரு கத்துக்குட்டியோட பார்வைதான் மாதவராஜ்!

  திரும்பவும் படிக்கப்போகிறேன்... வேறு சில புரியலாம்...அடுக்குகள் அடுக்குகளாய் பூத்திருக்கும் மல்லிகை... ஒவ்வொரு அடுக்கிலும், அதன் சுகந்தத்திலும் நீந்தி வர கொஞ்சம் நேரம் பிடிக்கும்.

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete