போதை, கற்பழிப்பு எல்லாம் ராணுவப்பணிதானாம்!

okinawa-protesters-rip-us-military-crimes

கட்டுப்பாடு இழந்து அதிவேகமாக வந்த கார், சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 19 வயது இளைஞனின் உயிரைப் பறித்திருக்கிறது. ஜப்பானின் ஒகினாவா மாவட்டக் காவல்துறை திரட்டிய தகவல்களில், காரை ஓட்டிச் சென்றவன் சரியான குடிபோதையில் இருந்திருக்கிறான்  என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆனாலும்  ஜனவரி மாதம் நடந்த இந்தக் கொடூரத்திற்கு காரணமானவன் மீது இன்றுவரை வழக்குக் கூட ஜப்பான் அரசால் பதிவு செய்ய முடியவில்லை. காரணம், அவன் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்தவன்.

1956ம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதாம். பணியில் இருக்கும் அமெரிக்க இராணுவத்தினர் செய்யும் குற்றங்கள் மற்றும் விபத்துக்களை விசாரிக்கும் அதிகாரம் அமெரிக்க நீதிமன்றங்களுக்கே உண்டு  என்பது அதில் ஒரு ஷரத்தாம்.  அமெரிக்க இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு மதுவருந்திவிட்டுத்தான், தங்கள் வீரன்  கார் ஓட்டினான் என்று ஒகினாவா படைத்தளத்தைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் சொல்கிறார்களாம். மதுவருந்துவதும் இராணுவப்பணி என்பது அவர்கள் கருத்தாம். அதனால் ஜப்பான் நீதித்துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லையாம்.

இதுபோன்ற சம்பவங்களும், கையாலாகாத்தனங்களும் ஜப்பானில் வாடிக்கையான ஒன்றாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜப்பானிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இராணுவப்பணியின் போது நடந்தது என ஜப்பான் விசாரிக்க அமெரிக்கா தடை போட்டதாம். ஜப்பான் மக்கள் அந்த நேரம் கொதித்து குரல் கொடுக்கவும், அமெரிக்காவுடனான 1956 ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று ஜப்பான் அரசு அறிவித்துவிட்டு பிறகு கிடப்பில் போட்டு விட்டதாம். சகலக் குற்றங்களையும் இராணுவப்பணியின் பேரில் அங்கு அமெரிக்க இராணுவத்தினர் தாராளமாக செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அமெரிக்க இராணுவம்  செய்யும் எதுவும் இந்த உலகில்  குற்றங்கள் கிடையாது. கார் ஏற்றிக் கொல்லப்பட்ட அந்த இளைஞைனின் தாய் கதறி அழுதது அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டு இல்லை. வல்லான் வகுத்ததே விதியாகி இருக்கிறது. ஜப்பான் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. வேறு எந்த கட்சியும் இதுகுறித்து கவலை கூட தெரிவிக்கவில்லை.
.
வெறிபிடித்த இந்த நாய்களை தெருவில் இழுத்துப் போட்டு ஜப்பான் மக்கள் அடிக்க மாட்டார்களா என்றிருக்கிறது.  நேற்று, ஆந்திராவில் அந்த எம்.எல்.ஏவை மலைவாழ் மக்கள் அடித்து விரட்டிய காட்சி எவ்வளவு கொண்டாட்டமாய் இருந்தது!

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஸ்ரீதர் நாராயணனின் இந்த கமெண்ட் பப்ளிஷ் ஆகவில்லை..


    ஸ்ரீதர் நாராயணன் has left a new comment on your post "போதை, கற்பழிப்பு எல்லாம் ராணுவப்பணிதானாம்!":

    மாதவராஜ்,

    அமெரிக்கா என்ற பெயரைப் பார்த்தவுடன் கோபம் அடைந்து கொந்தளித்தது போல் இருக்கிறது உங்கள் இடுகை. உண்மையில் Okinawa இராணுவ தளத்தின் பிரச்னை என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்து எழுதியிருக்கலாமே...

    குற்றங்கள் நடந்திருக்கின்றன. வருந்ததக்க நிகழ்வுதான் அதற்கான விசாரணைகளும் நடந்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் தகவல்களை கொஞ்சம் படித்துப் பார்த்தாலே பிரச்னை என்னவென்று புரியுமே..

    http://factsanddetails.com/japan.php?itemid=817&catid=22&subcatid=148

    இத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே மையமாக அமெரிக்காவின் அடாவடித்தனம் என்று ஒற்றைப் பார்வையில் எப்படி முடிவு செய்கிறீர்கள்? ஏன் ஜப்பான் அரசாங்கத்தினால் அந்த இராணுவ மையத்தை வேண்டாம் என்று மறுதளிக்க முடியவில்லை? ஏன் சீனா மற்றும் வடகொரியாவைப் பார்த்து ஜப்பான் பயப்பட வேண்டும்? அப்படி அச்சுறுத்தும் வகையில் அந்த அரசுகள் என்ன செய்தன ஜப்பானுக்கு?

    மேலும் உலகில் தவறிழைப்பவர்கள் எல்லாம் அமெரிக்கர்கள் மட்டும்தானா?

    தவறிழைத்த இராணுவ வீரர்கள் ஜப்பான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறதே. அது போதுமான தண்டனையா, அல்லது காலம் தாழ்த்தி நடந்த விசாரணையா என்று பார்ப்பதற்கு முன்னால் 'அமெரிக்க வீரர்களை ஜப்பான் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவேயில்லை' என்று சொல்வது தவறல்லவா?

    உண்மையில் அமெரிக்க நீதிமன்றங்களி குற்ற விசாரணைகள் மிக ஆணித்தரமாகவும், சார்பற்றும் நடைபெறுகின்றன. மற்ற நாடுகளில் (இந்தியாவில் போபால் விஷவாயு கசிவின் போது நடைபெற்றது போன்ற) நிகழ்ந்த குற்றங்களில் அமெரிக்கர்கள் தண்டிக்கப்படாததற்கு அந்த நாட்டு அரசாங்கங்களின் பலவீனமும் முக்கிய காரணம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!