-->

முன்பக்கம் , , , � சீட்டுக்கட்டு

சீட்டுக்கட்டு

Playing-Cards-112994

மாற்றங்களின் ஊடே  விடாமல் நடந்து கொண்டு இருக்கிறது ஆட்டம் முன்னும் பின்னுமாய். சூதுவாது அறியாதவர்கள் இங்கே தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சீட்டுக்கட்டுக்குள்ளிருந்து கதைகளும், கண்ணீர்க் கடல்களும் நிரம்பி வழிந்துகொண்டே இருக்கின்றன. ரொம்பநாளாய் எழுத யோசித்துக் கொண்டிருந்த சில தலைமுறைகளின் கதை இது. நாவலாய் எழுத முயற்சி செய்கிறேன். பார்ப்போம்.


1.ஆட்டம் ஆரம்பம்

 

இஸ்பேட் ஏஸை எடுத்து, “நாந்தான் பெருசு.” என்கிறீர்கள் நீங்கள்.

 

இப்போது உங்களுக்கு நான் சீட்டுகளைக் கலைத்துப் போட வேண்டிய முறை. இஸ்பேட் ஏஸ் என்றதும் எனக்கு வேல்துரை ஞாபகம்தான் வருகிறது.

 

“வேல்துரைன்னா யாரு? இஸ்பேட் ஏஸுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?” கேட்கிறீர்கள்.

 

சீட்டுகளை கையில் வைத்தபடியே சொல்ல ஆரம்பிக்கிறேன்.

 

அப்போது ஊருக்குள்  வரவேண்டுமென்றால், வாய்க்காங்கரைப் பாலத்தைத் தாண்டித்தான் வரமுடியும்.  தேரிக்காடு வழியே லேசில் வரமுடியாது. கள்ளுக்கடை மறியல் செய்தவர்களைப் பிடிக்க பாளையங்கோட்டையிலிருந்து மலபார் போலீஸ் வந்தது. தூரத்தில் புழுதியோடு ஜீப்புகளைப் பார்த்ததும் தண்ணி எடுக்கப் போகும் பெண்கள் பத்ரகாளியம்மன் கோவில் மணியை  அடிப்பார்கள். சம்பந்தமேயில்லாமல்  திடுமென மணிச்சத்தம் கேட்டதும், விபரீதம் உணர்ந்து தேடப்படும் ஆண்கள் எல்லாம் ஊரிலிருந்து வெளியேறி, தேரிக்குள் புகுந்து கொள்வார்கள். பிறகு அவர்களைப் பிடிக்க முடியாது. செம்மண் பெருவெளியில் அடர்ந்து கிடக்கும் முந்திரி மரங்கள் அவர்களை அப்படியே விழுங்கி வைத்துக் கொள்ளும்.

 

முதலில்  ஏமாந்த போலீஸ், மூன்றாவது முறை ஜீப்புகளை வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்திலேயே நிறுத்திவிட்டு  அரவமில்லாமல் தென்னந்தோப்புகளின்  வழியே நடந்து வந்தார்கள். ஊருக்குள் திடுமென காக்கிச் சட்டைகளைப் பார்த்ததும் மிரண்டு போனார்கள். தப்பித்து ஓடக்கூட யோசனையற்று பலர் பிடிபட்டார்கள். சபாபதி வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து சீட்டு விளையாடிக்கொண்டு இருந்த வேல்துரை தன்னை நோக்கி ஓடிவந்த ஒரு போலீஸ்காரனை லாவகமாய் கீழே தள்ளிவிட்டு பானைக்காரர் முடுக்கு வழியே ஓடி, பெரிய பெரிய மாமரங்களின் நிழல்களின் ஊடே தேரிக்குள் விரைந்து விட்டார். திண்ணையில் கிடந்த சீட்டுகளை தூக்கி எறிந்தவாறே “இஸ்பெட் ஏஸ் தப்பித்துவிட்டது” என கத்தினான் ஒரு போலீஸ்காரன். அந்த வேல்துரை வேறு யாருமில்லை. தருமதுரையின் அப்பாதான்.

 

சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன். 

 

“கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்தானே ஒரு போலீஸ்காரனை தேரிக்காட்டுக்குள் வைத்துக் கொன்றது?”  என்று பரக்கிறீர்கள் நீங்கள். ஒரு சாகசக் கதையைக் கேட்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு ஆர்வம். ஆனால் நான் கதை சொல்கிறவனில்லையே. ஒரு சீட்டாட்டக்காரன். இந்த ஆட்டத்தில் எப்போதாவதுதான் கேட்டது உடனே கிடைக்கும். அதுவாக வருகிற சீட்டுகளை எடுத்துச் சேர்க்க வேண்டியது நீங்கள்தான்.

 

உங்களுக்கு பொறுமையில்லை. “அப்புறம் போலீஸ் என்ன செய்தார்கள்?” என்று திரும்பவும் என் முகத்தையேப் பார்க்கிறீர்கள். சீட்டுகளை கலைத்தபடி சொல்ல ஆரம்பிக்கிறேன்.

 

இன்று காலையில் தரும துரைக்கு ஒரு போன் வந்தது. நம்பராக இருந்ததால் ஒரு யோசனையோடுதான் எடுத்து “ஹலோ” என்றார்.

 

“நீங்கதான் தரும துரையா” என்று மறுபக்கம் ஒரு குரல் கேட்டது. ஆமாம் என்றார்.

 

“நா இன்ஸ்பெக்டர் பேசுறேன். என்ன, ஒங்க வீட்டுல எப்பப் பாத்தாலும் சீட்டு விளையாட்டு நடக்குதாமே?”

 

“அப்படியெல்லாம் இல்லயே சார்”

 

“என்ன இல்ல. இங்க புகார் வந்துருக்கே”

 

“இல்ல சார். வேண்டாதவங்க யாரோ குடுத்துருப்பாங்க. நாங்க வீட்டுல உள்ளவங்கதான் நேரப்போக்குக்கு வெளையாடுவோம் சார்.”

 

“இல்லய.... காசு வச்சு வெளையாடுறீங்களாமே. தரும துரைன்னு பேரு வச்சுக்கிட்டுப் பொய் சொல்லாதீங்க.”

 

“இல்ல சார்... அப்படில்லாம் இல்ல சார்... ”

 

அதற்கு மேல் முடியாமல் மறுபக்கம்  சிரிப்புச் சத்தம் கேட்டது. “தாத்தா நாந்தான் ராஜேஷ். பயந்துட்டீங்களா....” என சென்னையிலிருந்து ராஜேஷ்  சிரித்தான். இன்று காலையில்தான் அவனுக்கு ‘ஹேப்பி பர்த்டே’ எஸ்.எம்.எஸ்ஸை தருமதுரை அனுப்பியிருந்தார். அதைத்தான் இப்படிக் கொண்டாடினான் தனது நண்பனின் போன் மூலமாக. வாயில் நுழையாத ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான் அவன். 

 

“ஏலே நீயா” என்று தரும துரை அசடு வழிந்தார்.

 

“நோ நோ. அப்படி மரியாத இல்லாமல்லாம் பேசக் கூடாது. சார்னு சொல்லணும். எத்தன சார் போட்டீங்க இப்ப”

 

“அடச்சீ நாயே. சாராம்ல சாரு” என்றார். அவன் சிரித்துக்கொண்டே போனை வைத்துவிட்டான். தரும துரைக்கு  அவமானமாய் இருந்தது. செருமிக்கொண்டார். கனிமொழி கைது பற்றிய செய்தியைப் பார்க்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் போனில் சிரித்தபடியே மங்களம் முன்னறைக்கு வந்தாள். நோக்கமில்லாமல் சேனலை மாற்றினார்.

 

“என்னப்பா,  ராஜேஷ் உங்கள மிரட்டிட்டானாம்ல” என்றாள்.  “ம்ம்..” என்று லேசாய் சிரித்து வைத்தார்.

 

“ஏம்ப்பா, அவங்குரல் கூடவாத் தெரியாமப் போச்சு!”

 

“அந்தச் சின்ன நாய் குரலை மாத்திப் பேசுது” என்றார் அப்பாவியாய்.

 

“அப்பா... அப்பா. இப்படியிருக்கீங்களே” என்று செல்லமாய் அவரது தோளைத் தொட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் மங்களம். தரும துரை முகம் வாடிப்போனது. இனி ஹைதராபாத்திலிருந்து,  பெங்களூரிலிருந்து, கொச்சியிலிருந்து என பேரன்மார், பேத்திமாரெல்லாம் போன் செய்வார்கள். இரவில் எப்படியும் சென்னையிலிருக்கிற மூத்தவன் பொன்பாண்டியும், மதுரையிலிருக்கிற இரண்டாவது மகன் ஜெயபாண்டியும் சிரிக்கப் போகிறார்கள். சில நாட்கள் இதே பேச்சுத்தான் மொத்தக் குடும்பத்திற்குள்ளும் நடக்கும்.

 

சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏனிந்தக் கதையைச் சொல்கிறான்  என்றுதானே பார்க்கிறீர்கள்? சில சீட்டுகள் முதலில் தேவையில்லாத சீட்டுகளாய்த்தான் தெரியும்.  பின்னர் இன்னொரு சீட்டு அதனோடு சேரும் போதுதான் அருமை தெரியும். போகப் போக உங்களுக்கு அடைபடும். நான் உங்களிடம் கேட்க வந்தது என்னவென்றால், தருமதுரையை நினைத்தால் பாவமாய் இருக்கிறதா?  ஒரு ஜோக்கர் போலத் தெரிகிறாரா? எனக்கோ அவரை இப்படிப் பார்ப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது.  எல்லோரிடமும்  தோற்றுப் போன அவர்  இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட  என்னை ஜெயிக்க விட்டதில்லை, தெரியுமா?  அது ஒரு தனி ஆட்டம். பிறகு பார்ப்போம். 

 

என்னை நீங்கள் வித்தியாசமாய் பார்ப்பது தெரிகிறது. நான் யாரென்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள். அது இப்போது தேவையில்லாதது.

 

சீட்டுகளை உங்களிடம் நீட்டுகிறேன். கத்தையாக வெட்டுகிறீர்கள். அதிலிருந்து ஜோக்கரை எடுத்து கீழே வைத்து  மற்ற சீட்டுகளை கவிழ்த்து நீட்டி இழுக்கிறீர்கள். ரகசியங்களின் பாதையான அது  நீண்டு கிடக்கிறது.

 

ஆமாம். ரம்மியாட்டத்தில் ஜோக்கர் முக்கியமான ஒரு சீட்டு. இப்போது  தருமதுரையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியம். யாரும் தன்னை  மதிக்கவில்லையென்று கவலைப்படுகிறார் அவர்.

 

எனது கையிலிருக்கும் சீட்டுகளை  உங்களுக்கும் எனக்குமாக போட ஆரம்பிக்கிறேன்.

 

தருமதுரை ஒரு சங்கடத்தில் இருக்கிறார். தனது ஆட்டம் முடிந்துவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். பேரக்குழந்தைகள் தலையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றாலும் தானும் ஆடுவேன் என அடம்பிடிக்கிறார். ஊரில் மகள் வீட்டிலிருக்கும் அவர் தனது இரு மகன்களிடமும் செருப்புக்கடை ஒன்று வைக்க பணம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.  மகன்களோ “இந்த வயசுக்கப்புறம் எதுக்கப்பா அதெல்லாம். செலவுக்கு நாங்கள் பணம் அனுப்புகிறோம். வீட்டிலிருங்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

தருமதுரையின் மனைவி பெரியநாயகிக்கு இது நல்ல யோசனையாகத் தெரிந்தாலும், தன் வீட்டுக்காரர் சும்மாயிருக்க மாட்டார், செலவுக்கு அனுப்பும் பணத்தைக் கொண்டு போய் மந்தையில் வைத்து சீட்டு விளையாடித் தொலைத்துவிடுவார் என்ற பயமும் இருந்தது. தருமதுரைக்கு ஆடத் தெரியாது என்பதும், வீட்டிற்கு வெளியே யாவரும் கள்ள ஆட்டக்காரர்களாய் இருக்கிறார்கள் என்பதும் அவருடைய நம்பிக்கை. அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்கென்றே  பிறந்தவர்கள்தான் அவருடன் பிறந்த இருவரும் என்பதை இந்த நாற்பத்தெட்டு ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கையில் பெற்ற ஞானமாக பெரியநாயகி வைத்திருக்கிறார். அதிலும் அந்த மூத்த மைத்துனர் செல்லத்துரை பேரையெடுத்தால் போதும். புலம்பித் தள்ளிவிடுவார். கல்யாணமான புதிதில்  தனது இரு ஜோடி வளையல்களையும் எடுத்துக்கொண்டு எவளோ ஒருத்தியோடு பம்பாய்க்கு ஒடிப்போன செல்லத்துரைதான் இந்த உலகிலேயே பெரிய கள்ள ஆட்டக்காரன் அவருக்கு. போட்டோவில் இருக்கும் வேல்துரையின் முன்னால் நின்று, “மாமா, நீங்கதா எல்லாத்துக்கும் நியாயம் கேக்கணும். ஒங்க மகனைக் காப்பாத்தணும்” என்று வேண்டி கண்ணீர் மல்க நின்ற நாட்கள் எவ்வளவோ உண்டு.

 

அண்ணன் மீது மரியாதை இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், செல்லத்துரையும் ஜோக்கராகவே தருமதுரையை நினைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸில் ஊறிய அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முதலாக தி.மு.கவுக்கு ஓட்டுப் போட்டது அவர்தான். எப்படி வேண்டுமானாலும் ஜோக்கரை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிந்த அவர் இன்னும் ஆடிக்கொண்டு இருக்கிறார்.  இன்னொரு தம்பி பொன்னுதுரையும் ஆடிக்கொண்டு இருக்கிறார். இருவருக்கும் நிலங்கள் இருக்கின்றன. தரும துரையால் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? வாழ்வில்  ஒருமுறையாவது  ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என வெறியாய் இருக்கிறது.

 

கதைவிரும்பிகளான நீங்கள் ஆட்டத்தை விட்டு விட்டு தரும துரையைப் பார்த்து அவரிடமே எல்லாவற்றையும்  கேட்டறிய துடிக்கிறீர்கள். தெரிந்தே எந்த ஒரு சீட்டாட்டக்காரனும் தன்னிடம் இருப்பதை அடுத்தவருக்கு காண்பிக்க மாட்டான்.  அவரது டைரியின் எழுதிய பக்கங்களில் கூட இத்தனை காலம் அவர் விளையாடிய ரம்மி ஆட்டங்களின் ஸ்கோர்கள் மட்டுமே இருக்கின்றன. அவரைப் பற்றி முழுமையாகச் சொல்வதற்கு என்னை விட வேறொரு ஆள் உங்களுக்குக் கிடைக்கவே மாட்டான்.

 

நேரம் வரும்போது ஒருநாள் நானே உங்களை தரும துரையிடம் அழைத்துச் செல்கிறேன்.  இதோ உங்களுக்கான சீட்டுகளை போட்டாகிவிட்டது. எடுத்து அடுக்க ஆரம்பியுங்கள். தரும துரையின் டைரிகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆட்டங்களை ஆடுவோம்.

 

(ஆட்டம் ஆரம்பிக்கிறது)

Related Posts with Thumbnails

6 comments:

 1. Very very nice.........................................
  Waiting for next chapter...................

  ReplyDelete
 2. நிங்க‌ போட்ட‌ முத‌ல் ர‌வுண்டுல‌ கார்டு எனக்குச் ச‌ரியா வ‌ர‌லை.
  ஸ்கூட் ப‌ண்ணின்ட்டு, அடுத்த‌ டீலுக்கு காத்திருக்கிறேன்.
  உங்க‌ளுக்கு சூப்ப‌ர் கார்டு போட்டுகிட்டிங்க‌ போல‌!
  பஃர்ஸ்ட் ர‌வுண்ட்ல‌யே 'கேட்' அடிச்சு, நல்ல‌ பாய்ண்ட்ஸ் ஸ்கேர் ப‌ண்ணீட்டீங்க‌.
  வித்தியாச‌ம‌ டீல் ப‌ண்ணிருங்கிங்க‌, நிச்ச‌மாய‌ எல்லாருக்கும் புடிக்கும்.

  ReplyDelete
 3. ஆரம்பமே களை கட்டுகிறது. ஆட்டத்தை தொடரவும்.

  ReplyDelete
 4. அட்டகாசம் மாது அண்ணா. எடுத்ததுமே கேட் அடிச்சிட்டீங்களே. மிக்க மகிழ்ச்சி.

  அப்படியே வரிசையா கலைச்சிப் போட்டுட்டே இருங்கண்ணே.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் மாது.......

  ReplyDelete
 6. ஸ்கூட் விடாமல் முழு ஆட்டத்தையும் ஆடி முடிக்கவும் அண்ணா! சீட்டாட்டத்தின் கஷ்டம் புரிஞ்சு சொல்றேன் - சிவா

  ReplyDelete