-->

முன்பக்கம் , , , , � கருணாநிதியின் போதைக்கு விஜய்காந்த் ஒரு ஊறுகாய்!

கருணாநிதியின் போதைக்கு விஜய்காந்த் ஒரு ஊறுகாய்!


பேரைத் தவறாகச் சொல்லிவிட்டார், சின்னத்தைத் தவறாகச் சொல்லி விட்டார் என விஜய்காந்தைப் பற்றி அனுதினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. வேனில் அருகில் நின்ற வேட்பாளரை ஒருமுறைத் தள்ளிவிட்டதை, திரும்பத் திரும்ப ஷாட்டாக எடிட் செய்து, சவுண்ட் எபெஃக்ட் கொடுத்து,  நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தியை கலைஞர் டி.வி சொன்னது .  கேப்டன் டிவியில் “மக்களே நான் ஒங்களுக்குத் துரோகம் செஞ்சா நல்லா இருக்க மாட்டேன், நாசமாப் போவேன்” என்று  தெளிவாகக் கேட்கும் குரல், கலைஞர் டி.வியிலும், சன் டிவியிலும், மக்கள் டிவியிலும்  குழறுகிறது. ஊர் ஊராக வடிவேலு, குஷ்பு, நெப்போலியன் வகையறாக்கள் விஜய்காந்த்தை ‘ குடிகாரன், முட்டாள்’ என்பதைத் திரும்ப திரும்பச் சொல்கின்றனர்.  அவர்கள் எதை எதிர்பார்த்து இதையெல்லாம்  செய்கிறார்களோ அது மக்கள் மனதில் பற்ற வைக்கவும் படுகிறது. 

‘இப்பவே இப்படின்னா, இவரெல்லாம் பதவிக்கு வந்தா’, என்று கவலைகொள்கின்றனர்  நம்மக்கள் உடனடியாக. ‘பப்ளிக்ல இப்படி நடந்துக்கிடறவர்கிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்” என்று வேகவேகமாய் சிந்திக்கவும் தலைப்படுகின்றனர். தேர்தல் எதற்கு நடக்கிறது என்பதை மறந்து  மக்கள் இப்போது விஜய்காந்தைப் பற்றிப் பேசுகிறார்கள். சக்திவாய்ந்த ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு, ரிமோட்டில் சேனலை மாற்றுவது போல, மக்களின் மனதை எவ்வளவு எளிதாக திசை திருப்பிவிட முடிகிறது அவர்களால்!

தேசத்தின் பொதுநிதியை கோடி கோடியாய் சுருட்டியது,  தங்கள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திகார் சிறையில் இருப்பது, தமிழகத்தின் வளங்களை அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது, விலைவாசியை தாறுமாறாக ஏற்றியது, இஷ்டத்துக்கு மின்சார வெட்டை தமிழகத்தில் கொண்டு வந்தது,  சினிமா, தொலைக்காட்சித் துறைகளை குடும்பமே கபளிகரம் செய்துகொண்டிருப்பது எனத் தாங்கள்  அடுக்கடுக்காய் செய்த பெரும் குற்றங்களையும், அநியாயங்களையும் மக்கள் மறந்து போகட்டும் என விஜய்காந்த்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

நான் ஒன்றும் விஜய்காந்த்துக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் செய்தது, செய்வது சரியென்றும் சொல்லவில்லை.  தொப்புளில் பம்பரம் ஒட்டுபவராக, குடிப்பவராக, வசனமாய்ப் பேசிக் கொண்டு இருப்பவராக, அநியாயத்துக்கும் அநியாயத்தைக் கண்டு கொதிப்பவராக சினிமாவில் அவரை எல்லோரும் அறிந்துதானே இருக்கிறோம். புதுசாக எதைப் பார்த்துவிட்டோம்.  அப்படியே இருந்தாலும் அவரைப் பற்றி நாம் பேசலாம். மக்கள் பேசலாம். கலைஞரின் குடும்பமும், இன்னபிற வடிவேலு வகையறாக்களும் பேசுவதுதான் சகிக்க முடியவில்லை. அதற்கான என்ன யோக்கியதை அவர்களுக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை.

“சினிமாவில் காமெடியனாக இருந்தவர், இப்போது கதாநாயகனாகி விட்டார். கதாநாயகனாக இருந்தவர் இப்போது காமெடியனாகி விட்டார்” என்று துணை முதல்வர் ஸ்டாலினும் அவர் பங்குக்குப் பேசி கைதட்டல்களையும், விசில்களையும் வாங்கிக்கொள்கிறார். சரி. “எப்போதுமே வில்லனாகவே இருக்கிறாரே உங்கள் அருமைத் தந்தை, அவர் மாறவே மாட்டாரா?” என அவரிடம் யார் கேட்பது?

“மத்திய மந்திரி மு.க.அழகிரி டெல்லியை விட்டு விட்டு, தமிழ்நாட்டில் பணியாற்றுவதில் தான் அதிக விருப்பம் என்று சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என முதல்வரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “அது அழகிரியின் தாய்நாட்டுப் பற்றைக் காட்டுகிறது. டெல்லியிலே அவர் பதவியிலே இருந்தாலும், அந்தப் பதவியை தமிழ்நாட்டுக்காகத்தான் முக்கியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.” என பதில் சொல்கிறார். விஜய்காந்த்தை விடவும் நாக்கு குழறுவதாக தெரியவில்லையா? இப்படி  மதுரையில் அவர் நேற்று அளித்த பேட்டி உளறல்களின் உச்சம்.

கேள்வி: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இந்த அளவிற்கு கடுமையாக இருப்பதைப் பற்றி?
 
பதில்: தேர்தல் ஆணையம் என்பது தன்னை ஒரு அரசியல் கட்சியாக ஆக்கிக்கொள்ளாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம் ஆகும். நீதிமன்றத்தைப்போல அவர்கள் அந்த ஆணையத்தை நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுவதைக் காணும்போது, தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளுகிற நிலையை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கேள்வி:  நேற்றையதினம் கோவையிலே நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அந்த அணியிலே உள்ள ஒரு கட்சியின் தலைவர் வரவில்லையே, குறிப்பாக விஜயகாந்த் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டாரே?
 
பதில்: ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேசியிருக்கிறாரே, அது போதாதா? அப்படி வந்தது மாத்திரமல்ல, தி.மு.க. குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம் - ஆனால் சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தைக் குலைத்த கட்சி அல்ல.

கேள்வி: தமிழகத்தில் ஆங்காங்கு பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?
பதில்: எந்தப் பணமும் யாருடையது, எந்தக் கட்சியின் பணம் என்று அறிவிக்கவில்லையே?

நேர்மையான, நாகரீகமான ஒரு அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தைகளாக இவை? ஐயா, விஜய்காந்த்  டாஸ்மார்க் போதையில் பேசுகிறார் என்றால், முதல்வர் என்ன போதையில் பேசுகிறாராம்? விஜய்காந்த் குடித்துவிட்டுப் பேசுகிறார் என்றால், கலைஞர்  ஐந்து முறையோ, ஆறு முறையோ முதலமைச்சராக இருந்துவிட்டுப் பேசுகிறார். அதுதான் விஷயம்.  கருணாநிதியின் போதை  காலமெல்லாம்  பொய்யிலும், புளுகிலும் ஊறியது.  மலைகளையும், மக்களையும் விழுங்கக் கூடியது.  தமிழகத்தையேச் சுருட்டி குடும்ப தொலைக்காட்சிகளுக்குள் அடைக்கும் வெறி கொண்டது. அது தானாக இறங்கவே இறங்காது. பாவம், விஜய்காந்த்.  அந்த போதை நீடிக்க கருணாநிதிக்கு  கிடைத்த  ஒரு ஊறுகாய்!
Related Posts with Thumbnails

4 comments:

 1. அஞ்சு சீட்டு, பத்துசீட்டுக்கு கையேந்தி
  இன்னமும் விசயகாந்த தேடி ஓடுற நெலமையிலதான ஒங்க பொழப்பு இருக்கு.

  தேர்தல் முடிந்த பிறகு அதிமுக காங்கிரசுடனும். டோலர்கள் திமுக வுடனும் சேர்ந்துக்கிட்டா உங்க நாக்கு உளறாதா?

  ஆக போதை அவரவர் சக்திக்கு ஏற்ப மாறுபட்டுக்கொண்டேயிருக்கிறது. இதில் கருணாநிதி வில்லன், செயா மாதர்குல மாவிளக்குன்னு கூப்பாடு என்ன வேண்டியிருக்கு.

  எதுக்கும் விசயகாந்த இப்பவே கரெக்ட் பண்ணி வையுங்க. அப்பதான் அவரு கழகங்களை காட்டிலும் ரெண்டு, மூணு சீட்டு போட்டு தருவாரு.

  ReplyDelete
 2. ஏற்க்கனவே தலைவர்கள் குடித்த போதையில் மக்கள் குழம்பிப் போய் இருக்காங்க இப்போ நீங்க வேற குழப்பி விட்டுட்டீங்க.எது எப்படியோ சார் என்னதான் எலக்சன் கமிஷம் கேடுபுடி காட்டினாலும் மக்கள் கையில பணம் புரளுது. இப்போ தொங்கு சட்டமன்றம் அமைச்சி அடிக்கடி இடைத்தேர்தல் வந்தால் நாட்டில் பஞ்சம் தீரும்னு நினைக்கிறேன். இவ்ளோ பணத்தை எங்கே வச்சிருந்தாங்கேனு தெரியலப்பு.ஆனால் ஒன்னு அரசியல்வாதி எல்லாமே திருட்டுப் பயலுகதேன். எல்லாரும் ஊழல் பன்னுராக தொகை தாம் வேருபதுது.வேறு ஒரு வித்தியாசமும் இல்ல.

  ReplyDelete
 3. //சக்திவாய்ந்த ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு, ரிமோட்டில் சேனலை மாற்றுவது போல, மக்களின் மனதை எவ்வளவு எளிதாக திசை திருப்பிவிட முடிகிறது அவர்களால்!//

  மக்கள் என்ன நினைக்க வேண்டும்ன்றதை தான் தான் முடிவு பண்ணணும்னு நினைக்கிறது என்னங்க பேரு? செயலலிதாவுக்கும் அப்படி ஆசை இருக்கு. வலு கிடையாது. சிந்தனையை பறிச்சதுக்கப்புறம் எங்க இருந்து உரிமைகளை வாங்குறதாம்?

  ReplyDelete
 4. //“எப்போதுமே வில்லனாகவே இருக்கிறாரே உங்கள் அருமைத் தந்தை, அவர் மாறவே மாட்டாரா?” என அவரிடம் யார் கேட்பது? //

  நம் கையிலிருக்கும் வாக்குகளை வைத்து வரவிருக்கும் தேர்தலில் நாம் கேட்போம்....

  ReplyDelete