Type Here to Get Search Results !

தொகுதிப் பங்கீடுகள்: பல குழப்பங்களும், சில தெளிவுகளும்தமிழக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடந்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது.  இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை  அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது.


முதலில் திமுக அணியில் அது ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு அறுபதா, அறுபத்துமூன்றா என்ற கணக்கில் தன்மானம், சுய கவுரவம் என்ற வார்த்தைகளைக் கொட்டி வெடித்தது. இதுதான் சமயம் என ஜெயலலிதாவோ காங்கிரஸோடு கூட்டணி சேர ஆட்களை அனுப்பினார்.  டெல்லி போன  தி.மு.க  பொத்திக்கொண்டு  வந்து  நல்லபிள்ளையாக ‘அறுபத்து மூன்று’ என்று கீச்சுக்குரலில் சொல்லியது. எதிர்பார்த்த விருந்தினர்களைப் போல சி.பி.ஐயை வரவேற்று அனுப்பிய கனிமொழியின் முகத்தில் மொத்த பேரங்களும், பேச்சுவார்த்தைகளும் வெளிச்சமாய்த் தெரிந்தது. தி.மு.கவின் கொந்தளிப்பைப் பார்த்து முதலில் சிலிர்த்த திருமாவளவன், பிறகு ‘இது வெற்றிக்கூட்டணி’ என்று ராமதாஸைக் கட்டிப் பிடித்து புளகாங்கிதம் அடைந்துகொண்டார்.

அடுத்து, அ.தி.மு.க அணியில் தொகுதிப் பங்கீட்டில் கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கவில்லையென்பதால் ‘கொடுத்ததை  வாங்கிக்கொள்ள நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல!” என்னும் ‘அறச்சீற்றத்துடன்’  தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ, புதிய தமிழகம் எல்லாம் ஒன்று திரண்டு அதிருப்தியை வெளிப்படுத்தின. தனக்கே உண்டான அலட்சியத்துடனும், அகங்காரத்துடனும் நின்ற ஜெயலலிதா, அதிகார வடை போய்விடுமோ என்ற அச்சத்தில்  எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு கட்சிகளுடன்  தூது அனுப்பி, விடிய விடியப் பேசி இப்போது சமாதானம் செய்து வருகிறார்.   எதாவது நடந்து இந்தக் கூட்டணி உடைந்து போகாதா, நம் எதிரி அணி பலமிழந்து போகாதா என்கிற நப்பாசையில், மாறி மாறி கொடும்பாவி எரிப்புக் காட்சிகளை ஒளிபரப்பி வந்த  சன் டி.வி இப்போது உதட்டைப் பிதுக்கி, ப்ச்சென்று காமிராவை திசை திருப்பி இருக்கிறது.

இவ்வாறு   ‘எரிமலைக்குழம்புகள்’ எல்லாம் நீர்க்குமிழிகளாகி வடிந்தவிட்ட நிலையில், அடுத்து தர்ம யுத்தம்தான்.   இருபக்கமும்  தத்தம்  ரஜ கத சூட்கேஸ் இத்யாதிகளோடு  வில்பூட்டி நிற்பார்கள். அம்புகள் மாறி மாறி பறக்கும். வாள்சண்டை, கதச் சண்டை என தூள் பறக்கும். ‘சபாஷ்’, ‘பேஷ் பேஷ்’ என மைதானத்துக்கு வெளியே நின்று மக்கள் கூட்டம் ஆரவாரிக்கும். எல்லாவற்றுக்கும்  ஒருநாள் கறுப்பு மையால்  முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஐந்து வருடம் யாருக்கு குத்தகை கிடைத்திருக்கிறது என்னும் தீர்ப்பாகவும் அது இருக்கும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என பட்டொளி வீசும் தேசீயக் கொடி.. பிறகு வழக்கம் போல விலைவாசி உயர்வு, வழக்கம் போல மக்களைச் சுரண்டும் ஆட்சி, வழக்கம்போல் கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரங்கள், போராட்டங்கள்.


நிற்க. இந்தக் கூத்துக்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கும்போது டாக்டர் ராமதாஸ் அவர்களிடம், மைக்கை நீட்டி, “மூன்றாவது அணி உருவாகுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பேச வேண்டும் போல் இருக்கிறது. “அரசியல்ல இதெல்லாம் சகஜம்” என்று செத்துப்போன சிரிப்போடு அவர் சொன்னதை எத்தனை பேர் பார்த்தார்கள் எனத் தெரியவில்லை. அந்த முகம் அவ்வளவு அருவருப்பாய் இருந்தது! உண்மைதான்.  அவர்களுக்கு இதெல்லாம் சகஜம்தான். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு?  தே.மு.தி.க  தொண்டர்களின் ஆர்ப்பரிப்புகளுக்கிடையில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் விஜய்காந்தைப் பார்க்கச் சென்றபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது போலவே தெரிந்தது. முதலாளித்துவ ஜனநாயகம் இழுத்த இழுப்புக்கெல்லாம் அசைகிற  அவலத்தை அப்பட்டமாய் உணர முடிந்தது.


இன்று காலையில் நண்பர்  ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, “அடிச்சுப் புடிச்சு ஒரு வழியா நீங்களும் ஒங்க தொகுதிகளை வாங்கிட்டீங்க போலுக்கு” என்றார்.  எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல், மிக இயல்பாய் அதன் போக்கில் வந்து விழுந்த வார்த்தைகள் இவை. ஆனால் ‘அடிச்சுப் புடிச்சு’, ‘ஒரு வழியா’  ‘நீங்களும்’ என்று ஒவ்வொரு வார்த்தையும் அடர்த்தி கொண்டவையாய் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன.  இந்தத் தேர்தல்களை கம்யூனிஸ்டுகள் எப்படிப் பார்க்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்பதை அவருக்கு எப்படிப் புரியவைப்பது என எனக்குத் தெரியவில்லை.


காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு இந்தத் தேர்தல்கள் வாழ்வா, சாவா என்று தோன்றலாம். ஆட்சிஅதிகாரம் மட்டுமே அவர்களின் இறுதி லட்சியம்.  அதன் பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு இந்தத் தேர்தல்களின் மூலம் அதிகாரத்தை நோக்கி நகர்வதும் அல்லது அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதும்  நிச்சயம்  நோக்கமாய் இருக்க முடியாது. அவர்கள் செல்வாக்கு பெற்று ஆட்சியமைக்கும் மாநிலங்களையும் உள்ளடக்கியே இதனைச் சொல்ல வேண்டும். சுரண்டலற்ற, வர்க்க பேதங்களற்ற சமுதாயத்தைப் படைக்கும்  தங்களின் மகத்தான லட்சியப்பாதையில் இருக்கும் தடைகளை அகற்ற கம்யூனிஸ்டுகள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்துகிறார்கள். தங்கள் வரலாற்று லட்சியத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் இது ஒரு அரசியல் நிலைபாடு. அவ்வளவே. இந்தக் காரியத்தைச் செய்யத் துணிகிற போது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கிற அழுக்குகளும், அசிங்கங்களும் தங்களைப் பீடித்துக்கொள்ளாமல்  அவர்கள் உதாரண  புருஷர்களாகவும், தங்கள் தனித்துவத்தை இழக்காமலும் இருக்க வேண்டும்.  தேர்தல்களை  நாற்காலிச் சண்டைகளாக வேடிக்கை பார்க்கும் மக்களை  சரியான அரசியல் நோக்கி நகர்த்த வேண்டும். தங்களையும், தங்களுடைய கொள்கைகளையும் மற்றவர்களுடன் வேறுபடுத்துப் பார்க்குமாறு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.


இவையெல்லாம் சாத்தியமாயிருந்தால்,   “அடிச்சுப் புடிச்சு ஒரு வழியா நீங்களும் ஒங்க தொகுதிகளை வாங்கிட்டீங்க போலுக்கு”  என்ற வார்த்தைகள் கம்யூனிஸ்டுகளை நோக்கி வந்திருக்காது. முதலாளித்துவ ஊடகங்களும், சீர்குலைவு சக்திகளும் கம்யூனிஸ்டுகளை கொச்சைப்படுத்தவும், தனிமைப்படுத்தவுமே அல்லும் பகலும் இயங்குவார்கள்.  அவர்களின்  பிரச்சாரத்தினால்தான்  இப்படியான வார்த்தைகள் நம்மை நோக்கி வருகின்றன என்று ஒரேயடியாக முகத்தைத் திருப்பிகொள்வது சரியாய் இருக்காது என்று தோன்றுகிறது.  இந்தத் தேர்தல் முறையில், தங்களுக்கு இருக்கும் இத்தனை வருட அனுபவங்களை வைத்து எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்வதும், மறு பரிசீலனை செய்வதும் அவசியம் என்றே படுகிறது.

இந்தத் தேர்தல் முறையில், சித்தாந்தங்களையும், லட்சியங்களையும் முன்வைக்கிற அரசியலுக்கு சுத்தமாய் இடமில்லை . எதுவும் நிகழும், யாரும் யாருடனும் அணி சேரலாம் என்பதே இங்கு விதி. நேர்மை, எளிமை எல்லாம் காலாவதியாகி விட்டன. கரன்சிகளை விதைத்து ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்பது சாத்தியமாகி விட்டது .  ஜாதிய அமைப்புகளை சேர்த்துக்கொண்டு ‘போடுங்கம்மா ஒட்டு’ என கேட்பதற்கு எந்தத் தடையுமில்லை. மக்களை இவ்வளவு கொச்சைப்படுத்தும் ஜனநாயகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.  நாளுக்கு நாள் இந்த தேர்தல் முறை அழுகி நாற்றமெடுக்கிறது. பனைமரத்தடியில் உட்கார்ந்து பாலைக் குடித்து எந்த பயனுமில்லை, தோழர்களே! வீடியோ கண்காணிப்புகள், பணம்  பறிமுதல் என்ற நடவடிக்கைகள் பேரில் இந்தத் தேர்தல் முறையின் மீது நம்பகத்தன்மையை தக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன்கள் மூலம்  முதலாளித்துவ அமைப்பு முயலலாம். மக்களும்  ஏமாறலாம். கம்யூனிஸ்டுகளும் கூடவா?

‘நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்போம்,  அதை நமது மேடையாக்கி நமது அரசியலை முன்வைப்போம்’ என்னும் கம்யூனிஸ்டுகளின் திட்டமிடுதல் சரியே.  ஆனால் இந்தத் தேர்தல் முறை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான பாதையில்லை. வேட்பாளர், சாதி, பணம், சந்தர்ப்பவாதம்  எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி கொள்கையை மட்டும் முன்வைத்துப் பேசுகிற விகிதாரச்சார தேர்தல் முறையே அதற்கான வழியும், மாற்றாகவும் இருக்கும். இப்படித்தான் என சிற்றறிவுக்குப் படுகிறது. கம்யூனிஸ்டுகள்  விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவதும், அதுவரை இந்தக் கேடுகெட்ட தேர்தல் முறையில் பங்கேற்காமல் இருப்பதுவுமே சரியான பாதையாய் இருக்கும்.


தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
மகாகவியின் இந்தக் கவிதை வரிகளை சத்தம் போட்டு வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.

கருத்துரையிடுக

15 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. சினிமா அரசியலின் சீரழிவுக்கு அடையாளமான விஜயகாந்த் அலுவலகத்துக்கு மூன்றாவது அணி அமைக்க மார்க்ஸிஸ்டுகள் சென்றதும், மீண்டும் ஜெயாவிடமே திரும்பி வந்ததும் கம்யூனிஸ்ட்டுகள் " வர வர மாமியா.." கதையாகிவிட்டார்களே என்ற ஆதங்கத்தை எனக்கு ஏற்படுத்தியது உண்மை. உங்கள் கட்டுரையின் கடைசி வரியை ஆமோதிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. இடது-வலது சாரிகளுக்கான எவ்வித சப்பைக்கட்டுதலும் இல்லாத நியாயத்தையும் அடுத்த கட்டம் குறித்த கவலையையும் மிகச் சரியாக எழுதப்பட்ட பார்வை மாதவராஜ்.

  //இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது.//

  //வழக்கம் போல விலைவாசி உயர்வு, வழக்கம் போல மக்களைச் சுரண்டும் ஆட்சி, வழக்கம்போல் கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரங்கள், போராட்டங்கள்//

  //அரசியல்ல இதெல்லாம் சகஜம்” என்று செத்துப்போன சிரிப்போடு அவர் சொன்னதை எத்தனை பேர் பார்த்தார்கள் எனத் தெரியவில்லை. அந்த முகம் அவ்வளவு அருவருப்பாய் இருந்தது//

  //கம்யூனிஸ்டுகள் விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவதும், அதுவரை இந்தக் கேடுகெட்ட தேர்தல் முறையில் பங்கேற்காமால் இருப்பதுவுமே சரியான பாதையாய் இருக்கும்//

  ஒவ்வொரு வரிகளின் அடியிலும் கொந்தளிக்கும் தளதளப்பை உணர்ந்தேன் மாதவராஜ்.

  நான் அரசியல் குறித்து எழுதிவரும் கட்டுரைகளையும் பார்க்க விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. //இந்தக் கேடுகெட்ட தேர்தல் முறையில் பங்கேற்காமல் இருப்பதுவுமே சரியான பாதையாய் இருக்கும்//

  எனக்கு இந்த வரிகளைத்தான் சத்தம்போட்டு சொல்லவேண்டும்போல இருக்கு :-(

  பதிலளிநீக்கு
 4. மாதவராஜ் அவர்களே! 1970 களில் மே.வங்கத்தில் நடந்த அரைப்ப்பாசிச ஆட்சியில் மகனே! ஜொதிபாசு தோற்றுப்போனார். அவரோடு நின்று வெற்றி பெற்ற தோழர்கள் வெற்றிச்சாண்றிதழ்களை வாங்க வில்லை. தொழர்கள் கொலை செய்யப்பட்டனர். ஒரு புறம் ஜனநாயகௌ படுகோலை.. மறு புறம் மக்கள் படு கொலை. அந்த தியாகத்தின் விலை தான் மக்களின்நம்பிக்கை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கொருவோம். அது கிடைக்கும் வரை தெர்தலில் பங்கு பெற மறுப்பது தற்கொளைக்குச்சமமானது தமிழ்நாடு இந்தியாவிற்குள்தான் இருக்கிறது. காலம் மாறும் தோழா! காத்திருப்போம்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 5. ஜனநாயக அரசியலில் தேர்தலில் பங்கேற்க வில்லை என்றால் அதிக பட்ச மக்களை விட்டு மிகு தொலைவில் நிற்கக்கூடிய நிலை ஏற்படும். இந்த தேர்தல்கள் எத்தனை மக்களை நீங்க சென்றடைந்தீர்கள் என்பதற்கான பரிசோதனையே. இதில் வெல்ல முடியாமல் மக்களை ஒரு minority கட்சி ஆட்சி செய்வது மக்களுக்கு பெரும் ஆபத்தாகப் போகக் கூடிய வாய்ப்பு உண்டு.

  பதிலளிநீக்கு
 6. தோழர் தங்களுக்கு என்ன ஆயிற்று மிகுந்த உணர்ச்சிமயமான வாதங்களை முன்வைப்பதும் ஒரு தெளிவில்லாத சிந்தனை போக்கு தங்களிடையே தெரிகிறது. சரி அல்ல தோழர்

  பதிலளிநீக்கு
 7. விந்தை மனிதன்!

  தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  சுந்தர்ஜி!
  நன்றி. நிச்சயம் படிக்கிறேன் தோழர்.

  சிந்தன்!
  வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. காஸ்யபன்!

  தோழர், தங்கள் அக்கறையும், நிதானமும் எனக்குப் புரிகிறது. தோழர், இன்றைக்கு இருக்கும் தேர்தல்முறை குறித்து நமது பார்வைகளும், புரிதல்களும் மறுபரீசிலனைக்குட்படுத்த வேண்டியவை என்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு
 9. ஓலை!

  நான் ஜனநாயக ரீதியிலான கம்யூனிஸ்டுகளின் பங்கேற்புக்கு நிச்சயம் எதிராகப் பேசவில்லை. ஆனால், இந்தத் தேர்தல் முறைதான், ஜனநாயக ரீதியிலான பங்கேற்பு என்று நாம் நினைத்தால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது. இன்னொன்று கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மக்களிடம் இருந்து அன்னியப்பட மாட்டார்கள். அன்னியப்படுத்தவும் முடியாது.

  பதிலளிநீக்கு
 10. விடுதலை!

  நிதானமாகவும், தெளிவாகவுமே இருக்கிறேன். இந்தத் தேர்தல் முறை, ஒரு பெரும் ஜனநாயக ஹம்பக் என்றும் ஜனநாயக் ஹைஜாக் என்றுமே எனக்குப் படுகிறது. அதுகுறித்து இன்னும் தெளிவாக வேண்டுமானால் எழுதுகிறேன். இந்தத் தேர்தல் முறை நாளுக்கு நாள், எந்த குறைந்த பட்ச நெறிகளுமற்று சீரழிந்து கொண்டு இருக்கிறது. இதில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பதால், அவர்களின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுகிறது என்பதே என் கவலை. விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறைக்கு, தொடர்ந்த இயக்கங்கள் நடத்த வேண்டிய தேவை வந்திருக்கிறது. அதைத்தான் வலியுறுத்துகிறேன். வேறொன்றுமில்லை. தோழர்! எந்த பதற்றமும் உங்களுக்குத் தேவையில்லை. :-)))))

  பதிலளிநீக்கு
 11. இந்தமுறை கிடைத்த அனுபவத்தை பாடமாகக்கொண்டு புதிய உத்தியை கையாளவேண்டும். விகிதாச்சார அடிப்படை தேர்தலுக்காக இயக்கம் நடத்தவேண்டும். ஒவ்வொரு நாளும் செய்தியைப் பார்க்கும்போது இடதுசாரிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் மக்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்பாவிட்டாலும் மக்கள் இயக்கம் நடத்தமுடியும்.

  நல்ல பதிவு..

  பதிலளிநீக்கு
 12. ///ஆனால் இந்தத் தேர்தல் முறை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கான பாதையில்லை. வேட்பாளர், சாதி, பணம், சந்தர்ப்பவாதம் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி கொள்கையை மட்டும் முன்வைத்துப் பேசுகிற விகிதாரச்சார தேர்தல் முறையே அதற்கான வழியும், மாற்றாகவும் இருக்கும். இப்படித்தான் என சிற்றறிவுக்குப் படுகிறது. கம்யூனிஸ்டுகள் விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவதும், அதுவரை இந்தக் கேடுகெட்ட தேர்தல் முறையில் பங்கேற்காமல் இருப்பதுவுமே சரியான பாதையாய் இருக்கும்./// இதை விட உங்கள் கொள்கைக்காக உங்கள் கொள்கையுடன் மட்டுமேகூட்டணி வைத்து தனித்து நில்லுங்களேன் ...

  பதிலளிநீக்கு
 13. ///கம்யூனிஸ்டுகள் விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்துவதும், அதுவரை இந்தக் கேடுகெட்ட தேர்தல் முறையில் பங்கேற்காமல் இருப்பதுவுமே சரியான பாதையாய் இருக்கும்./// முடியுமா ... ...

  பதிலளிநீக்கு
 14. தேர்தலுக்குப் பிறகான அரசியல் நடவடிக்கைகளை, மாற்று அணியைக் கட்டமைப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் இங்கே எழுந்திருக்கும் சவால்.

  பதிலளிநீக்கு
 15. இந்த நான்கைந்து உறுப்பினர்களும் இல்லாமற் போய்விட்டால், கட்சியை தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிட்டு ஒழித்துவிடுவார்கள் என்கிற பயம் காரணமாயிருக்கலாம்.இந்த வேளையில் லட்சியவாதங்களுக்கான வேட்கை முற்றிலும் குன்றியிருப்பதும் மிக வருத்தம்தருகிற சங்கதிதான்.

  பதிலளிநீக்கு