-->

முன்பக்கம் , , , � ஈயடிக்கிறான் இளைஞன்!

ஈயடிக்கிறான் இளைஞன்!“அண்ணே, இளைஞன் படத்துக்கு கூட்டமே வரலியாம். மாவட்டம், வட்டமெல்லாம் சேந்து மொத்தமா டிக்கெட் வாங்கி, ஆட்களைத் திரட்டி இலவசமா அனுப்பிப் பாத்தாங்களாம். அப்படியும் கதையாகல. இப்ப  அடிஷனலா குவார்ட்டரும் இலவசமாம். அடுத்து பிரியாணியும் கொடுக்க திட்டமிருக்காம்” என கார்த்தி நேற்று சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தான்.  தஞ்சை நகரத்தில் முக்கிய தனியார் பள்ளிகளுக்கு பரிவோடு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இளைஞன் படத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இன்று பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. பாவம் அந்தப் பிஞ்சுக்குழந்தைகள்.

தியேட்டர் உரிமையாளர்கள் திருதிருவென முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். காலியான இருக்கைகளில் கலைஞரின் வசனங்கள் முட்டி மோதிச் சிதறுவதைப் பார்க்க சகிக்க முடியாமல் தவிக்கின்றனர். வேறு படமும் மாற்ற முடியாத நிலைமை. மூன்று வாரங்களுக்கு ஒரேயடியாக இளைஞன் தானாம். கண்டிப்பான உத்தரவு.

இந்தப் படத்துக்குத்தான் டி.வியில் ஐந்து நிமிடத்துக்கொருமுறை எத்தனை சவுண்டு!  பாடல் வெளியீட்டு விழாவில் எவ்வளவு எழுச்சிமிக்க உரைகளும், பாராட்டுக்களும்! கவிப்பேரரசுவின் எப்பேர்ப்பட்ட உணர்ச்சிகரமான வார்த்தைக் குவியல்கள்! “நல்ல குணம், பண்பாடு இல்லாத மனிதர்களுக்கு நேர் வழியில் இடம் கிடைக்காது. பைபாஸ் வழியாதான் போயாகணும்… ஊருக்குள்ள நுழைய முடியாது!” என்று தத்துவம் பேசிய  ரஜினிகாந்த்!  ஆமாம், இப்போது படம் நேர்வழியில்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் இதே  தமிழ்நாட்டில்தான் பல ஊர்களில் திரையிட முடியாமல் இருக்கிறது. அரசின் சார்பில் ‘வரி விலக்கு’ என கண்துடைப்பாக அறிவித்துவிட்டு படம் திரையிட முடியாமல் இருப்பதற்கு மறைமுகத்தடைகள் நீண்டுகொண்டு இருக்கின்றன. அதையும் மீறி, இடதுசாரி இயக்கங்களும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இணைந்து  இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் திரையிட்டு இருக்கின்றனர். மேலும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.   ‘இளைஞன்’ படம் பார்க்க வேண்டும் என விளம்பரத்தில் பேசுகிற தலைவர்கள் எல்லாம் ‘அம்பேத்கர்’படம் திரையிடவும், மக்கள் பார்க்கவும் ஒரு துரும்பையாவது அசைத்திருப்பார்களா?

இவர்களுக்கெல்லாம் தங்கள் படம், தங்கள் கட்சி, தங்கள் ஆட்சி, தங்கள் உறவு என்ற வளையங்களைத் தாண்டி இலட்சியங்கள் எதுவுமில்லை என்பதற்கு இந்த இளைஞனும் ஒரு சாட்சி. அதுதான் அவன் ஈயடித்துக்கொண்டு இருக்கிறான். மக்சிம் கார்க்கி சகித்துக்கொள்ள மாட்டார்.
Related Posts with Thumbnails

2 comments:

 1. நன்றி நன்றி கவனத்தில் எடுக்கிறேன் ஐயா....

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

  ReplyDelete
 2. சரியான செருப்படி..

  ReplyDelete