-->

முன்பக்கம் , , , � தமிழக மீனவர் பிரச்சினை: ஆராய்ச்சி மணியடிக்கும் டுவிட்டர்!

தமிழக மீனவர் பிரச்சினை: ஆராய்ச்சி மணியடிக்கும் டுவிட்டர்!


“இருண்ட காலத்தில்
ஒலிக்கும் பாடல்
இருளைப் பற்றியதாகவே இருக்கும்”

இந்தக் கவிதை எவ்வளவு அர்த்தமும், ஆழமும் கொண்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பேச்சும் மூச்சும் தமிழக மீனவர்களின் பிரச்சனையாகவே இருக்கிறது. துயரத்தையும், வலையையும் மீறிய வார்த்தைகள்  திமிறி வந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தில் தமிழ் எழுத்துக்கள் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றன. வலைப்பக்கங்களிலும், டுவிட்டரிலும் தங்கள் கருத்துக்களால் ஒரு புயலை மையம் கொள்ள வைத்திருக்கின்றனர். ‘நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என ஆர்ப்பரிப்பாய் நிற்கிறார்கள்.

இவை ஜெயக்குமார் என்னும்  ஒரு மனிதனின் கடைசி மூச்சிலிருந்து எழுந்து கொண்டிருக்கும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது கொந்தளிப்பான மனநிலை என்று குறுக்கிப் பார்த்துவிட முடியாது.  ஐநூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களின் மரண ஓலங்கள் கேட்டுக் கேட்டு பொறுமை காத்தவர்கள்தான் இப்போது மௌனத்தைக் கலைத்து வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களும், அரசுகளும் இதற்கொரு முடிவு கட்டுவார்கள் என வைத்திருந்த நம்பிக்கைக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடையாளங்களே இவை.

இந்த மண்ணில் பிறந்தவன், தங்களோடு வாழ்ந்தவன், ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அமைப்பில் என்ன இடம் என்பதைக் கவனிக்க முடிந்ததில் எழுந்த வேகம் இது. பிழைப்பு தேடிச் சென்றவனை ஒரு புழு பூச்சியைக் கொல்வது போல, அண்டை தேசத்தின் இராணுவம் கொல்லும்போதும் வேடிக்கைப் பார்க்கிற தன் ராஜாக்களை ‘என்ன மயித்தப் புடுங்குறீங்க’ என்று சாதாரணமானவர்களும்  அசாதாரணமாகக் கேட்கவே செய்வார்கள். தங்கள் ராஜாக்களின் மௌனங்களுக்குள் நுரைத்துக் கிடக்கும் சுயநலங்களை அறிந்து, முகம் சுளித்து, ‘கேடு கெட்டவர்களே, விலகிப் போங்கள்’ என முழக்கமிடத்தான் செய்வார்கள்.

இந்த வெற்று இரைச்சல்களால், என்ன செய்துவிட முடியுமென அவர்கள் நினைக்கலாம். இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் கொட்டித் தீர்த்துவிட்டு, பிறகு தத்தம் வீடு, தத்தம் வாழ்க்கைக்குள் புகுந்துகொள்கிற ஆமைகளாகிப் போவார்கள் என அவர்கள் காத்திருக்கலாம். சில வசனங்கள், சில இலவசங்கள், சில காரணங்கள் போதும் இந்த அற்பர்களைச் சமாளிக்க என்று அவர்கள் நப்பாசை கொள்ளலாம். கடந்தகாலங்கள் இப்படித்தானே இருந்திருக்கின்றன என்று கணக்கும் போடலாம். மக்களைப் பற்றி அதிகார பீடங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயங்கள் வேறெதுவுமாய் இருந்துவிட முடியாதுதான். எல்லோருடைய காலடியோசைகளையும் அறிய முடிந்த திருதராஷ்டிரன், காலத்தின் காலடியோசையை அறிய முடியாமல் இருந்தான் என்பதும் ஒரு உண்மைதான்.

டுவிட்டரில் இப்போது அந்தக் காலடியோசை கேட்டுக்கொண்டு இருக்கிறது!  அலைகளென பொங்கி வரும் டுவிட்டர்கள் சொல்லும் செய்திகள் முக்கியமானவையாய் இருக்கின்றன.

நடக்கும் துயரங்களைப் பார்த்துக்கொண்டு நாங்கள் மௌனமாயிருக்க மாட்டோம்.
பொது விஷயத்தில் ஒன்று கூடி நிற்போம். பொதுக்கருத்தை உருவாக்க  உரையாடுவோம்.
மக்களுக்கெதிரான அரசுக்கும், அமைப்புக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக கேள்விகள் எழுப்புவோம்.
ரசிக்கிற,  நேசிக்கிற  நடிகரோ, எழுத்தாளரோ, எப்பேர்ப்பட்டவரோ இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களில் மௌனம் காப்பதை அம்பலப்டுத்துவோம்.
ஊடகங்களின் அரசியலையும், உள்நோக்கங்களையும் தோலுரிப்போம்.
மேலும் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது என அணி திரள்வோம்.
நண்பர்களே!
டுவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக ஆராய்ச்சி மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அரியாசனங்கள் அதிரட்டும்!

(தமிழக மீனவர்களை பாதுகாக்க எழுப்பும் குரலாக, இந்த லிங்க்கில் உள்ள பெட்டிஷனில் இன்னும் கையெழுத்திடாதவர்கள், கையெழுத்திடுங்களேன்:
Save Tamilnadu Fishermen Petition )
Related Posts with Thumbnails

5 comments:

 1. நான் கையெழுத்து போட்டுவிட்டேன்.

  ReplyDelete
 2. நன்றி அண்ணா....

  ReplyDelete
 3. what is your opinion about N. Ram on #TNFisherman issue?

  You may not publish this question here that I already asked you twice in twitter. However I will posts everywhere

  ReplyDelete
 4. தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்தே நிற்போம்.

  ReplyDelete