-->

முன்பக்கம் , , , , , , � அதே கண்கள்

அதே கண்கள்


சுள்ளி பொறுக்கிச் சென்ற பலர் காணவில்லை எனவும் தெற்குத்தெரு  வேட்டை நாய்கள் விரட்டிச் சென்றதாகவும்  வடக்குத்தெருக்காரர்கள் தங்கள் பெரிய வீட்டுக்காரனிடம் போய் முறையிட்டார்கள் . “நாயென்றால் விரட்டத்தான் செய்யும்,  நாம்தான் பாத்து இருக்கணும்” என்றான் முதலில்.  ஆனாலும் தெற்குத் தெருவின் பெரிய வீட்டுக்காரனோடு பேசுவதாக சமாதானப்படுத்தினான்.  “திருடர்களுக்காகத்தான் நாய்கள் வளர்ப்பதாக” தெற்குத்தெரு பெரிய வீட்டுக்காரன்  அறிவித்தான். முடிவில், தெற்குத் தெருவுக்குள் வடக்குத் தெருப் பெரியவனின் கடையொன்று  திறக்கப்பட்டது.

சுள்ளி பொறுக்கிச் சென்றவர்களை தெற்குத்தெருவின்  வேட்டை நாய்கள் கடிப்பதாக அடிக்கடி  வடக்குத்தெருக்காரர்கள் தங்கள் பெரியவீட்டுக்காரனிடம் போய் துயரத்துடன்  சொல்லியழுதார்கள். ‘நாயென்றால் கடிக்கத்தான் செய்யும், ஏன் பக்கத்தில் போகிறீர்கள்” என்று முணுமுணுத்தவன்,  “இருந்தாலும் தெற்குத்தெரு பெரிய வீட்டுக்காரனிடம் பேசுவதாக’ சொல்லி  தனது தெருக்காரர்களை அனுப்பிவைத்தான்.  “என்ன பேசுகிறார் இவர், சுள்ளி பொறுக்காமல் எப்படி அடுப்பெரியும்” என்று சிலர் ஆத்திரப்பட்டபோது மற்றவர்கள்  “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று அடக்கினார்கள். தெற்குத்தெரு பெரிய வீட்டுக்காரன்  அந்த முறை வடக்குத்தெருவுக்கு வந்தான்.   வடக்குத்தெரு பெரிய வீட்டில் அவனுக்கு  மரியாதையும், வரவேற்பும் அளித்தது,  அந்தத் தெருக்காரகளுக்கு பிடிக்கவில்லை.   அவனது வேட்டைநாய்களைப் போலவே கண்கள் அவனுக்கும் இருப்பதாய்ப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அப்புறம் தெற்குத்தெருவுக்குள் வடக்குத்தெரு பெரிய வீட்டுக்காரனின் வியாபாரிகள் சுதந்திரமாக பொருட்களை  கூவிக் கூவி விற்றுச் சென்றதும் நடந்தது.

சில நாட்களுக்கு முன்பு, சுள்ளி பொறுக்கியவர்களில்  ஒருவனது குரல்வளையைக்  கடித்துக் கொன்று போட்டுவிட்டது  தெற்குத்தெரு  வேட்டைநாய்களில் ஒன்று.  வடக்குத்தெருக்காரர்கள் எல்லோரும் மொத்தமாக  “நாயை அடிக்க வேண்டும்” என்று கொதித்தனர். அவர்களின் பெரிய வீட்டுக்காரன்  வெளியே வந்து,  “தெருக்காரர்களின் துயரத்தில் தானும் பங்கெடுப்பதாகவும்,தெற்குத்தெரு வேட்டை நாய்களைக் கண்டிப்பதாகவும்”  அவசரம் அவசரமாகச்  சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.  அப்போது பலருக்கும் தெரிந்துபோனது,  வடக்குத்தெரு பெரிய வீட்டுக்காரனுக்கும் அதே வேட்டை நாய்களின்  கண்கள் இருப்பது!
Related Posts with Thumbnails

5 comments:

 1. Great one....I don't know how to explain my thoughts & feelings after reading this....i feel ashame.

  ReplyDelete
 2. தெரிந்து கொள்ள மட்டும் தானே முடிந்தது. வேறொன்றும் செய்ய முடியவில்லயே.

  ReplyDelete
 3. வடக்குத் தெருவின் பெரிய வீட்டுக்காரர் அரை நிமிட உண்ணாவிரதமும் இருந்திருப்பார்...
  வேதனைக்குரியது:-(

  ReplyDelete
 4. நாதியற்ற சுள்ளி பொறுக்கும் குழுவும் நாய்களை விரட்ட அல்லது தற்காத்துக்கொள்ள கோலேந்த வேண்டிய காலம் வந்துவிட்டது. எப்படியாவது ரெண்டு வெறிநாய்களை அடித்துக் கொன்றால் ஒருவேளை வடக்குத்தெரு பெரிய வீட்டுக்காரன் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.

  ReplyDelete
 5. விர‌ட்ட‌ப்பட‌/ஒடுக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌து வ‌ள‌ர்ப்புக்க‌ளை அல்ல‌,
  வ‌ள‌ர்ப்ப‌வ‌ர்க‌ளை என எப்போது இந்த‌ சுள்ளி பொறுக்கிக‌ளுக்கு தெரிய‌ப் போகிற‌து, திரு மாத‌வ்?

  ReplyDelete