Type Here to Get Search Results !

இந்தியாவின் கோட்சேவும், பாகிஸ்தானின் காதரும் வேறு வேறா?

_50675292_010947260-1

சல்மான் தசீரைக் கொன்ற மும்தாஜ் காதர்

 

“வந்திருக்கும் பின்னூட்டங்கள் பார்த்து பயமா இருக்கிறது” என்று நண்பர் andygarcia சொல்லியிருக்கிறார். பாகிஸ்தானில் சல்மான் தசீர் அவர்கள் கொல்லப்பட்டதையும், கொலை செய்தவன் கொண்டாடப்படுவதையும் கண்டனம் செய்து எழுதிய பதிவிற்கு வந்த சில கருத்துக்களைப் பார்த்து அவருக்கு திக்கென்று ஆகியிருக்க வேண்டும். நேரடியாகவே உண்மைகள் வெளிப்படும் ஒரு விஷயத்தை சில நண்பர்கள் தலைகீழாக திருப்பி வைத்துப் பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். மத நம்பிக்கை போன்ற உணர்ச்சி வயப்படக்கூடிய ஒரு பிரச்சினையில், இதுபோன்ற அர்த்தங்கள் கற்பிக்கப்படுதலும், புரிதலும் இங்கு ஒரு வழக்கமாகவே இருக்கிறது. தங்கள் பார்வை மட்டுமே சரியானது, மாற்றங்கள் அதில் தேவையற்றது எனும் ‘தெளிவு’ பெற்ற பின்னர் இப்படித்தான் நிகழும் போலும். அதுதான் ‘நீங்களுமா மாதவராஜ்?’ என்று, இன்னொரு நண்பரை கேட்கவும் வைத்திருக்கிறது.

 

‘என் தாயை ஒருவன் குறை சொன்னால் கோபம் வருமா வராதா?” என்று நியாயம் போல் கோபம் வருகிறது. இஸ்லாத்தை எப்படி குறை சொல்ல முடியும் என வரிந்து கட்டுகிறார்கள். நான்  இப்போதும் சொல்கிறேன், இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன், நான் எழுதியதில் தவறு இல்லை. இன்னும் கூட அழுத்தமாகவேச் சொல்லியிருக்க வேண்டும் என்றேத் தோன்றுகிறது. முதலில் மத நம்பிக்கை, மத அடிப்படைவாதம் குறித்து அந்த நண்பர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதை உணராமல் ‘சல்மான் தசீர்’ ஒரு மத அடிப்படைவாதி என்று உளறக் கூடாது. ‘நானும் ஒரு இஸ்லாம் அடிப்படைவாதிதான்’ என்று குழப்பக் கூடாது. மத நம்பிக்கை என்பது தங்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வரும் விளக்காக கடவுள்களையும், மதங்களையும் பார்க்கிற எளியவர்களின்  நம்பிக்கை. மத அடிப்படைவாதம் என்பது பெரும் சாபம். நோய். இந்து, யூத, கிறித்துவ, முஸ்லீம் என அனைத்து மார்க்கங்களிலும் ஊடுருவி விஷம் கக்குகிறது. மதத்திலிருந்து காரண காரிய ஆய்வுகளையும், நம்பிக்கையிலிருந்து அன்பையும், இரக்கத்தையும் அழித்து விடுகிறது. இறந்தகாலத்தை கிண்டிக் கிளறிப் புதுப்பித்துக் கொள்ளும். சிறுபான்மையினரிடம் பகைமை பாராட்டும். தர்க்கங்களை எதிர்க்கும். சகிப்புத்தன்மை அறவே இருக்காது. ஆணவம் கொண்டு, தன் மதம் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே மறுக்கும். சுதந்திரம், ஜனநாயகம் அனைத்துக்கும் எதிரான நிலை எடுக்கும்.

 

பாகிஸ்தானில் இந்த மத அடிப்படைவாதம் தலைதூக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் ஆபத்தை சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும். மத அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பிய மகத்தான மனிதர் சல்மான் தசீரை மனிதசமூகம் உள்ளவரைக் கொண்டாடத்தான் போகிறது. அவரைக் கொலை செய்தவன் மனிதகுல விரோதியாகவே காலத்தின் முன் நிறுத்தப்பட்டு இருப்பான். இதுதான் வரலாறு. காந்தியைக் கொன்ற கோட்சேவும், சல்மான் தசீரைக் கொன்ற காதரும் வேறு வேறா?

 

ஓவியர் உசேன் வரைந்த படங்களில், ‘இந்துக்கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர்’ என இந்தியாவில் பெரும்பான்மை மத அடிப்படைவாதிகளான இந்துத்துவா சக்திகள், அவரைத் தாக்கவும், கொலை செய்யவும் துணிந்தபோது அதை இங்குள்ள ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும்தாம் முன்நின்று கடுமையாக எதிர்த்தனர். அவர்கள்தாம் இப்போது சல்மான் தசீரின் கொலையையும் கண்டிக்கின்றனர் என்ற புரிதல் முக்கியமானது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளது போல, ‘மத நிந்தனைச் சட்டம்’ மூலம் மரணதண்டனை விதிக்கவெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் முடியாது. இந்துத்துவா சக்திகள் முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்தால், அதுவும் நேரலாம். அப்படி ஒரு போதும் நிகழ விடமாட்டார்கள் இங்குள்ள மதச்சார்பற்ற சக்திகள்.  அதுதான் நம்பிக்கையாக இருக்கிறது. எனது பதிவில் சுட்டிக்காட்டி இருந்தது அதைத்தான். இஸ்லாத்தையோ, மதநம்பிக்கையையோப் பற்றி பேசவில்லை.

 

காலத்தின்  துயரம் தோய்ந்த பாடல்களும், வரலாற்றின் ரத்தக்கறை படிந்த நாட்களும் நம் கண்முன்னால் எவ்வளவோ உண்மைகளைச் சொல்லியபடி இருக்கின்றன. அதிலிருந்து நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?

கருத்துரையிடுக

8 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. //அதுதான் நம்பிக்கையாக இருக்கிறது. எனது பதிவில் சுட்டிக்காட்டி இருந்தது அதைத்தான். இஸ்லாத்தையோ, மதநம்பிக்கையையோப் பற்றி பேசவில்லை.//

  :) கடைசியில் இப்படியெல்லாம் டிஸ்கி போடவேண்டியதாயிற்றே...

  பதிலளிநீக்கு
 2. //பாகிஸ்தானில் இந்த மத அடிப்படைவாதம் தலைதூக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் ஆபத்தை சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.// தவறில்லை. பாகிஸ்தான் மத அடிப்படைவாதத்தினால் சீரழிந்துவரும் நாடு.

  பதிலளிநீக்கு
 3. மனிதர்கள் எவ்வளவு விசித்திரமானவர்கள்..

  பதிலளிநீக்கு
 4. //காலத்தின் துயரம் தோய்ந்த பாடல்களும், வரலாற்றின் ரத்தக்கறை படிந்த நாட்களும் நம் கண்முன்னால் எவ்வளவோ உண்மைகளைச் சொல்லியபடி இருக்கின்றன. அதிலிருந்து நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?//

  எத்தனை காலமானாலும் நாம் கற்றுக் கொள்ள நினைப்பதில்லை... கற்று கொல்லத்தான் நினைப்போம்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் சகோ.மாதவராஜ்,

  காரல்மார்க்சின் ஒரே பிரிவு கம்யுநிஸ்டுகளில் இன்று பல பிரிவினர் ஆனது ஏன்? தான் ஒருவர் மட்டுமே ரியல் மற்றவர் எல்லாரும் போலிகள் என்று தங்களுக்குள் எல்லோருமே சொல்லிக்கொள்வது ஏன்? பல பிரிவு இருந்தாலும் இதில் யார் அந்த ஒரே ரியல் என்ற ஒட்டுமொத்த ஏகோபித்த கருத்துக்கு வரமுடியுமா?

  மக்களுக்கெதிராக கயுனிச அரசாங்க பயங்கரவாதமோ(தியானன்மேன் சதுக்க படுகொலை ஒரு உ.ம்), அரசுக்கெதிரான அல்லது அப்பாவி மக்களுக்கெதிரான கயுனிச புரட்சியாளர்களின் பயங்கரவாதமோ(பல்லாண்டுகளாய் நம்நாட்டு/நேப்பாள நக்சல்கள் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதம்)

  இவற்றை "கயுனிச அடிப்படைவாதம்" என்பீர்களா?

  அல்லது "கயுனிச பயங்கரவாதம்" என்பீர்களா?

  அல்லது "கம்யூனிசத்தை தவறாக புரிந்த அல்லது அமல்படுத்தியவர்களின் வெறிச்செயல்" என்பீர்களா?

  மேற்கூறிய எதுவுமே கேள்விகள் அல்ல. அனைத்துமே தங்களின் அவ்விரு இடுகைகளுக்கான என் பதில்கள்.

  நீங்கள் 'உண்மையா', 'போலியா' என்றே எனக்குத்தெரியாது. எது உண்மையான கம்யூனிசம் என்று புரியாமல் பொத்தாம்பொதுவாய் நான் என் இஷ்டத்திற்கு உங்களுக்கு ஒரு 'கம்யுனிஸத்தை இணைத்து பட்டம்' கொடுக்கமாட்டேன்.

  ஆனால், நீங்கள்?

  பதிலளிநீக்கு
 6. அன்பு சகோ.மாதவராஜ் அவர்களே...

  சல்மான் தசீரின் கொலையை நான் மட்டுமல்ல, எண்ணற்றோர் கண்டித்து உள்ளனர். ஏன் இந்த இருட்டடிப்பு?

  இஸ்லாமிய அடிப்படைவாதம் சொல்கிறது:பிற மதக்கடவுள்களை இழிவுபடுத்த வேண்டாமென்று. இஸ்லாமிய அடிப்படைக்கு எதிராக படம் வரைந்தவரை முஸ்லிம்கள் எதிர்த்த போது எம்.எப்.ஹுசைனை நீங்கள் ஆதரித்தீர்கள். காரணம்? எந்த மதக்கடவுளையும் யாராவது அசிங்கப்படுத்தினால் அவர் எவராயினும் உடனே அவர் உங்களுக்கு தோழராகிவிடுவார்.

  ஒருவேளை... ஒருவேளை... இதே ஹுசைன்... கார்ல்மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றோரை நிர்வாணமாய் இங்கு பதிவேற்றமுடியாத அளவுக்கு அசிங்கமாய் வரைந்து காட்சிப்படுத்தினாலும் ஆதரிப்பீர்களா?

  இதே வேலையை எழுத்தில் செய்த லீனா மணிமேகலைக்கு என்ன நடந்தது? அசிங்கமாய் எழுதியது - அதனால் அவர் அதைவிட அசிங்கமாய் அவமதிக்கப்பட்டது- இவற்றில் எது "கம்யுனிஸ அடிப்படைவாதம்"?

  ம்ம்ம்ம்.... தன் பார்வை மட்டுமே சரியானது, மாற்றங்கள் அதில் தேவையற்றது எனும் ‘தெளிவு’ பெற்ற பின்னர் இனி உங்கள் பதிவுகளில் இப்படித்தான் அடிக்கடி தவறான புரிதல்கள் பல நிகழும் போலும்..!

  பதிலளிநீக்கு
 7. Silaruku matham, silarukku manitharkal..

  ethu eppadiyo..

  naam mathippavarkalai, virumbubavarkalai matravarkal avamathiththaal velippadu kobam than..

  tholarkalukku eppadi?

  பதிலளிநீக்கு