அயோக்கியத் தீர்ப்பு
குதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது தனது குட்டி” என சொந்தம் கொண்டாடினான்.
குதிரைக்காரன் வழக்கு தொடுத்தான்.
மத்தியஸ்தர் செக்குக்காரனை அழைத்து விசாரித்தார்.
“எனது செக்கு போட்ட குட்டி இது” என்றான் அவன்.
“செக்கு எப்படி குட்டி போடும்” என்றார் மத்தியஸ்தர்.
“போடும். என்னிடம் சாட்சி இருக்கு!” என்றான் செக்குக்காரன்.
“சிக்கலான விவகாரம். சாட்சி இல்லாம தீர்ப்பு சொல்ல முடியாது. சீக்கிரம் போய் அவுங்க அவுங்க சாட்சியை கூட்டிட்டு வாங்க” என்றார் மத்தியஸ்தர்.
மாலையில் பஞ்சாயத்து கூடியது. செக்குக்காரன் அவனுடைய செல்வாக்கினால் பல சாட்சிகளோடு வந்தான். அவர்கள் அடித்துச் சொன்னார்கள். “செக்குதான் குட்டி போட்டது. நான் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார்கள். குதிரைக்காரனுக்கு ஆதரவாக ஒன்றிரண்டே பேரே நியாயம் பேசினார்கள்.
அதிகம் பேர் சொன்னதை வைத்து மத்தியஸ்தம் செய்தவரும் செக்குக்காரனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு சொன்னார்.
மரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குருவி ஒன்று “மத்தியஸ்தரே இப்படியா தீர்ப்பு சொல்வது” எனக் கேட்டதாம்.
“பின் எப்படிச் சொல்வதாம்” என்று கோபமாய்க் கேட்டார் மத்தியஸ்தர்.
“குதிரைக்குட்டிக்கு தாய்ப்பால் செக்கு வந்து கொடுக்குமா? குதிரை வந்து கொடுக்குமா? யோசியுங்கள் ஐயா, யோசியுங்கள். உண்மை என ஒன்று எப்போதும் இருக்கிறது” என பறந்து சென்றதாம் குருவி.
ஆணாதிக்கம், பெண்ணொழுக்கம் மற்றும் விவாதங்கள் - 3
சென்ற பதிவில் கையேடு அவர்கள் சில விவாதங்களை எழுப்பி இருக்கிறார்.
1. பெண்ணுரிமை பற்றி எவ்வளவு பேசப்பட வேண்டியிருக்கிறதோ அதே அளவிற்கிணையாக பெண், ஆணின் மூலமாக எப்படிப்பட்ட வன்முறையை சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடுபவளாகயிருக்கிறாள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.
2. சகோதரியாக, தாயாக, மனைவியாக எப்படிப்பட்ட கற்பிதங்கள் அடிப்படையிலான நிர்பந்தங்களையும் மதிப்பீடுகளையும் ஒரு ஆணிற்கு நிர்பந்திக்கிறார்கள் என்பதுவும் பேசப்படவேண்டியதே.
3. கடைசியாக ஒரு கேள்வி. இணையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையை ஆணுக்கு மட்டும் சுதந்திரமாக வழங்கிவிட்டதா என்ன நமது சமூகம்?
முதலிரண்டு விஷயங்களில் கையேடு அவர்கள் என்ன சொல்ல வருகிறார் என்பதை இன்னும் தெளிவுபடுத்தினால், அவைகுறித்து விரிவாகவே பேசிட முடியும். பேசுவோம்.
மூன்றாவது கேள்விக்கு வருவோம். இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஆணுக்கும் சுதந்திரமாக வழங்கிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் இங்கு ஆணினால் தன் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும். ஆணின் குரலை குடும்பமும், சமூகமும் கேட்கும். ஆண் தன் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளப் போராடி வெற்றி பெற்றால் அதனை சாகசமாகவும் பேசும். பெண்ணுக்கோ ‘ஓடிப்போனவள்’ என்ற பட்டமே கிடைக்கும். எங்காவது ‘ஒடிப்போனவன்’ என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. ஆணாதிக்க சமூகத்தின் பிரதிபலிப்புகள் இங்கு நம் புழக்கத்திலிருக்கும் வார்த்தைகளிலேயே பொதிந்திருப்பதைப் பார்க்க முடியும். இங்கு பெண்ணுக்குப் ‘பேச்சும்’ கிடையாது. ‘எதிர்ப்பேச்சும்’ கிடையாது.
சென்ற பதிவின் பின்னூட்டத்தில் கயல் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிற மகுடேஸ்வரனின் கவிதை எவ்வளவு வலி கொண்டதாய் இருக்கிறது. இந்தப் பதிவில் பேசப்போவதும் இவைகள் குறித்துத்தான். குடியாவை உங்களுக்குத் தெரியுமா. பேரா.மாடசாமி இப்போது அவளைப்பற்றித்தான் சொல்ல இருக்கிறார். கவனிப்போம்.
சிறிய முண்டாலி கிராமத்தில் நடந்துள்ள வித்தியாசமான நிகழ்வு இது. ஆரீஃப் இந்திய இராணுவ வீரன். அவன் 15 வயது குடியாவைக் கல்யாணம் செய்துகொண்டது 1999ல். திருமணம் ஆன 17வது நாள் கார்கில் போருக்குப் போனவன் பாகிஸ்தான் பிடிக்கப்பட்டு சிறைக்கைதி ஆகிறான். ஆரீஃபைப் பற்றி நான்கு வருடங்களாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஆரீஃப் மரணமடைந்திருக்கக் கூடும் என்று முடிவெடுத்து குடியாவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இரண்டாம் கணவன் பெயர் தௌஃபீக். ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்து, குழந்தைப்பேற்றுக்குக் குடியா தயாராக இருக்கும் நிலையில், ஆரிஃப், பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு கதாநாயகனாக நாடு திரும்புகிறான்.
குடியாவுக்குத் திருமணம் ஆன செய்தியை ஆரிஃப் அறிகிறான். முதலில் குடியாவை விவாகரத்து செய்ய எண்ணுகிறான். பிறகு எதோ ஆர்வத்தில் குடியாவை சந்திக்கிறான். குடியாவை மீண்டும் தன் மனைவியாக்குவது என்று முடிவெடுக்கிறான்.
ஊர்ப்பஞ்சாயத்து கூடுகிறது. ஆரீஃபுக்கும் குடியாவுக்கும் முறையான விவாகரத்து நடக்கவில்லை என்று காரணம் சொல்லி, ஷரியத் சட்டப்படி இரண்டாம் திருமணத்தைச் செல்லாததாக்கி, குடியாவை மீண்டும் ஆரீஃபுக்குச் சொந்தம் ஆக்குகிறார்கள். குடியாவின் தகப்பனே இந்த முடிவுக்கு ஆதரவாக நிற்கிறார்.
இது ஒரு பரபரப்பான விஷயம் என்பதால் ‘யாருடைய குடியா’ என ஜீ டிவி ஒரு பஞ்சாயத்தை நடத்தி, நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அங்கேயும் ஓரளவுக்கு ஆரீஃபுக்குச் சாதகமான தீர்ப்பு.
இப்போதும் ஆரீஃபும் குடியாவும் சேர்ந்து வாழ்கிறார்கள். குடியாவின் வயிற்றில் இருக்கும் குழந்தையை யார் ஏற்பது? யார் வளர்ப்பது? என்பதெல்லாம் குறித்து திடமான முடிவு எட்டப்படவில்லை.
இரண்டாம் கணவன் தௌஃபீக் கோர்ட்டுக்குச் சென்று குடியாவை மீண்டும் அடையப் போவதாகச் சொல்லி வருகிறான்.
இந்தப் பிரச்சினையில் எழும் கேள்விகளுக்கு அவசரப்பட்டு விடை சொல்ல முடியாது. சொந்த விஷயங்களில் எடுக்கப்படும் முடிவுகளில் மறைக்கப்பட்ட பகுதிகள் எப்போதும் இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு பொதுஜன அபிப்பிராயம் மேலோங்கி இருக்கிறது. குடியாவின் வீட்டுக்கு வெளியே நின்று அவள் யாருடன் வாழவேண்டும் என்று விவாதம் நடத்த நமக்கு உரிமை இருக்கிறதாவெனத் தெரியவில்லை.
ஆனால், இந்தப் பிரச்சினையில் குடியாவின் நிலை என்ன என்பதை அறிய முயற்சிக்கவேயில்லை என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘குடியா’ என்ற சொல்லுக்குப் பொம்மை என்ற பொருளும் இருப்பதால், அந்த அர்த்தத்துக்கு மிகுந்த அழுத்தம் தந்து பத்திரிகைகள் எல்லாம் குடியாவை ஒரு பொம்மையாகவே உருவகித்துவிட்டன. இந்த அபத்தங்களின் வழி குடியாவின் உள் மன உணர்வுகளையும், மனவோட்டங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான்கு ஆண்டுகளாகத் திரும்பாத ஆரீஃபை மறந்து தௌஃபீக்கைத் திருமணம் செய்ய உடன்படும்போதும், ஆரீஃப் திரும்பிவிட்டான் என்ற செய்தி கிடைத்ததும், ‘ஆரீஃப் மீது எனக்குக் காதல் இல்லை. தௌஃபீக்குடன் வாழ்வைத் தொடரவே விரும்புகிறேன்’ என்று குடியா ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்ததை யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.
ஜீ டிவி, ஊர்ப்பஞ்சாயத்து, பத்திரிகைகளில் மற்றவர்களே நிறையப் பேசியிருக்கிறார்கள். அவள் பேச்சு கொஞ்சமே. பேச்சு அதிகாரத்தின் அடையாளம். பேச்சை விட முக்கியமானது ‘எதிர்ப்பேச்சு’. எதிர்ப்பேச்சு என்பது வெறுங்கூச்சல் அல்ல. கூச்சலிட்டுப்பின் சரணடைவதும் அல்ல. தன்முன் ஒழுங்கற்று நிற்கும் பிறர் பேச்சையும், வினையையும் முறையாக எதிர்கொள்வதுதான் எதிர்ப்பேச்சு. முடிவெடுத்தலின் முக்கியப் பேச்சு எதிர்ப்பேச்சு. இந்த எதிர்ப்பேச்சும் குடியாவிடம் நிகழவில்லை.
ஊர்ப் பஞ்சாயத்து, ஜீடிவி ஒளிபரப்பு எல்லாம் ஆண்கள் நிறைந்த சபைகளாக விளங்குகின்றன. முதல் பஞ்சாயத்தில் ஒரு பெண் கூட இல்லை. இரண்டாவது பஞ்சாயத்தில் பெண்கள் மிகச் சொற்பம். இந்த பஞ்சாயத்துக்கள் எப்போதும் விவாத மேடைகளாக இருந்ததில்லை. நிர்ப்பந்தங்களின் பிறப்பிடங்களாகவே உள்ளன.
நிப்பந்தம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆரீஃபுக்கு கிடைத்த ‘ஹீரோ இமேஜ்’. நாட்டுக்காக துன்பம் அனுபவித்த வீரன். அந்தத் தியாகம் குடியாவுக்குச் சுமையாக மாறாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆரீஃபுக்காக பேசியவர்கள் எல்லாம் அவனது தியாகத்தை முன்வைத்தேப் பேசினார்கள்.
சிறிது காலத்தில் (2006 இறுதியில்) குடியா மரணமடைந்த செய்தி பத்திரிகைகளில் வந்தது. குடியா என்ன நினைத்தாள், என்ன விரும்பினாள் என்பது தெரியாமலே போயிற்று. ஆரீஃபுடன் நிர்ப்பந்தமாக இணைக்கப்படாமல், தௌஃபீக்குடன் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் குடியா இன்றைக்கும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும்.
காமாட்சி, குயிலி, குடியா எல்லோரின் பிரச்சினைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் மேம்போக்காகத் தெரிகிறது. ஆனால் எண்ணற்ற வித்தியாசங்களுடனும், பின்னணிகளுடனும் ஒவ்வொன்றும் மூடிக்கிடக்கின்றன. பார்த்தால் ஒன்று. பகிர்ந்துகொண்டால் அனேகம்.
இவ்வாறு பேரா.மாடசாமி முடிக்கிறார். இதிகாச காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் தொட்டுப் பேசி, பெண்ணொழுக்கம் குறித்த விதிகளையும், நியதிகளையும் இந்த ஆணாதிக்க சமூகமே உருவாக்கி வைத்திருக்கிறது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
ஆண்களாகிய நாம் இது குறித்து பிரக்ஞையில்லாமல், ஆண் என்கிற பெருமிதத்துடனும், கர்வத்துடனும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம்முடைய சொற்களில், செயல்களில் அதனை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
சமீபமாக, வலையுலகில் வந்த சில பிரச்சினைகளையொட்டி, ‘ஆணாதிக்கம்’ என்ற சொல்லாடலைக் கிண்டலும், கேலியும் செய்து வார்த்தை வார்த்தைகளாய் கொட்டப்பட்டன. மாறி, மாறி கும்மியடித்து, கொச்சை செய்யப்பட்டது. இங்கு ‘ஆணாதிக்கம்’ குறித்து மேலும் பேசுவதற்கு தயக்கங்களையும், கூச்சத்தையும் கூடவே ஒருவித பயத்தையும் விதைப்பதுதான் அதன் நோக்கம் என்றே புரிய நேரிடுகிறது. காலம்காலமாய் ஆணாதிக்கம் செய்து வருகிற ‘அசிங்கப்படுத்தும் அல்லது களங்கப்படுத்தும்’ காரியமே இது. அநீதி இழைக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த பெண்கள் உலகத்தின் கதவுகள் சென்ற நூற்றாண்டிலிருந்து உடைபட ஆரம்பித்திருக்கின்றன. அதன் மீது நம் ஆணிகளை அடித்து பூட்டிட முயற்சிக்க வேண்டாம்.
இப்படி எழுதுவதன் மூலம் உடனே ‘இவர்தான் பெண்ணுரிமைக் காவலர்’ என்று கேலியும், கிண்டலும் செய்வதற்கு ஒரு கூட்டம் இருக்கவே செய்யும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். நான் ஒன்றும் பெண்ணுரிமைக் காவலன் இல்லை. ஆணாதிக்கச் சமூகத்தின் அசிங்கத்தையும், அருவருப்பையும், அதிகாரத்தையும் கொஞ்சமேனும் அறிந்த, கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சி கொண்ட ஒரு ஆண். அவ்வளவே.
ஆரோக்கியமான விவாதங்களைத் தொடர்வோம்.....
ஆணாதிக்கம், பெண்ணொழுக்கம் மற்றும் விவாதங்கள் - 2
இப்பதிவின் முதல் பகுதியை இந்த நிமிடம் வரை 738 பேர் வாசித்திருப்பதாகச் சொல்கிறது கூகிள் புள்ளி விபரம். ஆனால் பெரிதாய் விவாதங்கள் இல்லாமல் மௌனம் நிலவுகிறது. எதிர்பார்த்ததுதான். ஒரு பெண், கணவன் அல்லாத உறவில் குழந்தை பெற்றுக்கொண்டு கணவனோடு சேர்ந்து வாழ்வதையும், உண்மையை மறைப்பதையும் நியாயப்படுத்துகிற கதையாக காமாட்சியின் கதை முன்வைக்கப்பட்டு இருந்தது. உள்ளுக்குள் நியாயங்கள் புரிந்தாலும் பொதுவெளியில் பகிரங்கமாக சரியென்பதா என்கிற தயக்கங்கள் வந்திருக்கக் கூடும். அதையும் மீறி, உரையாடியிருக்கிற தியாவின் பேனா, பீர், தர்ஷன், நிக்கிஜான், சிங்கம், கயல் ஆகியோருக்கு நன்றி. பீர் அவர்களும், கயல் அவர்களும் இது சரியே என சொல்லியிருப்பது நம்பிக்கையளிக்கிறது.
காமாட்சியின் கதையில் அவளது கணவன் இன்னொருத்தியோடு உறவு வைத்திருக்கும்போது மௌனமாயிருக்கிற ஊர், காமாட்சியின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுந்தவுடன், உடனடியாக கூடி விசாரிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் அடையாளங்களும், லட்சணங்களும். பெண்ணொழுக்கத்தின் மீது கெட்டிப்படுத்தி வைத்திருக்கிற இறுக்கங்களும். அதனை உடைத்து உண்மையைக் காட்டும்போது சமூகம் தாங்கிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்து முகம் திருப்புகிறது. இவைகள் தீர்வுகள் என்பதைக் காட்டிலும், எழுகின்ற கேள்விகளாக பார்ப்பது அவசியமாகிறது. பதில்களை ஆராயவேண்டியதும் பொறுப்பாகிறது.
அடுத்த ஒரு கேள்வியோடு வருகிறார் பேரா.மாடசாமி. “பாரதியின் குயில்பாட்டின் உள் உலகம் பலரும் அறியாதது. வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்கலாம் என பாரதி சொன்னதைத் தமிழறிஞர்கள் சிரம் மேல் ஏற்று அநியாயத்துக்கு விரித்து ஒளி மங்கிய புதிர் உலகத்துக்கு இட்டுச் சென்றனர்” எனச்சொல்லும் பேரா.மாடசாமி குயில்பாட்டிற்குள் இருக்கும் பெண் மனதை இப்போது சொல்லத் தொடங்குகிறார்.
முற்பிறப்பில் வீரமுருகன் என்னும் வேடன் மகனாகக் குயில் பிறந்து வளர்ந்தது. ‘சின்னக் குயிலி’ என்பது அதன் பேர். குயிலிக்கு மாமன் மகன் ஒருவன் இருந்தான். அவன் பேர் மாடன். தினசரி பூவும், தேனும் கொண்டு வந்து அவன் குயிலிக்குத் தருவான். தன்னை மணந்து கொள்ளச் சொல்லிக் கெஞ்சுவான். குயிலியும் அவனுக்கு மாலையிட வாக்களித்தாள். காதல் கொண்டு வாக்களிக்கவில்லை. தினசரி தன் பொருட்டு அவன் வருத்தப்படுவதைக் காண சகிக்காமல் வாக்களித்ததாய் பாரதி கூறுகிறார்.
இந்த நேரத்தில் வசதி படைத்த மொட்டைப் புலியன் தன் மகன் நெட்டைக் குரங்கனுக்குக் குயிலியைப் பெண்கேட்டு வந்தான். குயிலியின் தந்தையும் உடன்பட்டான். நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 12 நாட்களில் திருமணம்.
மாடன் மனம் புகைந்து குயிலியிடம் நியாயம் கேட்டான். அதற்கு, “தந்தையின் ஏற்பாட்டின்படி நெட்டைக் குரங்கனுக்கு மனைவியாகப் போனாலும் மூன்று மாதத்திற்குள் ஏதாவது சூழ்ச்சி செய்து, சண்டை போட்டு, தாலியை அவர்களிடமே கழற்றிக் கொடுத்துவிட்டு இங்கே வந்துவிடுவேன்” என குயிலி மாடனுக்கு மறுபடி ஒரு வாக்களித்தாள்.
இந்த நிலையில் காட்டில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது வேட்டைக்கு வந்த சேரமைந்தனைக் கண்டாள். கண்டதும் மாடனையும், குரங்கனையும் மறந்தாள். மன்னவன் மீது ‘மாமோகம்’ கொண்டு விட்டாள். ‘மன்னவன்தன் திண்தோளை’ச் சேர்ந்து விட்டாள். விடுவார்களா மாடனும், குரங்கனும்.
வெறிகொண்ட குரங்கனும் மாடனும் குயிலியின் மனங்கவர்ந்த வேந்தனைக் கொல்ல, வேந்தன் குரங்கனையும் மாடனையும் கொன்று விடுகிறான். பிறவிகள் தொடர்கின்றன. குயிலி குயில் ஆகிறாள். மன்னவனைக் கவிஞனாகச் சந்திக்கிறாள். காதல் தொடர்கிறது. மாடனும் குரங்கும் பேய்களாகி விடாது துரத்துகிறார்கள் குயிலி கொடுத்த வாக்குறுதியையும், நடந்து முடிந்த நிச்சய தாம்பூலத்தையும் தூக்கிச் சுமந்து கொண்டு.
குயில்பாட்டில் பாரதி உண்டாக்கிய கலாச்சார அதிர்வு இது. பெண்ணுக்குத் திருமணம் பூதாகரமாக்கப்பட்ட விஷயம். மனதுக்குப் பிடித்த துணையும் அபூர்வமான வாய்ப்புதான். இச்சூழலில் மனதுக்குப் பிடித்த துணை வாய்க்கும்போது, முன்னர் கொடுத்த வார்த்தை தவறுவதும், முன்னர் செய்த ஒப்பந்தத்தை மீறுவதும்தான் சரியான நியாயங்கள். கொடுத்த வாக்குக்காக மாடனுக்கு மாலையிடுவதோ, மண ஒப்பந்தத்தை மதிப்பதற்காக குரங்கனுக்குப் பெண்டாட்டி ஆவதோ ஒரு விதத்தில் வாழ்க்கையை இழப்பதுதான். இழப்பு தீர்வு அல்ல. இறுக்கமும் தீர்வல்ல. நெகிழ்வுதான் தீர்வு.
இப்படித்தான் குயில்பாட்டை பேரா.மாடசாமி அவர்கள் பார்க்கிறார். நிறைய தமிழ்ச்சினிமாக்கள் இந்த நேரத்தில் ஞாபகம் வந்தாலும், கே.பாக்கியராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ‘தாலியை அறுத்து எறி’ என்று சொன்னவுடன், கடல் அலைகள் மோதுவதும், காற்று நிற்பதும், உலகமே தலைகீழாய் சுற்றுவதுமான அபத்தங்களின் நடுவே பாரதி எப்பேர்ப்பட்ட சுடராக காட்சியளிக்கிறார். காதல் மற்றும் திருமணங்களில் பெண்களின் சம்மதம், பெண்களின் விருப்பம் குறித்து கவலைப்படாத சமூகத்தில் பாரதி சொல்வது அருவருப்பானதாய்க் கூடத் தோன்றலாம். அது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவும், இயல்பாகவும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இன்னும் இருக்கிறது. பேரா.மாடசாமி அடுத்து ஒரு உண்மைச் சம்பவத்தோடு தொடர்கிறார்.
(இறுதிப் பகுதி நாளை)
ஆணாதிக்கம், பெண்ணொழுக்கம் மற்றும் விவாதங்கள் - 1
“ஆணாதிக்க சமூகத்தின் மனோபாவங்கள் குறித்து கூட்டங்களில் விவாதிக்கிற போது, பலரும் கண்டுபிடித்து முதலில் நிறுத்துவது - பெண்ணின் ஒழுக்கம் குறித்த ஓயாத கவலை.” என்றுதான் காமாட்சியின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் பேராசிரியர் மாடசாமி. ‘பூமரப்பெண்’ என்னும் அவரது புத்தகத்தில் முன்வைத்த ஒரு விவாதத்தையும், சில கதைகளையும் இங்கு பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.
வாழ்வதற்கான விருப்பம்தான் விருப்பங்களில் எல்லாம் தலையானது. அடிப்படையானது. எந்தப் பிரச்சினையின் போதும் மனித மனம் வாழ்வை நோக்கித்தான் நெகிழ்வு கொள்கிறது. பெண்களை மட்டும் இந்த வாழ்க்கைப் போக்குக்கு விதிவிலக்காக நிறுத்த சம்பிரதாயங்களும், மதிப்புகளும் தவிக்கின்றன.
பாதிக்கப்படும் நேரங்களில்தான் முடிவெடுப்பது முக்கிய வேலை ஆகிறது. பாதிக்கப்படுபவர்கள் பெண்களாயிருந்தால், அவர்கள் எடுக்கும் முடிவில் நெகிழ்வு தோன்றிவிட்டால், ஆண் சமூகம் நெஞ்சு படபடக்கிறது. இந்தப் படப்படப்பை புராணக் கதைகளிலிருந்து, சீரியல்கள் வரை பார்க்கிறோம்.
புராண இதிகாசக் கதைகளுக்கு, நம் உலகத்தைக் காட்டுவதைவிட, நம்மீது வேறோர் உலகத்தைச் சுமத்துவதும் - நம் நெகிழ்ந்த உலகத்துக்குள் இறுகிய நியாய ஒழுக்கங்களைத் திணிப்பதும்தான் நோக்கமாக இருக்கிறது. அதற்கு எதிராக வைக்கப்பட வேண்டிய கன்னட நாட்டுப்புறக்கதை ஒன்று இருக்கிறது. இக்கதையை கிரிஷ் கர்னாட் ‘நாக மண்டலா’ என்ற நாடகமாக்கியுள்ளார். தமிழில் ஏ.கே.ராமானுஜன் ‘காமாட்சி’ என எழுதியுள்ளார்.
காமாட்சி ஒரு இளம்பெண். கல்யாணம் ஆகிறது. கணவன் நல்லவன் இல்லை. காமாட்சியை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு வேறு ஒருத்தி மீது இச்சை. இரவெல்லாம் அங்கேயே கிடப்பான். காமாட்சியைத் தொட்டதும் கிடையாது. இப்படியே காலம் நகர்ந்தது. பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருந்தாள். அவள் ஒரு மூலிகையைத் தந்தாள். “இதை அரைத்துச் சாப்பாட்டில் க்லந்து அவனுக்குக் கொடு, பிறகு பார்! அவன் உன் காலடியில் கிடப்பான்” என்றாள்.
பாட்டி சொன்னதைப் போல காமாட்சி செய்தாள். மூலிகையைக் கலந்ததும் சாப்பாடு சிவப்பு நிறமானது. காமாட்சி பயந்து போனாள். ‘ஒருவேளை சாப்பாடு விஷம் ஆகிவிட்டதோ’ என்று நினைத்தாள். மூலிகைக் கலந்த உணவை கனவனுக்குக் கொடுக்கவில்லை. அதைக் கொண்டு போய் வீட்டருகே இருந்த பாம்புப் புற்றில் கொட்டி விட்டாள்.
ஒரு நல்ல பாம்பு அந்தப் புற்றுக்குள் வசித்தது. காமாட்சி கொட்டிச் சென்றதை உணடது. அந்தப் பாம்புக்குக் காமாட்சி மீது காதல் உண்டானது.
இரவானதும் பாம்பு, காமாட்சியின் கணவனுடைய வடிவத்தை எடுத்து, காமாட்சியைத் தேடி வந்தது. காமாட்சியிடம் பிரியமாக நடந்து கொண்டது. இதமான வார்த்தை பேசியது. காமாட்சி இதுவரை அறியாத தாம்பத்திய மகிழ்ச்சியைத் தந்தது. காமாட்சிக்கு இது வேறொரு ஆள் என்றேத் தெரியாது. கணவன் ராத்திரியில் மட்டும் நல்லவனாக மாறிவிடுகிறான் என்று நினைத்தாள்.
தினசரி இது தொடர்ந்தது. காமாட்சி கர்ப்பம் அடைந்தாள். இனியும் உண்மையை மறைப்பது தப்பு என்று நாகம் நினைத்தது. “நான் உன் கணவன் இல்லை, கணவன் ரூபத்தில் வந்த நாகராஜா” என்று காமாட்சியிடம் சொன்னது. காமாட்சி நடுக்கம் கொண்டாள். நாகம் அவளைத் தேற்றியது. “பயப்படாதே காமாட்சி. எந்த அவமதிப்பும் உனக்கு வராது. நான் பார்த்துக்கொள்வேன். உன் புருஷனோடு உன்னைச் சேர்த்து வைப்பேன்” என்றது. பிறகு மறைந்து விட்டது.
காமாட்சி கர்ப்பம் ஆனதை அவள் கணவன் அறிகிறான். அறிந்ததும் குதிக்கிறான். கொதிக்கிறான். ஊரைக் கூட்டுகிறான்.
ஊர்ப்பெரியவர்களின் கேள்விகளுக்குக் காமாட்சியின் ஒரே பதில் இதுதான். “நான் தப்பு செய்யவில்லை. சிவன் கோவில் புற்றில் வசிக்கும் நாகப்பாம்பைக் கையில் பிடித்து இதைச் சத்தியம் செய்வேன்.”
காமாட்சியின் வார்த்தைகளால் ஊர் புல்லரித்தது. சத்தியப் பரிசோதனைகளிலேயே இது மிகவும் ஆபத்தானது. சொன்ன வார்த்தை பொய்யென்றால் நாகம் உடனே கொத்தி விடும். அடுத்த நொடி மரணம்.
சொன்னது போலவே நாகப்பாம்பைக் கையில் பிடித்து “தான் தப்பு செய்யாதவள்” என்று சத்தியம் செய்கிறாள் காமாட்சி. “தன் கணவனையும், இதோ இப்போது கையிலிருக்கும் பாம்பையும் தவிர வேறு யாரையும் தொட்டதில்லை” என்கிறாள். சாமர்த்தியான பதில். நாகம் அவளைக் கொத்தவில்லை. மாறாக, காமாட்சியின் கழுத்தில் மாலையாகக் கிடந்து தலைமீது குடை போல படம் விரித்துக் காட்சியளித்தது.
ஊரார் காமாட்சியின் காலில் விழுந்து வணங்கினார்கள். பதிவிரதையாக அவளைக் கும்பிட்டார்கள். கணவனோ நடுநடுங்கிப் போனான். அவளோடு ஒழுங்கு மரியாதையாகச் சேர்ந்து வாழ்ந்தான்.
இதுதான் காமாட்சி கதையின் சாராம்சம். காமாட்சியைக் கணவனோடு சேர்த்து வைத்த நாகம், பிறகு அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைக் கண்டு பொறாமையும், துயரமும் கொண்டு காமாட்சி படுத்திருக்கும்போது கட்டிலுக்குக் கீழே தொங்கிய அவளது கூந்தலில் தூக்குப் போட்டுச் செத்துவிடுகிறது என்று கதை மேலும் நீள்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். புராண இதிகாசங்களில் நடத்தப்படும் பத்தினிப் பரிசோதனைகளை- சீதை தீக்குளித்தது போன்றவற்றை - காமாட்சியின் கதை பரிகாசம் செய்கிறது.
அகிலிகை கதையில் இந்திரன், அகலிகை இருவரும் சபிக்கப்படுகிறார்கள். காமாட்சி கதையில் ‘கள்ள நாகராஜன்’ பிடிபடவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. காமாட்சியோ பத்தினி அந்தஸ்து பெறுகிறாள்.
பாதிக்கப்பட்டவர்கள் - குறிப்பாக பெண்கள் நெகிழ்ந்த முடிவுகளின் பக்கமே நிற்கிறார்கள். நாட்டுப்புறப் பண்பாட்டில் பெண்களின் குரலும் கேட்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நவீனத்துவம், முதல் இலைவிட்டு துளிர்த்தபோதே நெகிழ்வுதான் ரத்த ஓட்டம் எனப்தைப் புரிந்து கொண்டிருந்தது. ‘நெகிழ்வுதான் இயல்பு’ என்ற கருத்தைச் சொல்லி, தமிழ் வாசிப்பு உலகில் விவாதங்களுக்கான மேடையமைத்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அறிவோம்.
மகாகவி பாரதியும் ஒரு புகழ்வாய்ந்த கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதையோடு விவாதத்தை பேரா.மாடசாமி மேலும் தொடர்கிறார்.
(தொடர்ச்சி நாளை)
பதிவர் புதுவை ஞானகுமாரனுக்கு அஞ்சலி!
புதுவையில் அவரது குடியிருப்புக்கு அருகே ஏராளம் காட்டு நத்தைகள் ஊர்ந்து செல்வது வழக்கம். அதிகாலை கண் விழித்து எழுந்ததும், கொல்லைப்புறம் கதவு திறந்து காலைக் கீழே வைத்தால் அவை நெரிபட்டுப் போவது நாகசுந்தரத்தை மகிவும் பாதிக்கும் விஷயம். மனைவி உள்பட மற்றவர் அனைவரும் சலித்தும், அருவருத்தும் எச்சரிக்கையோடு அவற்றைக் கடக்கவும் இயலாமல், மிதிக்கவும் கூடாமல் படும் அவஸ்தைக்கு அவர் அன்றாடம் அதிகாலையில் தமக்கு ஒரு சிறப்புப் பணியை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். சிறு நுண்துளைகள் போட்ட பிளாஸ்டிக் உறை ஒன்றை எடுத்துக் கொண்டு பொறுமையாக ஒவ்வொரு நத்தையாகப் பக்குவமாக எடுத்து அதில் இட்டு நிரப்பிக் கொண்டுபோய், ஆற்றங்கரையில் இங்கே பத்து, அருகே பத்து, வேறிடத்தில் ஒரு பத்து என்று அவற்றை ஒரு பிஞ்சுக் குழந்தையைக் கையாளும் இதம் பதத்தோடு விட்டு விட்டு வந்து விடுவாராம்.
புதுவை ஞானகுமரன் என்னும் பெயரில் வலைப்பக்கம் எழுதிவந்த நாகசுந்தரம் அவர்களைப்பற்றி அவரது நண்பரும் தோழருமான ராம்கோபால் இப்படி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
புதுச்சேரி வில்லியனூர் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். புடுவை ஞானகுமாரன், வில்லியனூரான் என்னும் புனை பெயர்களில் 10க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியான இவர், பல்வேறு கலை இலக்கிய அமைப்புகள், ஜனநாயக சக்திகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தவர். சிந்தனையாளன் என்னும் பெயரில் வெகுஜன ஊடகங்களிலும் எழுதி வந்திருக்கிறார்.
நாகசுந்தரம் அவர்கள் நேற்று சனிக்கிழமை நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு காலமாகியிருக்கிறார். அவருக்கு இறுதி அஞ்சலி, இன்று காலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது.
புதுவை ஞானகுமாரன் வலைப்பக்கத்தில் மனிதநேயமும், சுற்றுப்புறச்சூழல் குறித்த அக்கறையும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான கோபமும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன.
பதிவர் புதுவை ஞானகுமாரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்!
இதுபோல ஒரு செப்டம்பர் 24ம் தேதி சாயங்காலத்தில்தான் தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்றோடு சரியாக இரண்டு வருடம் முடிந்து இருக்கிறது.
614 பதிவுகள். ஐந்து லட்சங்களைத் தாண்டிய ஹிட்ஸ். 662 சகபயணிகள். இவைகளை என் எழுத்தின் மதிப்பாகப் பார்க்கவில்லை. இவை அளவுகோல்களும் இல்லை. உங்கள் அனைவரின் ஆதரவாகவேப் பார்க்கிறேன்.
என்னை விட மிக அற்புதமாகவும், அர்த்தபூர்வமாகவும், ஆழமாகவும், அடர்த்தியாகவும் எழுதுகிறவர்கள் எத்தனையோ பேர் இங்கு இருக்கின்றனர். அவர்களுக்குரிய மரியாதையையும், ஆதரவையும் வலையுலகம் கொடுக்கவில்லை என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.
காலங்களுக்குள் எட்டிப் பார்க்கிறபோது முன்னே இருக்கிற என் கணிணித்திரை காணாமல் போகிறது. வலைப்பக்கங்களும், பதிவுகளும், பின்னூட்டங்களும் என எம்மனிதர்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு, எவ்வளவு எழுத்துக்கள். அவைகளில் இருந்து எழுகிற எத்தனை எத்தனை பிம்பங்கள், காட்சிகள்.
ஏற்கனவே கொஞ்சம் அச்சில் எழுதியிருந்தாலும், வலையுலகம் முற்றிலும் புதிது. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த எனக்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தி ஆரம்பகாலத்தில் கூடவந்து நின்றவர்கள் முக்கியமானவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக வலையுலகின் புதிர்கள் தெளிவாக, கண்ணில் பட்டவர்களையெல்லாம் கவனித்தேன். என் அறிவுக்குப் பட்டதை சொல்லித் திரிந்தேன்.
என் கருத்துக்களையும் பார்வைகளையும் இங்கே முடிந்தவரை சுதந்திரமாகவே பகிர்ந்திருக்கிறேன். முரண்பட்டு எதிர்வினையாற்றி இருக்கிறேன். இது தேவையில்லை என மௌனமாயிருந்திருக்கிறேன். அருவருப்படைந்து ஒதுங்கிப் போயிருக்கிறேன். கோபம் கொண்டு வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்திருக்கிறேன். ஏன் இத்தனை கோபம் என வருந்தி இருக்கிறேன். இன்னும் சரியாக கோபப்படவில்லையோவென ஆதங்கப்பட்டும் இருக்கிறேன். எல்லாமும் சேர்ந்துதான் நானும், தீராத பக்கங்களுமாய் இருக்கிறோம். இன்னும் பக்குவப்படவும், அழுத்தம் பெறவும் வேண்டியிருக்கிறது.
நண்பர்களை இங்கு புதிது புதிதாகப் பெறமுடிந்தது. அவர்களோடு பழகவும் முடிந்தது. உரையாட வாய்த்தது. காலப்போக்கில் சிலரை இழக்கவும் நேரிட்டது. கருத்துக்களைத்தாண்டி, நபர் சார்ந்து சொற்கள் பிறக்கும்போது முகம் தொலைக்க வேண்டி வருகிறது. இது எனக்கும், எல்லோருக்கும்தான். எவ்வளவு இனிமையானவையாய் இருந்தாலும், கசப்பானவையாய் இருந்தாலும் இந்த அனுபவங்கள் அனைத்தும் முக்கியமானவையே. இவைகளிலிருந்துதான் ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் பிறக்கிறது.
முகமறியாது, கருத்துக்களால் மட்டுமே பழகும் இந்தப் பெருவெளியை நான் நேசிக்கிறேன்.
எல்லோருக்கும் தீராத பக்கங்களின் அன்பும், நன்றியும்!
வம்பரங்கம் -7
பெரும் உயிர்ப்பலிகளோடு காஷ்மீர் மக்களின் போராட்டம் உக்கிரமாகிக்கொண்டு இருக்கிறது. அயோத்தி தீர்ப்பு குறித்த அறிவிப்பிலும், அரசு எடுத்த நடவடிக்கையிலும் லட்சணங்கள் தெரிகின்றன. காமன்வெல்த் போட்டியில் உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு ஊழல்களும், வீரர்களுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமபலமாகின்றன. உணவு தானியங்கள் அரசின் கிடங்குகளில் அழுகிப்போனாலும், ஏழை மக்களுக்குக் கொடுக்க முடியாது என உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் பின்னாலும் பிரதமர் அடம்பிடிக்கிறார். சொல்லிக்கொண்டே போகலாம்.....
ஆனாலும் மன்மோகன்சிங்தான் உலகின் சிறந்த நிர்வாகியாம். அமெரிக்க அமைப்பு சர்டிபிகேட்டும், விருதும் கொடுத்து விட்டது! எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க...!
அயோத்தி: அன்சாரி காத்திருக்கிறார்!
‘ஊர்வலம், பேரணிகளுக்குத் தடை’, ‘கேன்களில் டீசல், பெட்ரோல் விற்கத் தடை’, ‘மொத்தம் மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்பத் தடை’ என அரசின் ஏகப்பட்டத் தடைகளோடு நாடு முழுவதும் பெரும் எச்சரிக்கை முஸ்தீபுகள் செய்யப்பட்ட ‘அயோத்தி’ வழக்கின் தீர்ப்புக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் ஒரு இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. அந்த தீர்ப்பு குறித்து இன்னொரு தீர்ப்பு வருவதற்கு இந்த நாடு இனி காத்திருக்க வேண்டும். பொறுமையற்ற, கொந்தளிப்பான, எரிச்சல்மிக்க, சொல்லப்போனால் இதற்கெல்லாம் அவசியமற்ற இந்த நேரத்தில், தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒரு மனிதரைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும்.
1961ல் தொடுக்கப்பட்ட ‘அயோத்தி வழக்கின்’மனுதாரர்களில் உயிரோடு இருக்கும் ஒரே மனிதரான ஹசீம் அன்சாரி. ‘மசூதியைக் காட்டிலும் தேசமே முதன்மையானது’ என்று சொல்வதைக் கிண்டலாகவோ, நடிப்பாகவோ பலரும் கருதக்கூடும். அயோத்தியில் இருக்கும் அவரது வீட்டை இப்போது செய்தியாளர்கள் திரும்பவும் முற்றுகையிடுகின்றனர். ஊடகங்களின் கூத்துக்கள் அனைத்தையும் கடந்தகாலங்களில் பார்த்துவிட்ட அவர், வர இருக்கிற ‘அயோத்தி தீர்ப்பு’ தவிர மற்ற விஷயங்களையேப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“நேற்று கியான்தாஸை சந்தித்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன்” என்று அவர் சாதாரணமாகச் சொல்கிறார். தாஸ் வேறு யாருமில்லை. ‘அகரா பரிஷத்தின்’ தலைவரும், புகழ்பெற்ற ஹனுமன் கோவிலின் குருக்களுமாவார். இந்த சர்ச்சையில் எதேனும் தீர்வு குறித்து அவர்கள் இருவரும் பேசியிருக்கக் கூடுமோ என நினைக்கத் தேவையில்லாமல் அவரே சொல்கிறார். “நீதிமன்ற வழக்கு தனி. அதனை எங்களுக்கிடையே அனுமதிப்பதில்லை. கொஞ்சம் கூட சந்தேகப்பட முடியாத உணர்வுகளை அவர் முகத்திலும், குரலிலும் பார்க்க முடிகிறது.
“எங்களிடையே கசப்புகள் இருந்ததில்லை. வழக்கு ஆரம்பிக்கும்போதும் நண்பர்களாயிருந்தோம். வழக்கு நடந்த காலங்களிலும் நண்பர்களாயிருந்தோம்” இப்படித்தான் இதர மனுதாரர்களோடு அவரது நட்பும், உறவும் இருந்திருக்கிறது. அயோத்தியின் உள்ளூர்வாசிகள் ஹசீம் அன்சாரியைப் பற்றி நிறையச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாலையிலும் ‘திகம்பர அகாராவின்’பரமஹன்ஸ் தாஸ் வீட்டுக்கு அன்சாரி சைக்கிளில் சென்று சீட்டு விளையாடுவாராம்! “நானும் பரமஹன்ஸும் சைக்கிளில் கோர்ட்டுக்கு ஒன்றாகவேச் செல்வோம். நான் அழுத்துவேன். அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார். ஒருதடவை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை அவர் கொண்டு வரவில்லை. நான் என்னிடமிருந்ததை நகலெடுத்துக் கொடுத்தேன்” என நினைவு கூர்ந்த அன்சாரி “அப்போதெல்லாம் சூழல் சேதமடையவில்லை” என்கிறார்.
அவரது வீட்டிலிருந்து ரோட்டைக் கடந்தால் இருக்கும் ‘பிரச்சினைக்குரிய இடத்தை’ அணுகுவதற்கு இன்று நான்கு அடுக்குகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவைகளைப் பார்த்தவாறே, 1949 டிசம்பரில் கடைசியாய் அவர் மசூதிக்குச் சென்ற நாளை எண்ணிப் பார்க்கிறார். அன்று இரவுதான் ராம்தாஸ் என்னும் உள்ளூர் சாது ஒருவன் மசூதியின் சுவர்களைத் தாண்டி உள்ளே சென்று ராமர் சிலைகளை வைத்ததாகவும் சொல்கிறார். அது நடந்து 12 வருடங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர், “இது உள்ளூர் பிரச்சினை. பிரச்சினையின் முகத்தையே அரசியல்வாதிகள் மாற்றிவிட்டனர். இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இப்பிரச்சினையை வேறு வகையில் கையாண்டிருப்போம்” என்கிறார். குளத்தைத் தேடி வரும் மீன்களைப் போல அரசியல்வாதிகளைச் சித்தரிக்கிற அன்சாரி “எப்படி குளத்தைவிட்டு மீன்கள் வெளியே இருக்க முடியும்” எனச் சிரிக்கிறார்.
அயோத்தி, அதன் வழக்கமான கதியில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர். குல்தீப்சிங் என்னும் ஜவான், “இப்போது அமைதியாக இருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு வேறு மாதிரியாகலாம். நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.
நகரத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் பதற்றம் தன்னை அணுகாமல் அன்சாரி இருக்கிறார். ‘செப்டமர் 24 தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். இத்தோடு முடியட்டும் என ஆசைப்படுகிறேன். ரொம்ப காலமாக இழுத்துக்கொண்டு இருக்கிறது. 1947க்கு முன்னால் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்களாக அழைக்கப்பட்டனர். மீண்டும் அப்படியொரு காலம் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்கிறார்.
“ஒருவேளை முஸ்லீம்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு இருக்குமானால், நீங்கள் உச்சநீதிமன்றம் செல்வீர்களா?” என்று அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. உடனடியாக, “மாட்டேன். அரசியல்வாதிகள் மேலும் அரசியல் செய்யட்டும். சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லட்டும். நான் இதனோடு 49 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். ஒரு முடிவுக்கு வருவதையே விரும்புகிறேன்” என மறுக்கிறார். அவரது வீட்டு முகப்பில் இருக்கிற துருப்பிடித்த உலோகத்தட்டில் இருக்கும் ‘முகமது ஹசீம் அன்சாரி, மனுதாரர், வழக்கு எண் 4/89’ என்ற எழுத்துக்களும் சரியாகத் தெரியாமல் அன்சாரியின் களைப்பைச் சொல்கின்றன.
ஆதாரம் : Hashim Ansari -- A Long Wait (அவுட்லுக்)
அதென்ன கள்ளக்காதல்?
சில வார்த்தைகள் மட்டும் இல்லாவிட்டால் நமது ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் கதியற்று, மூச்சுமுட்டித்தான் போகும் போலிருக்கிறது. அந்த வார்த்தைகளுக்குள் லேகியச் செய்திகளை அடைத்து அடைத்து விற்றுத் தீர்த்து ‘நம்பர் ஒன் நாளிதழ்’ என்றோ, ‘செய்திகளை உடனுக்குடன் தருவது’ என்றோ மார்தட்டிக் கொள்கின்றன. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும், கற்பிக்கப்படும் தவறான புரிதல்களும் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அதிலும், இந்த ‘கள்ளக்காதல்’ என்னும் வார்த்தைப் பிரயோகம் இருக்கிறதே, ஐயய்யோ... உலகமே அதில்தான் சுற்றிச் சுழல்வதாய் பக்கத்துக்குப் பக்கம் கொட்டிக் கிடக்கிறது.
கள்ளப்பணம், கள்ளக்கடத்தல் என்பதுபோல் காதலுமா. காதல் என்றால் அன்பு. குறிப்பாக ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. அப்படித்தான் பொதுவாக சொல்லப்பட்டு இருக்கிறது. அன்பிலுமா கள்ளத்தனம்? அப்படியானால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
இந்தக் கேள்வியை, கூகிள் பஸ்ஸிலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்ட போது, நண்பர்கள் சமூகம் விதித்த ஒழுங்குகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் மாறான காதல் என்றும், ஒருவரோடு உறவு வைத்துக்கொண்டே இன்னொருவரோடு உறவு வைத்துக்கொள்வது எனவும் தங்கள் புரிதல்களைச் சொன்னார்கள்.
சமூகம் நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கும் பொதுப்புத்தியில் இருந்தே கருத்தாக்கங்கள் வெளிப்படுகின்றன. ‘கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக் கொலை’, ‘மாயமான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏரிக்கரையில் பிணமாகக் கிடந்தார் - கள்ளக்காதல் காரணமா?’, ‘கள்ளக்காதலோடு இளம்பெண் ஓட்டம்’ என்று எத்தனை எத்தனை சம்பவங்கள் நம் மண்டைக்குள்ளும், நரம்புக்குள்ளும் ஏற்றிவைக்கப்படுகின்றன. இந்தச் செய்திகளின் வரிகளுக்கு இடையில் உடல் இச்சை கொண்ட ஒரு ஆணையும், பெண்ணையும் சேர்த்தே நாம் வாசிக்குமாறு பழக்கி வைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உடல் இச்சைதான் ‘கள்ளக்காதல்’ என்பதாக நமக்குள் பொறி தட்டுகிறது.
உடல் இச்சை காரணமாகவும் இருக்கலாம். ஆனால் ஆண், பெண் உறவுகளின் சிக்கல்களை அறிவதையோ, புரிவதையோ விட்டு ஒற்றை வரியில் எல்லாவற்றையும் உடல் இச்சை என்று முடிவு கட்டும் அல்லது தீர்ப்பு வாசிக்கும் சொல்லாக இருக்கிறது இந்தக் ‘கள்ளக்காதல்’. காதலின் வழியாக ‘கள்ளக்காதலின்’ அர்த்தம் காணாமல், ‘கள்ளக்காதல்’ வழியாக காதலின் அர்த்தம் காணும் அளவுக்கு நாம், இந்த வார்த்தைப் பிரயோகங்களுக்குள் ஊறித் திளைத்துப் போயிருக்கிறோம். அதுதான் காதல் என்றால் மேலோட்டமாக ஒன்றையும், ஆழத்தில் வேறொன்றையும் வைத்திருக்கிறோம்.
செம்மீன் படத்தில், வேறொருவனுக்கு மனைவியான கருத்தம்மாவின் நினைவில் பரீக்குட்டி பாடும் ‘மானஸ மைனே வரு, மதுரம் நுள்ளித் தரு, நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே’வில் உருகிப்போகிறோம். சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலா நாவலில், இராணுவத்துக்குச் சென்ற கணவனையும் அவனது குடும்பத்தையும் விட்டு, ஸ்தெப்பிப் புல்வெளியில் தானியாரோடு ஜமீலா செல்வதை இரு பறவைகளின் அழகாகப் பார்க்கிறோம். அதே நாம்தான் தினசரிகளில் செய்திகளைப் படித்து முகம் சுளிக்கிறோம் அல்லது கீழ்த்தரமாக ரசிக்கிறோம். இது விநோதம் இல்லையா?
கள்ளமழை என்றோ, கள்ளக்காற்று என்றோ யாரும் சொல்வதில்லை. காதல் அந்த வகை. மற்றது வேறு வகை.
ராமரோ... பாபரோ...
மாயாண்டிக் கொத்தனாரோடு இருந்த வரைக்கும் தொடர்ந்து வேலை இருந்தது குருசாமிக்கு. ஒண்ணுக்கு இருக்கப் போனால் கூட வேலை சுணங்குவதாய் சத்தமிட்ட அவரிடம் சென்ற வாரம் ரோஷம் காட்டிய பிறகு கதை கந்தலாகிப் போனது. ராமசாமி டாக்டர் வீட்டில் பார்த்த அந்த வேலைக்கப்புறம் இரண்டு நாட்கள் தன் ரோஷத்தையே நொந்துகொண்டும், வீட்டில் மனைவியின் புலம்பல்களைக் கேட்டுக்கொண்டும் வெறுப்பில் கழித்தார்.
இந்த மூன்று நாட்கள் சுப்புக்கொத்தனார் புண்ணியத்தில் ஒருவழியாய் ஓடி அடைந்தது. மசூதித்தெருவில் இப்ராஹிம் வக்கீல் வீட்டு மாடியில் பாக்கியிருந்த பூச்சு வேலையும் இப்போது முடிந்துவிட்டது. காலையிலிருந்து நின்றபடியே சாந்து பூசியதில் கழுத்தும் குறுக்கும் வலித்தாலும், கூலி வாங்கி சைக்கிள் அழுத்தும்போது தெரியவில்லை.
வழியில், ஆளும் பேருமாய் அவரும் நின்று கட்டிய வீடுகள் எதிர்ப்பட்டன. குழந்தைகள் விளையாடியபடியோ, பெண்கள் வாசலில் நின்றபடியோ, மரங்கள் அடர்ந்து சிரித்தபடியோ அவை கடந்து சென்றன. பார்த்துக்கொண்டே சென்று, பஜாரின் நெரிசலுக்குள் கரைந்தவர், பிள்ளையார் கோவில் அருகில் உள்ள டீக்கடையில் போய் நின்றார்.
அப்போதுதான் போட்டிருந்த போண்டாவை எடுத்து ஒரு துண்டு பேப்பரில் வைத்து பதமாய் அழுத்திக்கொண்டு டீயொன்று போடச் சொன்னார். போண்டோவை மென்றபடி எண்ணெய் உறிந்த பேப்பரை கசக்கி எறிந்தார். அதில், ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதை அறிவித்து, ‘நமது லட்சியம் மற்றும் நமது செயல்களிலிருந்து பிறழ்வதற்கு காரணமாகும் வகையில் எவரும் பேசவோ அல்லது செயலாற்றவோ வேண்டாம்’ என அவரது நாட்டின் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வீடு கட்ட மட்டுமேத் தெரிந்த அவர், அடுத்தநாள் கவலை தொற்றிகொள்ள டீ குடித்துக் கொண்டிருந்தார்.
‘முடி’ந்த காதல் கதை
சின்ன வயதில் இருந்தே தாழமுத்துத் தாத்தா தெரியும். தூரத்துச் சொந்தம். பிரியமான மனிதராய்த்தான் இருந்தார். எனக்கு முடி கொட்ட ஆரம்பித்த பிறகுதான் அவரைப் பார்த்தாலே எரிச்சல் வர ஆரம்பித்தது. எப்போது பார்த்தாலும் எதாவது சொல்லி, என் தலையைக் கிண்டல் செய்வதை வழக்கமாய் வைத்திருந்தார். கோபம் கோபமாய் வரும். சுத்தமாய் வெள்ளை முடிதான் அவருக்கு. கொஞ்சம் கூட கொட்டாமல் அடர்த்தியாய் இருந்தது.
அவருக்கு வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதை அவரே ஒரு விடுகதை போல போடுவதைக் கேட்க வேண்டும். அவருக்கு இருபது வயதில் கல்யாணம் என்பார். கல்யணாம் ஆகி ஒரு வருசத்தில் மூத்த மகள் மங்களம் பிறந்தாள் என்று சொல்லி, மங்களத்துக்கு பதினேழு வயதில் கல்யாணம் என்பார். இரண்டு வருடம் கழித்து அவளுக்கு காத்தவராயன் பிறந்தான் என்பார். அவனுக்கு இருபத்தைந்து வயதில் கல்யாணம் எனத் தொடர்வார். இப்போது காத்தவராயன் மகன் ராஜேஷின் வயதைச் சொல்லி ஒவ்வொன்றாய் கூட்ட ஆரம்பிப்பார். வாழைக்குலை, கத்திரிக்காய், கருப்பட்டிக் கொட்டம் என பார்த்த வியாபாரக் கணக்கெல்லாம் உதவிக்கு வந்து நிற்கும். கடைசியாய் ‘இந்த பங்குனி வந்தா எம்பத்தாறு’ என்று சொல்வார். ஆலமரமாய் இந்த ஊரில் அவர் இருக்க, விழுதுகள் எங்கெங்கோ வேர்பிடித்து இருக்கின்றன. மனைவி, இரண்டு மகன்கள், சில பேரக்குழந்தைகள் மறைந்து போயிருக்கிறார்கள்.
நம்பவே முடியாது. இந்த வயதிலும் தாழமுத்துத் தாத்தா சைக்கிளில் நாதன்கிணற்றிலிருந்து தளவாய்புரத்திற்கும், தண்டபெத்துக்கும் சைக்கிளிலேயே போய் வந்துவிடுகிறார். ராத்திரியில் ஆறுகட்டை பேட்டரியோடு, சப்சப்பென்று ரப்பர் செருப்புச் சத்தமிட வாழைத்தோட்டத்துக்கு தண்ணிர் பாய்க்கச் செல்கிறார். மேல்ச்சட்டையோடு அவரைப் பார்த்த ஞாபகம் ஊருக்குள் யாருக்கும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு செருமலுடன் தாழமுத்து தாத்தா முத்தாலம்மன் பஸ் நிறுத்தத்தின் சிமெண்ட் பெஞ்சில் தோள் துண்டை விரித்துப் படுத்து, வேப்பமரத்தை அண்ணாந்து பார்த்துத் தூங்கிப்போவார். அப்படியொரு நாளில்தான் அவரது இளவயதின் காதல் கதையைச் சொன்னார்.
“தாத்தா அந்தக் காலத்துல இந்த முடிக்கே பொம்பளப்பிள்ளைய எல்லாம் ஒங்கள மொய்ச்சிருப்பாங்களே” என்று நான் வேடிக்கையாய் கேட்டதிலிருந்துதான் ஆரம்பமானது. என்னையேப் பார்த்தவர், மெல்லச் சிரித்தவாறே “ஆமாம்லே, ஒரு சிலோன்காரி என்னை அப்படிக் காதலிச்சாத் தெரிமா...” பெரும் ரகசியம் போலச் சொன்னார். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அப்படியே தரையைப் பார்த்து உட்கார்ந்திருந்தவர் மெல்ல ரசித்துத் திரும்பவும் சிரித்துக்கொண்டார். அதைத் தொந்தரவு செய்ய விரும்பாவிட்டாலும், சுவாரசியம் விடவில்லை. “எப்ப தாத்தா..” என்றேன்.
“அப்ப நான் மெட்ராசில ஒரு கமிஷங்கடையில வேலைக்கு இருந்தேன். இருவது இருவத்திரண்டு வயசு போலத்தான் இருக்கும். எப்படி இருப்பேன் தெரிமா! ஒரு நா வீட்டுக்கு வா, கோர்ட்டு சூட்டு போட்டு, டையில்லாம் கட்டி ஒரு போட்டோ எடுத்து வச்சிருக்கேன் பாரு” அவரது முகம் பொங்கிக்கொண்டு இருந்தது.
“கடைக்குப் பக்கத்துல ஒரு பெரிய வீடு. அங்கதான் அவ இருந்தா. என்னப் பாக்கும்போதுல்லாம் சிரிப்பா. நானுஞ் சிரிப்பேன். அவங்க வீட்டுலத்தான் கடைக்குத் தண்ணி பிடிப்போம்.” தொண்டையைச் செருமிக்கொண்டுத் தொடர்ந்தார். “இப்பிடி இருக்கும்போது ஒருநா என்னைப் பாத்து ஒங்க முடி நல்லாயிருக்குன்னுச் சொல்லிப்புட்டா. சட்டுன்னு பதிலுக்கு, நீயும் ரொம்ப அழகாயிருக்கேன்னு நாஞ்சொல்லிட்டேன்.” சிரித்துக்கொண்டார். அந்தத் தனிமையில் அவர் குழந்தையாகியிருந்தார். “என்ன பேராண்டி, இந்தக் கெழவன் எவ்ளோ சேட்டை செஞ்சிருக்கான்னு பாக்குறியோ” என மெல்லிய குரலில் கேட்டார். “ச்சே..இல்ல. அப்புறம்..” என்றேன்.
“அப்புறம்தான் அவளப்பத்தித் தெரிஞ்சுது, அவளோட அப்பா அம்மா எல்லாம் சிலோன்ல இருக்குறாங்கன்னும், அவ மெட்ராசுல அவங்க சித்தப்பா வீட்டுல இருந்து டாக்டருக்குப் படிக்கிறான்னும்” என்றார். “டாக்டரா...!” எனக் கேட்டேன். குரலிலிருந்த ஆச்சரியம் அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். சந்தோஷம் கண்களில் தெரிந்தது. “ஆமாம்லே.. நானும் அவளும் சினிமா, பீச்சுக்கெல்லாம் போயிருக்கோம் தெரிமா” என்றார் பெருமையோடு.
அமைதியானவர் அப்படியே மெல்ல அந்த மரத்தடி பெஞ்சில் படுத்துக்கொண்டார். “என்ன தாத்தா, படுத்துட்டீங்க.. சொல்லுங்க“ என்றேன். ஒன்றும் பேசாமல் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். தொண்டை எலும்பு துருத்திக்கொண்டு மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது. “என்னத்தச் சொல்ல... ம், அப்புறம் ஒருநா அவ சிலோனுக்கு போயிட்டா. அவ்ளோதான். முடிஞ்சுபோச்சு.” என்று ஒருக்களித்துப் படுத்தார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரே எதாவது சொல்வார் என இருந்தேன்.
“போகும் போது, ஒங்க நெனைவா எதாவது தாங்கன்னு சொன்னா. ஏங்கிட்ட என்ன இருந்துச்சு கொடுக்க. எம்முடியைத்தான் கொடுத்தேன்.” எனத் திரும்பியவர் கண்கள் கசிந்துகொண்டு இருந்தன. என்ன நினைத்தாரோ, எழுந்து உட்கார்ந்து “சரி, நீ போய்ட்டு வா பேராண்டி!” என வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். தூரத்துச் சந்தில் ஒற்றையாய் அவர் மறைந்து விட்ட பின்னரும், நான் அவரோடு சென்றுகொண்டிருந்தேன்.
இரண்டு நாள் கழித்து, குரும்பூருக்குச் செல்லும் வரும் வழியாக உச்சி வெயிலில் சைக்கிள் அழுத்தி வந்துகொண்டிருந்த தாழமுத்துத் தாத்தாவைப் பார்த்தேன். அருகில் வந்ததும் நிறுத்தி, “பேராண்டி, இன்னிக்கு ஒம்மண்டை ரொம்ப கிளாரடிக்கு. நீயும் எந்தப் பொண்ணுக்காவது முடியைக் காணிக்கைச் செஞ்சிருக்கலாம்ல” எனச் சிரித்துக்கொண்டே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தார். அவரது முடிகள் காற்றில் லேசாக அசைய ஆரம்பித்தன. ஏனோ சந்தோஷமாய் இருந்தது.
தமிழ்ச் சினிமாவில் ரசித்த காட்சிகள் - 2
இப்போதும் தமிழ்ச்சினிமாவைப் பற்றி பேசுகிற பலரும் ’உதிரிப் பூக்கள்’ படத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. இதுபோன்ற படங்களும் தமிழில் வந்திருக்கின்றன என்பதுதான் சொல்லிக்கொள்ளும்படியாகவும், ஆறுதலான விஷயங்களாகவும் இருக்கின்றன. பிரம்மாண்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு படம், நம் நினைவுகளில் காலங்களைத் தாண்டியும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. மகேந்திரன் அவர்கள் இயக்கிய இரண்டாவது படம் இது.
அந்தக் குழந்தைகளின் தாய் அஸ்வினியின் மரணமும், தந்தை விஜயனின் மரணமும் படமாக்கப்பட்டு இருக்கும் விதம் சினிமாவின் மொழி எவ்வளவு வலிமையானது எனபதைச் சொல்கின்றன. இளையாராஜா அவர்களின் பின்னணியும், மௌனமும் அப்படி காட்சிகளோடு ஒன்றிப் போகின்றன.
அழகிய கண்ணே பாடலின் மெட்டு ஒலிக்க, அந்தக் குழந்தைகள் நதிக்கரையில் நடந்து செல்லும் கடைசிக்காட்சி, எதையோ பறிகொடுத்தவர்களைப் போல நம்மை அலைக்கழிக்கிறது. ஊருக்கேப் பிடிக்காமல் போன ஒருவனின் மரணமும் எவ்வளவு வலி நிரம்பியதாக இருக்கிறது.
தமிழ்ச்சினிமாவின் உன்னதங்கள் இவை. ஒவ்வொரு அசைவு குறித்தும் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன இங்கே.
(1)
(2)
ஒரு மாவீரனின் கதை
ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். ஊருக்குள் சிம்ம சொப்பனமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவர் அவர். பண்டாரவிளை வைத்தியத்தில் குணமானாலும் இன்றும் லேசாக தெத்தி தெத்தித்தான் நடக்க முடிகிறது. அப்புறம் தேரியில் முந்திரி மரம் ஏலம் எடுக்கும் தகராறில் சண்டியன் குருசாமியை மந்தையில் வைத்து அரிவாளால் லேசாய் தோள்பட்டையில் வெட்டி விட்டான். இப்படித் தொடங்கிய அவனது பராக்கிரமங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நீண்டு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு ரெகார்டுகளில் பதிந்து பதிந்து ‘ரவுடிப்பய’ என்று பேரெடுத்தான்.
யாராவது தாக்கிவிடக் கூடும் என்று சதாநேரமும் சில வெட்டிப் பயல்களோடு திரியப் போய் அவர்கள் அன்போடு “அண்ணே” என்றனர். அந்தக் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏவை வரவேற்க அடித்த போஸ்டரில் அச்சடித்திருந்த அம்பத்தாறு பேரில் இவன் பேர் மாவீரன் சுடலைமுத்து என்று இருந்தது. ஊருக்குள் அதைப் பார்த்து முதலில் சிரிக்கத்தான் செய்தார்கள். கொஞ்சநாளில் நடந்த ஊர்த் திருவிழாவுக்கு ‘மாவீரன் சுடலைமுத்து மோர்ப் பந்தல்’ என்று கொட்டகை போட்டு, தனது இருபத்தொன்பது வயதிலேயே மாவீரனாய் பேரெடுக்க ஆரம்பித்தான்.
எட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்று ஒன்றிரண்டு பெரியவர்களைத் தவிர ஊருக்குள் யாரும் சுடலை முத்து என்று அவனை கூப்பிடுவது இல்லை. கூப்பிடவும் முடியாது. மாவீரன் சுடலைமுத்துதான். அடர்ந்து முறுக்கிய மீசையும், செவ்வரி ஒடிய கண்களும், மடிப்புக் கலையாத வெள்ளைச் சட்டையும், வேட்டியும் என ஆளே ஒரு தினுசாகி விட்டிருந்தான். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அவனுக்கு பிரத்யேக மரியாதையும், அழைப்பும். இதுதான் சுடலைமுத்து, மாவீரனான வரலாறு.
சரி விஷயத்துக்கு வருவோம். சம்பவத்தன்று மாவீரன் காலையில் எழுந்ததும் லுங்கியோடு தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான். நேற்றிரவு அடித்த ஓ.சி.ஆரும், அது அடங்க நடு இரவில் களக், களக்கென குடித்த செம்புத் தண்ணீரும் முட்டிக்கொண்டு வந்திருக்கிறது. என்றுமில்லாமல் அந்த நேரம் பார்த்து அங்கு முருங்கை இலை பறிக்க சக்திக்கனியக்காவும், கோமதியும் நின்றிருந்திருக்கிறார்கள். ஒதுக்குப்புறமாய் கொஞ்சம் தள்ளிப் போவோம் என்று படலையை விலக்கி, பக்கத்தில் இருந்து முடுக்குப் பக்கம் சென்றிருக்கிறான். அங்கேதான் விதி தனது விளையாட்டை ஆரம்பித்தது. பெட்டிக்கடை அருணாச்சலத்தின் கோழி தனது குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருக்கிறது. தரையை தாய்க்கோழி கால்களால் கீறிக் கீறி விட, குஞ்சுகள் அந்த இடத்தில் பாய்ந்து பாய்ந்து கொத்திக் கொண்டிருந்தன.
மாவீரன் வாகாக லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டி, லேசாய் செருமிக் கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த தாய்க்கோழி என்ன நினைத்ததோ தெரியவில்லை. இறக்கைகள் எல்லாம் சிலிர்த்து ஆவேசமாய் அவன் மீது பாய்ந்திருக்கிறது. எதிர்பாராத மாவீரன் “ஏ..அம்மா” என்று நிலை தடுமாறி சரிந்திருக்கிறான். விலகிப்போன கோழி திரும்பவும் ஆக்ரோஷமாய் அவன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மாவீரன் எழுந்து, அவிழ்ந்த லுங்கியை ஒரு கையில் பிடித்தபடி படலையத் தாண்டியிருக்கிறான். லுங்கி படலையில் சிக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் லுங்கியை அங்கேயே விட்டுவிட்டு ஒடியிருக்கிறான். கொக் கொக்கென கோழியும் விடாமல் துரத்தியிருக்கிறது.
இசக்கியம்மன் கோவில் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவன் வந்த கோலத்தைக் கண்டு என்னமோ எதோ என்று அலறி மிரண்டு, பின்னால் துரத்தி வந்த கோழியைப் பார்த்ததும் பெருங்கூச்சலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். மாவீரன் ‘ச்சீ..’ என்று அவர்களைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தான். வாய்க்காங்கரைமுத்து வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த சொர்ணத்தாயம்மாள் “சின்ன வயசுல இப்படி மணியாட்டிக்கிட்டு இவன் ஒடிப் பாத்தது” என்று பொக்கை வாய் திறந்து சிரித்தார்கள்.
தன் வீட்டுச் சந்து வந்ததும் திரும்பிப் பார்த்தான். கோழியை காணோம். அவமானம் மொத்தமாய் பிடுங்கித் தின்றது. பக்கத்தில் கொடியில் காயப்போட்டிருந்த யாருடைய சேலையையோ இழுத்துப் போர்த்திக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். முதலில் பதறி, பிறகு சிரித்த அவளது மனைவியை ஓங்கி கன்னத்தில் அறைந்து ஒரு ஒரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் தெரு, மந்தை, வயல்வெளி எல்லாம் தாண்டி தேரிக்காட்டிற்குள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பெண்கள் வரை யாவரும் சிரித்துக் கிடந்தனர். மாவீரன் வெளியே தலை காட்டவில்லை. எங்கு பார்த்தாலும் சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியே இருந்தது.
அவனது பரிவாரங்களும் தங்கள் அண்ணனைப் போய்ப் பார்த்து துக்கம் விசாரிக்கத் தயங்கினார்கள். தப்பித் தவறி அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்று யோசித்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்திருந்து வந்தார்கள். மாவீரன் குன்னிப் போயிருந்தான். தலை நிமிரவேயில்லை. பள்ளிக்கூடத்திலும் கிண்டல்களும் கேலிகளுமாய்க் கிடந்தது. மாவீரனின் குழந்தைகளுக்கு வெட்கமாய்ப் போனது. தங்கள் தாயிடம் முணுமுணுத்துத் தள்ளினர்.
சில நாட்கள் கழித்து ஒருநாள் சுடலைமுத்து மந்தைக்கு போய் ஒரு டீ குடித்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், எல்லோரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. சிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. அவனது எதிரிகளும் அவனைப் பரிதாபம் கொண்டு பார்த்தனர். பொது நிகழ்வுகளில் முகம் காட்டாமல் வீடு, தோட்டம் என்று அடைந்து கிடந்தான். யாராவது மாவீரன் என்று அழைத்தால் கொலைவெறி வந்து அடக்கிக் கொண்டான்.
எதுவும் அறியாத அந்தக் கோழியோ, மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய கதையை எழுதுவது போல தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருந்தது.
(மீள் பதிவு)
கண்ணகிகளும், எரியும் காஷ்மீரும்!
காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதக் கலவரம் போலவும், மதரீதியான பதற்றமாகவுமே, காஷ்மீர் அல்லாத இந்தியப் பகுதிகளில் தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படித்தான் என்பதாகவும் பெரும்பான்மையோர் நினைக்கின்றனர். “தொடர்ச்சியான கடையடைப்புகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அரசு நிர்வாகம் அறிவிக்கும் ஊரடங்கு உத்தரவுகளை மக்கள் மறுத்து வெளியே வருகிறார்கள் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்கள். பெண்களும், குழந்தைகளும் தெருவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?” என கேட்கிறார் முகமது யூசுப் தாரிகாமி (சி.பி.எம் மாநிலச் செயலாளர்). குமுறி, கொந்தளித்துப் போயிருக்கின்றனர் அங்குள்ள மக்கள் என்பதை இந்த தேசத்தின் அரசும், அனைத்து மக்களும் இப்போதாவது புரிந்துகொண்டாக வேண்டும். ‘தூண்டுதல்கள்’ என வசதியான ஒரு சொல்லாடலுக்குள் ஒளிந்துகொண்டு அரசு ‘திருவிளையாடல்களை’ செய்துகொண்டு இனியும் காலத்தைத் தள்ள முடியாது. ‘எப்போதும் போல’ இப்பிரச்சினையை குரங்கின் அப்பமாகக் கையாண்டால் நிலைமைகள் மேலும் மோசமடையவேச் செய்யும்.
காஷ்மீரின் வரலாறு குறித்துப் பேசும்போது, அந்த மண்ணின் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களே முக்கிய அத்தியாயங்களாய் இடம்பெறும். மாறி, மாறி வந்த ஆட்சிகளால், அந்த மக்கள் வஞ்சிக்கப்பட்ட கதைகளை வெளியே பெரிதாய் இங்கு பேசுவதில்லை. இந்தியா, பாகிஸ்தானின் அரசியலுக்குள் அந்த காஷ்மீர் மக்களின் வாழ்க்கை சிதைந்து போனதைக் காட்டுவதில்லை. ஒரு சில சம்பவங்களை பெரிது பெரிதாய் காட்டி, அங்கிருக்கும் முஸ்லீம்கள் அனைவருமே தீவீரவாதிகள் போலவும், பயங்கரவாதிகள் போலவும் இந்திய ஊடகங்களால் வெற்றிகரமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பாதுகாப்புப் படையின் வரம்பற்ற அதிகாரத்தின் கீழ் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருமே சந்தேகத்துக்குரிய பிரஜைகளாகி இருக்கின்றனர். அந்த சாதாரண மக்களின் உணர்வுகளும், உரிமைகளும் ‘மதம்’, ’பயங்கரவாதம்’, ‘தேசப் பாதுகாப்பு’ என்று சொல்லிச் சொல்லியே தட்டிக் கழிக்கப்பட்டன. அவைகள்தாம் இன்று பெருங்கோபமாய் கிளர்ந்து நிற்கிறது.
மூன்று அப்பாவி இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த வன்முறை வெடித்தது. கொதிப்பின் கடைசிப் புள்ளி இது. இத்தனை நாளும் அவர்கள் எப்படி உள்ளுக்குள் பொங்கிப் போயிருந்தார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியை அறிய, இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள்.
காஷ்மீரில் சந்தேகத்தின் பேரில், விசாரணைக்கு என்று இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் பல மூஸ்லீம் ஆண்கள் பிறகு வீடு திரும்புவதே இல்லை. பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலம் திசையற்றுப் போகிறது அவர்களுக்கு. ‘ஒருவன் கிடைத்திருக்கிறான். அவன் உன் கணவனா என்று வந்து பார்த்துச் சொல்” இப்படி நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்கள் இராணுவ முகாம்களில் என்ன ஆவார்கள் என்பதை சிந்திக்கவே முடியாது. அப்பெண்களுக்கு குடும்பங்களில், சமூகத்தில் நேரும் அவலங்கள் உயிரோடு கொல்வதாய் இருக்கின்றன. “அப்பா எங்கேம்மா” என கேட்கும் குழந்தைகளுக்கு “வருவாங்க கண்ணே” எனச் சொல்லி அந்தப் பெண்கள் காத்திருக்கிறார்கள். இதுதான் அடுல் குப்தா இயக்கிய 'waiting' என்னும் ஆவணப்படம். 2006ம் வருடம் திருவனந்தபுரத்தில் இந்தப் படத்தை முதன்முதலாய் பார்த்தபோது நிலைகுலைந்து போனேன். முட்டிக்கொண்டு வந்த கேவலை அடக்கிக்கொள்ள பிரயத்தனம் செய்தேன். காஷ்மீரின் துயரம் படம் முழுவதும் நம்மீது கொடும்பனியாய்ப் பரவி உறைய வைக்கிறது.
இப்படி விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு, தொலைந்து போன ஆண்களின் மனைவிகளை அங்கே ‘half widows' என்று சொல்கிறார்கள். தகிக்கும் பெருமூச்சோடு, ஆராய்ச்சி மணி அடித்த நம் கண்ணகியே நினைவில் வருகிறாள். அதுதான் காஷ்மீர் இப்படி பற்றி எரிகிறது போலும்.
தேரா மன்னர்களே, செப்புவது உடையது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பெண் தனியாக வாழ வேண்டுமாம்!
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பெண், குடும்பமாக இல்லாமல், தனியாக இருப்பதே சிறந்தது எனக் குரல்கள் அங்கங்கு ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. உறவுகள் பெண்களுக்கு பெரும் சுமையானவை எனும் கருத்துக்கள் அவைகளில் பொதிந்து இருக்கின்றன. ‘பெண்கள் தனியாக இருப்பதன் அனுகூலங்கள்’ என்று ஒன்-இண்டியாவில் கட்டுரை எழுதி ஒருவர் பட்டியலிட்டு இருக்கிறார்.
அவைகளில் முக்கியமானவை:
1.பின்னிரவுகளிலும் நீங்கள் வெளியே சென்று வர முடியும். வீட்டிற்கு திரும்பும் போது, உங்களை கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.
2.உருக்கமான படங்களை நண்பர்களுடன் பார்க்கும்போது, தேம்பியழலாம். யாரும் உங்களைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்.
3.ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு, விருப்பமான தொடரைப் பார்க்கலாம். கால்பந்தாட்டம் அல்லது கிரிக்கெட்டைப் பார்க்க சேனல்கள் மாற்றப்படுகிற கவலையெல்லாம் வேண்டியதில்லை.
4.உலகத்தின் எல்லா நேரமும் உங்களுக்கானது. உங்கள் தோழிகளின் பிரியத்திற்குரிய காரியங்களைச் செய்ய முடியும்.
5. காலையில் நீங்கள் விழித்தெழும்போது, நீங்கள் பார்க்க எப்படி இருக்கிறீர்கள் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லாதது மிக அருமையான விஷயம்.
6.நண்பர்களுடன் இருப்பதற்கான நேரம் எப்போதும் வாய்க்கும். அதிக நேரம் நண்பர்களுடன் இருக்க முடிவதாக, தனியாக இருக்கும் பெண்கள் சொல்கிறார்கள்.
7. பணியிடங்களில், பதவி உயர்வு பெற்று வேறு ஊர்களுக்குச் செல்லும்போது, பிரிந்து, விட்டுச் செல்கிற கவலைகள் இல்லை.
இந்தக் கருத்துக்கள் சுயம், சுதந்திரம் என்கிற பேரில் மேலோட்டமாகவேத் தெரிகிறது. இன்னும் ஆழமாக யோசிக்க நிறைய உண்டு.
இன்றைய சமூகத்தில் குடும்பம் என்கிற அமைப்பு அதிகார பீடங்களுக்கு ஒத்திசைவாய் கருத்துக்களைக் கொண்டதாகவும், பரப்புவதாகவும் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பெரும் தளைகளும், கட்டுப்பாடுகளும் விதிப்பதாகத்தான் இருக்கின்றன. இதில் ஆண்களே குடும்பத்தின் அதிகார ருசி கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
அவைகளை எதிர்த்து, அதற்குள்ளிருந்தே போராடுவதுதான் வழியாக இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்ந்து நிற்க வேண்டிய களமிது! அதற்கான போராட்டத்தை இப்போதுதான் பெண்கள் துவக்கி இருக்கிறார்கள். கேள்விகள் இப்போதுதான் பிறந்துகொண்டு இருக்கின்றன. அதை விட்டு, அதிலிருந்து விலகி ஆணும் பெண்ணும் தனித்தனி மனிதர்களாய் வாழலாம், வாழ முடியும் என்பதெல்லாம் பிரச்சினையின் தீர்வாகாது. மனிதன் ஒரு சமூக விலங்கு. இது விஞ்ஞானம்.
இன்னும் பேச நிறைய இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் பேசலாமே!
சினிமா : இரண்டு அஞ்சலிகளும், ஒரு ஆராவாரமும்
பழகித் தெரிந்த ஒருவர் பிரிந்துவிட்டதாய் இருக்கின்றன நடிகர் முரளியின் மரணத்தையொட்டி வரும் நினைவுகள். இதுதான் சினிமாவில் அவர் வந்து போனதன் அடையாளம் போல. சிரிப்பு, கோபம், சோகம் எல்லாம் அவருடைய குழந்தைத்தனமான முகத்தில் சட்சட்டென்று வந்து செல்லும். தனது சாதாரணத் தோற்றத்தினால், இயல்பான நடிப்பினால் நம்மை, நமக்கு மிகத் தெரிந்தவர்களை அவர் இனம் காட்டிக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.
‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ என போகிற வருகிற வழியெல்லாம் பாட்டு ஒலித்துக் கிடந்தாலும், பகல்நிலவு படத்திலிருந்துதான் அவரை கவனிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்த சில படங்களில் நெருக்கமானவராகத் தெரிந்தார். போஸ்டரில், பத்திரிகைகளில் பார்க்க நேரிடும்போது முரளி படமென்றால் பார்க்க வேண்டும் என நினைப்பு வரும். எத்தனை பார்த்தேன் என்று ஞாபகமில்லை. வண்ணக் கனவுகள், வெற்றி கொடி கட்டு, புது வசந்தம், ஊட்டி, இரணியன் என யோசிக்க யோசிக்க ஒன்றொன்றாக வருகிறது. அவரது முக்கியப் படங்களில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதனாக, வாழ்வுக்குப் போராடும் இளைஞனாக, கையில் கிடைத்த அற்புதத்தை தொலைத்தவனாக, தோற்றுப்போனவனாக நிழலாடிக் கொண்டிருக்கிறார். அபத்தமான படங்களென்றாலும் அவர் தனித்து தெரிந்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் பூவிலங்கு படத்தின் விமர்சனம் வந்திருந்தது. ‘ரஜினிகாந்த், விஜய்காந்த் மாதிரி ஆண்மையோடு காதலிக்கவும், வீரத்தோடு சண்டை போடவும், வருங்காலத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு பூவிலங்கு முரளி நல்ல ஆறுதல்!’ என அதில் சொல்லியிருந்தார்கள். அப்படி ஒரு பிம்பம் அவரைச் சுற்றி எழாமல் இருந்ததே முரளியின் வெற்றியாகத் தெரிகிறது.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, சங்க உறுப்பினர்களை நேரில் சந்திக்க எங்கள் வங்கிக் கிளைகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருந்தோம். ராமு என்னும் தோழர் கையோடு ஒரு கேசட் கொண்டு வந்து, காரில் ஒரு பாடலையேத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு வந்தார். “போவோமா” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலில் இருந்த உற்சாகத்தில், இயற்கையை ரசிக்கும் பரவசத்தில் நானும் நுழைந்து திளைத்துப் போனேன். “யாருங்க பாடியது” என்று கேட்க அந்தத் தோழர்தான் “சொர்ணலதா” எனச் சொல்லி அப்போது வந்திருந்த சின்னத் தம்பி படம் பற்றியும் சொன்னார். அன்றிரவு அந்தப் பாட்டுக்காகவே காரைக்குடியில் படம் பார்த்தோம். அன்றிலிருந்துதான் சொர்ணலதாவின் குரலை கண்டுகொள்ளப் பழகினேன்.
அவரது குரலில் ஒரு ஏக்கமும், தனிமையும் மிக மெல்லிய அடிநாதமாய் ஓடிக்கொண்டு இருக்கும். “நாளை இந்த நேரம் பார்த்து ஓடிவா நிலா” பாடலுக்குப் பிறகு, அப்படியொரு வெளியில் என்னை மெல்லிய சிறகாக்கி மிதக்கவிட்டது ‘மாலையில் யாரோ’தான். வள்ளியின் ‘என்னுள்ளே என்னுள்ளே’வும், அலைபாயுதேவில் வரும் ‘எவனோ ஒருவனு’ம் இந்த ஜென்மத்தில் நினைவில் இருந்து அகலாது. காலத்தை ராகத்திற்குள் இழைத்து ஓடச்செய்கிற அபூர்வமான குரல் அவருடையது. காற்றில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
சந்திரனில் போய் கால்வைத்துத் திரும்பிய ஆம்ஸ்ட்ராங்கைவிட எந்திரனில் நடித்த ரஜினிதான் பெரிய சாதனை செய்திருக்கிறாராம். அண்டசராசரங்களும் ஆரவாரித்துப் பொங்குவதைப் போன்ற பிரமையை இந்த சன் குழுமம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. எந்திரன் பட டிரெய்லருக்கு அவர்கள் படுத்தியிருக்கிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 150 கோடி ருபாயை கொட்டி, அதைவிட பன்மடங்கு திரும்பி எடுக்க பெரும் கரைச்சல் செய்கிறார்கள். திருச்சியில், கோவையில், நெல்லையில், சேலத்தில், மதுரையில், சென்னையில் என்று எந்திரன் பட டிரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புகள் எப்பேர்ப்பட்டவை! கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் என்ன, அர்ச்சனை என்ன, மேளம் என்ன, தாளம் என்ன? அகில உலகமும் தமிழ் மக்களை அண்ணாந்து பார்க்கிறார்களாம். தமிழர்களது இத்தகு பெருமைகளைத்தான் வாய் ஓயாமல் பேசிக்கொள்கிறார்களாம்.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியென்றால் மூத்த குடிதான்.
வம்பரங்கம் - 6
காங்கிரஸின் மீட்பராக ராகுல் காந்தி அவதாரம் எடுத்திருக்கிறார். நாடெங்கிலும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மக்களோடு மக்களாக தன்னை ஒருநாள், ஒருபொழுது அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் இந்த அரசகுமாரர்களுக்குத்தான் எத்தனை பேரும் புகழும்!
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா, அவுரங்கபாத், புனே ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு அவர் மக்களைக் கட்டிப்பிடிக்கவும், ஏழைச்சிறுவர்களைத் தூக்கி வைத்துக்கொள்ளவும் நிகழ்ச்சிநிரல் ஒன்று தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அகோலா, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள விதர்பா பகுதியில் உள்ளது. எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, ராகுல்காந்தியைப் பார்க்க வந்த, செருப்பணிந்த இளைஞர்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இளைஞர்களின் ’நாயகனுக்கு’ வந்த கதி இது!
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் தானே?
பேசுவது தமிழா...
சர்வர் சுந்தரம் திரைப்படம். படத்துக்குள் ஒரு படப்பிடிப்புக் காட்சி. அறிமுக நடிகராக நாகேஷின் பாத்திரம். ரங்காராவ் இயக்குனர். மனோரமா அனாயாசமாக நுழைவார். அத்தனை அலட்சியமாக பேசத் துவங்குவார். நவரசம் என்பதை நாராசம் என்பார். வசனத்தைத் தனக்கு சாத்தியமான அளவிற்குக் கொல்வார். ரங்காராவ் துடிதுடித்துப் போவார். 'மத்தவங்க படத்துல எப்படி வேணுமானா பேசும்மா, இது தமிழ்ப்படம், தமிழில் பேசு' என்பார். 'போங்க சார் எனக்கு இப்படித் தான் தமிழ் பேச வரும்', என்பார் மனோரமா. அப்போது நாகேஷ் அசத்தலாக, " டைரெக்டர் சார், எனக்கு ஒரு சந்தேகம். இந்தம்மா தமிழ் பேசுறதே போதுமே, நான் வேற எதுக்கு தனியா காமெடி பண்ண..." என்பார்.
| எஸ் வி வேணுகோபாலன் |
இப்படி 'காமெடி' நிலையில் கிண்டலடிக்கிற கதியில் காட்சி ஊடகத்தில் தமிழ் புழங்குவதைப் பார்த்துப் புழுங்கத் தான் வேண்டியிருக்கிறது. திரைப்படங்களானாலும் சரி, மக்கள் இன்று அதிகம் கண்ணுற்றுவரும் தொலைக்காட்சி ஊடகமானாலும் சரி தமிழ் கையாளப்படும் விதம் வேதனைக்குரியதாக இருக்கிறது.
ஒரு காலத்தில் வேற்று மொழி, வேற்று மாநில அல்லது வேற்று நாட்டுக்காரராகக் காட்டப்படும் பாத்திரத்தை மக்கள் புரிந்து கொள்ள ஒரே இலகுவான வழி அந்த நடிகர் பேசும் தமிழ் வசனம் தான் என்று யாரோ ஒரு கற்பனை வளமிக்க நல்லவர் உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார். அதனால் தான் தமிழ் சினிமாவில் வெள்ளைக்காரரும், வடக்கிந்தியரும், மார்வாரியும் ஒரே 'டமில்' பேசுவதைக் காண வேண்டிய துரதிருஷ்டம் ஏற்பட்டது. சென்னை சவுகார்ப் பேட்டைக்குச் செல்பவர்களுக்குப் புரியும், எந்த சேட்டும் சினிமாவில் உசிலைமணி பேசுவது மாதிரியெல்லாம் தமிழ் பேசுவதில்லை என்று.
காலப்போக்கில் தமிழைக் கொச்சை செய்து பேசுவதுதான் நாகரீகம் என்று ஆக்கி இருக்கிற நிலையில் நாம் செம்மொழியைக் கொண்டு வைத்திருக்கிறோம். அதன் இன்னொரு பரிணாமம் தமிழைச் சும்மா தொட்டுக் கொண்டு ஆங்கில விளாசல்களாகவே தாக்குவது. இது சகிக்க முடியாத எல்லைகளை எட்டியிருப்பது தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்து அன்றாடம் நிரம்பி வழிகிறது.
நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் தொடங்கி, உரையாடல் நடத்துபவர்கள் வரை, தொலைக்காட்சியில் நல்ல தமிழில் பேசுவது ஏதோ தெய்வக்குத்தம் போலவும், செய்யத் தகாத செய்கை போலவுமாக நடந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் இழுக்கிற இழுப்பில் இவர்களிடம் வந்து மாட்டிக் கொள்கிற பிரபலங்களும், பிரமுகர்களும் இந்த மாயச் சுழலில் வந்து சிக்கிக் கொள்கின்றனர். அவர்களும் பெரும்பாலும் தொலைக்காட்சி தமிழில் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.
நேயர்களைத் தொலைபேசியில் அழைத்து அளாவளாவும் நிகழ்சிகளின்போது ஒற்றைத் தமிழ்ச் சொல்லாவது தட்டுப் படுகிறதா என்று கண்டறிய புதிய கருவியைத் தேடவேண்டும். எத்தனை சேஷ்டைகளைச் செய்து, எத்தனை விரசமான சைகைகளைக் காட்டிக் கொண்டு பேசவேண்டுமோ அப்படிப் பேச வலிய உருவாக்கப்படும் இத்தகைய நிகழ்ச்சிக்கான சூழலில் பேசும் மொழியும் அத்தனை திருகலோடே வந்து விழுகிறது.
ஏதோ மிகவும் அரிதான சொல்லைத் தவிர்க்கவோ, வெகு மக்கள் புரிதலுக்காகவோ அப்படி ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. மிகச் சாதாரணமாக மக்களது பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சொல்லைக் கூட வேண்டுமென்றே தவிர்த்துப் பேசிக் கொண்டிருக்கும் புது பேச்சு வழக்கை தொலைக்காட்சி பரப்பி வருகிறது.
கொச்சைத் தமிழ், கோணல் தமிழ், கலப்புத் தமிழ் என்று புதுப்புது வடிவம் எடுத்தது ஒரு கட்டத்தில் பண்ணித் தமிழாகவும் ஒழித்துக் கொண்டிருக்கிற கொடுமையை நகைச்சுவையாளர்கள் சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டனர். அதென்ன பண்ணித் தமிழ்....மொத்த பேச்சில் 'பண்ணி' என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு ஒரு தமிழ்ச் சொல் தப்பித் தவறிக் கூட இடம்பெறாது. " ஸோ அண்ட் ஸோ அவைலபிளா? காண்டாக்ட் பண்ணி, இன்பார்ம் பண்ணி, புரோகிராம் கன்பார்ம் பண்ணி, கோ ஆர்டினேட் பண்ணி, இன்விடேஷன் பிரின்ட் பண்ணி, கலெக்ட் பண்ணி, ரீச் பண்ணி, அப்ரிஷியேட் பண்ணி ...."என்று நடக்கிற இந்தத் தூரத்தில் தமிழின் கொடி எங்கும் பறக்கக் காணோம். செய்தி நேரங்களில் மட்டும் பெருமளவு தமிழ் உலகத்திற்குள் நின்று பேச முடிகிற போது, பிற நிகழ்ச்சிகளின் போது ஏன் இனிய உளவாக என்னென்னவோ கூறல்?
இலக்கண சுத்தமாகவும், யாரும் புரிந்து கொள்ள இயலாத கடுந்தமிழ்ச் சொற்களாகவும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. துணிக்கடை என்று பலகை மாட்டி வைத்துவிட்டு உள்ளே புரோட்டாக் கடை நடத்திக் கொண்டிருக்கக் கூடாது அல்லவா...தமிழ் சானல் என்று அறிவித்துவிட்டுத் தமிழைத் தேடவைத்தால் என்ன செய்வது...
சமூகத்தின் போக்கைத் தாங்கள் பிரதிபலிப்பதாக அவர்கள் சொல்ல முற்படலாம். இந்தப் புள்ளியில் தான் இந்த விவாதத்தின் முடிச்சே இருக்கிறது. சமூகம் என்று எதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். எந்தப் பகுதியை அல்லது எந்தத் திரளை? அதிகமான நேயர்களைச் சார்ந்து இவர்களால் இந்தக் கருத்துருவாக்கத்தை முன்வைக்க முடியுமா என்றால் வாய்ப்பே இல்லை. வாசிப்பின் தளத்திற்கோ, கல்வியின் உயர் நிலைக்கோ எட்ட இயலாத, குடும்ப ரீதியாகவும், சமூக-பொருளாதார பின்புலம் காரணமாகவும் அதற்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதர்களே தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்க்கும் நேயர்களில் அதிகப் பங்கு வகிக்கிறார்கள் என்பதே உண்மை. அடுத்த வாதம் என்ன வைப்பார்கள்? மொழி என்பது என்ன, பேசுவது புரிவதற்கு மட்டும் தானே, அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?
மொழி என்பது பேச்சுக் கருவி அல்லது கருத்துப் பரிமாற்ற சாதனம் (Means of Communication) என்பது மட்டுமா, அதற்கும் மேலாக ஒரு சமூகப் பயன்பாடு அதில் உண்டா என்ற விவாதம் நீண்ட காலமாகவே உண்டு. இப்படியான கருத்துப் போராட்டங்களில் ஒருவர் எந்த நிலைபாட்டை எடுக்கிறார் என்பது அவரது சார்புத் தன்மையையும் சேர்த்து பிரதிபலிக்கும்.
தமிழ் வாசிப்பு உலகில் வார, மாத இதழ்களில் பல்லாண்டுகளாகக் கதை மாந்தர்களாக யார் அதிகம் இருந்தனர், யாரது வாழ்க்கை அதிகம் பேசப்பட்டது என்று கவனித்துவிட்டு, கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலான காலத்தில் அதில் ஏற்பட்டிருக்கும் பளீர் மாற்றம் என்ன என்று சிந்தித்தால் ஏராளமான செய்திகள் கிடைக்கும். ஆனாலும், ஒற்றை அடையாளமாக மேல்தட்டுப் பண்பாட்டைப் பொதுவில் திணிக்கும் அல்லது நிலை நிறுவும் சாதுரியமான போக்கை இயல், இசை, நாடக வெளிகளில் நுட்பமாகக் காண முடியும்.
மொழியின் செயல்பாடு இதில் முக்கிய இடம் வகிக்கிறது. அறுபதுகள், எழுபதுகள் வரையிலும் கூட குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டிக் கொண்டிருந்த சாதாரண மக்களிடையே கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வடமொழிப் பெயர் வைக்கும் ஆசை ஏன் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும். அது உண்மையில் ஆசையா, உளவியல் நெருக்கடியா, சமூக அவஸ்தையா என்று கண்டறிய வேண்டும். அடையாளம் காணப்பட்டுத் தங்களது சந்ததியர் அவமதிப்புக்குள்ளாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஊறிக் கொண்டிருக்கிறதா என்று தேட வேண்டும்.
இதன் கூறுகளில் இருந்து பேச்சு மொழியையும் கவனித்தால் விடைகளும், புதிய கேள்விகளும் பிறக்கும். திட்டமிடாதது போலவே அப்பாவித்தனமாகவே, இயல்பாகவே நமது நடை, உடை, பாவனைகள் பொருந்தாத தளங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் காட்சி ஊடகங்களிலும் திமிறிக் கொண்டிருப்பது.
புதிய தாராளமயக் கோட்பாடுகள் அமலாக்கப் பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் நிறைய தனியார் தொலைக்காட்சிகள் முளைத்தன. சந்தையின் அடிப்படையாகப் பேசப்பட்ட விஷயம் போட்டி என்பது. நடைமுறையில் என்ன நடக்கிறது ? ஆதிக்க சக்தியுள்ள வர்த்தகர் என்ன சொல்கிறாரோ அதைப் போட்டியின்றி மற்றவர்கள் பின் தொடரவேண்டிய உலகம் தான் படைக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இப்படியான முன் மாதிரி படைக்கப்படுகிறது.
மனிதர்களது வாழ்வாதாரங்களில் மட்டுமல்ல, உலகமயத்தின் நெரிக்கும் கரங்கள் அவர்களது பண்பாட்டுத் தளத்திலும் புகுந்து விளையாடுகிறது. பயிர்களின் தன்மையை, நிலங்களின் பசுமையை நாசப் படுத்துபவர்கள் உடல் நலக் கூறுகளில் செய்யும் அத்து மீறல்களை, உளவியல் தளங்களிலும் உணரவியலாத வண்ணம் செய்து கொண்டிருப்பது விவாதத்தில் இருக்கும் விஷயம். நுகர்வுத் தன்மை, கேளிக்கை அம்சம், ஓய்வு நேரப் பயன்பாடு......என விரியும் அம்சங்கள் பலவற்றிலும் மனிதர்களை தாராளமயப் போக்கு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. மொழி இதில் முக்கிய தாக்குதலுக்கு இரையாகிறது.
மொழியின் வாழ்க்கை, மொழியின் வளர்ச்சி, மொழியின் வீழ்ச்சி என்பது மொழியுடையதானது மட்டுமல்ல என்பதே மொழியியலாளர்கள் சுட்டிக் காட்டி எச்சரிப்பது. மொழியின் ஆதிக்கம் பற்றி நாம் புரிந்து கொள்கிற போதே, மொழியின் அடிமைத் தனத்தையும் உணர முடியும்.
ஜனநாயகத்தின் வேர், தனி மனிதர்கள் சுதந்திர சிந்தனையோடும், சுய மரியாதையோடும் வாழ இடம் பெற்றுத் தந்திருப்பது. தற்காப்புக்கான தேடலில் சொந்த மொழி பேசவே கூச்சமுறும் அவலம், தவிர்த்துவிடத் துடிக்கும் கொடூரம், நழுவிப் போய்க் கொண்டிருக்கும் கேவலம் போன்றவை பாதிப்பது மொழியை மட்டுமல்ல. அது கொடையாக வழங்கியிருக்கும் பரந்து விரிந்த ஒரு பண்பாட்டை, இன்னொரு முறை உருவாக்க சாத்தியப்படாத இலக்கிய வளத்தை! இந்த பாதிப்புகள் சிதைப்பது ஊடும் பாவுமாக உள்ள ஜனநாயகத் தன்மையை!
சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் தவறாகத் தமிழைப் பேசுவதை வைத்து நகைச்சுவை செய்திருந்தனர். சம காலத்திலோ, நல்ல தமிழைப் பேசுபவரைத் தான் நையாண்டிப் பாத்திரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழை வைத்து வாழப் பழகிக் கொள்பவர்கள், தமிழை மட்டும் வாழ விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர் போலும்.
எனக்கும் அவளுக்கும் இருபத்தோரு வயது!
“கூப்பிட வர்றீங்களா”மழை மேகம் அடர்ந்த நேற்றைய சாயங்காலம் பள்ளியிலிருந்து அம்மு போன் செய்தாள். ஈரக்காற்றோடு இருண்டிருந்த வெளி எந்நேரமும் மழை வருமெனச் சொல்லியது. வீட்டிலிருந்து அம்மு பணிபுரியும் பள்ளி இரண்டு கி.மீ தூரமாவது இருக்கும். பைக்கில் பாதி வழி செல்வதற்குள் அனேகமாய் நனைய வேண்டி இருக்குமெனத் தோன்றியது. “மழை வரும் போலிருக்கே, ஆட்டோ பிடித்து வந்துவிடேன்” என்றேன் சோம்பலுடன். “அதெல்லாம் வராது, நீங்க வாங்க” எனச் சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டாள்.
எரிச்சலோடு புறப்பட்டேன். நினைத்தது போலவே கொஞ்சதூரம் செல்வதற்குள் தூற ஆரம்பித்தது. போகப் போக துளிகளின் வேகம் மேலும் பெருக, பள்ளியை நெருங்குவதற்குள் நிறைய நனைந்து போனேன். என்னைப் பார்த்து அம்முவும் நனைந்துகொண்டே வந்தாள். சொன்னதைக் கேட்காமல், இப்படி அலைக்கழித்து விட்டாயே எனப் பார்த்தேன். “ஸாரி” சொல்லிக்கொண்டே பைக்கின் பின்னால் உட்கார்ந்தாள். விறைப்புடன் வண்டியை நகர்த்தினேன். “ரொம்ப நனைஞ்சுட்டீங்களோ” என்றாள். “நாந்தான் சொன்னேன்ல.... கேட்டாதானே?” வார்த்தைகளின் தொனியில் என் கோபத்தையெல்லாம் காட்டினேன். அவளிடம் பதிலில்லை.
தூறல் அடர்ந்து, கொட்ட ஆரம்பித்தது. “இப்ப பாரு. சொன்னா கேக்கணும்” அடக்கமாட்டாமல் எரிந்து விழுந்தேன். “இப்ப என்ன?” என்றாள். “என்னவா, ரொம்பத் திமிரு ஒனக்கு” என்றேன். சிரித்தாள். “எதுக்கு சிரிக்கிறே. கடுப்பக் கெளப்பாதே” என்றேன் “பின்னால் உக்காந்திருக்கிறது, கல்யாணமாகி ஒங்களோட குடும்பம் நடத்துற அம்முன்னு நெனைக்காம, கல்யாணத்துக்கு முன்னால நீங்க காதலிச்ச அந்த அம்முன்னு நெனைச்சுப் பாருங்க. இந்த மழையே வேற மாதிரி இருக்கும்” என்றாள். கொஞ்ச நேரம் அமைதியானவன், பிறகு வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தேன். வானமும் பெருஞ்சிரிப்பாய் சிரித்தது.
இப்படியாக, இருபத்தோரு வருசம் பயணம் செய்து முடித்திருக்கிறோம் இன்றோடு! காலம் வெயிலும் மழையுமாய் பெய்துகொண்டு இருக்கிறது.
பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்!
வலையுலகில் பெண் என்பதாலேயே, தான் சில ஆண் பதிவர்களால் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களின் எழுத்துக்களால் காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவர் புன்னகை தேசம் அவர்கள் வினவுதளத்தில் வேதனையோடு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீண்டுமொருமுறை நம் வலையுலகில் ஆணாதிக்க மனோபாவம் தன் கோரப் பற்களைக் காட்டியிருப்பதாக, வெளிப்படையாக தன் சூழலை பொதுவெளியில் முன்வைத்து பேசி இருக்கிறார். அவரோடு நிற்பதும், இதுபோன்று மேலும் நடக்கக் கூடாது என்கிற அவரது உறுதியை வளர்ப்பதும் அவசியமாகிறது. தொடர்ந்து இவ்விஷயத்தில் சமரசமற்று ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துகிற, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பேசுகிற வினவுத் தோழர்களுக்கு என் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தகவல் சாதனங்களும் பழைய ஆதிக்கம், கட்டுப்பாடுகளை புனரமைத்துக்கொண்டு பெண்ணை பாலின ரீதியில் அடிமைப்படுத்துவதில் நவீனச் சேவை செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஓரளவுக்கு விதிவிலக்காய் பாலின பேதமின்றி கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமும், மாறுபட்ட சிந்தனைகளோடு உரையாடும் வசதியும் வலையுலகின் தனித்தன்மையாய் இருக்கின்றன. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு கொஞ்சம் பெண்கள் தயக்கங்களை உதறி தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முன்வருவதைப் பார்க்க முடிகிறது. இது அனைவருக்குமே பெருமைக்குரிய விஷயம். இதனை உற்சாகத்துடன் வரவேற்பதும், மேலும் மேலும் வளர்ப்பதும் முக்கியம். அதற்கு எந்த விதத்திலும் ஊறு விளைவித்தாலும் நம்மை நாமே தரந்தாழ்த்திக்கொள்வதே ஆகும்.
நமது சமூகத்தின் கட்டமைப்பு, பெண்களின் மீது மிக நுட்பமான ஆதிக்க விதிகளைக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களும் இறுதியில் ஆண்களையே பெண்களைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைக்கின்றன. பெண்களுக்கும் அதிகாரத்துக்கும் இடையில், பெண்களுக்கும் அரசுக்கும் இடையில், பெண்களுக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் வந்து வழி மறிப்பவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். ‘அப்படியெல்லாம் இல்லை’ எனச் சொல்லும் ஆண்கள் தங்களுக்கு இருக்கும் வரம்புகள், எல்லைகள் குறித்து கொஞ்சம் சுயபரிசோதனை செய்துதான் ஆக வேண்டும். மிக இழிவாக பெண்களைப் பற்றிய புரிதல்களும், கருத்தோட்டங்களும் ஆண்களின் மரபணுவிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. தங்களுக்கு எதிராக பெண்கள் நிற்கிற அல்லது பேசுகிற மறுகணமே, பெண்களை வீழ்த்தும் எந்தவித உபாயங்களையும் கைக்கொள்ளத் தயங்குவதில்லை அவர்கள். அதுதான் சட்டென ‘கேரக்டர்’ என தாங்களே உருவாக்கி, அலங்கரித்து, கொண்டாடி வைத்திருந்த ஒன்றை எல்லோர் முன்பும் போட்டு உடைத்து வெறுப்பைக் காட்டுகின்றனர். பெண் தலைகுனிந்து நிற்கிறாள். தான் நல்லவனென்றும், வெல்ல முடியாதவன் என்றும் ஆணாதிக்கத்தின் வக்கிரம் கைதட்டி சிரிக்கிறது.
இந்த சமூகப் பிழையை சரி செய்வதற்கு அல்லது சுட்டிக்காட்டுவதற்கு, பிழை செய்பவர்களை அடையாளம் காட்டவும், அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது. அதே நேரம் யாருடைய தனிப்பட்ட பிரச்சினையோவென பார்க்காமல், நம் அனைவரது பொதுப் பிரச்சினையாக வைத்து ஆராய்வதும், உரையாடுவதும் வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஒரு குற்ற மனப்பான்மையை ஏற்படுத்துவதும், அவர்களை தங்கள் தவறுகளை உணரச்செய்து பக்குவப்படுத்துவதும் நம்மையேச் சாரும். உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மீது கடுங்கோபம் கொள்வதன் மூலம் விரோதங்களும், வீம்புமே பின்விளைவுகளாகவும், பக்க விளைவுகளாகவும் தெறிக்கின்றன என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். சமீபமாய் இணையத்தில் தொடர்ந்து வந்த சில பதிவுகளும், கூகிள் பஸ்ஸில் ஏறிய உரையாடல்களும் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று கேலி கிண்டல் செய்து வந்ததெல்லாம் அப்படித்தான். அவை சமூக மாற்றத்திற்கான கருத்தோட்டங்களை நீர்த்துப் போக வைக்கவே உதவும்.
நம் சிந்தனைகளால் நிரப்பப்பட்ட அற்புதமான வெளியாக வலையுலகம் உருப்பெறவேண்டும். புதுப்புது சிந்தனைகளும், ஆரோக்கியமான உரையாடல்களாலும் கருத்து வளம் கொண்டதாக தளைக்க வேண்டும். நம் வக்கிரங்களும், அழுக்குகளும் அதில் கலந்து சாக்கடையாக வேண்டாம். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, நாகரீகமானவர்கள் செய்யும் காரியமல்ல. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மனிதர்களாகிய நாம், ஹெலன் ரெட்டியின் இந்த பாடல் வரிகளைக் கேட்போம்.
“நான் ஒரு பெண், என்னைப் போன்று
ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து கர்ஜிப்பது
உங்கள் காதுகளில் விழவில்லையா?
இதை நீங்கள் உதாசீனம் செய்ய முடியாது
நான் நிறையத் தெரிந்து கொண்டு விட்டேன்
இனி நான் பின்வாங்கிச் செல்லவோ, பாசாங்கு புரியவோ முடியாது.
லட்சியத்தைப் பற்றி நான் முன்பு நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்
நான் அடித்தட்டில் இருந்துள்ளேன்
யாரும் என்னை மீண்டும் அடித்தட்டுக்குத் தள்ள முடியாது
நான் ஒரு பெண்
நான் வளர்வதைக் கூர்ந்து கவனியுங்கள்
காலோடு கால் சேர்த்து நிற்கும் என்னைப் பாருங்கள்
நிலப்பரப்பை என் அன்புக் கரங்களால் அரவணைக்கிறேன்
ஆயினும் இன்னும் நான் கருவே
என் சகோதரன் என்னைப் புரிந்துகொள்ளும் வரையில்
இன்னும் நெடுந்தூரம் கடந்துசெல்ல வேண்டும் நான்”
புன்னகைதேசம் அவர்களே! இங்கு சகோதரர்கள் உங்களை புரிந்துகொள்ளவில்லை. ஒரு ஆணாக நானும் அவமானப்பட்டு நிற்கிறேன்.
காற்றின் காதலர்!
'...ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என்றார் மகாகவி. 'உங்களைப் பார்த்ததும் தான் மூச்சே வந்தது...' என்று நிம்மதி அடைகின்றனர் மனிதர்கள். 'யார்கிட்டேயும் மூச்சு விடக் கூடாது' என்று யாராவது யாரிடமாவது ரகசியம் பாதுகாக்க அறிவுறுத்துகின்றனர். மூச்சுக்கு மூச்சு நாம் பயன்படுத்துகிற சொல்லாக இந்த மூச்சு இருக்கிறது. இந்த மூச்சுக் காற்றை உள்வாங்கிப் பிரித்துச் சேர வேண்டியதை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பிக் கொடுத்து, தேவையற்றதை மண்டையிலடித்து வெளியேற்றிக் கொண்டிருக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலையைச் செய்துவரும் காற்றின் காதலர் நுரையீரலார் உண்மையில் மிகவும் மென்மையானவர். மற்ற ஈரல்கள் சற்று கெட்டியான அமைப்பு கொண்டவையாக விளங்குவதால், நுரைப் பஞ்சு போன்ற மிருதுவான தன்மைக்குத் தான் இவருக்கு அந்தப் பெயர் போலிருக்கிறது. இந்தப் பஞ்சு மெத்தையின் அரவணைப்புக்குள் பத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது இதயம்.
| மருத்துவர் பி வி வெங்கட்ராமன், எம். டி. (ஓமியோபதி) அவர்களது மருத்துவக் குறிப்புகளிலிருந்து எஸ் வி வேணுகோபாலன் |
மூக்கு வழியே நுழையும் காற்று பின்னர் மூச்சுக் குழல் வழியே பயணம் செய்து காற்று சிற்றறைகளை வந்து அடைகிற இடத்தில், ஆக்சிஜன் பிரித்தெடுக்கப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. கவிழ்ந்திருக்கும் ஒரு மரம் போன்ற உள் அமைப்பு கொண்ட நுரையீரல் இந்த சுவாசப் பணியை அத்தனை நேர்த்தியாக முடிப்பதால் தான், நாம் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிகிறது. நிறைகுடம் தளும்பாது என்பது போல், இந்த அசாத்தியமான பெரும்பணியை நுரையீரலார் எத்தனை தன்னடக்கமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
இயற்கை கொண்டாடிகளாக இருக்கும்வரை மனிதர்களுக்கு ஒரு குறைவுமில்லை. 'உன் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர் தாங்கி நான் இருப்பேன்' என்று காதலன் பாடுவது, காற்றுக்கு நேரும் மாசு குறித்த (Air Pollution) கவலையோடு கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. 'பொது வாழ்வில் தூய்மை' என்று எல்லோரும் சொல்லிக் கொள்ளும் நிலையைத் தான் நுரையீரலும் விரும்புகிறது. மாசு மருவற்ற வாழ்க்கையை அனுபவிக்க ஊழல் மிகுந்த சமூக வெளி அனுமதி மறுக்கிற போது ஜனநாயகத்திற்கும் மூச்சு திணறுகிறது. சுகாதாரமற்ற சூழலின் நெடியில் நோய்கள் தான் கொண்டாட்டம் போடுகின்றன.
மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 20 - 25 சதவீதம் பேருக்கு மூச்சு விடுதல் சம்பந்தமான பிரச்சனை (Respiratory Problems) தான் அதிகமாக வாட்டுகிறது என்று சொல்லப் படுகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அள்ளித் தெளித்துப் பூசப்படும் பவுடர் நெடியின் ஒவ்வாமையைச் சொல்லலாம். இயல்பான வளர்ச்சியை முடக்கும் செயற்கை சாதனங்கள் அழகை விட ஆபத்தைத் தான் வருவிக்கின்றன. வியர்வை துவாரங்களை மூடுவதோடு, சுவாசத்தையும் பாதிக்கும் பவுடர்களைத் தவிர்த்து விட வேண்டும். உணவுப் பொருளான பால் பவுடர் நெடி கூட சில குழந்தைகளுக்கு மேற்சொன்ன சுவாசம் தொடர்பான பிரச்சனையை உருவாக்கும். இதைச் சரிவர அணுகினாலே மருந்துகளைத் தவிர்த்து உடல் நலம் பேணிவிட முடியும்.
அதேபோல், வாயால் ஊதி குழந்தைகளுக்குச் சளியைத் தீர எடுத்துவிடுகிறேன் என்று சொல்லி தங்களது வாயிலுள்ள கிருமியையையும் குழந்தைகளுக்குப் பரப்பிவிடும் சேவைகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது. நுரையீரலில் எப்பொழுதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். சளி ஏதோ தேவையில்லாமல் இருக்கிறது என்ற நினைப்பு தேவையில்லை. முழுவதும் உலர்ந்த நிலையில் நுரையீரல் இயங்குவதே சாத்தியமற்றது.
சின்னச் சின்ன சளி, தும்மல் எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டு மருத்துவரிடம் ஓடத் தேவையில்லை. நமது உடல் சவால்களை எதிர்கொண்டுதான் தனது எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திக் கொள்கிறது. தேவையற்ற உயிர்க்கொல்லி மருந்துகளை (Anti-biotic drugs) அடிக்கடி எடுத்துக் கொள்வது, நோய்க் கிருமிகள் தங்களை இன்னும் தயார்ப்படுத்திக் கொள்ளவே உதவும். அதனால் இன்னும் இன்னும் அதிக வீரியமுள்ள உயிர்க் கொல்லி மருந்துகளுக்காக ஓட வேண்டியிருக்கும். உடல் நலம் பாதிக்கும்.
மூச்சை நல்லா இழுத்து விடுங்க என்று மருத்துவர்கள் சொல்வது, நுரையீரல் தேவையான அளவிற்குக் காற்றை உள்ளிழுத்து வெளியேற்றும் தகுதியோடு இயங்குகிறதா என்று பார்க்கத் தான். ஆனால், பலர் இந்தப் பரிசோதனையை சிகரெட்டை வைத்துக் கொண்டு செய்து பார்ப்பது தான் வேதனையானது. ஊக்கமூட்டியாகச் சேர்க்கப்படும் நிகோடின் கூடவே புகைத்தலுக்கு அடிமைப்படுத்தவும் செய்கிறது. நச்சு வேதியல் கலவையின் தார், மூச்சுப் பாதை நெடுக அடையாக அப்பிக் கொள்கிறது. பின்னர் எப்போதாவது புகைத்தலை நிறுத்திவிட்டாலும் கூட படிந்த கரி படிந்தது தான்.
இந்த மாதிரி செய்திகள் ஒன்றிரண்டைப் பார்த்த மாத்திரத்தில் சிலர், 'சே இன்றோட நிறுத்திரணும் இந்தச் சனியனை' என்று வேகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அந்த வேதனையை மறக்க (அதென்னது, ஆமாம், புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றிக் கொள்வார்களாம்.... மற்றதை யார் எடுத்து ஆற்றுவது?) அடுத்த நாளிலிருந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து துவங்குவார்கள். ஒரே முறை சிகரெட் பழக்கத்தைக் கை விட்டவர்களை விட, அடிக்கடி சிகரெட்டை விட்டவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். இல்லையா....
நாம் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், புகைக்கிற மனிதர்களைக் குறித்தா..மன்னிக்கவும். அவர்களாவது தமது பழக்கத்திற்கு ஒரு விலையைத் தாமே கொடுக்கின்றனர். அது பற்றிய சாதக பாதகங்களுக்கு அவர்கள் பொறுப்பு. ஆனால் சம்பந்தமில்லாது பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிப் பேசுவோம் முதலில். அடுத்தவர்கள் விடும் புகையை அருகிலிருந்து உள்ளிழுத்துக் கொண்டிருக்க நேர்ந்து அவர்களைவிடவும் அதிகமான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் இவர்கள்.
கணக்கின்றி புகைக்கும் மனிதர்களது செலவும் கணக்கின்றியே இருக்கும். போதாததற்கு உடல் நல பாதிப்பும்! ஆனால், தேவையில்லாமல் அடுத்தவரையும் பிரச்சனையில் ஆழ்த்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது? இந்த இடத்தில்தான், புகை பிடித்தல் என்பது தனி நபரது விஷயம் என்ற எல்லையைக் கடந்து சமூக பிரச்சனையாக உருவெடுக்கிறது என்பதை பாதிப்புற்றுக் கெஞ்சிக் கொண்டிருக்கும் நுரையீரல்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் மாணவரின் அறைக்குள் புகுந்து உரத்த சத்தத்தில் ரேடியோவை அலற விடுவது, தொலைக்காட்சியில் உருப்படாத சினிமா எதையாவது ஓட விடுவது, அவரைப் படிக்க விடாது குறுக்கே குறுக்கே சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு மோசமோ, அதைவிட பல மடங்கு மோசமான வேலையாகத் தான் இந்தப் புகைப் பழக்கம் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருக்கும் நுரையீரலைப் போட்டு அலைக்கழிக்கிறது. தொல்லைகளுக்கு உள்ளாகும் கல்வியைப் போலவே, சித்திரவதைக்கு உள்ளாகும் நுரையீரலும் நலிந்து போகிறது.
இந்தப் புகையைக் காட்டிலும் கொடுமையானது, தொழிற்சாலைகள் மரியாதையில்லாமல் வானத்தைப் பார்த்துத் துப்பும் கரும்புகை. அதனால் பெருகும் சுற்றுச் சூழல் மாசும் நுரையீரல்களை மிகக் கடுமையாக பாதிக்கிறது. அவற்றைக் கண்டு கொள்ளாத அரசு நிர்வாக இயந்திரத்தின் போக்கு சமூகத்தை அதைவிடவும் கடுமையாக தாக்குகிறது. காலகாலத்திற்கும் விறகுக் கட்டை அடுப்பைக் கட்டிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு நேரும்.
சுரங்கங்களிலும், நச்சு வேதியல் கழிவுகளுக்கிடையில் பணியாற்ற வேண்டிய இடங்களிலும்தொழிலாளியின் மூச்சுப் பாதைக்கு பாதுகாப்பு ஏற்பாடு (Mask) செய்து கொடுக்க வேண்டியதைப் பெரும்பாலும் எஜமானர்கள் எவரும் மதிப்பதில்லை. அவர்களது நுரையீரல் படும் பாடு சொல்ல முடியாதது. நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்டது என்று மார்தட்டிக் கொள்ளும் நாட்டில், இன்னும் கூட பாதாள சாக்கடையில் மனிதர்களை இறங்கவைத்துச் சுத்தம் செய்யும் கொடுமை தொடர்கிறது. நச்சு வாயு தாக்கி அவர்கள் உயிரிழக்கும் அபாயமும் நேர்கிறது.
போபால் விஷ வாயு கசிவு ஏற்பட்ட போது, ஈரத் துணியால் மூக்கைப் பொத்தி நாசி துவாரங்களைக் காத்திருந்தால் அத்தனை பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று பின்னர் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த எளிய எச்சரிக்கையைக் கூட உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்தாத, மனிதநேயமற்ற - லாபவெறி பிடித்த பன்னாட்டு மூலதனம் நடத்திய ரசாயனத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எந்த நுரையீரலுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.
ஆண்டுதோறும், போகி பண்டிகையின்போது பழையன கழிதலும், புதியன புகுத்தலும் என்று சொல்லியபடி, கிழிந்த பாய் முதற்கொண்டு ஏராளமான பழம்பொருட்களை வீதியில் வைத்து எரிக்கிறபோது நுரையீரல்கள் அலறுவது போகியின் மேள சத்தத்தில் கேட்காமல் போய்விடுகிறது போலும். தேவையற்ற பழைய பொருள்களை ஏதுமற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டாடலாம் போகியை - இப்படி நம் வாழ்வில் நாமே கரியைப் பூசிக் கொள்ளாமல்.
நுரையீரல் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. நல்ல சுதந்திரமான - காற்றோட்டமிக்க சூழலைத் தான் அது வேண்டுகிறது. காச நோயாளிகளுக்குக் கூட, மருந்து மாத்திரைகளை விடவும் நல்ல வெளிச்சமும், காற்றும் தவழும் தனியிடத்தில் வைத்திருப்பதே சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். இப்பொழுதெல்லாம் அதற்கான முன்னுரிமையற்ற சிகிச்சை முறை, அவர்களது குணமாகும் தன்மையை பாதிப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். பன்றிக் காய்ச்சல் பற்றிப் பேய்க் கூப்பாடு போடும் அரசு இயந்திரமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடங்கங்களும் பெரிய செலவற்ற - எளிய சிகிச்சை கிடைக்கப்பெற்றாலே குணமாகிவிடக் கூடிய காச நோய்க்கு ஆண்டுதோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் பலியாவதைப் பற்றிப் பேசுவதேயில்லை. சுத்தம், சுகாதாரம், நல்வாழ்வுத் திட்டத்திற்கான காற்று வீசாத கொள்கைகளின் கொடுமை இது.
காற்று வருவதற்காக ஜன்னல்களை வைத்துவிட்டு, கொசுவிற்கு பயந்து, அதை இழுத்து மூடிவிட்டு நடக்கிறது நகர வாழ்க்கை. அப்புறம் ஏர்-கண்டிஷனிங் ஏற்பாடு. தாறுமாறாக ஏறுகிற மின் கட்டணம் அல்லது தவறாத மின் வெட்டு காரணமாக, இரண்டு மணி நேரம் ஏசி போட்டுவைத்து விட்டு அப்புறம் அணைத்துவிட்டு அந்தக் குளிர்ச்சியிலேயே உறங்கிவிடத் துடிக்கும் பட்ஜெட் ஏற்பாடு. இங்கே தான் பிரச்சனை. ஏசி இருக்கும்போது காற்று உள்ளும் புறமும் போய் வருகிறது. ஆனால், ஏசியும் நிறுத்திவிட்டு, ஜன்னல்களையும் அப்படியே மூடி வைத்துவிட்டுத் தூங்கினால், ஒருவர் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை அடுத்தவர் சுவாசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். இப்படியெல்லாம் நுரையீரலைத் தண்டிக்கக் கூடாது. காற்றோட்டம் அவசியம் அவசியம் அவசியம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.
நல்ல காற்றை உள்வாங்கி, நிறுத்தி, ஆக்சிஜன் சேகரித்துக் கொண்டு அதை இரத்தத்தில் கலந்து அது வேகம் பெற்று உடல் முழுக்கப் பயணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி அனுப்பும் வேலையை நுரையீரல் செய்ய, முறையான மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களை அளிக்கவல்லது. இதயத்தைப் பக்குவமாக அணைத்துக் கொண்டிருக்கும் நுரையீரலை, நாம் பக்குவமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த தத்துவ ஞானியாகக் கருதப்படும் கார்ல் மார்க்ஸ் மறைந்தபொழுது, அவரது உற்ற தோழர் ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகர் ஹைகேட் இடுகாட்டில் வைத்து ஆற்றிய இரங்கல் உரையில், உலகின் மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்றுதான் குறிப்பிட்டார். சிந்தனையே மூச்சாக வாழ்ந்து மறைந்தவர் அந்த மேதை.
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற பாரதி ஒரு பெருமையை, பெருமிதத்தை, கம்பீரத்தைக் குறிப்பிடுகிறார். அந்த மூச்சின் சக்தியை முழுமையாக உய்த்துணர நுரையீரல் நலமாயிருக்கட்டும்.
உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் கேட்கவில்லை, பிரதமர் மன்மோகன் சிங்!
இந்திய உணவு தானிய கிடங்குகளில், வருடக்கணக்கில் பல லட்சம் டன்கள் உணவு தானியங்கள் அழுகி வீணாகிப் போயிருக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் தங்கள் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த தேசத்தில் பல கோடி மக்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும் வழியின்றி அவதிப்படும்போது, இப்படி உணவுப் பொருட்கள் வீணாவதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும். நல்ல சத்துணவு இன்றி எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்படுகிற ஒரு தேசத்தில், உணவு தானியங்கள் யாருக்கும் உபயோகமின்றி புழுங்கிப் போவதை யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?
கண் திறந்து பார்த்த உச்ச நீதிமன்றமும், கடைசியாக சொல்லி விட்டது. “அழுகி வீணாய்ப் போவதற்குப் பதிலாக, இந்த உணவு தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கொடுக்கலாமே” என அரசுக்கு பரிந்துரையும் செய்துவிட்டது. நீதி இன்னும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறது!
இதோ, இந்தியப் பிரதமர், பொருளாதார மேதை, அப்பழுக்கற்ற அரசியல்வாதி, டாக்டர் மன்மோகன்சிங் தெளிவாகச் சொல்லிவிட்டார். “வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இந்த உணவுதானியங்களைக் கொடுக்க முடியாது”. அத்தோடு மட்டுமல்ல உச்சநீதிமன்றத்துக்கும் சில செய்திகளை உணர்த்திவிட்டார். “அரசின் கொள்கைகளில் தலையிட வேண்டாம்” என்பதே அது. “உச்சநீதிமன்றத்தின் செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ள முடிகிறது. உணவுப் பொருட்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்வோம்” என்று நக்கல் வேறு அவரிடமிருந்து.
எப்பேர்ப்பட்ட தர்ம சிந்தனை! அழுகி வீணாகப் போகும் உணவு தானியங்களை, இந்த நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க முடியாது என்பது எப்பேர்ப்பட்ட பொருளாதாரக் கொள்கை! அதற்கு என்னவெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். நெஞ்சில் ஈரத்தைத் துடைத்து விட்டு எப்படியெல்லாம் பேச முடிகிறது!
“மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறு பட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ”
என்னும் பாரதியின் கவிதை வரிகளே நம் ஆத்திரமாய் இங்கு வருகின்றன.
கொள்கை, கோட்பாடு, பொருளாதாரம், ஆட்சி, அரசு என எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை மனிதாபிமானம்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அதெல்லாம் சுத்தமாக இல்லை. முதலாளிகளின் கண்ணில் துரும்பு விழுந்தால் சதையெல்லாம் ஆட, பரிதவித்துப் போவார்கள் அவர்கள். எளிய மக்களின் வாழ்வில் இடியே விழுந்தாலும், குளிர்பதன அறையில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டே ‘அப்படியா’ என்று காலாட்டிக்கொண்டு இருப்பார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால் நடுங்கிப்போகும் இவர்களுக்கு பசியின் குரல்கள் ஒருபோதும் எட்டுவதேயில்லை. உணவு தானியங்கள் நாசமானால் என்ன, எளிய மக்கள் செத்துத் தொலைந்தால் என்ன?
மிஸ்டர் பிரதமர் மன்மோகன்சிங்! அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.
விடுதலையின் பேரில்...
“ஈராக்கை விடுவிப்பதற்கான போராட்டம் முடிந்துவிட்டது” என முறைப்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்து விட்டார். ஏழு வருடங்களுக்கு முன்பாக ஈராக்கிற்குள், பெரும் மிருகம் போல நுழைந்து துவம்சம் செய்த அமெரிக்கப்படைகள் சில தினங்களுக்கு முன்பு வெளியேறிக்கொண்டு இருக்கின்றன. ‘ஈராக்கை விடுவிக்க அமெரிக்கா பெரும் விலையை கொடுத்துள்ளது” என்று ஒபாமா இப்போது உலகுக்கு தெரிவித்துள்ளார். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன, ஈராக்கை விடுவிக்கப் போகிறோம் என தொடுக்கப்பட்ட இந்த அகோரமான யுத்தம், வரலாற்றின் சில பக்கங்களை மனித ரத்தத்தினால் எழுதி வைத்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் அமெரிக்கா பயன்படுத்தும் ‘விடுதலை’ என்னும் பதம், எவ்வளவு எதிர்மறையானது என்பது மீண்டுமொரு முறை தெளிவாகியிருக்கிறது. யுத்தம் தொடங்கிய சில தினங்களில், 2003ல் ‘விசை’ பத்திரிகைக்காக ’டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை’ என நான் எழுதிய கட்டுரை ஒன்றின் கடைசிப் பகுதியை இங்கே பகிரத் தோன்றுகிறது.
மனித இழப்புகள், வேதனைகள், காயங்கள் எதையும் பொருட்படுத்தாமல் இதைச் சாதனையாகவும், உலகுக்குச் செய்த நல்ல காரியமாகவும் மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்கா. இதுவரை மேற்கொண்ட எந்தப் போருக்கும், அந்த நாட்டை விடுவிக்கப் போகிறேன் என்கிற காரணத்தைத்தான் முன்வைத்திருக்கிறது அது. வேறு எந்த நாடும் தனது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு இப்படியொரு மென்மையான, ஜனநாயக முகத்தை காட்ட முடிந்ததில்லை. இதற்கு அந்நாட்டின் வரலாறும், கலாச்சாரமும் வேர்களாக இருக்கின்றன.
அமெரிக்கா தோன்றிய மறுகணமே 'விடுதலை' என்கிற வார்த்தையைத்தான் பிரயோகித்தது. முப்பது லட்சம் மக்கள் அங்கு அடிமைகளாக இருந்தனர். 1861ல் உள்நாட்டுக் கலகம் வெடிக்க, ஆபிரகாம் லிங்கன் தலைமையில் அரசு என்பது மக்களுக்காக, மக்களால் என்று புரட்சிகரமான தோற்றத்தை அமெரிக்க 'விடுதலை' கொள்கிறது. ஆனால் அவர் கண்ட கனவுகள் நடைமுறைக்கு வரவில்லை. அடிமைகளின் விடுதலை என்னும் பிரகடனம் சுதந்திரத்திற்கான பாதையென நகர்ந்து, சாதுரியமாக புதிய முதலாளித்துவ அமைப்பின் வாசலில் போய் தன் கதையை முடித்துக் கொண்டது. கையில் தீபத்தை ஏந்தி கம்பீரமாக நிற்கும் சுதந்திர தேவியின் சிலை உலகின் முன்னே விடுதலையின் பிம்பமாக்கப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போதெல்லாம் சிலுவையில் அறையப்பட்ட ஏசு போலவே தோன்றுகிறது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் எல்லையை விரிவு படுத்தும் வெறியில் 1898ல் ஸ்பானிய அமெரிக்க யுத்தம் நடந்தது. இங்கிருந்துதான் அமெரிக்காவின் படையெடுப்புகள் உலகில் ஆரம்பமாகின்றன. இரண்டு உலக யுத்தங்கள் அமெரிக்காவை உலகின் தனிப் பெரும் சக்தியாக உருவாக்கி இருந்தன. மற்ற நாடுகள் போரை நேரடியாக எதிர் கொண்டு பாதிக்கப்பட்டபோது அமெரிக்கா பூகோளரீதியாக ஐரோப்பியாவில் நிகழ்ந்த போரிலிருந்து வெகு தொலிவிலிருந்தது.. அச்சுநாடுகள் தோற்று போர் முடிவுறும் வேளையில் வேண்டுமென்றே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகளை போட்டு உலகத்தையே அதிரச் செய்தது. உலகின் எதிர்காலத்தை தனது கையில் எடுத்துக் கொண்டதற்கான ஆணவ அறிவிப்புதான் அது.
சோஷலிச முகாமின் பலம் பொருந்திய நாடாக சோவியத் ரஷ்யா இருந்தவரையிலும் இந்த 'கருணை'யையும், 'விடுதலையையும' மிகப் பெரிய யுத்தமாக இல்லாமல் சிறிய அளவில், சதியின் வடிவில் செய்து கொண்டிருந்த அமெரிக்கா இப்போது எல்லாவற்றையும் மிக வெளிப்படையாக நடத்த துணிந்திருப்பது தெரிகிறது. முந்தைய வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம், இந்த ஈராக் யுத்தம் அதைத்தான் காட்டுகிறது. ஐரோப்பியா முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டு வர அன்று ஜெர்மனி நினைத்தது. உலகம் முழுவதையும் தனது குடையின் கீழ் கொண்டு வர இப்போது அமெரிக்கா நினைக்கிறது. இந்த அசாத்தியமான தைரியத்தை சோவியத் வீழ்ச்சியே அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது.
அதுதான் பீரங்கிகளின் அணிவகுப்பின், புகை மண்டலத்தின், தீப்பிழம்புகளின் பிண்ணனியில் அமெரிக்க அதிபர் புஷ் டி.வி யில் தோன்றி "நாங்கள் முன்னேறுகிறோம்." என்று கொக்கரிக்கிறார். எத்தனையோ தேசங்களின், எத்தனை எத்தனையோ மனிதர்களின் அவலக்குரல்கள் மோதியும் அசையாத அந்த பாறை முகத்தில் ஒரு சிறு வலி கூடத் தெரியவில்லை. தனது மிருக இராணுவத்தை அனுப்பி சேகரித்த எத்தனையோ லட்சம் மனிதர்களின் சதைகளிலிருந்தும், இரத்தத்திலிருந்தும் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் ருசித்து உருவான அந்தத் தோற்றம் வரலாற்றின் கறையாக உற்றுப்பார்த்தால் தெரியும். காலம் முகங்களை மட்டுமே கிளிண்டன் என்றும், முதல் புஷ் என்றும், ரீகன் என்றும் கார்ட்டர் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆயுதங்களைப் போலவே பொய்களும் திட்டமிட்டு தயாரித்து உலகம் முழுவதும் ஏவப்படுகின்றன. முதல் ஐந்து நாட்கள் போரிலேயே வெள்ளை மாளிகையும், பெண்டகனும் சி.என்.என், எம்.எஸ்.என், பி.சி, ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தலங்களில் இருந்து இந்த பொய்களை திசைகள் முழுவதும் போய் விழச்செய்தன. ' சதாமின் குடியரசுப் படைகள் ஈமெயில் மூலம் சரண் அடைவது குறித்து செய்திகள் அனுப்பினர்' ... 'உதவிப் பிரதம மந்திரி டாரிக்அஜிஸ் காயப்பட்டார் '.... 'சதாம் உசேன் கொல்லப்பட்டார்'. பாக்தாத்தில் அமெரிக்க வீரர்களுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு', பாஸ்ராவில் சதாமுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி'. அடுத்து வந்த நாட்களில் இவை பொய்களாக அறியப்படுவதற்குள் புதிய பொய்களின் சரமாரியான அடுத்த தாக்குதல். போர் ஆரம்பித்து மூன்று வாரங்கள் ஆகப் போகிறது.
இந்தப் பொய்களை உண்மைகளாக்குவதற்கு பீரங்கிகளோடும் போர் விமானங்களோடும் சேர்ந்து இந்தச் செய்தி நிறுவனங்களும் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன. போரில் தங்கள் இராணுவம் செய்யப்போகிற சகிக்க முடியாத அழிவுகளையும் சதாம் மீதே சுமத்த முன்கூட்டியே அறிக்கைகள் விடப்படுகின்றன. பிப்ரவரி 12ம் தேதி நேஷ்வில்லேவில் அமெரிக்க அதிபர் பேசும் போது "அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தால் சதாம் உசேன் சாதாரண மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப் போவதாக" எச்சரித்து, மேலும் " இதனால் போரில் சாதாரண மக்களை கொன்ற பழியை அமெரிக்கா மீது சுமத்த பார்க்கிறார்" என்றும் தகரக் குரலில் குறிப்பிட்டார். அதேநாளில் இராணுவக் கமிட்டி செனட்டில் பேசிய உதவி அட்மிரல் லோவெல் ஜேக்கபி " போர் மூண்டால் சதாம் உசேன் ஈராக்கில் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் என அனைத்து அடிப்படை வசதிகளையும் துண்டித்து பெரும் மனித அழிவுகளை அவரே ஏற்படுத்தி நம்மீது பழி சுமத்துவார் " என்று பேசியுள்ளார்.
அதே நேரம் ஈராக்கில் ஆக்கிரமித்த பகுதிகளெங்கும் படைவீரர்கள் மிக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிக்கிறார்கள். சதாம் ஒருவரே இந்த யுத்தத்திற்கு காரணம் என்று அதில் சொல்லப்படுகிறது. சதாமினால்தான் ஈராக் தேசம் முன்னேறாமலும், மக்கள் அடிமையாகவும் இருப்பதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சதாம் இல்லாத தேசம் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நம்ப வைக்கப்படுகிறது. மாறி மாறி போர்களால் சிதைந்து உருக்குலைந்து போன ஒரு தேசத்தில் ஒரே ஒரு மனிதனை அகற்றி விட்டால் இத்தனை சித்திரவதைகள் தங்களுக்கு நேராது என்பது ஈராக் மக்களின் அந்தரங்க மனதில் படியவைக்கப்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பலவீனமான மனிதர்கள் தங்கள் மண்ணில் ஆயுதங்களோடு வந்து நிற்கிற அந்நியர்களைப் பார்த்து மெல்ல புன்னகைக்க ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவுதான். காத்திருந்த சக்தி வாய்ந்த காமிராக்கள் மிக நுட்பமான அந்த தருணங்களை விழுங்குகின்றன. தொலைக்காட்சிகளில் கூட்டுப்படைகளிடம் உணவுப்பொட்டலங்களை ஈராக்கிய மனிதர்கள் சிலர் வாங்குகிறார்கள். பீரங்கிகளுக்கு குழந்தைகள் கையசைக்கிறார்கள். கிழிக்கப்பட்ட சதாமின் படத்தின் கீழே இரண்டு மூன்று பேர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உலகமே பார்க்கிறது. புத்திசாலித்தனமான பொய்கள் ஈராக்கியர்களையும், உலகத்தையும் அசைக்கின்றன.
உண்மைகளும், மனிதர்களும் குண்டுகளுக்கு பலியாகி ஈராக் மண்ணில் எந்தக் காமிராவின் கண்களும் படாமல் தூசி படியக் கிடக்கின்றனர். 'சதாம் உலகத்துக்கே பேரழிவு உண்டாக்கும் இரசாயண ஆயுதங்கள் வைத்திருக்கிறார்', 'செப்டம்பர் 11க்கு காரணமான அல்-கொய்தாவுடன் சதாமுக்கு தொடர்பு இருக்கிறது ', 'ஈராக்கில் ஜனநாயகம் இல்லை' ன்ற பிரச்சாரங்களால் அவை மூடப்பட்டிருக்கின்றன. இந்தப் போர் சதாம் உசேனுக்காக இல்லை என்பது புஷ்ஷுக்கும், பிளேருக்கும் தெரியும். தங்கள் சொல்படி கேட்கிற ஒரு மாற்று அரசை அமைத்து எண்ணெய் வளத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இத்தனை நாசவேலைகள். அங்கு ஒரு இராணுவ தளத்தை அமைத்து அரபு உலகத்தை நடுக்கமுறச் செய்து என்றென்றும் தங்களுக்கு கப்பம் கட்ட வைப்பதற்குத்தான் இத்தனை உயிர்பலிகள்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி போரைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராயாமல், யுத்தம் மெற்கொள்ளும் நாடுகளே, யுத்தத்திற்குப் பிறகு ஈராக்கை புனரமைக்கும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் பணிவோடு கோபி அன்னன் கேட்டுக் கொண்டுள்ளார். குதறப்பட்டிருக்கிற ஈராக்கை புனரமைக்கிற பொறுப்பு இந்த 'தலைவர்'களிடம் கொடுக்கப்பட்டிருப்பதுதான் அவர்களுக்கு கொடுக்கப்படுகிற தண்டனையா? இதைத்தானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். போர் தொடங்குவதற்கு முன்னரே அமெரிக்காவின் இரண்டு மிகப் பெரிய தனியார் கம்பெனிகள் அந்தக் காரியத்தைச் செய்ய முன்வந்திருக்கின்றனவாம். கோபி அன்னன் அதற்கு மேற்பார்வையாளராக இருக்கலாம்.
சதாம் உசேன் கொல்லப்படலாம். கைது செய்யப்படலாம். அல்லது எங்காவது தப்பி ஒடிவிடலாம். அங்கங்கு சதாமை வெறுப்பவர்கள் சந்தோஷங்களைக் கொண்டாடலாம். யார் ஆண்டாலும் கவலைப்படாத அப்பாவி மக்களால் அமெரிக்க, பிரிட்டன் வீரர்கள் கதாநாயகர்களாய் பாக்தாத் வீதிகளில் வலம் வரலாம். ஒரு இராணுவ அதிகார அமைப்புக்கு எதிராக அடக்கிவைக்கபட்ட உணர்வுகள் தற்காலிகமாக பீறிட்டு வெளிப்படலாம். இதெல்லாம் உண்மையான தோற்றங்கள்தானா? நிரந்தரமான காட்சிகள்தானா? விலை மதிப்பற்ற உயிர்களையும், அவர்களது கனவுகளையும் யாரால் புனரமைக்க முடியும் . கண்முன்னால் தங்கள் பிரியத்திற்குரிய யாவும் தீயில் கருகியதையும், இடிந்து விழுந்ததையும் பாரத்த ஒரு தேசத்தின் ஆன்மா நம்பிக்கை கொள்வதற்கு என்ன மீதமிருக்கும் .
ஐந்து வயது குழந்தையின் மூளை சிதறிப் போனதே அந்தத் தாயின் அடிவயிற்றுக் கேவலை யாரால் அணைக்க முடியும். தன் குடும்பத்திலிருந்த பதினைந்து பேரையும் இழந்துவிட்டு வானத்தை நோக்கி அல்லா என்று கதறுகிறாரே ரசாக் காசிம், அவரை எந்த ஜனநாயகம் தேற்றப் போகிறது. பாக்தாத்தின் மார்க்கெட்டில் ஏவுகணைகள் தாக்கி நூற்றுக்கணக்கில் இறந்து போன மக்கள் அந்த மண்ணோடு மண்ணாகத்தானே கலந்திருப்பார்கள். அதைப் பார்த்து, துடித்து, அந்த நினைவுகளில் யுத்தத்தின் கருநிழல் படிந்து போனவர்கள் எதை வரவேற்க காத்திருப்பார்கள். தொடர்ந்து குண்டுகள் சத்தங்களையும், போர் விமானங்களின் இரைச்சலையும்,, தீப்பிழம்புகளையும் பார்த்து வெறித்துப் போன ஒரு சமூகம் எதில் அடங்கி நிலை கொள்ளப் போகிறது. அந்த முகங்கள்தான் இந்த யுத்தத்தின் உண்மையான முகம்.
பம்பாயில் ரித்திஷ் சின்ஹா என்பவர் தயாரித்திருக்கும் ஒரு நிமிடமே ஓடக்கூடிய 'போர் அல்லது அமைதி' என்னும் சின்னஞ்சிறு குறும்படத்தில் சொல்லப்படுகிற செய்திதான் இந்த யுத்தம் தந்துவிட்டுப் போயிருக்கிற உலகம். குண்டுகள் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிற நகரத்தில் ஒரு பெண் மருத்துவமனையில் உடலின் ஒவ்வொரு அணுவும் வலியில் துடிக்க தன் குழந்தையை பெற்றெடுக்கிறாள். வெளியே அவளது கணவன் குண்டு ஒன்றுக்கு பலியாகி இறந்து போகிறான். குழந்தையைப் பார்த்து தன் கணவனையும், குண்டுகள் சத்தத்தையும் அந்த பெண் மறப்பாளா, அல்லது அந்த நினைவை சுமப்பாளா? காலம் என்பது எல்லாவற்றையும் மறக்க வைக்கும். ஆனால் யுத்தம் காலத்திற்கே வடுவாகிப் போகிறது.
சென்ற வளைகுடாப் போரில் 1991 மார்ச் 8ம் தேதி சௌதி அரேபியாவில் இருந்து அமெரிக்க சார்ஜெண்ட் டேன்வில்ச் தனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இவை.
"..அந்த காரில் சடலமாய் ஒரு ஈராக்கியன் இருந்தான். அகலத் திறந்திருந்த கண்கள் மௌனமான அலறலில் உறைந்திருந்தன. நான் சுட்டு வீழ்த்திய அந்த மனிதனை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அதை செய்திருக்காவிட்டால் அவன் போர்க்கைதியாக பிடிபட்டிருப்பான். விடுதலை பெற்று தன் வீட்டிற்குச் செல்லும் நாளை எண்ணிக் கொண்டிருப்பான். என்னைப் போலவே..."
போர்க்களத்தில் இறந்துபோன ஒருவனும், அவனைக் கொன்ற ஒருவனும் ஒரு புள்ளியில் ஒன்றாகவே இருக்கின்ற அனாதி வெளி நிழலாடுகிறது. வெப்பம் மிகுந்த அந்த மணற்பிரதேசத்தின் ஒரு இரவின் தனிமையில் டேன்வில்ச்சிற்கு தன் வீட்டின் ஞாபகம் தாகமாய் தகிக்க வெளிப்பட்ட உணர்வில் ஒரு அடர்த்தியான சோகம் இருக்கிறது. அந்த ஈராக்கியனுக்கு தன்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டதாகவே தோன்றியிருக்கிறது. புஷ் அறிவித்திருக்கும் 'ஈராக்கிய விடுதலை' இது கூட இல்லை. சூன்யம். சூன்யம் மட்டுமே!
சதாம் தூக்கி எறியப்படுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அமையப் போவது எந்த வகையான அரசு? எந்த வகையான ஜனநாயகம்?அதிகமானோர் ஷியாக்கள். அவர்கள் ஈரானோடு ஒரு நல்ல உறவை வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அது அமெரிக்காவுக்கு ஒத்து வராது. அமெரிக்காவின் அடுத்த இலக்குகளில் ஈரானும் ஒன்று. சிறுபான்மையினரான குர்து இன மக்கள் சுயாட்சி கேட்பார்கள். தங்களுக்கென்று அரசு அமைக்க விரும்புவார்கள். இது துருக்கிக்கு ஏற்புடையதல்ல. பிடிக்காது. நிச்சயம் எதிர்க்கும். அமெரிக்கா துருக்கியைத்தான் ஆதரிக்கும். ஈராக்கில் உள்ள பெரும்பான்மை, சிறுபான்மை இரண்டு பேருக்குமே அமெரிக்காவின் தலையீட்டால் எந்த எதிர்காலமும் இல்லை. இது அமெரிக்காவுக்கும் தெரியும். பிறகு என்ன விடுதலை?
ஒரு நிலையான அரசு, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசு எதுவும் உடனடியாக அமைவதில் சாத்தியமில்லை. ஒரு தறி கெட்ட, இலக்குகள் அற்ற, வெளியில் ஈராக்கிய மக்களின் எதிர்காலம் ஸ்தம்பித்துப் போகும். இனக்கலவரங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் அன்றாட வாழ்க்கையாகும். எண்ணெய் வயல்கள் 'விடுதலை' பெற்று அமெரிக்காவை நோக்கி பாயும். போர் சமயத்தில் குழந்தைக்கு அக்கறையோடு பிஸ்கெட் கொடுத்து போட்டோ பிடித்துக் கொண்ட அந்த அமெரிக்காக்காரன் அப்போது வேறு ஒரு நாட்டில் கையில் துப்பாக்கியையும், பிஸ்கெட்டுகளையும் வைத்துக் கொண்டு குழந்தை ஒன்றை தேடிக் கொண்டிருக்கக் கூடும். பாலைவனத்து மண்ணில் வெப்பம் அடங்காமல் சதா நேரமும் தகித்துக் கொண்டேயிருக்கும்.
டைகிரிஸ் நதியில் இருட்டு விழுந்து கிடக்கிறது . பாக்தாத்தின் ஆன்மாவாய் சலசலத்து வேகமாய் ஓடும் அந்த பழுப்பு நிற நதி எல்லாம் முடிந்து போன மாதிரி ஒடுகிறது. 'பாக்தாத் எண்ணெயில் வரைந்தது (Oil painting) அல்ல ; நீரில் வரைந்த(water colour) ஓவியம் போல இருக்கிறது' என்று புகழ் பெற்ற எழுத்தாளர் காவின் யங் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இப்போதோ பாக்தாத் மனித இரத்தத்தால் வரையப்பட்டிருக்கிறது. நைல் நதி ஓரத்து இதிகாச கிரேக்க நாட்டிற்கு ஒப்பான பாக்தாத்தில் பிணங்களின் வாடை . பாக்தாத் என்றால் ' கடவுளால் உருவாக்கப்பட்டது' என்றும் 'அமைதியின் நகரம்' என்றும் அர்த்தங்கள். இப்போது அமெரிக்கா அதனை உருவாக்கப் போகிறதாம். ஆதியில் கடவுள் உலகைப் படைத்தபோது மண்ணில் நீர்த்திவலைகள் மீது கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாமே, இப்போது டைகிரிஸ் நதியின் மீது என்ன அசைந்து கொண்டிருக்கும்?




