வானில் பறந்த சுண்டெலி!
ஒரு சிறிய கடற்பறவை நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பி ப்றந்து சென்றது. அப்போது ஒரு சுண்டெலியைப் பார்த்தது. அருகில் சென்று “உன்னுடைய சிறகுகள் எங்கே? அவற்றுக்கு என்னவாயிற்று?” என்று கேட்டது.
சுண்டெலி கடற்பறவையை வியப்போடு பார்த்தது. அது பேசிய மொழி சுண்டெலிக்குப் புரியவில்லை. கடற்பறவையின் சிறகுகளைப் பார்த்து ‘இது என்னவாக இருக்கும்’ என்று எண்ணியது.
கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காததால், கடற்பறவை சுண்டெலியின் சிறகுகளை யாரோ ஒரு அசுரன் பிய்த்துப் போட்டிருக்கலாம் அல்லது எதாவது ஒரு மிருகம் பிடுங்கிக்கொண்டு போயிருக்கலாம் என நினைத்து பரிதாபப்பட்டது.
சுண்டெலிக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென எண்ணியது கடற்பறவை. அப்படியே சுண்டெலியை தன் அலகுகளில் கவ்விக்கொண்டு வானில் பறக்க ஆரம்பித்தது.
வானத்திலிருந்து பூமியைப் பார்த்த சுண்டெலிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படியொரு அழகான காட்சியைக் காணாத சுண்டெலி வானத்திலிருந்து கீழே வருவதற்கு விரும்பவில்லை. இருந்தாலும் என்ன செய்வது...?
சிறிது நேரம் நகரைச் சுற்றிய கடற்பறவை சுண்டெலியை அதே இடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டது. தான் வானத்தில் பறந்த சுகமான அனுபவத்தையும், பூமியின் அழகையும் எண்ணியெண்ணி மகிழ்ச்சி அடைந்தது சுண்டெலி.
நாட்கள் செல்லச் செல்ல சுண்டெலிக்கு மனதினுள் சந்தேகம் வரத் தொடங்கியது. அற்புதமான அந்த அனுபவம் தன்னுடைய கனவுதான் என நினைத்துக் கொண்டது.
பி.கு: நேற்று செம்மலரில் இந்த சிறுவர் கதையைப் படித்தேன். யார் எழுதியது எனக் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கதையே ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவமாக இருந்தது. கதை பற்றிச் சொல்வதற்கு நிறையத் தோன்றுகிறது. முதலில் நீங்கள் சொல்லுங்களேன்.
இன்றைய தலைப்புச் செய்திகள்
விருதுநக்ர் :
நேற்று நள்ளிரவு விருதுநகர் அருகே சிவகாசியிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் வழிப்பறிக் கொள்ளை!
சென்னை :
நேற்று நள்ளிரவு ஒரே நாளில் சென்னையில் கொள்ளையர்கள் பல வீடுகள் புகுந்து அட்டகாசம்!
டெல்லி :
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது!
கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டைகள், ஒரு முட்டை
சின்ன வயதில் எங்கள் பள்ளியில் பெரும்பாலும் எனக்கு பெண் வேடம்தான். ஆண்டுவிழா, சுதந்திரவிழா கொண்டாட்டங்களில் ஆடுவதற்கு ஜெயராமன் வாத்தியார் அழைத்துக் கொள்வார். கூச்சம் இருந்தாலும், அதுகுறித்து ஒரு பெருமையும் உள்ளுக்குள் இருந்தது. ஆறுமுகனேரி இந்து நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இது நடந்தேறியது. எட்டாம் வகுப்பில் பெண்வேடம் போடக்கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். நாம் இனிமேல் எல்லாம் பெரிய மனிதன் என்ற எண்ணம் குடியேறியிருந்தது.
அந்த வருடமும் அழைக்கப்பட்டேன். வேண்டாம் எனச் சொல்லிப் பார்த்தேன். ஜெயராமன் வாத்தியார் “சும்மா இருல..” என்றே மிக அலட்சியமாக அதை உதறிவிட்டு, “ஒனக்கு என்ன வேடம் தெரியுமால.. டெஸ்டிமோனா!” என்று அவரே ஆச்சரியப்பட்டு என்னைப் பார்த்தார். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்த மாதிரி. யார் அந்த டெஸ்டிமோனா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. “சார்.. என்னய விட்ருங்க..” என்றேன். “ஏலே..நீதாம் பொம்பளப்பிள்ளை மாதிரி அழகாயிருக்கே.. இங்கிலீஷும் நல்லாப் பேசுற” என்று தோளில் தட்டினார். விழ ஆரம்பித்தேன். “ரத்தத்திலகம் படம் பாத்துருக்கியா... அதுல சிவாஜி ஒத்தல்லாவாக வருவாரே..” என்று சொல்லிக்கொண்டே போனார். தோள் மீது அவர் வைத்திருந்த கைகளைத் தட்டிவிட முடியவில்லை.
ஒரு வாரம் மொட்டை மாடியில் நடந்து நடந்து ஹெட்மாஸ்டர் எழுதிக் கொடுத்திருந்த வசனங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். பரீட்சைக்குக் கூட அப்படி படித்ததில்லை. மகன் ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு அம்மா காப்பியெலாம் மாடிக்குக் கொண்டு வந்து தந்தார்கள். வசனங்கள் எனக்குக் கம்மிதான். விஸ்வநாதனுக்குத்தான் அதிகம். ஒத்தல்லோ அவன். மூலக்கரையிலிருந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். என்னைவிட குள்ளமாகவும், கருப்பாகவும் இருப்பான். ஆங்கிலம் அழகாய் பேசுவான். ஒத்திகை பார்க்கும் முன்னாலேயே வகுப்பில் “மை லவ்வர், மை லவ்வர்” என்று எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்து விட்டான். கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஜெயராமன் வாத்தியாரிடம் போய் விஸ்வநாதன் கிண்டல் பண்ணுவதாகச் சொல்லி, நடிக்க மாட்டேன் என்றேன். அவர் அவனை சிரித்துக்கொண்டே அதட்டி, என்னையும் பார்த்து சிரித்து “சரி. விடுல” என்றார். இதற்கிடையில் ஹெட்மாஸ்டர் வசன உச்சரிப்புகளையும் சரி செய்து கொண்டிருந்தார்.
ஒத்திகையின் போதுதான் ஒரளவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புலப்பட்டது. நான் படுத்துக்கொண்டிருப்பேன். விஸ்வநாதன் கையில் ரோஜோவோடு உள்ளே நுழைந்து, காதல் வசனங்களைப் பேசி, என்னை முத்தமிடுவான். உதடு அருகே உதடு கொண்டு வருவான். அவ்வளவுதான். அப்புறம் நான் எழுந்து பேச வேண்டும். அவனும் பேசுவான். கடைசியில் கத்தியால் என்னைக் குத்திக் கொன்று விட்டு கதறுவான். எல்லோரும் ஒத்தல்லோவாக விஸ்வநாதன் சிறப்பாக நடிப்பதாகச் சொன்னார்கள். என்னையும் சொன்னார்கள். வீட்டில் என்னை டெஸ்டிமோனா என்று அண்ணன்களும், தங்கையும் அழைக்க ஆரம்பித்தார்கள்.
ஆண்டுவிழா அன்று மதியத்திற்கு மேலேயே என்னை வரச் சொன்னார்கள். திருச்செந்தூரிலிருந்து மேக்கப் போட ஒருவர் வந்திருந்தார். வயதானவர். மூடிய அறைக்குள் அவரும் நானும் மட்டுமே இருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது யார் பையன், பேரன் என எல்லாம் விசாரித்து, “நீ ஜோதி பையனா!” என்று ஆச்சரியமாகக் கேட்டார். ஆமாம் என்றேன். “ம்... ஒங்கம்மாவுக்கு சின்ன வயசுல நான் கிருஷ்ணர் வேடம் போட்டிருக்கேன்” என்று முகத்தில் பவுடரை எதிலோ குழைத்து அள்ளிப் பூசினார். இதற்கு முன்னால் பெண்வேடம் போட்ட போதெல்லாம் இந்த மாதிரியெல்லாம் இல்லை. பாவாடைத் தாவணி கொண்டு போக வேண்டும். சடை, ஒட்டுக்கம்மல் எல்லாம் போட்டு எளிதாக பெண்ணாகி விடுவேன்.
சடை போடாத முடியாகக் கொண்டு வந்து தலையில் வைத்து கிளிப்களை குத்தினார். அப்புறம் அவர் பையிலிருந்து இரண்டு சிரட்டைகளை எடுத்து, அதில் கட்டியிருந்த கயிறுகளைச் சரி செய்தார். என்னச் செய்யப் போகிறார் என்பது புரிந்து, வெட்கத்திலும், கூச்சத்திலும் தத்தளித்தேன். எந்த இடத்தில் வைப்பது என கைகளை என் மார்பருகே கொண்டு வந்து கணக்கு வேறு பார்த்தார். ஐயோ என்றிருந்தது. அப்புறம் வைத்துக் கட்டினார். அதன் மீது ஒரு பிராவையும் அணிய வைத்தார். என் மார்பு என்னவோ போலிருந்தது. சம்பந்தமில்லாமல் துருத்திக்கொண்டிருந்தது. சிரட்டைகள் வேறு தசைகளை அழுத்தின. நாக்கெல்லாம் வறண்டு போனது. என் நிலமை புரிந்திருக்க வேண்டும்.
“இப்படியேவா இருக்கப் போற.. இன்னும் கொஞ்ச நேரந்தான்” என்றார். கண்ணாடியில் என்னைப் பார்க்க வேண்டும் போலவும் இருந்தது. தள்ளி முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருந்தாலும், அந்த மனிதர் என்ன நினைப்பாரோ என்று அடக்கிக் கொண்டேன்.
பிறகு முட்டை ஒன்றை மிக கவனமாக எடுத்தார். அதுவும் எதற்கு என்று புரிந்தது. ஜெயராமன் வாத்தியார் சொல்லியிருந்தார். முட்டையில் சிறு துவாரம் போடப்பட்டு உள்ளிருந்து மஞ்சள் கரு, வெள்ளைக்கரு உறிஞ்செடுத்துவிட்டு, அதற்குள் சிவப்புச் சாயத்தை நிரப்பியிருந்தார்கள். வயிற்றின் ஓரத்தில் மெல்லிய துணியை உடம்போடு கட்டப்பட்டது. ஒத்தல்லோ கத்தியால் குத்தியதும், முட்டையில் கை வைத்து அழுத்தி உடைத்து ரத்தத்தை வரவழைக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலே மிக லாவகமாக அந்த பஞ்சு போன்ற கவுன் அணிந்தேன். ஜன்னலில் இருந்து நான்கைந்து பையன்களின் சிரிப்புச் சத்தம். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் வகுப்பு மாணவர்கள். சாதாரண காலங்களிலேயே என்னை கிண்டல் செய்யும் எங்கள் தெரு துஷ்டன் முத்துராமனும் இருந்தான். அவமானமாய் இருந்தது. மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர் “ச்சீ பசங்களா” என்று விரட்டினார். ஜன்னலை மூடினார்.
“ஏலேச் சிரட்டை” என்று கத்திக் கொண்டே ஓடினார்கள். செத்தேன். உடம்பில் எந்த ஜீவனும் இல்லாதது போலாகி விட்டேன். வெளியே ஸ்பீக்கர் சத்தம் கேட்க ஆரம்பித்தது. நாடகம் ஆரம்பிக்க இன்னும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும் என்றார்கள். தலைகாட்டவே இல்லை. அம்மா தேடி வந்து காபி தந்து, என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அழுகை வரும் போலிருந்தது. இடையில் ஜெயராமன் வாத்தியார், ஹெட்மாஸ்டர் எல்லோரும் வந்து வந்து பார்த்து விட்டுப் போனார்கள். அப்புறம் விஸ்வநாதனும் வந்து பார்த்தான். மேக்கப் போட்டு ஜாக்ஷன் துரை போலிருந்தான். “ஹலோ மை லவ்வர்” என்றான். ச்சீ என்றேன். “ஏன் கோபம் மை டியர்” என்றான். நான் பேசாமல் முறைத்தேன். பக்கத்தில் வந்தான். “இதென்ன மாது” என்று கையை நீட்டினான். “ச்சீ” என்று திரும்பிக் கொண்டேன். போய்விட்டான்.
அவன் பாட்டுக்கு வெளியே நடமாடிக் கொண்டிருந்தான். என் மார்பை நான் பார்த்துக் கொண்டு அமைதியாய் அங்கேயே இருந்தேன்.
“அடுத்து நம்ம நாடகம். ரெடியாகு” என்று ஜெயராமன் வாத்தியார் அழைத்தார். அதுவரை இருந்த களைப்பு போய் பயம் வந்தது. எழுந்து கவுனை சரி செய்தேன்.சிரட்டைகள் கொஞ்சம் கீழே இறங்கிய மாதிரி உணர்ந்தேன். கலங்கினேன். தூக்கி வைத்து, கவுனை கீழே இறக்கி இறுக்கமாக்கிக் கொண்டேன். முட்டையையும் பதமாக தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “கொஞ்சம் இரு” என்று மேக்கப் போட்டவர் அருகில் வந்து உதட்டில் லிப்ஸ்டிக் பூசினார். எதோ பூச்சி உதட்டில் ஒட்டிக்கொண்டது போல விறுவிறுவென வந்தது. கையை உதட்டருகே கொண்டு போய் தொட்டுப் பார்த்தேன். “ம்.. எதுக்குத் தொடுறலே” என்று சத்தம் போட்டார்.
விசில் சத்தம் கேட்டது. திரை இறக்கி விட்டார்கள். மேடைக்குச் சென்றேன். உள்ளே நான் படுத்திருப்பதற்கு இரண்டு பெஞ்சை சேர்த்துப் போட்டு போர்வை விரித்தார்கள். தலையணை வைத்தார்கள். விஸ்வநாதன் ஒரு மூலையில் நின்று வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே என் மார்பை வேறு பார்த்து சிரித்துக் கொண்டான். எப்போது இந்த நாடகம் முடிந்து எல்லாவற்றையும் கழற்றி எறிவோம் என்றிருந்தது. ஜெயராமன் வாத்தியார், வசனம் எழுதப்பட்ட காகிதங்களோடு மேடையின் பக்கவாட்டில் போய் நின்று கொண்டு “மாது ம்..படு” என்றார். சிரட்டைகள் சரியாக இருக்கின்றனவா என்று ஒருதரம் தொட்டுப் பார்த்துக்கொண்டு அலுங்காமல், குலுங்காமல் படுத்துக் கொண்டேன்.
விசில் ஊதப்பட்டது. திரை விலக்கப்படவும் கணகளை மூடிக்கொண்டேன். ”ஷேக்ஸ்பியரின் அற்புதமான நாடகம் இது...” என்று ஜெயராமன் வாத்தியார் நாட்கம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். வெளியே கூட்டத்தின் கசகச கேட்டது. “இதோ ஒத்தல்லோ டெஸ்டிமோனாவைப் பார்க்க கடைசி முறையாக வருகிறான்” என்று முடிக்கவும், ஆரவாரமானது. விஸ்வநாதன் மேடைக்குள் ரோஜாவோடு நுழைந்து விட்டான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வசனங்களை உருக்கமாக பேச ஆரம்பித்தான். மெல்ல மெல்ல அவனது குரல் என்ன நோக்கி வர ஆரம்பித்தது. “ஏய்... சிரட்டை..” என்று முத்துராமன் குரல் கேட்டது. பெரும் சிரிப்பு எழுந்தது. ‘ஐயோ, மேடைக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்திருக்கிறானே’ என்று படபடப்பாய் இருந்தது. என்னவெல்லாம் செய்யப் போகிறானோ என்று நினைத்ததும், இப்படியே எழுந்து ஓடிவிடலாமா என்றும் தோன்றியது.
விஸ்வநாதன் குரல் அருகில் கேட்டது. முத்தம் கொடுக்கப் போகிறான் என்று தெரிந்து கொள்வதற்குள், அவனது மூச்சுக்காற்று என் முகத்தில் விழுந்தது. உதடுகளில் ஈரமான கனத்தை உணர்ந்தேன். ‘அடப்பாவி... முத்தமே கொடுத்துவிட்டான்’. கிழே ஒரே சிரிப்புச் சத்தம். உதடுகளைத் துடைத்துக் கொள்ளவேண்டும் என பரபரத்தது. அடக்கிக்கொண்டேன். விஸ்வநாதன் மீது எரிச்சலும் கோபமும் கடுமையாய் வந்தது. ரொம்ப நேரம் போகாததால், இயற்கையின் முதல் அழைப்பு அடிவயிற்றில் கனத்துக்கொண்டு தொந்தரவு செய்தது.
எழுந்து உட்கார்ந்து எனக்குரிய வசனங்களை சொன்னேன். விஸ்வநாதன் முகத்தில் புன்னகையும், தீவீரமும் மாறி மாறி வர பேசி, சுற்றி, சுற்றி நடந்து கொண்டே இருந்தான். ”ஏலே மைக்குக்கிட்ட போயிப் பேசிலே” என்று ஜெயராமன் வாத்தியார் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இருளில் மொதுமொதுவென தலைகளாய் வெளியே தெரிந்தன. சிரட்டைகள் கிழே நழுவுவது போல வேறு தோன்றியது. தொட்டுப் பார்த்தேன். பக்கவாட்டில் இருந்து ஜெயராமன் வாத்தியார் “எலே கையை அங்கனயிருந்து எடுல”என்று மெல்லிய சத்தம் போட்டார். முட்டை இருந்த இடத்தையும் லேசாய் தொட்டுப் பார்த்தேன். “பாத்து, பாத்து” என்று கீழேயிருந்து முத்துராமன் கத்தினான். காய்ச்சலில் மயக்கம் வரும் நிலையில் இருந்தேன். எப்போது விஸ்வநாதன் கத்தியால் குத்துவான், விசில் சத்தம் கேட்கும் என்று துடித்தேன்.
நேரம் ஆக ஆக, முட்டையை எப்போது அமுக்குவது என்பதில் கவனமாய் இருந்தேன். வெளியிலிருப்பவர்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நான் நிற்க வேண்டும். விஸ்வநாதன் கத்தியால் என்னைக் குத்த வேண்டும். முட்டையை அழுத்தியவாறு நான் கூட்டத்தைப் பார்த்து திரும்பி இரத்தத்தோடு துடித்துக் கீழே விழ வேண்டும். இதுதான் சொல்லித்தரப்பட்டிருந்தது. எல்லாம் சரியாகச் செய்து, விசில் சத்தம் கேட்கவும் “அப்பாடா” என்று எனக்கு உயிர் வந்தது.
திரை விழுந்ததும் எழுந்து உள்ளே அறைக்கு ஓடி கவுனைக் கழற்றினேன். பிராவைக் கழற்ற முடியவில்லை. விஸ்வநாதன் பின்னாலிருந்து கழற்ற உதவி செய்தான். “எதுக்குல்லே, முத்தம் கொடுத்தே” என்றேன். “பொம்பளை மாதிரியே இருந்தே” என்றான். ”ச்சீ” என்று உதட்டை துடைத்தேன். கையெல்லாம் லிப்ஸ்டிக். சிரட்டைகளை கழற்றினேன். உள்ளே வந்த மேக்கப் போட்ட பெரியவர், டெஸ்டிமோனாவின் மார்புகளை எடுத்து பையில் பத்திரமாக வைத்துக் கொண்டார். கிளிப்புகளை அகற்றி முடியை எடுத்தார். “நல்லா நடிச்சே தம்பி” என்றார். சின்ன சந்தோஷம் வந்தது. மேல்ச்சட்டை, கால்ச்சட்டை எல்லாம் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.
தெரிந்தவர்களெல்லாம் “மாது!, அப்படியே வெள்ளக்கார பொம்பள மாதிரியே இருந்தே” என்று ஆச்சரியப்பட்டு கைகொடுத்தார்கள். சிலர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டு அக்காக்கள் புன்னகையை ஒளித்து வைத்தபடி சிரித்ததில் நிறைய அர்த்தங்கள் இருந்தன. ஒதுங்கி இயறகையின் அழைப்பை நிறைவேற்றும் போது அருகில் வந்து முத்துராமன் “என்னலே, சிரட்டை..!” என்றான். போடா மயிரு!” என்று கத்தினேன். ஒரு கல்லை எடுத்து எறியப் போனேன். ஓடிவிட்டான்.
தனியே ஒரு இடத்தில் உட்கார்ந்த போது நிம்மதியாய் இருந்தது. கூடவே எதையோ இழந்தது போலவும் இருந்தது.
(எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் இந்தப் பதிவை மிகவும் ரசித்ததாய்ச் சொல்லியிருந்தார். இங்கு மீள்பதிவாக…)
வண்ணப் புதிர்
இலைகளை உரசியபடி வேண்டா வெறுப்பாய் மரக்கிளைகளின் ஊடே நகர்ந்த வண்ணத்துப் பூச்சி சட்டென்று விலகி தாழப் பறந்தது. சின்னச் சின்னச் செடிகளின் மீதெல்லாம் யோசித்தபடியே நகர்ந்தது. அருகிலிருந்த பூஞ்செடிகளை நோக்கிச் சென்று அதன் பூக்களிலெல்லாம் தேடியது. பிறகு அந்த இரும்பு கேட்டின் மீது பேசாமல் உட்கார்ந்து சிறகுகளை மூடிக் கொண்டது.
அதற்கு யார் மீது, என்ன கோபம் என்று தெரியவில்லை.
மிக்க நன்றி, எழுத்தாளர் வண்ணதாசன்!
சனிக்கிழமை சாயங்காலம் லேசான மழைத் தூறலில் நனைந்துகொண்டுதான் திருநெல்வேலிக்கு பஸ் ஏறினேன். ஜன்னலோர இருக்கை கிடைக்காமல் போனதில் சின்ன ஏமாற்றமிருந்தாலும், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரைத் தாண்டி ஈரம் படர்ந்த வெளி அழகாய்த் தெரிந்தது. எவ்வளவோ முறை பார்த்த அதே மரங்கள், அதே கட்டிடங்கள், அதே கரிசல்காடு என்றாலும் புதுசாய் காட்சியளித்தன. மிகவும் நேசிக்கிற எழுத்தாளர் ஒருவரை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப் போகிறேன் என்பதும், இன்று அவர் என் எழுத்துக்கள் குறித்து பேசப்போகிறார் என்பதும் படபடப்பையும், சிலிர்ப்பையும் வீசிக்கொண்டு இருந்தன.
எழுத்தாளர் வண்ணதாசனை ஆறேழு தடவைக்கும் மேலாக நேரில சந்தித்து இருக்கிறேன். எதாவது கூட்டங்களாய்த்தான் அவை இருந்திருக்கின்றன. ஒன்றிரண்டு சமயங்களில் நானும், அவரும் ஒரே மேடையில் பேசவும் செய்திருக்கிறோம். சில வார்த்தைகள், புன்னகை தவழும் விசாரிப்புகளாய் இருப்பினும் அவை என்னிடம் பத்திரமாய் இருக்கின்றன. எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் தந்தையார் சண்முகம் அவர்கள் எழுதிய பெரிய வயல் நாவல் வெளியீட்டு விழாவின் கூட்டத்தில் அவரும், கவிஞர் சமயவேலும் வந்து அமர்ந்திருந்த்னர். அவர்களுக்கு நேர் பின்னே நான், காமராஜ், கார்த்தி இருந்தோம். “நல்லா இருக்கீங்களா” எனத் தொட்டு கேட்கத் தோன்றி, அந்தக் கூட்டத்திலும் அவர்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் தனிமையை உலுக்கி, உதிர்த்துவிட மனமில்லாமல் போனேன். அதிகமாய் வண்ணதாசனோடு பேசியதில்லை என்றாலும் அவர் மிகவும் தெரிந்தவராகவும் நெருக்கமானவராகவுமே உணர்ந்திருக்கிறேன்..
அவரது எழுத்துக்கள் அப்படியானவை. இலக்கியச் சிந்தனை தொகுப்பில் வந்த அவரது ‘தனுமை’தான் நான் முதலில் படித்த அவரது கதை. தனு நடந்து சென்ற அந்தப் பாதையை ஏக்கத்தோடும், தவிப்போடும் பார்த்துக் கிடந்தேன். அதற்குப் பிறகு அவரது பல கதைகளை படித்ததில், தமிழ் இலக்கியப் பரப்பில் வண்ணதாசனும், வண்ணநிலவனும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தார்கள். வண்ணதாசன் ஒரு மரநிழலில் உட்கார்ந்து வாசிப்பவனின் அந்தராத்மாவோடு அமைதியாகவும், சாவகாசமாகவும் உரையாடிக் கொண்டு இருப்பார். அறிந்த வாழ்க்கையில், அறியத் தவறிய அழகுகளையும், அர்த்தங்களையும் நமக்கு காட்டிக் கொண்டு இருப்பார். அன்பும் இதமும் படர்ந்த வெளியில் நம்மை சஞ்சரிக்க வைப்பார். மென்மையான, நுட்பமான தருணங்களைக் கடக்க முடியாமல் உள்ளமெல்லாம் ததும்பும்.
கதைகள் எழுதத் துவங்கிய காலத்தில், எழுத்தாளர். கந்தர்வன் “மாது உன்னிடமும், ஷாஜஹானிடமும் வண்ணதாசனின் ஏரியா இருக்கு” என்று ஒருமுறை சொன்னது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நண்பர்களோடு கதைகள், கவிதைகள் குறித்து பேசுகிறபோதெல்லாம் அவரது பெயர் வராமல் இருக்காது. எழுத்தாளர் தனுஷ்கோடி, தனக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்களையெல்லாம் வாசித்துக் காட்டுவார். பிரியத்தில் விளைந்த அந்த சொற்களின் பின்னால் என்னை மறந்து சென்று கொண்டிருப்பேன்.
ஆரவாரமில்லாமல், தொலைவில் இருந்தபடியே வண்ணதாசனால் எப்படி நமக்குள் நிறைந்து போக முடிகிறது என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஒருமுறை எழுதியதைப் படித்த பிறகு அதில் ஆச்சரியம் இல்லை, இயல்பானது ஒன்றுதான் எனத் தோன்றியது. மதுரையில், எழுத்தாளர் வண்ணதாசன் வீட்டுக்குச் சென்று, எஸ்.ராமகிருஷ்ணன் ஒருநாள் மொட்டைமாடியில் உட்கார்ந்து பேசி இருந்திருக்கிறார். சில காலத்தில் வண்ணதாசன் அலுவலகம் நிமித்தம் வேறு ஊருக்கு மாறுதலில் சென்று விட்டாராம். மதுரையில் வண்ணதாசன் இருந்த வீட்டிற்கு அருகில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, தானும், வண்ணதாசனும் பேசிக்கொண்டு இருந்த அந்த மொட்டை மாடியை ஒரு இரவில் பார்த்துக்கொண்டு இருந்தாராம் எஸ்.ராமகிருஷ்ணன். அப்படி வந்து நமக்குள் தங்கிக் கொள்கிற மனிதராய் வண்ணதாசன் இருக்கிறார்.
”குருவிகள் பறந்துவிட்டன்” சொற்சித்திரங்களின் தொகுப்பு வந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டிருந்தது. விமர்சிகரும், நல்ல சிந்தனையாளருமான எஸ்.ஏ.பெருமாள் ஒருமுறை வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டு இருக்கும்போது “நல்லா இருக்கு மாது. ஆனா நீ ஒரு எழுத்துச் சோம்பேறி. இதில் பல நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. நாவலே இருக்கிறது. அதையெல்லாம் எழுதாமல் இப்படித் துணுக்கு போல எழுதுகிறாய்” என பிரியத்தோடும், உரிமையோடும் கடிந்து கொண்டார். ‘மாவீரனின் கதையும்’, ‘வயதாகி பிறகு வந்த காமமும்’ அற்புதம் என்று பாராட்டவும் செய்தார்.
எழுத்தாளர் ஷாஜஹானுக்கும் கிட்டத்தட்ட இதே கருத்து இருந்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது முக்கியம் என்றும், குழந்தையை மையமாக வைத்து எழுதப்பட்ட சொற்சித்திரங்கள் ’கிளாசிக்” என்றும் சொன்னார். எழுத்தாளர் உதயசங்கர், “ரொம்ப பொறாமையா இருக்கிறது” என ஆரம்பித்து, “ இந்தச் சூழலுக்கு பொருத்தமான புதுசான ஃபார்ம் இது” என்பதை திரும்பத் திரும்பச் சொன்னார். இவர்கள் தவிர வேறு யாரும் இந்த புத்தகம் குறித்து என்னிடம் பேசவில்லை. வெளியிலும் யாரும் பேசியதாகத் தெரியவில்லை. எழுத்தாளர். வண்ணதாசன் இப்போது பேச இருக்கிறார்.
நெல்லை ஜங்ஷனிலிருந்து சிந்துபூந்துறையில் உள்ள மூட்டா அலுவலகத்தை நெருங்கிய போது எதிரே, கவிஞர் கிருஷியும், எழுத்தாளர் வண்ணதாசனும் எதோ பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்கள். முகமெல்லாம் சிரிக்க, “வாங்க மாதவராஜ்” என்று கைகளை கெட்டியாய் பற்றினார் வண்ணதாசன். “ஒரு காபி சாபிட்டுவிட்டு கூட்டம் ஆரம்பிபோம்” என்றார் கிருஷி. எழுத்தாளர் ஜெயகாந்தனை விசாரித்தார் வண்ணதாசன். தீராத பக்கங்களை படிப்பதாகச் சொன்னார். ‘கொஞ்சம் ஆங்கிலம், இரண்டு சிரட்டை, ஒரு மூட்டை’யை ரசித்துப் பேசினார். அவரது அன்பும், வெளிப்படுத்தும் பண்பும் என்னை ஆட்கொண்டிருந்தது.
மொத்தம் இருபது பேர் போல வந்திருந்தார்கள். நான்கைந்து பேர் புத்தகம் படித்திருந்தார்கள். ”சம்பிரதாயமாக இல்லாமல், எல்லோரும் பேசலாம்” என்றார் கிருஷி. ஒன்றிரண்டு கருத்துக்களோடு, அவரவர்கள் புரிதலில் பேசினார்கள். சில சொற்சித்திரங்கள் புரியவில்லை என்றர்கள். செல்வகுமார் திலகராஜ் தனக்கிருக்கும் விமர்சனங்களைச் சொன்னார். ”பூனைக் குட்டி போடும்போது ஒரே இடத்தில் இருக்காது, நான்கைந்து இடங்களுக்கு மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த விஞ்ஞானப் புரிதல் இல்லாமல் எழுதப்பட்டு இருக்கிறது” என்றும், “மாதவராஜை மிக நெருக்கமாகத் தெரியும் என்ப்தால் அவரது பல சொற்சித்திரங்களில் அவரது குழந்தைகள் தெரிகின்றனர்” என்றும் சொன்னார். கொலைகாரன், குழந்தை மொழி, கீரைக்காரி, பிள்ளை நிலா என ஒவ்வொன்றாய் கவிஞர் கிருஷி வாசித்துக் காட்டி, சிலாகித்தார். இடையிடையே வண்ணதாசனும் குறுக்கிட்டு, அந்த சொற்சித்திரங்களுக்கு மேலும் அர்த்தம் தந்து கொண்டிருந்தார். ஒரு கலந்துரையாடல் போல இருந்தது..
தொடர்ந்து, புத்தகம் குறித்து, தான் எழுதிக்கொண்டு வந்திருந்தை வாசித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் வண்ணதாசன். உற்சாகமாய் இருந்தார். “குருவிகள் என்றால் குருவிகள் மட்டுமல்ல, பூனை என்றால் பூனை மட்டுமல்ல. ஒரு படைப்பை அப்படியே நாம் அணுகிவிட முடியாது. அது சொல்லும் செய்திகள் எராளம்” என்றவர் தொடர்ந்து, ”ஒருவன் தன் சொந்த வாழ்விலிருந்துதான் எழுதுகிறான், அவை பொதுத்தன்மை கொண்டிருப்பதாலேயே படைப்புகளாகின்றன.” என்றும் வந்த விமர்சனங்களுக்கு அவரே விளக்கங்கள் தந்தார். பிரியத்திற்குரிய அந்த எழுத்தாளர் புத்தகத்தையும், அதில் உள்ள எழுத்துக்களையும் தூக்கிவைத்துக் கொண்டாடினார் என்பது கூட குறைவான விவரிப்பாய்த்தான் இருக்க முடியும்.
வரிகளை, வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி ரசித்தார். எழுதிக்கொண்டு இருக்கும் போது, அதன் போக்கில் சில சொற்கள் சட்டென்று வெளிவர, அதன் அர்த்தத்திலும், வசீகரத்திலும் எழுதுகிறவன் அடைகிற படைப்பின் சுகம் மிக மிக பிரத்யேகமானது, அற்புதமானது.. எப்போதோ எழுதும்போது பெற்ற அந்த தருணங்களையெல்லாம் எழுத்தாளர் வண்ணதாசனின் வார்த்தைகள் எனக்கு அந்த நேரத்தில் மீட்டித் தந்தன. குழந்தைக்ளை சித்தரிக்கிற மாதவராஜால் முதியவர்களையும் தொட்டுப் பேச முடிகிறது என்றார்.அவரது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இங்கு அப்படியே எழுதுவதைவிட, ஒரு சிறந்த படைப்பாளி, இன்னொருவனின் படைப்பை மெச்சிய, போற்றிய விதத்தை குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். தமிழ் இலக்கியச் சூழலில் காணக் கிடைக்காத அரிதான காட்சி அது.
எதுவும் பேசமுடியாமல், போதும், போதும் என்று நான் உட்கார்ந்திருந்தேன். ஏற்புரையில் என்ன பேசினேன் என்று சரியாகத் தெரியவில்லை. குழந்தைகள் குறித்து பேசியது நினைவிலிருக்கிறது.. வலைப்பக்கங்கள் குறித்தும் பேசினேன். விடைபெறும்போது, “வாங்க மாதவராஜ், ஜானகிராமில் போய் ஒரு டீ சாப்பிடுவோம்” என என்னையும், வண்னதாசனையும் கிருஷி அழைத்தார். சென்றோம். ”உங்கள் புத்தகத்தைப் படித்து ஆறு மாதங்களாகின்றன. இதைப் பற்றி, எங்காவது வெளிப்படுத்த காத்திருந்தேன். அதை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷிக்கு நன்றி” என்றார் வண்ணதாசன். “நிறைய தொடர்ந்து எழுதுங்கள் மாதவராஜ்” என கைகளை அழுத்திப் பிடித்து விடை பெற்றார். “இதுபோன்ற கூட்டங்களில் வந்து அமைதியாக உட்கார்ந்து, சில வார்த்தைகள் பேசிச் செல்வார். இன்று முழுக்க கரைந்து, நெகிழ்ந்து போயிருந்தார் வண்ணதாசன்” என்றார் கிருஷி.
நண்பர்களுடன் சென்று சாப்பிட்டு விட்டு, சாத்தூர் திரும்பினேன். ஜன்னலோரம் இடம் கிடைத்தது.. மூச்சு முட்ட் குளிர்ந்த காற்று முகத்திலடித்தது. என் வாழ்வின் முக்கிய நாட்களில் ஒன்று என்னைச் சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தது. வாழ்வின் கவிதையொன்று இருட்டிலிருந்து பிரிந்து சின்னச் சின்ன வெளிச்சத் துளிகளாய் தூரத்தில் சிந்திக்கொண்டு இருந்ததை நான் பார்த்தேன்.
நேற்று ஞாயிறு காலையில் விழித்த போது, மொபைலில் எழுத்தாளர் வண்ணதாசனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆசையோடு பார்த்தேன்.
“நன்றி மாதவராஜ். நேற்று நான் சந்தோஷமாக வீடு திரும்பினேன். சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை” - கல்யாண்ஜீ
அவருக்கு போன் செய்தேன். குரல் கேட்டதும், “நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்” என்றேன். சிரித்தார். ஞாயிறு போற்றுதூஉம்! ஞாயிறு போற்றுதூஉம்!!
இராவணன், மக்கும் குப்பையா, மக்காத குப்பையா?
எப்போதும் போல பஸ்ஸிற்காக காத்திருக்கவோ அல்லது பஸ்ஸின் நெரிசலில் சிக்கி பயணித்தபடியோ இருக்கலாம் நீங்கள். எதையோ முணுமுணுத்தப்படி பஜாரில் காய்கறி அல்லது, மளிகைச் சாமான்கள் வாங்கிக்கொண்டோ இருக்கலாம். டாஸ்மார்க்கில் உட்கார்ந்து ஒரு பீரை அல்லது குவார்ட்டரை காலிசெய்து கொண்டோ இருக்கலாம்.. சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவியில் சீரியல் பார்த்து காலாட்டிக்கொண்டோ இருக்கலாம். ‘இராவணன் படம் பார்க்கணுமே’ என்னும் அவஸ்தைகள் யாருக்கும் வரவேண்டியதில்லை. பார்க்காததால் எதையும் இழக்கவோ, பெறவோ போவதில்லை.
ராகினியான ஐஸ்வர்யாராய் பச்சனை கவர்வதற்காக மலைமேலிருந்து நீரில் குதித்து செல்கிறான் வீரா என்னும் விக்ரம் முதலில். கவர்ந்த ராகினியை விடுவித்து, அவளது கணவன் எஸ்.பியால் சுடப்பட்டு மலை மேலிருந்து கீழே விழுந்து மரிக்கிறான் வீரா கடைசியில். இதுதான் படத்தின் ஒருவரிக் கதை. ரொம்பச் சாதாரண இந்தக் கதைக்கு மேலும் அர்த்தங்களைக் கற்பிக்கவும், ஒரு காவிய அந்தஸ்தைச் சேர்க்கவுமே ‘இராவணன்’ என்னும் பெயரிடப்பட்டு இருக்கிறது. அனுமான், விபீஷணன், கும்பகர்ணன் என்னும் இதிகாச மாந்தரோடு அடையாளம் காணும்படி பாத்திரங்கள் திணிக்கப்பட்டு இருக்கின்றன. ரிலையன்ஸும் மணிரத்னமும் சேர்ந்து தங்கள் 120கோடி ருபாய் சரக்கை விற்றுத் தள்ளுவதற்கு கையாண்டிருக்கும் வியாபார யுக்தியே இது. படமோ பரிதாபகரமாய் தோற்று, பெரும் நையாண்டிக்கு உரியதாகிவிட்டது.
ஐஸ்வர்யாராய் தண்ணீரில் விழுந்து, வாட்டர் புருஃப் மேக்கப்போடு அன்றலர்ந்த பூவாக எழுகிறார். அவருக்கும், பிரியாமணிக்கும் மேலாடை எதாவது ஒருபக்கம் எப்போதும் விலகியே இருக்க வேண்டும் என விதி இருக்கும் போலும். மலைவாசிகளின் திருமணம் அரண்ம்னையில் நடக்கிறது. துப்பாக்கி வெடித்து ”வீரா” என பிரித்திவி ராஜூம், கண்களில் கோபமும் நெற்றியில் சுருக்கமும் தெறிக்க “எஸ்.பி” என விக்ரமும் காடும், தியேட்டரும் அதிர்ந்து எதிரொலிக்க கத்தி கத்தி வெறிகொள்கிறார்கள். இயக்குனர் கர்ணனின் பழைய படங்களே தேவலாம் போலிருக்கிறது. உடலெல்லாம் கருப்பில், மஞ்சளில், வெள்ளையில் சாந்துகளை அப்பிக்கொண்டு ஆடிக்கொண்டும், சண்டையிட்டும் கொண்டும் மக்கள் காணப்படுகிறார்கள். எப்போது பார்த்தாலும் இந்த பிரபு, ஐஸ்வர்யாராய்க்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார். பெரும் காவல் படையே கண்டுபிடிக்க முடியாத விக்ரமை, சாதாரணமாக ஒரு பஸ்ஸில் வந்து இறங்கி ஐஸ்வர்யாராய் கண்டுபிடித்து விடுகிறார். இராவணன் இருக்கும் இடம் சீதைக்குத்தான் தெரியும் போல. இது தெரியாமல் அந்த இராமன் அனுமான்களையும், அணில்களையும் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறாரே?
படம் முடிந்து வெளியே வரும்போது ஒருவர் படத்தில் ‘இலக்குவன் இல்லையே?’ என்றார், இன்னொருவர் ‘யார்தான் இருந்தார்கள்’ என்றார். உண்மைதான். சீரியசான படத்தின் பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும் சிரிப்பை வரவழைக்கிற அளவுக்கு மணிரத்னம் எடுத்திருப்பது காலியாய்ப்போன அவரது பெருங்காய டப்பாவை எல்லோருக்கும் காட்டுகிறது. அவரது பகல்நிலவும், மௌனராகமும் இப்போதும் நினைவுகளில் சஞ்சரிக்கின்றன. அப்புறம் பம்பாய், உயிரே, ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் என சூடான பிரச்சினைகளோடு அவரது சரக்கை கலந்து கொடுத்தார். அவைகளில் விமர்சனங்கள் இருப்பினும் அவரது கதை சொல்லும் பாங்கும், சில காட்சிகளும் மனதில் நிற்கத்தான் செய்தன. இந்தப்படத்தில் அப்படியும் எதுவுமில்லை.
படத்தில் புரிந்துகொள்வதற்கும், புரியாமல் போவதற்கும் ஒன்றுமில்லை. பெரும் ஆராய்ச்சிகள் நடத்தி, ‘அது அப்படி’, ‘இது இப்படி’ என கற்பித்து தூற்றவும், போற்றவும் எதுவுமில்லை. காதல், காமம் என உளவியல் குறித்த ஆழமான சித்தரிப்புகள் இல்லை. இது போன்ற கதைகளை ஆக்கம் செய்யும்போது, நவீன காலத்தின் சூழலோடு மீள்வாசிப்புச் செய்வதாக இருக்க வேண்டும். முந்தையதில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் மீது புதிய வெளிச்சத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் எந்த மெனக்கெடலும் இந்தப் படத்தில் இல்லை. படத்தில் மலைவாழ் மக்களின் பிரச்சினைகளையோ, அவர்களுக்காக போராடுபவராக விக்ரமையோ காட்சிபடுத்தவில்லை. அடிக்கடி மேட்டுக்குடி என்று ஒரு வார்த்தை வந்து போகிறது. அவ்வளவுதான். அதுவே மணிரத்னத்துக்கு புரட்சி போலும்.
படத்தில் ஒரு இடத்தில் பெருமாள் சிலை முன்பு நின்று ஐஸ்வர்யாராய் “கெட்டவர்களை ஏன் எப்போதும் கெட்டவர்களாகவே காண்பிக்க மாட்டேன்கிறாய்” என்று புலம்பும் காட்சி ஒன்று வருகிறது. படம் இதைச் சுற்றி அழுத்தமாக நகர்வதாக இருந்திருந்தால், கதையும், காட்சிகளும் சிறப்பாய் வெளிப்பட்டு இருக்கக் கூடும். இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ‘தினரத்திரங்கள்’ என்னும் ஒரு மலையாளப்படம் நினைவுக்கு வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் டாக்டரான சுமலதாவின் குடும்பத்திற்குள் மம்முட்டி பெரும் கும்பலோடு நுழைந்து, சுமலதாவின் தந்தையை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து வெட்டி, மண்ணெண்னெய் ஊற்றி தீவைத்துக் கொளுத்துவார். மம்முட்டியை போலீஸ் விரட்டிச் சென்று, சுட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் போட்டு, காப்பாற்றச் சொல்லும். விசாரணைக்கு மம்முட்டி தேவைப்படுவார். கொடூரமான மனிதனாய் தெரியும் மம்முட்டியை காப்பாற்ற முடியாது, சாகட்டும் என சுமலதா மறுப்பார். டாகடரின் தர்மம் போதிக்கப்பட்டு பிறகு வேண்டா வெறுப்பாக காப்பாற்றுவார். மம்முட்டிக்காக ஆஸ்பத்திரிக்கு வெளியே ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கும். இந்தக் கெட்டவனுக்காக இவ்வளவு பேர் ஏன் அன்பைத் தெரிவிக்கிறார்கள் என சுமலதாவிற்கு ஆச்சரியமாய் இருக்கும். மெல்ல மெல்ல அவருக்கு உண்மைகள் தெரிய வரும். மம்முட்டி ஒரு இடதுசாரி என்பதும், விவசாயிகளின் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர் என்பதும், சுமலதாவின் தந்தை அந்தப் போராட்டத்தை கடுமையாக நசுக்கியவர் என்பதும், அங்குள்ள ஏழைபெண்ணை கற்பழித்தவர் என்பதும் அறிய, அறிய அவருக்கு மம்முட்டி மீது அன்பு வரும். போலீஸ் விதிகளை மீறி மம்முட்டிக்கு ஹார்லிக்ஸ், டானிக் என சத்தான் உணவுகளை கொடுப்பார். சுமலதாவின் காதலன் இதைக் கவனித்து, “ச்சீ தேவிடியா” என அவரை விட்டு விலகுவான். உடல்நலம் தேறிய மம்முட்டியை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் நாள் நெருங்கவும், சுமலதா அவரைத் தப்பிக்க வைப்பார். போலீஸ் மறுபடியும் மம்முட்டியை சுட்டுக் கொண்டு வந்து ஆஸ்பத்தியில் வந்து சேர்க்கும். சுமலதா, இந்தக் கொடுமையை மேலும் இந்த நல்ல மனிதர் அனுபவிக்க வேண்டாம் என ‘கருணைக் கொலை’ செய்து கதறி அழுவார். படம்பார்த்து ரொம்ப நாளைக்கு அதன் பாதிப்புகள் தீராமல் கிடந்தேன். இராவணன் படத்தில் அப்படி ஒரு காட்சி கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை.
கதை சொல்ல வேண்டுமென இதயசுத்தியோடு பார்த்தாலல், ஆயிரம் கதைகள் நம்மைச் சுற்றிலும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு இரமாயணத்தில் இருந்து ஒரு பிட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஏகமாய் பில்டப் கொடுத்து, ஏராளமாய் செலவு செய்து, கொள்ளை கொள்ளையாய் லாபம் சம்பாதிப்பதே நோக்கமாயிருக்கும் போது, அது குப்பையாகத்தான் போகும். அற்புதமான லோகேஷன், அதன் அற்புத அழகையெல்லாம் அள்ளித் தரும் காமிரா, இசை, நடிப்பு, ஏராளமானோரின் மனித உழைப்பு இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் தெரிகின்றன. அவை வேண்டுமானால் இந்த குப்பையை மக்காமல் இருக்கச் செய்யலாம்.
மாதவராஜ் பக்கங்கள் - 24
கடந்த இரண்டு வாரங்களுக்குள், சென்னை சென்று, திரும்பி, சென்று, திரும்பி பத்து நாட்களுக்கும் மேலாக சென்னைவாசியாகி மீண்டு இருக்கிறேன். மகள் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விருப்பம் கொண்டு இருந்தாள். இப்போது லயோலா கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. சென்னை நகரவாசியாகப் போகிறாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இவள் எப்போதோ வரும் நாட்களை எதிர்பார்த்து இனி இந்த வீடு காத்திருக்கும் என்னும் நினைப்பு தவிப்பாய் இருக்கிறது. எத்தனை எத்தனை பெற்றவர்கள், இதுபோன்ற உணர்வை ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருப்பார்கள். குடும்பமாய் கூடிச் சிரித்து, சண்டைகளிட்டு வாழும் நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது இந்நாட்களில்.
விஷூவல் கம்யூனிகேஷன் இண்டர்வியூக்காக மகள் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தாள். தான் வரைந்த ஓவியங்கள், எடுத்த புகைப்படங்கள் என தொகுத்துக் கொண்டு இருந்தாள். நான்காம் வகுப்பு படிக்கும் மகன், தன் அம்மாவிடம் சென்று, இவையெல்லாம் எதற்கு என்று கேட்டான். “இப்படி திறமையெல்லாம் இருந்தாத்தான் காலேஜ்க்கு போக முடியும்.” என்று அவள் சொல்லிவிட்டாள். இவனுக்கு பெருத்த கவலையாய்ப் போய் விட்டது. “எனக்கு என்ன திறமை இருக்கு. நான் எப்படி காலேஜ்க்கு போவேன்?” என வாய்விட்டுச் சொல்லி வருத்தப்படவும் ஆரம்பித்து விட்டான். படங்களாய் வரைந்து தள்ளிக்கொண்டு இருக்கிறான்.. எனது கம்ப்யூட்டரில் அவைகளை சேமித்து வைக்கவும் சொல்லியிருக்கிறான்.
சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும்? அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.
யாரிடமும் எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்போது அதிகமாய்ப் பேசுவதில்லை . அவருக்கு விருப்பமாயிருந்த வஸ்துக்களையெல்லாம் துறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. குழந்தை போலவும் தெரிகிறார். பெரும் ஞானியாகவும் தெரிகிறார். முன்னர் அவரோடு இருக்கும் நேரங்களில் அரசியல், இலக்கியம் எல்லாம் பேசுவார். இப்போது முகத்தில் புன்னகை தவழ, “ஊர்ல அப்பா, எப்படி இருக்காங்க”, “சாப்பிட்டீங்களா?” போன்ற விசாரிப்புகள் மட்டும் வருகின்றன. ஆச்சரியமாய் இருக்கிறது. கண்களில் வெப்பம் கொண்டு, பெருங்குரலெடுத்து பேசிய அவரா என்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டிருப்பவர், சில சமயம் அப்படியே தலையில் கைவைத்து, கண்களை மூடிக்கொள்வார். எதோ கதை சொல்ல வருகிறார் போலத் தெரியும் அப்போது.
தீராத பக்கங்களில் எழுதி வந்திருந்த சொற்சித்திரங்களைத் தொகுத்து வம்சி புக்ஸ் வெளியிட்டு இருந்த ‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் நாளை திருநெல்வேலியில், எழுத்தாளர் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. சிந்துபூந்துறையில் மூட்டா (மதுரை காமராஜ் பலகலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) அலுவலகக் கட்டிடத்தில் மாலை 6 மணிக்கு என திட்டமிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி போன்றவர்களோடு இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்டு புத்தகம் பற்றி பேசவிருக்கிறார் எழுத்தாளர் வண்ணதாசன். ஆவ்லோடு இருக்கிறேன்.
பூமியெங்கும் மலர்ந்த கதைகள்
”எல்லா மனிதர்களும் ஒருகாலத்தில் நாடோடிகளாய்த் திரிந்தவர்களே. நிலைத்த வாழ்வு என்பது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளே. நாடோடி வாழ்க்கையில் மனிதர் வாழ்வை நெறிப்படுத்தவும், உலகின் போக்கு குறித்து எச்சரிக்கவும் கதைகள், பாடல்கள் புனைந்தனர். கற்பனைகளுக்கும் குறைவில்லை. இவை பூமியெங்கும் மலர்ந்தன”
“புதிர்கள் நிறைந்த மனித வாழ்வில் ஒரு பழமொழி ஒரு பேருண்மையை எடுத்துக் கூறிவிடும். ஒரு நாடோடிக்கதை அதைவிடத் தெளிவாகக் கூறும்.”
“ஆண்டாண்டு காலமாய் வாய்வழியாய் சொல்லப்ப்பட்டு வந்த இந்தக் கதைகள் எழுத்தும் ஏடும் கண்டபின் வரிவடிவம் பெற்றன”
இப்படியான விளக்கங்களோடு, உலகெங்குமுள்ள நாடோடிக் கதைகளில் பலவற்றைத் தொகுத்து எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் “உலக நாடோடிக் கதைகள்” என்னும் புத்தகத்தைத் தந்துள்ளார். இந்தக் கதைகள் ஒவ்வொன்றுமே நம் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாய் இருக்கின்றன. அவற்றிலிருந்து மூன்று கதைகள் இங்கே!
1. மரண நடனம் (பிரெஞ்சுக்கதை)
ரத்தம் உறிஞ்சும் ஈ ஒன்று ஒருநாள் சிங்கத்தைக் கடித்தது. சிங்கம் ஈயைப் பார்த்து “என்னையே கடிக்கிறாயா. இன்னொரு முறை கடி பார்ப்போம். உன்னைத் துண்டு துண்டாய்க் கிழித்தெறிவேன்” என்று கர்ஜித்தது.
ஈ மீண்டும் பறந்து சிங்கத்தைப் பல இடங்களில் கடித்தது.
வலி பொறுக்க முடியாமல் சிங்கம் தன் கால் நகங்களால் ஈயைப் பலமுறை அடிக்க முயன்றும், முடியவில்லை. தொடர்ந்து ஈயை அடிக்க முயற்சித்து சிங்கம் களைத்து விழுந்துவிட்டது.
”நான் சிங்க ராஜாவையே ஜெயித்து விட்டேன்” என்று கூறி வெற்றிக் களிப்பில் ஈ நட்னமாடியது. தறிகெட்டுப் பறந்தது. அது ஒரு சிலந்த வலையில் போய்ச் சிக்கிக் கொண்டது.
சிலந்தி ஈயை விழுங்கியது.
2. கிணறும் நீரும் (பெர்ஸியக் கதை)
ஒரு விவசாயிக்கு ஒரு வியாபாரி தனது கிணற்றை விற்றான். அதில் விவசாயி தண்ணீர் எடுக்கப் போனான். வியாபாரி அவனைத் தடுத்தான். “ உனக்கு கிணற்றை மட்டுமே விற்றிருக்கிறேன். தண்ணீர் எடுக்க வேண்டுமானால் அதற்குத் தனியாக பணம் தர வேண்டும்” என்றான்.
விவசாயி பணம்தர மறுத்து நீதிமன்றத்தில் புகார் செய்தான்..
இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு நீதிபதி வியாபாரியைப் பார்த்து “நீ கிணற்றை விற்றுவிட்டால், அதற்குள் உனக்கு உரிமையான தண்ணீரை வைத்திருக்க முடியாது. எனவே நீ தண்ணீரை கிணற்றில் வைத்து இருப்பதற்கான வாடகையை விவசாயிக்குத் தரவேண்டும். அல்லது உனக்கு உரிமையான தண்ணீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு போய்விடவேண்டும்” என்றார்.
வியாபாரி தலைகுனிந்தவாறே, தனக்கு ஒன்றும் வேண்டாமென வெளியேறினான்.
3. அழுகை (ரஷ்யக் கதை)
சின்னஞ்சிறுவனான ஓல்கா தன் கைவிரல்களை நசுக்கிக் கொண்டான். ஆனால் அழவில்லை.
அவனுடைய விரல் பலமாக நசுங்கிவிட்டாதால் விரல் பூராவும் சிவந்து ரத்தம் கன்றிப் போய்விட்டது. ஒன்றுமே நடக்காத மாதிரி சும்மா இருந்தான்.
வெளியே போயிருந்த அவனது அம்மா வந்ததும், சிறுவன் அழ ஆரம்பித்தான்.
அம்மா ”என்ன விஷயம்” என்று கேட்டாள்.
பையன், ”விரல் நசுங்கி விட்டது” என்றான்.
“எப்போது?”
“வெகு நேரமாகிவிட்டது”
“அப்போதே அழாமல் இப்போது ஏன் அழுகிறாய்?”
”நீ வெளியே போயிருந்தாயே, அதனால்தான்” என்றான் சிறுவன்.
*
உலக நாடோடிக் கதைகள்
நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
விலை ரூ.60/-
சுதந்திரத் திருநாடு, ஆங்கொரு சக்கிலிக் காடு!
நாமக்கல் தாலுக்காவில், ஏளூர் கிராமத்திலிருந்து நாட்டார் மங்கலம் மற்றும் சின்ன மணலி செல்லும் பாதையில் கல்லாங்குடி பிரிவு சாலையிலேயே ஒரு சிறு சாமி சிலை இருக்கிறது. அதைச் சுற்றிலும் இரும்புக் கம்பி போட்டு, அதில் ‘சக்கிலி காடு’ என எழுதப்பட்டு இருக்கிறது.
வேலகவுண்டன்பட்டியிலிருந்து வையப்பமலை வரை, புதன் சந்தை முதல் ஏளூர் பெரிய மணலி வரை அனைத்து கிராமங்களிலும் அருந்ததிய மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.
சுதந்திரம் பெற்று பல வருடங்களாகியும், உயர் ஜாதியினரால இன்னும் மிக எளிதாக பறத் தெரு, சக்கிலியத் தெரு என அழைக்கப்படும் கொடுமை, இங்கு எழுத்து வடிவில் நிறுவப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட தகவலையும், இந்த புகைப்படத்தையும் நண்பர் விமலாவித்யா அவர்கள் மெயிலில் அனுப்பி, “உங்களை இது தொந்தரவு செய்கிறதா?’ என்ற கேள்வியையும் கேட்டு இருந்தார்.
அவஸ்தையாகவும், அவமானமாகவும் இருந்தது. சமூகத்தின் ஆழத்தில் மனிதர்களை அழுத்தி, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்கள் மீதே பச்சைகுத்தி வைக்கிற வன்கொடுமையாகவே தெரிகிறது.
இந்த சாதிய கட்டமைப்பில், ஆதிக்க சாதியினர், தாங்கள் இன்ன சாதி என பெருமையுடன் பீற்றிக்கொள்ள முடியும்.. காலம்காலமாய் நசுக்கப்ப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கள் இன்ன சாதியென அறியப்படுவதில் அல்லது அறிமுகப்படுத்தப்படுவதில் எத்தனை வேதனையும், வலியும் கொண்டு இருப்பர்?
‘இந்த குளம் தாங்கள் குளிப்பதற்குரியதா, இந்த பாதை தாங்கள் நடப்பதற்கு உரியதா, இந்த சுடுகாடு தாங்கள் புதைக்கப்படுவதற்கு உரியதா” என நிற்கிற, நடக்கிற, சுவாசிக்கிற வெளியெங்கும் ஜாதிய பாகுபாட்டின் எச்சரிக்கையுடனே வாழ்வது எத்தனை கொடுமையானது.?
மனிதாபிமானமும், விடுதலை குறித்த ஞானமும் உள்ள யாரையும் இந்தச் செய்தி தொந்தரவு செய்யும். சில நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்ட ஆட்சியரைப் பாராட்டி, நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இடுகையை வாசித்தேன். இதனை அறிய நேரும்போது, அவரும் தொந்தரவு செய்யப்படுவார் என்றே நம்புகிறேன். அதனால் சக்கிலிக்காடு என்னும் எழுத்துக்களையாவது முதலில் அழிக்க நேரிடுமா?
இதுவா நமது தேசம்?
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, “இது பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இல்லை” என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கோபத்தோடு கருத்து தெரிவிக்குமளவுக்கு போபால் வழக்கில், அநீதி அப்பட்டமாய் தோலுரிந்து போயிருக்கிறது.. மிகப்பெரும் துயரங்களையும் காலம் ஆற்றிவிடும் என்பதும் பொய்யாகி இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று சமாதானம் செய்ய முடியாமல் 26 ஆண்டுகள் கழித்தும், கொந்தளிக்கச் செய்கிறது. ஆறாத ரணங்களைக் கீறித் துடிக்க வைக்கிறது.
1984 டிசம்பர் இரண்டாம் நாள் குளிர் இரவில், இந்தியாவே துயில் கொண்டிருந்த நேரம், போபால் மரணத்தின் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து நாற்பதாயிரம் கிலோவுக்கும் அதிகமான ‘டாக்சிக்’ வாயு கசிந்து, வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து, அயர்ந்து கிடந்த மனிதர்களுக்குள் நுழைய ஆரம்பித்தது.. தொண்டை காந்தலெடுக்க இரும ஆரம்பித்தவர்கள் உடலின் தசைத் துணுக்குகளெல்லாம் மிளகாயின் காந்தலெடுக்க துடித்துப் போனார்கள். கண்கள் எரிய, எங்கும் “ஐயோ, ஓடுங்கள், ஒடுங்கள் என கூப்பாடுகளும், இதயம் அறுந்து வெளியே வந்து விழுமாறு இருமல்களுமாய் கேட்டன. என்ன, ஏது என்று அறியாமல், இலக்கற்று ஓடியபடியே விழுந்தார்கள். மாடுகளும் கதறியபடி, மனிதர்களை முட்டித் தள்ளி ஓடின. யார், எங்கே என யோசிக்க முடியாமல் புத்தி பேதலிக்க, குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. விடிந்த போது ஈசல் பூச்சிகளைப் போல நகரமெங்கும் மனித உடல்கள் அங்கங்கு கிடந்தன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோக, ஆறு லட்சத்துக்கும் மேலே மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது.
இப்படியொரு பயங்கரம் நிகழக்கூடும் என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 1982ல் ராஜ்குமார் கேஷ்வானி என்னும் பத்திரிக்கையாளர், “விழித்துக்கொள்ளுங்கள் போபால் மக்களே, நீங்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என யூனியன் கார்பைடின் ஆபத்து குறித்து விளக்கியிருந்தார். 1984 நவம்பர் கடைசி வாரம் வரைக்கும், இது குறித்து நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். விபத்து நடப்பதற்கு முன்னர் பலமுறை யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இருபத்தைந்துக்கும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவைகளை சரிசெய்யத் தவறியதன் விளைவுதான் இந்த பேரிழப்புகள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடித்த பெரும் சட்ட புத்தகங்கள் தேவையில்லை. நேர்மையும், இதயசுத்தியும், குறைந்தபட்ச விஞ்ஞான அறிவுமே போதும். ஆனாலும் சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ருபாய் (2000 டாலர்!) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது! வாழிய பாரத மணித்திரு நாடு!
கைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. அப்படி அனுப்ப ஏற்பாடு செய்தவர் அப்போது மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜீன்சிங் என்றும், அதற்கான உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தி என்றும் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சம்பந்தப்பட்ட விமான பைலட்டிலிருந்து, மாஜிஸ்டிரேட் வரை பலரது வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருக்கின்றன. ஆண்டர்சனை அரசு காப்பாற்றியது என முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் பி.ஆர்.பால் சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அதற்கே உரிய வரலாற்று குணத்தோடு வேகவேகமாக மறுத்து அறிக்கைகள் விடும் காங்கிரஸ் கட்சி, இந்த அநீதியான தீர்ப்பு குறித்து வாயைத் திறக்கவில்லை. மக்களைவிட, மகராஜாக்களே அவர்களுக்கு எப்போதும் முக்கியம்.
அந்த விஷக்காற்றின் உக்கிரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் இப்போதும் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அது தாவி இருப்பதை, குழந்தைகளிடம் தென்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாதபடி மோசமாகி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நிவாரணம் என்பது தலா இருபத்தையாயிரம் மட்டுமே. அதுவும் இரண்டு தவணகளாக 1994 மற்றும் 2004ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போபால் துயரத்தை எதிர்த்து ஒரு அமைப்பை நிறுவி இன்று வரை போராடி வருகிற ஜெயப்பிரகாஷ் இதனைச் சொல்லி இருக்கிறார். அதுவும் இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உணமைகளையும், புள்ளி விபரங்களையும் அறிய அறிய, இந்த அமைப்பின் கோரமுகமும், கொடூர குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.
நமது சட்டத்தில், இதுபோன்ற தவறுகளுக்கு criminal liability சுமத்தும் ஷரத்துக்கள் இல்லையெனவும், அதை சரிசெய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய்ந்திட அமெரிக்க் பக்தரும், பெருமுதலாளிகளின் விசிறியுமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் சொல்லப்ப்படுகிறது. நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்!
இந்தத் தீர்ப்பு இன்னொன்றையும் சூட்சுமமாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த சட்ட வரையறைகளில் அரசின் நிலைபாடு குறித்த விளக்கம் இருக்கிறது. போபால் விஷக்காற்றை விடவும் பல நூறு மடங்கு ஆபத்து விளைவிக்கும் அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது. தன் வீடு எரிந்து சாம்பலானாலும், அமெரிக்காவுக்கு குடைபிடிக்கும் இந்த அயோக்கியத்தனந்த்தை என்னவென்பது? “விழித்துக் கொள்ளுங்கள் மக்களே”- இதுதான் போபால் துயரமும், போபால் தீர்ப்பும் நம் அனைவருக்கும் சொல்லியிருக்கும் செய்தியும், எச்சரிக்கையும்..
இந்த பெருந்துயரத்திற்கும், பேரிழப்புகளுக்கும் காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தருவதும்தான் நேர்மையான அரசின் கடமையும் நெறியுமாகும். அந்த யோக்கியதை இதுவரை இருந்த எந்த மத்திய அரசுக்கும் இருக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை உக்கிரத்துடன் இயக்கங்களை நடத்த ஜனநாய்க சக்திகளும், சமூக ஆர்வலர்களும் முன் வரவேண்டும்! “மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார். ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!
அப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்!
பிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும்!
வாசல் கதவை விலக்கி, வெளியின் வெளிச்சத்திற்கு ஊடே மெல்ல அந்த நீண்ட வீட்டிற்குள் நுழையும் கூன் விழுந்த அந்த வயதான அம்மா ஒவ்வொரு அறையாக அசைந்து, அசைந்து பின்வளவுக்கு வருகிறார். நல்ல கரிய நிறம். வதங்கி, சுருக்கங்களுடன் மிருதுவாக இருக்கும் தசையில் காலம் தளும்பிக்கொண்டு இருக்கிறது. சுத்தமாய் நரைத்துப் போன முடியில் கதைகள் முடித்து வைக்கப்பட்டு இருக்கின்றன. ”ஏ என்னயப் பெத்த அம்மா’ என சமையலறை ஒட்டிய திண்ணையில், சுவருக்கு ஒரு தினுசாக அணை கொடுத்து உட்காருகிறார்.
முப்பது வருடங்களுக்கு முந்திய அந்தக் காட்சி இன்னமும் நிலைத்திருக்கிறது. கல்லூரி நாட்களில் பல சமயங்களில் எங்கள் அம்மாவைப் பெற்ற அம்மாவின் வீட்டிலேயே இருப்பேன். தாத்தா இறந்த பிறகு அங்கு தனியாக இருந்தார்கள் ஆச்சி. பழக்கம் விட, கூடமாட இருக்க பலர் அங்கு வந்து போவார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் சுவரில் சாய்ந்து கிடக்கும் அந்த முதுபெரும் பாட்டி.
தண்டபத்து பாட்டி என்றுதான் அவரை எல்லோரும் கூப்பிடுவார்கள். சொந்தம் என்று தெரியும். எப்படி என்று தெரியாது. யார் அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்னும் விபரங்களும் பெரிதாய் தெரியாது. கொழுந்து என்னும் அவரது கொள்ளுப்பேரன் ஒருவர் பஜாரில் லாட்டரிச் சீட்டுகள் விற்றுக் கொண்டு இருந்தது நினைவிலிருக்கிறது. காணியாளர் தெருவின் கோடியில் சின்னக் குடிசையில் தனியாய் வாசம். காலையில் தெருக்களிலும், சாலைகளிலும் குனிந்தவாறே நடந்து, நடந்து சாணி பொறுக்கி, வறட்டி தட்டி அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை. பிறகு இப்படித் தெரிந்தவர்கள் வீட்டில் போய் ஒத்தாசையாய் எதாவது வேலைகள் செய்து சோறும், தண்ணீரும்.
தண்டபத்து பாட்டிக்கு நுற்றுக்கும் மேலே வயதிருக்கும் என பெரியவர்கள் சிலர் ஒருநாள் சொல்லக் கேட்ட போது அதிசயமாக இருந்தது எனக்கு. அந்த வயதிலும், அப்படியொரு உடல் நிலையிலும் பார்க்க, பேச, நடமாட முடிவது என்பது சாதாரணமானதா? அதற்குப் பிறகு தண்டபத்து பாட்டியெனும் அந்த அமானுஷ்யப் பிறவியின் அசைவுகளும், வார்த்தைகளும் வசீகரம் கொண்டவைகளாயின. வாய்க்கு வந்த மாதிரி பாட்டெல்லாம் கூட சில நேரங்களில் படிப்பார்கள். குனிந்து, துழாவி, பாண்டி விளையாடுவார்கள். ஆச்சியும், தண்டபத்து பாட்டியும் அவர்கள் காலத்துக் கதைகளைப் பேச ஆரம்பித்தால், பொன்னியின் செல்வன் நாவலை கீழே வைத்துவிட்டு கேட்க ஆரம்பிப்பேன். ஒவ்வொரு செடி, மரம் பற்றியும் எதாவது குறிப்புகள் அவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும். சளி, காய்ச்சல், வயிற்றுவலி எல்லாவற்றுக்கும் கைவைத்தியம் சொல்வார்கள். அசந்து தூங்கும்போது அந்தப் பொக்கை வாய் புஃப் புஃபென குமிழ் குமிழாய் காற்றை ஊதி வெடித்துத் தள்ளிக்கொண்டே இருக்கும்.
நாளை என்னும் கவலையற்று வாழ்க்கை மிக எளிதாக இருந்தது தண்டபத்து பாட்டிக்கு. ‘எனக்கென்ன காடு வா வாங்குது, வீடு போ போங்குது’ என்பதைத் தாண்டி பெரிய தத்துவம் எதுவும் அவர்களிடம் இல்லை. சொந்தம் என்று அவர்களைச் சூழ்ந்து கொண்டு யாரும் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கல்யாணம், கோயில் விசேஷ தினங்களில் எல்லோரையும் பேரைச் சொல்லி அழைத்துக் கொண்டு பேசிக்கொள்வார்கள் . சிறியவர்களை ஆசையாய் “நீ அவன் பேரனா, இவள் மகளா” என்று விசாரித்து உற்று பார்ப்பார்கள். சாணி வாசம் எப்போதும் கூடவே இருந்தது.
அவர்களுக்கென்று என்ன தேவைகள், கனவுகள் இருக்கும் என்று தெரியவில்லை. நான், என் அண்ணன்கள் எல்லாம் அவர்களைக் கேலி பேசும்போது ஒருநாள் விளையாட்டாக, “பாட்டி, ஒங்கள போட்டோ பிடிச்சு, நூத்தி எட்டு வயசுப் பாட்டின்னு பேப்பர்ல போடப் போறோம்” என்றோம். “போடுங்கய்யா, மவராசனாப் போடுங்க” என்று பொக்கைச் சிரிப்போடு சொன்னார்கள். நாங்கள் அதை மறந்தும் போனோம். தண்டபத்து பாட்டியோ எங்களை பார்க்கும் போதெல்லாம் “அய்யா, போட்டோ எப்ப பிடிப்பீங்க” என கேட்க ஆரம்பித்தார்கள். “சீக்கிரம் பிடிச்சிருவோம்” எனச் சொல்வோம். அந்த சீக்கிரம் வரவேயில்லை.
படிப்பு, வேலை என ஆளுக்கொரு திசையாய் போன பிறகு, கொஞ்சநாள் கூடவே வந்த ஊரில் தண்டபத்து பாட்டியும் இருந்தார்கள். லௌகீக வாழ்க்கை ஊரை ரொம்பவே பின்னுக்குத் தள்ளிவிட, சாணி வாசம் நாசியைத் தொடவேயில்லை. இரண்டு நாளைக்கு முன்பு எதோ ஞாபகங்களின் தொடர்ச்சியில், வெளியின் வெளிச்சத்திற்கு ஊடே கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே கூன் சரிந்து அந்த உருவம் வந்தது. தண்டபத்து பாட்டி எப்போது இறந்தார்கள், ஊர் அவர்களை எப்படிக் கடந்தது என்ற விபரங்கள் அறியாமலேயே இத்தனை நாளும் இருந்திருக்கிறேன். “அய்யா, போட்டோ எடுக்குறியா” என்றார்கள். சரியென்றேன். நினைவில் இருக்கும் சித்திரத்தை எப்படி போட்டோ பிடிப்பது? ஆனாலும் அந்த சித்திரத்தை உங்களுக்கு மங்கலாகவேனும் காட்டி விட்டேன் என்றே நினைக்கிறேன்.
புதிய பதிவர்கள் அறிமுகம் - 2
கொஞ்சம் காலதாமதமாகத்தான் இந்த அறிமுகம் செய்ய முடிந்திருக்கிறது. என் வருத்தங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவர்களின் பல இடுகைகளைப் படித்த போது, சந்தோஷமாகவே இருந்தது. பல்வித சிந்தனைகள், பல்வித வடிவங்கள், பல்விதப் பார்வைகள். நீங்களும் படித்துக் கருத்துச் சொல்லுங்களேன்.
6.முத்துசாமி பழனியப்பன்
உணர்தலும் உணர்தல் நிமித்தமும் என்பது இஅவரது வலைப்பக்கம். ”கவிதையில் நன்றாக இயங்கி வருகிறார். அவர் எழுதும் கவிதைகள் பரவலாக இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரம் காண்கின்றன.” என நண்பர் கிருஷ்ணபிரபு இவரை அறிமுகப்படுத்தினார். எழுதிய இடுகைகள் அனைத்துமே கவிதைகள்தாம். உயிரோசை, உன்னதம், கீற்று, வார்ப்பு, யுகமாயினி, யூத்ஃபுல் விகடன் என சிறுபத்திரிகைகள், மின்னிதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருப்பதைக் காண முடிகிறது. இவரது வலைப்பக்கம் கவிதானுபவம் கொண்டதாய், மிக அமைதியாய் பேசிக்கொண்டு இருக்கிறது.
7.வெங்கி
“நமது உலகம்’ என்னும் வலைப்பக்கத்தின் சொந்தக்காரர். இதுவரை 40 பதிவுகள் எழுதியிருக்கிறார். சமூகப் பார்வையும், அக்கறையும் கொண்ட பதிவுகளாக இருக்கின்றன. அர்த்தம் நிறைந்த கவிதைகளில் வார்த்தைச் சிக்கனம் தேவை என்று படுகிறது. அங்காடித் தெரு படத்தின் விமர்சனத்தையும் கவிதையாகவே எழுதிட, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பாராட்டியிருயிருக்கிறார்! பத்திகள் சிறப்பாயிருக்கின்றன. பின்னூட்டங்களில் பலரும் குறிப்பிட்டு இருப்பது போல எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டு இருக்கின்றன.
8.ரியாஸ்
இவரது வலைப்பக்கம் நான் வாழும் உலகம். இதுவரை இருபது பதிவுகள் போல எழுதியுள்ளார். மிகுந்த ஆர்வத்தோடு கவிதைகள், உணவு வகைகள், சினிமா என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார். தேர்ந்த வாசிப்பினால் இவரது எழுத்துக்கள் சிறப்புறும் என நினைக்கிறேன்.
9.இரா.எட்வின்
இரா.எட்வின் என்னும் பெயரிலேயே வலைப்பக்கமும் வைத்திருக்கிறார். இவரும் இருபது பதிவுகள் எழுதியுள்ளார். சமயபுரம் மேனிலைப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக இருக்கிறார். சாளரம் வெளியீட்டில், அந்தக் கேள்விக்கு வயது 98 என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார். அனுபவக் குறிப்புகளிலிருந்து எழுதப்படும் இவரது இடுகைகள் சுவாரசியமாகவும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கொண்டதாகவும் இருக்கின்றன. கல்கி பத்திரிகையில் வெளிவந்த எழுத்துக்களையும் இங்கே பதிவு செய்திருக்கிறார். நாடகக் கலைஞர் வேலு சரவணனைப் பற்றி எழுதிய ‘பள்ளியெனும் பழக்காடு’ இடுகை மிக முக்கியமானது,
10.ஜெபா
நிழலின் அருகில் நான் என்னும் வலைப்பக்கம் வைத்திருக்கிறார். 2008ல் எழுத வந்தவர், பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாக எழுதாமல், மிகச் சமீபமாக இரண்டு மூன்று இடுகைகளோடு மீண்டும் எழுத வந்திருக்கிறார். தான் அறிந்த விஷயங்களை மிகச் சுருக்கமாக பதிவு செய்கிறார். தேடும் ஆர்வம் இருப்பது தெரிகிறது.
11.Thouseef ahmed
தனக்காக பிறரைக் கஷ்டப்படுத்த விரும்பாத சாதாரண மனிதன் என, அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவரது வலைப்பக்கம் ரோமியோவின் பக்கம். இதுவரை ஆறு பதிவுகளே எழுதியுள்ளார். செய்திகளைச் சொல்வதாக ஆரம்பித்த இவர், ராவணன் படத்தின் பாடல்கள் குறித்தும் எழுதியுள்ளார். பதிவர் லோஷன் குறித்து எழுதிய இடுகை சிறப்பு.
12.ஸ்ரீவி சிவா
”சொல்றதுக்கு என்ன இருக்கு? சில வருடங்களாய் சென்னையில பொட்டி தட்டும் ஒரு சாதாரணன். மனசுல பட்டதை எழுதறேன்.” என் தன்னைப் பற்றிச் சொல்லும் ஸ்ரீவி சிவாவின் வலைப்பக்கம் ஸ்ரீவி தென்றல். கவிதை, சினிமா, பயணங்கள் என விரியும் இவரது எழுத்துக்கள் மிக இயல்பாய் ஒட்டிக்கொள்கின்றன. வாசிப்பின் துவக்க நிலையில் உள்ள இவரிடம் காதல், தனிமை தாண்டியும் இந்த மனிதர் சொல்வதற்கு நிறைய வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வாசிப்பதற்கு சுகமாய் இருக்கிறது இவரது நடை.
13.Women's Special
”இந்த ப்ளாக்கில் நான் படித்த புத்தகங்களில் உள்ள குறிப்புகள், செய்முறைகள், சமையல், மற்றும் பலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவரது வலைப்பக்கம் Welcome to Ladies Corner! சின்னச் சின்னதாய் டிப்ஸ்கள் இங்கே காத்திருக்கின்றன.
14.ஹரிபாண்டி
இவரது வலைப்பக்கத்தின் பெயரும் HARIPANDI தான்! வாசிப்பு இல்லாதவன் என தன்னையும், கிறுக்கலகள் என தன் பதிவுகளையும் சொல்லிக்கொள்ளும் இவரது ‘அப்பா’வைப் பற்றிய பதிவுகள் நெகிழ்வானவை. சுற்றுப்புறச் சூழல், அரசியல், விளம்பரம் என பல பகுதிகளிலும் தனது பார்வைகளைச் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. சின்னச் சின்னதாய் பல தகவல்களையும் பரிமாறிக் கொள்கிறார்.
15.வெறும்பய
உண்மையான பெயர் சொல்லவில்லை. வெறும்பய என்னும் பெயரில்தான் இவரது வலைப்பக்கம் இருக்கிறது. தகவல் களஞ்சியமாய் சில பதிவுகள் இருக்கின்றன. இணையம் குறித்த சில பதிவுகள். கவிதையும் எழுதிப் பார்க்கிறார். தெரிந்த விஷயங்களை பத்திகள் போல எழுதிப் பார்க்கலாம் இவர். கூடவே வாசிப்பும் தேவை எனப் படுகிறது.
பதிவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்போம். ஆதரவளிப்போம்.
(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)
இது ஒரு படிப்பினை!
அதிர்ச்சி, ஆத்திரம், விருப்பு, வெறுப்பு, உண்மை, போலி, தியாகம், துரோகம் என பல பரிமாண நிகழ்வுகளுக்குள் நுழைந்து, புழுங்கி, வெந்து, தவித்துக் கிடந்த நாட்கள் மெல்ல உதிர ஆரம்பிக்கின்றன. தேவையற்ற வாதங்களுக்கும், விவாதங்களுக்குள்ளும் இடம் தந்து, பிரச்சினை திசை திருப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. மங்களூர் சிவா, அபி அப்பா, லதானாந்த் போன்றோரை தேவையில்லாமல் இழுத்தது தவறு. இந்தக் காயங்களை நினைவில் இருத்திக்கொண்டு இனி எப்படி முன்னோக்கி நகர்கிறோம் என்பது முக்கியமானது.
முகில்!
எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! நிதானமும், பக்குவமும், அழுத்தமும் மிக்க அவரது ஒவ்வொரு எழுத்தையும் நானும், காலமும் போற்றிக் கொண்டு இருப்போம். மாற்றங்களுக்காக போராடிக்கொண்டு இருந்தாலும், இன்றைக்கு இது ஒரு ஆணாதிக்கச் சமூகம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என நினைக்கிறேன். முகிலின் குரல் அதனை உணர்வுபூர்வ்மாக பல திசைகளிலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஒவொருவருக்குள்ளும் அழுத்தமானத் தடங்களை பதித்து இருக்கிறது. அனைவரையும் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் என அழைப்பதாகவே உணர்கிறேன்.
முல்லை!
மகாகவியின் அக்கினிக்குஞ்சு இவர்தான். போற்றுகிறேன். குடும்பம், கணவர், மனைவி, ஆண், பெண் உறவுகள் குறித்து அவர் இன்று பகிர்ந்திருப்பவைகளை நாம் அனைவரும் புரிந்துகொள்ளத் தலைப்பட வேண்டும். வாழ்வின் நுட்பமானப் பகுதிகளில், நாம் அறிவுபூர்வமாக நுழைய மறுப்பதையும், நுழைய வேண்டி இருப்பதையும் தெளிவாகவேச் சொல்லி இருக்கிறார். நம் காலத்துப் பெண் இவர் என்று சந்தோஷப்படுகிறேன்.
தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத அவரது பாங்கும், குணமும் மிக அரிதானது. அது வேண்டும். சட்டென்று இளகி, கரைந்து, தன்க்கான அடையாளத்தை இழந்து போகிறவர்களாகவே பெண்கள் பொதுவாகவே இருக்கிறார்கள். அதுதான் பெண்மை என்ற தவறான கற்பிதங்களுடன் நாமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த பொய்மையின், போலித்தனத்தின் உச்சியில் அவர் தீ வைத்திருக்கிறார்.
இவரை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், நாம் மாற்றங்களை எதிர்ப்பவர்கள் என்றே அறியப்படுவோம். ஆணாதிக்கத்தின் வேர்களில் அவரது கோபமும், சிந்தனையும் தாக்குதல் நடத்துகிறது. அதுதான் முக்கியமென பெருங்குரல் எழுப்புகிறார். காலத்தை சுத்தப்படுத்தும் காரியம் அது.
என் மகளுக்கு இவரை பெருமிதத்துடன் அடையாளம் காட்டுவேன்.
நர்சிம்!
செய்த தவறுக்கு மனம் வருந்தி, முகிலிடம் மன்னிப்பு கேட்ட நீங்கள்
அதே தொனியில் முல்லையிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டியதில்லை. முல்லை மன்னிக்காவிட்டாலும் நீங்கள் அவரிடம் உங்களது தவறுக்கு வருந்துவதுதான் முறை.
அதற்காக எழுதாமல் எல்லாம் இருக்க வேண்டியதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். புதிய மனிதனாய் எழுதுங்கள். அதுதான் காலமும், இந்த நிகழ்வும் உங்களுக்குத் தந்திருக்கும் மாபெரும் படிப்பினை. நீங்கள் சுமத்திய களங்கத்தை, மீதமிருக்கும் உங்கள் எழுத்துக்களால் துடைக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள்.
இப்பிரச்சினையை ஆத்திரமாக முன்வைத்த நான், இந்த நேரத்தில் என் கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். .இதுகுறித்து மேலும் பேச வேண்டியதுமில்லை என நினைக்கிறேன். நான் பேசப்போவது இல்லை. நாளை புதிய பதிவர்கள் அறிமுகத்தில் சந்திப்போம்.
(காயங்களை ஏற்படுத்துகிற, பிரச்சினைகளை சிக்கலாக்குகிற, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகிற பின்னூட்டங்களை இங்கு அனுமதிக்கப்போவதில்லை.)
சொல்லுங்கள் பார்ப்போம்!
எள்ளலுடன் வேதாந்தம் பேசும் இந்தக் கவிதைகள் நாடறிந்த இலக்கியவாதி ஒருவரின் படைப்புகள். எழுதியவரைத் தெரிகிறதா? சொல்லுங்கள் பார்ப்போம்.
(1)
ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது
இணையைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?
(2)
எதிர் வீட்டுச் சன்னலை
எவரோ திறக்க
என் வீட்டில் வெளிச்சம்
எவ்வாறு வருகிறதோ?
புதிரான உலகில்
புதிராக வந்தேன் - இதில்
புரிகின்ற செய்தி எதுவோ?
சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…
சென்ற பதிவில் எழுதிய விஷயம் குறித்து, கேள்விகள், விளக்கங்கள், குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் என கொட்டிக்கிடக்கின்றன. நேர்ப்பார்வையில் உண்மை மிக எளிதாகவே யாருக்கும் புரியும். இதற்கு ஏன் இத்தனை குழப்பங்கள் என்பது அடுத்த அதிர்ச்சியாக இருக்கிறது.
நான் உன்னைச் சீண்டினால், நீ என்னைச் சீண்டலாம். நான் உன்னைத் திட்டினால் நீ என்னைத் திட்டலாம். நான் உன்னை அடித்தால், நீ என்னை அடிக்கலாம். இதுதான் விதி. இதற்குள் ஆட்டம் இருந்திருக்க வேண்டும். எல்லைகளையும், விதிகளையும் மீறி தப்பாக ஆடி, ஒருவர் இன்னொருவரை வன்மத்துடன் காயப்படுத்தி வீழ்த்தும்போது, பார்த்துக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு வரவேண்டிய கோபம்தான் எனக்கு வந்தது.
யார் முதலில் சீண்டினார்கள், ஏன் சீண்டினார்கள் என்ற ஆராய்ச்சி நிச்சயம் தேவைதான். ஒரு தவறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்கு அப்படியான பரிசீலனைகள் அவசியம்தான். ஆனால், அப்படி எதையும் சாவகாசமாய் திரும்பிக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இங்கே ஒருவர் காயம்பட்டு இருக்கிறார். அவமானத்திலும், அசிங்கத்திலும் அவரைப் புரட்டிப் போட்டு இருக்கிறார்கள் என்றால், அப்படி விதிகளை மீறித் தாக்கியவரை கடுமையாகச் சாடுவதும், தாக்கப்பட்டவருக்கு ஆறுதல் அளிப்பதும்தான் யாரும் செய்யக்கூடிய, செய்ய வேண்டிய முதலுதவி. அதைத்தான் நான் செய்தேன்.
தாக்கப்பட்ட முறை மிகக் கொடியது. ஒரு பெண், அவள் நடத்தை, அவள் தோற்றம், அவள் குழந்தை என மிக வக்கிரமான முறையில் சித்திரிக்கப்பட்டு இருக்கிறார். வரலாறு நெடுக நிகழ்ந்ததுதான் இங்கும் நிகழ்ந்தது. ஆதிக்க சிந்தனை கொண்டவர்களின் வெறி, பெண்ணுடல் மீதான தாக்குதலாக மீண்டுமொரு முறை இங்கு எழுதப்பட்டு இருக்கிறது. அதைத்தான் நான் கண்டித்தேன் கடுமையாக.
”அவர் ரொம்பக் கண்ணியமானவர், அப்படியெல்லாம் இதுவரை எழுதி இருக்கிறாரா?” என்கிறார்கள். ஆமாம், சாதாரண, சகஜமான காலங்களில் அப்படித்தான் அவர்கள் காட்சியளிப்பார்கள். “நேற்று வரை, என்னோடு ஒன்றாக விளையாடியவன், என்னோடு சிரித்து பழகியவன், இப்போது ஒரே நாளில் கண்களில் வெறுப்பும், கொலைவெறியும் கொண்டு என்னைப் பார்க்கிறான்” என மதக் கலவரங்களின் போது எத்தனை சாட்சிகளையும், அதிர்ச்சிகளையும் காலம் பார்த்து திக்பிரமையடைந்திருக்கிறது. ஒரு சோதனையின் போதுதான் ஒருவரின் உண்மையான முகம் தெரியும். அது தெரிந்திருக்கிறது.
“அவன், இவன்” என ஏக வசனத்தில் நீங்கள் எழுதியது சரியா, அப்புறம் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் எனக் கூட கேள்விகள். ஒரு பெண்ணை அவிசாரி என ஆரம்பித்து அவர் எழுதிய அத்தனை வார்த்தைகளும் ஒன்று. நான் ‘அவன், இவன்’ என்று எழுதியதும் ஒன்று. எப்படியிருக்கிறது உங்கள் நியாயமும், நீதியும். இதுதான் மனுவின் சிந்தனை. எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும் மனு வைத்த கண்ணி வெடி வெடித்துக் கொண்டு இருக்கிறது! ஒருவருக்கு உரிய மரியாதையை, மதிப்பை அவரது காரியங்களும், சிந்தனைகளுமே ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.
“நீங்கள் பழைய பகையை மனதில் வைத்து, அதன் தொடர்ச்சியான எதிர்வினை ஆற்றியிருக்கிறீர்கள்” என்கிறார்கள். நர்சிமுமே அவரது பதிவில் அந்த தொனியில்தான் சொல்லியிருக்கிறார். என்ன செய்ய? இப்படித்தான் அவர்கள் ஒவ்வொன்றையும் பார்ப்பார்கள், சிந்திப்பார்கள் போலிருக்கிறது. அதுதான் இங்கு வினையாகி இருக்கிறது. சென்ற வருடத்தில், வலைப்பக்கங்களிலிருந்து சிறுகதைகளை தொகுத்து புத்தகம் வெளியிடலாம் என அழைப்பு விடுத்தபோது பலரும் சுட்டியை அனுப்பியிருந்தார்கள். என்ன காரணத்தினாலோ நர்சிம் அனுப்பவில்லை. நானே அவருக்குப் போன் செய்து, “தங்கள் அய்யனார் கம்மாவை அந்தத் தொகுப்பில் வெளியிடலாமா?” எனக் கேட்டேன். “ரொம்ப சந்தோஷம், மாதவராஜ், வெளியிடுங்கள்” என்றார். பின்னர் அதைத் தெரிவித்து பதிவிட்டு எனக்கு நன்றியும் தெரிவித்தார். “நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நர்சிம்” என்று அதற்கு பின்னூட்டமும் இட்டேன். தனது அய்யனார் கம்மா புத்தக வெளியீட்டிற்கு போனில் அழைப்பு விடுத்தார். அப்போது அவருக்குள் இந்த ‘மரியாதைதான்’ இருந்ததா?
வாடாத பக்கங்களில் அவரை மட்டும் கடுமையாக விமர்சித்ததாக குறிப்பிடுகிறார். எழுதியது இதுதான் :
அவரது பல பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். செம்பட்டைக்கிழவியும், அய்யனார் கம்மாவும் எனக்கும் பிடிக்கும். அவருடைய பதிவுகளை வாசித்திருப்பதால், ராஜாராம் சொல்லியிருக்கும் இந்தப் பதிவில் எனக்குப் பட்டதை இங்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அவருடைய சில பதிவுகளில், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரியும். சில நேரங்களில் சுஜாதாவாக முயற்சிப்பார். சில நேரங்களில் அனுஜன்யாவாக முயற்சிப்பார். இந்த தடவை இன்னும் மொழியை இறுக்கமாக்க முயற்சித்திருக்கிறார். என்னளவில் வசீகரம் தெரியவில்லை. அவருக்கான மொழியை அறிந்துகொள்ள ஒரு குளவி போல தொடர்ந்து பிரயத்தனப்படுகிறார் என்று மட்டும் தெரிகிறது. அது வசப்பட்டால், இன்னும் அவர் இயல்பாய் நிறைய சொல்லக்கூடும்.
இப்படி ஒரு சக பதிவரின் எழுத்து மீதான மதிப்பீட்டைச் சொல்லக் கூடாதா? இதற்கும் உள் அர்த்தம் கற்பிப்பீர்களா? அதே வாடாத பக்கங்களில் வாமு.கோமுவின் எழுத்தை நானும் வடகரைவேலனும் கடுமையாகத் தாக்கி எழுதியது அவர் கண்களில் படவில்லையா? வாமு.கோமு அதற்குப் பிறகு என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிக நேர்மையாகவும், சரளமாகவும் பேசினாரே? அந்த பக்குவம் ஏன் நர்சிம்முக்கு இல்லை. இதுதான் அவரிடம் உள்ள பிரச்சினையாகத் தெரிகிறது. தன் படைப்பு குறித்த விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாதவராய் இருந்திருக்கிறார். அதுதான் ‘அவரை’, இப்போது ‘அவனாக’ மாற்றி இருக்கிறது!
அவனது மரியாதை எனக்கு எப்போதுமே தேவையில்லை. அவனைப் போன்றவர்கள் மரியாதை செலுத்தினால் அதை ஒரு அழுக்காகவும், இழுக்காகவுமே பார்க்கிறேன். அதற்காக நன்றி நர்சிம்!
பதிவுலகம் குறித்த வருத்தங்களும், எரிச்சல்களும் அங்கங்கு தொனிக்கின்றன. ஒவ்வொன்றும் அதனதன் வளர்ச்சிப் போக்கில், புதிய புதிய பிரச்சினைகளோடும், புதிய புதிய ஒழுங்குமுறைகளோடும் தன்னை முன்னெடுத்துச் செல்லும். அதில் சிராய்ப்புகளும், சேதங்களும் இருக்கத்தான் செய்யும். அந்த வலியோடுதான் முன்னோக்கி நகர முடியும். இதிலிருந்து ஒவ்வொருவரும், தங்களுக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ளத் துணிந்தால், நாம் வளர்வோம்.





