Type Here to Get Search Results !

சச்சினின் கொள்கை, தியாகம் மற்றும் வெங்காயம்!

sachin with pepsi மது அருந்துவது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என சச்சின் உறுதியாய் மறுத்துவிட்டார், அதனால் அவருக்கு 20 கோடி ருபாய் நஷ்டம் என்பதாக செய்திகள் வருகின்றன. வெகுஜன ஊடகங்கள் இதனை பெரும் தியாகம் போல சித்தரித்துக் கொண்டு இருக்கின்றன. (ஏற்கனவே பிரபல நடிகர்கள் பலரும் சினிமாவில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து  நாளாகி விட்டது! )

சச்சின் கிரிக்கெட் விளையாட்டில், மகத்தான் வீரர். எத்தனையோ போட்டிகளில் அவர் தன்னந்தனியாய் நின்று போராடி அணியை வெற்றிப்பாதையை அழைத்துச் சென்றிருக்கிறார். தனது தனிப்பட்ட சாதனையை விட, அணியின் வெற்றி முக்கியம் என அவர் காட்டிய கணங்கள் உண்டு. இவையெல்லாம், கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்கும், அவரது தனிப்பட்ட திறமைக்கும் கிடைத்த பேரும் புகழும். ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு இதைவிட தேவையானவையும், விருப்பமானவையும் நிறைய இருக்கிறது.

கிரிக்கெட் கிரவுண்டைத் தாண்டி வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது. தனது திறமைகளினால் ஒரு ஆட்டக்காரருக்கு  பெரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பரங்கள் அங்கே கிடைக்கின்றன. விளையாட்டில் சம்பாதிப்பதை விடவும், பல மடங்கு பணம் சில கணங்களில் கிடைக்கிறது. இன்று கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் நோக்கமாகவும், ஆசையாகவும், கனவுகளாகவும் இந்த விளம்பரங்களே ஆகிவிட்டிருக்கின்றன. அதற்காகவே தங்கள் திறமைகளை அவர்கள் காட்ட வேண்டியிருக்கிறது. ‘உலகமயமாக்கல்’ சிதைத்துப் போட்டிருக்கும் எத்தனையோ விஷயங்களில் இந்த கிரிக்கெட்டும் ஒன்றாகி விட்டது. அங்கே சச்சின் என்னவாக இருந்திருக்கிறார், இருக்கிறார் என்று பார்ப்பது முக்கியம்.

கிரிக்கெட் மட்டையை மட்டுமா அவர் உயர்த்திப் பிடித்தார்? வென்ற கோப்பைகளை மட்டுமா எல்லோருக்கும் தூக்கிக் காண்பித்தார்?  விளையாடாத போதும் பெப்ஸியை விடாமல் பிடித்துக்கொண்டு இருந்தாரே? கோக், பெப்ஸி குறித்து பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும் வந்த பிறகும், அவர் அந்த விளம்பரங்களில்  ‘நாட் அவுட்’ பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டாரே!  அப்போது இந்த தியாகங்களும், கொள்கைகளும் என்னவாயிற்று?

சமீபத்தில் சச்சினின் இரத்தமும், எச்சிலும் கலந்த தாள்களால் உருவாக்கப்பட்ட, அவரது ’சுயசரிதை’ புத்தகம் ஒன்றின் விலை ரூ.35/- லட்சம் என ஐரோப்பிய புத்தக நிறுவனம் வெளியிட்டது.   அவ்வளவு அதிக விலையைப் பற்றி சர்ச்சைகள் வந்தபோது, “சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். எளிதில் அவரை நெருங்க முடியுமா” என்று அந்த நிறுவனம் பதிலளித்தது.  சச்சின் மௌனமாக தன்னுடைய புத்தகத்துக்கு தன்னுடைய இரத்தத்தை தானம்  செய்துகொண்டு இருந்தார்.  அப்போது இந்த தியாகங்களும், கொள்கைகளும் என்னவாயிற்று?

சச்சினை ஒரு விளையாட்டுக்காரராக எனக்கும் பிடித்தது. ஆனால், இந்த உலகின் எத்தனையோ கோடி மக்களின் இரத்தத்தையும், வேர்வையையும் உறிஞ்சியும், சுரண்டியும் பெருத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டுக் கம்பெனிகளின் உயர்தர சேவகன் அவர் என்பதை உணரும்போது பிடிக்காமல் போகிறது.

சச்சினை மேலும் உயரத்தில் தூக்கி வைக்கிற ஏற்பாடுதான் இந்தப் பிரச்சாரங்கள் எல்லாம். கடவுள்கள் மது அருந்துவதைப் பார்க்க பக்தர்கள் விரும்பமாட்டார்கள். மற்றபடி,  இது தியாகம் அல்ல. கொள்கை அல்ல. வெங்காயம். அவ்வளவுதான்.

கருத்துரையிடுக

15 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. //சச்சினை ஒரு விளையாட்டுக்காரராக எனக்கும் பிடித்தது.//

  எனக்கு அதுவும் பிடிப்பதில்லை. நான் வெறும் விளையாட்டுத் திறமையை சொல்லவில்லை.

  பதிலளிநீக்கு
 2. சச்சினை பற்றிய உங்கள் கருத்து சற்று மனகுடைச்சலாக இருக்கிறது.. நாம் எல்லோருமே ஒரு விதத்தில் அந்நிய நாட்டுக்காக தானே உழைக்கிறோம்.. அன்றாடம் வாழும் விவசாயியின் உற்பத்தி கூட அந்நிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுதானே வருகிறது... நீங்கள் கேட்கலாம் அவன் தானே நமை நாடுகிறான் என.. ஆனால் இப்போது முடிந்தால் நம் அரசை அந்த ஏற்றுமதியை நிறுத்தசொல்லுங்கள் பாப்போம்.??? முடியாது.. இதிலிருந்து தெரியலையா நாம் அனைவரும் நம் நாட்டுக்காகவும் அந்நிய நாட்டுக்கும் தான் உழைக்கிறோம் என.. மட்டைய பிடித்து நமக்காக உழைக்கும் சச்சின், விளம்பரங்களிலும் நடிக்கிறார்.. இதை தவறு என்று சொல்லிடமுடியாது..

  தனது சுயசரிதை இவ்வளவு ப்ரசித்தம் பெறும் என்றால் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கொஞ்சம் ஆசை வர தான் செய்யும்... மேலும் அப்பிரச்சனை அவர் ரத்தத்தால் எழுதகூடாது என்றே வந்தது என நினைக்கிறேன்.. அவர் அந்நிய நாட்டுக்காக இதை செய்கிறார் என வரவில்லை என நினைக்கிறேன்..

  இருப்பினும் இவர் செய்யும்போது நமக்கு இது பெரிய குற்றமாக தெரிவது ஏன்.???
  அவரின் புகழா.???
  அவரின் உயர்வா.???
  அவரின் பணமா.???
  எது நம்மை அவருக்கு எதிராக பேசவைக்கிறது..???
  ஒண்ணுமே புரியலப்பா....

  பதிலளிநீக்கு
 3. விளம்பரங்களில், கிரிக்கெட் வீரர்கள் ஒரே மடக்கில் ஒரு போத்தல், பெப்ஸியை குடித்து ஒரு திருப்தியை முகத்தில் காட்டுவார்கள். உண்மையில், அவர்களை கட்டிப் போட்டு இப்ப அது மாதிரி குடிச்சுக் காமி பார்க்கலாம் என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்.

  சச்சின் பூஸ்ட் விளம்பரத்தில் நடித்தார் சரி, பெப்ஸி குடித்து விட்டு கிரிக்கெட் ஆட முடியுமா?

  பதிலளிநீக்கு
 4. //சமீபத்தில் சச்சினின் இரத்தமும், எச்சிலும் கலந்த தாள்களால் உருவாக்கப்பட்ட, அவரது ’சுயசரிதை’ புத்தகம் ஒன்றின் விலை ரூ.35/- லட்சம் என ஐரோப்பிய புத்தக நிறுவனம் வெளியிட்டது. அவ்வளவு அதிக விலையைப் பற்றி சர்ச்சைகள் வந்தபோது, “சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். எளிதில் அவரை நெருங்க முடியுமா” என்று அந்த நிறுவனம் பதிலளித்தது. சச்சின் மௌனமாக தன்னுடைய புத்தகத்துக்கு தன்னுடைய இரத்தத்தை தானம் செய்துகொண்டு இருந்தார். அப்போது இந்த தியாகங்களும், கொள்கைகளும் என்னவாயிற்று?//

  தவறான தகவல். காஃபி டேபிள் புத்தகம் ஒன்றின் பிரத்யேக பிரதியாக ஒரு 1000 பிரதிகளில் அவருடைய இரத்தமும், சலைவா என்று சொல்லப்படும் எச்சிலையும் ஸ்பெசிமெனாக இணைத்து தரப் போவதாக அறிவித்திருந்தார்கள். பெரிய சாதனையாளர்களின் Genome ஆராய்ச்சிக்காக இப்படி இரத்த துளிகள், சலைவா சேகரித்து வைப்பது வழக்கம். அதை புத்தகத்துடன் இணைத்துக் கொடுப்பதால் அது பலமடங்கு மதிப்பு பெறும் என்பது ஐடியா.

  இது செய்தியாக மீடியாவில் வந்தபோது சரியானபடி மக்களிடம் போய்ச் சேரவில்லை. உங்களைப் போல பலரும் ‘தவறாக’ புரிந்து கொண்டு வெறுப்படைந்தததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்பொழுது அந்த மாதிரி எதுவும் பிரத்யேக பிரதிகள் தயாரிக்கப்படவில்லை. இதுதான் உண்மை.

  பதிலளிநீக்கு
 5. பிரஜா சோசலிஸ்ட் என்ற கட்சி தலைவர் ஒருவருடன் உரையாடும்போது குடிசைத்தொழில்கள் தோன்றாததற்கு வரிகள்,முக்கியமாக சுங்க வரியே காரணம் என்று எடுத்துரைத்தோம்.அவர் மந்திரியானதும்,விளக்கு அளித்தார்.நிறைய குடிசை தொழில்கள் உண்டாயின.தனி நபர் சுரண்டல் ஒழிக்கப்பது.கோகோ கோலாவை இந்த நாட்டை விட்டே ஒழித்தார்.ஆனால் கட்சி சார்பில்லாமல் நின்ற அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.தோற்க்கடித்தார்கள்.மதுரையில் பெப்சி விற்பனையை தொடக்கி வைத்தவர் யார்? நல்ல சிந்தனை உள்ளவர்கள் பதவிக்கு வரவேண்டும்,அல்லது,அவர்களுக்கு இந்த கருத்துக்கள் புரிய வைக்கப்பட வேண்டும்.நடக்கும் நாம் முயற்சி செய்தால்.

  பதிலளிநீக்கு
 6. ஓவியன்!

  நன்றி.  தம்பி கூர்மதியன்!
  இந்த உலகமயமாக்கல் சூழலில், அரசுகளின் தவறான கொள்கைகளால், இப்படியொரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

  தவிர உழைப்பது வேறு, விளம்பரம் செய்வது வேறு.

  அடுத்தது, எல்லோரையும் போல அவரும் விளம்பரங்களில் நடித்துவிட்டுப் போகட்டும். சம்பாதிக்கட்டும். இந்த கொள்கை, தியாகம் என்றெல்லாம் படம் காட்ட வேண்டாமே இந்த ஊடகங்களால்!


  பிரபு ராஜதுரை!
  ஆனால் கிரிக்கெட் (நன்றாக) ஆடினால் பெப்ஸ்லி குடிக்க முடியும்!


  ஸ்ரீதர் நாராயணன்!
  தகவலுக்கு நன்றி. புத்தகம் வரவில்லையென்பதைக் குறிப்பிடவில்லையே தவிர, வேறு என்ன தவறு இருக்கிறது நான் சொன்னதில்?


  தமிழன்!
  முதலில் மக்களுக்குப் புரிய வேண்டும். அரசை நிர்ப்பந்தித்து போராட்டங்கள் நடத்த வேண்டும். அதுவே சரியான பாதையாக இருக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 7. கோக் பெப்ஸியை மதுவையும் ஒரே தராசில் வைக்குமளவு எப்பேர்பட்ட அறிவாளி இவர். Hats off!

  பதிலளிநீக்கு
 8. பெப்ஸியால் வரும் பாதிப்புக்கும் மதுவினால் வரும் பாதிப்புக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது என்றில்லை. சச்சின் மது விளம்பரத்தில் நடித்திருந்தால் அவரைத் திட்டி ஒரு பதிவு போட்டிருப்பீர்கள். நடிக்காமல் விட்டதற்கும் ஒரு பதிவு போடுகிறீர்கள். எப்படியோ அவரால் உங்களுக்கு ஒரு பதிவு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள். நீங்கள் எப்பவுமே குழப்பவாதி என்று நிரூபிப்பதற்கு தவறுவதே இல்லை. சந்தோசம்.

  //புத்தகம் வரவில்லையென்பதைக் குறிப்பிடவில்லையே தவிர, வேறு என்ன தவறு இருக்கிறது நான் சொன்னதில்?// என்ன மாதிரி இரத்தமும் எச்சிலும் பயன்படுத்தப்பட இருந்தது என்று உங்களுக்குப் புரியவில்லை. உங்கள் எழுத்தில் இருந்து அதைத் தான் விளங்கிக்கொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
 9. பூஸ்ட் குடித்தபின்னர் நன்கு விளையாடலாமோ என்னவோ தெரியாது. ஆனால் மணிக்கணக்கில் விளையாடி விட்டு வரும்போது பூஸ்ட் பால் போன்றவற்றை விட பெப்ஸி/கோக் போன்றவை கொஞ்சம் தாகத்தை தணிப்பது உணமை. கொஞ்சம் சக்தியை கொடுப்பதும் உண்மை. இங்கிலாந்தில் இன்டென்ஷிப் செய்த போது பார்த்தது, மாதக்கடைசியில் கையில் காசு இல்லாவிட்டால் ஒரு மார்ஸ் பாரும் ஒரு கோக்கும் தான் ஒரு நாள் சாப்பாடு அங்குள்ள மாணவர்களுக்கு.

  உடலுக்கு கேடு என்று இலகுவில் நிறையவற்றை ஒதுக்க முடியாது. மது சிகரெட் பெருங்கேடு, பெப்ஸி கோக் போன்றவை ரிலடிவ்லி குறைந்த அளவு கேடு விளைவிக்கின்றன. பெப்சி கோக் குடிக்க நான் என்கரேஜ் செய்யவில்லை. அதையும் மதுவையும் ஒரே தராசில் வைப்பதை பார்க்க முடியவில்லை.

  திரையில் மது குடிக்காமல் நடிப்பதால் லட்சக்கணக்கில் ஒரு தனி மனிதனுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆனால், விளம்பரங்களில் நடிக்க மறுப்பதால் நிறைய பண நஷ்டம் ஏற்படும். பணத்தின் போதை உங்களுக்குத் தெரியாது என்றில்லை. அதை மறுப்பதற்கு எவ்வளவோ மனத்திடம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. என் பின்னூட்டங்களை வைத்து சச்சினின் டை ஹாட் விசிறி என்று நினைக்காதீர்கள். இன்பாக்ட், எனக்கு கிரிக்கட்டே பிடிக்காது. So No to Sachin; விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று சொன்னதற்கு Hats off

  பதிலளிநீக்கு
 13. அனாமிகா!

  குழப்பவாதியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். குழப்பங்களிலிருந்துதானே தெளிவு கிடைக்கிறது. விவாதங்களில் இருந்துதானே உண்மைகள் விளங்குகின்றன.

  கோக்கையும், பெப்ஸியையும், மதுவையும் நான் ஒரே தராசில் வைக்கவில்லை. பெப்ஸி என்பது பானம் மட்டுமல்ல, ஒரு குறியீடு. எத்தனை உள்நாட்டுத் தொழில்களை விழுங்கியிருக்கிறது. நாட்டின் நீர்வளங்களைஎவ்வளவுச் சுரண்டி அந்த பாட்டில்கள் வருகின்றன. மக்களின் போராட்டங்கள் எத்தனை நடந்துகொண்டு இருக்கின்றன. அதில் உள்ள் நச்சுத்தனமை பற்றி எவ்வளவு சமூக ஆர்வலர்களும், அற்வியலாளர்களும் சொல்லி வருகின்றனர்.குடி குடியைக் கெடுத்தால், பெப்ஸியும், கோக்கும் ஒரு தேசத்தையேக் கெடுக்கிறது. தயவுசெய்து அதற்கு நண்பரே, வக்காலத்து வாங்காதீர்கள். இன்னும் மந்த திராவகங்கள் குறித்துச் சொல்வதற்கு நிறைய இருக்கிரது. முடிந்தால் ஒரு பதிவே எழுதுவேன்.

  இங்கு நான் சொல்ல வந்தது, சச்சினின் இந்த முடிவை ஒரு கொள்கையாகவோ, தியாகமாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான். சச்சின் போன்றவர்களுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம். அது இருந்தால்தான் அவர்களுக்கு வருமானம். இந்த இமேஜ் அவர்களுக்கு இருக்கும் திறமையினால் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்படுகிறது. அவர்களைப் பற்றிய தொடர்ந்த செய்திகளால் கட்டமைக்கப்படுகிறது. அதை ஒருபக்கம் செய்துகொண்டே, விளம்பரங்களை பெரிய நிறுவனங்களிடமிருந்து வாங்குகின்றன. இது ஒரு சுழற்சி.

  இங்கு இமேஜைப் பாதுகாத்துக் கொள்வது சச்சின் போன்றவர்களுக்கு மிக மிக அவசியம். மது அருந்துவதைப் பார்த்து முகம் சுளிக்கும் சமூகத்தில் அவர் ஏன் அதைத் தொடுவதாக விளம்பரங்களில் நடிக்கப்போகிறார். அவரது ரோல் மாடல் இமேஜ் என்னவாகும். எனவே அதுபோன்ற விளம்பரங்களைத் தடுப்பதற்கு இதுவே அடிப்படை காரணமாகிறது. மற்றபடி இதை கொள்கை என்றும், தியாகம் என்றும் பரப்புரை செய்வது எப்படிச் சரியாகும். பிஸினஸ் ஐயா, பிசினஸ்! இந்த இருபது கோடியெல்லாம் அவருக்கு சாதாரணம். இதனால் அவருக்கு உங்களைப் போன்றவர்கள் தூக்கி நிறுத்தும் இமேஜ் அதைவிட மதிப்பு மிக்கது. அது சச்சினுக்குத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 14. அவருக்கு உங்களைப் போன்றவர்கள் தூக்கி நிறுத்தும் இமேஜ் அதைவிட மதிப்பு மிக்கது. அது சச்சினுக்குத் தெரியும்.

  இதிலேயே பதில் இருக்கிறது.
  உண்மையில் மது விலக்கு மீது ஆர்வம் இருந்தால், சச்சின் மது வியாபாரம் செய்யும் மல்லையாவின் ஐபிஎல் அணியை அனுமதிக்க கூடாது என்று ஐபிஎல் தொடங்கும் முன்னரே அறிவித்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. On tpoic, I just wanted to say "
  Damned if you do, damned if you don't"
  ______________________________________
  P.S: May be, we will not have any problem, if 'Kali' mark sodas are no.1 sales in India(even though they use toxic raw materials)

  பதிலளிநீக்கு