பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 9

books ஒவ்வொரு டிசம்பர் 6 வரத்துவங்குகிற போதும் ரயில் நிலையங்களில் யாவர் முன்னிலையிலும் பர்தா நீக்கியும் கூட சோதனைக்குள்ளாக்கப்படுகிறபோது முஸ்லிம் பெண்கள் அடையும் மனநிலையை எந்த எழுத்தாளனும் எழுதிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. துயரத்தின் சாம்பல் படிந்திருக்கும் அந்தக் கண்களைக் கண்டவர்களுக்குத் தெரியும் அதற்குள் தேங்கிக் கிடக்கும் துக்கத்தின் ஆழம்.

----------------------

 

முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் எல்லாம் முடிந்துபோனது என்ற மொழியின் அதிகாரத்தை அழித்து எழுதிட கிளம்பியிருக்கிறார்கள் எழுத்துக் கலைஞர்கள் என்பதையே நமக்கு காலம் காட்டித்தருகிறது. அடுத்த அடுத்த வரிகளை எழுத்தாளனுடன் இணைந்தோ, தனித்தோ வாசகனும் எழுதிச் செல்கிறான். அப்படியான சாத்தியங்களுக்கான கதவுகளை வழி நெடுக திறந்து வைத்திருக்கும் நாவல்களையே வாசககுறிப்பென நானும் கவனப்படுத்தியிருந்தேன். என்னுடைய கட்டுரைத் தொடரின் கூடவே பயணித்துக் கொண்டிருக்கும் வாசகனுக்கும் இக்கட்டுரைகளின் மொழியை உருவாக்கியதில் குறித்த பங்கிருக்கிறது என்பதை உணர்கிறேன். எழுத்தாளன் கொடுப்பவன், வாசகன் பெறுபவன் என்கிற நிலையெல்லாம் இப்போது மாறத்துவங்கியிருக்கிறது. பரஸ்பரம் கொள்வினை, கொடுப்பினை இருந்தால் மட்டுமே வலிமையான எழுத்து சாத்தியம் என்பதையே பின் நவீனத்துவம் இலக்கியப் புலத்தில் இயங்கும் யாவருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சிலுவைராஜ் சரித்திரத்திற்குள்ளும், காலச்சுமையாக இறக்கி வைக்கப்பட்டிருக்கும் ஞாபகத்தின் ஊடேயும் வாசகன் அறிந்தது எதை. தன்னுடைய பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தோடும் சாதியம் படிந்தே கிடக்கிறது என்பதைத்தானே. பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரித்து வாழ்வின் எல்லா முனைகளிலும் இழிவைச் சுமத்தி மரணத்திற்கும் பிறகான உயிரற்ற உடல்களின் மீதும் எழுதப்பட்டிருக்கும் வர்ணாசிரமத்தின் சூட்சும நுட்பத்தையே ராஜ்கௌதமன் இரு பெரும் நாவல்களாக தமிழுக்குத் தந்தார். அதன்பிறகான தலித்தின் வரலாற்று நாவல்களான அழகிய பெரியவனின் தகப்பன் கொடியையும், கே.ஏ.குணசேகரனின் வடுவையும் குறித்த என்னுடைய அபிப்ராயத்தை எழுதிடத்தான் வேண்டும். காலம் இவற்றையும் சாத்தியப்படுத்தும் என்று நம்புகிறேன்.

சித்திரம்பட்டி எனும் புனைவுக் கிராமத்திற்குள் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அடங்க மறுத்து அத்துமீறி அதிகார நிறுவனங்களுக்கு எதிரான கலகத்தை நிகழ்த்திய கதையை கூகை தன் இருபெரும் சிறகை விரித்து தமிழ்ப் புனைவுப் பரப்பில் கிடத்தியது. அதற்கு முன் மனதிற்குள் மட்டுமே எதிர்க்குரலை முணுமுணுத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பிரதிகளை அப்புச் சுப்பனையும், பேச்சியையும் கொண்டு அழித்து எழுதியிருந்தார் கூகையில் சோ.தர்மன்.

கூகையின் தொடர்ச்சியே சலவானின் வருகை என்பதை இரண்டையும் சேர வாசித்தால் உணரமுடியும். ஊரை மிரட்டிக் கொண்டிருந்த சாதி ஆணவத்தையும் சுயசாதிப் பெருமிதத்தால் விளைந்த திமிரையும் அடித்து நொறுக்கி களத்திலேயே பொருதி நின்ற அடித்தட்டு மக்களின் உயிர்த் துடிப்பே சலவான். அசிங்கம் என்றும், நாத்தம் என்றும் யாவரும் தங்களை விட்டு விலகிச் சென்றிடக் காரணமாயிருந்த பீயையே அதிகார வர்க்கத்தை அச்சுறுத்திப் பணிய வைக்கும் ஆயுதமாக்கினார்கள் சலவானில் உழைப்பின் மக்கள்.

இந்து மதத்தில் நீடித்திருந்தால் சாதியெனும் இழிவை அகற்றிட சாத்தியமில்லை என்றுணர்ந்தே அம்பேத்கர் பௌத்தத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்களை மாற்றினார். அம்பேத்கருக்கு முன்பாகவே கூட தீண்டாமையின் துயரத்தில் இருந்தும் சாதிய வன்மத்தில் இருந்தும் வெளியேறத் துடித்தே தமிழ் நிலமெங்கும் கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாயினர் ஒடுக்கப்பட்டிருந்தோர்.

கிறிஸ்தவப் பறையர்கள் மதபோதகர்களாக, மருத்துவர்களாக, கல்வியாளர்களாக, ஊரின் சிறு நிலஉடமையாளர்களாக மாறினால் சாதிய சமூகம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கான ரத்த சாட்சியமே வன்மம் என்பதையும் நாம் உணர்கிறோம்.

செடல் எனும் கூத்தாடி இனப்பெண்ணின் வாழ்வின் வழியே நாம் கண்டுணர்ந்தது ஆற்காட்டு நிலத்தின் சாதித்துவேஷத்தையும் அது பெண் உடலில் எழுதிப் பார்க்கத் துடித்த ஆணாதிக்க வெறியையும்தான். தமிழ் புனைவு இலக்கியப் புலத் தில் வேறு எங்குமே பதிவுறுத்தப்பட்டிருக்காத கூத்தாட்டக் கலையின் நுட்பத்தையும், அழகியலையும், கூத்துக்கலைக்குள் இயங்கும் இசைச்செறி வையும் செடல் நமக்குக் காட்சிப்படுத்தியது.

தலித் கதையாடல்களை கட்டு டைத்துப் பார்த்தபோது நிகழ்ந்தவற்றை வாசகனும் கண்டுணர்ந்திருப்பான். கூளமாதாரி, சூரனைத்தேடும் ஊர் எனும் இரண்டு நாவல்களும் அடிப்படையில் மேற்கூறிய ஐந்து நாவல்களில் இருந்து வேறானவையாகத்தான் வெளிப்பட்டிருக்கின்றன. கள்ளு இறக்கி குடிக்கும் களத்தில் கூளையன் மரத்தின் உச்சியில் அமர்ந்தபடி உர்ரிக் காட்டுகிறான்... செல்வன் எனும் கவுண்டர் வீட்டுப்பையன் கூளையனின் கோவணத்தை உருவுகிறான். செல்வனோட டவுசரை கூளையனும் நிச்சயம் இழுத்திருப்பான்... அவனை ஒருவேளை நெஞ்சில் ஏறி மிதித்து போதையில் புரட்டி எடுத்திடவும் சாத்தியம் இருக்கிறது பிரதிக்குள்.

பின் நவீனத்துவ விவாதங்கள் உலகின் இலக்கிய வெளிகளில் உருவானதன் பின்னணி மிக முக்கியம். உலகின் மாபெரும் கனவாக இருந்த சோவியத் சமூகத்தின் சிதைவு கலைஞர்களின் மனதிற்குள் நிகழ்த்திய விவாதமே தமிழிலும் கூட விளிம்பு ஒ.மையம் என்கிற நேர் எதிரான இரு எதிர்வுகளை உருவாக்கி, அதுவரை எழுத்துப் பிரதிக்குள் இடமற்று இருந்த விளிம்பின் மக்களான தலித், இஸ்லாமியர், பெண்களின் வாழ்வியல் நியதிகளை படைப்பாக்கிடச் செய்தது, இஸ்லாமிய இலக்கிய வகைமைகள் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல், அரேபிய இரவுகளின் தமிழ் பெயர்ப்புகள், முல்லா கதைகளின் ஊடாகத் தான் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறது. அது மட்டுமில்லை, இஸ்லாமிய இலக்கியம் என்பதைக் காலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு கொந்தளிப்பிற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகியிருக்கிற இஸ்லாமிய மனங்களுக்குள் நிகழும் உரையாடல்களை பதிவாக்கித் தந்த இலக்கியங்கள் தமிழில் குறைவுதான். ஒவ்வொரு டிசம்பர் 6 வரத்துவங்குகிற போதும் ரயில் நிலையங்களில் யாவர் முன்னிலையிலும் பர்தா நீக்கியும் கூட சோதனைக்குள்ளாக்கப்படுகிறபோது முஸ்லிம் பெண்கள் அடையும் மனநிலையை எந்த எழுத்தாளனும் எழுதிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. துயரத்தின் சாம்பல் படிந்திருக்கும் அந்தக் கண்களைக் கண்டவர்களுக்குத் தெரியும் அதற்குள் தேங்கிக் கிடக்கும் துக்கத்தின் ஆழம்.

முஸ்லிம்கள் குளிக்க மாட்டாங்க, அதனாலதான் உடம்பு பூராவும் சென்ட் அடிச்சிக்கிட்டு திரியுறாங்க. மாட்டுக் கறியத் தின்னுபோட்டு சும்மா கிடக்க மாட்டாம வத, வதன்னு புள்ள குட்டிகள பிதுக்கி தள்ளிருவாங்க. நாமதான் ஒண்ணுபோதும்னு நிறுத்திக்கிடுறோம். ஊரு பூராம் குட்டி பாகிஸ்தான அவனுக உருவாக்கிட்டாங்க. வளைகுடா நாட்டில் இருந்து பெட்ரோல் துட்டு வருதுல்ல, அதான் பளிங்கு வீடா கட்டிட்டு மினுக்கிறாங்க.... இன் னும் நீளும் இவ்வுரையாடல்கள் யாரால் கட்டமைக்கப்பட்டது. தன் சகமனிதர்களின் மீது தீராத வெறுப்பையும், துவேஷத்தையும் உமிழ்கிற இக்கொடூர உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் சங்பரிவாரத்தினர். ஊடகங்களுக்கும் இப்பொய்யுரைப்பில் சரிபாதி பங்கிருக்கிறது.

நிஜத்தில் மூன்றுபேர் சேர்ந்து ஒரே நேரத்தில் உறங்க சாத்தியமில்லாத வீடுகளில் தான் தமிழகத்தின் சரி பாதிக்கும் மேலான முஸ்லிம்கள் வசிப்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். பீடி சுற்றியும், பூட்டு ரிப்பேர் செய்தும், ஈயப்பாத்திரங்களுக்கு முலாம் பூசி யும், நெசவாளியாகவும் தினசரி வாழ்க் கைப்பாடுகளை நெட்டித் தள்ளிக் கொண்டிருக்கும் அன்றாடங் காய்ச்சிகளை இவர்கள் அறிந்திலர். அதனால் தான் தாடி, தொப்பி போட்டிருந்தால் தீவிரவாதி எனும் அடையாளத்தை எளிதில் கட்டமைத்து, அதை வெகு மக்களின் பொதுப்புத்தியிலும் படிய விட முடிந்திருக்கிறது அவர்களால். பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அவதூறுகளை அழித்து எழுதிடும் பேராற்றல் புனைவிலக்கியத்திற்கு உண்டு என்றால், தமிழ் இஸ்லாமியப் பிரதிகளுக்குள் இவ்வரலாற்றை மறுத்து இஸ்லாமிய கலாச்சாரக் கூறுகள் பதிவாகியிருக்கிறதா, என்பதை வாசித்தும் எழுதியும் பார்க்க வேண்டும்.

அரேபிய நிலத்தோடும், துருக்கியிலிருந்து வந்த அந்நியர்கள் எனவும் வெறுத்து ஒதுக்கி இந்நிலத்தின் பூர்வ குடிகளான தமிழ் இஸ்லாமியர்களை புறக்கணித்திடும் அரசியல் குறித்தும் பேச வேண்டும் இலக்கியப் பிரதிகள். இரண்டாயிரத்தின் துவக்கத்தில் எட்வர் சையத்தின் ஓரியண்டலிசம் தமிழிற்கு அறிமுகமான பிறகு கீழைத் தேயம் மேற்கத்தியம் எனும் இருபெரும் எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டு தனித்த இஸ்லாமிய மரபுகள், தொல்குடிப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் என யாவும் படைப்புகளாயின. தமிழிலும் கூட பின் காலனியம், தலித்முஸ்லிம் எனும் சொற்பதங்களை முஸ்லிம் அறிவாளிகள் உச்சரிக்கத் துவங்கியிருக்கின்றனர். மீன்காரத்தெரு வாசிகளும், கருத்த லெப்பைகளும் ஜாகிர் ராஜாவால் தமிழ்புனைவுப் பரப்பில் பதிவுறுத்தப்பட்டதெல்லாம் இதன் தொடர்ச்சியில் நிகழ்ந்தவைதான். ராஜேந்திர சச்சாரின் அறிக்கை கூட முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த சமூகவியல் தரவுகளை தெளிவாக பதிவுறுத்தவில்லை என இஸ்லாமிய பெண்ணியலாளர்கள் குரல் கொடுக்கத் துவங்கியிருக்கின்றனர்.

தலித்சீக்கியர்களுக்கும், தலித் பௌத்தர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சாத்தியம் என்றால் தலித் முஸ்லிம், தலித் கிறிஸ்தவர்கள் என ஏன் கண்டுணர்ந்து வரை முறைப்படுத்தி இட ஒதுக்கீடு அளிக்க முடியாது எனும் குரல் வட இந்திய முஸ்லிம் அமைப்புகளுக்குள் மிகத் தீவிரமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. சமத்துவத்தின் அடையாளம் என்று பெரியார் கூறிய இஸ்லாமியத்திற்குள் இந்துத்துவத்தின் அடையாளமான சாதியத்தின் சுவடுகள் படிந்திருப்பதை இலக்கியங்கள் பதிய துவங்கியிருக்கின்றன.

சிறுபான்மையினரை அடையாளம் கண்டு கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தினால் அவர்கள் இயல்பாகவே தங்களுக்குள் மத அடையாளத்தால் ஒற்றுமைப்படுவார்கள். இதைக் காட்டியே சாதியாகச் சிதறிக் கிடக்கும் பெரும்பான்மை சமூகத்தை ஒன்றிணைக்கலாம் என்கிற பாசிசக் கோட்பாட்டின் அடையாளமாக பிஜேபி உருவாகி வந்திருக்கிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு இவ்வளவு பர்தா பெண்களை யாரும் பார்த்திருக்க முடியாது. இளைஞர்கள் தாடியும், தொப்பியும் வைத்துக் கொண்டு தவ்ஹீதுகளுக்குப் பின்னால் ஈர்க்கப்பட்டு அலைவதற்கு உள்ளூர் ஜமாத்தார்களின் அரசியல் அதிகாரம் மட்டும் காரணமில்லை. வாழ்வது குறித்த அச்சம் மிகும்போது, மதம் கட்டியிருக்கும் கூட்டிற்குள் அடைக்கலமாவதைத் தவிர வேறு எந்த சாத்தியத்தையும் இந்திய சமூகம் இஸ்லாமியர்களுக்கு வழங்கவில்லை என்பதைத் தவிர வேற என்ன சொல்ல முடியும் நம்மால்.

-ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //எழுத்தாளன் கொடுப்பவன், வாசகன் பெறுபவன் என்கிற நிலையெல்லாம் இப்போது மாறத்துவங்கியிருக்கிறது//
    உண்மை அண்ணா.

    //முஸ்லிம்கள் குளிக்க மாட்டாங்க, அதனாலதான் உடம்பு பூராவும் சென்ட் அடிச்சிக்கிட்டு திரியுறாங்க. மாட்டுக் கறியத் தின்னுபோட்டு சும்மா கிடக்க மாட்டாம வத, வதன்னு புள்ள குட்டிகள பிதுக்கி தள்ளிருவாங்க. நாமதான் ஒண்ணுபோதும்னு நிறுத்திக்கிடுறோம். ஊரு பூராம் குட்டி பாகிஸ்தான அவனுக உருவாக்கிட்டாங்க. வளைகுடா நாட்டில் இருந்து பெட்ரோல் துட்டு வருதுல்ல, அதான் பளிங்கு வீடா கட்டிட்டு மினுக்கிறாங்க.... இன் னும் நீளும் இவ்வுரையாடல்கள் யாரால் கட்டமைக்கப்பட்டது. தன் சகமனிதர்களின் மீது தீராத வெறுப்பையும், துவேஷத்தையும் உமிழ்கிற இக்கொடூர உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் சங்பரிவாரத்தினர். ஊடகங்களுக்கும் இப்பொய்யுரைப்பில் சரிபாதி பங்கிருக்கிறது.//

    ஆம்.. இந்தப் பொய்யுரைப்பில் ஊடகங்களுக்கு மட்டுமல்ல அவற்றை நம்பும் நமக்கும் பெரும் பங்கிருக்கிறது அண்ணா.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. இந்திய சமூகத்தில் சிறுபான்மையினரின் மனக்குமுறலை ஒரு சிறுபான்மையினரால் தான் உணரமுடியும். அந்த பயம் தான் அவர்களை ஒற்றுமை படுத்துகிறது.

    நான் (ஒரு இந்து /பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவன்) இந்திய அரசை விமர்சித்தால் என்னை எதிர்கட்சிகாரனாக பார்க்கும் நம் சகமனிதன் அதே ஒரு ஒரு முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்தவன் இந்திய அரசை விமர்சித்தால் ‘தேசதுரோகி’ யாக இந்த சமூகம் பார்க்கிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!