-->

முன்பக்கம் , , , � இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம்!

இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம்!

 

 

“படத்திற்கு நல்ல புரமோசன்.....எக்ச்சூஸ் மீ....நீங்கதான் ப்ரொட்யூசரா?” என்று ஒரு நண்பர் ‘பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்னும் பதிவுக்கு பின்னூட்டமிட்டு இருக்கிறார். சிலருக்கு அந்தச் செய்தி கிண்டலாய் இருக்கிறது. சிலருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. சிலருக்கு அதிர்ச்சியாய் இருந்திருக்கிறது. சிலருக்கு கோபத்தைத் தந்திருக்கிறது. பலரிடம் மௌனமே சூழ்ந்திருக்கிறது. ஆதரவு தெரிவித்த கரங்களைப் பற்றிக்கொள்கிறேன்.

“என் தாய் கருவுற்றிருந்த போது
தெள்ளித்தின்ற மண்ணைத் தவிர
இந்த பரந்த தேசத்தில் எங்கள் மண் எது?

தடித்த உங்கள் இதிகாசங்களில்
எந்த பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமல்
சூரியச் சந்திரச் சுழற்சிகள் எதுவரை?”

கவிஞர் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை வரிகள் அலைக்கழித்தன. இந்த தேசத்தின் மகத்தான மனிதர் ஒருவரைப் பற்றிய திரைப்படம், அந்த தேசத்தின் மக்களின் பார்வைக்கு வராமலே போவதிற்குப் பின்னால் புதைந்திருக்கும் இருட்டடிப்பு கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த போராளியின் வாழ்வை அறியவிடாமல் அதிகார பீடங்கள் உருவாக்கிய புறக்கணிப்பு வேகத்தைத் தந்திருக்கிறது.

 ambedkar film poster இதோ, அம்பேதகர் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருகிறார். அவரைப்பற்றிய திரைப்படம் தமிழகத்தில் முதன்முதலாக வெளியாகிறது. நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த வேண்டி ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே வெளியாகிறது. சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் டிசம்பர் 3ம் தேதியிலிருந்து ஐந்து நாட்கள் திரையிடப்படும் என என்.எப்.டி.சி சார்பில் சொல்லப்பட்டு இருக்கிறது. மிகக் குறைந்த இருக்கைகளே உள்ள அந்த திரையரங்கில் ஐந்து நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மீண்டும் படப்பெட்டிக்குள் இந்தப்படம் சுருண்டு போவதை எப்படி அனுமதிக்க முடியும்.

தொடர்புடைய சுட்டிகள்:

அம்பேத்கர் விருது பெற்ற முதல்வருக்கு அம்பேத்கர் படம் பற்றி கவலையுண்டா?

 

டாக்டர் பாபா சாகேப் அம்பெத்கர் திரைப்படம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சார்பில் தமிழகமெங்கும் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. என்.எப்.டி.சியுடன் பேசி, ‘நாங்களே மாநிலம் முழுவதும் அங்கங்கு திரையரங்குகளோடு பேசி, விளம்பரம் செய்து, படம் திரையிடுகிறோம்’ என உறுதியளித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் உள்ள 300க்கும் மேற்பட்ட தங்கள் கிளைகளின் மூலம் இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. தமுஎகச வின் பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான தமிழ்ச்செல்வன் ‘நூறு தியேட்டர்களில் அம்பேத்கர் படம் திரையிடப்படும். அந்தந்த ஊர்களில் இதனைத் திருவிழா போலக் கொண்டாடுவோம். அரசியல், இயக்கம் வேறுபாடின்றி அனைவரிடம் இதுகுறித்துப் பேசி வருகிறோம். சாதிப்போம்” என உற்சாகமாய் சொன்னார்.

ஆம், இது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம். எந்திரனுக்கும், ராவணன்களுக்கும் இங்கே கூட்டத்தைக் கூட்ட சகல செப்படி வித்தைகளும் செய்வார்கள். தொலைக்காட்சிகளில் காது கிழியக் கத்தித் தொலைப்பர்கள் ஆனால் அம்பேத்கர் படத்திற்கு யார் இருக்கிறார்கள்? நாம்தான் நண்பர்களே. அம்பேத்கர் திரைப்படம் குறித்து உரையாடத் தொடங்குவோம். நண்பர்களை அப்படம் பார்க்கத் தூண்டுவோம்.

இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம். Related Posts with Thumbnails

13 comments:

 1. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும். இந்த திரைப்படம் குறித்த எந்த ஒரு விஷயத்தையும் தொலைக்காட்சிகள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது வேதனையான... உண்மையான விஷயம்... ராசா விவகாரத்தில் தலித் என்பதால் இப்படி செய்கிறார்கள் என்று கலைஞருக்காக கதறும் திருமா, திரு. அம்பேத்கார் குறித்த படத்தை தமிழகம் எங்கும் வெளியிட வேண்டும் என்று கலைஞரிடம் கேட்கட்டுமே... அதற்காக போராடட்டுமே... செய்வாரா?

  ReplyDelete
 2. "தேசத்தின் மகத்தான மனிதர்"
  கண்டிப்பாக. உண்மை.

  வாய்ப்பு கிடைக்கும் போது படம் பார்க்கணும்.

  ReplyDelete
 3. அன்பு மாதவ்

  படு ஆபாசக் களஞ்சியங்களும், அபத்த மூட்டைகளும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கள்ள டிக்கெட்டில் ஓட்டப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், யோக்கியமான ஒரு திரைப்படத்தை வெளியிடக் கூட வக்கற்று இருக்கிறது அரசு. அவர் பேரால் பேசப்படும் அரசியல் சாசனத்தின் கீழ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு படியேறி அமர்ந்திருப்பவர்கள் எந்தக் கூச்சமுமின்றி ஒடுக்குமுறைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். காலண்டர், பஞ்சாங்கம், டயரி இருந்தால் போதும், அரிய மனிதர்களின் பிறந்த நாள், மறைந்த நாள் ஒன்று தவறாமல் அவர்தம் சிலைக்கு மாலை மரியாதை செய்து புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு அவர்களை மறந்து விடலாம் என்கிறதே இங்கு நடைமுறை. அரிதான அஞ்சலியாக அம்பேத்கர் படம் வந்திருப்பதும், அதை மறைமுகத் தடை செய்து யாரும் பார்த்துவிடாது பார்த்துக் கொள்வதும், அதற்கு எதிரான துவசம் கட்டி த மு எ க ச மாநிலம் முழுவதும் மக்கள் பார்வைக்கு அம்பேத்கரைத் தங்களது தோள்களில் சுமந்து செல்ல சூளுரைத்திருப்பதும்....
  நம்பிக்கைகள் காத்திரமானவை...அவையே சமூகத்தை உயிரோட்டமாகவும், உயிரோடும் வைத்திருக்கின்றன.

  நன்றி மாதவ்

  எஸ் வி வேணுகோபாலன்

  பின்குறிப்பு:
  மரபணுக்குள் குடியேறியிருக்கிறது சாதியம் என்பது போலக் கடுமையாக உள்ள சமூக நிலை பற்றிய எனது எதிர்வினை ஒன்றை, ஹிந்து நாளேட்டில் வாசகர்களது ஆசிரியர் (Readers' Editor) விசுவநாதன் அவர்கள் தமது பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததையும் இங்கே இணைத்துள்ளேன்.

  http://www.hindu.com/2010/11/01/stories/2010110157211700.htm

  ReplyDelete
 4. அந்த பின்னூட்டம் இட்டவர் பெரியாரை தந்த அதே ஈரோட்டுக்காரர்தான்.
  அது சரி.என்னதான் நல்ல நிலமாக இருந்தாலும் களைகளுக்கு ஏது தடை?

  ReplyDelete
 5. அரசாங்கம் தயாரித்திருக்கிற அம்பேத்கர் படத்திற்கே இத்தகைய நிலைமை. இதையே தனியார் தயாரித்திருந்தால் நிலைமை கேட்கவே வேண்டாம். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகள் தயாரித்த பாதை தெரியுது பார் படத்தை அன்று சென்னை மாநர விநியோக உரிமையைத் தன் வசம் வைத்திருந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் வாங்கி என்ன செய்தாரோ அதையேதான் இன்று அம்பேத்கருக்கும் நிகழ்த்துகிறார்கள். அதனால் இன்று பாதை தெரியுது பார் படத்தின் நகல்கள் கூட இல்லாமல் செய்து விட்டார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. அம்பேத்கரை அவ்வாறு விட்டுவிட மாட்டோம். கலைஞருக்கு அம்பேத்கர் விருது கொடுத்துக் கவுரவித்த திருமா அம்பேத்கருக்காக, மத்திய அரசில் அங்கம் வகித்து, தன் குடும்பத்தினருக்கான மந்திரி பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டு, சகல அதிகாரங்களையும் அனுபவித்து வரும் கலைஞரிடம் உடனிருந்து, சேகுவேரா, புலி வேசம் போட்டுக் கொண்டாவது போட்டோவுக்குப் போஸ் கொடுத்தபடி ஏதாவது பேசுவாரா என்ன?
  நாம் இனி வெறும் சினிமாக்களின் கதைகளைப் பற்றிய பேச்சுக்களையும், இயக்குநர்களைப் பற்றிய பேச்சுக்களையும் விட்டுவிட்டு, சினிமாவின் இருப்புக்குறித்த, அதன் விநியோக வலைப்பின்னல் குறித்த, அதன் பொருளாதாரம் குறித்த, அதற்கும் ஆளும் வர்க்கங்களுக்கான இணைப்புக்குறித்த உரையாடல்களைத் துவக்கினால் நல்லது.

  ReplyDelete
 6. அன்பு மாதவ்

  மன்னிக்கணும். ஹிந்து நாளேட்டில் READERS' EDITOR கட்டுரையைப் பார்க்க எனது முந்தைய பின்னூட்டத்தின் பின்குறிப்பில் கொடுத்திருப்பது தவறாக விழுந்திருக்கிறது. . சரியான இணைய தள முகவரி:
  http://www.hindu.com/2010/11/01/stories/2010110157211700.htm

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 7. தமுஎச அம்பேத்கர் திரைப்படத்தை இயக்கமாக நடத்தினால் நிச்சயம் வெற்றியடையும். தலித்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்வோர் அம்பேத்கரை தங்களுடைய கட்சிக்கொடிகளிலும் சுவரொடிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதனால் அம்பேத்கர் பெரும்பாலான் மக்களுக்கு ஒரு சாதித்தலைவர் என்ற கண்ணோட்டமே உள்ளது. வரலாறு என்றாலே இருட்டடிப்புதானே?

  வெளிச்சம் தரவேண்டியது தமுஎச போன்ற இயக்கங்களின் கடமை.

  இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. தமுஎச வின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்

  ReplyDelete
 9. இந்த தேசத்தில் 70 சத மக்கள் இன்னும் விளிம்புநிலை வாழ்க்கையே வாழ்கிறார்கள், அப்படிபட்ட எல்லா சமூக விளிம்புநிலை மக்களுக்கும் அம்பேட்கரியம் வழிகாட்டுகிறது. தமுஎசவிற்க்கு நன்றி!!

  ReplyDelete
 10. மிக அவசியமான பதிவு, கண்டிப்பாக நாம் ஒன்றாய் நின்று முன் எடுத்து செல்ல வேண்டிய விசயம், தமுஎச வுக்கு என் வாழத்துக்கள், விரைவில் எனது வலைப்பூவில் இதை பற்றி பதிவு எழுதுகிறேன்.

  ReplyDelete
 11. நண்பரே..தகவலுக்கு மிக்க நன்றி..dont mistaken me..where is the I Max theatre in chennai??? need to book reservation for the show??? pls reply me or mail me : pokkri7@gmail.com.

  ReplyDelete
 12. IMAX or INOX Pls Correct it.We dont have IMAX theatre in Chennai

  ReplyDelete
 13. சே.குமார்!
  மிகச் சரியான கேள்வி, தம்பி.

  சேது!
  வாய்ப்பு கிடைக்கும்போது என்பதைவிட, வாய்ப்பை உருவாக்குங்கள். :-))))


  வேணு!
  மிகக் காத்திரமான பினூட்டம் உங்களிடமிருந்து. நன்றி வேணு.  பஷீர்!
  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீரசா!
  தகவல்களுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி. உரையாடல்களைத் துவக்குவோம்.


  ஹரிஹரன்!
  //வரலாறு என்றாலே இருட்டடிப்புதானே?// இங்கு அப்படித்தான் இருக்கிரது. நீங்கள் சொன்னதை போல வெளிச்சம் பற்ற வைக்க வேண்டி இருக்கிறது.  கையேடு!
  மிக்க நன்றி.


  முகப்பு!
  நன்றி.


  தோழர் மோகன்!
  மிக்க நன்றி.


  cute photos!
  ஐமேக்ஸ் இல்லையாம். ஐநாக்ஸ்.


  ரமணன்!
  மன்னிக்கணும், திருத்தி விடுகிறேன்.

  ReplyDelete