-->

முன்பக்கம் , , , � உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள் சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும்!

உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள் சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும்!
ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது போல காங்கிரஸ் கமிட்டி கூடிக் கலைந்தது என மகாகவி பாரதி சொல்லியிருப்பார். அப்படியொருக் கூட்டம் கடந்த செவ்வாய் அன்று நடந்து முடிந்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர், மாவோயிஸ்ட்கள், மகளிர் இட ஒதுக்கீடு என பேசப்பட்ட முக்கியமான அஜெண்டாக்களில் விலைவாசியும் ஒன்று.

அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் என அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் அடித்தட்டு மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் வதைக்கிறது. சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமோ தாறுமாறானது. பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவான காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளுமே இவைகளுக்குக் காரணமாயிருக்கிறது. தொடர்ந்த பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், முன்பேர வணிகம் என்னும் மோசடி முறைகளே இந்த நெருக்கடிகளுக்குப்  பின்னணி என்பதை பொருளாதாரம் அறிந்த யாராலும் கைகாட்ட முடியும்.

மாநில அரசுகளே விலைஉயர்வுக்குக் காரணம் என ஒருமுறை நமது பிரதமரும் பொருளாதார வல்லுனருமான மன்மோகன்சிங் சொன்னார். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, மழை பெய்தால் சரியாகிவிடும் என்றார். இவர்களெல்லாம் கலந்துகொண்ட காரியக் கமிட்டியில் அம்மையார் சோனியாகாந்தி மேலும் சிலபடிகள் தாண்டி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். விலைவாசியைக் குறைக்க வேண்டியது மாநில அரசுகளின் வேலை என்றும், மத்திய அரசை எதிர்பார்ப்பதும், குறைகூறுவதும் நியாயமில்லை என்றும் அடித்துச் சொல்லியிருக்கிறார். அதாவது ‘தீயை நாங்கள் வைப்போம், அணைக்க வேண்டியது மாநில அரசுகளே’ என்று பொறுப்புகளை வரையறுத்தியிருக்கிறார். எரியும் வீட்டில் பிடுங்கும் பல மாநில அரசுகள் இதைப்பற்றி என்ன சொல்லப் போகின்றனவோ?

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஏழைக் குழந்தைகளை தூக்கி வைத்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் ராகுல் காந்தியும் தன் பங்குக்கு ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறார். ‘பணக்கார இந்தியாவையும், ஏழை இந்தியாவையும் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒன்றிணைக்க முடியும்’ என்பதுதான் அது. இந்த இருவகை இந்தியாவை உருவாக்கியவர்களே இவர்கள்தான் என்னும் பாலபாடத்தை மறைத்துவிட்டு, அடித்தள மக்களுக்காக கண்ணீர் சொரிந்திருக்கிறார்.

“கள்ள மார்க்கெட் பேர்வழிகளையும், பதுக்கல்காரர்களையும் லாந்தர் விளக்கில் தூக்கில் போட வேண்டும்” என்றார் ராகுல் காந்தியின் முப்பாட்டனாரான பிரதமர் நேரு. லாந்தர் கம்பங்கள்தான் காணாமல் போயிருக்கின்றன. “வறுமையே வெளியேறு, வேலையின்மையே வெளியேறு” என்னும் கோஷத்தோடு இவரது பாட்டியான பிரதமர் இந்திராகாந்தி வந்தார். இந்தியாவே வறுமையிலும், வேலையின்மையிலும் குடிகொண்டு விட்டது. “இருபத்தொன்றாம் நூற்றாண்டை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லப் போவதாக” இவரது தந்தையான பிரதமர் ராஜீவ் காந்தி ஆரவாரம் செய்தார். விவசாயத்தைக் கை கழுவி, அதலபாதாளத்திற்குள் தள்ளி விட்டார். வழிவழியாக இந்த தேசத்தை ஒருவழியாக்கியவர்களின் அடுத்த குரல் ராகுல் காந்தியிடம் இருந்து வந்திருக்கிறது.

அம்பானிகள் 27 மாடிகளில் வீடு கட்டுகிறார்கள். விமானத்திலேயே நீச்சல் குளங்கள் அமைத்து மிதக்கிறார்கள். குப்பன்களும் சுப்பன்களும் குடிசையின்றி கொளுத்தும் வெயிலிலும், பெய்யும் மழையிலும் வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஒருபுறம் சிலர் சுரண்டிக் கொழுக்கிறார்கள். இன்னொருபுறம் பலர் சகலத்தையும் இழந்து நிற்கிறார்கள். இரண்டு இந்தியாவையும் ஒன்றிணைக்கப் போகிறாராம் ராகுல்காந்தி. ஆமாம், கொழுத்தவர்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தவும், இளைத்தவர்களிடம் வாக்குகள் சேகரிக்கவுமான ஜனநாயகத்தைத்தான் ராகுல் காந்தி அப்படி கூறியிருக்க வேண்டும்.

உட்கார்ந்து ரொம்பவே யோசித்திருக்கிறார்கள் அம்மாவும், பிள்ளையும்!

Related Posts with Thumbnails

2 comments:

  1. Good writing indeed, but that anguish must be directed with acerbic words and sentences, that intensity gets diverted when the diatribe goes and points at the millionaires and billionaires.The economic divide which you focussed in your writing is owing to the non inclusive policies of the so called western oriented economists including Singh with another sardhar Montek singh Ahuliwalia, this being aped by the home-bred Prababh.Any way your anger towards the brainless policies of the Govt is well appreciated by me

    ReplyDelete
  2. 700 followergalai kadanthatharkku vazhthukkal

    ReplyDelete